என் சீஸன் துவங்கி விட்டது. காலை ஆறு மணிக்கு சென்னை வந்ததும் ஹிந்து பேப்பரில் இன்று போக வேண்டிய கச்சேரிகளை முடிவு செய்வதற்குள், விஜய் சிவா ஜெயா டிவியில் அரை மணி பாடி முடித்துவிட்டார்.
திருச்சி ஜெ.வெங்கடராமன், வர்ணங்களில் கதி பேதம் செய்வதைப் பற்றி செய்முறை விளக்கம் கேட்க காலையில் பார்த்தசாரதி சபாவில் ஆஜர். கேண்டீனில் அவசர அவசரமாய் இட்லியை அள்ளிப் போட்டுக் கொண்டு அரங்கில் நுழைவதற்கும், திரை விலகுவதற்கும் சரியாக இருந்தது.
மதுரை ஜி.எஸ்.மணி முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். டி.எம்.கிருஷ்ணா மனைவியுடன் வந்திருந்தார். ராமகிருஷ்ணன் மூர்த்தி போன்ற சில இளம் வித்வான்களும் கண்ணில் பட்டனர்.
அவர் செய்ததை விளக்குவதற்கு முன்னால் சில அடிப்படைகளை சொல்லிவிடுகிறேன். தவறானால் திருத்தவும்.
ஒரு தாள சக்கரத்தில் உள்ள தட்டுகளின் எண்ணிக்கை அக்ஷரங்கள் ஆகும். தமிழில் சொன்னால், Number of beats in a tala cycle is Aksharas. இந்த tala cycle-க்கு பெயர் ஆவர்த்தம். இந்த அக்ஷரங்களுக்கு உட்பிரிவு உண்டு. அவை மாத்திரை. ஒரு ஆவர்த்தத்தில் உள்ள அக்ஷர எண்ணிக்கையை வைத்து தாளத்தை வகைப்படுத்த முடியும். உதாரணமாக ஆதி தாளத்துக்கு எட்டு அக்ஷரம். ஒரு அக்ஷரத்துக்குள் அடங்கும் மாத்திரையின் அளவு, தாளம் என்ன ‘கதியில்’ அமைந்துள்ளது என்று குறிக்கும். ஒரு அக்ஷரத்துக்கு மூன்று மாத்திரை என்றால். தாளம் திஸ்ர கதியில் அமைந்துள்ளது என்று அர்த்தம்.
கதியில் திஸ்ரம், கண்டம், சதுஸ்ரம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று வகைகள் உண்டு. முறையே அவை ஒரு அக்ஷரத்துக்கு 3, 5, 4, 7, 9 மாத்திரைகளைப் பெற்றிருப்பன.
என்னைப் பொறுத்த வரை, கதி என்றாலும் நடை என்றாலும் ஒன்றுதான். இல்லை என்று சொல்வோரும் உண்டு. எனக்கு அது விளங்கியதில்லை. ஆதலால், இப்படியே வைத்துக் கொள்வோம்.
‘ஸரஸூட’ சாவேரி வர்ணம் ஆதி தாளத்தில், சதுஸ்ர கதியில் அமைந்துள்ளது. அதாவது மொத்தம் எட்டு அக்ஷரம். ஒவ்வொரு அக்ஷரத்துக்கும் எட்டு மாத்திரை (இரண்டு களை என்பதால் எட்டு மாத்திரை, இதுவே ஒரு களை என்றால் 4 மாத்திரை). ஆக மொத்தம், ஒரு ஆவர்த்தத்துக்கு 64 மாத்திரை.
இதுதான் basis.
ஜெ.வி என்ன பண்ணினார் என்றால், வர்ணத்தை முதலில் பதினாறு, பதினாறு மாத்திரைகளாய் பிரித்துக் கொண்டார்.
முதல் பதினாறில் உள்ள ஒவ்வொரு மாத்திரையையும் ஐந்தால் பெருக்கினார். ஒவ்வொரு மாத்திரையும் ஐந்தைந்தாய் அதாவது 16*5=80 மாத்திரை. ரைட்டா? 8 மாத்திரை என்றால் 1 அக்ஷரம். அப்போ 80 மாத்திரை என்றால் 10 அக்ஷரங்கள். சரியா?
அடுத்த பதினாறில், ஒவ்வொரு மாத்திரையையும் நான்கால் பெருக்கினார். முன் செய்தது போலவே செய்தால், கடைசியில் 8 அக்ஷரம் மிஞ்சும்.
அடுத்த பதினாறில், ஒவ்வொரு மாத்திரையையும் மூன்றாலும், அதற்கடுத்த பதினாறில், ஒவ்வொரு மாத்திரையையும் இரண்டாலும் பெருக்கினார். பழைய கணக்கின் படி, முறையே 6 அக்ஷரமும், 4 அக்ஷரமும் மிஞ்சும்.
ஆக மொத்தம், 10+8+6+4 = 28 அக்ஷரங்கள்.
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்
அதாவது பல்லவியை பல பதினாறு அக்ஷரங்கள் பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மாத்திரைகளை 5,4,3,2 அக்ஷரங்களால் பெருக்கிக் கொண்டு பாடினால் மொத்தம் 28 அக்ஷரங்களுக்கு வரும்
இது பல்லவியின் முதல் பகுதி.
பல்லவியின் அடுத்த பகுதியை, முற்பகுதியில் செய்தது போலவே பிரித்துக் கொண்டார். ஒரே வித்தியாசம், முதல் பகுதியில் 5,4,3,2 என்று பெருக்கியவற்ற இம்முறை 4,3,2,1 என்று பெருக்கிக் கொண்டார். ஆதலால் பல்லவியின் இரண்டாவது பகுதியில் மொத்தம் 20 அக்ஷரங்கள். ஆக மொத்தம் 28+20 = 48 அக்ஷரங்கள் என்ற கணக்கில் பல்லவியைப் பாடினார்.
இது பல்லவிக்கு மட்டும்தான். அனுபல்லவி, சிட்டை ஸ்வரங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாய் பிரித்தும், பெருக்கியும், கோபுச்ச யதி, ஸ்ரோதஹத யதி என்ற கோவைகளில் எல்லாம் செய்து காட்டினார். (யதி வகைகள் எல்லாம் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்).
கேட்பவருக்கு புரிய வேண்டுமே என்று, ஒரு முறைக்கு இரு முறை, அனைத்தையும் விளக்கிப் பாடினார்.
எத்தனையோ வருஷத்து அசுர சாதகம், அவருக்கு லயத்தில் இருந்த நிர்ணயத்தில் தெளிவாக வெளிப்பட்டது.
எல்லாம் சரிதான். சாவேரி ராகம்தான் இன்று குற்றுயிராய் குலை உயிராய் ஆனது.
எம்.ஆர்.ராதா, “நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடலில் சில இடங்களில் வினோதமான ஒலிகளில் எல்லாம் ஜதி சொல்வாரே, அப்படித்தான் பல இடங்கள் இருந்தன.
இது போன்ற கணக்கு வழக்கு எல்லாம் மாணவர்களின் பயிற்சிக்கு வேண்டுமானால் உதவும். கணக்கு புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் தாளம் சரியான இடத்தில் வந்து நிறைவு அடையும் போது ஒரு sense of relief எழும். “அட! நாமும் சரியா போட்டுவிட்டோமே! நமக்கும் புரிகிறதே!”, என்றெண்ணி மகிழலாம். இதைத் தவிர வேறு ஒரு பயனும் இதில் இருக்க முடியாது.
சாவேரி வர்ணத்தை நிஜமாகவே ஒருவர் கச்சேரியில் இப்படிப் பாடினால், அது சாவேரி என்று சொல்ல முடியாது. வேண்டுமானால், சோமாரி என்றோ நாதாரி என்றோ சொல்லிக் கோள்ளலாம்.
பி.கு: நான் லயத்துக்கு எதிரி என்று நினைத்து விட வேண்டாம். சுகுணா புருஷோத்தமன், 2 வருடம் முன் தோடியின் பாவம் கொஞ்சம் கூட கெடாமல் சிம்மநந்தன பல்லவி பாடினாரே, அதையே சி.டி-யாகவும் வெளியிட்டுள்ளார். அந்த இசைப் பதிவை ஆயிரம் முறை கேட்டு இருப்பேன், சேஷகோபாலனின் கணக்கு வழக்குகள், ஆலத்தூரின் நடை பல்லவி எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவைகளுள் சில. ராக பாவத்தை விட்டு ஓங்கு நிற்கும் கணக்கைத்தான் கொஞ்சம் நக்கல் அடித்து இருக்கிறேன்.


திரு கமகம் அவர்களே
வணக்கம். மிக அருமையாக விளக்கிஉள்ளீர்கள் . சராசரி ரசிகனான என்னால் இந்த கணக்கு வழக்கு அதிகமாக குழப்பியதால் .ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் ஹேமலதா அவர்களும் அருண்குமார் அவர்களும் ஒத்துழைத்து ஒப்பேத்தியது பாராட்டப்படவேண்டும்.அவர்களுக்கு சபையிலேயே நன்றி கூறி இருக்கலாம்
தஞ்சாவூரான்
தஞ்சாவூரான்
பக்கவாத்தியங்களும், உடன் பாடிய சிஷ்யர் பிரதீப்பும் பாராட்டுக்குரியவர்கள்.
நானும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். சுட்டியதற்கு நன்றி.
லலிதா ராம்
இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
நிறைய சொல்லி இருக்கிறீர்கள் அனால் எனக்கு தான் ஒண்ணும் புரியலை.
லலிதாரரம்,
நேற்றைய தினம், காலையில் மியூசிக் அகாடெமியிலிருந்தீர்களா? கறுப்பு டீ ச்ஷர்ட்டில்….
சிமுலேஷன், இல்லையே. இன்று சாயங்காலம் பிரம்ம கான சபாவில் மண்டகப்படி. நீங்க?
சிமுலேஷன்,
நேற்று பிரம்ம கான சபாவில் ஒருவதைப் பார்த்ததும், அது நீங்களோ என்று சந்தேகம் வந்தது. உங்கள் பேரைத் தெரிந்தாலாவது, நீங்கள் “அவரா?” என்று கேட்டிருக்கலாம். ”நீங்கதான் சிமுலேஷனா?” என்று கேட்கத் தயக்கமாக இருந்தது. அவர் நீங்களாக இல்லாவிடில், நான் ஏதோ கிண்டல் செய்கிறேன், என்று நினைத்துவிடக் கூடுமல்லவா:-)
அடுத்த முறை ஏதெனும் கச்சேரியில் சந்தித்தால், எஸ்.வி.சேகர் நடகத்தில் வருவது போல, “ஆரஞ்சுப் பழத்தை உரிச்சுத்தான் சாப்பிடணும்” என்று ஏதேனும் கோட்வெர்ட் பறிமாறிக் கொள்ளலாமா?
அப்புறம், இந்தப் பதிவின் தலைப்பு அவ்வளவு ரசனையாக இல்லை. முடிந்தால் மாற்றி விடுங்கள்.
- சிமுலேஷன்
இன்று எங்கே செல்கிறீர்கள்? மாலை, கலாரசனாவில் ஓ.எஸ்.டி செல்லலாம் என்று இருக்கிறேன்.
ஆரஞ்சுப் பழம் எல்லாம் வேணாம். பதிவர்கள்னு அடையாளம் காமிக்க ஸ்பெஷல் கோட் இருக்கு.
‘பின்னூட்டம்’ ஒருத்தர் சொன்னா பதிலுக்கு அவர்
‘இடுகை’ ன்னு சொல்லணும்.
//‘பின்னூட்டம்’ ஒருத்தர் சொன்னா பதிலுக்கு அவர்
‘இடுகை’ ன்னு சொல்லணும்//
இது சூபர்!
விதியாசம வேற ஐடியா கூட் யாராவது சொல்லலாம்.
துளசி,
தவறான ஆள் கிட்ட போய் பின்னூட்டம்-னு சொல்லி அவர் முறைச்சா என்ன செய்யறதாம்:-)
கண்ணா,
இது கொஞ்சம் விபரீத விளையாட்டு! துளசியக்கா சொல்றாங்கன்னு யாராவது கொழுக் மொழுக் மாமிகிட்ட போய் ‘பின்னூட்டம்’னு தப்பா சொல்லிட்டா கன்னம் பழுத்துடாது?! சொறிஞ்சுக்கிட்டு நிக்கற சொம்பேறி மாமா கிட்ட போய் “எடு கை”ன்னு சொல்லப்போய், அவர் கடுப்பாகி …வேண்டாம் ராசா, வேற எதுனாச்சியும் புச்சா கண்டு பிடிப்போம்!
அது வரைக்கும் தனியா நின்னுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு இந்த தாள கணக்கு மட்டும் போடு பிரதர்!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
எல்லே ராம் சொல்வதும் சரிதான். நானும் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை.
- சிமுலேஷன்
Enna kodumai sir idhu….!!