மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே?
மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும்.
அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் வரும் முன் அதிகம் இல்லையா?
ஆமாம். ‘சின்னது பெரியது’ பேதங்களை குரலில் காட்ட ஒலிப்பெருக்கி இருந்தால்தான் முடியும். ஒலிப்பெருக்கியால்தான் கச்சேரிகளுக்கு அதிக கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்கு முன், சபா கச்சேரிகளுக்குக் கூட ஐம்பது பேருக்கு மேல் வர மாட்டார்காள். அதற்கு மேல் வந்தால், பின்னால் இருப்பவர்களுக்கு கச்சேரி சரியாகக் கேட்காது
மைக்கால் சங்கீதம் பாழாகிவிட்டது என்ற கருத்து பற்றி?
நிச்சயம் சங்கீதம் மைக்கால் நன்மைதான் அடைந்திருக்கிறது. சிலர், தங்களுடைய இயலாமைக்கு மைக்கின் மேல் பழியைப் போட்டிருக்கலாம். வாத்தியங்களின் உண்மையான நாதம் மைக்கால் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தில், இவை பெரிய பிரச்னைகள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்.
சில கச்சேரிகளில், மேடையில் இருப்பவர்கள், தங்களுடைய ego-வை மைக்கை வைத்தும் திருப்திப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சில மிருதங்க வித்வான்களுக்கு, ஒலியின் அளவை எவ்வளவு அதிகப்படுத்தினாலும் போதவில்லை. சில பாடகர்கள் வயலினே கேட்காமல் இருக்க வழி செய்கின்றனர். இவை எல்லாம் மைக்கின் குற்றம் அல்ல, மனிதர்களின் குற்றம்தான்.
மைக் இல்லாத காலத்தில் கேட்டதில் நினைவில் இருக்கும் பாட்டு?
நாயினாப் பிள்ளை ‘ஜானகி ரமண’ பாடுவார். அவர் பாடினால், மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து தார பஞ்சமம் வரை நன்றாகக் கேட்கும்.
அந்த நாளுக்கும், இந்த நாளுக்கும் வித்தியாசம்?
அப்போது இவ்வளவு சபாக்கள் இல்லை. இன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சபாக்கள் செயல்படுகின்றன. என் இள வயதில் எனக்கு 22 வர்ணங்கள் தெரிந்திருந்தது என்பது மிகப் பெரிய விஷயம். இன்று, நூற்றுக் கணக்கில் வர்ணங்கள் மட்டுமே கற்கக் முடியும். புதிது புதிதாய் நிறைய கிருதிகள், ராகங்கள் என்று சங்கீதம் விருத்தி அடைந்திருக்கிறது. சங்கீதத் துறை அகலமானாலும், இப்போது பாடப்படும் சங்கீதத்தில் ஆழம் கொஞ்சம் குறைந்துள்ளதாகப் படுகிறது.
இன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த நாளில் ஹரிகதை காலட்சேபங்கள் மிகப் பிரபலமாய் இருந்தன. முத்தையா பாகவதர் போன்ற சங்கீத மேதைகள் எல்லாம் ஹரிகதை விற்பன்னர்களாக இருந்தனர். கல்யாணங்களில் கூட, பாட்டுக் கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஹரிகதை கச்சேரி நிறைய உண்டு. அந்தக் காலத்தில், ஹரிகதை பாகவதர்களுக்கு தெரிந்த அளவு கீர்த்தனங்கள், விட்வான்களுக்குக் கூடத் தெரியாது. நானே எக்கெச்செக்க அரிய கீர்த்தங்களை ஹரிகதை பாகவதர்களிடன் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு சங்கீதம், பல பாஷைகளில் தேர்ச்சி, பாடல் புனையும் தகுதி, சரித்திரம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்திருந்தது. சரஸ்வதி பாய் கதை சொன்னார் என்றால் கண் முன்னே ஒவ்வொரு பாத்திரத்தையும் நிறுத்திவிடுவார். அவர் கதைக்கு தட்சிணாமூர்த்திப் பிள்ளை முதற் கொண்டு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள். இன்று ஹரிகதை கிட்டத்தட்ட வழக்கொழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நிறைய கீர்த்தனங்கள் வந்திருந்தாலும், இன்னும் கல்யாணி, காம்போதி, பைரவி, தோடி, சங்கராபரணம், கரஹரப்ரியா, மோகனம் தாண்டி அதிக ராகங்கள் விஸ்தாரமாய் பாடப்படுவதில்லையே?
இந்த ராகங்கள் time-tested என்பதால், இவற்றையே நிறைய பாடுகின்றனர். இதையே பாடினால் அலுப்புதான் வரும். இன்னும் எத்தனையோ அற்புதமான ராகங்களும் இருக்கின்றன.
பாட்டு கேட்பவர்களும், தவளாம்பரியையோ, சித்ராம்பரியையோ அதிகம் விரும்புவதில்லையே? தெரிந்த ராகமாய்ப் பாடுபவர்கள் கச்சேரிகளுக்குத்தானே கூட்டம் கூடுகிறது? “ராஜமா? அவர் தெரியாததைப் பாடுவாரே?”, என்ற பெயர் வந்த அளவுக்கு, உங்கள் கச்சேரிகளுக்குக் கூட்டம் வரவில்லையே?
அதுவும் உண்மைதான். பாடகர் தெரிந்ததைப் பாட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. புதியதாய்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இல்லை. இப்போது நிலை மாறி வருகிறது. இப்போது, “விவாதி பாடுங்கள். அதுக்காகவே உங்கள் கச்சேரிக்கு வந்திருக்கிறோம்”, என்று என் மாணவர்களைக் கேட்கும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.



உங்கள் பத்தியில் அர்க்கைவ்ஸ் செட்டிங்’கை சேர்த்தால் பழைய பதிவுகளைத் தேதி வாரியாக ஒழுங்காகப் பார்க்க முடியுமே,ஏன் நீங்கள் செய்யவல்லை?
என்னமோ சொல்றீங்கன்னு புரியுது. என்ன சொல்றீங்கன்னுதான் புரியலை.
I am not for Microphones. People FAKE their voices nowadays a lot because of it. I HATE people using Microphones when Singing. We have become more dependent on microphones than talents nowadays. People with decent VOICES could get away as great TALENTS. I CONDEMN using electric/electronic instruments to BOOST up the voices.
NO – MIKES – PLEASE
No mike-னா சேம்பர் ம்யூசிக்-தான் வைக்க முடியும். 2000 பேர் கேட்கணும்-னா என்ன செய்ய?