Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

நாகஸ்வர கோயில் மரபப் பற்றி நண்பர் வித்வான் பிரகாஷ் இளையராஜாவுடன் இணைந்து ஆற்றிய உரையின் பகுதியை இங்கு காணலாம். டிசம்பரில் ஆர்.ஆர்.சபாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலைப் பொழுதே

கேபிள் டிவி அறிமுகமான புதிதில், விடியற்காலையில் கருப்புவெள்ளை கர்நாடகபாணி திரைப்பாடல்களை ஒளிபரப்புவார்கள். கல்லூரி காலங்களில் தஞ்சாவூரிலிருந்து விடுமுறைக்கு வரும்நாட்களில் மட்டுமே அதிகாலையைப் பார்த்தவன் நான். அப்படியொரு நாளில் 1999-ல் காலை பொழுதே நமஸ்காரம் என்ற பிலஹரி காதில் விழுந்தது. அன்று முதல் அதைத் திரும்பக் கேட்க எங்கெங்கோ முயன்றும் வாய்க்கவில்லை.

இணையத்தில் என்னென்னமோ அரிய விஷயங்களைக் கண்டடைய முடிந்தாலும் இந்தப் பாடல் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

சிலமாதங்களுக்கொரு முறை யாரேனும் வலையேற்றியிருக்கிறார்களா என்று தேடிப் பார்ப்பேன். காலப்போக்கில் மறந்தும் போனது.

இன்று சீர்காழியின் பிறந்தநாள் என்றொரு பதிவு பார்த்தேன். அந்த பிலஹரியில் பிருகா சங்கதி நினைவுக்கு வந்தது. யூடியூபில் தேடிய போது பாடலும் சிக்கியது.(பிலஹரிதான் நினைவில் இருந்தாலும் – பாடல் ராகமாலிகை. ) ஒவ்வொரு ஸ்வரத்தையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிறபடிக்காய் பாடியிருக்கும் கந்தர்வக் குரல்.

பாடலே இருக்கும் போது வர்ணனை எதற்கு. கேட்டுவிடுங்கள்.

வலையேற்றியவர் யார் பெற்ற பிள்ளையோ. நன்றாக இருக்கட்டும்.

வாழ்க இசைமணி! வாழ்க மணியிசை!

2004-ல் எழுதியது. இன்றைக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். (அப்போது ஒரு தோசை 20 ரூபாய்க்கு கிடைத்திருக்கிறது)

‘இந்த தடவை முத்ரா-ல ஃப்ரீ கச்சேரி இல்லையாமே ? ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் ? ’.

மாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த வருடம் ‘மாம்பலம் சிஸ்டர்ஸ்-ஐப் பத்திதான் நிறைய பேச்சு. கர்நாடிகா ப்ரதர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், பத்மா சேஷாத்ரி சிஸ்டர்ஸ் என்றெல்லாம் vocal-duet பாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையில் போனால், kilpakkam kins, kanchipuram cousins என்றெல்லாம் அடுத்த சீஸனில் யாரேனும் கிளம்பினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.)

இந்த முறை நிறைய சபாக்கள் டிக்கெட் விலையைக் கணிசமாக ஏற்றியிருக்கின்றன. ஃப்ரைம் டைம் ஸ்லாட்டில் ஓசியில் கச்சேரி நடக்கக் கூடிய சபைகளும் குறைந்திருக்கின்றன. கிருஷ்ண கான சபையில், மினிமம் டிக்கெட் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது என்றொரு நண்பர் சொன்னார். பாரத் கலாச்சார், வாணி மகால் போன்ற இடங்களில் மினிமம் 50 ரூபாய். பல காலமாய் சும்மா கிடைத்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்கு இந்நிலை அத்தனை செளகரியமாக இல்லை. ‘சங்கீதத்தை வெச்சு வியாபாரம் பண்றான். தியாகராஜர் பாட்டை பாடறானே, அவருக்கு என்ன ராயல்டி குடுக்கறான் ? ஷாமியானா பந்தல்-ல 50 சேரைப் போட்டு, ஐம்பது, நூறு-னு டிக்கெட்டுக்கு வாங்கறான். ஆத்மார்த்த சங்கீதம் எல்லாம் போயாச்சு ‘ என்றெல்லாம் இவர்கள் புலம்புவதைக் கேட்க முடியும். இப்படிப் புலம்புவதால் இவர்களெல்லாம் காசில்லா ஓட்டாண்டிகள் என்றெண்ண வேண்டாம். இவர்கள் நினைத்தால் ஆளுக்கொரு சபை ஆரம்பித்து, சென்னையே ஓசியில் கச்சேரி கேட்கச் செய்ய முடியும்.

சங்கீதம் முதலில் கோயில்களில் ஆராதனைக்குரியதாக இருந்தது. பின்பு ராஜாக்கள், மிராசுதார்கள், பிரபுக்களின் ஆதரவில் இருந்தது. அப்பொழுதுதெல்லாம் எவனோ ஒரு புண்ணியவான் எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டுவிட ஊரே கச்சேரி கேட்டது. அது என்றைக்கு சபைக்கு வந்ததோ அன்றே டாக்டர், சார்டட் அக்கெளண்டெண்ட் என்றெல்லாம் profession இருப்பதுபோல், இசைக் கலைஞராக இருப்பது, சங்கீத சபை நடத்துவது போன்றவைகளும் தொழில்களாகிவிட்டன. ஒரு வேலையை நல்ல வேலை என்று நாம் சொல்வாமாயின், நம் ஊர் அகராதிப்படி, அந்த வேலைக்கு நல்ல சம்பளம் என்று அர்த்தம். சபா வாசலில் அறுசுவையரசு காண்டீனில் ஒரு தோசைக்கு இருபது ரூபாய் கொடுக்க யாரும் தயங்குவதில்லை. குளிர்பதன வசதியுடன் கூடிய ஹாலில் 3 மணி நேரம் உட்கார்ந்து பாட்டு கேட்பதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாத்திரம் மனது வரமாட்டேன் என்கிறது. (அதுவும் சாயங்கால வேளையில் நடக்கும் கச்சேரியைத் தவிர மற்ற கச்சேரிகளுக்கெல்லாம் அனுமதி இலவசம்.)

இந்த இலவசம் என்ற சொல் ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று தெரியவில்லை. ‘இந்த இதழ் குங்குமத்துடன் சந்திரமண்டலத்தில் 2050-இல் திறக்கப் போகும் சரவண பவனில் ஒரு மசால் வடை இலவசமாகப் பெறுவதற்கான கூப்பன் இலவசம்’  என்று அறிவித்தால் கூட, அதற்காக குங்குமத்தை வாங்க சில பேர் நிச்சயம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் படித்தவர் பாமரர் பேதமெல்லாம் இல்லை. இந்த e-mail-ஐ நூறு பேருக்கு அனுப்பினால் 10 நிமிடம் long distance பேசலாம் என்றொரு stray email நமக்கு வந்தால், அதை forward செய்ய வேலை மெனெக்கெட்டு புதிய மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கும் பிரகஸ்பதிகளை நான் பார்த்திருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஒரு செளகரியத்திற்காக காசு கொடுக்க ஏன் மனசு வரமாட்டேன் என்கிறது ?

நம் மக்களின் கலாச்சாரத்தில் ஊறிய விஷயம் என்று இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியவில்லை. sony, nike போன்ற brand name-களுக்காகவே premium கொடுக்க தயங்காத நாம், சங்கீதம் பாடுபவனும் சபை நடத்துபவனும் மாத்திரம் லாபமே பார்க்காமல் பரோபகாரியாக வெறும் ஆத்ம திருப்திக்காக மாத்திரம் உழைப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் என் சிற்றறிவுக்கெட்டாத ஒன்றாக இருக்கிறது.

கச்சேரி பிரபலமான, தேர்ந்த வித்வானால் இருக்க வேண்டும். அதுவும் நல்ல செளகரியமான சபையில் இருக்க வேண்டும். அதுவும் ஆபீஸ் முடிந்து கச்சேரிக்குத் தோதாய், 6.00 மணிக்கு மேல் இருக்க வேண்டும். சுதா ரகுநாதன் பாடும் பொழுது பாட்டு சங்கதிகள் மட்டும் கேட்ட்டால் பத்தாது. அவருடைய ஜிமிக்கி அசையும் அழகும் தெரிய வேண்டும். இது எல்லாம் காலணா காசு செலவழியாமலும் கிடைக்க வேண்டும். எனக்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை இரண்டு மடங்காக்கினால் தேவலாம். என் ஆபீஸ் மாத்திரம் கஞ்சப் பிசிநாரி.

சரி…எது எப்படியோ, இன்றைக்கு வளையப்பட்டியின் நாதலயா ட்ரஸ்ட், ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் இசை விழாவைத் தொடங்கியிருக்கிறது. உன்னிகிருஷ்ணன் கச்சேரியை இன்று பலர் (ஓசியில்) இரசித்திருப்பார்கள். All are welcome வாசகத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடுபவர்கள் ஹேமமாலினிக்குப் போகட்டும். எனது கவலையெல்லாம், சென்னைக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு டி.என்.கிருஷ்ணன் கச்சேரி கூட கண்ணில் படவில்லையே என்றும். திருச்சி சங்கரனின் தனியாவர்தனத்தை எப்பொழுது கேட்போம் என்றும்தான்.

சீஸனில் நாகஸ்வரம்

டிசம்பர் சீஸனில் பல்லாயிரக்காண கச்சேரிகள் நடக்கின்றன. இருப்பினும் நாகஸ்வர கச்சேரிகள் பெரும்பாலும் தொடக்க விழா என்ற கேலிக்கூத்துக்கே ஒதுக்கப்படுகின்றன. மங்கல இசை என்ற பெயரில் பெரும் கலைஞர்களை அவமதிப்பதைப் பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.

நாகஸ்வர கச்சேரிகள் வைக்காததற்கு, சிறிய ஹாலில் அதிக சத்தம், கூட்டம் வராது என்று தொடங்கி பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பல் விழுந்துவிட்டது வரை ஆயிரம் காரணங்கள்.

”அதுதான் பொங்கலில் நாகஸ்வர விழா இருக்கிறதே”, என்று எதிர் குரல் வேறு. “சீஸனின் போது நாகஸ்வரக் கலைஞர்கள் தீண்டத்தகாதவர்களா”, என்று சிலரைக் கேட்டு பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

80057-gxebrxxkzz-1516819858

இந்த வருத்தங்கள் பல வருடங்களாய் இருந்தாலும் பெரியதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் வித்வான் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சுமனஸா அறக்கட்டளை ஓர் அரிய, மிகவும் தேவையான முயற்சியை முன்னெடுத்தது.

டிசம்பரில் கச்சேரி நடத்தும் சபைகளுடன் பேசி நாகஸ்வரத்துக்கென்று சில கச்சேரிகளை ஒதுக்கு வைத்திருக்கிறது. கச்சேரி தேதியையும் நேரத்தையும் மட்டும் சபை அளித்தால் போதும். மற்ற அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளையே பார்த்துக் கொள்கிறது. கச்சேரிகளுக்கு கலைஞர்களை முடிவு செய்வதிலிருந்து, கச்சேரி செலவுகளை ஏற்றுக்கொள்வது வரை அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளை பார்த்துக்கொள்கிறது.

இந்தப் பணியில் துறை சாதனையாளர் வியாசர்பாடி கோதண்டராமனும் இருப்பதால் பெரும்பாலும் அதிகம் அறியப்படாத கலைஞர்களுக்கு இந்த மேடை கிடைக்கிரது. இன்று நல்ல பெயருடன் விளங்கும் மயிலை கார்த்திகேயன் என்ற அற்புத ஈலம் கலைஞரை நான் முதன் முதலில் கேட்டது இந்த அறக்கட்டளை நாத இன்பத்தில் ஏற்பாடு செய்திருந்த டிசம்பர் கச்சேரியில்தான்.

இந்த சீஸனில் மட்டும் ஐந்து சபைகளில் பதினோரு கச்சேரிகள் ஏற்பாடாகி சிறப்பாக நடந்துள்ளன.

சென்ற வருடம், டிசம்பர் தவிர மற்ற மாதங்களிலும் நாகஸ்வர கச்சேரிகள் இந்த அறக்கட்டளையால் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும், நாகஸ்வரக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதிக விளம்பரம் இன்று சத்தமில்லாமல் இது ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்.

மிக அவசியமான முயற்சியை முன்னோடியாய் முன்னெடுத்திருக்கும் சுமனஸா அறக்கட்டளைக்கும், வித்வான் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் சங்கீத உலகம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்.

வரும்காலங்களில் பதினொன்று பல நூறாகப் பெருகும் என்று நம்புவோம்.

நாகஸ்வர நாட்காட்டி

தவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.

அதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.

எண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.

நாட்காட்டியிஒல் இடம் பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:

Valangaiman Shanmugasundaram
Sembanarkoil Brothers (SRD Muthukumaraswami and SRD Vaidhyanathan)
Perumpallam Venkatesan
Madurai Ponnuthayi
Thirucherai Muthukumaraswami
Vanidakaratheru Mani/Manpoondiah Pillai
Poraiyar Venugopal
Dharmapuram Govindarajan
Swamimalai Govindaraja Pillai
Thirumagalam Somaskanda Pillai
Kivalur Sinagaravelu Pillai
Pandhanainalloor Dakshinamurthi

காலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.

calendar

முதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.

Parivadini Charitable Trust, Union Bank of India Account Number: 579902120000916 branch: Kolathur, Chennai, IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.

இதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.

வோலேடி வெங்கடேஸ்வருலு

“ஹிந்துஸ்தானி இசையில் உள்ளது போல ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஸர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா?”,   என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்க வித்வான் வோலேடி வெஙக்டேஸ்வருலுவின் குரலைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை.

Voleti

நினைத்தது பேசும் சாரீரம் அமையப் பெற்றவர்களின் கச்சேரிகளில், குரலின் வசீகரத்தையும், அது செய்யக் கூடிய ஜாலத்தைக் காட்டும் களங்களாகவும் மாறி, சங்கீதம் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவதுண்டு. வோலேடியின் கச்சேரிகளில் தன் திறனை காட்ட கச்சேரி ஒரு கருவி என்றல்லாமல் இசையின் அழகை வெளிப்படுத்த தன் குரல் ஒரு கருவி என்கிற அர்ப்பணிப்பு மனோபாவத்தை உணர முடியும். கச்சேரியின் தொடக்கத்தில் கண்ணை மூடி ஸ்ருதியுடன் வோலேடி கலந்து விட்டால் அனைத்தையும் மறந்த மோன நிலை கச்சேரி முடியும் வரை தொடர்ந்து (அவருக்கு மட்டுமல்ல; கேட்வருக்கும்) நிலைக்கும்.

சங்கீத உலகில் ஸ்வரஞானி என்றால் அது வோலேடிதான் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. முனுகண்டி வெங்கடராவ் பந்துலுவிடம் அடிப்படைகளைக் கற்று கச்சேரி செய்யும் நிலைக்கு வந்துதும், சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார்.

பினாகபாணி வோலேடியைப் பற்றி கூறுகையில், “அவரால் எப்போதாவது வர முடியுமென்பதால் அதிகம் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்ததில்லை. என்னுடைய பாட்டுப் புத்தகங்களைப் பார்த்து ஒரு முறை எழுதிக் கொண்டாரென்றால் அதை அப்படியே பாடிவிடக் கூடிய திறமை அவருக்கு இயற்கையிலேயே இருந்தது.”, என்றுள்ளார்.

அகில இந்திய வானொலியில் அவர் தொடங்கிய சங்கித சிக்ஷணா என்ற நிகழ்ச்சி ம்ஜூலம் 300-க்கும் மேற்பட்ட அற்புதமான பாடல்களை இந்தியா முழுவதும் இசை மாணாக்கர்கள் கற்க முடிந்தது. நாளடைவில் தமிழகத்திலும் அவருடைய பெயர் பரவி பல கச்சேரிகள் நடந்தன. கச்சேரி செய்வதில் அதிகம் ஆர்வமில்லாதிருந்த வோலேடியை சக கலைஞர்கள் வற்புறுத்தி வரவழைத்தனர். வோலேடி பாட வேண்டுமென்பதற்காகவே லால்குடி ஜெயராமன் பஹாடி ராகத்தில் தில்லானா ஒன்றை உருவாக்கினார்.

ஹிந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த வோலேடி, வடக்கத்திய ராகங்களை எந்த ஒரு உஸ்தாதுக்கும் இணையாக இசைக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார். ஒரு முறை படேகுலாம் அலிகானிடமே தும்ரி ஒன்றைப் பாடி பாராட்டைப் பெற்றதை ஒரு நேர்காணலில் வோலேடி கூறியுள்ளார். பந்துவராளி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை அவர் விஸ்தரிக்கும் போது அவரிடம் இருந்த ஹிந்துஸ்தானி இசையின் தாக்கத்தை உணர முடியும். கர்நாடக இசைக்கென்றே பிரத்யேகமான ராகங்களான கேதாரகௌளை, சுரட்டி போன்ற ராகங்களின் வடகத்திய வாடை சற்றும் கலக்காமல் இசைப்பதிலும் வோலேடி வல்லவர்.

ஓர் அரிய புகைப்படத்தில், பின்னணியில் அரியக்குடியும் படே குலாம் அலிகானும் இருக்க, வோலேட்டி தன் தம்புராவை ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருப்பார். இந்தப் படமே அவருடைய சங்கீதத்தின் முழுமையான வர்ணனை எனலாம்.

இலுப்பூர் பஞ்சாமி

1935-ல் தன் முப்பதாவது பிறந்த நாளைக் காண்பதற்கு முன் மறைந்து விட்ட இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளையின் பெயர் இன்றளவும் தலை சிறந்த கலைஞர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.

பஞ்சாமி என்று அழைக்கப்பட்ட பஞ்சாபகேச பிள்ளையின் இள வயதில் தன் தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்று வந்தார். இயற்கையிலேயே பஞ்சாமிக்கு அமைந்திருந்த லய நிர்ணயத்தை கண்டு மலைக்கோட்டை வெங்கடாசலதவில்காரரும், ’கோடையிடி’ லால்குடி அங்கப்பத் தவில்காரரும் தவில் கற்றுக் கொடுத்தனர்.

தனது ஏழாம் வயதில் தன் தமையனாரின் நாகஸ்வரத்துக்கு தவில் வாசிக்க ஆரம்பித்த பஞ்சாமி, பதினைந்து வயதாவதற்குள் தவில் உலகின் முடிசூடா மன்னன் என்ற நிலையை அடைந்தார். நாகஸ்வர மேதை மதுரைபொன்னுசாமி பிள்ளையுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐந்து வருட காலம் அவருடைய மேளக் கச்சேரிகளுக்கு பஞ்சாமி வாசித்தார்.

பஞ்சாமிக்கு 22 வயதாகும் போது, மதுரை பொன்னுசாமி பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாகஸ்வர ஜாம்பவான்களுக்கு வாசித்து வந்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்தும் எண்ணற்ற கச்சேரிகள்செய்து வந்தார். லயத்தில் தன்னிகரற்று விளங்கினாலும், அவருக்கு மேடைக் கச்சேரிகளின் பால் காதல் இருந்தது. நல்ல ரவை ஜாதி சாரீரமும், ராக லட்சணங்களில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தார் பஞ்சாமி.  ‘நிரவதிஸுகதா’, ‘மரியாதகாதுரா’, ‘பலுகவேமி’ போன்ற கிருதிகளுக்கு இவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் இன்றளவும் மிகப் பிரபலமாய் உள்ளன. ராஜரத்னம் பிள்ளை நிரவதிஸுகதா பாடலை கிராமஃபோன் ரிக்கார்டாக வெலியிட்டுள்ளார். அது அவர் பஞ்சாமிக்கு பெய்த காணிக்கை என்றே சொல்லலாம். ஏனெனெனில், ஒரு பாடலில் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் ஒரு சிட்டை ஸ்வரம் வாசிப்பதே வழக்கம். இந்த ரிக்கார்டில் சரணத்துக்குப் பின் பஞ்சாமி அமைத்த மூன்று சிட்டை ஸ்வரங்களை வாசித்துள்ளார்

panjami

“பஞ்சாமி பிள்ளை இசையில் தோய்ந்த பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில்பதினொன்று மட்டுமே இன்று கிடைக்கின்றன.”, என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளையின் கஞ்சிரா வாசிப்பில் மயங்கி, தானும் உழைத்து, அந்த வாத்தியத்தில் தேர்ச்சியும் பெற்றார்.  நாயனா பிள்ளை, செம்மங்குடி சீனிவாச ஐயர், சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை போன்ற பலரதுகச்சேரிகளுக்கு வாசித்துள்ளார்.

 “குறைந்த சன்மானம் கிடைத்த போது பஞ்சாமி என்னுடன் இருந்தார். இன்று ஆயிரக் கணக்கில் சன்மானம் கிடைக்கும் வேளையில் பஞ்சாமி இல்லாமல் போனாரே”, என்று நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி அங்கலாய்ப்பாராம்.

பஞ்சாமி, தவில் வாசிப்பை கிராமஃபோனில் வெளியிட மிகப் பெரியத் தோகையை சன்மானமாகக் கேட்டாராம். நிறைய இழுபறிக்குப் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதித்து அவருக்கு ஒரு கடிதத்தை கிராமஃபோன் கம்பெனி அனுப்பியதாம். அந்தக் கடிதம் வீட்டை அடைந்த அன்று அவர் வீட்டில் பிணமாகக் கிடந்தார் என்றொரு செவிவழிச் செய்தி உண்டு.

பஞ்சாமியை நேரில் கேட்டவர்களை இன்று காண்பது அரிது.

அவர் பெயரைச் சொல்ல இன்று பாடி விட்டுச் சென்ற சில கிராமஃபோன் ரிக்கார்டுகள்தான் மிஞ்சுகின்றன.