Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2008

20th Dec @ Mylapre Fine Arts, 3.00 P.M., Sakethraman, Charumathi Raghuram, Serthalai Ananthakrishnan, Guruprasad

ஒவ்வொரு டிசம்பரிலும் பிரபலமாகி ப்ரைம் ஸ்லாட்டில் பாடும் பாடகர்கள் பாட்டை விட, potential prime slote contenders பாட்டே என்னை அதிகம் கவரும். அந்த வகையில் 2-3 வருடங்களாகவே புகழ் ஏணியில் படு வேகமாய் ஏறி வரும் இளைஞர் சாகேத்ராமன். 2005-ல் இவர் கச்சேரி பற்றி எழுதியிருந்தேன். ‘மாமி talk-ல்’ unparalleled populariry-ஒடு விளங்கும் விசாகா ஹரியின் தம்பி. லால்குடி சிஷ்யர். அற்புத குரல், இழைத்து, உழைத்துப் பாடும் பாணி. அறிவுச் செரிவு அழகுணர்ச்சியைக் கெடுக்காத வகையில் கச்சேரியை அமைக்கும் தன்மை என்றெல்லாம் எக்கெச்செக்க சிறப்பம்சங்கள். 

2005-ல் முதன் முறையாய் கேட்ட போது, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கேட்க முடிந்தது. அதனால் அவரது சிறப்பம்சங்கள் எல்லாம் என்னை பெரிதும் மகிழ்த்தின. மூன்று வருடங்களாய் தொடர்ந்து கேட்டு வருவதால், அவர் நன்றாகத்தான் பாடுவார் என்று ஒரு bias தோன்றிவிட்டது. அதனால் எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. 2008 சீஸனின் முதல் கச்சேரியை அவரிடமிருந்த தொடங்கலாம் என்று அவசர அவரமாய் மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸ்-க்கு விரைந்தேன். நேற்று குறிப்பிட்டது போல வர்ணத்துக்குள் போய்ச் சேர முடியவில்லை. ஹம்ஸத்வனி ராகத்தை சில கீற்றிகள் மூலம் சாகேத்ராமன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அரங்கில் நுழைந்தேன். 

அந்த கால கூரையும், எப்போதோ வாங்கிய ஸ்பீக்கருமாய் பல வருடங்களாய் ஒப்பேற்றி வந்த ·பைன் ஆர்ட்ஸ் இப்போது புதிய false roofing பெற்று – முன்பிருந்ததை விட மடங்கு உயர்வான ஒலியமைக்கு மாறியிருக்கிறது. ஸ்பீக்கர்கள் மாறியிருக்கின்றனவா தெரியவில்லை. வருடா வருடம் காணக் கிடைக்கும் புத்தம் புதிய, நெடும் விளம்பர பேனர்கள் இவ்வருடம் அதிகம் கண்ணில் படவில்லை. மாற மாட்டேன் என்று அடம்பிடிப்பவையும் உண்டு. அவற்றுள் முக்கியமாய் மூன்று விஷயங்கள் மாறினால் நன்றாக இருக்கும். ஒன்று எப்போதோ கட்டப்பட்ட, காலத்தால் மக்கிப் போல, வண்ணத்தில் மங்கி -பள பள ஜிப்பாக்களுக்கும் ஜிகு ஜிகு பட்டுப் புடவைகளுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத மேடை. அதை மாற்ற நிறைய பணம் செலவாகும் அல்லது அதுதான் nostalgic appeal கொடுக்கிறது என்று ஏதாவது கூறி ஒப்பேற்றலாம். எத்தனையோ வருடம் முன் எழுதிய பேனரில், வருடா வருடம் அதிலிருக்கும் எண்ணை மட்டும் (2004 டிசம்பரில் இதைப் பற்றி எழுதியிருந்தேன்) மாற்றுவதைப் பார்க்க சகிக்கவில்லை. லகரங்கள் பல இரைத்து புனருதாரணம் செய்ய முடியும் போது, சில நூறு ரூபாய் செலவழித்து ஒரு புது பேனர் கூடவா எழுத முடியாது? 

 எப்போது யாரோ கூறியது – “தரித்திரம் சுலபமாக தொலைந்து விடும். தரித்திர புத்தி சீக்கிரத்தில் தொலையாது” – ஏனோ வருடா வருடம் ·பைன் ஆர்ட்ஸில் பேனரைப் பார்க்கும் போதெல்லாம் இவ்வாசகம் நினைவுக்கு வரும். இன்னொன்றையும் இந்த சபா நிச்சயம் மாற்ற வேண்டும். கச்சேரி நடக்கும் வேளையில் அவப்போது கரண்டிகள் விழும் சத்தமும், பாத்திரங்கள் இழுக்கப்படும் சத்தமும் கேண்டீனிலிருந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த சத்ததிலிருந்து அரங்கை நிச்சயம் காக்க வேண்டும். நான் புலம்பி என்ன ஆகப் போகிறது…கச்சேரிக்கு வருவோம்….

மத்தியான கச்சேரியான போதும், சாகேத்ராமன் சில வருடங்களில் பெற்றிருக்கும் புகழால், அரங்கம் ஓரளவுக்கு நிறைந்தே இருந்தது. நான் நுழைந்த போது “ரகுநாயகா” ஹம்சத்வனியில் ஒலித்துக் கொண்டிருந்தது. கீர்த்தனையைத் தொடர்ந்து விறுவிறுவென ஸ்வரங்கள் பாடினார். கடந்த சில மாதங்களில் சேவாகும் கம்பீரும் ஜோடி சேர்ந்து பொறி கிளப்புவதைப் போல, சாகேத்ராமனும் வயலின் விதூஷி சாருமதி ரகுராமும் ஸ்வரங்களை அள்ளி வீசினர். வயலின் என்றதும் நினைவுக்கு வருகிறது…..கடந்த சில வருடங்களில் மூன்று இளம் கலைஞர்கள் வில் வித்தையால் ரசிகர்களை சொக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். வேகமாகட்டும், நெளிவு சுளிவாகட்டும், லய விவகாரமாகட்டும், அபூர்வ ராகமாகட்டும், எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கியிருக்கின்றனர். அக்கரை சுப்புலட்சுமி, சாருமதி ரகுராம், நாகை ஸ்ரீராம் என்ற இளம் கலைஞர்களே அம் மூவர். அத்தனை முன்னிலை வித்வான்களுக்கும் கொஞ்சம் கூட கலக்கமின்றி அசத்தலாக பக்க வாத்தியம் வாசித்து கச்சேரிக்கு களை சேர்க்கின்றனர். ஒவ்வொரு நாளும் பேப்பரை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. solo கச்சேரி follow கச்சேரி என்று ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகள். எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெய்வத்துக்குதான் வெளிச்சம். Burn out ஆகாமல் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம். மீண்டும் கச்சேரிக்கு…. 

image-2

ஹம்ஸத்வனி நல்ல தொடக்கத்தை அளித்து, சீஸனின் முதல் கச்சேரியே சூப்பர் கச்சேரியாய் அமைவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட்டன. If only wishes were horses…….

ஆரபி ராகத்தை சில நிமிடங்கள் ஆலபனை செய்தார் சாகேத். ஆலபனையின் கடைசி கட்டத்தில் மந்த்ர (கீழ்) ஸ்தாயியில் (octave, frequency, pitch இவற்றுக்கெல்லாம் எளிமையான தமிழ் பதங்கள் தெரிந்தால் எழுத வசதியாக இருக்கும். தெரிந்த நண்பர்கள் உதவவும்) சஞ்சாரம் செய்த போது ஸ்ருதி விலகி நம்மை முகம் சுளிக்க வைத்தன. சாகேத்ராமனைத் தொடர்ந்து வாசித்த சாருமதி ரஸமாய்ப் பொழிந்து தள்ளினார். அவரது வில் வித்தையில் மயிலிறகால் வருடுவது போல சுஸ்வரமாய் அமைந்துள்ளது. சிலர் வாசிக்கும் போது எழும் கீச்சொலி கிஞ்சித்தும் இல்லை. வல்லினம் மெல்லினம் எல்லாம் அப்படிப் பேசிகிறது. அற்புதமாய் அமைந்து சாருமதியின் ஆரபி ஆலாபனையைத் தொடர்ந்து ‘நாத ஸ¤தா ரஸ’ பாடினார். அற்புதமான பாடல். ஏழு ஸ்வரங்களை வில்லை அலங்கரிக்கும் மணிகளாக உருவகித்து, அவை அலங்கரிக்கும் வில்லை இராகமாக வர்ணித்து, கணம், நயம், தேசியம் என்ற மூவகை (இசைக்) குணங்களை (can be approximately taken as devotional, emotional and folk) அவ்வில்லின் நாணாக்கி, அடுத்தடுத்துப் பாயும் அம்புகளை லயத்துக்கு உருவகமாக்கி, ரசம் நிறைந்த சங்கதிகளை பல்வகை மொழிகளாக்கி, இவை அனைத்தும் குழைத்தால் எழும் நாதத்தை ராமன் என்னும் இறைவனாக வர்ணிக்கும் அற்புதப் பாடலது. ‘வேத புராண’-வில் கார்வை கொடுத்த போதும் சற்றே ஸ்ருதி விலகியது. ‘தர பஜநே பாக்யமுரா’ என்ற இடத்தில் ஸ்வரம் பாடினார். ஸ்வரம் பாடும் போது பொருத்தங்கள் அழகாக அமைந்து லால்குடி பாணியை பறை சாற்றின. காலப்ரமாணம் சற்று இழுபறியாய் அமைந்ததைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஆரபியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதான ராகமாக தோடியை எடுத்துக் கொண்டார். சென்ற வருடம் அகாடமி கச்சேரியிலும் ஆரபியில் ‘நாத ஸ¤தா’  பாடியபின் தோடி ராகத்தை பிரதானமாகப் பாடினார். வெகு அற்புதமாய் அமைந்தது. இந்த வருடமும் அதைப் போலவே அமையும் என்று எதிர்பார்க்கும் வகையிலேயே ஆலாபனை தொடங்கியது. நல்ல அழுத்தம், அளவான பிருகா, அழகான பிடிகள் என்று அதற்கும் குறைவில்லை என்ற போதும் அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகியது அத்தனை நல்ல விஷயங்களையும் சோபிக்க விடாமல் செய்தது என்றே கூற வேண்டும். குறிப்பாக மேல் ஸ்தாயியில் அற்புதமாகப் பாடிய போது மெல்லை நம்மை மண்ணிலிருந்து எழுப்பு விண்ணில் பறக்கவிட்ட்டது போலத் தோன்றியது. இதுவல்லவா சுகம் என்று நாம் விண்ணில் பயணிக்கும் வேளையில், றெக்கையை வெட்டி நம்மை மண்ணில் வீழ்த்தினால் எப்படியிருக்கும்? சாகேத்ராமன் மேல்ஸ்தாயியில் பாடிய பின் கீழ் ஸ்தாயிக்கு வந்து ஸ்ருதி விலகிய போது அப்படித்தான் இருந்தது. சங்கீதத்தில் ஸ்ருதி அன்னையல்லவா? என்னதான் பெரிய கலைஞன் என்றாலும் இரண்டு காலையும் ஒரே சமயத்தில் தூக்கி கம்பியில் நடக்க முடியுமா? 2005-ல் எழுதிய பதிவிலும் மந்த்ர ஸ்தாயியில் பாடும் போதெல்லாம் ஸ்ருதி சற்றே விலகியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். இன்னமும் கூட அந்த குறை குறையாகவே உள்ளதைக் காண வருத்தமாக இருக்கிறது. ஆதார ஷட்ஜம் என்பதில் ‘ஆதாரம்’ என்ற வார்த்தையை சாகேத்ராமன் ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். தார ஸ்தாயியில் காட்டும் கவனத்தை மந்த்ர ஸ்தாயியிலும் காட்ட வேண்டும். நாலே அரைக்கால் எடுப்பில் இடரி விழாமல் இருப்பதை விட, மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் சஞ்சாரம் செய்யும் போதும் ஸ்ருதி இம்மி பிசகாமல் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தால், அவருக்கு நல்லது என்பதை விட இசை உலகுக்கு நல்லது என்றே கூறுவேன். உயரம் ஏற ஏற விழுந்தால் அடி பலமாக விழும். வீட்டு வாசலில் வழுக்கி விழுந்தால் அதிக பட்சம் எலும்புமுறிவு ஏற்படலாம். எம்பையர் ஸ்டேட் பில்டிங்கின் உச்சியிருந்து வீசியெறியப்பட்டால் ஒரு எலும்பு கூடத் தேறாது. 

image-1-1

தோடியிலும் வயலின் அதி அற்புதமாய் அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

மிஸ்ர ஜம்பை தாளத்தில் அமைந்த ‘தாசுகோவலெநா தாசரதி’ பாடி, ‘ஸௌமித்ரி த்யாகராஜு’ என்ற இடத்தில் நிரவல் செய்தார். தார ஸ்தாயி ஷட்ஜத்தை மையமாகக் கொண்டு பாடிய இடங்களில் எல்லாம் மிக மிக அழகாக அமைந்தன. மிருதங்கத்தில் அனந்தகிருஷ்ணனும், கஞ்சிராவில் குருப்ரசாத்தும் அற்புதமாக வாசித்து மேலும் மெருகு சேர்த்தனர். ஸ்வர ப்ரஸ்தாரத்தில் பொருத்தங்கள் மெச்சும் படி அமைந்தன. எந்தவித bias-ம் இன்றி ஸ்வரப்ரஸ்தாரத்தை கேட்டிருப்பின் இன்னும் கூட ரசித்திருக்க முடியும். என்னுடைய எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்ததால், ஆலாபனையில் நிகழ்ந்த சறுக்கல்கள் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தன. (அதற்கு சாகேத்ராமன் எந்த விதத்தைலும் பொறுப்பாக முடியாது.) ஸ்வரப்ரஸ்தாரத்தைத் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் தொடங்கியது. சில ஆவர்த்தங்கள் அழகாகச் சென்று கொண்டிருந்த தனி திடீரென்று ஒவ்வொரு தட்டிற்கும் தட்டு கெட்டு ஓட ஆரம்பித்தது. இந்த ஓட்டத்துக்குக் காரணம் தாளம் போட்டவர்களா அல்லது வாசித்தவர்களா அல்லது அனைவருமா என்று சொல்வது கடினம். கச்சேரிகளில் அதி வேகமாக வாசிக்கும் போது காலப்ரமாணத்தில் ஓட்டம் நிகழ்வது சகஜம்தான். எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா? ஒவ்வொரு ரவுண்டின் ஆரம்பித்திலும் ஓட்டத்தைப் பிடித்து இழுப்பதும், அதன்பின் தனி தறிகெட்டு ஓட்டமெடுப்பதும் தொடர்ந்து நிகழ்ந்ததால், அவர்கள் திஸ்ரம் வாசித்தால் என்ன சதுஸ்ரம் வாசித்தால் என்ன, முடித்தால் சரிதான் என்று நினைக்க வைத்தது. நல்ல கலைஞர்கள் கூடி, நன்றாக உழைத்துக் கொடுக்கும் இசை, சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாததால் சோபிக்காமல் போனதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. 

தனி முடிந்ததும், முன் சீட்டில் ஒரு பெரியவர், ‘ஆஹா ஒஹோ’ என்று புகழ்ந்தார். ‘இப்படி ஏத்தி விட்டே அழித்துவிடுவார்களோ’? என்று சற்று கவலையாக இருந்தது.

தனியைத் தொடர்ந்து, பெஹாக் ராகத்தை வெகு அழகாய் ஆலபனை செய்து, தானம் பாடி, பல்லவியும் பாடினார். வல்லினம் மெல்லினம் எல்லாம் மிக அழகாய் வேறுபடுத்திக் காட்டி, பாவம் சொட்ட சொட்ட பாடி தோடியில் விட்டதையெல்லாம் பெஹாகில் பிடித்தார். கண்ட நடையில் அமைந்த சதுஸ்ர ஜம்பை தாள பல்லவி நெருடலான ஒன்று. தாளம் நெருடலான ஒன்று என்ற போதும் பாடியதைக் கேட்கும் போது அத்தனை நெருடலாகத் தெரியவில்லை. இதென்ன பிரமாதம் என்பது போலவே பாடினார். பல்லவியில் த்ரிகாலம் பாடி, ஸ்வரம் பாடி, ராகமாலிகையும் (நீலாம்பரி, ப்ருந்தாவன சாரங்கா, ரஞ்சனி) பாடினார். குறிப்பாக பிருந்தாவன சாரங்காவில் பாடிய ஸ்வரங்களும், அந்த ஸ்வரப்ரஸ்தாரத்தை முடித்து பல்லவியில் சேர்த்த நேர்த்தியும் வெகு அழகாக அமைந்தது. அடுத்த கச்சேரி 6.00 மணிக்குதான் என்கிற பட்சத்தில் ஐந்து மணிக்கே இந்தக் கச்சேரியை முடித்து இருக்க வேண்டாம். அப்படியென்ன அவசரமோ சபாக்காரர்களுக்கு. திரையை அவசர அவசரமாய்ப் போட்டுவிட்டனர். அதனால், விருத்தமோ, தில்லானாவோ, திருப்புகவோ பாட வழியில்லை. 

சாகேத்ராமனுக்கு இன்னொரு suggestion. கச்சேரியில் (வர்ணம் நீக்கி) அமைந்த பாடல்கள் நான்கு. அவற்றுள் ஒன்று ராகம் தானம் பல்லவி. அதையும் நீக்கினால் மீதமுள்ளவை மூன்று. அவை மூன்றுமே தியாகராஜரின் கீர்த்தனைகளாய் அமைந்திருந்தது. ராகம், தாளம், பாவம் ஆகியவற்றில் variety காட்டுவது போல, composer, language ஆகியவற்றிலும் variety காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. 

கச்சேரி முடிந்ததும் கேண்டீனுக்கு சென்றால் கூட்டம் இருந்த போதும் ஐட்டங்கள் ஏதுமில்லை. தோசையும் காப்பியும்தான் இருக்கிறது என்றார்கள். கீரை வடை, வாழைப்பூ வடை, அசோகா அல்வா போன்ற ஐட்டங்கள் எல்லாம் தனி ஆவர்த்தனத்தின் போது எழுந்து வந்து கேண்டினில் சாப்பிடும் மஹானுபாவர்களுக்கு மட்டும்தானாம். 

என்ன (அ)நியாயம் பாருங்கள்.

Read Full Post »

காலண்டரில் மார்கழி பிறந்து சில நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு இன்றுதான் மார்கழி. வருடா வருடம் இரண்டு வார விடுப்பு எடுத்துக் கொண்டு சபா சபாவாக ஏறி இறங்கி இசைக் கடலில் திளைக்க ஆரம்பிக்கும் நாள்தான் எனக்கு மார்கழி. 

பெங்களூரில் இருந்து சென்னை வந்து, வீடு நோக்கி விரைந்த போது இதமான குளிரும் (பெங்களூர் பனியில் பயணித்த பிறகு சென்னைக் குளிர் இதமாகத்தானே இருக்கும்) திருப்பாவையும் என் மார்கழியைத் துவங்கி வைத்தன. புள்ளும் சிலம்பிய இடத்திற்கு பத்தடி தூரத்தில் ஆழி மழைக் கண்ணன் ஆர்பரித்துக் கொண்டிருந்தான். ஒரு தெருவில் ஒலிப்பெருக்கியில் பேச்சுக் குரல் கேட்டது. உற்று கவனித்த போது, அதுவும் திருப்பாவைதான். சென்னைப் பனியையும் ஒரு பொருட்டாக மதித்து நேற்றைய இரவே வரையப்பட்ட அழகிய பெரும் கோலங்கள் சில தென்பட்டன. எங்கள் வீட்டில், எனக்குப் ப்டிக்கும் என்பதால் நாளை முதல் பெரியதாய் அம்மா கோலமிடுவாள்.

டிசம்பர் சீஸனின் அனைத்தும் நாட்களும் எனக்கு அதி காலையே தொடங்கி விடும் – முதல் நாள் தவிர்த்து. முதல் நாள் காலை முழுதும் எந்தெந்த இடத்தில் என்னென்ன கச்சேரி – அகாடமியில் சௌம்யாவைக் கேட்டபின் நாரத கான சபாவில் ஜெயந்தி குமரேஷ¤க்குப் போகலாமா அல்லது பாரத் கலாசாரில் விஜய் சிவா கேட்டு விட்டு நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியில் ஹைதராபாத் சகோதரர்களைக் கேட்கலாமா? இந்த வருடம் வீணை காயத்ரி எங்கும் வாசிக்கப் போவதில்லை என்று முன்பே அறிவித்து இருந்தாலும், கடைசி நிமிட மனமாற்றம் நிகழ்ந்திருக்குமா? என்றெல்லாம் ஆராய்வதே ஒரு தனி சுகம். முதலில் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கும் கலைஞர்கள் எல்லாம் எங்கெங்கே பாடுகிறார்கள் என்று நோட்டம் விட்டு முதல் கட்ட லிஸ்ட் தயாராகும். அதன் பின், ஒரே நாளில் optimal-ஆக, அதிக அளவிலும் – அதே நேரத்தில் என் பட்டியலில் இருக்கும் கலைஞர்களின் கச்சேரியாகவும் அமையும் கச்சேரிகள் கொண்டு அடுத்த கட்ட லிஸ்ட் தயாராகும். அந்த பட்டியலில் நான் கேட்க விழையும் கலைஞர்களுக்கு யார் பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள் என்று ஆராய்ந்து, திருச்சி சங்கரன், நாகை முரளீதரன், காரைக்குடி மணி, எம்பார் கண்ணன் வாசிக்கும் கச்சேரிகளுக்கு முக்கியத்வம் அளிக்கப் பட்டு, மூன்றாம் கட்ட லிஸ்ட் தயாராகும். மூன்று கட்ட அலசலுக்குப் பின்னும் காயத்ரி வெங்கட்ராகவனைக் கேட்கப் போகலாமா அல்லது சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரிக்குப் போகலாமா என்று குழப்பம் மண்டையைப் பிளக்கும். மண்டைக் குடைச்சல் உச்சத்தை அடையும் போது – ஆட்டம் தொடங்கி ஒரு விக்கெட் விழுந்த பின் “There comes the Don” என்று பிராட்மனைக் காண தனது இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த அந்தக் கால பெரிசுகள் போல, “There comes the december season” என்று தோன்றும். இரண்டு வாரத்துக்கும் சேர்த்து திட்டம் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று தோல்வியை ஒப்புக் கொண்டு, அன்றைய தினத்துக்கு மட்டும் எங்கெங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, அரக்க பரக்க குளித்து, அரை வயிறும் கால் வயிறுமாய் உண்டு – அரை மணிக்குள் பெரம்பூரில் இருந்து மைலாப்பூருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பேன்.

அட! நிஜமாகவே சாகேத்ராமன் கச்சேரிக்கு நேரமாகிவிட்டது. இன்னும் எழுதிக்கொண்டிருந்தால் வர்ணத்துக்குள் கூட போய்ச் சேர முடியாது. 2004, 2005 டிசம்பர் மாதங்களில் இணையத்தில் எழுதியதை விட, விவரமாக எழுத வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. 2006, 2007-ல் கூட அப்படித்தான் நினைத்தேன். செயலாக்கத்தான் முடியவில்லை. இந்த வருடம் பரவாயில்லை. முன்னோட்டமாவது போட்டாகிவிட்டது. தொடருமா தெரியவில்லை. பார்ப்போம்!

Read Full Post »