Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2009

டி.கே.பட்டம்மாள்

இம்மாத ‘அம்ருதா’ இதழிலே பிரசுரமான கட்டுரை

“எங்க வீட்டு கமலா அற்புதமாப் பாடுவா.”

“பெண் பிள்ளை எப்படிப் பாடினா என்ன? குடும்பத்துப் பெண் கச்சேரியா செய்யப் போறா? பெண் பார்க்க வரும் போது, “நான் ஊமை இல்லை”-னு காமிக்க ஒரு பாட்டு. நவராத்திரி கொலுவுல சும்மா சுண்டலை வாங்கிண்டு வராம இருக்க வேண்டி நாலு பாட்டு தெரிஞ்சாப் போறாதோ?”

மேலுள்ள சம்பாஷணையை இன்று படிக்க வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கும். 90 வருடங்கள் பின்னோக்கிப் போனோமெலில் இப்படிப்பட்ட பேச்சை நாம் தினம் தினம் கேட்டிருக்கக் கூடும்.பெண் கலைஞர்கள் என்றாலே மரபு வழிக் கலைஞர்கள் மட்டும்தான் என்றிருந்த நிலையை மாற்றியவர் இருவர். நடனத் துறைக்குள் குடும்பப் பெண்களும் நுழைய முடியும் என்று காட்டியவர் ருக்மணி தேவி. இதையே சங்கீதத் துறையில் சாதித்துக் காட்டியவர் டி.கே.பட்டம்மாள்.

காஞ்சியில், தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கும் ராஜம்மாளுக்கும் 1919 மார்ச் 28-ம் தேதி பிறந்தக் குழந்தையே பிற்காலத்தில் சங்கீத உயரங்களைத் தொட்ட டி.கே.பட்டம்மாள். பெற்றோர் இருவருமே இசையில் நாட்டமுடன் இருந்ததால் பட்டம்மாளுக்கு இசை இயற்கையாகவே வந்தது. கிருஷ்ண கருணாம்ருதம், சியாமளா தண்டகம், முகுந்த மாலை போன்ற ஸ்லோகங்களை தந்தையார் அமைத்த ராகத்தில் தினமும் அதி காலையில் பட்டம்மாள் சாதகம் செய்வார். மகளின் இசை ஆற்றலைக் கண்ட தீட்சிதர், பட்டம்மாளைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். பட்டம்மாளின் ஸ்லோகம் சொல்லும் ஆற்றல் உறவினரிடையே பிரபலமாய் விளங்கியது.

பட்டம்மாள் இசைத் துறைக்கு வர உதவியோரில் முக்கியமானோர் இருவர். ஒருவர் பட்டம்மாளின் முதல் குருவாக விளங்கிய ‘தெலுங்கு வாத்தியார்’. மற்றவர் பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியை அம்முக்குட்டி அம்மாள்.

ஸ்ருதி பத்திரிக்கையில் வெளியான பட்டம்மாள் பற்றிய சிறப்பிதழில், தெலுங்கு வாத்தியாரைப் பற்றி பின் வருமாறு நினைவு கொள்கிறார் பட்டம்மாள், “எனக்கு ஏழு வயது இருக்கும் போது ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தோம். நான் அப்போதே அன்றைய பிரபல வித்வான்களைப் போலவே பாடுவேன். அதனால், உறவினர்கள் மத்தியில் என் பாடும் திறன் பிரபலமாகியிருந்தது. அன்றும் என்னைப் பாடச் சொன்ன போது, சற்றும் பயமில்லாமல் நானும் என் சகோதரர் ரங்கநாதனும் பாடினோம். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் பெரிதும் மகிழ்ந்து, “இப்படிப் பட்ட பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லித் தரத்தானே இத்தனை நாள் ஏங்கியிருந்தேன்”, என்றார். அவர் பெயர் கூட எங்களுக்கு நினைவில்லை. அவர்தான் எனக்கு முறைப்படி சொல்லிக் கொடுத்த முதல் குரு. அவரைத் தெலுங்கு வாத்தியார் என்று அழைப்போம். ‘துலஸி பில்வ’, ‘லேகனா’, ‘கொலுவமரகத’ போன்ற பாடல்களை நான் அவரிடம்தான் கற்றேன்.”

காஞ்சிபுரத்தில் நயினா பிள்ளை நடத்திய தியாகராஜ உத்சவத்தில் அனைத்து முன்னணி வித்வான்களும் பாட வந்தனர். அவர்களின் இசை பட்டம்மாளின் ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்தது. குறிப்பாக நயினா பிள்ளையின் கச்சேரிகள் பட்டம்மாளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நயினா பிள்ளையின் ‘full-bench’ கச்சேரிகள் அந்தக் காலத்தில் வெகு பிரபலம். கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற தாள வகைகளில் கடினமான பல்லவிகளை பாடுவதில் வல்லவராக விளங்கியவர் நயினா பிள்ளை. அவர் கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவியை மட்டுமே பல மணி நேரம் பாடுவார். எத்தனை நெருடலான லய சமாசாரங்களில் ஈடுபட்ட போதும் ராக பாவம் சிறிதும் குறையாமல் பாடுவது நயினாப் பிள்ளையின் தனிச் சிறப்பு. அவரின் கம்பீரமான இசையைக் கேட்டு வளர்ந்த பட்டம்மாள், நயினாப் பிள்ளையை தன் மானசீக குருவாகவே கொண்டார். ஒரு இசைப் போட்டியில் பட்டம்மாள் ‘ரக்ஷ பெட்டரே’ பாடியதைக் கேட்ட நயினாப் பிள்ளை, தன் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் பட்டம்மாளைப் பாட வைத்து மகிழ்ந்தார்.

அம்முக்குட்டி அம்மாள் இல்லையெனில் தானொரு முழு நேரப் பாடகியாய் ஆகியிருக்க முடியாது என்று ஓர் நேர்காணலில் கூறுகிறார் பட்டம்மாள். பட்டம்மாளின் தந்தை மகளின் சங்கீத ஆர்வத்தை ரசித்த போதும், அக் கால நிலைக்கு ஏற்ப தன் மகளை மேடையில் பாட அனுமதிக்காமல் இருந்தார். கூட்டத்துக்கு நடுவில் தன் மகள் மேடை ஏறிப் பாடுவதென்பது தீட்சிதருக்கு உறுத்தலான விஷயமாகவே இருந்தது. தீட்சிதரின் மனதை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் அம்முக்குட்டி அம்மாள்தான். தீட்சிதரிடம் வாதிட்டு பட்டம்மாள் பெற்றிருக்கும் ஆற்றல் அபூர்வமானது என்று உணர்ச் செய்தார். சென்னையில் நடை பெற்ற Government Polytechnical examination for music-ல் பட்டம்மாளும் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். பத்து வயது கூட நிரம்பிராது சிறுமியும் பரிட்சையில் கலந்து கொண்டார். பேராசிரியர் சாம்பமூர்த்தி, முத்துசாமி தீட்சிதரின் பரம்பரையைச் சேர்ந்த அம்பி தீட்சிதர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்கள் பரிசீலனைக் குழுவில் அமர்ந்திருந்தனர். பட்டம்மாள் பாடிய பாடலைக் கேட்ட அம்பி தீட்சிதர், “முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனை ஏதேனும் தெரியுமா” என்று கேட்க, “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” தெரியும் என்றார் பட்டம்மாள். “ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே பாடலா! அதைப் போன்ற நுட்பமான நெடும் பாடலெல்லாம் உனக்குப் பாட வருமா!” என்று ஆச்சரியப்பட்டு பட்டம்மாளைப் பாடச் சொன்னார். பட்டம்மாளின் குரலிலிருந்து வெளிப்பட்ட இசையில் சொக்கிப் போனார். பட்டம்மாளின் தந்தையை அழைத்து, “இந்தக் குழந்தையை நாளை முதல் என் வீட்டுக்கு தினமும் அழைத்துக் கொண்டு வந்துவிடு. நான் இவளுக்கு நிறைய சொல்லித் தர வேண்டும்.”, என்றார். சில நாள் விடுப்பில் வந்திருந்த பட்டம்மாளின் தந்தையோ செய்வதறியாமல் தவித்தார். “நீ என்ன செய்வாயோ தெரியாது. அவளை என் வீட்டுக்கு அழைத்து வரத்தான் வேண்டும்”, என்று அம்பி தீட்சிதர் அடித்துக் கூறவும்., தன் விடுப்பை இன்னும் கொஞ்ச நாட்களுக்குன் நீட்டித்து பட்டம்மாள் பாடம் கேட்க வழி செய்தார் கிருஷ்ணசாமி தீட்சிதர். சென்னையில் அம்பி தீட்சிதரிடம் கற்ற சில நாட்களை தன் வாழ்வின் பொற்காலம் என்று கூறுகிறார் பட்டம்மாள்.

காஞ்சிபுரம் திரும்பிய பட்டம்மாளின் வாழ்கையில் திருப்புமுனையாய் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவர் படித்த பள்ளியில் போட்ட நாடகத்தில் பட்டம்மாளுக்கு முதன்மை வேடம் கொடுத்தார் அம்முக்குட்டி அம்மாள். நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சுதேசமித்ரன் பத்திரிகையில் பட்டம்மாளின் படத்துடன் ஒரு செய்தி வெளியாகியது. அந்தச் செய்தி பட்டம்மாள் வீட்டில் பெரும் புயலைக் கிளப்பியது. “குடும்பப் பெண்ணின் படம் பத்திரிகையில் வருவதா? இப்படிப் பட்ட அவமானத்துக்குப் பின் எப்படி வெளியில் தலைகாட்டுவது? யார் இந்தப் பெண்ணை திருமணம் செய்ய முன் வருவார்?”, என்றெல்லாம் கலங்கினார்
கிருஷ்ணசாமி தீட்சிதர். இது போதாதென்று, கொலம்பியா கிராம·போன் கம்பெனியர் வேறு பட்டம்மாள் பாடிய 78 rpm இசைத்தட்டை வெளியிட நச்சரித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அம்முக்குட்டி அம்மள்தான் கிராம்·போன் ரிக்கார்ட் வெளியிடுவது என்பது அவமானமான விஷயமல்ல. அது பெருமைக்குரிய விஷயம் என்று விளக்கி பட்டம்மாளின் முதல் இசைத்தட்டு வெளியாக காரணகர்த்தாவாய் விளங்கினார். பட்டம்மாள் எந்த முனைப்பும் எடுத்துக் கொள்ளாமலே அவரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பட்டம்மாள் மேடையேறிப் பாடுவுதை விரும்பாத போதும், அவர் நண்பர்களும் மற்ற மரியாதைக்கு உரியவர்களும் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டதால் பட்டம்மாளின் இசை வாழ்க்கைக்கு கிருஷ்ணசாமி தீட்சிதரால் தடை போட முடியவில்லை.

பட்டம்மாள் கிராம்·போன் கம்பெனியில் வை.மு.கோதைநாயகி அம்மாளை சந்தித்தார். பத்து வயது குழந்தை அசாத்தியமாய்ப் பாடுவதைக் கண்ட வை.மு.கோ, பட்டம்மாளை எப்படியும் சென்னை மேடைகளின் ஏற்றிவிட வேண்டும் என்று உறுதி கொண்டார். பல முறை காஞ்சிபுரத்துக்குச் சென்று பட்டம்மாளின் தந்தையிடம் வாதிட்டார். கடைசியில் வை.மு.கோ-வின் பக்கம் இருந்த நியாயம் கிருஷ்ணசாமி தீட்சிதரின் பிடிவாதத்தை அசைத்தது. முதலில் எழும்போர் மஹில சபையிலும், அதன் பின், ஜகன்னாத பக்த சபை, பார்த்தசாரதிசாமி சபை. இந்தியன் ·பைன் ஆர்ட்ஸ் போன்ற பல இடங்களிலும் பட்டம்மாளுக்காக கச்சேரிகள் ஏற்பாடு செய்தார். வை.மு.கோ-வும் பட்டம்மாளும் சேர்ந்து பாடி சில கிராம·போன் இசைத்தட்டுகள் கூட அக்காலத்தில் வெளியாயின.

1932-ல் நிகழ்ந்த இதக் கச்சேரிகளுக்குப் பின் பட்டம்மாளின் கச்சேரிகள் இந்தியா முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தன. 1934-ல் தனது முதல் பம்பாய் பயணத்தை மேற்கொண்டார். 1936-ல் தொடங்கி பல ஆண்டுகள் தொடர்ந்து மியூசிக் அகாடமியில் பாடும் பெருமையும் வாய்த்தது.பட்டம்மாள் பாட வந்த காலத்தில் சங்கீத உலகில் பல தேவையற்ற போக்குகள் நிலவி வந்தன. பெண்கள் கீர்த்தனை பாடினால் போதும். அறிவை உபயோகிக்க விஷயங்களுக்குள் எல்லாம் நுழைய வேண்டியதில்லை. விஸ்தாரமான ஆலபனை எல்லாம் செய்தல் அவசியமில்லை. நிரவல் ஸ்வரம் எல்லாம் ஆண்கள் செய்தால் போதாதோ? ராகம் தானம் பல்லவி எல்லாம் பெண்கள் கேட்பது கூட அநாவசியம்! போன்ற பல சிந்தனைகள் நிலவி வந்தன. நயினாப் பிள்ளையின் இசை ஏற்படுத்திய தாக்கத்தால் இயற்கையாகவே லய சம்பந்தப்பட்ட விஷயங்களில் பட்டம்மாள் ஈடுபாட்டுடன் விளங்கினார். லய சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஒரு வைரச் சுரங்கமாய் விளங்கும் திருப்புகழ்களை அப்பாதுரை ஆச்சாரியார் என்ற திருப்புகழ் விற்பனரிடம் கற்றுக் கொண்டதன் மூலம் பட்டம்மாளின் லய நிர்ணயம் பெரிதும் வளர்ந்தது.

பெண்கள் அதிகம் நுழையாத பல்லவிகளுக்குள் நுழைந்து, வழக்கமான சதுஸ்ர நடையைத் தவிர திஸ்ரம், கண்டம், சங்கீர்ணம் போன்ற நடைகளில் பல்லவிகள் பாடி, அனுலோமம் பிரதிலோமம் போன்ற லய சமத்காரங்களை நயத்துடன் புரிந்து, பல்லவி பாட ஆற்றலும் உழைப்பும் இருந்தால் போதும், ஆணாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை ஆணித்தரமாய் நிறுவிய பெருமை பட்டம்மாளையே சேரும். நயினாப் பிள்ளை பாடி பிரபலப்படுத்திய ஜகன்மோகினி ராகப் பல்லவியான, ‘நெஞ்சே நினை’-யை பட்டம்மாள் பாடிய போது சங்கீத உலகமே ஸ்தம்பித்துப் போனது. ‘பல்லவி பட்டம்மாள்’ என்ற
பெயருடன் விளங்கியவரின் வெற்றிக்குப் பின்னால் இருந்த உழைப்பைக் குறித்து அரியக்குடி, ‘இவர் வெறும் பட்டம்மாள் இல்லை. பாடு பட்ட அம்மாள்’, என்று கூறியுள்ளது உற்று நோக்க வேண்டிய விஷயமாகும். பட்டம்மாள் அவர் தம்பி ஜெயராமனுடன் சேர்ந்து ஸ்வரம் பாடும் போது, குறிப்பாக குறைப்பு பாடும் போது அநாயாசமாக வந்து விழும் லயச் சிதறல்கள் என்று கேட்டாலும் பிரம்மிக்க வைப்பவை. தஞ்சாவூர் போன்ற இடங்களில் வாழ்ந்த புகழ் பெற்ற பல்லவி விற்பனர்கள் எல்லாம் பட்டம்மாளின் ஆற்றலைக் காண அலை மோதினர். திருப்பதியைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடு மற்றும்
நரசிம்முலு நாயுடு ஆகியோரிடம் பல்லவி பாடுவதில் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டார் பட்டம்மாள்.

பட்டம்மாள் பலவிதத்தில் முன்னோடியாக விளங்கினாலும், குறிப்பாக முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகள் மற்றும் பாபநாசம் சிவன், சுப்ரமணிய பாரதியின் போன்றோரின் தமிழ்ப் பாடல்களை கச்சேரியின் பிரதான பாடல்களாகப் பாடிப் பிரபலப்படுத்தியதை அவர் தலையாய சாதனைகளாகக் கூறலாம். அம்பி தீட்சிதரிடம் நேரில் பாடம் கேட்ட பேறினைப் பெற்ற பட்டம்மாள், அவரின் மறைவுக்குப் தீட்சிதரின் மற்றொரு சீடரான டி.எல்.வெங்கடராம ஐயரிடம் பல அரிய பாடல்களைக் கற்றார். இயற்கையாகவே நல்ல கனமுள்ள சாரீரமும், ஸ்ருதி சுத்தமும், சௌக்க காலத்தில் பாடும் போதும் நல்ல காலப்ரமாண நிர்ணயமும் பெற்றிருந்ததால், முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை பட்டம்மாள் பாடிய போது அவை தனித்த அழகுடன், கம்பீரத்துடனும், ஓர் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் பவனி போல ஒலித்தன. இன்னம் சொல்லப் போனால், பல தீட்சிதர் கிருதிகள் பட்டம்மாள் பாடித்தான் மக்களிடையே பரவின.அவர் பாடிய ‘மீனலோசனி ப்ரோவ’, ‘மாமவ பட்டாபிராமா’ போன்ற பாடல்கள் இசையுள்ள வரை நிற்கும்! காலப்போக்கில், D.K.பட்டம்மாள் என்ற பெயரில் D.K.-ஐ Dikshitar Krithis என்றே குறித்தனர். பாபநாசம் சிவனின் பட்டம்மாளை தன் சொந்தப் பெண்ணாகவே கருதினார். அவரது கற்பனையில் தோன்றிய கீர்த்தனை முத்துக்களை தோன்றிய அன்றே அள்ளி எடுத்து கச்சேரி மேடைகளிலும் இசைத் தட்டுகளிலும் ஒலிக்கச் செய்த பெருமை பட்டம்மாளையும் அவரது சகோதரர் டி.கே.ஜெயராமனையும் சேரும். தமிழ் இசைச் சங்கம் தொடங்குவதற்கு முன்னரே பல தமிழ்ப் பாடல்களை கச்சேரியில் பாடியவர் பட்டம்மாள் என்பதும் உற்று நோக்கப்பட வேண்டிய வரலாற்று உண்மையாகும். அருணாசல கவி, சுத்தாநந்த பாரதி, மாரிமுத்தாப் பிள்ளை போன்றோரின் பாடல்களை பட்டம்மாள் பாடும் போதும் அவ்வரிகளில் தன்னை இழந்து கேட்பவர் உள்ளத்தையும் கரைப்பது பட்டம்மாள் பாணியின் தனிச் சிறப்பாகும். கச்சேரிகளில் பல்லவிக்குப் பின் அவர் பாடிய விருத்தங்கள், தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை போன்ற தமிழ் இசை உருப்படிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

பாபநாசம் சிவனின் தொடர்பே பட்டம்மாளை திரையுலகுக்கு இட்டுச் சென்றது. கல்கி எழுதிய தியாக பூமியை கே.சுப்ரமணியம் 1939-ல் திரைப்படமாக எடுத்தார். அப்படத்தின் இசையமைப்பாளரான பாபநாசம் சிவன், பட்டம்மாளின் குரலை பரிந்துரைத்து, ‘தேச சேவை செய்ய வாரீர்’ என்ற பாடலைப் பாடவும் வைத்தார். 1947-ல் ஏ.வி.எம் நிறுவனம் ‘நாம் இருவர்’ படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தில் சுப்ரமணிய பாரதியின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே” மற்றும் “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே” பாடல்களை பட்டம்மாள் பாடி அவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படங்களில் பாடினாலும், அவை பக்திப் பாடல்களாகவோ அல்லது தேசியக் கருத்துகள் கொண்ட பாடல்களாகவோ இருந்தாலன்றி பாடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். பட்டம்மாளின் மிகப் பெரிய திரையுலக ஹிட் பாடல், வேதாள் உலகம் படத்தில் வெளியான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, என்ற பாரதியின் பாடலாகும். இந்தப் பாடல் திரைப்படத்தில் வெளியான போதும் காலப்போக்கில் கச்சேரி மேடைகளில் புகுந்து இன்று வரை கோலோச்சுகிறது. இதைத் தவிர ‘ராம ராஜ்ய’, ‘வாழ்க்கை’, ஏ.கே.செட்டியார் எடுத்த அண்னல் காந்தியைப் பற்றிய ஆவணப் படம் ஆகியவற்றிலும் டி.கே.பி-யின் பாடல்கள் ஒலித்தன. அவர் பாடிய கடைசி திரைப்பாடல் ‘ஹே ராம்’ படத்தில் ஒலித்த ‘வைஷ்ணவ ஜனதோ’.

1947 ஆகஸ்டு 15 அன்று பட்டம்மாளை பாரதியின் பாடல்கள் பாட அகில இந்திய வானொலி அழைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் குரலாய் ஒலித்த பட்டம்மாளின் குரலுக்கு சன்மானம் அளிக்க முன் வந்த போது, நாட்டுக்காகப் பாடுவது கடமை என்று கூறி சன்மானத்தை மறுத்தார் பட்டம்மாள். இந்த விஷயம் யூனியன் காபினெட்டில் அந்நாளில் விவாதிக்கப்பட்டது.

சங்கீத நாடக் அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்று எண்ணற்ற விருதுகள் பெற்ற டி.கே.பி, 1970-ல் சங்கீத கலாநிதி விருதைப் பெற்றார். அமெரிக்கா, ஐரோப்பா, கானடா என்று உலகம் முழுவதும் இந்தியப் பாரம்பரிய இசையைப் பரப்பினார். சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமன் முதல் இன்று பிரபலமாய் விளங்கும் நித்யஸ்ரீ, பவதாரிணி பொன்ற எண்ணற்ற பாடகர்களை உருவாக்கித் தந்து தனக்குப் பின்னும் தன் இசை நிலைக்க வழி செய்திருக்கிறார்.

பாலக்காடு மணி ஐயர் மறைந்த பின், ‘விநதாஸ¤த வாகந’ பாட நினைத்தாலே அவர் நினைவு வந்து பட்டம்மாளைப் பாட விடாமல் செய்துவிடுமாம். இனி எந்தக் கச்சேரிக்குச் சென்றாலும் கம்பீரமான தீட்சிதர் கிருதியையோ, விவகாரமான பல்லவியையோ, நெஞ்சைத் தொடும் விருத்தத்தையோ கேட்கும்போதெல்லாம், இன்று டி.கே.பி நம்மிடையில் இல்லையே என்ற எண்ணம் நெஞ்சை வந்து அழுத்தாமல் இருக்காது

Read Full Post »