Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2010

விவரங்களுக்குள் செல்வதற்கு முன்னால் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

1. நான் ஷாஜியை நிராகரிக்கிறேன். முடிவை முதலில் எடுத்து அதற்காக வலிந்து ஆதாரங்கள் தேடும் முயற்சி அல்ல இந்தக் கட்டுரை. உங்கள் நேரம் விரயமாகாமல் இருக்க இப்போதே கூறிவிடுகிறேன்.
2. நான் இளையராஜாவின் ரசிகன்.
3. எட்டு வருடங்களாய் இசை பற்றி எழுதி வந்தாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசை பற்றியே எழுதி வருகிறேன்.
4. சேதுபதியும் ராமசந்திர ஷர்மாவும் என் கல்லூரி கால நண்பர்கள்.

2,3,4-ஆவது விஷயங்களாக நான் கூறியிருப்பன என் கருத்துகளை பிழையாக்கக் கூடும் என்று நினைத்தால் உங்களுக்கு வேலை மிச்சம்.

இதுவரை ஷாஜியைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுள் முக்கியமான கேள்வி, “ஷாஜி இசை விமர்சகரா?”.

அதை பிறகு பார்ப்போம்.

இரண்டு வாரங்களாய் இணையத்தில் தொடர்ந்து படிப்பவருக்கு ஷாஜி விவகாரத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு பக்கம் ஷாஜியின் கட்டுரைகளும், அவை இசை விமர்சனங்கள் என்று நிறுவ முயலும் ஜெயமோகனின் கட்டுரைகளும் உள்ளன. இன்னொரு பக்கமும் சேதுபதியும், ராமசந்திர ஷர்மாவும் ஷாஜியை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் கட்டுரைகள்.

இதில் சிக்கல் என்னவென்றால், ஒருவர் ஒரு விஷயத்தை சொன்னாரென்றால் மற்ற தரப்பு அந்த விஷயத்தை முழுமையாக நிராகரிக்கிறது என்பது போன்ற பிம்பம் உருவாகிவிடுகிறது.

உதாரணமாக பரப்பிசையை, செவ்வியல் இசையை மதிப்பிடும் அளவுகோல் கொண்டு மதிப்பிட முடியாது என்று ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார். அதைப் படிக்கும் போது ராமசந்திர ஷர்மா பரப்பிசையை தவறான அளவுகோல் கொண்டு மதிப்பிட வேண்டும் என்று சொல்கிறார் என்கிற மாயை உருவாகிறது. உண்மையில் சேதுபதியும், ராமசந்திர ஷர்மாவும் எந்த இடத்திலும் மரபிசை கூறுகள் கொண்டு பரப்பிசையை மதிப்பிட வேண்டும் என்று கூற்வில்லை.

இது போன்ற இன்னும் பல எடுத்துக்காட்டுகளை சுட்ட முடியும். இதனால் நான் கூற விருபுவது யாதெனில், “கூர்ந்து கவனிக்காமல் போனால் பல தவறான முடிவுகளுக்கு வாசகர்கள் செல்லக் கூடும்”. இத்தோடு என் பூர்வ பீடிகையை முடித்துக் கொள்கிறேன்.

’விமர்சனம்’ என்பற்குள் செல்வதற்கு முன் ‘எழுதுவதை’ பற்றி பார்ப்போம்.

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் அடிப்படைத் தேவை நேர்மை (integrity). நேர்மை என்னும் தாங்குதளத்தில்தான் எழுத்தாளனின் படைப்பு நிற்கிறது.  அந்தத் தாங்குதளத்திலேயே விரிசல் விழும் போது, எழுத்தாளனின் எழுத்தை நிராகரிப்பதே சரியான முடிவாக இருக்க முடியும்.

நேர்மையின் இன்னொரு பரிமாணமே, ‘தவறில்லா எழுத்துக்கான விழைவு’. எவ்வளவு முயன்றாலும் தவறுகள் வரக் கூடும் என்பது உண்மைதான். இருப்பினும், தவறின்றி விஷயங்களை கொடுக்க வேண்டும் என்பதற்கான அக்கறையில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

ஜெமோ சொல்வது போல, ஷாஜியின் கட்டுரைகளில் வரும் மனிதர்களை அவர் கட்டுரைகள்தான் அறிமுகப்படுத்துகின்றன என்பது உண்மையானால் (அது உண்மை என்று நான் சொல்லவில்லை), சொல்வதைச் சரியாக சொல்வதில் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.

ஷாஜி எழுத்தில் நேர்மையும், உண்மையை மாறாமல் சொல்லும் விழைவும் உண்டா?

நேர்மையைப் பொறுத்த வரை, “சில நேரங்களில் உண்டு. சில நேரங்களில் இல்லை.”, என்ற சால்ஜாப்பு செல்லாது. அது இருப்பின் எப்போதும் இருந்தே தீரும்.

ஷாஜி தனக்கு மரபிசையில் தேர்ச்சியோ நாட்டமோ இல்லை என்ற கூறிய படியே மரபிசை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை உதிர்த்தபடியே செல்கிறார்.

அப்படிச் செய்வது தவறா? நிச்சயம் இல்லை! ஆனால், அப்படி எழுதும் போது, தான் எழுதியவை சரிதானா என்று தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்வது அவசியம். இணையத்தில் அவசரமாய் தேடி கிடைத்தவற்றைத் தொகுத்து, அதற்குள் தன் உணர்ச்சிக் குவியல்களையும் திணித்து கட்டுரையை உருவாக்கினால் தவறான முடிவுகளுக்கு தன் வாசகர்களை இட்டுச் செல்லும் அபாயம் எழுகிறது. ஷாஜி கூறும் விஷயங்களைப் பற்றி அறிமுகமே இல்லாத வாசகன், ஷாஜி கூறியதில் உள்ள பிழைகளையும், அவருக்குள் எழும் உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் அழகிய ரசிகானுபவத்தையும் சரியாகப் பிரித்து, ஒழுங்கான முடிவுகளுக்கு வர வேண்டும் என்கிறாரா ஜெமோ?

உதாரணமாக சீர்காழி பாடும் போது கமகங்கள் அதீதமாய் உள்ளன என்கிறார் ஷாஜி. கமகங்கள் கர்நாடக இசையின் ஜீவ நாடிகள். அவற்றில் பல வகை உண்டு. பல்வகை கமகங்களுக்கிடையிலான நுண்ணிய வேறுபாடு, அவற்றை பிரயோகிக்கும் முறை போன்றவற்றை கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சியுடையவர் உணர்வதே கடினம். இந் நிலையில், ஷாஜி எப்படி சீர்காழியின் பாட்டில் அதீத கமகம் என்றார்.

சீர்காழி என் ஆதர்ச புருஷர் என்பதால் நான் இதைக் கேட்கிறேன் என்று விவாதத்தை திசை திருப்பினால் உமக்கு க்ஷேமம் உண்டாகட்டும்.

மரபிசையில் பயிற்சியில்லாத ஷாஜி எப்படி இது போன்ற நுணுக்கங்களை கட்டுரையில் கொடுக்கிறார்? ஒரு வேளை இந் நுணுக்கங்கள் உணர்ந்தவர்கள், அவருக்கு இந்தச் செய்திகளை தரக் கூடும்.

நல்லது. அப்படியெனில் யார் ஷாஜிக்கு இந்த விஷயத்தை சொன்னது என்று சொல்லலாமே? அது வெளியில் தெரிந்தால் சொன்னவருக்கே சங்கடம் வரலாம்.

நியாயம்தான். “சீர்காழி பாட்டில் கமகம் அதிகம் என்று விவ்ரம் தெரிந்தவர்கள் கூற கேட்டுக் கொண்டேன்”, என்றாவது ஷாஜி கூறலாமா?

சொல்லலாம். ஆனால், தேர்ந்த சிறுகதையில் கச்சிதத்தில் சென்று கொண்டிருக்கும் கட்டுரையின் ஓட்டத்தை அது குலைக்கக் கூடும்.

அதுவும் சரி. அப்படியெனில், மலேஷியா வாசுதேவனைப் பற்றி குறிப்பிடும் போது, “தன் வெற்றிகளுக்காக இளையராஜாவை புகழ்ந்திருந்தாலும் அவருடைய குரலின் தீவிர ரசிகர்கள் பலரின் அபிப்ராயம் என்னவென்றால், முக்கியமான இன்னும் பல பாடல்களைப் பாட இளையராஜா அவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்பதே.”, என்று ஏன் எழுத வேண்டும். இளையராஜா அப்படி செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்றே ஷாஜி சொல்லலாமே. ”கர்நாடக இசை பற்றி எதுவுமே தெரியாதவர்களே யேசுதாஸை நல்ல கர்நாடக இசைப் பாடகராக கூறுவர்”, என்கிற கருத்தை ஏன் தன் எண்ணமாக ஷாஜி முன் வைக்கவில்லை.

பாடல் அமைந்த ராகங்கள், கமகங்கள் போன்ற நுணுக்கங்களை விவரிக்கும் தகவல்களை தன் எண்ணம் போல விவரிக்கும் ஷாஜி ஏன் சில கருத்துகளை மட்டும் மற்றவர்கள் பேரில் போடுகிறார்?

எளிய ராகங்களான பாகேஸ்வரி போன்ற ராகங்களையே தவறாகக் குறிப்பிடும் ஷாஜிக்கு மரபிசை தெரியாது என்று அவரே சொல்கிறார். அப்படிப் பட்டவர் மரபிசை நுணுக்கங்களை தன் கருத்துகள் போலச் சொல்வது நேர்மையாகுமா?

மரபிசை என்பது ஓர் உதாரணம்தான். எனக்குத் தெரிந்த வடிவம் என்பதால் நான் அதைக் குறிப்பிடுகிறேன். இதனால் மற்ற இசை வடிவங்களைப் பற்றி ஷாஜி தவறாக சொல்லவில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

தனக்கு தெரியாத விஷய்ங்களைப் பற்றிச் சொல்லும் போது, சரியானதுதான் என்று உணர்ந்து பின்னரே எழுதும் அக்கறை ஷாஜியின் எழுத்துகளில் உள்ளனவா?

மேற்சொன்ன இரண்டு விஷயங்களும் ஷாஜியின் எழுத்தில் இல்லை என்பதற்கு பல இடங்களை மெற்கோள் காட்ட முடியும்.

அப்படி ஷாஜி அக்கறையின்றி, நேர்மையின்றி எழுதிவிட்டதால்தான் என்ன மூழ்கிவிட்டது?

ஜெமோ சொல்வது போல, ஷாஜியின் கட்டுரைகளின் நாயகர்களை அவர்தான் அறிமுகப்படுத்துகிறார் என்பது உண்மையல்ல என்ற போதும், முனைந்து தேடினால்தான் விவரங்கள் கிடைக்கும் என்ற நிலையே இன்றுள்ளது. அந்த நிலையில் ஷாஜியின் கட்டுரைகள் தவறான முடிவுகளுக்கு வாசகர்களை இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. இசையறிவின் மூலமோ, உணர்வின் மூலமோ, அழகுணர்ச்சியின் மூலமோ நமக்கு வழி காட்டும் ஒருவரை பின் தொடரும் முன், அவர் காட்டும் பாதை சரியானதுதானா என்று நிர்ணயம் செய்தல் அவசியமாகிறது.

ஷாஜி சீர்காழியைப் பற்றி கட்டுரை எழுதவில்லை. மகாலிங்கம் பற்றிய கட்டுரையில் சீர்காழியைத் தொடுகிறார். போகிற போக்கில் அவர் வீசும் வார்த்தைகள் ஜெமோ-வை பாதிக்கின்றன.அவர் வேறொரு கட்டுரையில், “கோவிந்தராஜன் தேவையற்ற பிர்காக்களுடன், சுருதி மீறி ஒலிக்கும் ஆலாபனையுடன், அவரோகணங்களில் ஏராளமான பிழைகளுடன்தான் பாடியிருக்கிறார் என்றும் எல்லா பாட்டுக்கும் ஒரே பாவம் கொடுக்கிறார்”, என்று எழுதுகிறார். ஷாஜி கட்டுரையைப் படிக்காதவர்கள் கூட, ஜெமோ சுட்டியதால் சீர்காழிக்கு ஸ்ருதி போகும் என்று நம்பத் தொடங்குவர்.

ஷாஜி லாண்டிங் நோட்ஸ் என்பதை ஜெமோ அவரோகணங்கள் என்று புரிந்து கொள்கிறார். Landing என்ற சொல்லை அவர் ஏரோப்ளேனுடன் தொடர்பு படுத்தியிருக்க வேண்டும். அது இறங்கும் போது லாண்டிங் என்கிறோம். இசையில் இறங்கு முகத்தை அவரோகணம் என்கிறோம். அதனால் லாண்டிங் நோட்ஸ் என்பவை அவரோகணத்தில் வருபவையாக இருக்கும் என்று ஜெமோ அனுமானித்திருக்கலாம். இசை நுட்பங்களை இபப்டி தவறாக புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும் வாசகர்களை (ஜெமோவையும் சேர்த்து), ஷாஜியின் முடிவுகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும்.

(குறைந்த பட்சம் சீர்காழி விஷயத்திலாவது) ஜெமோ ஷாஜி சொல்வதை அப்படியே நம்புகிறார்.

ஆனால், ஷாஜி ‘கமகம்’ என்றும் ‘பிர்கா’ என்றும் கூறுபவை எல்லாம் அவர் உணர்ச்சிக் குவியலின் பகுதிகள். தேர்ச்சி இல்லாத ஒருவர் நுணுக்கங்களை அரைகுறையாய் கூறி விவரம் தெரியாதவரை தவறான முடிவுகளின் பக்கம் செலுத்துவதற்கு இதை விட நல்ல உதாரணத்தைச் சுட்ட முடியாது.

 “சினிமா பாடலில் முற்றிலும் ஸ்ருதி விலகியிருக்கும்படி பாடல் அமைந்திருந்தால் மீண்டும் ஒரு முறை பாடகரை பாடச் சொல்லி இருக்க மாட்டார்களா”, என்ற அடிப்படை கேள்வியைக் கூட ஷாஜியை நோக்கி திருப்பிக் கேட்கத் தோன்றாத நிலையில்தான் பல  ‘இசை விரும்பிகள்’ உள்ளனர் என்பது முக்கியமான விஷயம். ஒருவரின் கட்டுரைகளின் எப்போதாவது தவறு வரும் போது, அந்தத் தவறை சுட்டி விவாதம் எழுப்பலாம். அந்தத் தவறுகள் மலிந்து கிடக்கும் போது அந்த எழுத்தாளரை கடந்து செல்வதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு கட்டுரைக்கும் விவாதம் நிகழ்த்திக் கொண்டிருந்தால் நேர விரயமே மிஞ்சும். அதிலும் சொந்த அனுபவத்தை மட்டுமே வைத்து எழுதப்படும் எழுத்துக்கு எதிராக புறவயமான விவாதங்களில் ஈடுபடுத்துவது அயர்ச்சியைத் தரும் விஷயம்.

அனுபவ பகிர்வாக மட்டும் ஷாஜியின் கட்டுரைகள் இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. (இதில் வேடிக்கை என்னவினில் ஷாஜியே தான் இசை விமர்சகர் அல்ல என்று கூறும் போதும், ஜெமோ ஷாஜி எழுதியவை விமர்சனங்கள்தான் என்று ஆணித்தரமாய் கூறுகிறார்) ரசிகானுபவங்களுக்கு நிச்சயம் ஓர் இடமுண்டு. ஆனால், முடிவுகளை வெறும் அனுபவங்களின் அடிப்படையிலேயே நிறுவும் போது, அம்முடிவுகளில் தவறாகவும் இருக்கக் கூடும். அந்தத் தவறான முடிவுகளை பலர் சரியென்று நம்பிவிடக் கூடும் என்பதால், ஷாஜி பாணியிலான விமர்சன முறையை நிராகரிப்பது அவசியமாகிறது.

சேதுபதி கட்டுரையின் மையப் புள்ளியாக, ஷாஜியை சாரு என்று குறிப்ப்டதைக் காட்டுகிறார் ஜெமோ. என்னைப் பொறுத்த வரையில், அந்தக் கட்டுரையின் மையப் புள்ளி ”ஒருவரை தூக்கி நிறுத்த வேறொரு வரை அதள பாதாளத்தில் ஷாஜி தள்ளுகிறார்”, என்று சேதுபதி எழுப்பும் குற்றச் சாட்டும், அதற்கு அவர் கொடுக்கும் உதாரணங்களும்தான். இந்த விஷயத்தைப் பற்றி சேதுபதி விவரமாக எழுதிவிட்டதால், தனியாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை. ஜெமோ இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்? ஒரு நல்ல விமர்சனத்துக்கு இந்த யுக்தி அவசியமா? ஷாஜியின் ஒப்பீடுகள் சமநிலையில் உள்ளன என்று அவர் கருதுகிறாரா?
ஜெமோ-வே இளையராஜாவைப் பற்றிய கட்டுரையில், “அனைத்துக்கும் அப்பால் மேதைகளைப் பற்றிப் பேசும்போது நம் எளிய தீர்ப்புகளை அவர்கள் மேல் போடக்கூடாது என்ற அடக்கம் எந்த விமரிசகனுக்கும் தேவை.”, என்று ஷாஜியை குறிப்பிட்டே சொல்கிறார். இளையராஜா மேதை என்பதை ஜெமோ உணர்ந்திருக்கலாம். ஜெமோ மேதை என்று உணராத மற்றவர்களின் மேலும் ஷாஜி முடிவுகளை திணித்திருக்கக் கூடும் அல்லவா?

ஜெமோ சுட்டும் அடக்கம் ஷாஜியிடம் எவவ்ளவு இருக்கிறது என்று அவர் கேணி கூட்டத்தில் பேசியதைக் கேட்டாலே புரியும். தன் கருத்தை நிறுவ ரஷீத் கான் போன்ற உன்னத கலைஞரை கவலையே படாமல் கேவலப்படுத்திய ஷாஜியின் பேச்சு அகந்தையின் வெளிப்பாடு. தனக்குத் தெரியாத இசை வடிவத்தைப் பற்றியும் கூட என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அவர் நினைக்கிறார்.

ஷாஜியைத் தொடக்கப் புள்ளியாக ஜெமோ காண்கிறார். ஏதோ ஒரு கட்டுரை வரட்டும், அதிலிருந்து விவாதங்கள் பிறந்து தெளிவு வரட்டும் என்ற அணுகு முறையை ஜெமோ முன் வைக்கிறார்.

ஆனால், இசைத் துறையில் தேர்ச்சியும் பெற்று (அது பரப்பிசையை ரசிக்கத் தடையாக இருக்கும் மரபிசை தேர்ச்சியாக இருக்க வேண்டியதில்லை) நேர்மையும், நினைப்பதை தெளிவாக வடிக்கக் கூடிய திறனும் கொண்ட எழுத்தாளர்களை தொடக்கப் புள்ளியாக வைக்கவே ஜெமோ முயலலாமே? ஷாஜியை விட செறிவான கட்டுரைகளை சேதுபதி எழுதக் கூடும் என்றும் ஜெமோ நினைக்கிறார். அப்படியெனில் பரப்பிசை பற்றி எழுத ஷாஜிக்கு அளிக்கும் ஊக்கத்தை சேதுபதிக்கு அளிக்கலாமே.

ஜெமோ-வை இசை விற்பன்னர் என்று யாரும் நினைக்கவில்லை. உண்மையில் ஜெமோ, ஷாஜி மிகுந்த விவரம் உடைவர் என்று நம்பியிருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. இசை அறிந்தவர்கள் என்று ஜெமோவே நம்புபவர்கள்,  ஷாஜியின் முடிவுகள் தவறானவை, அவை பாமரன் நெஞ்சில் பதிய வைக்கும் பிம்பங்கள் பிழையானவை என்று விவரமாகக் கூறும் போது அதை அவர் ஏற்றுக் கொள்வதே சரி. அப்படிச் செய்வாரெனில் ஜெமோ-வின் (தகுதியுடைய) வாசகர்கள் அவரை நினைத்து பெருமைப் படுவர். இல்லையெனில் இளையராஜாவை வெட்கப் பட வேண்டிய நிலைக்குச் செலுத்தும் ரசிகர் கூட்டத்தை ஒத்த கூட்டமே ஜெமோவையும் சிலாகிக்கும்.

Read Full Post »

ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது.

பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை.

சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம்.

http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html

வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம்.

முந்தைய பாடல்கள்: https://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/

பார்ப்போம்.

Read Full Post »