இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக ஓ.எஸ். தியாகராஜனைக் கூறலாம். கடந்த பத்து வருடங்களில் 20 முறையாவது இவரை நேரில் கேட்டிருப்பேன். ஒரு கச்சேரி கூட சோடை போய் நான் கேட்டதில்லை.
நேற்று சிருங்கேரி மடத்தில் எம்.எஸ்.என்.மூர்த்தி, நெய்வேலி நாராயணன் சகிதம் ஓ.எஸ்.டி கச்சேரி. அரங்கில் எதிரொலி அதிகம் என்ற போதும் சூழல் ரம்மியமாய் இருந்தது. நான் தி.நகர் டிராபிக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டதால், நுழையும் போது ‘எவரநி’ கிருதியை முடித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டுள்ள ஓ.எஸ்.டி கச்சேரிகளில் பாதிக்கு மேற்பட்ட கச்சேரிகளில், ஆரம்பத்திலேயே விறுவிறு என்றொரு கல்யாணியைப் பாடிவிடுவார். பெரும்பாலும் அது ‘ஈஸ பாஹிமாம்’ கிருதியாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ‘அம்ம ராவம்மா’ கிருதியாக இருக்கும். நேற்று தாயம் ‘தாமரஸ தள நேத்ரி’-யின் பக்கம் (எந்தக் கிருதி என்று கண்டுபிடித்துக் கொள்ள இந்த வரி போதாதா என்ன?) போதாது – ஆசிரியர்
கல்யாணியில் நிரவல் ஸ்வரம் பாடியபோதே கச்சேரி களை கட்டிவிட்டது. அனுபல்லவியில் “நெம்மதினி நீ விஹப” “ரம்முலோ” என்றெல்லாம் சாஹித்யத்தை வெட்டிச் சாய்க்காமல், அற்புதமாய் பதம் பிரித்துப் பாடுவது ஓ.எஸ்.டி-யின் ஸ்பெஷாலிடி! தொடர்ந்து தேவகாந்தாரியைச் சுருக்கமாய் ஆலாபனை செய்து தமிழ் தியாகைய்யரின் சமஸ்கிருத பாடலான ‘ஷாரதே’ கிருதியை இழைத்துப் பாடினார். ஓ.எஸ்.டி-யின் கச்சேரியில் உள்ள அளவு, அலுப்பே தட்டாத வகையில் அவர் செய்யும் பங்கீடு அவரது பெரிய பலம்.
எந்த நேரத்தில் நான் பிலஹரி அதிகம் கேட்கக் கிடைக்கவில்லை என்று வி.வி.எஸ் கச்சேரி பற்றி எழுதியதில் சொன்னேனோ தெரியவில்லை. விட்டேனா பார் என்று சென்றவிடமெல்லாம் துரத்துகிறது. நேற்று சந்தீப் நாராயணனும், காயத்ரி வெங்கட்ராகவனும் விஸ்தாரமாக பிலஹரி பாடினர். இன்று ஓ.எஸ்.டி-யின் மெல்லிய கீற்றாய் பிலஹரியைத் தொடங்கியபோது நொந்தே போனேன். நல்ல காலம், கீற்று சற்றைக்கெல்லாம், ‘சந்திரசேகர யதீந்திரம்’ என்ற கிருதியாக மாறியது. கல்லிடைக்குறிச்சி வேத தாஸர் செய்த கிருதியாம். கச்சேரி முடிந்ததும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவ காந்தாரியும், பிலஹரி கச்சேரி சிருங்கேரி மடத்தில் நடந்ததால் பாடப்பட்டவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நேற்றைய பிரதான ராகம் தோடி. ஓ.எஸ்.டி ஆதார ஷட்ஜத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வை கொடுத்தார் பாருங்கள்! தார ஸ்தாயியில் குரலை உயர்த்தி, மந்திரத்தில் குரலைக் குறுக்குவோர் கச்சேரிகளையே கேட்டுப் புளித்துப் போயிருந்த என் செவிகள் நேற்று புளகாங்கிதம் அடைந்தன.
ஓ.எஸ்.டி-யின் ஆலாபனை அணுகுமுறை ராமநாதபுரம் கிருஷ்ணன் செய்வது போல, கீழ் ஸ்தாயியில் குரலை உயர்த்தியும், மேல் ஸ்தாயியில் குரலை அடக்கியும் விளங்குகிறது. தார ஸ்தாயியில் கத்தாமல், நளினமான பல சங்கதிகள் பாட இந்த அணுகுமுறை பெரிதும் உதவுகிறது. ராகத்தின் மையமாக தைவதம், முதல் தார ஷட்ஜம் வரையிலான இடத்தை வைத்துக் கொண்டு நிறைய பாடினார். நீண்டு ஒலித்த தார ஷட்ஜ கார்வையும், அதனைத் தொடர்ந்து வளைந்தும் நெளிந்தும் ஒலித்த தைவதத்தில் கமகங்களும் அடுத்தடுத்துப் பாடி அழகிய அலைகளை படர விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு நிறைவாக தோடியை அலசிவிட்டு, “ஏமிஜேசிதே” பாடினார்.
நிரவலைப் பற்றிச் சொல்லும்போது எஸ்.ராஜம், “நல்ல விஷயத்தை வைத்துதான் நிரவணும். ஏமி ஜேஸிதே பாடிவிட்டு “காம மோக தாஸுடை” என்று நிரவிக் கொண்டு இருக்கக் கூடாது.”, என்பார். நேற்று ஓ.எஸ்.டி அதைத்தான் செய்தார். காம மோகத்தைக் கடந்து “வர மந்த்ர”-வில் நிரவல் செய்தார். மைசூர் பாகை செய்யும் போது தாம்பாளம் முழுவதும் படர்ந்திருந்தாலும், அப்படியே சாப்பிட முடியாது. துண்டம் துண்டமாய் நறுக்கும்போது எடுத்து உண்ன வசதியாக இருக்கும். அப்படித்தான் நேற்று ஓ.எஸ்.டி தோடியை நிர்வாகம் செய்தார். கேட்ட ரசிகர்களும், உடன் வாசித்த வித்வான்களும், முழுமையாய் வாங்கி அனுபவிக்க வசிதயாக இருந்தது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி இரண்டு காலத்திலும் இடத்துக்குப் பாடிவிட்டு, அதன் பின் சமத்திற்கு வரும்படியாக குறைப்பு செய்தார். ஆலாபனையிலும் சரி, ஸ்வரங்களிலும் சரி ஷட்ஜ, பஞ்சம வர்ஜ இடங்கள் நிறைந்து இருந்தன. இந்த இடங்களே ராகத்தை உருக்கமாக ஒலிக்க வைத்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி பாடியதையெல்லாம் உடனுக்குடன் வாசித்து கலக்கினார் நெய்வேலி நாராயணன். அரங்கில் நேற்று அவரது தொப்பி சுத்தமாக கேட்க வில்லை. வலந்தலையின் நாதத்துடன் தொப்பியின் கும்காரங்களும் சேர்ந்து ஒலித்திருப்பின் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.
தனி ஆவர்த்தனத்திலும் இந்தக் குறை இருந்தது. குறிப்பாக டேக்கா சொல் வாசித்த போது, இதை உணர முடிந்தது. இருப்பினும், குறை தெரியாது நன்றாக வாசித்தார். நேற்று வாசித்த கோர்வைகள் எல்லாம் சரியாக இடத்துக்கு வந்தன என்று சொல்லுமளவிற்குத்தான் என் லய அறிவு இடமளிக்கிறது. ஆதி தாளம் புரியும் அளவிற்கு, மிஸ்ர சாபுவை தெரிந்து கொள்ளவில்லை. வரும் வருடங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வயலின் வாசித்த எம்.எஸ்.என் மூர்த்தி இடைஞ்சல் இல்லாமல் வாசித்தார். அவருடைய வாய்ப்புகளை அளவாக வாசித்தார்.
தனி முடிந்ததும், சில சீட்டுகள் வந்தன. அவற்றைப் பாடும் முன் நிறைய யோசித்துவிட்டு. “சரவண பவ எனும் திருமந்திரம்” பாட ஆரம்பித்தார். பல்லவி முடிந்து மிருதங்கத்தில் தீர்மானம் வைத்தும் அனுபல்லவியை எடுக்கவில்லை. உடனிருந்த சிஷ்யருக்கும் சாஹித்யம் தெரியாததால் பாட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. உடனே அரங்கில் இருந்து ஒரு கூட்டமே “புரம் எரித்த பரமன்” என்று அடியை எடுத்துக் கொடுத்ததும், பாடலைப் பாடி முடித்தார். “திடீர் என்று பாடச் சொன்னால் இதுதான் சங்கடம்”, என்றார்.
அடுத்து பாடிய “காண வேண்டாமோ” பாடல்தான் தமிழில் இது வரை வந்துள்ள பாடல்களுள் மிகச் சிறந்ததாக நான் கருதுவது. ஸ்ரீரஞ்சனியின் அத்தனை அழகும் குழைத்துச் செய்யப்பட்ட பாடல். “வீணில் உலகைச் சுற்றி சுற்றி” என்ற வரியில் உலகமும் சுற்றும், அவ்வுலகில் உரைபவரும் சுற்றுவர், அப்படி எக்கெச்செக்க நகாசு சங்கதிகள்! அவற்றை ஓ.எஸ்.டி பாடிய போது my day was made.
அடுத்து பாடிய ராகமாலிகை பாடும் முன், “முடிந்த வரை பாடுகிறேன். அனு பல்லவியில் மறந்தாலும் மறந்துவிடலாம்”, என்று எச்சரிக்கை விடுத்து ஆரம்பித்தார். அழகான ஹிந்துஸ்தானி ராகங்களால் ஆன ராகமாலிகை “அனுமனை அனுதினம் நினை மனமே” அவற்றை நல்ல பாவபூர்வமாக பாடி கச்சேரியை நிறைவு செய்த போது கேட்டவர்கள் அனைவரும் நிறைவாக வீடு சென்றிருப்பர் என்பது உறுதி.