Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2010

நேற்று காலை சாஸ்திரி ஹாலில் டி.வி.ராம்பிரசாதின் கச்சேரி. கச்சேரிக்குள் சொல்வதற்கு முன் இரு விஷயங்கள்.

22-ம் தேதி பாரதி ராமசுப்பனுக்கு வயலின் வாசித்த இளைஞரின் பெயர் ராகுல். சாஸ்திரி அரங்கத்தில் கழிப்பறையைப் பூட்டி வைத்துவிடுகிறார்கள் என்று கூறி இருந்தேன். அது தவறு. கீழே இருக்கும் அறைதான் பூட்டி இருக்கிறது. அரங்கிலிருந்து செல்லுமாறு வேறொரு கழிப்பறை இருக்கிறது.

ராம்பிரசாதின் குரலில் அசாத்திய கனம். நல்ல குரல் அமைந்த போதும் அதை வைத்துக் கொண்டு சர்க்கஸ் ஜாலங்கள் செய்ய மாட்டார். கிருதிகளை பாவம் கெடாமல் பாடும் சிலரில் இவரும் ஒருவர்.

நேற்று கச்சேரியை ’வல்லப நாயகஸ்ய’ என்ற பேகடா கிருதியில் ஆரம்பித்தார். இந்த மார்கழி, பாடகர்களைப் பாடாய்த்தான் படுத்துகிறது. யாரைக் கேட்கப் போனாலும் இருமல், தொண்டைக் கட்டு போன்ற உபாதைக்கிடையிலேயே பாடுகின்றனர். ராம்பிரசாத் நன்கு தேர்ந்த கை என்பதால் நன்றாகச் சமாளித்தார். குரல் ஓங்கி ஒலித்தால் போதும், ஸ்ருதி விலகல் பற்றி எல்லாம் கவலை இல்லை என்று ராம்பிரசாத் நினைக்காமல், குரல் ஒத்துழைத்த அளவில் நிறைவாகப் பாடினார்.

ராம்பிரசாத் தார ஸ்தாயியில் பாடுவதில்தான் சங்கடம் இருந்ததே தவிர, மந்த்ர ஸ்தாயி சஞ்சாரங்களை அநாயாசமாகவே பாடுகிறார். சமீப காலத்தில், காதில் ரீங்காரமிட்டு ஒலிக்கும் மந்த்ர பஞ்சமத்தை இவர் குரலில் கேட்டது போல வேறெவரும் பாடிக் கேட்கவில்லை.

கிருதியில் ‘பல்லவ பத’ என்ற வரியில் மலர்ந்த வெவ்வேறு சங்கதிகள் மிகவும் ரசிக்குமபடி அமைந்தன. கிருதியைத் தொடர்ந்து அடுக்கடுக்காய் மத்யம காலத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாடினார். வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்த் பாடகரை நிழலெனத் தொடர்ந்தார். இவரது வாசிப்பில் கிரீச் ஒலியோ, அபஸ்வரமோ மருந்துக்கும் கேட்கக் கிடைக்காது. பேகடாவில் அவர் கொடுத்த ரெஸ்பான்ஸ்கள் கச்சிதமாய் அமைந்தன.

கச்சேரி முடிந்ததும் இவருடன் பேசிக் கொண்டிருந்தேன், 1993-ல் சென்னை சீஸனுக்கு வந்தாராம். கச்சேரிகளைப் பார்த்து மயங்கிப் போய், அப்போது படித்துக் கொண்டிருந்த இஞ்சினியரிங்குக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டாராம். முழு நேரம் இசையை எடுத்துக் கொண்டு, படிப்படியாய் ஜூனியர், சீனியர், சூப். சீனியர் என்று முன்னேறி, இன்று பல சீனியர்களுக்கு வாசிக்கும் முன்னணி வித்வானாக விளங்குகிறார். இளைஞரின் அசுர சாதகம் கைகளில் நன்கு வெளிப்படுகின்றன. சீஸனில் நாளுக்குக் குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகளாவது வாசிக்கிறார். வருங்காலத்தில் இன்னும் பல உயரங்களை இவர் தொடப்போவது உறுதி.

பேகடாவுக்குப் பின் தேனுகாவில் ‘தெலியலேனு ராமா’ பாடினார் ராம்பிரசாத். விறுவிறுப்பு என்ற பெயரில் வேகத்தின் பின் ஓடாமல், குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத காலைப் பொழுதின் ஏகாந்தத்தை ஒத்து தன் கச்சேரியை அமைத்துக் கொண்டார் ராம்பிரஸாத். தேனுகா பாடலின் காலபிரமாணம் மத்யம காலம் என்ற போதும், ராம்பிரசாத் பாடிய போது அதில் நிதானம் பிரதானமாய் தெரிந்தது. சமயத்தில், ஆங்காங்கே அவர் போட்ட பிருகா சங்கதிகள் அவர் குரல் வளத்தை வெளிப்படுத்தின. சங்கதியே வராத போதும், கை அபிநயங்களின் மூலமும், முக பாவனைகள் மூலமுமே தேவையற்ற இடங்களில் கூட பிருகாக்களை அள்ளி வீசுபவர்களுக்கிடையில் நல்ல ரவை சங்கதிகள் பேசும் குரல் இருந்தும், அதைத் தேவையற்று உபயோகிக்காத ராம்பிரசாத் போற்றப்பட வேண்டியவர். பாடல்களில் வார்த்தை உச்சரிப்பும் மெச்சத் தக்கதாக அமைந்தது.

தேனுகா உருவாக்கிய ஏகாந்த நிலையைக் குலைக்கா வண்ணம் கானடாவை முதல் முக்கிய ராகமாக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். நல்ல ஸ்ப்ரிங் மெத்தையினமேல் குதிப்பது போன்று காந்தாரத்தில் அசைவுடன் முடியுமாறு அவர் பாடிய பல சங்கதிகள் மெச்சும்படி அமைந்தன. மேல் நோக்கிச் செல்லும்போது, குரலின் அளவைப் பாதிக்கும் குறைவாய்  ஒலிக்கச் செய்த, தார ஷட்ஜத்தோடு கலந்து ஸ்ருதியில் இருந்து இம்மி பிசகாது இணைந்தது உறுதியானவுடன், குரலைக் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக்கி, நிறைய சங்கதிகள் பாடினார். தோடியும், பூர்வி கல்யாணியும் கோலோச்சும் சீஸனில், விஸ்தாரமான கானடா ஒரு நல்ல மாறுதல்.

மைசூர் ஸ்ரீகாந்தின் ஆலாபனையும் கச்சிதமாய் அமைந்தது.

ஆலாபனைக்குப் பின் ஸ்வாதி திருநாளின் ‘மாமவ ஸதா’ பாடினார். ‘மஹிஷாசுரசூதனி’ என்ற இடத்தில் சுருள் சுருளாய் அவர் அமைத்த பிருகா கலந்த சங்கதிகள், பல்லவிக்கு பிரம்மிப்பான கிளைமாக்ஸாக முடிந்தன. நிரவலுக்குப் பல்லவி வரியையே எடுத்துக் கொண்டார். எம்.எஸ் ‘ஸொகஸுகா ம்ருதங்க’ பாடலில் பல்லவியில் நிரவல் செய்ததைக் கேட்ட பின், இன்றுதான் ஒருவர் பல்லவியை நிரவலுக்கு எடுத்துக் கொள்வதைக் கேட்கிறேன்.

முதல் முக்கிய ராகத்துக்கு இரண்டாம் முக்கிய ராகத்துக்கும் இடையில் ’எந்தவேடுகொந்து ஓ ராகவா’ பாடினார். இதற்குள் அவர் குரலும் நல்ல பதமடைந்துவிட ‘சிந்த தீர்ச்சுட’ போன்ற தார ஸ்தாயி வரிகளை சுலபமாக, நிறைவாகப் பாடினார்.

மெயின் ராகமாக மாயாமாளவகௌளையைத் தேர்வு செய்து விஸ்தாரமாக ஆலாபனை செய்து, ‘மேருசமான’ பாடினார். ‘கலமுன ஷோபில்லு கனக பூஷணமுல’ என்ற இடத்திற்கு பாடிய ஸ்வரங்கள் வெகு நாட்கள் நினைவில் இருக்கும். மற்ற கிருதிகளுக்கு பெரும்பாலும் ஸர்வ லகுவாகவே ஸ்வரம் பாடியவர், இந்தப் பாடலில் சில கணக்குகள் வைத்து ஸ்வரம் பாடினார். அப்படிப் பாடிய போதும், ராக பாவம் கெடாமல் பாடியதுதான் தனிச் சிறப்பு. மைசூர் ஸ்ரீகாந்த் பெரும்பாலும் ராம்பிரசாத் பாடியதை அப்படியே வாசித்தார். சிறசில இடங்களில், தன் கற்பனையையும் சேர்த்து சில மாற்றங்களுடன் ஸ்வரங்களை மிளிரச் செய்தார்.

கச்சேரி முழுவதும் உமையாள்புரம் மாலியின் வாசிப்பு இடைஞ்சலின்றி அமைந்தது. மிருதங்கத்தின் தொப்பி தாழ்ந்து ஒலித்தால், அதன் சுநாதமே தனிதான். நேற்றைய கச்சேரியில் அவரது தொப்பி தாழ்ந்து, சமயங்களில் அவர் கொடுத்த கும்காரங்களில் நீண்டு ஒலித்து கச்சேரிக்கு வலு சேர்த்தது. தனி ஆவர்த்தனத்திலும் நீட்டி முழக்காமல், 5 நிமிடங்களுக்குள், சில கோர்வைகள், நடையை மாற்றி சில ஆவர்த்தங்கள், ஃபரன்கள் வாசித்து கோர்வை முடித்து நிறைவு செய்தார். கடைசியில் வாசிக்கும் மோராவை வழமையான ஒன்றாக வாசிக்காமல், சற்றே வித்தியாசமாக வாசித்தது நன்றாக இருந்தது.

சிந்து பைரவி ராகத்தில் ’தம்பூரி மீட்டிதவா’ என்ற புரந்தரதாசர் கிருதியுடன் கச்சேரியை நிறைவு செய்தார். ‘கெஜ்ஜையே கட்டிதவா’ என்ற வரிகளில் அவர் பாடிய சங்கதிகள் வெகு அற்புதமாய் அமைந்தன.

கச்சேரி முடிந்ததும், இந்த சீஸனில் இவரது இன்னொரு கச்சேரியைக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வேறெங்கு பாடுகிறார் என்று விசாரித்தேன். இந்த டிசம்பரில் இதுதான் அவருக்குக் கடைசி கச்சேரியாம். அடுத்து ஜனவரியில்தான் பாடுகிறாராம். என்னய்யா அநியாயம்  இது?

ஒரு பக்கம் நேற்று பிறந்த நண்டு சிண்டுகளை எல்லாம் ஊக்கு விக்கிறேன், ஊசி விக்குறேன் என்று கச்சேரிகளை அள்ளித் தெளிப்பது இருக்கட்டும், ராம்பிரசாத் போன்ற உழைப்பு, பாடாந்திரம், வித்வத் எல்லாம் நிறைந்திருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்பை முதலில் அளியுங்கள்.

Read Full Post »

21-ம் தேதி மதியம் கே.காயத்ரியின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன்.

காயத்ரி கச்சேரி நடந்த அதே ஹாலில் அடுத்த கச்சேரியில் ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடினார். சார்ஸுர் நிறுவனம் இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் நடத்தும் இசை விழா இது. நல்ல இளம் பாடகர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் கச்சேரி வாய்ப்பளித்து, சீனியரான பக்கவாத்யங்களை உடன் வாசிக்க வைத்து, சார்ஸுர் நடத்தும் இந்த விழா பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

காயத்ரி கச்சேரி நாரத கான சபையின் இசை விழாக் கச்சேரி. அடுத்த கச்சேரி வெறு இசை விழா என்பதால், அரங்கமே கண நேரத்தில் மாறிப் போனது. அழகான backdrop, முன்னால் இரு காமிராகக்ள் (லைவ் வெப்காஸ்ட் கூட செய்வதாகக் கேள்வி), நலைந்து லேப்டாப்கள், காதில் போஸ் ஹெட்ஃபோன்ஸ் மாட்டிய படி சிலர் என்று அரங்கம் உருமாறியது.

கச்சேரிக்கு ஓரளவு நல்ல கூட்டம். இன்றைய பக்கவாத்யங்கள் எம்.ஏ.கிருஷ்ணசாமி, அருண் பிரகாஷ் மற்றும் கோவிந்தராஜன்.

ராமகிருஷ்ணன் மூர்த்தியை சென்ற வருடம் அறிமுகப்படுத்தி எழுதியிருந்தேன். அமெரிக்காவில் வளர்ந்தவர். படிப்பு முடிந்ததும் இந்தியா வந்துவிடப் போகிறாராம். சங்கீதத்தில் அவ்வளவு ஈடுபாடு. நல்ல குரல். ஆலாபனைகளில் அவ்வப்போது ராமநாதபுரம் கிருஷ்ணன் தென்படுவார். இவரது நிரவல்கள் உங்களுக்கு கே.வி.என்-ஐ நினைவுபடுத்தலாம்.

கணீர் குரலில் கேதாரத்தில் ‘ராமா நீ பை’ என்று கச்சேரியை தொடங்கினார். விறுவிறுப்பான மத்யம கால ஸ்வரங்கள் கச்சேரியை களை கட்டத் தொடங்கின.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் இன்னும் தைரியமாகப் பாடுகிறார் ராமகிருஷ்ணன்மூர்த்தி. வளர்ந்து வரும் ஆற்றலுக்கு ஈடாக வளர்ந்து வரும் அங்க சேஷ்டைகளே அதற்கு சாட்சி. இன்னும் அங்க சேஷ்டைகள் பார்க்க கொடூரமாக ஆகவில்லை. இன்னும் சில சீஸன்களில் ஆகிவிட்டால் ப்ரைம் ஸ்லாட் நிச்சயம்!

ஆனந்த பைரவியை காப்ஸ்யூலாகக் காட்டி விட்டு, ஷ்யாமா சாஸ்த்ரியின் அரிய கிருதியான ‘ஹிமாசல தனய’ பாடினார். அந்தப் பாடலில் அவர் செய்த மத்யம கால நிரவல் சேவாகின் ஆட்டம் போல அமைந்து நிறைய அப்ளாஸை வென்று கொடுத்தது.

பூர்வி கல்யாணியை சப்-மெயினாக எடுத்துக் கொண்டு, ராகத்தை அழகாக அளவாகப் பாடினார்.மிஸ்ர சாபுவில் அமைந்த கோபாலகிருஷ்ண பாரதியின் ‘திலை சிதம்பரம்’ கிருதியை எடுத்துக் கொண்டு, “சபா நாதன் திருத்தாளை சிந்தனையில் கொண்டு” என்ற இடத்தில் நிரவல் பாடினார். ஆனந்த பைரவியில் நிரவல் அரேபிய குதிரையின் நாலு கால் பாய்ச்சல் என்றால், பூர்வி கல்யாணியிலோ அழகிய தேரில் ஒய்யார பவனி. இழைத்து இழைத்து பூர்வி கல்யாணியின் பல பரிமாணங்களைக் காட்டி, crisp ஸ்வரப்ரஸ்ஹாரத்துடன் நிறைவு செய்தார்.

உடன் வாசித்திவர்கள் பற்றி ஓரிரு வார்த்தை. எம்.ஏ.கிருஷ்ணசாமி பாரூர் ஸ்கூலின் சீனியர் வித்வான். இளைஞர்தானே என்று அசட்டை செய்யாமல் சிரத்தையுடன் வாசித்தார். பாடகர் பாடும் போது நிழலெனத் தொடர்ந்து, தேவையான் இடங்களை மட்டும் வாசித்துக் காட்டி, தனது முறை வரும் போது பாடகர் பாடிய நேரத்தை விட கம்மியான நேரத்தில் வாசித்த போதும், பாடகர் ஏற்படுத்திய நிறைவை தன் வாசிப்பிலும் கொணர்ந்து perfect accompaniement-ஆக நடந்து கொண்டார். அருண் பிரகாஷின் பெரிய பலம் அவர் கிருதிகளுக்கு அளிக்கும் போஷிப்பு. அதிலும் அவர் மிருதங்கத்தில் காட்டும் modulations ரசிகானுபவத்தை பல மடங்கு உயர்த்துகின்றன. சன்னமாய் சில ஆவர்த்தங்கள் வாசித்து விட்டு, அதே சொல்லை கணீரென்று வாசிக்கும் போது அது ஏற்படுத்தும் பரவசம் கச்சேரியை பன் மடங்கு உயர்த்துகிறது.

பூர்விகல்யாணிக்குப் பின் விளம்ப காலத்தில் ‘சௌந்தர ராஜம்’ பாடினார். பிருந்தாவன சாரங்கா ராகப்பாடலில் சரணத்தில் ராமகிருஷ்ணன் மூர்த்தியின் நினைவிலிருந்து வரிகள் ஒருன் கண நேரத்துக்கு மறைய, உதவிக்கு வந்தார் வயலின்காரர். அவரது சுட்டலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாடலை சிறப்பாக பாடி முடித்தார் ராம்.

கலாவதியில் துரித காலத்தில் சில ஆவரத்த ஸ்வரங்களுடன் ‘ஒகபாரி’ பாடி மெயின் ராகமாக தோடியை எடுத்துக் கொண்டார்.

நெடு கார்வைகள், ரப்பராய் வளையும் ஸ்வரங்கள், ஏணி வைத்துப் பிடிக்க வேண்டிய வர்ஜ பிரயோகங்கள், மின்னல் வேக சஞ்சாரங்கள் என்று எக்கெச்செக்க ஸ்கோப் உள்ள கன ராகம் தோடி. மதய்ம ஸ்தாயியில் காந்தாரம், பஞ்சமம், தைவதம் என்று படிப்படியாய் வளர்த்து, தார ஷட்ஜத்தில் நின்று கொண்டு, தைவதத்தில் முடியுமாறு அவர் பாடிய நெடும் சஞ்சாரங்கள் வெகு அற்புதமாய் அமைந்தன. கமகத்துடன் ஒலிக்கும் ஸ்வரங்களை ஒரு சில நேரத்தில் கமகமின்றி சுத்த ஸ்வரமாய் கையாளும் போது பல ஆச்சர்யமான பரிமாணங்கள் கிட்டைப்பதுண்டு. ராமகிருஷ்ணனின் தோடியில் நேற்று அப்படி சில பரிமாணங்கள் காணக் கிடைத்தன. விமர்சனம் என்றால் குறை சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற நியதி இருப்பதால், எப்போதாவது தலை காட்டும் ஸ்ருதி விலகலையும் தவிர்த்துவிட்டால் இவரது பாட்டில் நிறைகள் தவிர வேறொன்றும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

அவரைத் தொடர்ந்து வாசித்த கிருஷ்ணசாமி இத்தனை வருஷ சர்வீஸில் எத்தனை தோடி வாசித்திருப்பார்? அத்தனை அனுபவமும் அவரது வாசிப்பில் சொட்டின. மேடையில் இருந்த அனைவரும் அவர் வாசிப்பை வெகுவாக சிலாகித்தனர். ராமகிருஷ்ணன் பாடி முடித்ததும் ஒலித்த அளவு கரகோஷம் இவர் வாசித்த பின்னும் கிடைத்திருக்கலாம். பாடகர் பாடியவுடன் வயலின் வாசிக்கும் போது கதையடிக்க நேரம் கிடைத்ததாய் நினைத்துக் கொள்ளும் ரசிகர்களின் எண்ணம் என்றுதான் மாறுமோ.

தோடியில் மிஸ்ர ஜம்பையில் ‘தாசுகோவலேதா’ பாடினார். வழக்கம் போல ‘சௌமித்ரி தியாகராஜ’ என்ற இடத்தில் நிரவல். குறிப்பாக இரண்டாம் காலத்தில் ஒரு ஆவர்த்தம் மட்டும் ஒலிக்கும் வகையில் அவர் பாடிய பல ரவுண்ட் நிரவல்கள் பிரமாதமாய் அமைந்தன. நிரவல் ஸ்வரங்களின் போது அருண் பிரகாஷும் கோவிந்தராஜனும், கச்சிதமாய் வரப் போவதை அனுமானித்து வாசித்தது வெகு சிறப்பாய் இருந்தது. தொடர்ந்து வாசித்த தனியிலும் அருண் பிரகாஷின் வாசிப்பு மிளிர்ந்தது. இளைஞரை ஊக்கப் படுத்த நடத்தப்படும் கச்சேரியில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அனைத்து பக்க வாத்தியக்காரர்களும் தெளிவாக இருந்தனர்.

தோடிக்குப் பின் ஹம்சானந்தியும், காபியும் விருத்தமாகப் பாடினார். குறிப்பாக காபி பாடும் போது நிறைய கே.வி.என் நினைவு வந்து அலை மோதியது. அந்த்த காபியை இது நினைவு படுத்தினாலும், இது காப்பியல்ல, ஒரிஜினல் என்றார் பக்கத்திலிருந்த நண்பர். சோதனை சுமைக்கு பாடலும், எப்ப வருவாரோ பாடலும் பாடி கச்சேரியை நிறைவு செய்த போது, “My season has finally arrived”, என்று தோன்றியது.

 

Read Full Post »

பாரதி ராமசுப்பன் பாடி தீட்சதர் அகண்டத்தில் கேட்ட போது அவரது அழுத்தம் என்னை மிகவும் கவர்ந்தது. கணீர் குரலில் வாயைத் திறந்து பாடுகிறார். சொற்கள் புரிகிறது. தீட்சதர் கிருதிகளை அதன் கம்பீரம் குறையாமல் அவர் பாடிய போதே சீஸனில் ‘must listen’ லிஸ்டில் போட்டு வைத்துவிட்டேன்.  அன்று வயலின் வாசித்தவர் ராஹுல். மிருதங்கம் வாசித்தவர் பரத்வாஜ்.

கச்சேரியை ‘சங்கரம் அபிராமி மனோஹரம்’ என்று திருக்கடையூர் பற்றி தீட்சிதர் புனைந்துள்ள மனோஹரி ராக கிருதியுடன் தொடங்கினார் பாரது. பாடலில் வரும் மத்யம கால வரிகளும், பாரதியின் கல்பனை ஸ்வரங்களும் நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. ஸ்வரத்தை நிறைவு செய்யும் போது எதிர்பாரா தருணத்தில் பல்லவிக்கு வந்தது நன்றாகவே இருந்தது.

ரீதிகௌளை ராகத்தை கீற்றாய் காட்டிவிட்டு, ’சேரராவதேமிரா’ கிருதியை தொடங்கினார். அதற்கு பரத்வாஜ் பல்லவியிலேயே நிறைய ஃபரன்களை அள்ளி வீசிய போது காலையில் கேட்ட லெக்-டெம் நினைவுக்கு வந்தது. இளைஞர்தானே, போகப் போக கற்றுக் கொண்டு விடுவார். பரத்வாஜுக்கு நல்ல காலப்ரமாண சுத்தம். மிருதங்கத்தில் தொப்பி நன்றாக அமைந்துள்ளது. நினைத்த படி, கும்காரங்கள் பேசுகின்றன. அதே அளவு நாதம் வலந்தலையிலும் கிட்ட அவர் உழைக்க வேண்டும். இன்னொரு விஷயம், பாலக்காடு மணி ஐயர் சொன்னது. பாடகரும், உடன் வாசிப்போரும் eye-contact-ல் இருக்க வேண்டும். ”நிரவல் இன்னும் நாலு ஆவர்த்தம் உண்டா? தீர்மானம் வரப் போகிறதா? ஸ்வரம் இன்னும் பாடலாமா? ”, என்றெல்லாம் கண்ணாலேயே பேசிக் கொள்ள வேண்டும், என்று அடிக்கடி கூறுவாராம் மணி ஐயர். அந்த யோசனை இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் பயன்படும். பாதி நேரத்துக்கு மேல், மிருதங்க கலைஞரும் வயலின் கலைஞரும் தலையைக் குனிந்து கொண்டே இருக்கின்றனர். அதிலும் சில இடங்களில், வயலின் இட்டு நிரப்புவார் என்று பாரதி வயலினைப் பார்க்க, அவரோ தரையைப் பார்த்தபடி ஒரே நோட்டில் வில்லைப் போட்டார். இவையெல்லாம் பெரிய காரியங்கள் அல்ல, சிறு சிறு நெளிவு சுளிவுகள்தான். காலப்போக்கில் இவ்விளைஞர்களுக்கு அவை கை வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

கிருதிகளில் அழகான சங்கதிகள் பல பாடி, நிரவல் ஸ்வரங்களுடன் ரீதிகௌளையை நிறைவு செய்தார். அதன் பின், கச்சேரியின் சப்-மெயினாக பிலஹரியை எடுத்துக் கொண்டு ராகம் பாடினார். பாரதிக்கு அற்புதமான சாரீரம். ஓபன் த்ரோட்டில், மேல் ஸ்தாயியில் அவர் பாடும் போது வெகு அழ்காக உள்ளது. தார ஸ்தாயி சஞ்சாரங்கள் எல்லாம் ஸ்ருதியில் ஒன்றரக் கலந்து அற்புதமாய் ஒலிக்கிறது. குரலிலே ரவை ஜாதி சங்கதிகள் சுலபமாய் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சேர்ந்தால் ஆலாபனை ரொம்ப ஒழத்தியாய்தானே அமைய வேண்டும்? துரதிர்ஷ்டவசமாக அப்படி அமையவில்லை. நன்றாக இருந்த போதும், இதை விட இன்னும் நன்றாக அமைந்திருக்கலாமே என்றே தோன்றிக் கொண்டிருந்தது.

அதற்கு முக்கிய காரணம், பாரதியின் மந்த்ர ஸ்தாயி. மத்யம ஷ்ட்ஜத்துக்கு கீழே செல்ல வேண்டும் என்றாலே பாரதியிடம் ஒரு தயக்கம் தென்படுகிறது. மேல் ஸ்தாயியில் கம்பீரமாய் ஒலிக்கும் குரல், வேறு யாருடையதோ என்பது போல ஒலிக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் ஸ்ருதி சுத்தம். குறிப்பாக ஆலாபனையின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அதற்கு எட்டியுள்ள ஸ்வரங்களை எட்டிப் பிடித்து தொட்டுக் காண்பிக்கும் போதெல்லாம் ஸ்ருதியுடன் கலந்திருத்தல் மிக மிக அவசியமாயிற்றே. ஸ்ருதி விலகல் என்பது நல்ல பாலில் ஒரு சொட்டு விஷமாயிற்றே. ஸ்ருதியை அன்னை என்கிறோம். அம்மாவுடன் செல்லப் பிணக்கெல்லாம் வாழ்க்கைக்குச் சரி. கச்சேரிக்கு?

ஆலாபனைக்குப் பின் நாராயண தீர்த்தரின் ‘பூரய மம காமம்’ என்ற தரங்கத்தைப் பாடினார். “கோபாலா” என்ற இடத்தில் ஒரு மின்னல் வேக பிருகா வெகு அற்புதமாய் அமைந்தது.

பிலஹரியைத் தொடர்ந்து, லலிதா ராகத்தில் ‘ஹிரண்மயீம்’ பாடினார். பாடலின் பாவம் சரியாக வெளிப்படும் வகையில் இழைத்து, உழைத்துப் பாடினார். அதன் பின், மெயின் ராகத்துக்கு முன் குரலை warm-up செய்ய துரித காலத்தில் ‘பண்டுரீதி’ பாடினார்.

முதல் சஞ்சாரத்திலேயே இது சந்தேகமில்லாமல் கீரவாணிதான் என்று புரியும் வகையில் ஆலாபனையைத் தொடங்கினார். பாவபூர்வமாய் பாடுபவர்களுக்கு உகந்த ராகங்களுள் ஒன்று கீரவாணி. பஞ்சமத்தை மையமாக்கி பாடிய இடங்களும், தார ஷட்ஜத்தை சுற்றிச் சுற்றிப் பாடிய இடங்களும் அழகாக அமைந்தன. முன் சொன்ன குறைகளும் நிகழாமல் இல்லை. ஆலாபனை நிறைவு செய்யும் வேளையில் ஒரு பிடி சரியாக கைவராமல் படுத்தியது.

வயலின் இளைஞரின் ஆலாபனை பாரதியுடைய ஆலாபனையை ஒட்டி அமையவில்லை என்ற போதும், மிக நன்றாகவே அமைந்தது. விரலில் நல்ல வேகம் பேசிய போதும், அளவறிந்து வாசிக்கும் பக்குவமும் வாய்த்துள்ளது. சோலோ-வில் பிரமாதமாக வாசிப்பது போலவே, ஃபாலோ செய்வதிலும் பாடகருக்கு பக்க பலமாய் இருந்து, இன்னும் கொஞ்சம் போஷித்து வாசித்தால் இந்த இளைஞருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

‘கலிகியுண்டே’ பாடுவார் என்று நான் எண்ணியிருக்கையில், ‘வாணனை மதி சூடிய’ என்ற தேவாரப் பாடலை எடுத்துப் பாடினார். டி.எம்.தியாகராஜன் அமைத்த மெட்டு என்று முன்பு படித்த ஞாபகம். அடுத்தடுத்து விழும் எதுகைகளின் அழகு மிளிரும் படி பாரதி பாடினார். அவ்வப்போது தெளித்த ரவை சங்கதிகளும் ரசிக்கும் படி இருந்தன. நிரவலுக்கு, “வீரனை விடமுண்ட” என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாகப் பாடினார். ஸ்வரம் பாடும் போது வைத்த சில பொறுத்தங்கள் அழகாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து, பரத்வாஜ் மிஸ்ர சாபுவில் தனி வாசித்தார். வைத்த கோர்வைகள் எல்லாம் பளிச் ரகம். நாதத்தில் கவனம் செலுத்தி, வேகத்தின் பால் நாட்டத்தை கொஞ்சம் மட்டுப் படுத்திக் கொண்டால் இன்னும் அழகாக இவர் வாசிப்பு மிளிரும்.

தனிக்குப் பின், யமன் கல்யாண், நாதநாமக்ரியா, புன்னாகவராளி ராகங்களில் ஸ்லோகம் பாடி, தீட்சதரின் ஷியாமா சாஸ்திரியின்  ‘கனக ஷைல’ கிருதியை விளம்ப காலத்தில் பாடினார். இது போன்ற கிருதிகளை முறையாகப் பாடுவது பாரதியின் பெரிய பலம். மெயின் பீஸ் ஆனதும், கொலுவுக்கு பாடுவது போல துக்கடாவை இரைக்காமல், கூட்டம் அதிகமில்லை என்ற போதும், இது போன்ற கிருதிகளை எடுத்துக் கொண்டு உழைத்துப் பாடியதற்கே பாரதியைப் பாராட்ட வேண்டும்.

சாஸ்திரி அரங்கத்தில் மதிய வேளையில் கழிப்பறையை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அப்படி என்னத்தை அங்கிருந்து கொள்ளையடித்துக் கொண்டு போய்விடப் போகிறோம். அரங்கில் யாராவது மெல்லிய குரலில் பேசினால் கூட நன்றாக எதிரொலிக்கிறது. இதை உணர்ந்தும் கச்சேரிக்கு வந்த சிலர் ஓயாமல் பேசிக் கொண்டு கழுத்தறுத்தனர். மேடையில் இருந்த ஒருவருக்கு உறவு போலத் தோன்றிய ஒருவர் அவ்வப்போது செல் ஃபோனில் பேசிக் கொண்டே இருந்தார். குறைந்த பட்சம், அரங்குக்கு வெளியில் பேசிவிட்டு திரும்பலாம் என்ற அறிவு கூடவா இவர்களுக்கு இருக்காது?

கச்சேரிகளுக்கு இடையில் வயிற்றுக்கு சோறிட நேரம் இருக்காது என்று முன் கூட்டியே உணர்ந்து காலையிலேயே ஃபுல் மீல்ஸ் அடித்துவிட்ட என் புத்திசாலித்தனத்தை நானே சிலாகித்த படி, சாஸ்திரி ஹாலில் இருந்து நாரத கான சபாவுக்கு நடையைக் கட்டினேன்.

PS: Thanks you Bharathi for pointing out the error on composer for ‘Kanakashaila’

Read Full Post »

Lec Dem by Shri. Guruvayur Durai @ Tag Centre

என் டிசம்பர் நேற்று பிறந்தது.

காலை எழுந்தவுடன் ஹிண்டுவை நோட்டம் விட்டேன்.  ஒரே நாளில், ஒரே சமயத்தில் 30 இடங்களில் நாள் முழுவதும் கச்சேரிகள். யாரைக் கேட்பது என்பதை விட, யாரை கேட்காமல் விடுவது என்பது பெரிய கேள்வி. ஒவ்வொரு வருடமும் இது ஒரு சுகமான சங்கடம். இரவு பஸ் பிரயாணம் தந்த அசதியால், எட்டு மணிக்குள் ஏதேனும் ஓர் அரங்குக்குச் செல்ல முடியவில்லை.  10.15-க்கு இருந்த லெக்-டெம் சுண்டி இழுத்தது.

ம்யூசிக் ஃபோரம், டேக் சென்டருடனும், ஸ்ருதி இதழுடனும் சேர்ந்து நடத்திய லெக்-டெம் மேளாவின் கடைசி தினம் இன்று. வெவ்வேறு உருப்படிகளுக்கு வாசிப்பது பற்றி குருவாயூர் துரை பேசினார். சீனியர் வித்வான். புதுக்கோட்டை வழியில் வந்தவர். செம்மங்குடியில் இருந்து ஸ்ரீநிவாஸ் வரை, ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து கதிரி கோபால்நாத் வரை அனைவருக்கும் வாசித்து இருப்பவர். அவருக்கு மெருகூட்டும் கும்காரங்களும், நாதத் திவலைகளாய் மீட்டுச் சொற்களும் கச்சேரியை வேறு நிலைக்கு உயர்த்துவதை பல முறை உணர்ந்திருக்கிறேன். அவர் பேசுகிறார் என்றதும், என் சீஸன் தொடக்கம் எங்கு என்ற சங்கடம் தீர்ந்தது.

“கச்சேரியில பாட்டுக்கு எப்படி வாசித்தால் சரியாக இருக்கும் என்று என் அபிப்ராயத்தைச் சொல்லச் சோன்னார்கள். நானும் தெரியாத்தனமாய் ஒப்புக் கொண்டு விட்டேன். இப்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று இருக்கிறது”, என்று ஹாஸ்யமாக பேச்சைத் தொடங்கி, “இப்படித்தான் வாசிக்கணும் என்று சொல்ல முடியாது. அவரவருக்கு ஏற்றபடி வாசித்துக் கொள்ளலாம். பாடகர் மனோதர்மமாய் ராகம் பாடுவது போலத்தான். ஒரே கரஹரப்ரியாவை ஒவ்வொரு வித்வானும் தன் குரலுக்கும், திறமைக்கும், கற்பனைக்கும் ஏற்றார் போல பாடுவதைப் போலத்தால் மிருதங்கம் வாசிப்பதும். ஆதலால் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம்.இருந்தாலும் என் அனுபவத்தில் அறிந்து கொண்ட சில விஷயங்களைச் சொல்கிறேன்”, என்றார்.

அவர் சொன்ன மற்றவை பின் வருமாறு:

– பாடகர்களுக்கு சுதந்திரம் இருக்கும் போதும், ஒரு பொதுவான சம்பிரதாயம் இருப்பது போலவே மிருதங்கம் வாசிப்பதிலும் சில சம்பிரதாயங்கள் உண்டு. இவை கல்லில் பொறிக்கப்பட்ட நியதிகள் அல்ல என்ற போதும், பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பல பெரிய கலைஞர்களால் அழகாக கையாளப்பட்டவை.

– ஜி.என்.பி-க்கு முதன் முதலில் வாசித்த போது, “ரகுவர” கிருதியில் நிரவல் பாடும் போது மத்யம கால நிரவலில், உணர்ச்சி வசப்பட்டு நிறைய ஃபரன்ஸ் வாசித்துவிட்டேன். கச்சேரி முடிந்ததும்,  ”இரண்டாம் காலம் பாடினால் அந்த கால சொற்கள்தானே வாசிகக் வேண்டும். உங்கள் வாத்யார் அப்படி வாசிக்காமல் இருந்து நீ கேட்டதுண்டா?”, என்று ஜி.என்.பி கேட்டது பாடமாக அமைந்தது.

– மிருதங்கக் கலைஞர் எவ்வளவுதான் திறமையானவர் என்ற போதும் மேடையில் நடுவில் அமர முடியாது. பாடகருக்கு துணையாக இருப்பதுதான் மிருதங்கக் கலைஞரின் தலையாய வேலை என்பதை அவசியம் உணர்ந்து வாசிக்க வேண்டும். அதீதமாய் மேக் காலம் வாசித்தால் பாடுபவர் கவனத்தை சிதைப்பதாய் அமையும்.

– வர்ணத்துக்கு வாசிக்கும் போது (சஹானா வர்ணத்துக்கு வாசித்துக் காண்பித்தார்), பாடப்படும் காலபிரமாணத்திலேயே வாசித்தல் உசிதம். பாடகரே ஓட்டிப் பாடினால் ஒழிய காலப்ரமாணத்தை மிருதங்கக் கலைஞர் ஓட்டக் கூடாது.

– பெண்களுக்கு வாசிக்கும் போது, முதலிலேயே நிறைய துரிதமான சொற்களைப் போட்டுவிட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். இது தேவையற்றது. பாடகிகளும் இப்படி வாசிப்பதை எதிர்பார்க்காமல் இருப்பதுதான் சரி.

– இதற்கு முன் இருந்தவர்கள், அவரவர் வந்த வழியில் அழகாக முறைகள் அமைத்துள்ளுனர். புதுக்கோட்டை வழியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய கிருதியின் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையில் வாசிக்க ஒரு ‘பந்தா’ உண்டு.

– மத்யம கால கிருதிக்கு வாசிக்கும் போது (ஓரஜூபு கிருதிக்கு வாசித்துக் காண்பித்தார்) பல்லவியின் தொடக்கம் கீழ் காலத்திலும், சங்கதிகள் வர வர கொஞ்சம் மத்யம காலமும் கலந்து வாசிக்கலாம். அனு பல்லவியில், நிறைய மத்யம காலமாக வாசிக்கலாம். ஓர ஜூபு, ப்ரோவ பாரமா போன்ற பாடல்களில் மிருதங்கக்காரர் வெவ்வேறு அழகிய நடைகள் மூலம் பாட்டை போஷித்து வந்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் உற்சாகமாக இருக்கும். பழநி சுப்ரமணிய பிள்ளை வாசிக்கும் போது, மதுரை மணி ஐயர் பல கச்சேரிகளில் பாட்டை நிறுத்திவிட்டு, மிருதங்கத்தைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். சரணமும் மத்யம காலத்தில் வாசித்த போதும், அதற்கான ‘patterns’ அனுபல்லவி போலல்லாமல் வேறுபட்டிருக்கும். (அவர் வாசித்தது காதில் இருக்கும் போதும், அவற்றை இதற்கு மேல் எழுத்தில் பதிவு செய்ய முடியவில்லை)

– சவுக்க கால பாடல்களுக்கு (ஸ்லோ டெம்போ) வாசிக்கும் போது (ஜம்பு பதே பாடலுக்கு வாசித்துக் காண்பித்தார்) ஜனங்களின் கவனமெல்லாம் பாடலிலேயே இருக்க வேண்டும். அவர்களின் கவனத்தை மிருதங்கத்தின் பக்கம் திருப்பக் கூடாது. பல்லவியை கீழ் காலத்திலேயே வாசிப்பது உசிதம். மேல் காலத்தில், ஃபரன்ஸ் வாசித்து திறமையை காட்ட கச்சேரியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எல்லா நேரத்திலும் அப்படி வாசித்தால் கச்சேரி சோபிக்காது. அனு பல்லவிக்கு வாசிக்கும் போது, கீழ் காலத்தோடு சில மத்யம கால சொற்களையும் வாசிக்கலாம். கவனமெல்லாம் பாடகரின் பாட்டில் இருக்க வேண்டும். சங்கதிகள் எல்லாம் நிச்சயம் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்த சங்கதிக்குப் பின் இந்த சங்கதி என்று அனுமானித்து வாசிக்க வேண்டும். அது ஒரு வகையில் ஃப்ளுக்தான். ஆனால் அந்த ஃப்ளூக் எப்போதும் வொர்க்-அவுட் ஆகும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

– அதற்கு ஒரே வழி நிறைய கேட்க வேண்டும். ஒரு பாடலை நிறைய முறை கேட்கும் போது, அந்தப் பாடல் கச்சேரியில் வரும் போது, சங்கதிகள் எல்லாம் ஒரு கனவு போல கண் முன் தோன்றும். பாடல் தெரிந்தால் கவனம் முழுவதும் பாட்டில் இருக்கும். தெரியாத போதுதான் கவனம் மிருதங்கம் பக்கம் சென்று, இன்னும் சில ஃபரன்கள் வாசிக்கலாமா எனத் தோன்றும்.

– பாடல் தெரிந்து வாசிக்கும் போது, சில இடங்களில் பாடலை ஒட்டி சொற்கட்டுகளை போட்டால் ரசிகர்கள் மிகவும் ரசிப்பர். (பரமாத்முடு பாடலில் ‘ககனா’ என்ற இடத்தை எடுக்கும் போது சாஹித்யம் போலவே சொற்கட்டைப் போட்டு சரணத்தை எடுத்துக் காண்பித்தார்), பாடகர்களும் இதை உணர்ந்து பாடலை எடுக்க வேண்டும். மிருதங்கக்காரர் எடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு சிலர் பாடலை எடுக்காமல் இருந்துவிடுகின்றனர். பாடகர் உடன் வாசிப்பவர்களை ஒப்புக் கொள்வது போல நடந்து கொண்டால், ரசிகர்களும் அவர்கள் நன்றாக வாசித்தனர் என்று ஒப்புக் கொள்வர். பாடகர் அப்படி நடக்காத போது, மிருதங்கக்காரருக்கும் உற்சாகம் குறையும். கச்சேரி என்பது ஒரு கூட்டு முயற்சி.

– பஜன் போன்ற கனமில்லாத பாடல்களுக்கு வாசிக்கும் போது நிறைய கும்காரங்கள் கலந்து வாசிக்கலாம். (கண்டெனா கோவிந்தனா பாடலுக்கு வாசித்துக் காண்பித்தார்) நிறைய light touch-களுடன், கிட்டத்தட்ட தப்லா கேட்பது போன்ற பிரமை உருவாகும் வகையில் வாசிக்க வேண்டும். தீர்மானங்களில் சிறியதாய் இருப்பின் உசிதம்.

– துரித கால பாடல்களுக்கு இந்த கருத்துகள் பொருந்தா. கச்சேரியில் தொய்வில்லாமல் இருக்க சில நிமிடங்களுக்குப் பாடப்படும் பாடலில், முதலில் இருந்தே மேல் காலத்தில் வாசித்தால்தான் கச்சிதமாகப் பொருந்தும்.

“எல்லாரும் நிறைய கேட்கணும். பாடகர்களும் இளம் கலைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”, என்று உரையை நிறைவு செய்தார். அரங்கில் நிறைய இளைஞர்கள் தென்பட்டனர். அவர்களுக்கெல்லாம் ஒரு முக்கிய பாடமாக அந்த உரை அமைந்திருக்கும்.

சீஸன் அற்புதமாய் தொடங்கிவிட்ட மகிழ்ச்சியில் அடுத்த கச்சேரிக்காக சாஸ்திரி ஹால் கிளம்பினேன்.

 

 

Read Full Post »

« Newer Posts