கர்நாடக சங்கீதத்தில் இவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் நிச்சயம் சென்று கேட்பேன் என்று சொல்லும் வகையில், மூன்று பேர் என் பட்டியலில் உண்டு. ஒருவர் அபிஷேக் ரகுராம், மற்றவர் அம்ருதா வெங்கடேஷ், மூன்றாமவர் மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா.
பொதுவாக, ஒரு பாடகரைப் போலவே இன்னொருவர் பாடினால், originality இல்லை என்று குறை கூறுவது வழக்கம்.
அவர் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் இள வயது சேஷகோபாலன் பாடுவது போலவே இருக்கிறது. இருந்தாலும், கிருஷ்ணாவை வழக்கம் போல குறை கூற முடியாது. ஏனெனில், ஒரு கிரிக்கெட் வீரரை இவரது ஆட்டம் டெண்டுல்கரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாக இருக்குமா? ஒரு டென்னிஸ் வீரரின் பேக்-ஹேண்ட் ரோஜர் ஃபெடரரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாகுமா? அது போலத்தால் கிருஷ்ணா பாடுவது சேஷகோபாலன் பாடுவது போலவே உள்ளது என்று சொல்வதும் குறையாகாது. இன்னும் சொல்லப் போனால், சேஷகோபாலனுக்குப் பின்னும் அவர் பாணி சங்கீதத்தை அதே வீச்சோடு (இதுதான் முக்கியம்) கேட்க முடியும் என்பதே இசை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்திதான்.
இந்த வருடம் பல இளைஞர்களுக்கு அகாடமி ப்ரைம் ஸ்லாட் அளித்தபோது, இவரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காததில் வருத்தமே. அந்த வருத்தம், நேற்று காலை இவர் கிருஷ்ண கான சபையில் பாடிய போது அதிகரித்தது.
காலை வேளை கச்சேரிகளை, போன வருடம் போல டிக்கெட் கச்சேரியாக வைக்காமல், மினி ஹாலில் ஃப்ரீ கச்சேரியாக இந்த வருடம் வைத்திருப்பது நல்ல விஷயம். அரங்கம் சின்னதென்பதால் ஈயடித்தாற் போல் காட்சியளிக்கவில்லை. டிக்கெட் இல்லை என்பதால், ஓரளவு கூட்டமும் இருந்தது.
நேற்று உடன் வாசித்தவர்கள் டில்லி சுந்தர்ராஜன் (வயலின்), நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), பேப்பரில் கடம் வாசிப்பதாக செய்தி வரவில்லை என்ற போதும் நேற்று கடம் வித்வானும் கச்சேரியில் வாசித்தார். அவர் பெயரை கேட்க மறந்துவிட்டது.
கச்சேரியை நவராகமாலிகை வர்ணத்தில் தொடங்கினார். சிட்டை ஸ்வரங்களுக்குப் பின், ஒன்பது ராகங்களிலும் கல்பனை ஸ்வரங்கள் பாடியது நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தை அளித்தது. ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்குத் தாவும் அநாயாசம் பெரிதும் கவர்ந்தது.
’மேரு ஸமான’ பாடலில் அடுக்கடுக்காய் நிறைய சங்கதிகள் கிருஷ்ணா போட, அதை பெரும்பாலும் சரியாக ஊகித்து வாசித்தார் நெய்வேலி நாராயணன். பாடலின் பல்லவியில் பாடிய கல்பனை ஸ்வரங்களில் சௌக்யமும் இருந்தது விவகாரமும் இருந்தது. ஸ்வரத்தை முடிக்கும் போது வைத்த கோர்வை – fitting climax.
நேற்று கிருஷ்ணா பாடிய ஹம்ஸநாதம் அதிகம் கேட்கக் கிடைக்காதது. ஹம்ஸநாதத்தின் உண்மையான வடிவில் தைவதம் உண்டு. காலப்போக்கில் அந்த தைவதம் தொலைந்து விட்டது. இது எஸ்.ஆர்.ஜானகிராமன் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டது. தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றோர் இந்த தைவத்ததுடனேயே இந்த ராகத்தைப் பாடியுள்ளனர் என்ற போதும் கச்சேரியில் இதைக் கேட்பது அபூர்வம். நேற்று கிருஷ்ணா சிறு கோட்டோவியமாய் ராகத்தை தெளிவாக சில நிமிடங்களுள் ஆலாபனை செய்து, முத்தையா பாகவதரின் ‘கிருபாநிதே’ பாடினார். ஆலாபனையிலும், கிருதியிலும், சிட்டை ஸ்வரங்களிலும் கிருஷ்ணா அந்த தைவத்தை மிக நேர்த்தியாய் கையாண்டார்.
நேற்றைய பிரதான ராகம் மோகனம். கிருஷ்ணாவின் குரல் மந்திர பஞ்சமத்தில் இருந்து, தார பஞ்சமம் வரை சுலபமாக சஞ்சரிக்கிறது. டி.என்.எஸ் பாணி ஆலாபனையில், ராகத்தின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அந்த மைத்தை வெவ்வேறு இடத்தில் இருந்து தொடுவது சிறப்பம்சமாகும். உதாரணத்துக்கு மோகனத்தின் தைவதத்தில் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி, அந்த தைவதத்தை ‘க-த’, ‘ரி-த’, ‘ஸ-த’ என்று மத்ய ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தார ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தொடும் போது, எண்ணற்ற பரிமாணங்கள் பிறந்து கொண்டே இருக்கும். Linear exposition-க்குள் non-linear exposition-ம் பொதிந்திருப்பது இந்தப் பாணிக்கே உரிய தனிச் சிறப்பு. இப்படி பாடுவதை கேட்டுப் புரிந்து கொள்வதற்கே நிறைய கவனம் தேவை என்னும் போது, அதைப் பாட எத்தகைய நிர்ணயமும் துல்லியமும் தேவை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இது போன்ற கற்பனைகளை அள்ளிக் கொடுக்கும் அறிவு பலருக்கு உண்டு எனினும், அதை குரலில் சாத்தியமாக்குவது சிலருக்குத்தான் முடிகிறது. அந்த வகையில் கிருஷ்ணா புண்ணியம் செய்தவர். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் செல்கிறது.
அடிக்கடி கேட்கக் கிடைக்கும் பாடல்களைப் பாடாமல், தஞ்சாவூர் ராமஸ்வாமி பிள்ளையின் ‘ஜெகதீஸ்வரி’ பாடினார். மோகனத்தின் தைவதத்தைக் கொஞ்சிய படியே ஒலிக்கும் சிட்டை ஸ்வரத்தையும், சரணம் முடிந்ததும் அந்த சிட்டை ஸ்வரங்களுக்கு உரிய சாஹித்யத்தையும் கிருஷ்ணா வெகு அற்புதமாகப் பாடினார். வேறெந்த மோகன கிருதிக்கும் குறைச்சல் இல்லை என்னும் படியாக மிளிரும் இந்தத் தமிழ்ப் பாடலை இன்னும் நிறைய பேர் பாடலாம்.
‘கதி என்று நம்பினோரை காப்பதே உன் வைராக்யம்’ என்ற வரியில் விஸ்தாரமாய் இரண்டு காலங்களில் நிரவல் பாடிய பின் கல்பனை ஸ்வரங்கள் பாடினார். அவற்றில் சில ஆவர்த்தங்கள் முழி பிதுங்கும் கணக்குகளும் அடக்கம்.
பாடல்களிலும் சரி, தனியிலும் சரி நெய்வேலி நாராயணனின் மிருதங்கம் சுநாதமாய் ஒலித்தது.
தனி முடியும் போது கச்சேரி முடிய 30 நிமிடங்களே எஞ்சி இருந்தன.
அப்போது ஹேமவதி ராகத்தை எடுத்து பத்து நிமிடங்கள் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார், நேரம் இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்துக்குக் கூட ஆலாபனை செய்வார் என்றே தோன்றியது. நேரம் இல்லாதததால் வயலினில் பேருக்கு வாசித்து முடித்தார் டில்லி சுந்தரராஜன்.
சில நிமிட தானத்துக்குப்பின், மிஸ்ர திரிபுடையில் பல்லவி பாடினார்.
என்னுடைய யூகம் யாதெனில், இந்தப் பல்லவியை இரண்டு களையில் தயாரித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
நேரம் இல்லாததால் ஒரு களைக்குத் தாவினார்.
விரைவாகப் பாட வேண்டி இருந்ததால் சாஹித்யம் செம உதை வாங்கியது. சாஹித்யம் தமிழில் என்பதால், அது சிதைகிறது என்பதை ரசிகர்களால் உணர முடிந்தது.
“இட்ட மருந்தென்னவோ அறியேன் – கண்ணே பெண்ணே நீ” என்ற சாஹித்யத்தில் கண்ணே, பெண்ணே தவிர ஒன்றுமே விளங்கவில்லை. கீழ் காலத்தில் பல்லவியை பாடிய போதுதான் கொஞ்சம் புரிந்தது. கடிகாரத்தைப் பார்த்த படியே பல்லவியையும், ஸ்வரங்களையும் பாடி முடித்தார்.
இவ்வளவு நன்றாகப் பாடிவிட்டு, கிருஷ்ணா சாஹித்யத்தை சிதைப்பவர் என்ற அவப் பெயரை வாங்கியிருந்திருக்க வேண்டாம். அதற்கு முன் பாடிய பாடல்கள் அனைத்திலும் சாஹித்யம் நன்றாகத்தான் புரிந்தது. இரண்டு மணி நேரத்துக்குள் விஸ்தாரமாக ஒரு ராகத்தை நிரவல் ஸ்வரங்களுடனும் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவியும் பாடுவது முடியாத காரியம். அதை தவிர்த்திருந்தால், இந்த அவசர ப்சமையலை தவிர்த்திருக்கலாம்.
அரங்கில் சிலருக்கு இதனால் அதிருப்தி என்ற போதும் எனக்கு அது குறையாகத் தோன்றவில்லை.
பல்லவிக்குப் பின், ‘வந்து கேட்பார் இல்லையோ’ என்று பாடியபோது என் மனத்திலும் அந்த வரிகளே தோன்றின. இந்த சங்கீதத்தைக் கேட்க இவ்வளவு பேர்தானா? கூட்டம் கூட்டமாக ‘வந்து கேட்பாரில்லையே’ என்ற வருத்தமும் மேலிட்டது.
அடுத்த வருடமாவது இந்த இளைஞருக்கு ப்ரைம் ஸ்லாட் கிடைக்க வேண்டும். ப்ரைம் ஸ்லாட் கிருஷ்ணாவுக்கு பெயரையும் புகழையும் கொடுக்கும் என்பதை விட, நினைத்ததைப் பாடும் அளவிற்கு நிச்சயம் அவகாசத்தை அளிக்கும்.
ஓர் அற்புதமான கச்சேரியுடன் என் டிசம்பர் நிறைவுக்கு வந்தது.
இந்த சீஸன் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து, ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.