இரண்டு நாட்களாய் ஸ்ரீனிவாஸ் என் வாழ்வை நிறைத்த கணங்கள் மனம் முழுதும் அலையடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு கச்சேரி மட்டும் மீண்டும் மீண்டும் வந்து போய்க் கொண்டிருக்கிறது.
ஸ்டேஜ் டிக்கெட் வாங்கி ஸ்ரீநிவாஸுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டு கேட்ட கச்சேரி. பிரதானமாய் வகுளாபரண ராகத்தை எடுத்துக் கொண்டு ஆலாபனை. மத்ய ஸ்தாயியில் ஆரம்பித்து ஸ்வரம் ஸ்வரமாய் ராகத்தை வளர்த்து, தார ஸ்தாயியில் புயல் போல் மையம் கொண்டு மின்னல் சஞ்சாரங்களை மேலும் கீழுமாய் உதிர்த்து மீண்டும் ஒரு முறை மந்தர ஸ்தாயிக்கு வந்ததும் இப்போது முடிந்துவிடும் ஆலாபனை என்று நினைக்கையில் மந்த்ர ஸ்தாயி விஸ்ரூபமாய் தன்னைக் காட்டிக் கொள்ள முடிவெடுத்தது. ஸ்ரீநிவாஸ் கருவியானார், மாண்டலின் அக்கருவியின் ஓர் அங்கமானது. கையும் கருவியும் ஒன்றரக் கலந்தன. அதிகமில்லை இரண்டு மூன்று நிமிடங்களில் வாத்யத்தின் எல்லைக்குத் தள்ளப்பட்டது அந்த இடக் கரம். இனி செல்ல இடமில்லை என்ற நிலையிலும் மந்த்ர ஸ்தாயியின் பவனி முடிந்தபாடில்லை. இன்னும் இன்னும் என்று அந்தக் கரங்களை எக்கித் தள்ளின ராக சஞ்சாரங்கள்.
ஸ்ரீனிவாஸின் வலக் கரம் பிரடைக்குச் சென்றது. துல்லியமாய் ஸ்ருதி சேர்க்க மட்டும் பிரடையைத் தீண்டும் கரம் இன்று தந்தியின் இறுக்கத்தை தளர்த்தத் துவங்கியது. பிரடையை எவ்வளவு திருகினால் தந்தி எவ்வளவு தளரும், அந்தத் தளர்ந்த நிலையின் எந்த எடத்தில் என்ன ஸ்வரம் பேசும் என்று ஒருவனுக்குத் தெரிந்திருக்க முடியுமா? ஸ்ரீநிவாஸாகவே இருக்கட்டுமே!
பல்லாயிர மணி நெர உழைப்பில் கிட்டும் கனியா? அல்லது பல்லாயிர ஜென்ம பூர்வ புண்ணிய பலனா? யாருக்குத் தெரியும்?
பளிச்சென்று கண்கூசி மறையும் அமானுஷ்யக் கீற்று!
தளர்ந்த அந்தத் தந்தியில் இன்னும் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் வாசித்ததும் ராகத்துக்கு முழுமையாய் வெளிப்பட்டுவிட்ட திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸில் விரல்கள் ராகத்தை ஷட்ஜத்துக்கு நகர்த்தி ஆலாபனையை நிறைவு செய்தன. குறைந்த பட்சம் தம்புராவைத் தொட்டாவது பர்த்தவர்களுக்கு அன்று நடந்த விஷயத்தின் வீச்சு கொஞ்சமாவது புரியக் கூடும்.
தான் என்ன செய்தோம் என்பதை ஸ்ரீனிவாஸ் உணர்ந்திருப்பாரா? எத்தனையோ கச்சேரிகள் நேரில் கேட்டிருந்த போதும் இது போன்ற நிகழ்வை வேறெப்போதும் நான் கண்டதில்லை, ஒரு வேளை இது என் அதீத கற்பனையொ என்று கூட நினைத்துக் கொள்வதுண்டு. அப்போதெல்லாம் என்னருகில் அமர்ந்தபடி “டேய்!” என்று வாயடைத்த நண்பன் வத்ஸனின் கையை கெட்டியாக நான் பிடித்தது கனவில்லைதானே என்று வத்ஸனுக்குத் தொலைபேசி உறுதிப் படுத்திக் கொள்வேன். மேடையில் வெகு அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கக் கூடிய அந்தக் காட்சியை ஸ்ரீனிவாஸ் நினைத்திருந்தால் விஸ்தாரமான நாடகமாக்கி அரங்கமே அறிய செய்திருக்க முடியும். அந்தக் பிரக்ஞையெல்லாம் இருந்தால் அவன் அவதார புருஷனாக முடியுமா என்ன?
ஸ்ரீனிவாஸை என் போன்ற ரசிகர்கள் எங்களுக்கானவனாய், எங்கள் வீட்டில் ஒரு ஆளாய், பிரத்யேகமாய் எங்களுக்கே வாசிப்பவனாய் நினைத்ததில் ஆச்சரியமில்லை. எந்த ஒரு படைப்பும் உருவாக்கும் மாயத் தொற்றம் அது. பெரும்பாலான சமயங்களில் படைப்புக்குரியவனை நேருக்கு நேர் சந்திக்கும் போது அந்த மாய பிம்பம் வெடித்துச் சிதறிவிடும். ஸ்ரீனிவாஸுடன் எதேச்சையாய் நிகழ்ந்த ஒரு சில சம்பாஷணைகளில் ”நம்ப ஸ்ரீனிவாஸ்” என்கிற எண்ணம் இன்னும் இறுகித்தான் போனது. நேற்று ஒரு அம்மா எழுதியிருந்தார், “என் மகனை இழந்தது போல இருக்கிறது”, என்று. எத்தனை உண்மையான உணர்வு!
அவன் ராக அலையெழுப்பி மேலே சென்ற போது நானும் சென்றேன். அவன் ராகக் கடலில் மூழ்கி முத்தெடுத்த போது அது எனக்கே கிடைத்த முத்தாய் கூத்தாடினேன். பிரமாதமாய் ஒரு சங்கதி வாசித்து முடித்து தலை எழுப்பி அவன் சிரித்த போது அது எனக்கும் அவனுக்கும் நிகழ்ந்த சங்கேத சம்பாஷணையாய் நினைத்துக் கொண்டேன். வாகதீஸ்வரி, வனஸ்பதி, விஜயஸ்ரீ, வீரவசந்தம், வந்தனதாரிணி, வர்தினி, சூர்யகாந்தம், பிந்துமாலினி, ஸ்ருதிரஞ்சனி, ஊர்மிகா என்று எததனை எத்தனை அறிமுகங்கள் ஏற்படுத்திக் கொண்டுத்த நண்பன் அவன். காதில் மாட்டிய ஹெட்ஃபோனில் அவன் ஒலிக்க எத்தனை மணி நேர நடை பயணங்களில் துணையாய், வழியாய் நின்றவன். இன்னும் எத்தனையோ பயணங்களை அவன் அழைத்துப் போக தயாராய்தான் இருந்தான். சென்ற மாதம் கூட இரண்டு தெரு தள்ளியிருக்கும் உன்னதியில் கோகுலாஷ்டமிக்கு வாசித்துப் பொயிருக்கிறான். “எங்கப்பா போயிடப் போற நீ? மத்த வேலையும் கொஞ்சம் பார்க்க வேண்டாமா? அடுத்த தடவைக்கு வந்துடறேன்”, என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்ட நான் தான் எவ்வளவு மடையன்?
இப்போது இறுதிப் பயணத்தில் பறந்தேவிட்டான். இனி கத்தினால் வருவானா? கதறினால் கிடைப்பானா?
அவன் போனாலும் அவன் இசை வாழும் என்கின்றனர். அவன் இசையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு அவனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். இந்த ஜென்மத்துக்கு அது போதும்.