நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன் வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் பற்றியும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. நான் எழுதாவிடில் (தமிழில்) வேறு யாரும் எழுதவும் மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றுவதால் இந்த உந்துதல்.
கலைஞர் – சீதா நாராயணன். இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன். ஏற்கெனவே இவரைப் பற்றி யாராவது விவரமாக எழுதியுள்ளார்களா என்று கூகிளாண்டவரைக் கேட்டால் – ரஞ்சனி – காயத்ரி இவரிடம் பல பக்திப் பாடல்களைக் கற்றுள்ளனர் என்ற செய்தியை மட்டும் பல தளங்களில் மாறி மாறிக் காட்டினார்.

Vid. Seetha Narayanan
சரி இருக்கட்டும்!
கச்சேரி – 26 டிசம்பர் 2016.
இடம் – சங்கீத வித்வத் சபை.
நேரம் – காலை 9.30.
கச்சேரி 9 மணிக்குத் தொடங்கியிருக்கும். நான் அரங்குக்குச் செல்ல 9.30 ஆகிவிட்டது. நான் சென்ற போது பைரவி ராகத்தில் “ஜனனி மாமவ” பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். பாடுவதில் வல்லினம் மெல்லினம் வெளிப்பட வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு எந்த சங்கதி பாடினாலும் ஆஸ்பத்திரி ஐ.சி.யூ-வின் ஈ.சி.ஜி கிராஃப் போல குரலின் அளவை ஏற்றி ஏற்றி இறக்கும் சகோதர/சகோதரி/தாயாதி/இஷ்ட/மித்ர/பந்து இன்னபிற வகை கோஷ்டி கானப் பாடகர்கள் பொட்டில் அறைந்தார் போல் அவர் பாடிய விதம் அமைந்திருந்தது.
பைரவிக்குப் பின் இரண்டு நிமிடத்துக்கும் குறைவாய் சில கீற்றுகளில் கமாஸும் காம்போஜியும் கலக்காத சுத்தமான ஒரு ஹரிகாம்போஜி. ”ஒக மாட, ஒக பாண” கிருதியை கம்பீரமாய் பாடி வெகு அழகான கோவைகளில் ‘சிரஞ்சீவியில்’ பாடிய ஸ்வரங்கள் என் மனத்துள் சிரஞ்சீவியாகத்தான் இருக்கும். இந்தப் பாட்டுக்கும் மற்ற பாட்டுகளுக்கும் வெகு பொருத்தமாய் மிருதங்கம் வாசித்த ஏ.வி.மணிகண்டனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரை இதற்கு முன் கேட்டதில்லை. கையில் நல்ல நாதம். விறுவிறுப்புக்கு குறைவில்லாத ஆனால் வாத்யத்தை அடிக்காத வாசிப்பு. இடக்கை வலக்கையின் சேர்க்கை அளவாய் அழகாய் பாட்டை மெருகேற்றுகின்றன. ஏ.எஸ்.கிருஷ்ணன் மோர்சிங்கில் தேர்ந்த கை. அவர் அழகைக் குலைக்காமல் வாசித்ததில் ஆச்சரியமில்லை.
அன்றைய பிரதான ராகமாய் காபியை எடுத்துக் கொண்டார். என் அருகில் அமர்ந்திருந்த குழல் வித்வான் ஜெயந்த் நிமிஷத்துக்கு நிமிஷம் பரவசமடைந்து கொண்டிருந்தார். காபியின் காந்தாரத்தில் சில பொறுக்கியெடுத்த பிடிகளைப் பாடிவிட்டு விரைவில் ஆலாபனை மேல்நோக்கி நகர்த்தினார். சீக்கிரம் முடித்துவிடுவார் என்ற நினைத்த போது நிஷாதத்திலும் ஷட்ஜத்திலும் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி எண்ணற்ற ராக அலைகளை ஆர்பாட்டமில்லாமல் எழுப்பிக் காட்டினார். 75 வயதிலும் தார ஷட்ஜத்தில் ஜொலிக்கும் தங்கமாய் ஸ்ருதியை கவ்வும் இந்தக் குரலை அவரது இள வயதில் கேட்டவர்கள் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும்.
“இந்த சௌக்யமனினே ஜெப்பஜால” அடுத்து வந்த பாடல் (அது மட்டுமா?).
“ஜெப்ப ஜால”-வில் ஒரு பிருகா சங்கதி – வைரக் கீற்று. விழுந்த அத்தனை ஸ்வரங்களும் சுத்தமாய் தெளிவாய், ஒவ்வொன்றையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற வகையில் இருந்தன.
ஸாரத்துக்கும் ஸாரம் என்று ஒருபாடலில் தியாகராஜர் ராமனைப் பாடுகிறார். “ஸ்வர ராக ஸுதா ரஸ”-வில் பாடிய நிரவல் ஸ்வரமும் ராகத்தின் ஸாரத்துக்கு ஸாரம்தான். தொடர்ந்த தனியில் திஸ்ரம், கண்டம் என்று கணக்குகளுக்குள் போகாமல் பாடகரின் ஸ்வரப்பிரஸ்தாரம் ஏற்படுத்திய ஏகாந்த சூழலை ஒட்டியே லய வித்வான்களின் வாசிப்பு அமைந்தது.
தனிக்குப் பின் நாசிகாபூஷணி ராகத்தை பல்லவி பாட எடுத்துக் கொண்டார். ரிஷபமும் காந்தாரமும் விவாதியாய் கூடி எழுப்பும் கம்பீரத்தை, சதுஸ்ருதி தைவதத்தின் குழைவுடன் கலந்து கொஞ்சம் பிரதிமத்யத்துக்கே உரிய பெண்மையை தூவினாலும் கூட ராக ஸ்வரூபம் முழுமையாகக் கைகூடாமல் ஆங்காங்கே ஒட்ட வைத்தது போன்ற ஆலாபனைகளையும் நிறைய கேட்கக் கிடைக்கக் கூடம். அன்று சீதா நாராயணன் பாடிய ஒவ்வொரு பிடியும் “நான் நாசிகாபூஷணி” என்று பறைசாற்றிய படி வந்து அரங்கை நிரப்பின. இரண்டு காலங்களில் தானம் பாடி பல்லவிக்குள் நுழைந்தார்.
“கன்யாகுமாரி பிரசித்த நாசிகாபூஷண தாரிணி” என்ற மிஸ்ர ஜம்பை பல்லவி.
எடுத்துக் கொண்ட ராகத்தின் பெயர் அழகாய் வரும்படியும் இந்த வருட சங்கீத கலாநிதியை கௌரவப்படுத்தும் வகையிலும் அமைந்த பயமுறுத்தாத பல்லவி.
நினைவிலிருந்து எழுதுவதில் தவறிருக்கலாம், பல்லவி எடுப்பு நான்கு தள்ளி என்று ஞாபகம். நிரவலில் கீழ் காலம் நிரவல், துரித கால நிரவல் இரண்டையும் விட மத்யம கால நிரவல் பாடுவது சுலபமானதன்று. மத்யம காலத்தை தொடங்கிய சில ஆவர்த்தங்களில் தன்னிச்சையாய் பாடகர் துரித காலத்துக்குள் இழுத்துக் கொள்ளப்படுவதை கச்சேரிகளில் கண்டு கொள்ளமுடியும். இந்தக் கச்சேரியில் விஸ்ராந்தியாய் மத்யம கால நிரவல் கேட்கக் கொடுத்து வைத்தது.
சிறந்த பல்லவிகள் நுணுக்கம் தெரியாத ரசிகனை ராக பாவத்தில் அடித்துச் செல்லும், விஷயம் தெரிந்த ரசிகனை (மாணாக்கனை) திரும்பிப் பார்க்கவும் வைக்கும். மேற்சொன்ன பல்லவியில் நாசிகாபூஷணியின் சௌந்தர்யத்தையும் மீறி லய வேலைபாடுகள் விரிந்து மிளிர்ந்தன.
இரண்டு களை பல்லவியில் திரிகாலமும், திஸ்ரமும் பாடி ஸ்வரம் பாடுவதற்கு முன் ஒரு களையாய் மாற்றிக் கொண்டார். ”கன்யாகுமாரி”, “பிரசித்த” “தாரிணி” ஆகிய மூன்று இடங்களுக்கு அழகான பொருத்தங்களுடன் ஸ்வரம் பாடிய பின், பல்லவியை நாலு களை வேகம், இரண்டு களை வேகம், ஒரு களை வேகம் என்று மீண்டுமொரு திரிகாலம் செய்து காண்பித்தார்.
அன்றைய கச்சேரியில் உச்சம் என்று நான் நினைப்பது ராகமாலிகை ஸ்வரத்தில் அவர் பாடிய ஸாவேரியைத்தான். எதிர்பாரா முத்தாய்ப்பாய் விழுந்த பொருத்தத்தை பல்லவியின் “தாரிணி” என்ற இடத்துக்கு ஸ்வராக்ஷரமாய் முடித்த போது எழுந்த உணர்வை எப்படிச் சொல்லி எழுதினாலும் தட்டையாகத்தான் இருக்கும்.
காலை வேளைக்கு ஒரு ராகம். அந்த ராகத்தில் ஜீவன் கேடாதபடி ஸ்வரப் பிரயோகம், சட்டென்று அகப்பட்டுவிடாத ஒரு லயப் பொருத்தம், அந்தப் பொருத்தம் கொண்டு சேர்க்கும் இடம் பல்லவியின் தொடக்கமல்லாத இடம், அங்கு விழும் சொல்லைப் பிடிக்க வேண்டியது ஸ்வராக்ஷரமாய் என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டு பாட்டு பாடினால் ராக தேவதையைக் கூப்பிட்டி வைத்து வரிவரியாய் கம்பியின் வீரினாற்போல் ஆகிவிடும். ஸ்வானுபூதியாய் பாடகர் தன்னை இழக்கும் போது கலை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் கணத்தில்தான் இத்தகைய அற்புதங்கள் வெளிப்படக் கூடும். பெஹாகும், ரஞ்சனியும் அவர்பாடிய மற்ற ராகங்கள் என்று நினைக்கிறேன்.தாரிணியின் தாக்கம் என்னை அவற்றை ஒழுங்காக கவனிக்க விடவில்லை.
பல்லவிக்குப் பின் பாகேஸ்ரீயில் பாடிய துளஸிதாஸர் பஜனும்,. விருத்தமாய் பாடிய கந்தரலங்காரத்தைத் தொடர்ந்து ஒலித்த “குரலினைத் தருவாய் குருநாதா”-வும் தானும் உருகி தன்னைச் சுற்றியோரையும் உருக்கும் வகை என்னுடன் கேட்ட மற்றவர்கள் கூறிக் கேட்டேன். என் மனம் அந்த தாரிணியின் சௌந்தரியத்தில்தான் இந்த நிமிடம் வரை திளைத்துக் கொண்டிருக்கின்றது.
என்னைக் கவலைகள் தின்னாத அந்தத் திங்கட்கிழமை காலையைப் பற்றி வேறு என்ன சொல்ல?
“இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால?”