Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2017

2005-ல் எழுதியது

என்னைக் கேட்டால் திருவையாறுக்கு அருகில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள் என்பேன். அதிக சிரமமில்லாமல் தியாகராஜ உத்சவத்தில் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் இதைச் சொல்லவில்லை. வெளியூரிலிருந்து விடுப்பெடுத்துக் கொண்டு நாள் முழுவதும் காவிரிக் கரையிலமர்ந்து அங்கொலிக்கும் பாட்டைக் கேட்பவர்களைப் போலல்லாமல், காலை வேளையில் வழக்கம் போல வேலைக்குச் சென்று, கச்சேரிப் பந்தலுக்குச் சாயங்காலத்தில் மட்டும் வந்தால் போதுமே! ‘மட்டும்’ என்கிற வார்த்தை கொஞ்சம் குழப்புகிறதல்லவா?

carnatic-music

விஷயம் இதுதான். சாயங்கால வேளையில் பாடப் பிரபலமான பாடகர்களுக்கு ஸ்லாட் ஒதுக்கப் படுகிறது. காலை வேளையில் இன்னார்தான் பாடுவார் என்று சொல்வதற்கில்லை. உத்சவத்துக்குப் பல வாரங்கள் முன்பே உத்சவக் கமிட்டியிடம் பதிவு செய்து விண்ணப்பித்தால் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ பாட வாய்ப்பளிக்கப்படும். எதை அடிப்படையாகக் கொண்டு பாட வாய்ப்பளிக்கிறார்கள் என்பதை நானறியேன். பாடுபவர்களின் தரத்தை வைத்துப் பார்க்கும் பொழுது விண்ணப்பம் செய்யும் அத்தனை பேருக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. இதைத் தவிர ஸ்பாட்- எண்ட்ரியாக மேடையேறும் மஹானுபாவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். விளையாட்டாகச் சொல்லவில்லை, நிஜமாகவே பந்தலில் இரசிகர்கள் அமரும் இடத்தை விட மேடையிலேதான் கூட்டம் அதிகமிருக்கும். தியாகராஜர் பிரபலமானவருக்கு மட்டும் உரியவரில்லை. சங்கீதம் கற்கும் அனைவருக்கும் குரு ஸ்தானத்தில் வைத்துக் கருதப்படுபவர். அவருக்கு நிகழும் ஆராதனையில் பலர், குறிப்பாகப் பல சிறுவர் சிறுமியர், பள்ளிக்கு விடுப்பெடுத்துக் கொண்டு பாட வருவது சந்தோஷமளிக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் அவர்கள் தியாகராஜருக்குச் செலுத்தும் அஞ்சலி திருவையாற்றிற்கு வருவதாலேயே பூர்த்தியாகி விடுகிறதா? அவரது கீர்த்தனையை ஒழுங்காகப் பாடுவது மட்டும்தான் அவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.

ஒழுங்காகப் பாடுவதென்றால், வார்த்தைகளைச் சரியாகப் பிரித்து, பாடலின் பாவம் கெடாமல் பாடுவது என்றெல்லாம் நான் கூறவில்லை. அப்படியெல்லாம் பல தேர்ந்த வித்வான்களே பாடுவதில்லை. ‘சீதம்ம மாயம்மாவில்’ பராசரர் படும் பாட்டைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒழுங்காகப் பாடுவது என்று நான் குறிப்பிட்டது சங்கீதத்தின் அன்னையான ஸ்ருதியிலிருந்து விலகாமல், தந்தையான லயத்தின் பிடியை விட்டுவிடாமல் பாடுவதேயாகும். சங்கீதம் கற்கும் பலர் இதைக் கூடவா செய்வதில்லை என்று கேட்டால், அதற்கான பதில் ‘இல்லை’ என்பதே.

பெற்றோர்களுக்கு வேண்டுமானால் தம் மக்களின் குரல் யாழையும் குழலையும் விட இனிமையாகக் கேட்கலாம். ஆனால் மற்றவருக்கெல்லாம் ஸ்ருதியின்றித் தாளமின்றி அரங்கேறும் பாடல்கள் நாராசமாகத்தான் கேட்கும். சேஷகோபாலன் சாயங்காலம் பாடிய மேடையில் என் மகன் காலையில் பாடினான் என்று சொல்லிக் கொள்வது பெருமைதான். அப்பெருமைக்கு ஆசைப்படுவதில் ஒன்றும் தவறல்ல. மேடை என்கிற பீடத்திலிருந்து பாடும் பொழுது கீழே அமர்ந்து கேட்பவனை நினைத்துப் பார்ப்பதுதான் தர்மம். எவன் காது சங்கடப்பட்டால் எனக்கென்ன என்ற மனோநிலையில் மேடையேறுதல் பாவத்திலும் பெரிய பாவமாகும். ‘நான் பெருமையடித்துக் கொள்ள மேடையேறவில்லை, என் அஞ்சலியைச் செலுத்தத்தான் பாடுகிறேன்’ என்று சொல்பவர்கள் எல்லாம், மதிய வேளையில் ஆளரவமின்றியிருக்கும் சமாதிக்குச் சென்று உங்கள் அஞ்சலியைச் செலுத்திக் கொள்ளுங்கள்.
மேடையில் main artiste-ஆக இருக்கத்தான் போட்டி. பக்க வாத்தியம் வாசிப்பவர்கள், குறைந்த பட்சம் அரை மணியாவது வாசித்தபின்தான் மேடையை விட்டு இறங்குவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முதலில் 2 கட்டை ஸ்ருதியில் ஒரு இளைஞர் பாடுவார். அடுத்து ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒரு பெண்மணி பாடுவார். இருவருக்கும் ஒரே மிருதங்கத்தை வைத்துக் கொண்டு ஒரே வித்வானே வாசிப்பார். (ஒரு வேளை அவரது மிருதங்கம் இரண்டு ஸ்ருதிக்கும் இடைப்பட்ட ஸ்ருதியில் அமைந்திருக்கலாம்.) இதில் வேடிக்கை என்னவென்றால், ஆராதனையில் பெரும்பாலும் பலர் ‘சோபில்லு சப்தஸ்வர’, ‘நாதோபாசனா’, ‘சொகசுகா மிருதங்க தாளமு’ போன்ற இசையுடன் தொடர்புடைய பாடல்களையே கொலை செய்து கொண்டிருப்பார்கள்.
‘சன் டிவியில்’ வரும் ‘சப்த ஸ்வரங்கள்’ நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான தேர்வில் கலந்து கொள்ளப் பலர் வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் பாட அனுமதித்து விடுகிறார்களா? ஸ்ருதி, தாளம், குரலினிமை எல்லாவற்றிலும் சிறந்திருந்தால்தானே பாட அனுமதிக்கிறார்கள்? வருடம் முழுவதும் நடக்கும் சப்த ஸ்வர நிகழ்ச்சிக்கே இத்தனை தேர்வு இருக்கும் பொழுது வருடம் ஒருமுறை நடக்கும் தியாகராஜர் உத்சவத்தில் இம்முறையை ஏன் நாம் பின்பற்ற இயலாது? இதெல்லாம் நடக்கவேண்டுமெனில், உத்சவக் கமிட்டியில் உள்ளவர்கள் காலை வேளையிலும் சற்றுப் பந்தல் பக்கம் வந்து அங்கு நடைபெறும் கேலிக்கூத்தைக் காண வேண்டும். சாதாரண இரசிகர்களுக்கே இரத்தக் கொதிப்பு ஏற்படும் பொழுது, சங்கீத வித்வான்களான உத்சவக் கமிட்டி உறுப்பினர்கள் இதை நிச்சயம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

வளரும் கலைஞர்களான இளைஞர்களும் ஒன்றுமறியாச் சிறுவர் சிறுமியரையும் கூட நான் மன்னித்து விட்டுவிடலாம். 40 வயதைக் கடந்திருக்கும் சிலர் மேடையேறி விழாவையே அலங்கோலப்படுத்துவது சற்றும் சகிக்க முடியாக் கொடுமையாகும். திருவையாற்றில் நடக்கும் கச்சேரிகளைப் பற்றி விவரிக்கும் போன தலைமுறையைச் சேர்ந்த ‘எல்லார்வி’ தனது ‘அரியக்குடி’ புத்தகத்தில், திருவையாறு இரசிகர்களின் மேன்மையைப் பற்றிச் சிலாகித்து எழுதுகிறர். அக்காலத் திருவையாறு இரசிகர்கள் எப்படியெல்லாம் நல்ல சங்கீதத்தை உற்சாகப்படுத்தினார்கள் என்றும் முதல் தரத்திலிருந்து சற்றே குறையும் சங்கீதத்தை எப்படியெல்லாம் கூச்சலிட்டும் கையறைந்தும் மேடையை விட்டு விலக்கினார்கள் என்றும் எழுதுகிறார். இன்றைய நிலையில் அந்த இரசிகர்களின் இரைச்சல் எல்லாம் பலனளிக்காமல் போய் அவர்கள் மேடைப்பக்கமே தலை வைத்துப் படுக்காத நிலையில் உள்ளார்கள். நானும் இந்த வருடம் ஆராதனையில் சாயங்கால வேளையில் பாட்டுக் கேட்கப் போனால் போதுமென்று முடிவெடுத்து விட்டேன். காலை வேளையை எப்படிக் கழிப்பாய் என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கவே இருக்கிறது கல்வெட்டுகளும் சிற்பங்களும் நிறைந்த, அப்பருக்குக் கைலாயக் காட்சி கிடைத்த இடமான, ஐயாறப்பன் கோயில். காலை வேளையைக் கோயிலில் ஓட்டிவிட முடியாதா என்ன?

Read Full Post »

2014-ல் தினமலரில் பதினைந்து கட்டுரைகள் டிசம்பரில் எழுதினேன். அவற்றை இங்கு வெளியிடவில்லை. இன்று கல்யாணராமனின் பிறந்த நினைவு நாளை சாக்காக வைத்து அவரைப் பற்றி எழுதியதை இங்கு வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர் எஸ் கல்யாணராமன்

Thanjavur S Kalyanaraman

முன்னோடி கலைஞர்களில் சிலர் அவர்கள் பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னால் பிறந்துவிடுவதுண்டு. அதனாலேயே அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் கிடைக்காமல் போய்விடுகிறது. இத்தகைய கலைஞர்களே, “அவர் மறைந்தாலும் அவர் இசை சிரஞ்சீவியாய் இருக்கும்”, என்ற சம்பிரதாய மொழிக்கு அர்த்தம் அளிப்பவர்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளுள் முதன்மையானவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்.

கல்யாணராமனைப் பார்த்தேயிராத இன்றைய இளைஞர்களுக்கு அவருடைய சங்கீதமே ஆதர்சமாக விளங்குகிறது. மனத்தின் கற்பனை ஓட்டங்களுக்கு மனிதனின் குரல் ஓரளவுக்குத்தான் ஈடு கொடுக்க முடியும். கல்யாணராமனின் ஆய்வு நோக்கும் தீரா முயற்சியும் மனிதக் குரலின் சாகஸங்களுக்கு எல்லையேயில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.

புதுமைக்குப் பெயர் போன ஜி.என்.பி வழியில் வந்த கல்யாணராமன், தன் குருவின் பாணியை அப்பட்டமாய் பின்பற்றாமல் இள வயது முதலே தனக்கென வழியை வகுத்துக் கொண்டார். இசையை தன் வளர்ச்சிக்கான கருவியாய் கருதாமல் தன்னை இசையின் வளர்ச்சிக்கான கருவியாய் நினைத்துக் கொண்ட கல்யாணராமனின் விஸ்வரூபம் அவர் சமகாலத்தினவருக்குக் கண்கூச வைத்தது.

ஸுசரித்ரா, சந்திரஜோதி போன்று யாரும் தொட்டிராத விவாதி ராகங்களைக் கையாளுதல், நுட்பமான தாள அமைப்பில் நடை பல்லவிகளைப் பாடுதல், பிரமிக்க வைக்கும் கிரகபேதங்களை செய்தல், மேளகர்த்தா ராகங்களில் பஞ்சமத்தைத் தவிர்த்து இரு மத்யமங்களையும் வைத்துக் கொண்டு ”பஞ்சம வர்ஜ த்விமத்யம ராகங்கள்” என்று ஒரு புதிய ராக வகையயே உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்தல் என்று கல்யாணராமன் புகுத்திய புதுமைகள் இன்றுதான் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளப்படுகின்றன.

ஆழ்வார் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதிகள் போன்றவற்றை கல்யாணராமனின் அரிய ராகத்தில் அமைந்த அற்புத மெட்டுக்கள் அலங்கரிக்கின்றன. மாயையை பழித்தல் என்ற பாரதி பாடலுக்கு ஸுமனிஸரஞ்சனியின் கல்யாணராமன் அமைத்திருக்கும் மெட்டின் அழகை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலுவில்லை. கேட்டுத்தான் உணர வேண்டும். இன்று பிரபலமாய் விளங்கும் “கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி” பாடலின் மெட்டும் கல்யாணராமனின் கைவண்ணம்தான்.

இசை கற்பிப்பதில் கல்யாணராமன் ஒரு துரோணர்தான். தன்னிடம் வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதால் மட்டுமல்ல! தன் இசையால் தன்னைப் பார்த்தேயிராத சந்ததியனரையும் ஏகலைவர்களாய் மாற்றுவதால்!

Read Full Post »

நான் எழுதிய பல கட்டுரைகள் எனக்கே தேவைப்படும் போது கிடைப்பதில்லை. முடிந்த போது கிடைப்பவற்றை இங்கே வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன். ஏற்கெனவே படித்தவர்கள் மீண்டும் படித்துத் துன்புற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இன்று ஜி.என்.பி-யின் பிறந்த நாள். அதை சாக்காக வைத்து அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையை வெளியிட்டுக் கொள்கிறேன். இந்தக் கட்டுரை பெற்ற எதிர்பாரா வரவேற்பே என்னை மேலும் எழுதவும், பின்னால் நூல் எழுதக் கூட செலுத்தியது எனலாம். அந்த வகையில் எனக்கு மிகவும் நெருக்கமான கட்டுரை. இப்போது படித்துப் பார்த்தால் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது என்றாலும் அதிகம் மாற்றாமல் சில தகவல் பிழைகளை மட்டும் நீக்கி வெளியிடுகிறேன். வாழ்க ஜி.என்.பி புகழ்.

cover_img-1

2006 செப்டம்பர் 24-ஆம் தேதி, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இசைக் கருத்தரங்கில் ஜி.என்.பி-யைப் பற்றி பேச ஒரு வாய்ப்புக் கிட்டியது. அக்கருத்தரங்கில் வெளியான ஆய்வுக் கோவையில் இக்கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. டபுள் லைன் ஸ்பேசிங்கில் ஐந்து பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டியிருந்த்தால் பல விஷயங்களை மேலோட்டமாகவே இக்கட்டுரை தொடுகிறது. By no standards this could be considered a research article. Just an attempt to show the tip of the ice berg.

கர்நாடக இசைக் கச்சேரி முறையை தமிழுக்கு ஒப்பிட்டோமெனில், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் கச்சேரிகள் தொல்காப்பியத்திற்கிணையாகும். தொல்காப்பியம் படித்தவர் பலரிருப்பினும், காலத்தை கடந்து நிற்கும் வெண்பாக்களையும் விருத்தங்களையும் அகவல்களையும் படைத்திருப்பவர் சிலரே. அதே போல், அரியக்குடி இராமானுஜர் ஐயங்கார் அமைத்துக் கொடுத்த கச்சேரி முறையை பின்பற்றியவர் பலரெனினும், இசையுலகில் என்றுமழியாச் சுவடை விட்டுச் சென்றவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் முதன்மையாக விளங்குபவர் ‘ஜி.என்.பி’ என்று பரவலாய் அழைக்கப்பெற்ற கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.

ஜி.என்.பி என்னும் இசையுலக இளவரசரின் தோற்றம், ஜி.வி.நாராயணசாமி ஐயர் விசாலம் அம்மாள் தம்பதியினரின் வீட்டில், 1910-ஆம் வருடம் ஜனவரி 6-ஆம் நாள் நிகழ்ந்தது. பார்த்தசாரதி சங்கீத சபையின் காரியதரிசியாகவும் ம்யூசிக் அகாடமியின் ‘experts commitee’ உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த நாராயணசாமி ஐயரின் வீட்டில், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பல்லடம் சஞ்சீவ ராவ், பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார் போன்ற சங்கீத ஜாம்பவான்களின் கூட்டம் எப்பொழுதும் குழுமியிருக்கும். இச்சூழலில் வளர்ந்த ஜி.என்.பி-யின் மனம் சங்கீதத்தின்பால் ஈர்க்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை

1957-ஆம் வருடம் வெளியான ‘My First Concert’ என்ற ஜி.என்.பி-யின் கட்டுரையில் (தமிழாக்கம் பின்வருமாறு), ” நான் பிறந்த நாள் முதல் எனைச் சுற்றியிருந்த சூழல் சங்கீத மயமாகவே இருந்தது. இதனால் எனது சங்கீத ஞானமும் அதன் பால் இருந்த ஈர்ப்பும் கிளைவிட்டு நாளுக்கு நாள் வளர்ந்தபடியிருந்தது. என் வீட்டிலிருந்தபடியே அற்புதமான சங்கீதத்தைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. நல்ல சங்கீதத்தில் ஊறியதன் பயனாய் சஹானா, செஞ்சுருட்டி, பேகடா, சாவேரி போன்ற இராகங்களை பிழையின்றி பாட முடிந்தது. ஒரு குருவிடம் சென்று முறையாகப் பயிலாவிடினும் எனக்கு ஸ்வர ஞானம் சிறு வயதிலேயே கைக்கூடியது. இதற்குக் காரணம் பெரியோர்களின் ஆசியே என்பது என் கருத்து.’ என்கிறார்.

ஜி.வி.நாராயணசாமி ஐயர் தனது மகன் வழக்கறிஞராவதையே விரும்பினாரெனினும் ஜி.என்.பி-யிடமிருந்த சங்கீத தாகத்தை உணர்ந்தவராய் சங்கீத சிக்ஷையுமளித்தார். அந்நிலையில், அவர் குடியியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் வயலின் வித்வான் மதுரை சுப்ரமணிய ஐயர் குடியேற, அவரிடமும் சில காலம் ஜி.என்.பி சங்கீதம் பயின்றார்.

1928-ஆம் வருடம், மயிலை கபாலீசுவரர் கோயில் வசந்த உத்சவத்தில் ஏற்பாடாகியிருந்த முசிறி சுப்ரமண்ய ஐயரின் கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகிவிட, அக்காலத்தில் இசைத் தொண்டில் ஆழ்ந்திருந்த ஏ.கே.இராமசந்திர ஐயரும் மதுரை சுப்ரமணிய ஐயரும், நாராயணசாமி ஐயரிடம் ஜி.என்.பி-யின் கச்சேரிக்கு அனுமதியளிக்க வேண்டினர். நாராயணசாமி ஐயர் முதலில் சிறிது தயங்கினாலும், பின்பு அனுமதியளித்தார். சங்கீத வித்வானாவதையே லட்சியமாய் கொண்டிருந்த ஜி.என்.பி-க்கு இவ்வாய்ப்பு மகிழ்வளித்தாலும், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்ற ஜாம்பவானின் இடத்தை தன்னால் நிரப்ப முடியமா, என்ற அச்சமும் கூடவேயிருந்தது. ஜி.என்.பி, மானசீக குருவாக உருவகித்திருந்த அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் இசையுலகப் பயணம், திருப்பரங்குன்றத்தில் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை ஏற்பாடு செய்திருந்த மதுரை புஷ்பவனத்தின் கச்சேரி ரத்தான பொழுது, அங்கிருந்த இளைஞரான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி புகழின் உச்சியை அடைய வைத்த நிகழ்வை, மதுரை சுப்ரமண்ய ஐயர் எடுத்துரைத்தவுடன், ஜி.என்.பி-யின் தயக்கம் தளர்ந்து கச்சேரிக்குத் தயாரானார். அக்கச்சேரியைக் கேட்ட கே.எஸ்.முத்துராமன் தனது புத்தகத்தில், “ஜி.என்.பி பாடிய பந்துவராளியும், பைரவியும், அடாணாவும் ஒரு மஹாவித்வானின் இசை சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டின”, என்கிறார்.

ஜி.என்.பி என்று நினைத்ததும் மனதில் முதலில் தோன்றுவது அவரின் கந்தர்வ குரல்தான். ஆழ்ந்த சங்கீத ஞானமும், அதீத கற்பனையும், அக்கற்பனையில் தோன்றுவதையெல்லாம் வெளிக்கொணரக் கூடிய அதிசயக் குரலும் கொண்ட அபூர்வ கலவையே ஜி.என்.பி. இக்கூற்றிற்கு அவர்தன் இளம் வயதில் கொடுத்திருக்கும் ‘வாசுதேவயனி’ கிராம்போன் ரிக்கார்டு ஒன்றே சான்று. வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றும் மக்களிடையில் பிரபலாமாக இருக்கும் இப்பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை. கல்யாணி இராகம் ஒரு பிரவாகம் போன்றது. அதன் முழு ஸ்வரூபமும் பல மணி நேரம் பாடினால் கூட முழுமையாய்க் கொண்டு வருவது துர்லபம். பத்து நிமிடத்திற்குள், ஒரு மின்னல் வேக ஆலாபனை, மத்யம கால கீர்த்தனை, ஸ்வர ப்ரஸ்தாரம் எல்லாம் பாடி, கேட்பவர் மனதில் நிறைவை ஏற்படுத்தியிருக்கும் ஜி.என்.பி-யின் அந்த ஒரு வெளியீடே அவரின் இசையாற்றலுக்கு தக்கச் சான்று.

இன்று கேட்கக் கிடைக்கும் ஜி.என்.பி-யின் கச்சேரிகளை பலமுறை அலுக்காமல் கேட்டிருப்பவன் என்னும் முறையில், அவரது கச்சேரியைப் பற்றிய சில குறிப்புகள் பின் வருமாறு. கச்சேரிகளில் ‘களை கட்டுதல்’ என்றொரு பதம் உண்டு. அதை விளக்க முயல்வது வீண் முயற்சி. அதன் பொருள் உணர ஜி.என்.பி-யின் கச்சேரியின் முதல் உருப்படியைக் கேட்டால் போதும். அவரது கச்சேரிகளில் இன்று நமக்கு அதிகம் கேட்கக் கிடைப்பது அவரது கடைசி 10 வருட வாழ்வில் பாடிய கச்சேரிகளே. அவற்றை மட்டும் ஆராய்ந்தால், விறுவிறுப்பான வர்ணம் அல்லது ‘யோசனா’, ‘தெலிசி ராம’ போன்ற மின்னல் வேகக் கீர்த்தனை அல்லது ‘வாதாபி கணபதிம்’ போன்ற மத்யம காலக் கீர்த்தனை, அல்லது சஹானா போன்ற ரக்தி ராகத்தில் அமைந்த ‘ஈ வசுதா நீவண்டி’ போன்ற கீர்த்தனை, என்று பல வகைகளில் கச்சேரி தொடங்கும். எப்படித் தொடங்கினும் கச்சேரியைக் களை கட்டும்படிச் செய்வது அவரது தனிச் சிறப்பாகும்.

அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் பத்ததியின் படி மத்யம காலக் கீர்த்தனங்களே ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் நிறைந்திருக்கும். சவுக்க கால கீர்த்தனங்களும் கச்சேரியின் விறுவிறுப்பை குறைத்திடா வண்ணம் இடம் பெறும். ஜி.என்பி-யின் கற்பனையைப் பறைசாற்றும் வகையில் ஒரே இராகத்தின் ஆலாபனை கச்சேரிக்கு கச்சேரி அல்லது அவர் பாடும் கீர்த்தனத்திற்குக் கீர்த்தனம் மாறுபடும். அவரது ஆலாபனைகள் இரசிகரைக் குழப்பாமல், முதல் பிடியிலேயே இராக ஸ்வரூபத்தை தெளிவாகக் காட்டிவிடும். பல பிரபலமான இராகங்களில் புதிதாய் சில பிரயோகங்கள் பாடியிருப்பதும் (உ.தா கல்யாணி, காம்போஜி ராக ஆலாபனைகள்), அந்நாளில் புழக்கத்திலில்லா இராகங்களை புழக்கத்திற்கு கொண்டு வந்திருப்பதும் (உ.தா: மாளவி, செஞ்சு காம்போஜி, காபி நாராயணி, டக்கா, தீபகம்) ஜி.என்.பி-யின் பல இசைத் தொண்டுகளுள் குறிப்பிடத்தக்கவை. வாழ்நாள் முழுவதும் தன்னையொரு மாணவனாகவே கருதிக் கொண்ட ஜி.என்.பி, தனது கடைசி காலம் வரை புதிய கீர்த்தனங்கள் கற்றபடியிருந்தார். ‘சோபில்லு’, ‘சரஸ சாம தான’, ‘மறுகேலரா’, ‘தாமதமேன்’, ‘ப்ரோசேவா’, ‘மா ரமணன்’ போன்ற பாடல்களைப் பிரபலப் படுத்தியதுடன், பல கீர்த்தனங்களில் நிரவல், கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பல புதுமைகள் புரிந்துள்ளார். உதாரணமாக, ‘ ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ பாடலில் பெரும்பான்மையானவர்கள் நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் இடம் ‘வாசவாதி சகல தேவ’ என்பதாகும். ஜி.என்.பி-யின் நுண்ணறிவு ‘தாபத்ரய ஹரண’ என்னும் இடத்தில் ‘தா பா’ என்னும் ஸ்வராக்ஷரப் பிரயோகம் ஒளிந்திருப்பதைவுணர்ந்திருக்கிறது. இதே போல ‘மீனாக்ஷி மேமுதம்’, ‘நிதி சால சுகமா’ போன்ற பாடல் நிரவல்களிலும் ஜி.என்.பி-யின் கற்பனைத் திறன் உள்ளங்கை நெல்லிக்கனி. கல்பனை ஸ்வரங்கள் பாட அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தின் பொருத்தம் பலரின் பாராட்டைப் பெற்றவொன்று. ஜி.என்.பி-யின் சங்கீதத்தில் லயத்தில் உறுதியான பிடியிருப்பினும், ஸ்வரம் பாடும் பொழுது சர்வ லகு முறையையே பின்பற்றப் பட்டு இராக பாவம் கெடா வண்ணம் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும்.

ஜி.என்.பி-யின் இசையுலகிற்குப் பல புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்திருப்பினும், அவற்றுள் குறிப்பிடத்தக்கது ‘ஸ்ருதி பேதம்’ அல்லது ‘கிரஹ பேதம்’ ஆகும். நமது நாட்டின் இசை வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஒரு தாய் இராகத்தின் கிரஹ பேதத்திலிருந்து பிறந்தவையே பல இராகங்கள் என்று இலக்கியங்களின் மூலம் தெரிய வருகிறது. காலப் போக்கில் வழக்கொழிந்து போன இம்முறையைக் கச்சேரியில் ஜி.என்.பி பிரயோகித்த பொழுது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஜி.என்.பி-யின் செயலில் தகுந்த நியாயம் இருப்பதாக முத்தையா பாகவதர் தலைமையில் குழுமியிருந்த அறிஞர் குழு முடிவு கூறியது. ஒரு ராகத்தில் ‘ஸ்ருதி பேதம்’ செய்யும் பொழுது அதுவரை உருவாக்கிய பாவம் கெடாமல் இருப்பது அவசியம். இக்கம்பி மேல் நடக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்ற முதல் கலைஞர் ஜி.என்.பி எனலாம்.

ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் பிரதான உருப்படியாக ‘ராகம் தானம் பல்லவி’ பெரும்பாலும் இடம் பெறும். பெரும்பாலும் இப்பகுதிக்கு முன் ‘நெனருஞ்சினானு’, ‘விடஜால’, ‘ராமசந்திரம் பாவயாமி’ போன்ற அதி துரித கீர்த்தனை இடம் பெறும். கச்சேரி களை கட்டி, குரலும் நல்ல பதத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜி.என்.பி பல பகுதிகளாய் பிரித்துக் கொண்டு ஒரு இராகத்தை ஆலாபனம் செய்வது வழக்கம்.

ஓவியர், தான் வரையப் போகும் விஷயத்தை சில கீற்றுகளாய் முதலில் நிரப்புவது போல, விஸ்தரிக்கப்படும் இராகத்தின் ஸ்வரூபம் சில கீற்றுகளில் காட்டப்படும். இரண்டாம் கட்ட ஆலாபனையில் மந்திர ஸ்தாயியில் உள்ள பிரயோகங்களில் கவனம் செலுத்தப்பட்ட, நாதஸ்வரப் பாணியில் பல அழகிய ஸ்வரக் கோர்வைகள் கோக்கப்படும். மூன்றாம் கட்டமாக தார ஸ்தாயிப் பிரயோகங்கள் இடம் பெறும். அவரது சங்கீத வாழ்வின் உச்சியில் இருந்த சமயத்தில் தார ஸ்தாயி தைவதம், நிஷாதம் போன்ற எட்டாக் கனிகளைக்கூட எட்டிப்பிடிக்கும் அற்புதக் குரலாய் அவர் குரல் விளங்கியதென்று அவர் கச்சேரிகளைக் கேட்ட பலர் கூறுகின்றனர். தார ஸ்தாயி ப்ரயோகங்களைத் தொடர்ந்து குரலை முதலில் பம்பரமாய் சுழலவிட்டு, அதன் பின் ராட்டினமாய் மூன்று ஸ்தாயிகளிலும் சுழலவிட்டு, கடைசியில் ஓர் சூறாவளி போல் ராகத்தின் பல இடங்களில் சஞ்சரித்து கேட்பவர் மனதில், அந்த ராகத்தில் பாட இனி ஒன்றுமில்லை என்னும் நிறைவு ஏற்படும்படியான சூழலை உருவாக்கிவிடும். குறைந்த பட்சம் 40 நிமிட ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானமும் அதன் பின் பல்லவியும் பாடுவார். பல்லவிக்கு எடுத்துக் கொள்ளும் இராகங்களில் கல்யாணி, தோடி, காம்போஜி, பைரவி போன்ற கன இராகங்கள், தேவ மனோஹரி, சஹானா, ஆந்தோளிகா போன்ற அதிகம் பாடப்படாத இராகங்கள் என்று பல வகைகளில் பாடியிருக்கிறார். பல்லவியமைப்பும் 2 களை, 4 களை போன்ற கடினமான அமைப்பில் பாடியிருப்பினும் பல ஒரு களை பல்லவிகளும் பாடியிருக்கிறார். ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸ்தாரம் அனைத்துமே இராக ஸ்வரூபத்தை வெளிக் கொணரும் பொருட்டேயிருக்கும். பல்லவிக்கு ஸ்வரம் பாடும்பொழுது வரும் இராகமாலிகை ஸ்வரங்களுக்கு இரசிகர்களிடையில் அதீத வரவேற்பிருந்தது.

ஜி.என்.பி கச்சேரிகளில், பல்லவியைத் தொடர்ந்து வரும் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. பல இராகங்களில் அழகிய படப்பிடிப்பாய் விளங்கும் விருத்தங்கள், ஸ்லோகங்கள் தவிர அவரே மெட்டமைத்த ‘திக்குத் தெரியாத காட்டில்’, ‘சொன்னதைச் செய்திட சாகசமா’, போன்ற துக்கடாக்கள் இடம் பெறும், கச்சேரி முடியும் பொழுது பாமரரும் பண்டிதரும் மன நிறைவுடன் செல்வதென்பதுறுதி.

நல்ல சாரீரமும் கவர்ச்சியான முகவெட்டும் கொண்டிருந்த ஜி.என்.பி, திரைப்படத்துறையில் ‘சகுந்தலை’, ‘ருக்மாங்கதன்’, ‘பாமா விஜயம்’, ‘உதயணன் வாசவதத்தா’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் பாடியும் பெரும் பிராபல்யம் அடைந்தார். இவரது வாழ்வில் பல கௌரவங்களைப் பெற்றிருப்பினும் 1958-ஆம் வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை இவருக்கு வழங்கி மியூசிக் அகாடெமி பெருமை தேடிக் கொண்டது. வாகேயக்காரராய் ஜி.என்.பி இசைக்கு ஆற்றிய தொண்டு அளப்பெரியதாகும். ‘சிவ சக்தி’, ‘அம்ருத பேஹாக்’ போன்ற அரிய இராகங்களிலிம், பிரபலமான இராகங்களில் சில அரிய பிரயோகங்கள் உபயோகித்தும், மிஸ்ர ஜம்பை போன்ற சுட்பமான தாள அமைப்பிலும் அவர் அமைத்திருக்கும் கீர்த்தனங்கள் இன்று பரவலாய் பாடப்படுகின்றன. ஜி.என்.பி, பாடகராக மட்டுமல்லாமல் சங்கீத ஆச்சாரியராகவும் மிகவும் பிரபலமாக இருந்தவராவார். அவரது பாணியை நிலை நிறுத்தும் வண்ணம் எம்.எல்.வி, திருச்சூர் இராமசந்திரன், தஞ்சாவூர் எஸ், கல்யாணராமன் போன்ற சிஷ்யர்களை இசையுலகிற்குத் தந்த பெருமையும் ஜி.என்.பி-யைச் சேரும். பாடகராய், வாகேயக்காரராய், குருவாய், நடிகராய் பல சாதனை புரிந்த ஜி.என்.பி-யின் வாழ்க்கை 55 வருட காலம் மட்டுமேயிருந்தது இசையுலகின் துர்பாக்யம் ஆகும்.

Read Full Post »