2014 டிசம்பரில் தினமலரில் வெளியான கட்டுரை
கச்சேரி மேடையில் சோபிக்கும் கலைஞர்கள் எல்லோருக்கும் சங்கீத இலக்கணத்தில் ஆழ்ந்த தேர்ச்சி இருக்கக் கூடும் என்று சொல்வதற்கில்லை. இலக்கண நூல்களில் ஆய்வாளர்களாக விளங்குபவர்கள் எல்லோரும் தேர்ந்த கச்சேரி வித்வான்களாக இருப்பதில்லை. செவ்வியல் இசையில் ஆய்வாளர்களை எடுத்துக் கொண்டால் சமஸ்கிருத நூல்களில் தேர்ச்சி உடையவர்களுக்கு பழந்தமிழ் நூல்களில் பரிச்சியம் இருப்பதில்லை. தமிழிசை ஆய்வு செய்பவர்களுள் பலருக்கு வடமொழித் தேர்ச்சி இருப்பதில்லை. மேற்சொன்னவற்றை ஒருசேரப் பெற்றவர்களைப் பற்றி நினைக்கும் போதே தொன்றும் முதல் பெயர் டாக்டர் எஸ்.இராமநாதன்.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் ‘சங்கீத பூஷண’ பட்டயப் படிப்பில் சேர்ந்ததன் மூலம் திருவையாறு சபேஸ ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்களிடம் தன்னைப் பட்டைத் தீட்டிக் கொண்ட எஸ்.இராமநாதன், இள வயது முதலே இசை ஆய்விலும் முனைப்போடு செயல்பட்டு வந்தார். வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ந்து விளங்கிய அவரது கச்சேரி வாழ்க்கையோடு ஆய்வு வாழ்க்கையும் இரண்டரக் கலக்க அவர் பணியாற்றிய பல்வேறு பல்கலைகழகங்கள் பெரிதும் உதவின.
1950-களில் இராமநாதன் வெளியிட்ட “சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்” என்கிற நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் வெஸ்லியன் பல்கலைகழகத்தில் இந்தத் தலைப்பிலேயே ஆய்வினைத் தொடர்ந்து முனைவர் பட்டத்தினையும் பெற்றார். ஐ.நா சபையில் அவருக்குக் கிடைத்த கச்சேரி வாய்ப்பை அவரது இசை வாழ்வின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதலாம்.
இந்தியா திரும்பிய இராமநாதன் கர்நாடக இசை பயிற்றுவிப்பவர்களுள் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டார். அந்த நிலையிலும் தன்னை ஒரு முதல் நிலை மாணவனாகக் கருதி புதியனவற்றை தினம் தினம் திரட்டித் தொகுத்தது அவரது சிறப்பம்சமாகும்.
இராமநாதன் எவ்வளவுக்கு எவ்வளவு சிறந்து கலைஞரோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த ரசிகர். 22 ஸ்ருதிகள், ராக லட்சணங்கள் போன்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைகள் சங்கீத விற்பன்னர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றால் தியாகராஜருடன் ஒரு நாள், பாமரர்க்கு இசை போன்ற தலைப்புகளில் அவர் கொடுத்த விரிவுரைகளை சாதாரண ரசிகர்கள் இன்றளவும் நினைவில் வைத்துள்ளனர்.
பி.ராஜம் அய்யருடன் சேர்ந்து சுப்பராம தீட்சிதரின் சங்கீத சம்பிரதாய பிரதர்ஷணியை தமிழாக்கம் செய்தார். பாரதியாரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் போன்ற பல தமிழ்ப் பாடல்கள் பாதுகாக்கப்பட்டு பரவ எஸ்.இராமநாதன் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பெரியது.
எத்தனையோ பட்டங்கள் தேடி வந்து அலங்கரித்த போதும், எந்தவித படாடோபமும் இன்றி சீனிவாஸ சாஸ்திரி ஹாலில் அமர்ந்தபடி முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞரை ஊக்கிவிக்கும் ரசிகராய் இருப்பதையே பெரிதும் விரும்பினார். சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய இராமநாதனின் பெயர் இன்று அவருடைய நூல்களாலும் அவர் உருவாக்கிய மாணவர்களாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டு வருகிறது.
பி.கு: டாக்டர் ராமநாதனின் நூற்றாண்டு விழா நாளை மாலை 5.00 மணிக்கு சென்னை வாணி மஹாலில் நடை பெறுகிறது.