வைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி
– லலிதாராம்
கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்களல்ல. வரலாற்றைப் புரட்டினோமெனில், கோயில்களை ஒட்டியே நம் வாழ்க்கைமுறை இருந்ததையும், பலதுறைகள் கோயில்களால் பாதுகாக்கப்பட்டதையும், பெருகி வளர்ந்ததையும் உணரமுடியும். குறிப்பாக நாட்டியமும், இசையும் “கோயில் கலைகளாகவே” வளர்ந்து செழித்தன. காலப்போக்கில் எண்ணற்ற சமூக மாற்றங்கள் நிகழந்த போதும், பாரம்பரிய இசை பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் கோயில்கள் ஊடாகவே தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்றது.
இசைக் கருவிகளின் பரிணாம வளர்ச்சியை நோக்கினால், பெரும்பாலான கருவிகளின் தோற்றம் அறிவிப்பின் பொருட்டே நிகழ்ந்திருப்பதை உணர முடியும். (உதா: ஊர்வலத்தின் வருகையை குறிக்கும் முரசொலி, நிகழ்வைக் குறிக்கும் சங்கின் முழக்கம் முதலியன). நாட்பட இந்த கருவிகளும், அவை எழுப்பும் இசையும் மேம்பட்டு, ஒரே மாதிரியாய் ஒலிக்கும் ஒலிகள் அழகிய இசையாகி வெளிப்பட ஆரம்பித்தன.
நாகஸ்வரத்தின் வரவு கோயில் இசையை உச்சத்தில் இட்டது. ”நித்ய கர்மா” என்று வழங்கப்படும் கோயிலின் தினசரி வழிபாட்டு காரியங்கள் அனைத்திலும் நாகஸ்வரத்தின் பங்கு இருந்தது. இதத் தவிர விசேஷ பூஜைகள், விழாக் காலங்கள் போன்றவற்றிலும் இசை முக்கிய இடம் வகித்தது. இதனால், நாகஸ்வர கலைஞர்கள் தங்கள் கலையை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் கற்பனையை வெளியிடுவதற்கும் கோயில் களங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்தன. காலப்போக்கில் வழிபாட்டு முறைகளை ஒட்டி நாகஸ்வர வாசிப்பு முறைகளும் உருவாகின.
உதாரணமாக, ஆண்டுதோரும் நடக்கும் கோயில் திருவிழாகளில், ஒவ்வொரு நாளும் – அந்த நாளுக்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப, ஊர்சவ மூர்த்தி நிற்கும் இடத்துக்கு ஏற்ப என வெவ்வேறு ராகங்களையோ, கீர்த்தனைகளையோ அல்லது மல்லாரி, உடற்கூரு போன்ற உருப்படிகளையோ நாகஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளின் எழுச்சியும், ரேடியோ மற்றும் திரைப்படங்களின் வருகையும், கோயில் கலைகளை பொதுமக்களின் பொழுதுபோக்கு வடிவத்தின் முதன்மை இடத்திலிருந்து நீக்கின, பாரம்பரிய இசையும் கிராமபுரங்களில் இருந்து நகர்ந்து நகரத்தில் உருவான சபைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது.
இசையை வாழ்வாக எடுத்துக் கொள்ள நினைத்தவர்களை நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். தமிழ் சமூகம் கோயில் சார்ந்த சமூகம் என்ற நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது. கோயில்கள் ஆன்மீகத் தலங்களாகவும், சுற்றுலாத் தளங்களாகவும் மாறிவிட்டன. இன்று கிராமப்புறங்களில் வாழும் நாகஸ்வர கலைஞர்கள், மின்னியப் பழம்பெருமையின் எஞ்சிய நட்சத்திரங்களாக வாழ்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர்க் கோயில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வரக் குழுவினரை, இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு எந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.
கோயில்களின் உருவான இசை மரபுகள் பல இடங்களில் சுவடழிந்துவிட்டாலும், சிதம்பரம் போன்று ஒரு சில கோயில்களில் இன்றும் தப்பிப் பிழைத்துள்ளன.
நாகஸ்வர மரபில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் தனித் தனி மரபுகள் வளர்ந்து வந்தன. சைவம், வைணவம் – இரண்டு பிரிவினரும் முக்கியமாய் கருதும் தலம் சிதம்பரம். அதனால், இரண்டு வகை நாகஸ்வர மரபுகளையும் இங்கு காண முடியும். புறப்பாடு போன்ற சமயங்களில் வாசிக்கப்படும் மல்லாரி மற்றும் தினப்படி நிகழ்வுகளைக் குறிக்கும் இசை உருப்படிகள் பெரும்பாலும் இரண்டு மரபுகளிலும் ஒன்றுதான். இவ்விரு மரபுக்குமுள்ள மாறுபாடுகளை வருடாந்தர உற்சவங்களில் காணலாம்.
2013-ல் சைவ நாகஸ்வர மரபை முழுமையாக பதிவு செய்து, ”நாதமும் நாதனும்” என்ற ஆறு மணி நேர டிவிடியாக வெளியிட முடிந்தது. இந்த முயற்சி இந்தத் துறை விற்பன்னர் திரு.பி.எம்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் பதிவு செய்யப்பட்டது. இந்த மரபைப் பற்றிய விரிவான அறிமுகமும் இந்த டிவிடியில் இடம் பெற்றுள்ளது. கோயிலில் நித்யபடிக்கு உரிய உருப்படிகளையும், பதினொரு நாள் திருவிழாவின் போது வாசிக்க வேண்டிய உருப்படிகளையும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆஸ்தான வித்வான் ஆச்சாள்புரம் திரு. சின்னத்தம்பி அவர்கள் வாசித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=xKRTA819rVo
சிதம்பரம் ராதாகிருஷ்ணன் பிள்ளை போன்ற ஜாம்பவான்களிடம் குருகுல வாசம் செய்து, தன் இளமைக் காலம் முதல் சிதம்பரம் கோயிலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு வாசித்து வரும் சின்னத்தம்பி பிள்ளைக்கு இன்று வயது தொண்ணூறு.
https://www.youtube.com/watch?v=_-fnp18VeD8
சைவ மரபை ஆவணப்படுத்தைப் போல வைணவ மரபையும் இவர் வாசிப்பில் ஆவணப்படுத்தாவிடில், ஒரு நெடிய பாரம்பரியத்தை முற்றிலும் தொலைக்கும் அபாயமுள்ளது.
இந்த முயற்சியில், நவராத்திரியை ஒட்டி நடக்கும் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் உற்சவத்தில் வாசிக்கப்படும் நாகஸ்வர மரபையும் முழுமையாகப் பதிவு செய்ய விழைகிறோம். சிதம்பரத்தில் நடப்பது போன்ற ஊர்சவத்தை வேறொரு கோயிலில் நடத்தி, பத்து நாட்களில் வாசிக்கப்படும் இசையை ஆவணப்படுத்த உள்ளோம். சைவ மரபில் செய்தது போலவே, இந்த ஆவணப்படுத்தலும் திரு. பி.எம்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறும். இந்தத் துறை வல்லுனர்களின் விளக்கங்களும், வழிகாட்டல்களும் தக்க இடங்களில் இசையினூடே இடம் பெரும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த பின்வரும் செலவுகளைக் எதிர்கொள்ள வேண்டியுள்ளது:
1. மங்கல வாத்ய குழுவினரின் சன்மானம் (2 நாகஸ்வர கலைஞர்கள், 2 தவில் கலைஞர்கள், 2 துணை கலைஞர்கள்)
2. உற்சவத்திற்கான பொருட்செலவுகள்
3. ஆவணத்தில் பங்குபெரும் விற்பன்னர்களுக்கான சன்மானம்
4. துல்லிய ஒளிப்பதிவு, ஒலிப்பதிவுக்கான செலவு
5. போக்குவரத்து, தங்கும் செலவு முதலியன.
6. ஆவணத்துக்குப் பின் செய்யப்படும் படத்தொகுப்பு முதலான வேலைகளுக்குரிய செலவு
இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, இந்த முயற்சியை செயலாக்க சுமார் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை, 1.2 லட்சம் ரூபாய் இந்தப் பணிக்காக சேர்ந்துள்ளது.
இந்தப் படப்படிப்பை 2018 மார்ச் கடைசி வாரத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். இந்த முயற்சியை பரிவாதினி அறக்கட்டளை முன்னின்று நடத்தும். இதற்கான பங்களிப்பிற்கு வருமான வரி பிரிவி 80ஜி-யின் படி வரிவிலக்கு பெற முடியும்.
இந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.
Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994
என்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு:
லலிதாராம்
parivadinimusic@gmail.com
+91 9980992830
Read Full Post »