டிசம்பர் சீஸனில் பல்லாயிரக்காண கச்சேரிகள் நடக்கின்றன. இருப்பினும் நாகஸ்வர கச்சேரிகள் பெரும்பாலும் தொடக்க விழா என்ற கேலிக்கூத்துக்கே ஒதுக்கப்படுகின்றன. மங்கல இசை என்ற பெயரில் பெரும் கலைஞர்களை அவமதிப்பதைப் பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.
நாகஸ்வர கச்சேரிகள் வைக்காததற்கு, சிறிய ஹாலில் அதிக சத்தம், கூட்டம் வராது என்று தொடங்கி பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பல் விழுந்துவிட்டது வரை ஆயிரம் காரணங்கள்.
”அதுதான் பொங்கலில் நாகஸ்வர விழா இருக்கிறதே”, என்று எதிர் குரல் வேறு. “சீஸனின் போது நாகஸ்வரக் கலைஞர்கள் தீண்டத்தகாதவர்களா”, என்று சிலரைக் கேட்டு பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.
இந்த வருத்தங்கள் பல வருடங்களாய் இருந்தாலும் பெரியதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் வித்வான் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சுமனஸா அறக்கட்டளை ஓர் அரிய, மிகவும் தேவையான முயற்சியை முன்னெடுத்தது.
டிசம்பரில் கச்சேரி நடத்தும் சபைகளுடன் பேசி நாகஸ்வரத்துக்கென்று சில கச்சேரிகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. கச்சேரி தேதியையும் நேரத்தையும் மட்டும் சபை அளித்தால் போதும். மற்ற அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளையே பார்த்துக் கொள்கிறது. கச்சேரிகளுக்கு கலைஞர்களை முடிவு செய்வதிலிருந்து, கச்சேரி செலவுகளை ஏற்றுக்கொள்வது வரை அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளை பார்த்துக்கொள்கிறது.
இந்தப் பணியில் துறை சாதனையாளர் வியாசர்பாடி கோதண்டராமனும் இருப்பதால் பெரும்பாலும் அதிகம் அறியப்படாத கலைஞர்களுக்கு இந்த மேடை கிடைக்கிறது. இன்று நல்ல பெயருடன் விளங்கும் மயிலை கார்த்திகேயன் என்ற அற்புத இளம் கலைஞரை நான் முதன் முதலில் கேட்டது இந்த அறக்கட்டளை நாத இன்பத்தில் ஏற்பாடு செய்திருந்த டிசம்பர் கச்சேரியில்தான்.
இந்த சீஸனில் மட்டும் ஐந்து சபைகளில் பதினோரு கச்சேரிகள் ஏற்பாடாகி சிறப்பாக நடந்துள்ளன.
சென்ற வருடம், டிசம்பர் தவிர மற்ற மாதங்களிலும் நாகஸ்வர கச்சேரிகள் இந்த அறக்கட்டளையால் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும், நாகஸ்வரக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதிக விளம்பரம் இன்று சத்தமில்லாமல் இது ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்.
மிக அவசியமான முயற்சியை முன்னோடியாய் முன்னெடுத்திருக்கும் சுமனஸா அறக்கட்டளைக்கும், வித்வான் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் சங்கீத உலகம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்.
வரும்காலங்களில் பதினொன்று பல நூறாகப் பெருகும் என்று நம்புவோம்.