Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2019

நாகஸ்வர கோயில் மரபப் பற்றி நண்பர் வித்வான் பிரகாஷ் இளையராஜாவுடன் இணைந்து ஆற்றிய உரையின் பகுதியை இங்கு காணலாம். டிசம்பரில் ஆர்.ஆர்.சபாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Read Full Post »

கேபிள் டிவி அறிமுகமான புதிதில், விடியற்காலையில் கருப்புவெள்ளை கர்நாடகபாணி திரைப்பாடல்களை ஒளிபரப்புவார்கள். கல்லூரி காலங்களில் தஞ்சாவூரிலிருந்து விடுமுறைக்கு வரும்நாட்களில் மட்டுமே அதிகாலையைப் பார்த்தவன் நான். அப்படியொரு நாளில் 1999-ல் காலை பொழுதே நமஸ்காரம் என்ற பிலஹரி காதில் விழுந்தது. அன்று முதல் அதைத் திரும்பக் கேட்க எங்கெங்கோ முயன்றும் வாய்க்கவில்லை.

இணையத்தில் என்னென்னமோ அரிய விஷயங்களைக் கண்டடைய முடிந்தாலும் இந்தப் பாடல் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

சிலமாதங்களுக்கொரு முறை யாரேனும் வலையேற்றியிருக்கிறார்களா என்று தேடிப் பார்ப்பேன். காலப்போக்கில் மறந்தும் போனது.

இன்று சீர்காழியின் பிறந்தநாள் என்றொரு பதிவு பார்த்தேன். அந்த பிலஹரியில் பிருகா சங்கதி நினைவுக்கு வந்தது. யூடியூபில் தேடிய போது பாடலும் சிக்கியது.(பிலஹரிதான் நினைவில் இருந்தாலும் – பாடல் ராகமாலிகை. ) ஒவ்வொரு ஸ்வரத்தையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிறபடிக்காய் பாடியிருக்கும் கந்தர்வக் குரல்.

பாடலே இருக்கும் போது வர்ணனை எதற்கு. கேட்டுவிடுங்கள்.

வலையேற்றியவர் யார் பெற்ற பிள்ளையோ. நன்றாக இருக்கட்டும்.

வாழ்க இசைமணி! வாழ்க மணியிசை!

Read Full Post »

2004-ல் எழுதியது. இன்றைக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். (அப்போது ஒரு தோசை 20 ரூபாய்க்கு கிடைத்திருக்கிறது)

‘இந்த தடவை முத்ரா-ல ஃப்ரீ கச்சேரி இல்லையாமே ? ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் ? ’.

மாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த வருடம் ‘மாம்பலம் சிஸ்டர்ஸ்-ஐப் பத்திதான் நிறைய பேச்சு. கர்நாடிகா ப்ரதர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், பத்மா சேஷாத்ரி சிஸ்டர்ஸ் என்றெல்லாம் vocal-duet பாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையில் போனால், kilpakkam kins, kanchipuram cousins என்றெல்லாம் அடுத்த சீஸனில் யாரேனும் கிளம்பினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.)

இந்த முறை நிறைய சபாக்கள் டிக்கெட் விலையைக் கணிசமாக ஏற்றியிருக்கின்றன. ஃப்ரைம் டைம் ஸ்லாட்டில் ஓசியில் கச்சேரி நடக்கக் கூடிய சபைகளும் குறைந்திருக்கின்றன. கிருஷ்ண கான சபையில், மினிமம் டிக்கெட் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது என்றொரு நண்பர் சொன்னார். பாரத் கலாச்சார், வாணி மகால் போன்ற இடங்களில் மினிமம் 50 ரூபாய். பல காலமாய் சும்மா கிடைத்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்கு இந்நிலை அத்தனை செளகரியமாக இல்லை. ‘சங்கீதத்தை வெச்சு வியாபாரம் பண்றான். தியாகராஜர் பாட்டை பாடறானே, அவருக்கு என்ன ராயல்டி குடுக்கறான் ? ஷாமியானா பந்தல்-ல 50 சேரைப் போட்டு, ஐம்பது, நூறு-னு டிக்கெட்டுக்கு வாங்கறான். ஆத்மார்த்த சங்கீதம் எல்லாம் போயாச்சு ‘ என்றெல்லாம் இவர்கள் புலம்புவதைக் கேட்க முடியும். இப்படிப் புலம்புவதால் இவர்களெல்லாம் காசில்லா ஓட்டாண்டிகள் என்றெண்ண வேண்டாம். இவர்கள் நினைத்தால் ஆளுக்கொரு சபை ஆரம்பித்து, சென்னையே ஓசியில் கச்சேரி கேட்கச் செய்ய முடியும்.

சங்கீதம் முதலில் கோயில்களில் ஆராதனைக்குரியதாக இருந்தது. பின்பு ராஜாக்கள், மிராசுதார்கள், பிரபுக்களின் ஆதரவில் இருந்தது. அப்பொழுதுதெல்லாம் எவனோ ஒரு புண்ணியவான் எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டுவிட ஊரே கச்சேரி கேட்டது. அது என்றைக்கு சபைக்கு வந்ததோ அன்றே டாக்டர், சார்டட் அக்கெளண்டெண்ட் என்றெல்லாம் profession இருப்பதுபோல், இசைக் கலைஞராக இருப்பது, சங்கீத சபை நடத்துவது போன்றவைகளும் தொழில்களாகிவிட்டன. ஒரு வேலையை நல்ல வேலை என்று நாம் சொல்வாமாயின், நம் ஊர் அகராதிப்படி, அந்த வேலைக்கு நல்ல சம்பளம் என்று அர்த்தம். சபா வாசலில் அறுசுவையரசு காண்டீனில் ஒரு தோசைக்கு இருபது ரூபாய் கொடுக்க யாரும் தயங்குவதில்லை. குளிர்பதன வசதியுடன் கூடிய ஹாலில் 3 மணி நேரம் உட்கார்ந்து பாட்டு கேட்பதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாத்திரம் மனது வரமாட்டேன் என்கிறது. (அதுவும் சாயங்கால வேளையில் நடக்கும் கச்சேரியைத் தவிர மற்ற கச்சேரிகளுக்கெல்லாம் அனுமதி இலவசம்.)

இந்த இலவசம் என்ற சொல் ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று தெரியவில்லை. ‘இந்த இதழ் குங்குமத்துடன் சந்திரமண்டலத்தில் 2050-இல் திறக்கப் போகும் சரவண பவனில் ஒரு மசால் வடை இலவசமாகப் பெறுவதற்கான கூப்பன் இலவசம்’  என்று அறிவித்தால் கூட, அதற்காக குங்குமத்தை வாங்க சில பேர் நிச்சயம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் படித்தவர் பாமரர் பேதமெல்லாம் இல்லை. இந்த e-mail-ஐ நூறு பேருக்கு அனுப்பினால் 10 நிமிடம் long distance பேசலாம் என்றொரு stray email நமக்கு வந்தால், அதை forward செய்ய வேலை மெனெக்கெட்டு புதிய மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கும் பிரகஸ்பதிகளை நான் பார்த்திருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஒரு செளகரியத்திற்காக காசு கொடுக்க ஏன் மனசு வரமாட்டேன் என்கிறது ?

நம் மக்களின் கலாச்சாரத்தில் ஊறிய விஷயம் என்று இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியவில்லை. sony, nike போன்ற brand name-களுக்காகவே premium கொடுக்க தயங்காத நாம், சங்கீதம் பாடுபவனும் சபை நடத்துபவனும் மாத்திரம் லாபமே பார்க்காமல் பரோபகாரியாக வெறும் ஆத்ம திருப்திக்காக மாத்திரம் உழைப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் என் சிற்றறிவுக்கெட்டாத ஒன்றாக இருக்கிறது.

கச்சேரி பிரபலமான, தேர்ந்த வித்வானால் இருக்க வேண்டும். அதுவும் நல்ல செளகரியமான சபையில் இருக்க வேண்டும். அதுவும் ஆபீஸ் முடிந்து கச்சேரிக்குத் தோதாய், 6.00 மணிக்கு மேல் இருக்க வேண்டும். சுதா ரகுநாதன் பாடும் பொழுது பாட்டு சங்கதிகள் மட்டும் கேட்ட்டால் பத்தாது. அவருடைய ஜிமிக்கி அசையும் அழகும் தெரிய வேண்டும். இது எல்லாம் காலணா காசு செலவழியாமலும் கிடைக்க வேண்டும். எனக்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை இரண்டு மடங்காக்கினால் தேவலாம். என் ஆபீஸ் மாத்திரம் கஞ்சப் பிசிநாரி.

சரி…எது எப்படியோ, இன்றைக்கு வளையப்பட்டியின் நாதலயா ட்ரஸ்ட், ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் இசை விழாவைத் தொடங்கியிருக்கிறது. உன்னிகிருஷ்ணன் கச்சேரியை இன்று பலர் (ஓசியில்) இரசித்திருப்பார்கள். All are welcome வாசகத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடுபவர்கள் ஹேமமாலினிக்குப் போகட்டும். எனது கவலையெல்லாம், சென்னைக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு டி.என்.கிருஷ்ணன் கச்சேரி கூட கண்ணில் படவில்லையே என்றும். திருச்சி சங்கரனின் தனியாவர்தனத்தை எப்பொழுது கேட்போம் என்றும்தான்.

Read Full Post »