நவராத்ரியை தேவி கீர்த்தனைகள், ஸ்வாதி திருநாளின் நவராத்ரி கீர்த்தனைகள் என்று இசையுலகம் அணைத்துக் கொள்ளும்.
அதையொட்டி நாகஸ்வரத்தில் நவராத்ரி சிறப்புப் பகிர்வுகளை பரிவாதினியில் வெளியிடலாமென்று தோன்றியது. நாகஸ்வர வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனுடனும், நண்பர் ஸ்வாமிமலை சரவணனுடனும் கலந்து பேசி, ஒன்பது ராக தேவதைகளையே ஒன்பது நாட்களுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
அதிகம் கேட்கக் கிடைக்காத ராகங்களில், சுருக்கமாய் ராக ஆலாபனை, கொஞ்சம் தானம், ஒரு பல்லவி அதில் கொஞ்சம் ஸ்வரங்கள் என்று வெளியிட முடிவெடுத்தோம்.
சரவணனின் ஒலி/ஒளிப்பதிவில், மாரியப்பனின் வாசிப்பில் நவராக தேவதைகளின் உலா இதோ இன்று தொடங்கிவிட்டது.
முதல் நாள் உலாவுக்கு வந்திருக்கும் ராக தேவதை சந்திரஜோதி
இன்னும் பல ராகங்கள் அடுத்த எட்டு நாட்களில் காணத் தவறாதீர்கள்.
திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு ‘நாகஸ்வர யமன்’ என்றொரு பட்டப் பெயர் உண்டு.
பல்லவிகள் வாசிப்பதில் நிபுணரான இவருடன் இணைந்து வாசிப்பது சிரமமென்பதால் மட்டுமல்ல அந்தப் பெயர். யமன் தர்மராஜா ஆயிற்றே. ஏழை-பணக்காரன், நல்லவன் – தீயவன், இளைஞன் – முதியவன் என்கிற பாகுபாடெல்லாம் தெரியாது. அவன் தர்மம் எதுவோ அதில் வழுவாதிருப்பான். அது போல, உடன் வாசிப்பவர்களுக்கு தாளம் நிக்குமா, தாளம் போடும் பையன் ஓட்டம்/இழுப்பு இல்லாமல் போடுவானா, கூட்டத்தில் இருப்பவர்கள் பல்லவியின் தாளத்தை கிரகிக்க முடியாமல் அவர்கள் பாட்டுக்கு ஒரு தாளத்தைப் போட்டு கலைஞர்களைக் குழப்பாமல் இருப்பார்களா என்றெல்லாம் திருமெய்ஞானத்தாருக்குக் கவலையே இல்லை. அவருடைய லய நிர்ணயம் தர்மராஜனைப் போன்றது.
அவர் வாசித்த பல்லவி பதிவுகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அவர் வாசித்த பைரவி வர்ணமும், நாட்டைக்குறிஞ்சி வர்ணமும் வாசிப்பின் நளினத்தையும் லய நிர்ணயத்தையும் பறை சாற்றுகின்றன.
அவற்றைப் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம். இன்று சொல்ல வந்தது திருமெய்ஞானத்தார் சினிமாவில் வாசித்ததைப் பற்றி.
இரண்டு படங்களில் அவர் நாகஸ்வரம் இடம் பெற்றுள்ளது. வெளிச்சத்துக்கு வாங்க படத்தின் தொடக்கத்தில் பெயர் போடும் போது ‘ஹிந்தோள ராக’ கிருதி ஒன்றை வாசித்துள்ளார். யூடியூபில் தேடினால் படம் கிடைக்கிறது.
அவர் வாசித்த இன்னொரு படம் ‘நாத நார்த்தகி’. கொஞ்சும் சலங்கையில் காருக்குறிச்சியாரும் எஸ்.ஜானகியும் இணைந்தது போல வாணி ஜெயராமுடன் சேர்ந்து வாசித்த பாடல் என்று தெரிய வருகிறது. துரதிர்ஷ்ட வசமாய் படம் வெளிவரவில்லை. பாடல் பதிவு வெளியானதா என்றும் தெரியவில்லை.
நேற்று திருமெய்ஞானத்தாரின் இளைய மகன் ராமநாதன் பரிவாதினிக்காக கச்சேரி செய்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் தனக்குப் பாடமிருப்பதாய் கூறினார். கச்சேரியில் இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ள வேண்டிக்கொண்டேன்.
கர்நாடக, பக்தி, திரை இசை ஆர்வலர்களுக்கு இந்தப்பாடலைக் கேட்க ஆவலாயிருக்கலாம். ஆர்வமிருப்பவர்களுக்காக இந்த இணைப்பு:
அவரை முதன் முதலில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் பார்த்தேன்.
ஜி.என்.பி-யின் மகன் ராஜசேகர்தான் அறிமுகப்படுத்திவைத்தார். “கொத்தமங்கலம் சுப்புவின் மருமான்” என்று கூறிய நினைவு.
ஜி.என்.பி காலத்தில் அவர் தம்புரா கலைஞருக்குக் கொடுத்த சன்மானம் இன்று வரை ஏறவில்லை என்று அங்கலாய்த்தார்.
”வேளச்சேரில கச்சேரின்னானேனு போனா, ‘என்ன மாமா – தம்புரா எடுத்துண்டு வரலையாங்கறான்’. இவன் குடுக்கற 120 ரூபாய்க்கு நான் பஸ்ல தம்புராவை வேற தூக்கிண்டு போகணுமாம். கேட்டேளா கதைய”, என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது.
”நானும் சங்கீதம் கத்துண்டு இருக்கேன். தம்புரா போடறவனுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்கறா. என்னமோ என் ஜீவன் இப்படி அபஸ்வரத்துக்கு கொடைப் பிடிக்கணும்னு ஆயிடுத்து. அந்தக் காலத்துல எவ்வளவோ சங்கீதத்தைக் கேட்டுட்டு, இன்னிக்கு இந்தக் கண்றாவியை எல்லாம் கேட்க வெண்டியிருக்கு”, இது அடுத்த முறை சந்தித்த போது.
“போன வாரம் கச்சேரி முடிஞ்சதும் பாடினவன் பாட்டுக்கு நடையைக் கட்டறான். என்னடானா சபாவைக் கேளுங்கோங்கறான். சபாவைக் கேட்டா “நானா உங்களைக் கூப்பிட்டேன்? கூப்பிட்டவனைப் போய் கேளுங்கறான். ரெண்டு மணி நேரம் இவன் பாட்டைக் கேட்ட அவஸ்தை போறாதுனு இந்த அலைக்கழிப்பு வேற. தம்புரா சரஸ்வதி ஸ்வரூபம் இல்லையா? அதை இப்படி நடத்தினா இவனுக்கெல்லாம் ஸ்ருதி சேருமா?”, இது ஒரு முறை.
பரிவாதினி தொடங்கி கச்சேரி வைக்க ஆரம்பித்ததும், எல்லாக் கச்சேரிக்கும் தம்புரா வைக்க வேண்டு என்ற ஏனோ தன்னிச்சையாக வராது. அந்த சமயத்தில் கணேசன் கண்ணில் பட்டால் மட்டும் வரப்போகும் கச்சேரிக்கு நிச்சயம் அவரைச் சொல்லிவிடுவேன்.
சொன்ன நெரத்துக்கு, இடத்துக்கு வந்துவிடுவார். இவ்வளவு பணம் வெண்டுமென்று கேட்கமாட்டார். எவ்வளவு கொடுத்தாலும் இன்முகத்துடன் வாங்கிக் கொண்டு, “தம்புராவை மறந்துடாதீங்கோ. மேடைக்கே அதுதான் அழகு”, என்று சொல்லிச் செல்வார்.
கடந்து சில ஆண்டுகளாகவே ஆள் தளர்ந்துதான் இருந்தார்.
நாலைந்து வருடங்கள் இருக்கும். டிசம்பரில் ஏதோ சபா கேண்டீனில் பார்த்த போது, பல்லெல்லாம் கொட்டிப்போயிருந்தது.
“ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்தப்பா. திரும்ப பல்லைக் கட்டணும்னா நிறைய செல்வாகும்கறான்”
பார்க்கப் பாவமாய் இருந்தது. கேண்டினில் டிஃபன் வாங்கிக் கொடுத்து, கையில் கிடைத்த ஏதோ காசை சட்டையில் திணித்தேன். முதலில் மறுத்து அப்புறம் வாங்கிக் கொண்டார்.
அதன் பின் எப்போது சந்தித்தாலும் பல்லு கட்டவேண்டுமென்பார். நானும் ஏதாவது கொடுப்பேன்.
வருஷ வருஷமாய் இதே ஆக்ஸிடெண்ட் கதைதான். ‘போன தடவையும் இதேதானே சொன்னீர்கள்”, என்று கேட்க ஒருமுறை நாக்கு வரை வந்துவிட்டது.
சட்டென்று இழுத்துக் கொண்டேன்.
நான் கொடுக்கும் நூறு/இருநூற்றிலா பல் கட்டிக்கொள்ள முடியும்.
இருக்கிற சூழலில் தினப்படி தேவைகளுக்கே பாவம் எதை உருட்டி எப்படிப் பிரட்டினாரோ.
ஒருமுறை ஒரு சங்கீத வித்வான் கணேசனிடம் பேசிக் கொண்டிந்தது காதில் விழுந்தது, “ஐயோ பாவமாச்சே, மேடைல உட்காரும்போது நல்ல துணியா இருக்கட்டுமேனு வந்து வாங்கிக்கோன்னா, இப்படி பிகு பண்ணிக்கிறியே”.
அப்புறம் கணேசனிடம் கேட்ட போது, “ஆமாம்! என்னமோ புதுசையா தூக்கிக் குடுத்துடுவான். கந்தலும் கம்பலையுமா நாலு வேட்டியைக் குடுத்துட்டு, அடுத்த அஞ்சு கச்சேரிக்கு ஓசில தம்புரா போடச் சொல்லுவான். போறும் போறும்! நான் புது வேட்டி உடுத்தறதைப் பார்க்கறதுக்குதான் கச்சேரிக்கு வராளாக்கும்”, என்றார்.
தம்புரா கணேசனுக்கு வேறு தொழில் தெரியுமா? சொந்த வீடிருந்ததா? வாடகையை எப்படித் தேற்றினார்? அவர் குடும்பச் சூழல் என்ன?
சிரிக்கச் சிரிக்கப் பேசிய வேளைகளில் ஏதாவது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்.
உலகில் எத்தனையோ அவலங்கள். பார்த்தும் பார்க்காது போவது போல இதையும் கடந்து சென்றுகொண்டிருக்கிறேன்….வேறென்ன சொல்ல…
ஸ்ரீநிவாஸ் இல்லாத வெறுமை காலத்தால் அழிய மறுக்கும் வடுதான் என்றாலும் இன்று அவன் இசை வாழ்வை நிறைத்த கணத்தையே நினைக்க விரும்புகிறேன்.
இதைப் படிக்கும் போது கேனைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். இன்று நினைத்தாலும் பரவசப் பிரவாகமாய் என் மனத்தை அந்த நிகழ்வு நிரப்புவது நிச்சயம் சத்தியம்.
1999-ம் ஆண்டு தஞ்சாவூரில் தங்கியபடி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம், சேத்ராடனம் செல்லும் உறவுக்காரர்கள் தஞ்சாவூருக்கு வந்தால் சில சமயம் நானும் அவர்களுடன் சென்றதுண்டு.
அப்படியொரு முறை கும்பகோணம் திருவாரூர் சாலையில் இருந்த கோயில்களுக்குச் சென்ற போது மாலை வெளையில் திருச்சேறை கோயிலை அடைந்தோம்.
சங்கீதா காஸெட், ஏவிம் ஆடியோ, எச்.எம்.வி, பி.எம்.ஜி கிரசெண்டோ என்று வெவ்வேறு கம்பெனிகள் வெளியிட்டிருந்த மாண்டலின் பதிவுகள் அனைத்தும் இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்த காலம். கோயிலின் டேப்ரிக்கார்டரில் இருந்து அற்புதமாய் பிலஹரி ராகம் மாண்டலினில் ஒலித்துக் கொண்டிருந்தது.
என்னிடம் இல்லாத ஒரு பதிவு. அதிகம் கூட்டமில்லாத கோயிலில், பட்டாச்சாரியார் தீபாராதனை காட்டிய போடும் மனமெல்லாம் பிலஹரியில்? என்ன பதிவு இது என்று மனத்தை அரிக்கத் தொடங்கியது.
கன்யாகுமரி வயலினில் வாசிக்கத் துவங்கிய போது பட்டாச்சாரியரை கேட்டேவிட்டேன்.
“என்ன கேஸட் இது”
“இங்க இருக்கற ஒரே காஸெட் இதுதான். தினமும் இதைத்தான் போடறோம்”
”எந்தக் கம்பெனி வெளியிட்ட பதிவு?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது!”
“காஸெட் கவர் இருக்கா?”
பெரியவர் ஏற இறங்கப் பார்த்தார். இது என்னடா ரோதனை என்று நினைத்திருக்கக் கூடும்.
தீர்மானமாய் நான் அங்கு நின்றது அவரை அசைத்திருக்க வெண்டும். உள்ளே சென்று காஸெட் கவரை எடுத்து வந்தார்.
ஒரு டீ-சீரீஸ் காஸெட்டில் யாரோ பதிவு செய்திருக்கிறார்கள்.
தயங்கியபடி, “இதுல எந்தக் கம்பெனி பதிவுனு தெரியலை. நான் ஸ்ரீனிவாஸ் வாசிச்ச எல்லா காஸெட்டையும் வாங்கணும்னு நினைக்கறேன். இந்தக் காஸெட்டை இரவல் தர முடியுமா? நான் பிரதியெடுத்துட்டு திருப்பித் தரேன்.”
“நீ யாருன்னே தெரியாது. எந்த ஊரோ என்னமோ. உன்னை நம்பி இருக்கற ஒரே காஸெட்டை எப்படித் தர்ரது.”
“பணம் வேணா குடுக்கறேன்”
“பணம் எல்லாம் வேண்டாம்பா. யாராவது கேட்டா வம்பாயிடும்.”
“இங்க எதாவது மியூசிகல் இருந்தா உடனே பிரதி எடுத்துட்டுத் தந்துடறேன்”
இதற்கு நடுவில் ஊர் சுற்ற வந்திருந்த உறவுக்கார் பொறுமையிழந்தார்.
“இன்னும் நாலு கோயிலுக்கு போகணும். சீக்கிரம் வாப்பா”, என்றார்.
“இது கிடைக்கத காஸெட். இதை நான் பிரதி எடுக்கப் போறேன். நீங்க மத்த கோயிலுக்குப் போங்க”
அவர் என்னமோ சொல்ல வாயெடுத்த போது, கோயில் பட்டர், “நான் எப்பப்பா உனக்கு காஸெட் தரேன்னு சொன்னேன்”, என்றார்.
எனக்கு கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது.
“ப்ளீஸ், என்னை நம்புங்க. நிச்சயமா இன்னைக்கே திருப்பிக் கொடுத்துடறேன்”, என்றேன்.
உறவுக்காரருக்கும் அப்படி பாதியில் என்னைவிட மனமில்லை. பட்டருக்கு கொஞ்சம் மனமிளகினாலும் காஸெட்டைக் கொடுக்க மனமில்லை. எனக்கும் காஸெட் வெண்டுமென்றாலும் மற்றவர்களை சங்கடப்படுத்துகிறோமே என்று மனவுளைச்சல்.
முப்பது வினாடிகள் மூன்று மணி நேரம் போல ஊர்ந்தன.
பட்டர் ஒருமாதிரி இறங்கி வந்து, “எங்கப் போய் பதிவெடுப்ப?”, என்ரார். என் நண்பன் பாலாஜி கும்பகோணத்தில் இருந்தான். அவன் வீட்டில் பிரதியெடுக்க வசதியுண்டென்று அறிவேன்.
ஹைஸ்பீட் டப்பிங்கில் அரைமணியில் ஆகிவிடும்,
“கும்பகோணத்துக்குப் போய் பிரதியெடுத்துடுவேன்”,என்றேன்.
கூடயிருந்த உறவுக்காரர் கும்பகோணத்திலிருந்து நாள் வாடகை பேசி கார் எடுத்து வந்திருந்தார். அவருக்கு என்னத் தோன்றியதோ தெரியவில்லை, “நான் காரில் கூட்டிட்டுப் போய், திரும்ப கொண்டுவிடுகிறேன்”, என்றார்.
பட்டருக்கு ஒரே அதிர்ச்சி. தலையை கிழக்கும் மேற்குமாய் இரண்டு முறை அசைத்துவிட்டு, “இது என்ன கெஸெட்னே எனக்குத் தெரியாது. கடைமைக்கு தினமும் பொடறேன். இவ்வளவு ஆர்வமா இதைக் கேட்கும் போது என்னால மறுக்க முடியலை. கும்பகோணத்துக்கு போயெல்லாம் காப்பி எடுக்க வெண்டாம். காஸெட்டை நீயே வெச்சுக்கோ”, என்றார்.
எனக்கு மறுக்கக் கூடத் தோன்றவில்லை. ஸ்தம்பித்த நிலையில் காஸெட் கவரை வாங்கிக் கொண்டேன். உறவுக்காரர்தான், “பணம் எதாவது குடுக்கட்டுமா?”,என்றார். பட்டர் மறுத்துவிட்டார்.
அவர் டெப்ரிக்காடரை அணைக்கச் சென்ற போது தனி ஆவர்த்தனம் முடிந்து் ஸ்ரீனிவாஸ் வாசிக்கத் தொடங்கியிருந்தான், “தொரகுணா இடுவண்டி சேவா”
ஆமாமப்பா! “யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு சேவை!:”
We are excited to announce that now we will be organising nagaswaram concerts in Bangalore as well. The first concert is scheduled in September! Details in the flyer.
We would like to thank Vid. TS Satyavati for inspiring us to start this.
தமிழிசை என்ற பெயரில் ஜல்லி அடிப்பவர்கள் அனேகம். இந்தச் சூழலில் இசையும் தமிழும் உண்மையாய் வரப்பெற்ற அறிஞர் அரிமளம் ப… twitter.com/i/web/status/1…1 week ago
மாமேதை பழனி சுப்ரமணிய பிள்ளை வழியில் மணி மணியாய் சீடர்களை உருவாக்கியிருக்கும் வித்வான் காளிதாஸ் அவர்களுக்கு இந்த வ… twitter.com/i/web/status/1…1 week ago
பிகு: இந்தக் குறிப்பு நூல் விமர்சனமன்று. என் அனுபவப் பகிர்வு. 6/n <end> 1 week ago
ஆனால் இது பெயர் பட்டியல் மட்டும்தான் என்பதை படித்ததும் புரிந்து கொள்ளும் வகையில் ஜெ-யின் குறிப்பு இருந்திருக்கலாம்.… twitter.com/i/web/status/1…1 week ago
இந்தக் குறிப்பே நூலை வாங்கத் தூண்டுதலாய் அமைந்தது. நூல் சில நாட்கள் முன் கைக்குக் கிடைத்தது. தனிப்பட்ட அளவில் எனக்… twitter.com/i/web/status/1…1 week ago