Archive for ஜூன், 2020
ஜானகிராமனின் குரல்
Posted in அளுமை, Tribute, tagged தி.ஜானகிராமன், மதுரை மணி on ஜூன் 30, 2020| 5 Comments »
டி.கே.ரங்காச்சாரி
Posted in அளுமை, personality, tagged TK Rangachari on ஜூன் 3, 2020| Leave a Comment »
இன்று டி.கே.ரங்காச்சாரியின் பிறந்த நாள். பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்காக எழுதிய சிறு குறிப்பை இங்கு பகிர்கிறேன்.
பிரசன்னா, பேடி, வெங்கட், சந்திரா ஆடிய காலத்தில், எத்தனைதான் திறமைசாலியாக இருந்தாலும், வேறு ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க முடியாது என்பது போல, அரியக்குடி, மதுரை மணி, ஜி.என்.பி போன்ற மேதைகளின் சமகாலத்தில் வாழ்ந்த, பல அற்புத கலைஞர்கள் மேல் போதிய வெளிச்சம் விழாமல் போனது. அந்த வரிசையில் உள்ள ஒரு முக்கிய கலைஞர் டி.கே.ரங்காச்சாரி.
3 ஜூன் 1912- திருச்சி அருகே வராஹனேரியில் பிறந்த ரங்சாச்சாரியின் முதல் குரு அவர் தாய் ராஜலட்சுமி அம்மாள்தான். இள வயதிலேயே லயத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்த ரங்காச்சாரி, கையில் கிடைத்த பாத்திரத்தில் எல்லாம் தாளம் இசைத்தபடியால், ‘தவில் ரங்கன்’ என்று செல்லமாக அழைத்தனர். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் சிஷ்யரான கொடகநல்லூர் சுப்பையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்த பின் 1929-ல் சிதம்பரம் சென்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷண பட்டயப் படிப்பில் சேரச் சென்ற ரங்காச்சாரியின் இசைத் திறனைப் பார்த்துவிட்டு, அவரை நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொண்டனர்.
படிப்பு முடிந்ததும், அண்ணாமலை பல்கலைகழகத்திலேயே பணியாற்றியபடி கச்சேரிகளும் செய்து வந்தார். இயற்கையிலேயே நல்ல கனமான சாரீரத்தை பெற்ரிருந்த ரங்காச்சாரியின் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் போது தோன்றும் முதல் வார்த்தை கௌரவம். கௌரவமாய் பாடும் போதும், கேட்பவருக்கு அலுக்காதபடி விறுவிறுப்பாய் பாடமுடியும் என்பதை இந்தப் பதிவுகள் பறை சாற்றுகின்றன. “ஒரு மாணவன், தன்னைச் சுற்றியுள்ள இசை அனைத்தையும் கேட்டு உள்வாங்கி, தனக்கே உரியதொரு பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை ரங்காச்சாரியின் இசையைக் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.”, என்று தன் மாணவர்களிடம் ஜி.என்.பி அடிக்கடி கூறுவாராம்.
1950- ளில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தண்டபாணி தேசிகருடன் இணைந்து பண் ஆராய்ச்சியில் ரங்காச்சாரி ஈடுபட்டார். இருவருமாய் செர்ந்து கச்சேரிகளும் செய்தனர். ஓதுவார் பரம்பரையின் வந்த தேசிகரும், வைஷ்ணவரான ரங்காச்சாரியின் ஒரே மேடையில் அமர்ந்து தேவாரத்தையும், திய்வபிரபந்தங்களையும் பாடியவற்றை கேட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். 1960-களையும், 1970-களையும் ரங்காச்சாரியின் இசை வாழ்வின் உச்சம் எனலாம்.
இசை போதனையை வகுப்பரையைத் தாண்டி மேடையிலும் தொடர்ந்தவர் ரங்காச்சாரி என்றால் மிகையாது. அவரை ‘professor on the dias’ என்று கூட விளையாட்டாய் குறிப்பதுண்டு. தான் பாடுபவற்றின் சௌந்தர்யத்தை கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே விளக்கமும் அளித்து ரசிகர்களின் நிலையையும் தன்னுடன் சேர்த்து உயர்த்தியவர் ரங்காச்சாரி.
1979-ல் அவர் மறைந்தாலும் அவர் பாடிய கருடத்வனியும், வாகதீஸ்வரியும் சாகாவரம் பெற்று ரசிகர்களிடையே புழக்கத்தில் இருந்துவருகின்றன. அவருக்குப் பின் அவர் வழியை வைரமங்கலம் லட்சுமிநாராயணன் பின்பற்றி வந்தார். இன்றைய கச்சேரி உலகில் அதைச் செய்து வருபவர் விதுஷி நீலா ராம்கோபால்.