சங்கீத கலாநிதி எம்.எல்.வி-யின் நேர்காணல் பதிவு ஒன்று சம்பிரதாயாவில் இருப்பது எனக்கு 2009-ல் தெரிய வந்தது. அப்போது நான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். நூற்றாண்டுக்கு சில நாட்களே இருந்த நேரத்தில் சம்பிரதாயாவுக்குச் சென்றேன். அந்த நேர்காணலின் அச்சுப் பிரதியை நகலெடுத்து மலரில் உபயோகித்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
பிரச்னை என்னவென்றால், அந்தப் அச்சு வடிவத்தில் சாதாரண சம்பாஷணையில் வரும் திக்கல் திணறல்கள், மடைமாற்றங்கள் எல்லாம் அப்படியே பதிவாகியிருந்தது. அதனை மாற்றி எழுத அப்போது நேரமில்லை என்பதால் கிடப்பில் போடவேண்டியதாகிவிட்டது.
எத்தனையோ முறை அது என்னை உறுத்தினாலும், எழுதக் கைவரவில்லை. பத்தாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அதற்கான தருணம் வாய்த்துள்ளது.
எம்.எல்.வி-யின் 92-வது பிறந்த நாளில் இதை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நேர்காணலைப் பற்றி சில விஷயங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
1. இன்று சம்பிரதாயா ஆவணங்களைப் பாதுகாக்கும் கலாசேத்ராவின் முதல்வர் டாக்டர் ரேவதியை ராமசந்திரனை அணுகி, அவருடைய அனுமதியுடனேயே இந்த நேர்காணல் வெளியாகிறது. கலாசேத்ராவுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. நேர்காணலின் பேச்சுத் தமிழை, எழுத்துத் தமிழாக நான் மாற்றியுள்ளேன். அது அதிகபிரசங்கம் என்று நினைத்தால் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
3. பேசும் போது அலை பாய்ந்து ஒன்றிலிருந்து வெறொன்றுக்குத் தாவுவது சகஜம். அப்படிப்பட்ட சில தாவல்களை நான் படிப்பதற்கு ஏதுவாக கொஞ்சம் மாற்றித் தொகுத்துள்ளேன். அவர் சொன்ன கருத்துகளில் நான் அந்த மாற்றமும் செய்யவில்லை.
எழுத்தில், சொல்லும் முறையில் ஏதேனும் குறையிருந்தால் அது என்னுடையவையே. அதையும் மீறி அந்த மஹாவிதுஷியின் இசை ஜ்வாலை உங்களை ஆகர்ஷிக்கும் என்று நம்புகிறேன்.
28 Aug 1989
Venue – 22 North Street, Sriram Nagar. Madras -18 (Srividya’s House)
நேர்காணல் எடுத்தவர்: விதுஷி பத்மாசினி
முதலில் உங்களுடைய இளமைக்காலம், குடும்பம் முதலான விவரங்களைப் பதிவு செய்துகொண்டு பின்னர் இசையைப் பற்றி, இசை சொல்லிக் கொடுக்கும் முறையைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
நான் பிறந்தது மெட்ராஸில்தான். எங்களுக்கு ஜார்ஜ்டவுனில் வீடு இருந்தது. அந்த வீட்டில்தான் 3 ஜூலை 1928-ல் பிறந்தேன். அந்த நாளில் ஜார்ஜ் டவுனில் நிறைய பெண் இசைக் கலைஞர்கள் இருந்தார்கள்.
யாரெல்லாம் இருந்தார்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
கோயம்பத்தூர் தாயி, வீணை தனம்மாள் மாதிரி நிறைய பேர்.
உங்கள் அப்பா/அம்மா பற்றி.
அப்பா பெயர் ஐயாசாமி ஐயர். அம்மா லலிதாங்கி. இரண்டு பேரும் இசைக் கலைஞர்கள்தான். அப்பா மேடைக் கலைஞர் அல்ல. நிறைய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சேவா சதனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாகவும் பாட்டு சொல்லிக் கொடுப்பார். அவர் கொத்தவாசல் வெங்கடராம ஐயரின் (ஏராநாபை போன்ற பிரபல வர்ணங்கள் செய்தவர்) சிஷ்யர். அவருக்கு வடக்கிந்திய இசையில் மேல் பிரமை. அதனால் கல்கத்தா, பம்பாய், ஹைதராபாத் என்று பல ஊர்களில் தங்கி வடக்கிந்திய சங்கீதத்தைக் கற்றுக்கொண்டார்.
திருவாரூர் ராஜாயி என்று அந்நாளில் பிரபலமாகப் பாடிக்கொண்டிருந்த கலைஞருக்கு சொல்லிக் கொடுப்பதற்காக பின்னாளில் மெட்றாஸுக்கு வந்தார்.
பந்தநல்லூர் ஜெயலட்சுமியின் தாயாரா?
இல்லை. இவர் வேறு. அந்த நாளில் முதன் முதலில் ராகம் தானம் பல்லவி பாடிய பெண் கலைஞர் அவர்தான். ’தினமணி வம்ச’. ‘தனயுனி ப்ரோவ’ போன்ற கீர்த்தனங்களெல்லாம் புதிய கீர்த்தனைகள் என்று நினைத்த காலமது. அவை எங்கப்பாவுக்கு பாடம் என்பதால் அவரிடம் கற்றுக் கொள்ள நினைத்தார் ராஜாயி. முசிறி, அரியக்குடி, மகாராஜபுரம் போன்றவர்கள் எல்லாம் கூட அப்பாவிடம் சில கீர்த்தனைகள் கற்றுக்கொண்டதுண்டு. அப்படி வந்த இடத்தில்தான் என் அம்மாவை சந்தித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அம்மா மேடைக் கலைஞர் (performing musician). ஆரம்ப நாளில் கோயம்பத்தூர் தாயியின் சிஷ்யை. அதன் பிறகு ஃப்ளூட் சுப்பராமனிடம் கற்றுக் கொண்டார். அப்புறம் அப்பாவிடம் கற்றுக் கொண்டார். அம்மா ஆஸ்த்துமாவால் மிகவும் அவதிப்பட்டார். நாளடைவில் மூச்சுவிடக் கூட சிரமப்பட்டார். அதனால் தனது நாற்பதாவது வயதை எட்டும் போதே பாடமுடியாதபடி ஆகிவிட்டது.
அம்மா அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால் இருவருக்கும் 20 வயதுக்கு மேல் இடைவெளி. அம்மா தனது 49 வயதில் 1955-ல் மறைந்துவிட்டார். அப்பா எண்பது வயதில் 1963-ல் மறைந்தார்.
நான் பிறந்ததிலிருந்து வீட்டிலேயே சங்கீத சூழல். நிறைய சங்கீத வித்வான்கள் வீட்டுக்கு வருவார்கள். அதனால் சிறு வயசில் இருந்தே ஈடுபாடு. ‘சைல்ட் பிராடிஜி’ என்றுகூட சொல்லலாம். அப்படிப் பார்க்கப் போனால் இன்று பிரபலமாக இருக்கும், பிருந்தாம்மா, சுப்புலட்சுமி, பட்டம்மாள் போன்ற கலைஞர்கள் எல்லோருமே ப்ராடிஜிதான். 12-13 வயதுக்குள் கச்சேரி பாட வந்தவர்கள்தான்.
எட்டு வயதிலிருந்து மேடையில் என் அம்மாவுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தேன். அப்போது வானொலியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் பாடியிருக்கிறேன். பதினைந்து நிமிடம் பாட பதினைந்து ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தம்.
நான் பிரசண்டேஷன் கான்வெண்டில் படித்தேன். எனக்கு நன்றாகப்படித்து மருத்துவர் ஆகவேண்டும் என்று இலட்சியம் இருந்தது.
கார்பரேஷன் ரேடியோ போய் அகில இந்திய வானொலி வந்த புதிதில், 1938-ல் ‘கீத கோவிந்தம் ஓபரா’ என்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருந்தது. ஜெயதேவ அஷ்டபதியை பழைய பஜனை பத்ததியில் கர்நாடக ராகங்கள் கொண்டு பாட ஏற்பாடாகியிருந்தது. அதில் ஜி.என்.பி, டி.கே.பட்டம்மாள், என்னுடைய அம்மா மூவரும் பங்கேற்றனர். நானும் என் தாயாருடன் சென்றிருந்தேன். டி.கே.ஜெயராமனும் நானும் ஒத்த வயதினர் என்பதால் வானொலி நிலையத்தில் பாடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் நேரத்தைக் கழித்தோம்.
அப்படி நான் பாடியதை ஜி.என்.பி கேட்டுவிட்டு, “இந்தக் குழந்தைக்கு நல்ல ஞானம் இருக்கிறது. என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்லித் தருகிறேன்.”, என்று என் அப்பாவிடம் சொன்னார். அப்பாவும், “பார்க்கலாம்”, என்று கூறினாரே தவிர அதைப் பொருட்படுத்தவில்லை.
பிறகு 1940-ல், ‘புரந்தரதாஸர் கிருதிகள்’ புத்தகம் அச்சிட என் பெற்றோர்கள் முயற்சி எடுத்தனர். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் புரந்தரதாசர் கீர்த்தனைகள் அவ்வளவு புழக்கத்திலில்லை.
பிறகு எப்படி உங்கள் பெற்றோருக்கு இதில் ஆர்வம்?
என் அப்பா அப்போது யூ.ராமா ராவ் (மியூசிக் அகாடமியின் முதல் ப்ரெசிடெண்ட்) வீட்டில் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் தாஸர் பரம்பரையைச் சேர்ந்த நரசிம்ம தாஸர் தங்கியிருந்தார். அவர் ஒரு வைதீக பிராமணன். அவருக்கு ஆயுர்வேதமும் தெரியும். அவருக்கு புரந்தரதாசர் கிருதிகளின் பழைய மெட்டுகள் தெரிந்திருந்தது. அவருடன் அதைப் பற்றி பேசி என் அப்பாவுக்கும் அவற்றில் ஈடுபாடு வந்துவிட்டது.
அவர் ஊருக்குத் திரும்பிப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், என் அப்பா அவரை எங்கள் வீட்டில் வந்து தங்கி என் அம்மாவுக்கு புரந்தரதாசர் கீர்த்தனைகள் சொல்லிக்கொடுக்க வெண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரும் இணங்கி, கிட்டத்தட்ட ஒரு வருடம் எங்கள் வீட்டிலேயே தங்கினார்.
ஒரு சிறிய அறையில் தங்கிக் கொண்டு தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சுமார் 150/200 தாஸர் பதங்களை என் அம்மா அவரிடம் கற்றார். அப்படித்தான் எங்கள் குடும்பத்துக்கு இந்த ஈடுபாடு உண்டானது.
இவ்வளவு நல்ல விஷயம் வெளியில் தெரியாமல் இருக்கிறதே என்று புத்தகம் போட நினைத்தார்கள் என் பெற்றோர்கள். என் அம்மா சங்கீதம் குருமுகமாய் பாடக் கற்றுக் கொண்டிருந்தாரே தவிர, அச்சுக்கு ஏற்றார்போல ஸ்வரப்படுத்த அறிந்திருக்கவில்லை. ரங்கராமானுஜ ஐயங்கார் ஸ்வரப்படுத்த உதவி செய்தார். பிரிசிடென்சி காலேஜில் நாகராஜ சர்மா என்று ஒரு ப்ரொபசர் இருந்தார். அவருக்கு கன்னடம் தாய் மொழி. அவர் சாஹித்ய அர்த்தங்களுக்கு உதவி செய்தார். அதையும் மீறி சில தவறுகள் வந்துவிட்டன. இத்தனைக்கு என் அம்மாவுக்கு கன்னடம் எழுதப்படிக்கத் தெரியும்.
அம்மாவின் கச்சேரிகள் நின்றுவிட்ட நிலையில், அப்பாவின் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அதனால் புத்தகத்தை அச்சடிக்க எங்களிடம் போதுமான பணமிருக்கவில்லை. அதனால் அப்பா இதற்காக நன்கொடை வசூலித்தார். அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம். காகித விலை அதிகமாயிருந்த சமயம். இருந்தும், ஹிந்து கஸ்தூரி ஸ்ரீனிவாஸன் இலவசமாக காகிதம் கொடுத்தார். அச்சுச் செலவுக்காக அப்பா சில வித்வான்களிடம் நன்கொடைக்கு அணுகினார்.
அப்படி ஜி.என்.பி-யையும் அணுகிய போது, “உங்கள் பெண்ணை பாடம் கேட்க அனுப்புங்கள் என்று நான் சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஏன் இன்னும் அனுப்பவில்லை?, என்று கேட்டிருக்கிறார்.
என் அப்பாவும், “அவளுக்குப் பாட்டைவிட படிப்பில்தான் நாட்டமுள்ளது”, என்று கூறியுள்ளார்.
”நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். அவள் பாடகியாகத்தான் வரப்போகிறாள்”, என்று அடித்துக்கூறியிருக்கிறார் ஜி.என்பி.
(அப்போதிலிருந்தே ஜி.என்.பி–யிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கிட்டார் என்று ஊகிக்க முடிகிறது)
1942-ல் போர் முற்றிய போது பலர் சென்னையைவிட்டு சென்றனர். ஜி.என்.பி கும்பகோணத்துக்குச் சென்றுவிட்டார். நாங்கள் திருவள்ளூருக்கு மாறினோம். அப்போது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். இந்த மாற்றத்தினால் படிப்புக்கு தடை ஏற்பட்டது. அப்போது சிலமுறை கும்பகோணத்துக்குச் சென்று ஜி.என்.பி-யிடம் கற்றுக்கொண்டேன்.
மீண்டும் சென்னைக்கு வந்ததும், “படிப்பெல்லாம் வேண்டாம். அவளை சங்கீதத்தில் விட்டுவிடுங்கள்”, என்று ஜி.என்.பி மீண்டும் சொன்னதும் என் அப்பா சம்மதித்துவிட்டார். 1940-ல் இருந்து 1951- வரை தொடர்ந்து ஜி.என்.பி-யிடம் கற்றுக் கொண்டேன். அதனால் என் வழிக்கு அடித்தளம் ஜி.என்.பி பாணிதான். எனக்கு நன்றாகப் பேசுகிற குரல் என்பதால் அந்தப் பாணி நன்றாகப் பொருந்தியது.
பெங்களூரில் வி.ஆர்.எஸ் முதலியார் என்றொருவர் சபா நடத்திவந்தார். 1941-ல் அங்கு என் அம்மா பாடுவதாக இருந்தது. அபிராமசுந்தரி வயலினும் ஹம்ஸதமயந்தி மிருதங்கமும் ஏற்பாடாகியிருந்தது. அம்மாவுக்கு முடியாததால் கச்சேரியை ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஜி.என்.பி “இவள் பாடட்டுமே. She can manage.” என்று சொன்னார். பதிமூன்று வயதுதான் என்றாலும் அப்போதே கொஞ்சம் ராகம் ஸ்வரம் எல்லாம் பாடுவேன். ஜி.என்.பி-யே சபாவிடமும் பேசி என் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார். அதுதான் நான் முதன் முதலாய் பாடிய தனி கச்சேரி.
அந்தக்காலத்தில் அரங்கேற்றம் என்று தனியாகச் செய்யும் வழக்கமெல்லாம் இல்லை. ‘சைல்ட் பிராடிஜி’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யாருக்கும் தோன்றாத காலம். அப்பா சங்கீதத்தில் மிகவும் கண்டிப்பானவர். முகத்துக்கு முன்னால் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டால் கர்வம் வந்துவிடும் என்று அவர் நம்பினார். ”இன்னும் கொஞ்சம் பணம் கேட்டுப் பார்க்கலாமா?”, என்று நான் கேட்டதற்கு, “உனக்கு அதற்குள் அவ்வளவு தெரிந்துவிட்டதா?”, என்று கோபப்பட்டார். அதானாலோ என்னமோ இன்றுவரை எனக்கு பணம் கேட்க வருவதில்லை. நான் கச்சேரிக்கு அளவுக்கு மீறிய தொகை என்று இதுநாள் வரை வாங்கியதில்லை.
இப்படித்தான் என் இசை வாழ்க்கை தொடங்கியது. ஓரளவு என் குடும்பத்தைப் பற்றியும் இளமைக் காலத்தைப் பற்றியும் கூறியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
உங்களுடன் பிறந்தவர்கள் யாரும் உண்டா?
நான் ஒரே பெண்தான். என் அப்பாவின் முதல் மனைவிக்கு ஒரு பெண் உண்டு. அவள் என்னைவிட மிகவும் மூத்தவள். அவள் இப்போது இல்லை.
உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
என் கல்யாணம் 1951-ல் நடந்தது. என் கணவர் மதுரையைச் சேர்ந்தவர். விகடக் கச்சேரி செய்வார். அந்த நாளில் 3-4 படங்களில் கூட நடித்துள்ளார். அவரை சிறு வயது முதலாகவே பரிச்சயம் உண்டு. எங்கள் திருமணம் காதல் திருமணமல்ல. பெரியவர்கள் செய்து வைத்த திருமணம்தான். அவருக்கு சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு என்பதாலும், அவரே ஒரு கலைஞர் என்பதாலும் அவரை என் அப்பா தேர்வு செய்தார். அந்த விஷயத்தில் சங்கீத சம்பந்தமாக எனக்கு திருமண வாழ்க்கையில் எந்த இடைஞ்சலும் கிடையாது. என் கணவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். 1952-ல் என் மகன் சங்கர் பிறந்தான். 1953-ல் வித்யா பிறந்தாள்.
வித்யா நாட்டியமாடிக் கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பின் விட்டுவிட்டாள். சினிமாவிலும் நடித்து வருகிறாள்.
நீங்கள் எப்படியொரு பிரபலமோ, நடிகையாக இருப்பதால் அவரும் ஒரு பிரபலமல்லவா!
அவள் பாட்டும் பாடுவாள். பத்து வருடங்கள் பி.கிருஷ்ணமூர்த்தி சொல்லிக்கொடுத்தார். 300-400 கீர்த்தனங்கள் அவளுக்குப் பாடமுண்டு. கச்சேரியில் ராகம் ஸ்வரம் பாடும் அளவுக்கு அவள் தேர்ச்சி பெறவில்லை. மெல்லிசை மிகவும் நன்றாகப் பாடுவாள். உருது கஜல்களெல்லாம்கூடப் பாடுவாள்.
அப்பா வழியில் அவருக்கு முன்னால் யாரும் சங்கீதத்தில் ஈடுபட்டிருந்தார்களா? அதே போல உங்கள் அம்மா வழியில் யாரும் இருந்தார்களா?
என் அப்பா வழியில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இவர்தான் சிமிழி சுந்தரம் ஐயர், கொத்தவாசல் வெங்கடராம ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், புஷ்பவனம் ஐயர் போன்ற கலைஞர்களோடு பழகி சங்கீதத்தில் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
அம்மா வழியில் உண்டு. அம்மாவின் அம்மா – நாராயணியம்மாள் – ஒரு நாட்டியக் கலைஞர். அவரெல்லாம் பெரியதாக வெளிச்சத்துக்கு வரவில்லை. என் அம்மாவின் சித்தி – ருக்மணி – பாடிக் கொண்டிருந்தார். மேடையில் பாடுவதை என் அம்மா வழியிலிருந்து நான் கொண்டுள்ளேன் என்று சொல்லலாம்.
நீங்கள் முதலில் உங்கள் பெற்றோரிடம் கற்றீர்கள். அதன்பின் ஜி.என்.பி–யிடம் பயின்றீர்கள். உங்களுடைய சங்கீதம் முழுமையாக ஜி.என்.பி–யின் வழியைப் பின்பற்றியதா? அல்லது உங்கள் பெற்றோர்களின் வழியும் அதில் உண்டா?
என் பெற்றோர் வழியும் கொஞ்சம் உண்டு என்றாலும், பெரும்பாலும் என் வழி ஜி.என்.பி வழிதான். எனக்கு அவர் பாணியில் பிரமை (admiration) உண்டு. அவர் பாடுவது, சொல்லிக் கொடுப்பது, சங்கீத நுணுக்கங்களை விளக்குவது, சங்கீதத்தைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது, ஷார்ட் ஹேண்ட் போல ரேடியோவைக் கேட்டபடி ஸ்வரப்படுத்து எழுதிக் கொள்வது என்று அவருடைய ஒவ்வொரு செய்கையின் மேலும் எனக்கு பிரமையுண்டு.
தீவிர ஸ்வரஞானி அவர். சங்கீதத்தை பௌதீகம் போல விளக்குவார். இந்த கமகத்துக்கு இந்த அளவு என்று அவரால் சொல்ல முடிந்தது. நான் கூட அந்த வழியில் சங்கீத விஷயங்களை வெறும் கோட்பாடுகளாய் (dry theory) அடுக்காமல் இன்னும் சுவாரஸ்யமாகக் குழந்தைகளுக்குச் சொல்லலாம் என்று சொல்லி வருகிறேன். உதாரணமாக குரலமைப்பு, ஸ்வரங்களின் அளவு (frequency) போன்றவற்றை பௌதீக அடிப்படையிலும், லய சம்பந்தப்பட்ட விஷயங்களை கணிதம் மூலமாகவும், சங்கீத முன்னோடிகளை வரலாற்றுபூர்வமாகவும், வெவ்வெறு இடங்களில் உள்ள சங்கீதத்தை பூகோள அடிப்படையிலும் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
(ஜி.என்.பி–யின் இசையை நோக்கி அவர் பேச்சின் மையம் செல்கிறது. அதைப் பற்றி சொல்வதற்கு முன்னால், அந்தக் காலத்து இசையைப் பற்றிய பின்புலத்தை விளக்குகிறார்).
நான் கேட்டதிலிருந்து சொல்கிறேன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் காலத்தில் இசையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு முந்தைய தலைமுறையினரைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் நாயினாப் பிள்ளையை கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது எனக்கு சிறு வயது. ஒன்றும் நினைவில் இல்லை. அப்போது பாடிக் கொண்டிருந்த பெண்கள் ராகம், ஸ்வரம், பல்லவி போன்றவற்றில் ஈடுபடவில்லை. என் அம்மாவே கொஞ்சம் கொஞ்சம்தான் ராகம் பாடுவார். திருவாரூர் ராஜாயி, என் அம்மா போன்ற சிலர் மட்டும் பல்லவிகள் பாடுவார்கள். இன்றிருப்பது போல விஸ்தாரமாக இருக்காது.
பெண்கள் கச்சேரிகளில் பெரும்பாலும் வெறும் கீர்த்தனைகள்தான். ராகம் வெண்டுமென்றால் வயலின் கலைஞரை கொஞ்சம் ராகம் வாசிக்கச் சொல்லிவிட்டு, இவர்கள் கீர்த்தனையை பாடுவார்கள். ”கொஞ்சம் சங்கராபரணம் வாசிங்கோ. நாங்க ஸ்வர ராக ஸுதா பாடறோம்”, என்று சொல்வார்கள். பெங்களூர் நாகரத்தினம்மாள் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் அந்த ராகத்தை உம்காரத்தில் கொஞ்சம் பாடி நிறைவு செய்வார்.
என் காலத்தில், நான் கொஞ்சம் படித்திருந்ததாலோ என்னமோ என்னிடம் ஜி.என்.பி நிறைய சங்கீத நுணுக்கங்களைப் பற்றி பேசுவார். அதுவும் கச்சேரி நன்றாக அமைந்த நாட்களில் உற்சாகமாய் பலமணி நேரம் விளக்கிப் பேசுவார்.
அவர் கொஞ்சம் ‘மூடி டைப்’. அதனாலேயே அவரை தவறாக நினைத்தவர்கள் பலர். தனக்காக ஒருவரிடம் போய் நிற்கமாட்டார். தனக்குக் கிடைத்தது போதும் என்று இருந்துவிடுவார்.
(பேச்சில் ஒரு சிறு நிறுத்தம். அந்த நாள் அலையொன்று மோதுகிறது போலும். மீண்டும் பேச ஆரம்பிக்கும் போது ஒரு சிறு மடைமாற்றம்)
எனக்கு ஒரு குறை உண்டு. குடும்ப சூழல் காரணமாக நான் சம்பாதித்து ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் சீக்கிரமே நிறைய கச்சேரிகள் செய்ய வேண்டி வந்துவிட்டதால், நான் போதிய சாதகம் செய்யவில்லை என்று தோன்றுகிறது (’ப்ராக்டீஸ் போதாமல் போய்விட்டது என்று இப்பகூட நினைக்கிறேன்’). அனால் எனக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. (I had a flying start). சாதகம் இல்லாது போனாலும் கச்சேரிகள் மூலமாக காலூன்றிக் கொண்டேன்.
வீட்டில் உட்கார்ந்து பாடுவது..
(தான் மடைமாறிவிட்டதை உணர்ந்திருப்பார் போலும். உடனே சுதாதரித்துக் கொண்டு)
குருமுகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஜி.என்.பி-யிடம் சென்றேன். அவரும் ”இவளுக்கு நல்ல ஞானம் இருக்கிறது. இப்போது குரல் சன்னமாக இருக்கிறது. அது கனத்ததும் அவள் நன்றாக வருவாள். அவளுக்கு படிப்பெல்லாம் வேண்டாம், உங்கள் குடும்ப சூழலுக்கும் அவள் கச்சேரி செய்தால் நல்லது”, என்று சொல்லி என்னை சங்கீதத்துக்குள் இழுத்துவிட்டார்.
அப்போது பெண்களில் சுப்புலட்சுமி, பட்டம்மாள், வசந்தகோகிலம், சுந்தராம்பாள் என்று பலர் உச்சியில் இருந்தார்கள். ஆண்களிலும் அரியக்குடி, செம்மங்குடி என்று பலர். சொல்லப்போனால் 1940-லிருந்து 1967 வரை சங்கீதத்தின் பொற்காலம்தான். நாகஸ்வரத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள், ராஜரத்தினம் பிள்ளை, வீருசாமி பிள்ளை, திருவெண்காடு சுப்ரமண்ய பிள்ளை. பாட்டில் அரியக்குடி, செம்மங்குடி, செம்பை, முசிறி, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.எ.ன்.பி என்று அத்தனை ஜாம்பவான்கள். பக்கவாத்தியத்தில் ராஜமாணிக்கம் பிள்ளை, சௌடையா. மிருதங்கத்தில் பழனி சுப்ரமணிய பிள்ளை, மணி ஐயர், முருகபூபதி என்று அவ்வளவு மேதைகள்.
அப்படி ஒரு சமயத்தில் நானும் முன்னுக்கு வந்தேன். பட்டம்மாள், சுப்புலட்சுமி எல்லாம் எனக்கு பத்து வருடம் சீனியர்கள். நான் 1940-களில் மேலே வந்தேன். என்னுடம் கிளம்பினவர்கள் நிறைய பேர். சூடாமணி, எம்.ஏ.சுந்தரம், வக்கீல் சரஸ்வதி என்று பலர் எங்கேயோ காலப்போக்கில் காணாமல் போய்விட்டனர். சாவித்ரி கணேசன், வசந்தகோகிலம் போன்றவர்கள் மறைந்தே போய்விட்டனர். கடவுள் அருளால் நான் 48 வருடங்களுக்கு மேலாக பாடிவருகிறேன். (1991) ஜனவரி வந்தால் ஐம்பது வருடங்கள் ஆகிவிடும்.
(I’ll complete fifty years of service in 1991 என்றுள்ளார். விதி அவரை அந்த நாளைக் காணவிடாமல் 1990 அக்டோபரிலேயே அவரை மாய்த்துவிட்டது).
நான் தொடங்கிய நாட்களில் ஜி.என்.பி கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். அதனால் அவர் எனக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகளும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அப்போது சொல்ல ஆரம்பித்த விஷயம் விட்டுப் போய்விட்டது…
அன்றைய காலத்தில் அரியக்குடி முதலானோர் பாடிய வழிக்கு சற்றே வேறாக மகாராஜபுரம் வழி இருந்தது. அவருடைய பாணியில் வடக்கத்திய சங்கீதத்தின் தாக்கம் உண்டு. அதனால் அதைக் கேட்கும் போது புதிய அனுபவமாக (fresh) இருந்தது. அந்த வழியை ஜி.என்.பி இன்னும் விஸ்தாரப்படுத்தினார்.
ஜி.என்.பி-க்கு அவருடைய குரல் பெரிய வரம். அவர் குரலில் பிருகா பளீரென்று விழுந்தது என்பதற்காக அவருக்கு நிதானத்தில் இஷ்டமில்லை என்றில்லை.
(அவர் பாணியைப் பற்றிய புரிதல் பிழைகளை நோக்கி எண்ண ஓட்டம் பாய்கிறது)
இன்று நிறைய பேர் எங்கள் இசைப் பரம்பரையைப் (school of music) பிழையாகப் புரிந்துகொள்கிறார்கள்.
இந்தப் புரிதல் பிழைகளுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஜி.என்.பி-யின் வழி தன்னிச்சையாய் ஈர்க்கக்கூடியவொன்று. அதனால் அவருக்குப் பின்னால் வந்த தலைமுறையினர் பெரும்பாலும் பின்பற்ற முயல்கிறார்கள். அந்த வழியைத் தொடர வேண்டுமானால் அதற்கு ஒரு வழிமுறை உண்டு. அந்த வழிமுறையைப் பற்றி ஆலோசிக்காமல் பின்பற்றும் போது சிக்கல் எழுகிறது.
ஜி.என்.பி அவருடைய குரலுக்கும், அறிவுக்கும் ஏற்றபடி தன் பாணியை அமைத்துக்கொண்டார். அந்தப் பாணியை நம் குரலுக்கும் மற்ற வசதிகளுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரே சங்கதி ஆண் குரலில் வெளிப்படுவதற்கும் பெண் குரலில் வெளிப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. அவ்வளவு ஏன், ஒரே ஸ்வரங்கள் கொண்ட ஒரு சங்கதியை எடுத்துப் பார்த்தால் அது ஒவ்வொரு குரலில் ஒவ்வொரு மாதிரிதான் ஒலிக்கும். குரலின் அமைப்பு, அனுஸ்வரங்கள், சங்கதியின் காலப்ரமாணம் என்று சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தே தீரும். அச்சில் வார்த்தது போல் இருவர் பாடுவது மிகவும் கடினம். சகோதரர்கள்/சகோதரிகள் என்று இரண்டு பேராய் சேர்ந்து பாடும் போது, ஒரே மாதிரியாய் ஒலிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து செய்து அவர்கள் பாடுவதில் பல சமயம் ஒரு செயற்கைத்தன்மை (mechanical rendition) வெளிப்படும்.
(மீண்டும் ஜி.என்.பி பாணியின் அம்சங்களுக்கு சம்பாஷணை செல்கிறது)
ஜி.என்.பி அரியக்குடியின் கச்சேரி பத்ததியை எடுத்துக் கொண்டார். அரியக்குடியை நான் ஒரு பலசரக்குக் கடை என்று சொல்வதுண்டு. அரிசி, உப்பு, புளி, சர்க்கரை என்று எல்லாமே அங்கு கிடைப்பது போல வர்ணம், தியாகராஜர் கீர்த்தனைகள், மற்ற வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகள், தமிழ்ப்பாட்டுகள், பல்லவி, தேசிய உணர்வை பிரதிபலிக்கும் பாடல்கள் என்று எல்லாமே இருக்கும். அவர் நாளில்தான் இந்தக் கச்சேரி பத்ததி நிலைபெற்றது. நிறைய ராகம் பாடினாலும் அளவாக இருக்கும். கச்சேரியில் எங்குமே தொய்விருக்காது. அதிகக் கற்பனைகளை அவர் வெளிப்படுத்தினார் என்று சொல்ல முடியாமல் போனாலும், அவர் பாடியதில் பூர்ணத்துவம் (perfection) உண்டு. அவருக்கே உரிய காலப்ரமாணம். நாலு களை சவுக்கத்தில் பல்லவி என்றால் அதை ராமானுஜ ஐயங்கார்தான் பாடவேண்டும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் மத்யம காலத்துக்கு முதன்மை. ரொம்ப நேரம் வேகமாகப் பாடுவதென்பது இயலாது. ரொம்பவும் இழுத்து மெதுவாகப் பாடினால் கொஞ்ச நேரத்தில் அலுப்புதட்டிவிடும். மத்யம ஸ்தாயிக்கும், மத்யம காலத்துக்கும்தான் நம் சங்கீதத்தில் முதன்மை. அதை நிலைநாட்டியவர் அரியக்குடிதான். கடினமான கணக்குகளுக்குள் செல்லாமல் ஸர்வலகுவாய் ஸ்வரம் பாடினாலும் ஸ்வாரஸ்யமாய் பல வகைகளில், அரை ஆவர்த்தம், ஒரு ஆவர்த்தம் என்று சின்னச் சின்னதாய் சுவாரஸ்யமாய் ஸ்வரம் பாடுவார்.
(பாமா மணி – என்கிற இடத்துக்கு பொருத்தங்கள் வைத்து மத்யமாவதியில் பாடிக் காண்பிக்கிறார்).
இதெல்லாம் அவருடைய பெரிய பலங்கள். பாலக்காடு மணி ஐயர், பாப்பா வெங்கடராம ஐயர் போன்ற பக்கவாத்யங்களோடு சேர்ந்துவிட்டால் ஒரு நிமிஷம் கூட ரசிகர்களின் கவனம் வெறு எங்கும் செல்லாத வகையில் கச்சேரி அமைந்துவிடும்.
(பக்கவாத்தியங்கள் பற்றி பேச ஆரம்பித்ததும் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு பேச்சு தாவுகிறது)
ராஜமாணிக்கம் பிள்ளை, அந்த வகையில் எல்லோருக்கும் பொருத்தமாக வாசிப்பார். ஷட்ஜத்திலேயே இது அரியக்குடி ஷட்ஜம், இது ஜி.என்.பி ஷட்ஜம் என்று வாசித்துக் காண்பிப்பார். ‘குழந்தைக்கு சளிபிடித்தால் தாயார் மோர் விட்டுக் கொள்ளாமல் இருப்பது மாதிரி பாடுபவருக்கு ஏற்றார் போல பக்கவாத்தியம் என்று கூறுவார். எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். ஊரிலிருந்து வந்தால் எங்கள் வீட்டுல்தான் இறங்குவார். ”மருமகளே பாடு!” என்று என்னைப் பாடச் சொல்லி உடன் வாசிப்பார். அதே மாதிரிதான் மணி ஐயர்வாளும்.
(மீண்டும் அரியக்குடிக்கு வருகிறார்)
கச்சேரிக்கு இப்படி ஒரு வழி என்று காண்பித்தது ராமானுஜ ஐயங்கார்.
கர்நாடக இசை வரலாற்றில் அரியக்குடி நிறுவிய இந்தக் கச்சேரி பத்ததி ஒரு முக்கியமான மைல்கல். அதை உருவாக்க அவரை உந்தியது எதுவாக இருக்கும்? அவருக்கு முந்தைய காலத்தில் இப்படி ஒரு அமைப்பு இருந்ததாகத் தெரியவில்லை இல்லையா?
மத்தியம காலத்துக்கு முதன்மை அரியக்குடியின் குருவான பூச்சி ஐயங்கார் காலத்திலேயே வந்துவிட்டது என்று என் அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அரியக்குடி அதை ஒரு தெளிவான வழியாக நிர்மாணித்தார் என்று தோன்றுகிறது.
வரலாற்றுப்பூர்வமாகவும் சமஸ்தானங்களின் ஆதரவில் நடந்த பண்டிதர்கள் மட்டும் கலந்து கொண்ட சபைகளில் இருந்து, கச்சேரிகள் பாமர மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாக மாற ஆரம்பித்ததும் இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்திருக்குமா?
நீங்கள் சொல்வது போல, அன்றைய சூழலுக்கு ஏற்ப, பாமரரையும் பண்டிதரையும் ரஞ்சகம் செய்யும் வகையில் அரியக்குடி தன் வழியை அமைத்துக் கொண்டார் என்று சொல்லலாம். சுதந்திர போராட்ட காலத்தில் ‘ராட்டினமே’, ‘என்று தணியும்’ போன்ற பாடல்கள். தமிழிசைக்கு இயக்கம் எல்லாம் வருவதற்கு முன்னாலேயே பல தமிழ்ப்பாடல்கள் என்று அவருடைய வழி.
நான் முன் சொன்னது போல எல்லாம் கிடைக்கும் ஒரு பலசரக்குக் கடை அவர்.
ஜி.என்.பி-க்கு அவர்மேல் அசாத்திய பக்தி. அவர் பேரைச் சொன்னால் கூட எழுந்து நின்றுவிடுவார். நாங்கள் கூட “அப்படி என்ன அந்தப் பாட்டில் இருக்கிறது?” என்று கேட்டதுண்டு. “உங்களுக்கு எல்லாம் இப்போது புரியாது. நாற்பது ஐம்பது வயதுக்கு மேல் புரியும். அவரைப் பற்றி பேச உங்களுக்கு எல்லாம் தகுதி கிடையாது”, என்று கோபப்படுவார். ஒருமுறை அகாடமியில் தீட்சிதர் தினம் கச்சேரியில் அரியக்குடிக்கு பின்னால் அமர்ந்து தம்புரா போட்டபடி உடன்பாடினார். ”அவருடன் சேர்ந்து பாடினால்தான் அவர் பாணியில் உள்ள கஷ்டம் புரிகிறது.”, என்றார்.
அந்த வழியை அடித்தளமாகக் கொண்டு அதில் மகாராஜபுரம் அறிமுகப்படுத்திய புதுமையையும் சேர்த்துக்கொண்டார் ஜி.என்.பி.
விஸ்வநாத ஐயர் நல்ல குரல்வளத்தோடு கச்சேரிகளை நான் கேட்டிருக்கிறேன். அசாத்தியமான சாரீரம்! வேகமான சங்கதிகள் அந்தக் குரலில் அவ்வளவு அழகாக வெளிப்படும். ஷட்ஜத்தை அடிக்கடி தொட்டுக் கொண்டே சுற்றிச் சுற்றிப் பாடுவார். ஒவ்வொரு முறையும் ஷட்ஜம் துல்லியமாய் சேரும். கம்மல் சாரீரம் என்றாலும் அவ்வளவு ரஞ்சகம். நல்ல லட்சிய ஞானம். இந்த சங்கதியை போட வேண்டும் என்று நினைத்துப் பாடமாட்டார். கற்பனையின் போக்கில் போய் பாடிவிடுவார். அது பிரமாதமாக வந்து விழும்.
ஜி.என்.பி வானொலி நிலையத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. எனக்கு ஜி.என்.பி-யிடமிருந்து ஃபோன் வந்தது. என் வீடு பக்கத்தில்தான் எட்வர்ட்ஸ் எலியட்ஸ் ரோடில் இருந்தது. “உடனே கிளம்பி வா! இப்படி ஒரு முகாரி கேட்கக் கிடைக்கவே கிடைக்காது”, என்றார். நான் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. “உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்”, என்று வைத்துவிட்டார்.
ஜி.என்.பி-யின் இசையில் இன்னொரு முக்கியமான அம்சம் ராஜரத்தினம் பிள்ளையின் கற்பனை. இந்த மூன்றையும் சேர்த்து தனக்கென்று ஒரு வழியை அமைத்துக்கொண்டார் என்பதுதான் என் கணிப்பு.
ராஜரத்தினம் பிள்ளையின் கற்பனையைப் பற்றி சொல்ல முடியுமா?
ராகம் வாசிப்பதில் அவரைப் போல ஒருவர் வாசித்துக் கேட்டதில்லை. இனிமேலும் கேட்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். தோடி, ஷண்முகப்ரியா போன்ற ராகமெல்லாம் அவருக்கே உரியவை. அவருக்கு அதிகம் கீர்த்தனைகள் பாடமிருக்கவில்லை. அதைப் பற்றி ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்கிறேன்.
அவரும் ஜி.என்.பி-யும் நெருங்கிப் பழகியவர்கள். ஒருமுறை ராஜரத்தினம் பிள்ளை, “நான் ஏதோ ராகம் மட்டும் ஊதறேன். அதிகக் கீர்த்தனங்கள் தெரியாது. லயத்திலும் எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. இப்பல்லாம் சில்லறைப் பாட்டு வாசிக்க வேண்டிக் கேட்கிறார்கள். நீங்கள் எனக்கு சிலவற்றைச் சொல்லி வைக்க வேண்டும்”, என்று கேட்டார்.
“சில்லறைக்கு எல்லாம் எங்களைப் போன்ற சில்லறை மனிதர்கள் இருக்கிறோம். நீங்க அந்த ராகம் வாசிக்கும் உயர்ந்த ஸ்தானத்திலேயே இருங்கள். உங்கள் வாசிப்பு கல்வெட்டில் பொறித்த எழுத்துகள் மாதிரி”, என்றார் ஜி.என்.பி. அப்போது நான் உடன் இருந்தேன்.
இந்த மூவரின் பாதிப்பில் அமைத்த வழிதான் ஜி.என்.பி. அதைத்தான் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
“எனக்கு சில குறைபாடுகள் உண்டு. அதை வளர்த்துக் கொண்டுவிடாதீர்கள்.”, என்று அவர் சொல்லுவார்.
(அவர் என்ன மனநிலையில் அதைச் சொல்லியொருப்பார் என்பதை நோக்கி நகர்கிறது உரையாடல்).
அவருக்கு ஷட்ஜம் சேராது என்று இப்போது கூட சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய சிறப்பு என்ன என்று யாரும் சொல்வதாகத் தெரியவில்லை. அவருக்கு நிதானமே பிடிக்காது என்கிறார்கள். அவருக்கு நிதானம் ரொம்ப பிடிக்கும். நாம் கமகம் என்கிற பெயரில் அளவுக்கு மீறி அசைக்கக் கூடாது என்று அவர் சொல்லுவார். அவர் ஸ்ருதிபேதம் செய்தவுடன் எல்லோரும் விமர்சித்தார்கள். ஆனால் சிலபஸில் Modal Shift பாடமாக இருக்கிறது. முத்தையா பாகவதர் அதை உபயோகப்படுத்திதான் ஆபோகியில் மத்யமத்தை ஷட்ஜமாக்கி வலஜி என்கிற ராகத்தைக் கொண்டுவந்தார்.
காலை வேளையில் பம்பாயிலிருந்து ஒலிபரப்பாகும் இசையை வானொலியில் ஜி.என்.பி கேட்பார். ஒருநாள் ரோஷனாரா பேகம் ஹிந்தோள் என்று ஒரு ராகம் பாடினார். அதைக் கேட்டுவிட்டு, “இந்த ராகம் ரொம்ப அழகாகயிருக்கிறது”, என்று என் அப்பாவிடம் சொன்னார். என் அப்பா கைப்பட 2500 மேலான ராகங்களுக்கு ஆரோகணம் அவரோகணம் எழுதி வைத்திருந்தார். அந்த குறிப்புகள் எங்கோ தொலைந்துவிட்டன. அதில் பார்த்துவிட்டு இந்த ராகத்துக்கு பெயர் ஸுநாதவினோதினி என்று சொன்னார். அந்தக் குறிப்புகளில் பார்த்துதான் பஞ்சமம் இல்லாது வடக்கத்தியர்கள் பாடும் சுபபந்துவராளிக்கு சேகரசந்திரிகா என்று பெயர் என்று தெரிந்து கொண்டோம்.
அதுதான் ஜி.என்.பி மூலம் கர்நாடக இசையில் சுனாதவினோதினியாக வெளியில் வந்தது. ஒரு பாடலை அந்த ராகத்தை மெட்டமைத்து ஜி.என்.பி பாடினார். அதை பெங்களூரில் ஒரு கச்சேரியில் வாசுதேவாச்சார் கேட்டுவிட்டுதான் ‘தேவாதி தேவா’ பாடலைப் புனைந்தார்.
புதுப்புது ராகம் கண்டுபிடித்ததை ஏதோ குறையாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் தியாகபிரம்மம் எவ்வளவு புது ராகங்களில் பாடல் புனைந்துள்ளார்? புரந்தரதாசர் காலத்தில், பழைய புத்தகத்தைப் பார்த்தால், தேசிய தோடி, தோடி, பைரவி மாதிரி சில ராகங்கள்தான் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. தியாகப்பிரம்மம் நாளில்தான் பல ராகங்கள் வெளியில் வந்தன.
புரந்தரதாசரை நீங்கள் குறிப்பிட்டதால் கேட்கிறேன். அவருடைய சாகித்யங்கள் கிடைக்கின்றனவே தவிர, இன்று கிடைக்கும் மெட்டுகளின் நம்பகத்தன்மை என்ன?
சில பழைய மெட்டுகள் காலம் காலமாக வருபவை. ’பாக்யாத லட்சுமி’ போன்ற பாடல்களை உடுப்பி மாதிரி ஊர்களில் இன்றும் வீட்டில் பெண்கள் பாடுவதைக் கேட்க முடியும். கல்யாணி என்று எடுத்துக் கொண்டால் மெட்டுகளின் பெரிய வேறுபாடு இருக்காது. ஒரே மெட்டுதான் திரும்பத் திரும்ப வரும். இருந்தாலும் சரளி, ஜண்டை, அலங்காரம், கீதம் ஆகியவற்றை ஏற்படுத்தியவர். அவர் காலத்தில்தான் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்கிற அமைப்பு ஏற்பட்டது என்கிற வகையில் அவர் ஒரு மார்கதரிசி.
மற்ற மெட்டுகளை எடுத்துக் கொண்டால், ஒரே பாடலுக்கு ஐம்பது மெட்டுகள் தேவையில்லை என்று தோன்றுகிறது. நான் சமீபத்தில் பெங்களூரில் ஒரு கோரிக்கை வைத்தேன். அரசாங்கமோ அல்லது வேறொரு அமைப்போ முன்னின்று இந்த மெட்டுகளை சீரமைக்க வேண்டும். இந்தப் பாட்டுக்கு இதுதான் மெட்டு என்று நிர்ணயிக்க வேண்டும். அதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.
(மீண்டும் ஜி.என்.பி–க்கு வருகிறார்….)
ஜி.என்.பி பிருகாவைப் பற்றி சொல்லும்போது, “ஒரு பிருகா நாலு அட்சரத்துக்கு பேசினால். அடுத்த காலம் எட்டு அட்சரம், அதற்கடுத்த காலம் பதினாறு அட்சரம் என்று துல்லியமாகப் பேச வேண்டும். குரல் வசதியில்லை என்பதற்காக 12 அட்சரம், 13 அட்சரம் என்று குறைத்துப் பேசினால் அதைப் பாடாமல் இருப்பதே உசிதம்”, என்பார்.
கமகத்தை நாம் அளவுக்கு மீறி உபயோகித்துவிடுகிறோம் என்பார். ஒரு ஸ்வரத்தை அசைத்தால் அடுத்த ஸ்வரத்தை அசைக்கக் கூடாது. (தோடியில் காகரிரி என்று பாடிக் காண்பிக்கிறார்). காந்தாரத்துக்கு அசைவு கொடுத்தால் ரிஷபத்துக்கு அசைவில்லாமல் பாட வேண்டும். எதைச் செய்தாலும் அதில் அழகுணர்ச்சி கெடாமல், ஸ்வானுபாவத்தோடு பாடவேண்டும். நான் புதுமையாக செய்கிறேன் என்று கிளம்பி மூக்கைக் கொண்டு முகத்துக்குப் பின்னால் வைக்கக்குடாது. இன்றைக்கு எல்லோரும் நன்றாகத்தான் பாடுகிறார்கள். இதற்கும் அடுத்த நிலையில் ஸ்வானுபவமாகப் பாட வேண்டும்.
இன்றைய நிலையில் சீக்கிரம் கச்சேரி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறதோ? எல்லோரையும் சைல்ட் பிராடிஜியாகக் காட்ட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்களோ?
நம்மிடையில் நிஜமான பிராடிஜிஸ் இருவர் இருக்கிறார்கள். ரவிகிரணும், மேண்டலின் ஸ்ரீனிவாஸும். இவர்கள் பிறவி மேதைகள். ராஜரத்தினம் பிள்ளை, ஜி.என்.பி, மதுரை மணி மாதிரி யாரோ ஒரு மேதையின் மறுஅவதாரம் என்றுகூடச் சொல்லுவேன். அவர்களைப் பார்த்து மற்ற குழந்தைகளை மேடையேற்றி தவறு செய்துகொண்டிருக்கிறார்கள்.
இன்று பொதுவாகவே வாய்ப்பாட்டு குறைந்துவிட்டது. வாத்தியக்கலைஞர்கள்தான் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். பத்து வயதில் ஒரு குழந்தையை மேடையேற்றிப் பாடச் சொல்லிவிட்டு, பதினான்கு வயதில் குரல் உடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
இந்த நிலை ஹிந்துஸ்தானியில் சற்று பரவாயில்லை. நான் சமீபத்தில் கல்கத்தாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு ரஷீத் கான் என்று ஒரு பையனின் பதிவைக் கேட்டேன். ரொம்பவே நன்றாக இருந்தது. இருந்தாலும் அவன் குரு சொல்கிறார், “இன்னும் அவன் வெளியில் வந்து பாட கொஞ்சம் காத்திருக்க வேண்டும்”, என்று.
அங்கு ஐ.டி.சி-யில் ஒவ்வொரு கரானாவையும் கட்டிக் காக்க நிறைய வழி செய்துள்ளார்கள். நல்ல சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை நியமித்து, மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிக்க வழி செய்துள்ளார்கள்.
நம் ஊரில்தான் ஒருவர் வழியின் மேல் இன்னொருவருக்கு துவேஷம் வளர்த்துக் கொண்டுவிட்டோம். தனம்மாள் பாணி சங்கீதத்தின் மேல் எங்களுக்கெல்லாம் பெரிய மரியாதை உண்டு. என் அம்மாவே தனம்மாளிடம் நிறைய பதங்கள் ஜாவளிகள் கற்றுக்கொண்டுள்ளார். நான் பிருந்தாம்மாவைப் பார்த்தால் மரியாதையாய் நமஸ்கரிப்பேன். ஆனால் பேப்பரில் எழுதுபவர்கள், கலைஞர்களுக்கு இடையில் இருப்பவர்கள் அப்படி நினைப்பதில்லை. ”இது தள்ளுபடி. இது சரியில்லை. அதில் குறையுள்ளது. இது சாஸ்திர விரோதம்”, என்று சொல்லிச் சொல்லி துவேஷத்தை வளர்க்கின்றனர்.
இது அடிப்படையில் கலை. அதை ஒரு சட்டகத்துக்குள் அடைக்க முடியுமா? ரவிவர்மா வரைந்த அதே பாணியில்தான் எல்லோரும் இன்று வரைந்து கொண்டிருக்கிறார்களா? இதைச் சொல்லும் வேளையில், அடிப்படையே இல்லாமல் “பழையதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? யார் வரையறுப்பது. எப்படி வேண்டுமானாலும் பாடுவேன்.”, என்று சொல்வதையும் நான் ஆதரிக்கவில்லை. அந்த அடிப்படையை சரியாகப் பெறுவதற்காகத்தான் குருமுகமாகக் கற்பது.
ஜி.என்.பி உட்கார வைத்து சொல்லிக் கொடுப்பாரா?
முன்பே சொன்னது போல அவர் அன்றைய மனநிலையைப் பொருத்ததுதான். சில நாட்கள் காலையிலிருந்து மாலை வரை பேசாமலே இருந்துவிடுவார். சில சமயம் கீர்த்தனையை அழகாக ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுத்துவிட்டு, ஒருமுறை பாடிக்காட்டிவிடுவார். மற்றபடி அவர் கச்சேரியில் பாடுவதைக் கேட்டு நாம் சரிபடுத்திக் கொள்ள வேண்டியதுதான். அது போன்ற சில கிருதிகளை, அவர் காலையில் எழுதிக் கொடுத்துப் பாடிக் காண்பித்ததை நான் மாலையில் கச்சேரியில் பாடியிருக்கிறேன். “ரெடிமேட் டிரஸ்ஸை எடுத்து மாட்டிக்கிறா மாதிரி இப்படி கீர்த்தனையைப் பாடலாமா? ஒரு கீர்த்தனையைப் பாடறதுக்கு முன்னாடி எவ்வளவு போஷணை பண்ணனும்”, என்று கோபித்துக் கொள்வார்.
ஜி.என்.பி-யின் நெருங்கிய நண்பரும் பள்ளித் தோழருமான சி.கே.வெங்கடநரசிம்மனும் இந்த விஷயத்தில் நிறைய உதவி செய்திருக்கிறார். ஜி.என்.பி-யின் மனநிலை சரியில்லாவிட்டால் சொல்லிக் கொடுக்கமாட்டார் என்பதை உணர்ந்து, எங்களை அவர் வீட்டுக்கு வரச் சொல்லிவிடுவார். அவர் வீட்டில் பாலக்காடு மணி ஐயர் முதலானோர் வந்திருப்பார்கள். அவர் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு நாள் முழுவதும் சாதகம் செய்வோம். அங்கு வந்துவிட்டால் ஜி.என்.பி-யும் உற்சாகமாக சங்கீதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அவரும் மணி ஐயரும் சேர்ந்து கீர்த்தனைகளை மெருகெற்றுவதைப் பார்த்திருக்கிறேன். மணி ஐயர் தன்னை விட சங்கீதத்துறையில் சீனியர் என்று ஜி.என்.பி-க்கு பெரிய மதிப்பு. “அடியேன் இந்த சங்கதி வைத்துக் கொள்ளலாமா”, என்று அவரிடம் அபிப்ராயம் கேட்பார்.
நிறைய நேரம் உட்கார வைத்து சொல்லிக் கொடுக்கமாட்டர் என்றாலும், அவர் பாடிக் காட்டி கூறும் விளக்கங்கள், நுணுக்கங்கள் ஆழமாய் பதியும்படி இருக்கும்.
(மறுகேலரா–வில் ராகவாவில் வறும் சிறு சிறு நகாசுகளைப் பாடிக் காட்டுகிறார்).
இதயெல்லாம் ஒலிப்பதிவில் கேட்டு கற்றுக் கொள்ளமுடியாது.
(மாரமணன் கிருதியில் ‘மாற ஜனகன்’ என்கிற இடத்தைப் பாடிக் காண்பிக்கிறார்)
வல்லினம் மெல்லினம் சேர்த்து எப்படிப் பாடுவது.?எங்கு வாயைத் திறந்து பாடுவது? எப்படி குரலைக் குறுக்கி ஆனால் ஒரேடியாய் அழுத்தாமல் பாடுவது என்பதெல்லாம் நேரில்தான் தெரிந்துகொள்ள முடியும்.
மைக்கின் முன்னால் பாடுகிறோம். அதில் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. கீழ் ஸ்தாயியில் குறிப்பாக பெண்களுக்கு, மைக்குக்கு அருகாமையில் வந்த பாட வேண்டியிருக்கலாம். சில சங்கதிகளுக்கு மைக்கிலிருந்து கொஞ்சம் விலகி இருந்து பாட வேண்டியிருக்கும். அதற்காக ரொம்பவும் விலகிப் போய்விடவும் கூடாது. மைக் வைப்பவர்களுக்கு முதலில் சங்கீத ஞானம் வேண்டும். டீக்கடை மாதிரி இஷ்டத்துக்கு திருப்பிவிட்டுவிடும் போது பாடுபவர்களுக்கும் பக்கவாத்தியகாரர்களும் இடையிலேயே சண்டை வந்துவிடுகிறது. கேட்பவர்களுக்கு தலைவலிதான் மிஞ்சுகிறது.
(உரையாடல் எங்கோ சென்றுவிட்டதை உணர்ந்து மீண்டும் இடத்துக்கு வருகிறார்)
எதற்கு இதை சொல்ல வந்தேன் என்றால், நமக்கு ஒரு குருவின் மூலம் நல்ல அடிப்படை வேண்டும். அதற்கு மேல் நம்முடைய குரல், சக்தி, அறிவு எல்லாம். இதில் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும்.
நாம் என்ன ஆகாசத்திலிருந்தா குதித்தோம்? தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா வழித்தோன்றலாகத்தானே வந்தோம்? அவர்களின் சாயல் நமக்கு இருக்கத்தானே செய்யும்? அப்படித்தான் சங்கீதத்திலும்.
சில விமர்சகர்கள், சில பாணியை அப்படியே பாடினால் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், எங்கள் பாணியில் அப்படிப் பாடினால் நகலெடுக்கிறார்கள், தனித்தன்மை (originality) இல்லை என்று குறை கூறுகின்றனர். ராகம் மார்டர்னாக இருக்கிறது. ராகத்துக்கு சூட்டு கோட்டு போட்டது போல இருக்கிறது, என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
ராகத்தில் என்ன மார்டர்ன் ராகம்? ஜி.என்.பி சிவசக்தி என்று ஒரு ராகம் உருவாக்கினார். அவர் ஸ்ரீவித்யா உபாசகர். அதிலும் கடைசி பத்து வருடங்கள் அவர் கவனம் முழுவதும் பூஜையில்தான். ஸ்ரீசக்கரத்துக்கு ஒன்பது முகங்கள். (சிவனுக்கு 4, சக்திக்கு 5. இந்த ராகத்தில் ஆரோகணத்தில் நான்கு ஸ்வரங்கள். அவரோகணத்தில் ஐந்து ஸ்வரங்கள்). அதனால் இப்படிப் பெயர் வைத்தேன் என்றார். இது கரஹரப்ரியா ஜன்யம்.
இந்த ராகத்தை என் சிஷ்யை சுதா அகாடமியில் பாடியிருக்கிறாள். அதற்கு ஹிந்து பேப்பரில் ஒரு விமர்சனம் வந்தது. “திடீரென்று ஒரு மார்டர்ன் ராகம் வந்தது”, என்று வந்திருந்தது. இதில் என்ன மார்டர்ன் இருக்கிறது?
அப்படியெனில் தியாகையர் நாளில் அதற்கு முன்னாலில்லாத ராகங்களில் எல்லாம் அவர் பாடல் புனைந்தாரே அவரை இவர்கள் மார்டர்ன் என்று ஏன் சொல்லவில்லை? ஆக இது மார்டர்னா இல்லையா என்பது ஆளைப் பொருத்து, எந்த வழியில் வந்தவர் என்பதைப் பொருத்து இருக்கிறது. ஜி.என்.பி என்கிற பெயரைப் பார்த்தாலே ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று ஆகிவிட்டது இவர்களுக்கு.
கதனகுதூகலத்தில் ‘ரகுவம்ச சுதா’ இருக்கிறது. வேறொரு பரிமாணத்தைக் காட்டினால் ஒரு படிப்பினையாகவும் இருக்குமே என்று அவர் சில கிருதிகள் அமைத்திருக்கிறார்.
அவர் காலமாவதற்கு சிறிது காலம் முன்பு அவரை செங்கல்பட்டு ஸ்டேஷனில் ஏற்றிவிடப் போயிருந்தேன். அப்போது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நான் நிறைய பரிசோதனைகள் செய்துவிட்டேன். நிறைய அபூர்வ ராகங்களைப் பாடிப் பார்த்துவிட்டேன். இந்த கன ராகங்களில்தான் விசேஷம் இருக்கிறது. ஆயிரக் கணக்கான வருடங்களாய் பாடப்பட்டு வந்தாலும் இன்னும் அதில் புதிய பரிமாணங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனை பேர் பாடிய அந்த ராகங்களை நாம் பாடி கேட்பவரைத் திருப்தியுரச் செய்ய வேண்டுமானால் எவ்வளவு உழைக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். நீங்களெல்லாம் ஞானமுள்ளவர்கள். சிந்தித்துப் பாருங்கள். கற்பனையைக் கட்டற்று ஓடவிடாமல், உசிதமான கற்பனையாக – ராக ஸ்வரூபம் கெடாமல் செய்யுங்கள். கன ராகங்களில்தான் நம் சங்கீதத்தின் சாரம் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்பதுதான் நான் என் அனுபவத்தில் உணர்ந்ததுகொண்டது”, என்றார்.
இதெல்லாம் இந்த விமர்சகர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு என்னமோ ஜி.என்.பி வழியில் அவர்கள் புதியதாக எதையோ செய்து சங்கீதத்தை நாசம் செய்துவிட்டனர் என்று எண்ணம். இந்த விஷயம் பதிவாக வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். மிகவும் வருதத்தோடு இதைப் பதிவு செய்கிறேன்.
“இவர்களுக்கு எல்லாம் சம்பிரதாயம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏதோ ஸ்வரத்தை வைத்து ராகம், கீர்த்தனை எல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.”, என்று தப்பான அபிப்ராயம் பரவியுள்ளது.
இன்னொரு வகையில், இந்த வழியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பாட முயன்றவர்களும் இப்படி ஒரு அபிப்ராயம் பரவ முக்கிய காரணம் என்றும் சொல்ல வேண்டும். உதாரணமாக ஒரு பிருகா பாடினால், ‘ஸ ரி க ம ப த நி ஸ’ என்றால் எட்டு ஸ்வரமும் தெளிவாகக் கேட்க வேண்டும். தேசலாக விழக்கூடாது. அப்படி முழுமையாக விழுவதுதான் ஜி.என்.பி பாணி. அவர் கடைசி காலத்தில் பாடிய தோடி ராகப் பதிவு ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுப் பார்த்தால் நான் சொல்வது புரியும். அவருடைய கன சாரீரத்தில் அந்தப் பிருகா அப்படி வந்து விழும்.
பாடுவதற்கு இரண்டு தினுசுகள் உள்ளன. ஒன்று ‘perfection; இன்னொன்று ‘adventure’. சாகஸ வழிக்குச் சென்றால் சில சமயங்களில் தோல்விகள் ஏற்படும்.
அதிலும் வாத்தியத்தை விட குரலில் தோல்விகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அது மனித சாரீரம்தானே? அன்றைய உடல்நிலை, குரல்நிலை, மனநிலை, வந்து குழுமும் ரசிகர்கள் என்று எத்தனையோ விஷயங்கள் சரியாகக் கூடினால்தான் சங்கீதம் சரியாக வெளிப்படும்.
சில நாட்களில் மனம் நினைப்பது வெளிப்படாமல் போய்விடும். நினைப்பது வந்துவிடும் நாட்களில் அதைவிடச் சிறந்தது வேறில்லை என்று தோன்றும். துல்லியத்தை நாடும் வழியில் அந்தப் பிரச்னை இல்லை. அதுவும் ஒன்றும் குறைச்சலானதல்ல. அதைப் பின்பற்றுவர்களுக்கு நாங்கள் எதிரியல்ல. இரண்டு வழிகளும் சேர்ந்து பயணிக்க முடியும்.
சிலபேர் தவறு கண்டுபிடிப்பதற்கென்றே கச்சேரிக்கு வருகின்றனர். மனிதரில் தவறில்லாத மனிதர் எவர்? தியாகராஜர் சொல்கிறார், “வசிஷ்டர் குறித்துக் கொடுத்த உனது பட்டாபிஷேகமே தவறிவிட்டதே, நீ மனிதன்தான்.”, என்கிறார். மனிதனாக அவதாரம் எடுத்தால் தெய்வத்துக்கே தவறு ஏற்படுகிறதில்லையா?
ரசிகர்களிலேயே பல வகையான ரசிகர்கள் இருக்கின்றனர். என்னதான் பக்தி என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், நாங்கள் பணத்திற்காகப் பாடுகின்றோம் என்பதை மறுக்கமுடியாது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் வரும் போது அவர்கள் விருப்பப்படி நாம் பாட வேண்டியது கடைமையாகிறது. அப்படியெல்லாம் பாடமாட்டேன் என்றால் வீட்டிலேயே பக்திப் பரவசமாய் பாடிக் கொண்டிருக்கலாம்.
காரைக்குடி சாம்பசிவ ஐயர் வீட்டில்தான் வாசிப்பார். அவரைக் கச்சேரிக்குக் கூப்பிட்டால், “நான் அதற்கெல்லாம் லாயக்கற்றவன். எனக்குத் தெரிந்ததை நான் வீட்டில் வாசித்துவிட்டுப்போகிறேன். நீங்கள் வேண்டுமானால் வீட்டில் வந்து கேளுங்கள்”, என்பார். அவரைப் போல எல்லோரும் இருக்க முடியுமா?
அதற்காக மேடையில் ஏமாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை. நம் கச்சேரிக்கு வடக்கே இருந்து யாரோ வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏன் ஹிந்துஸ்தானி கலைஞர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நான் பஜன் பாட முடியுமா? அவர்கள் நம் ஊருக்கு வந்து பாடினால் ‘ராமா நீ சமானமெவரு’ பாடுகிறார்களா என்ன? அப்படி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு ஹிந்துஸ்தானி கலைஞர்கள் நகைக்கின்றனர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பஜன் பாடுகிறார் என்றால், அவர் அதை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார். அவர் குரலுக்கு அது நன்றாகவும் இருக்கிறது. அதனால் அதை ஒப்புக்கொள்ளலாம். அதைப் பார்த்துவிட்டு நானும் பாடுகிறேன் என்று எல்லோரும் கிளம்பினால் அது அங்குமில்லாமல் இங்குமில்லாமல் குழப்பத்தில் முடிகிறது. இந்தக் குழப்பங்கள் போக வேண்டும்.
வடக்கில் இந்தக் குழப்பங்களில்லை. கஜல் பாடுபவர்கள், தும்ரி, கயால் பாடுபவர்கள், டிராமா பாடுபவர்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று பாடுபவர்கள் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளாமல் தனியாக இயங்குகின்றனர்.
ஐ.டி.சி-யில் ஒவ்வொரு கரானாவுக்கும் முக்கியத்வம் கொடுத்து அதற்கென்று ஆசிரியர்களை நியமித்து, உயர்வு தாழ்வெல்லாம் பார்க்காமல் வருங்காலத்துக்கு பாதுகாக்க வழி செய்து வருகின்றனர். இங்கும் அது வர வேண்டும். திறந்த மனத்துடன் அனைத்து பாணிகளையும் அணுக வேண்டும். எல்லாவற்றிலும் உள்ள நல்லதை நாம் கேட்டு ரசிக்க வேண்டும்.
அந்தப் பண்பு ஜி.என்.பி-க்கு நிறைய உண்டு. அதே போல ஒன்று வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் அவர் மனத்தை மாற்ற முடியாது. எனக்கே அவர் இருந்த வரை வானொலியில் டாப் கிரேட் கிடைக்கவில்லை. “இன்னும் கொஞ்சம் வளர வேண்டும்”, என்று தள்ளிப் போட்டுவிட்டார். அவர் மறைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்தான் டாப் கிரேட் கிடைத்தது. அதற்காக அவர் மேல் ஒன்றும் கோபமில்லை. அவருடைய சுபாவமது.
தொகுத்துச் சொன்னால், பிடிவாதமாய் சரி தவறென்று வகுத்துக் கொள்ளும் போது கொஞ்சம் சிக்கல்தான். அப்படிப்பட்ட மனநிலையினால் இன்று சில பாணிகள் தேய்ந்து அழிந்தே போய்விடுமோ என்று அச்சமாகயிருக்கிறது. ஒரு வழியில் வந்து பாடுபவர்களும் தங்கள் வழியின் அடிப்படைகளை நன்றாகப் புரிந்து கொண்டு பாட வேண்டும்.
ஒன்று பாரம்பர்யமாக கற்று, தங்கள் பரம்பரையின் தனித்துவத்தை விட்டுவிடாமல் பாடி வரவேண்டும். அல்லது இருப்பவற்றில் தனக்குகந்ததைத் தேடி, அழகுணர்ச்சியோடு தனதாக்கிக் கொள்ளும் திறன் வேண்டும். நானும் பாடிக் காண்பிக்கிறேன் என்று வீம்புக்கு பாட வருபவர்களால் பிரயோஜனமில்லை.
இன்னொரு விஷயம், சங்கீதத்தையே தொழிலாக வைத்துப் பிழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இடையில், பணமிருப்பவர்கள் அவர்களுடைய செல்வாக்கை உபயோகித்து நுழையும் போது, இதையே நம்பியிருப்பவர்களின் பாடு திண்டாட்டமாகிறது.
எங்களைப் போன்ற முழுநேர கலைஞர்களும், காரியம் ஆகவேண்டுமென்பதற்காக, பணக்கார வீட்டுக் குழந்தை பாடினால் சுமாரான பாட்டைக் கூட அதீதமாய் புகழ்ந்துவிடுகின்றனர். இதனால் உண்மையான சங்கீதத்துக்கான மதிப்பு குறைந்துவிடுகிறது.
சங்கீதம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?
எனக்குச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஏனெனில், சொல்லிக் கொடுக்கும்போது நான் செழுமையடைகிறேன். சொல்லிக் கொடுக்கும் போது நமக்கும நாமே அங்கு குருவாகிறோம். ஒரு சங்கதியை சொல்லிக்கொடுக்கும் போதுதான் அது சரியாக இருக்கிறதா, ராகத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றெல்லாம் சீர்தூக்கிப்பார்க்க முடிகிறது. நாமே குருவாகவும், சிஷ்யனாகவும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
உண்மையாய் நாம் சொல்லிக் கொடுக்கும்போது, தவறைத்தான் முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். எதை விலக்கவேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். அதைச் செய்தோமெனில், நல்லவை தானாக வந்துவிடும்.
லட்சியம், லட்சணம் – இரண்டும் சேரும் போதுதான் பூர்ணத்துவத்தை நோக்கிப் போக முடியும். சங்கீதத்தில் பூர்ணத்துவம் என்பதை அடையவே முடியாது என்பது வேறு விஷயம். அது பெரிய கடல். எல்லையை நோக்கிப் போகிறோம். எல்லையை அடையாவிட்டாலும் நம் உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ப நமக்கு சில சிப்பிகள் கிடைக்கின்றன. கிடைக்கும் முத்துகளில் சிலது சிறியதாக இருக்கலாம். சிலது பெரியதாக இருக்கலாம். சிலவற்றில் ஒன்றுமே இல்லாமல்கூடப் போகலாம். அது அவரவருக்கு விதித்தது. ’சீதாவர சங்கீத ஞானமு – தாத வ்ராயவலெரா’ என்று தியாகராஜர் சொன்னது போலத்தான்.
ஒரு கீர்த்தனையை குருமுகமாகப் பாடம் செய்தால், அதை முடிந்தவரை மாற்றாமல் பாட வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குப் புதியதாகச் செய்ய எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன. கீர்த்தனையை மாற்றித்தான் என் சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டுமென்று இல்லை. அப்படி மாற்றாமல் இருப்பது ஒருவிதத்தில் குருவின் மேலுள்ள மதிப்பில் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
இந்த வித்தைக்கு நிச்சயம் குருவருள் தேவை. ஒவ்வொரு நாளும் கச்சேரியில் தவறு வர எத்தனையோ சாத்தியங்கள் உண்டு. நாம் ஒன்று நினைப்போம். பாட்டில் வெளிவருவது முற்றிலும் வெறொன்றாக இருந்துவிடக்கூடும்.
இன்று எவ்வளவோ வசதிகள் வந்திருக்கலாம். அன்றைய நாள் போல குருகுலவாசம் செய்வதென்பது முடியாமல் போகலாம். ஆனாலும் ஒரு குருமுகமாகக் கற்பது என்பது மிகவும் அவசியம். உதாரணமாக கர்நாடிக் காலேஜை எடுத்துக் கொள்வோம். அங்கும் டி.எம்.டி, கே.வி.என் போன்ற பெரிய கலைஞர்கள்தான் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். கல்லூரியில் போய் ஒரு பெரிய வித்வானின் மேற்பார்வையில் பட்டயம் வாங்கினாலும், ஒரு மருத்துவர் படிப்புக்குப் பின் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்ப்பது போலவோ, வக்கீலுக்குப் படித்தவுடன் ஜூனியராக வேலை பார்ப்பது போலவோ, தங்கள் மனதுக்குப்படித்த, தங்கள் சங்கீதத்துக்கு ஒத்து வரும்படியான குருவைத் தேடி அவரிடமும் தனிப்பட்ட முறையில் கற்பது மிகவும் அவசியம்.
மாணவர்கள் எப்படி குரலை வளப்படுத்துவது, எந்த ஸ்ருதியில் பாடுவது என்பது பற்றி சொல்ல முடியுமா?
குரல் என்பது அவரவர்க்கு அமைந்துதான். அனாலும் பாடும் போது விகாரமாக இல்லாமல் வாயைத் திறந்து பாட வேண்டும். தொண்டையிலிருந்து குரல் கொடுத்துப் பாடிப் பழக வேண்டும். அதற்காக சக்திக்கு மீறி கத்த வேண்டும் என்றுமில்லை. குரலை அழுத்திக் கொள்ளாமல், இயற்கையாகப் பாட வேண்டும்.
ஸ்ருதியும் அப்படித்தான். மற்றவர்கள் குறைவாக நினைப்பார்களே என்பதற்காக ஸ்ருதியை எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். அதற்காக ரொம்பவும் குறைத்துக் கொள்ளவும் வேண்டாம். பெண்களுக்கு நாலு/நாலரைக்கு குறைவாக ஸ்ருதி இருந்தால் நன்றாக இருக்காது. ஆறு கட்டைக்கு மேல் பாடினால் பக்கவாத்தியக்காரர்களுக்கு சிரமம்.
ஹிந்துஸ்தானி கலைஞர்கள் ஆறரை ஏழு என்று கூட வைத்துக் கொள்ளலாம். பொதுவாகவே அவர்களுக்கு கட்டுப்பாடுகள் குறைவு. “இந்துஸ்தானியில் இரண்டு தம்புராவை சேர்த்துக் கொண்டு ஸ்ருதியில் சேர்வது போல ஏன் நம்மால் சேர முடிவதில்லை?”, என்று என் பாட்டைக் குறிப்பிட்டு சமீபத்தில் எழுதியிருந்தார்கள்.
நான் விரிபோணி வர்ணம் பாடுவதற்கு முன்னால் அரை மணி நேரம் மந்திர ஸ்தாயியில் பைரவி ராகம் பாடினால் இந்த விமர்சகர்கள் ஒப்புக்கொள்வார்களா? ஹிந்துஸ்தானியில் அப்படித்தானே பாடுகிறார்கள்?
ஸ்ருதி சுத்தம் வர மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நம் இசையில் கமகங்களுக்கு முக்கிய இடமுண்டு என்றாலும் சுத்த ஸ்வர சாதகம் மிகவும் அவசியம். மூச்சை அடக்குவதற்கும், சாரீரத்தில் நடுக்கமில்லாமல் இருப்பதற்கும் சுத்த ஸ்வர சாதகம்தான் உதவும்.
அகார சாதகமும் மிகவும் அவசியம். ராகம் பாடும் போது பெரும்பாலும் அகாரத்தில்தான் பாட வேண்டும். இகாரம், உகாரம் எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாமே தவிர அதையே பிரதானமாகக் கொள்ளக்கூடாது. அதைத்தான் ராமானுஜ ஐயங்கார் செய்தார். அவர்பாட்டில் எந்தவிதமான அசிங்கமோ, அநாவசியமே இருக்காது. இதயெல்லாம்தான் நாம் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
நீங்கள் சரளமாகப் பேசக்கூடிய மொழிகள் எவை?
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு சரளமாகப் பேசுவேன். கன்னடம் ஓரளவு பேசுவேன். ஹிந்தி அதைவிட குறைவாகத்தான் பேச வரும்.
ஆனால் ஒரு விஷயம். பாடுகின்ற பாட்டை அர்த்தம் தெரிந்து கொண்டுதான் பாடுவேன். மாணவர்களுக்கு அது அவசியம் என்று நினைக்கிறேன். எல்லா பாஷைகளையும் கற்றுக்கொள்ள முடியாவிடினும், பாடுகின்ற பாட்டின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பாட வேண்டும்.
நீங்கள் சரளி வரிசை, ஜண்டை வரிசை என்று முறைப்படி கற்றுக் கொண்டீர்களா?
இல்லை. சங்கீத சூழலில் வளர்ந்ததால் அப்படியே பாடத் துவங்கிவிட்டேன்.
அப்படிக் கற்றுக் கொள்ளாததை ஒரு குறையென்று நினைக்கிறீர்களா?
என்னை யாராவது அவற்றைச் சொல்லிக் கொடுக்கச் சொன்னால் எனக்குத் தெரியாது என்கிற குறைதான். நல்ல காலம் நான் ஆரம்ப பாடமெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை.
குழந்தைகளுக்கு இந்த வரிசைகளெல்லாம் கற்றுக் கொடுப்பது அவசியமா?
கற்றுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் மாயாமாளவகௌளையில் மட்டும் பாடாமல் எல்லா சம்பூர்ண ராகத்திலும் பாடி சாதகம் செய்ய வேண்டும். அகாரத்திலும் இந்த வரிசைகளைப் பாடச் செய்ய வெண்டும். அப்படிச் செய்யும் போது ஸ்வர ஞானம் ராக வித்தியாசங்கள் எல்லாம் புரிபட வசதியாக இருக்கும். வர்ணங்களையும் அகார சாதகம் செய்யச் சொல்ல வேண்டும்.
உங்கள் பாட்டு நிறைய ஒலிப்பதிவுகளாக வந்திருக்கிறதல்லவா?
பன்னிரெண்டு வயதில் ‘ஸரஸிஜநாப முராரே’ கிராமஃபோன் ரிக்கார்டு வெளியானது. “அதுக்குள்ள ரிக்கார்ட்டுக்கு என்ன அவசரம்?”, என்று ஜி.என்.பி கோபித்துக் கொண்டார். அதன்பின் நிறைய பதிவுகள். இடையில் சினிமாவிலும் நிறைய பாடியதால் அவையும் பதிவாகியுள்ளன.
அந்த நாளில் சினிமா பாடல்களும் சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் இருந்ததால் பாடமுடிந்தது. அந்த நிலை மாறியதும் நான் நிறுத்திவிட்டேன். நினைத்தாலும் என்னால் அப்படிப் பாடியிருக்க முடியுமென்று தோன்றவில்லை. அதற்காக மெல்லிசையை நான் குறைத்துச் சொல்லவில்லை. எனக்கு சுசீலா பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்நாளில் கூட எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல்கள் சில ரொம்பவே அழகாக உள்ளன.
நான் எந்த இசையையும் தள்ளுபடி செய்வதில்லை. இந்துஸ்தானி சங்கீதமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாய்ப்பாட்டு பாடுபவர்கள் வேறெதாவது வாத்தியமும் கற்றுக் கொண்டால் அது அவர்கள் பாட்டுக்கு உதவியாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?
எனக்கு சிறு வயதிலிருந்தே கச்சேரி செய்ய வேண்டிய சூழலிருந்ததால் அப்படி எந்த வாத்தியமும் கற்க முடியவில்லை. அப்படி கற்றால் உபயோகமாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது.
பாட்டு கற்றுக் கொள்ள வேண்டுமென்று யார் வந்தாலும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா? அல்லது அவர்களை பரிட்சை செய்து பார்த்து, அவர்களுக்கு பாட வருமென்று தெரிந்தபின் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
வராது என்று தெரிந்த பின்னும், என்னிடமும் நிறைய சிஷ்யர்கள் இருக்கிறார்கள் என்று காண்பிப்பதற்காக நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுப்பதில் அர்த்தமில்லை. சமீபத்தில் எனக்கு ஒரு சங்கடம் வந்துவிட்டது. மலேஷிய அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் எனக்கு ஒரு தொகையைக் கொடுத்து ஒரு பெண்ணிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்கள். நான் சிங்கப்பூர் போயிருந்த போது அந்தப் பெண்ணை பாடச் சொன்னேன். அன்று ஒரு கீர்த்தனையை நன்றாகப்பாடிவிட்டாள். அதை நம்பி நானும் சொல்லித்தர ஒப்புக்கொண்டுவிட்டேன்.
இப்போது பார்த்தால் ‘ஸா-பா’ கூட அவளுக்குப் புரியவில்லை. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் பொதுவாக சொல்லிக் கொடுப்பதற்கு பணம் வாங்கிக் கொள்வது கிடையாது. அவர்கள் புடவை மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுத்தாலும், நானும் அவர்களுக்கு பதிலுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவேன். கூடப் பாடுவதற்கு அவர்களை வெளியூருக்கு அழைத்துச் சென்றால் அவர்களுக்கு சேர்த்து சன்மானம் வாங்கிக் கொடுத்துவிடுவேன். அப்படிச் செய்தால் கூடப்பாட அவர்களுக்கும் ஆர்வமாகவும் இருக்கும். பொதுமக்களுக்கும் இப்படி ஒரு பாடகி தயாராகிறார் என்றும் தெரிய வருமில்லையா?
ஓரளவுக்கு கீர்த்தனைகளெல்லாம் புரிந்து பாடக்கூடிய அளவில் இருந்தால்தான் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது ஆழ்ந்த தேர்ச்சிக்குப் பொருந்தும். ஆரம்ப பாடத்துக்கு வரும் குழந்தைகளுக்கு என்ன செய்வது?
அவர்களுக்கும் ஓரளவு பார்க்கலாம். பொதுவான பாட்டுகள் பல இருக்கின்றனவே. சினிமா பாடல்கள் கூட பாடச் சொல்லிக் கேட்டு, அதிலிருந்து அந்தக் குழந்தைக்கு வருமா என்று ஓரளவு நிர்ணயிக்கலாம். இயற்கையில் பாட்டு வராது என்கிற குழந்தையை வைத்துக் கட்டாயமாய் சொல்லித்தர வேண்டியதில்லை.
பணத்துக்காக செய்தால் அது மாதிரி சமரசங்கள் செய்ய நேர்ந்துவிடும். அதனால்தான் நான் சொல்லிக்கொடுக்க பணம் வாங்குவதில்லை. இந்தப் பெண் விஷயத்தில்தான் சறுக்கிவிட்டேன்.
உங்கள் வழியில் வருபவர்கள் நல்ல ஸ்வரஞானமுள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அதற்கென்று ஏதும் விசேஷப் பயிற்சி உண்டா?
ஸ்வரத்திலேயே கவனம் செலுத்திப்பாடக் கூடாது என்றொரு அபிப்ராயம் உண்டு. அது ஓரளவுக்கு உண்மையென்றாலும். ஓரளவுக்கு மேல் ஸ்வர ஞானம் இருந்தால்தான் முடியும். நான் கீர்த்தனை சொல்லிக் கொடுத்தால் ஸ்வரப்படுத்தாமல் சொல்லிக் கொடுப்பதில்லை. முன்னர் குறிப்பிட்ட பெண்ணுக்கு அந்தக் குறைதான். ஸ்வர ஞானம் இல்லாததால் கரஹரப்ரியா பாடும் போது ஹரிகாம்போதி ஸ்வரத்தைப் பிடித்துவிடுகிறாள்.
சில நுணுக்கமான சங்கதிகள், அனுஸ்வரங்கள் எல்லாம் கேள்வியினாலும், குருமுகமாகவும் கற்பது உசிதம். அவற்றையும் ஸ்வரப்படுத்தித் தெரிந்து கொள்ள முடியாது என்றில்லை. கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
பாவத்துக்காக ராக லட்சணத்திலிருந்து விலகுவதையும் நல்ல ஸ்வர ஞானம் இருந்தால் தவிர்க்கலாம். உதாரணமாக ‘சரவணபவ என்னும்’ பாட்டில் ஷண்முகப்ரியாவில் ‘நி த நி’ கரஹரப்ரியா போல ஒலிக்கப் பாடுகிறார்கள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. வித்வான் என்றால் லட்சணம், லட்சியம் இரண்டும் சரியாக இருக்கவேண்டுமில்லையா?
பாடுவதை நாம் தெரிந்து செய்யவேண்டும். தெரியாமல் ஒரு சங்கதி வந்துவிட்டால், அதை அப்படியே விட்டுவிடாமல் அந்த சங்கதி சரியா தவறா என்று ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.
நான் ஒரு கச்சேரியில் சிம்மேந்திர மத்யமத்தில் கிரஹபேதம் செய்து நாதநாமக்ரியா காட்ட நினைத்தேன். அதை ஜி.என்.பி கேட்டுவிட்டு, “நாதநாமக்ரியாவை நினைத்துப்பாடியதில் அதில் ஒலித்த கமகம் முதன்மை ராகம் சிம்மேந்திரமத்யமத்தை கீரவாணி போல் ஒலித்தது. பார்த்து கவனமாகச் செய்”, என்று கூறினார்.
தோடியில் காந்தாரத்திலிருந்து கிருஹபேதம் செய்தால், தோடி காந்தாரத்துக்கு அசைவு இருக்கிறது என்பதற்காக கம்பிதம் கொடுத்தால் கிருஹபேதம் செய்த ராகத்தில் ஷட்ஜம் அசையுமல்லவா? இதெயெல்லாம் கவனித்துச் செய்ய வேண்டும்
லய சம்பந்தமான விஷயங்களை எப்படிச் சொல்லிக் கொடுப்பது?
சிலருக்கு இயற்கையாகவே அது அமைந்துவிடுகிறது. மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மாதிரி கலைஞர்களை அந்த வகையில் சேர்க்கலாம். எல்லாம் எவ்வளவு பெரிய லய விற்பன்னரை பக்கவாத்தியமாகப் போட்டாலும் அவனை அசைக்க முடியாது.
என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் அனுபவத்தினால் கற்றுக் கொண்டவர்கள். ஆரம்ப நாட்களில் தாளம் எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. நாளடையில் என் பலவீனத்தை உணர்ந்து அதை சரி செய்துவிட்டேன். இப்போது பரவாயில்லை. இத்தனை வருஷம் பாடி சரி செய்வதில் என்ன பிரமாதம்?
நமக்கு இது வரவில்லை என்கிற புரிதலாவது இருக்க வேண்டும்.
ஒலிநாடா முடிவுக்கு வருவதை கவனித்து, ‘ஆயிடுத்தோ?’ என்று அவர் கேட்பதோடு பதிவு நின்றுவிடுகிறது.
Genius ….
Thank you very much for your documentation.
Regards
Kalpana
A really lovely interview.
1) Kindly try to give a translation in English and share in rasikas.
2) MLV should not have sung so many film songs. Inevtably,
such songs bring to the mind of the listeners, the
corresponding scenes from films. ( most of them , not good) .
‘jaalidoy jimkaana’ comes to my mind.
3) If she had strictly avoided, singing background music in
films , she would have been a great name even in purely
classical circles. DKP never sang romantic songs in films
Brilliant interview. Good questions and very honest, truthful answers. She is so straightforward and has identified and accepted her weak areas and has overcome them also. Thank you Mr Lalitharam for bringing out this.
A rasika friend forwarded this blog to me Thanks
Dr MLV happens to be my distant relative through her husband. Shri Vikatam Krishnamurthis Aunt, Shrimathi Ramamani ammaal (and her husband Shri Muththukrishna Iyer) had an adopted son by name, Ramachandran. Shri Ramachandran is the son-in-law of my father’s elder sister, Shrimathi Madhuram Venkatraman. ( and Madhuram is not only my aunt, she is also grandmother of my wife.) Thank you for publishing this interview.
K G Gouthaman
engalblog.blogspot.com
பிரமை should be பிரேமை
I take it back.. i think பிரமை is correct
Arumai. Thanks for sharing 🙏
Mention about her co-disciples of GNB namely Radha Jayalakshmi, SKalyanaraman, Trichur Ramachandran etc missing in her interview. Similar is the film music directors like GRamanathan who always gave her max.songs. Also about her best friend Padmini.
முழுமையாக படிக்காவிட்டாலும் மிகவும் ரசித்தேன்! MLV போன்றவர்கள் பாடிய அத்தனை பாட்டுக்களையும் -விஸ்தரிப்புகள் உட்பட -அப்படியே மாலையாக மாற்றி பகவானுக்கு அளிக்க ஆசையாக உள்ளது ! மிக அருமையான -INSPIRATIONAL -தொகுப்பு !
என்னைப்போல் சங்கீத ஞானம் இல்லாதவர்களையும்,கர்நாடக சங்கீதத்தின் பக்கம் திருப்பிவிட்டதில்,சுப்புடு அவர்களின்
இசைவிமர்சனங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு.கர்நாடக சங்கீதத்தில்,கீர்த்தனைகள், கிருமிகள்,வர்ணங்கள் என்று குறிப்பிடப்படும் பாடல்களுக்கு இடையே வேறுபாடுகளை அறியாத நான் மிகவும் அஞ்ஞானி என்பதை இந்த நேர்காணல் உணர்த்துகிறது.