வருடாந்திர கச்சேரிகளை இந்த வருடம், கரோனா சமயத்தில், வைக்க வேண்டுமா/வேண்டாமா என்று பலமுறை ஊசலாடிய பின் – அற்புதக் கலைஞர்கள் இன்னொரு முறை மக்களை சென்றடைய ஒரு வாய்ப்பாகவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
இருந்தும் கரோனா காலத்தில் எந்த அரங்கில் வைப்பது? ரசிகர்களை அழைப்பது சரியா? கலைஞர்களை பயணிக்க வைப்பது சரியா என்றெல்லாம் குழப்பம் நிலவியது.
நண்பர் சரவணன் ஒரு வழி சொன்னார். கலைஞர்கள் – அவரவர் சௌகரியத்துக்கு கச்சேரியைப் பதிவு செய்து அனுப்பட்டும். யூடியூபில் நாளுக்கு ஒன்றாய் போடலாம் என்றார்.ஒன்பது நாட்கள் – அரிய கலைஞர்களின் இசை வர்ஷம். வழக்கமாய் நடப்பதைவிட இந்த வருடம் நன்றாகவே அமைந்தது என்று தோன்றியது.
நாகஸ்வரம் அழிந்துவிட்டது. அது வருங்காலத்தில் வழக்கொழிந்தே போய்விடும் என்று பிலாக்காணம் படிப்பவர்கள் இந்தக் கச்சேரிகளைக் கேட்டு மனத்தை மாற்றிக் கொள்ளலாம்.ஒன்பது கச்சேரிகளையும் கேட்க:
நேற்று மதியம் ஏதோ ஒரு உந்துதலில் திட்சதர் கல்யாணியில் செய்திருக்கும் ‘பஜரே’ கேட்க ஆரம்பித்தேன்.
அதே பாடலை வெவ்வேறு பாடகர்களின் பதிவுகளில் கேட்டுக் கொண்டு வந்தேன். ஐந்தாவது பாடகராக எம்.டி.ராமநாதனின் பதிவைக் கேட்கத் தொடங்கினேன் – முடித்தபாடில்லை.
முன்பு கேட்ட பதிவுகளின் காலப்ரமாணத்தில் பாதி இருக்கும். அல்லது அதற்கும் கீழாகக்கூட இருக்கலாம். இந்தக் காலப்ரமாணத்தில் மனம் லயிக்க சில நிமிடங்கள் ஆனது.
அனுபல்லவி தொடங்கியது.
”நிஜ ரூப தான தக்ஷ சரணாம்” என்கிற வரியை எம்.டி.ஆர் பாடுகிறார்.
மிஸ்ர சாபுவின் ஒவ்வொரு ஆவர்த்தத்திலும் ஏனோ மின்னலைத் தொட்டது போலிருக்கிறது. ஒருமுறை, இருமுறை, மூன்றாம் முறை, நான்காம் முறை என்று அவர் அதே வரியைபாடிக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறையும் மின்சாரம் பாய்கிறது.
அவர் அடுத்த வரிக்கு சென்ற போதும் மனம் அந்த வரியிலேயே இருக்கிறது.
பதிவை நிறுத்திவிட்டு மனத்துள் அவர் பாடியதை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறேன். இவ்வளவு விஸ்ராந்தியாய் அவர் பாடும் போது ஏன் என் மனம் இப்படிப் பதைபதைக்கிறது?
ஏதோ ஒன்று மீண்டும் மீண்டும் ஓங்கி அடிக்கிறது. திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்க்கும் போது அலையடிக்கக் காரணமானது எது என்று தென்பட்டது.
நிஜரூப தான தக்ஷ சரணாம்
நான்கு வரிகளில் குறிப்பிட்டுள்ளவற்றில் ஒவ்வொரு வரியும் தாளத்தின் ஒரு ஆவர்த்தம். எம்.டி.ஆர்-ன் காலபிரமணத்தினால் அது,
வார்த்தை மேகங்களை மௌனம் பெருக்கி ஒன்றோடு ஒன்று உரசி பேரொலியாய் பெருமின்னலாய் ஒளிர வைக்கும் ஜாலம்!
நியாயமான கோபத்தின் கூரிய வெளிப்பாடாய் மௌனம் அமைவது போல ஒலிக்காமல் அதிர்ந்தெழும் கார்வைகள்!
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. மனம் அந்தக் கார்வைகளில் இருந்து மீள மறுக்கிறது.
மதுரை மணி ஐயர் ’தூக்கிய திருவடி’ பாடும் போது நிரவலில் ‘எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்’ என்று முழு வரியைப் பாடமாட்டார். அவர் கட்டியெழுப்பும் காட்சிகளில் ‘எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே திளைத்தேன்’ என்று எனக்குத் தோன்றும்.
இந்தக் கார்வைகள் போன்ற புதையல்கள் இருக்கும்போது எத்தனை பிறவியாய் இருந்தால்தான் என்ன? அத்தனையும் எடுத்தெடுத்தே திளைக்கலாம்தானே!
ஒரு சங்கீத அரட்டையில் புதிய ராகங்கள், புதிய பாடல்களைப் பற்றிப் பேச்சு வந்தது. ஒரு கட்டத்தில் அருதியிட்டது போல் கூறினார் ஒரு நண்பர், “கர்நாடக சங்கீதத்தை ரசனையின் சாரம் கேட்டதையே கேட்டு, கேட்டதைப் பற்றி பேசி, பேசியதைத் திரும்பக் கேட்டு, சுற்றிச் சுற்றி அத்ற்குள்ளேயே உழலுவதுதான். ஆயிரம் ராகம் வரலாம். தேறி நிற்பது – தோடி, காம்போஜி, பைரவி, கல்யாணி, சங்கராபரணம், கரஹரப்ரியாதான்”.
அவர் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவரும், அவர் சொல்வதை மொத்தமாக ஒதுக்க முடியாது. அவர் சொன்ன கர்நாடக சங்கீத ரசனைப் பட்டியலில் நான் தி.ஜானகிராமனையும் சேர்த்துக் கொள்வேன். எத்தனையோ முறை கேட்ட கல்யாணியில் புதியதாய் ஒரு பிரயோகம் அன்றலர்ந்து பூப்பது போல – படித்த ஜானகிராமன் கதைகளிலேயே புதியதாய் ஒரு கீற்று தோன்றுவதுண்டு.
இன்று ஏனோ ஜானகிராமன் மதுரை மணி ஐயரைப் பற்றி எழுதியதைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.
இந்தக் கட்டுரையை நான் முதன் முதலில் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தி.ஜானகிராமன் படைப்புகள் – இரண்டாம் தொகுதியில் படித்தேன் என்று நினைக்கிறேன். அதன்பின் இந்தக் கட்டுரை பல இடங்களில் தட்டுப்பட்டதுண்டு. சமீபத்தில் பேராசிரியர் பசுபதி, அவர் வலைப்பூவில் இந்தக் கட்டுரையை பகிர்ந்து கொண்டிருந்தார்.
இன்று மீண்டும் அதைப் படிக்க ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பைத் திறந்தேன். பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. கட்டுரையில் முதல் பாதிதான் அச்சிடப்பட்டிருந்தது. இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை.
உடனடியாக சொல்வனம் இணைய இதழில் வெளியான ’மதுர மணி’ கட்டுரையை கணினியில் திறந்தேன். எனக்கு இன்னமோர் ஆச்சர்யம் காத்திருந்தது. கட்டுரையின் முதல் வரி ‘பதினைந்து ஆண்டுகட்குமுன்’ என்று தொடங்கியது சொல்வனம் கட்டுரையில். அதைப் பார்ப்பதற்கு முன் மூடி வைத்த ஐந்திணைப் பதிப்பிலோ முதல் வரி ‘கான கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர்’ என்று கட்டுரை தொடங்கியது. இந்த வேறுபாட்டையும் நான் இன்றுதான் கவனிக்கிறேன்.
சொல்வனம் கட்டுரை கணையாழியில் வெளியான கட்டுரையின் பிரதி. 1968-ல் மணி ஐயரின் மறைவை ஒட்டி, அவர் நினைவைப் போற்றும் வகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் ஒரு குறிப்பும் வெளியாகியுள்ளது. அந்தக் குறிப்பின் கடைசி வரி ”அந்த மலரில் தி. ஜானகிராமன் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடுகிறோம்.” என்றிருக்கிறது.
இந்தக் குறிப்பும் நான் முன்பு பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும் ‘சில பகுதிகளை’ என்ற தொடரை நான் இன்றுதான் கவனித்தேன். உடனே முழுக் கட்டுரையைப் பார்க்க ஆவல் எழுந்தது.
வித்வான் திருவாலங்காடு சுந்தரேச அய்யரின் மகன் நீலகண்டன் தயவால் என்னிடம் மூலக் கட்டுரை பிரசுரமான மலரே உள்ளது. அந்த மலரைப் பார்த்த போது தெளிவு கிடைத்தது.
ஒரு கிளைக் கதை: சுந்தரேச அய்யரைப் பற்றி தி.ஜா தனிக் கட்டுரை எழுதியிருப்பதால்தான் நான் நீலகண்டனைத் தேடிப் பிடித்தேன் என்பது. அவர் அடிக்கடி பேசும் போது திருச்சி மணி மண்டபம் என்ற இடத்தைக் குறிப்பிடுவார். திருச்சியில் அப்படியொரு இடம் எங்கு உள்ளது என்று நான் தேடியதுண்டு. ஒரு நாள் அவரிடமே கேட்டேன். அவர் பலமாகச் சிரித்திவிட்டு, ‘அப்படியொரு இடமே இல்லை. ஓரியண்டல் சீனிவாசன் (மாண்டி சீனிவாசன் என்றும் குறிப்பிடுவதுண்டு) வீட்டுக்குத்தான் அப்படி ஒரு பெயர். மதுரை மணி திருச்சிக்கு வந்தால் அஙு தங்குவார். அதனால் மணி ஐயர் ரசிகர்கள் அந்த இடத்தை மணி மண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்தப் பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்தது என் தந்தை சுந்தரேச ஐயர்தான். காலப்போக்கில் சீனிவாசன் பெயர் ‘மணிமண்டபம் சீனிவாசன்’ என்றே ஆகிவிட்டது.’, என்றார். இந்த விஷயம் மலரிலும் பதிவாகியுள்ளது.
கணையாழியில் வெளியாகியுள்ள கட்டுரையில் மூலக் கட்டுரையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் விடுபட்ட பகுதிகளும் செறிவானவை. சில பிழையான புரிதல்களைத் திருத்தக் கூடியவை.
உதாரணமாக, கணையாழியின் குறிப்பில் “திருச்சியில் அவரைச் சுற்றி இயங்கிவந்த இலக்கிய ரஸிகர்கள் கூட்டமொன்று அவர் தேசீய விருதுபெற்ற 1960ம் ஆண்டில் அவருக்கே உரித்தான பட்டமொன்றை அளித்துப் பெருமையடைந்தது.”, என்று உள்ளது. ஆனால் தி.ஜா-வின் கட்டுரையிலோ அல்லது மலரிலோ மணி ஐயருக்குக் கிடைத்த ஜனாதிபதி விருதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தி.ஜா-வின் கட்டுரை, “கான கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர் அவர்கட்கு சென்னை சங்கீத வித்வத் சபை இவ்வருஷம் சங்கீத கலாநிதி விருதை அளிக்கப் போகிறது.” என்று தொடங்குகிறது. 1959 டிசம்பரில் மணி ஐயருக்கு சங்கீத கலாநிதி பட்டம் கிடைத்தது. இந்தக் கட்டுரை அதற்கு முன் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. 1960 ஏப்ரல் மாதத்தில் மலர் வெளியாகியுள்ளது. மலருக்கான பணிபல மாதங்களுக்கு முன்னரே தொடங்கியிருக்கலாம். அதனால் தி.ஜா இதை 1959 டிசம்பருக்கு முன் எழுதியிருக்கக் கூடும். அல்லது தி.ஜா முன்னரே எழுதிய கட்டுரையை மலரிலும் பயன்படுத்தியிருக்கக்கூடும். எப்படி இருப்பினும், இது மணி ஐயர் தேசிய விருதைப் பெற்றதை ஒட்டி வெளியிடப்பட்ட மலரல்ல என்பது தெளிவாகிறது.
கணையாழி குறிப்பில் “1960 ஆண்டு விழாவைப் பூர்த்தி செய்யும் முறையில் நடந்த வைபவத்தில் மணி ஐயருக்கு ‘நாதலோல’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இசையுலகில் ஒரு தனிச் சிறப்பு கொண்ட கட்டம்.”. ’கட்டம்’ என்பது எழுத்துப்பிழை என்று நினைக்கிறேன். ’தனிச் சிறப்பு கொண்ட பட்டம்’ என்பதே சரியென்று தோன்றுகிறது.
கணையாழி கட்டுரையில் விடுபட்டுள்ள இன்னொரு பகுதி மிக முக்கியமான ஒன்று.
அண்மையில் நவாவரணங்கள் உள்பட பல தீட்சிதர் கிருதிகளை மணி அய்யர் தம் தனிச் சிறப்புடன் பாடி வருகிறார். நவாவரணங்களுக்கு இன்னும் சற்று விளம்ப நடையைக் கையாண்டால் நல்ல பயன் கிடைக்கும் என்பது என் சொந்தக் கருத்து. கலந்த கட்டியான சபையில் விளம்ப காலம் எடுக்குமா என்று அவரே சந்தேகப்படலாம். ஆனால் இந்த மாதிரி கிருதிகளை கச்சேரிக்கு ஒன்று இரண்டுக்கு மேல் பாடப்போவதில்லை. ஆகவே இந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம். இன்னும் தீட்சதர், தியாகராஜர், கோபால கிருஷ்ண பாரதியார், பட்டணம் சுப்ரமண்யர் முதலியோருடைய அபூர்வ கிருதிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. மணி அய்யரைப் போன்ற மாமேதைகள் அவற்றை எடுத்துக்கொண்டால் வாக்கேயகாரர்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்றி செலுத்தியதாக இருக்கும்.
எவ்வளவுதான் பெரிய மேதை என்றாலும் கலை என்பது கலைஞனைவிட பெரியது என்று காட்டும் பகுதி இது. மணி ஐயரின் சிறப்பைக் கூறிவிட்டு, அவர் பாட்டின் மேல் உள்ள விமர்சனத்தையும், அவர் பாட்டை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்ல தி.ஜா-வின் சிபாரிசையும் தவறாமல் கூறும் பகுதி இது. மணி ஐயரின் மறைவை ஒட்டி வெளியான கட்டுரையில் விமர்சனங்கள் தேவையில்லை என்ற எண்ணதினாலோ என்னமோ இந்தப் பகுதி கணையாழி பிரசுரத்தில் நீக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ தி.ஜா-வின் நூற்றாண்டில் அவர் எழுத்தில் திளைக்கவும், பூரண மதுரத்தை அனைவரும் பார்க்கும்படி வெளியிடவும் எனக்கொரு வாய்ப்பு!
மதுர மணி
கான கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர் அவர்கட்கு சென்னை சங்கீத வித்வத் சபை இவ்வருஷம் சங்கீத கலாநிதி விருதை அளிக்கப் போகிறது. ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம். சுருதி, லயம் இரண்டிலும் மங்காத தனியரசு செலுத்தும் வயதிலேயே ஒரு மேதையைக் கௌரவிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிட்டியது மகிழ்ச்சிக்குரிய முக்கியமான செய்தி.
பதினைந்து ஆண்டுகட்குமுன் திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இலக்கிய மேதை கு.ப.ரா.வின் குடும்ப நிதிக்காக மணி அய்யர் செய்த கச்சேரி மறக்க முடியாத வகையில் அவர் செய்திருக்கும் எத்தனையோ கச்சேரிகளில் ஒன்று. கச்சேரி முடிவில் பேசிய தேசத் தொண்டர் டாக்டர் சாமிநாத சாஸ்திரியார், “மதுரை மணி அய்யர் என்பதைவிட மதுரமணி அய்யர் என்பதே பொருந்தும்” என்று கூறினார். பதினைந்து ஆண்டுகட்குப் பிறகு மதுரமாக முதிர்ந்துள்ளது அந்த மதுர சங்கீதம்.
கர்நாடக சங்கீத பரம்பரையில் இன்று மக்களை அதிகமாகக் கவர்ந்தவர் யாராவது உண்டு என்றால் அது மதுரமணி அய்யர்தான். அவருடைய கச்சேரி நடக்கும் இடத்தில் உள்ளேயும் வெளியேயும் நிறைந்து வழியும் மக்கள் திரள் ஒன்றே இதற்குச் சான்றாகும். ‘மக்களுக்குப் பிடித்தது மெத்தப் படித்தோரைக் கவராது’ என்ற பெரிய மனித முசுமுசுப்பையும் இங்கே காண முடியாது. பெரிய கலைமேதை ஒருவன் படித்தவர்களையும் நுணுக்கம் தெரிந்தவர்களையும் மட்டும் கவர்வதில்லை. செவியுள்ள, சுவையுள்ள எல்லா உள்ளங்களையும் கவர்ந்து விடுகிறான். மதுர மணி அய்யரின் சங்கீதமானது சங்கீதத்தில் முதிர்ந்த ஞானமுள்ளவர்களிலிருந்து சாதாரண ரசிகன் வரை – அத்தனை பேர் நெஞ்சையும் அள்ளக்க்கூடிய தனிப்பெருமை படைத்தது. அதாவது, உண்மையான மேதை. கலை விஷயங்களில் உண்மை மேதையானது சாஸ்திர அறிவுக்கும் மேற்பட்ட ஒரு நிலையில் நின்று உலகம் அனைத்தையும் கவர்ந்து விடுகிறது.
கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.
இவ்வளவு சக்தி அவர் சங்கீதத்தில் ஓங்கி நிற்பதன் ரகசியம் என்ன? அவருடைய சுருதி உணர்வும், ஸுஸ்வர கானமும், அழுத்தமாக உள்ளே இழைந்து அமைந்து விட்ட லய உணர்வும்தான்.
இவ்வளவு சுருதி உணர்வு குரலில் எந்தக் கணமும் கைவிடாமல் கவ்விவரும் நற்பேறு கர்நாடக சங்கீதத்தில் இன்றுள்ள அநேக வித்வான்களுக்குக் கிட்டவில்லை. உரிய காலத்தில் போதிய சாதகமின்மை காரணமாக இருக்கலாம், பிறவிக் குணமாகவும் இருக்கலாம், சாதகமின்மை என்று ஒரேயடியாகவும் சொல்லிவிட முடியாது. இன்று முன்னணியில் நிற்கும் வித்வான்கள் சாதகத்தில் பின்வாங்கியதில்லை. ஆனால், வருங்கால வித்வான்களைப்பற்றி ஒருவிதக் கவலை பலருக்கு இருந்து வருகிறது. சாதகத்தை இரண்டாம் பட்சமாக வைத்து இன்று செய்யப்படும் சங்கீதப் பயிற்சியைப் பார்க்கும்போது சுருதி சுத்தமான கானத்திற்குக் காலம் உண்டோ என்றெல்லாம் கலக்குமுறத் தோன்றுகிறது.
மணி அய்யர் பிறவியிலேயே இனிமையான சாரீரம் படைத்தவர். குரல் உடையும் பருவத்தில் சிரமசாதகம் செய்து அதைக் காப்பாற்றித் தனி மெருகும் ஏற்றிவிட்டார்.
மணி அய்யரின் சங்கீதத்தில் இன்னொரு தனிப் பெருமை அதன் விச்ராந்தி. சுருதி, லயம் இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில்கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. விரைவான கதிகளிலோ, சிக்கலான ஸ்வரப் பின்னல்களிலோ கூட இந்த அமைதி நிலை ஊடாடி நிற்பதால் கேட்போர் உள்ளத்திலும் ஒரு பிரமிப்புக் கலந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்றி விடுகிறது அது. யுத்தகள ரகளை, அதட்டல், இரைச்சல், விவகார கெடுபிடி – இவைகூட சங்கீதத்தின் பகுதிகள் என்று சிலர் கூறலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சங்கீதத்தின் உயிர் ஆனந்த அனுபவம். தன்னை மறந்த ஒரு நிலைக்கு ஏற்றுவதுதான் அதன் பயன். நீண்டகாலம் அதன் கார்வைகள் கேட்போரின் உள்ளத்தே ஒலிக்க வேண்டும். இந்த ஆனந்த அனுபவத்தை மணி அய்யரிடம் இந்நாடு கணக்கற்ற முறை அடைந்திருக்கிறது.
எந்த ராகத்தையும் தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து அனுபவித்து, அதனுடைய ஜீவகளைகளையெல்லாம் சுருக்கமாகத் திரட்டி அவர் அளிப்பதால் ரசிகர்களுக்குக் குறையில்லாத ஒரு திருப்தி கிடைத்து விடுகிறது.
எல்லா மேதைகளையும் போலவே மதுர மணி அய்யரின் நடை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய ஒரு தனி நடை. இதை ஸ்வரம் பாடும்போது மட்டுமின்றி, ராக சஞ்சாரத்திலும் கீர்த்தனைகளிலும் காண முடியும். வெட்டி வெட்டி, கத்திரித்துக் கத்திரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை. தனக்காக வகுத்துக் கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு. அடுக்குக் காசித் தும்பை மலரில், புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி அய்யரின் கத்திரிப்பு நடைகூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது.
மணி அய்யரின் தோடி, காம்போதி, சங்கராபரணம், மோகனம், ரஞ்சனி, ஆபோகி முதலியவற்றை யாரும் மறக்க முடியாது. அதேபோல காபிநாராயணி, சித்தரஞ்சனி, கன்னட கௌள முதலிய அபூர்வ ரகங்களில் உள்ள மிகச் சின்ன கீர்த்தனைகளைப் பெரும் காவியங்களாக அவர் பாடிக்காட்டும் தனித்திறமையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். பாரதி பாட்டுகளை அவர் பாடும்போது அந்த மந்திரச் சொற்களுக்கு ஒரு புது வேகத்தையும் அர்த்தத்தையும் ஊட்டியிருக்கிறார். சங்கீதப் பெரிய மனிதர்கள் இதெல்லாம் துக்கடா நேரத்துக்காக ஆனவை என்று கீழ்நோக்குடன் புன்னகைக்கலாம். ஸாஹித்யம் பிரதானமில்லை என்ற விதண்டாவாத நிலையினால் பிறந்த துர்ப்பாக்கியம் இது. இதற்காக நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. விவேகம் சொல்லி வராது.
அண்மையில் நவாவரணங்கள் உள்பட பல தீட்சிதர் கிருதிகளை மணி அய்யர் தம் தனிச் சிறப்புடன் பாடி வருகிறார். நவாவரணங்களுக்கு இன்னும் சற்று விளம்ப நடையைக் கையாண்டால் நல்ல பயன் கிடைக்கும் என்பது என் சொந்தக் கருத்து. கலந்த கட்டியான சபையில் விளம்ப காலம் எடுக்குமா என்று அவரே சந்தேகப்படலாம். ஆனால் இந்த மாதிரி கிருதிகளை கச்சேரிக்கு ஒன்று இரண்டுக்கு மேல் பாடப்போவதில்லை. ஆகவே இந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம். இன்னும் தீட்சதர், தியாகராஜர், கோபால கிருஷ்ண பாரதியார், பட்டணம் சுப்ரமண்யர் முதலியோருடைய அபூர்வ கிருதிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. மணி அய்யரைப் போன்ற மாமேதைகள் அவற்றை எடுத்துக்கொண்டால் வாக்கேயகாரர்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்றி செலுத்தியதாக இருக்கும்.
மதுரமணி அய்யரின் சங்கீதம் உன்னதமானது என்று இன்னொரு வகையிலும் சொல்ல வேண்டும். அது தெய்வத்தின் முன் நிற்கும் ஒரு பரிசுத்த நிலையை, ஒரு ஆனந்த மோன நிலையைப் பல சமயங்களில் உண்டாக்கியிருக்கிறது. இத்தகைய கலைஞர் பல்லாண்டு வாழவேண்டும். இதே விச்சராந்தி, சுருதிலயப் பிரக்ஞையைச் செயலில் காட்டும் திடகாத்திரத்தை இறைவன் அவருக்கு அருள வேண்டும்.
மதுரை மணி அய்யரை உரிய காலத்தில் பாராட்டி ஒரு முக்யமான கடமையைச் செய்ய முன்வந்த வித்வத் சபையும் நம் வாழ்த்துக்குரியதாகிறது.
சங்கீதம் கேட்பது ஒரு வகையில் சுகமென்றால், சங்கீதத்தைப் பற்றி பேசுவது வேறு வகையில் பரம சுகம். இப்படி சங்கீத அரட்டையினாலேயே நெருக்கமான நண்பர்கள் எனக்கு ஏராளம். இந்தப் பட்டியலில் 90-ஐக் கடந்தவரும் உண்டு. இருபதுகளுக்குள் சமீபத்தில் நுழைந்தவரும் உண்டு.
இந்த நண்பர்களுள் இசை இலக்கியம் இரண்டிலும் ஈடுபாடு உள்ளவர்கள் சிலரும் உண்டு. இவர்களுள் நான் அடிக்கடி பேசுபவர்கள் இருவர். முதலாமவர் தினமணி சிவகுமார். மற்றொருவர் திருவனந்தபுரம் ஆறுமுகம் பிள்ளை.
இவர்களுடன் பேசும் போதெல்லாம் மதுரை மணி, ஜி.என்.பி, ராஜரத்தினம் பிள்ளை போன்ற சங்கீதக்காரர்களுடன் சேர்ந்தே வருபவர் தி.ஜானகிராமன்.
தி.ஜா நூற்றாண்டில் அவர் குரலை நான் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம், அந்தப் பதிவை எனக்கு அளித்தவர் ஆறுமுகம் பிள்ளைதான்.
”ஆலத்தூர் சாந்தமுலேகா பாடினால் ஜானகிராமனோட செய்தி கண் முன்னால வருது -அவ்வளவு ஒசத்தி” என்று உருகுவார் ஆறுமுகம் பிள்ளை
“துரை, காமேஸ்வரனைப் பத்தி சொல்லும் போது ‘நானும் அவரும் ஒரே ஆஸுதான்’-னு எப்படித்தான் எழுதினாரோ. ஒரே ஆஸுல ரெண்டு பல்லவிங்கற மாதிரி – என்ன ஒரு உவமை! சங்கீதத்துலேயே ஊறின மனுஷன் எழுத்தலதான் இப்படி வந்து விழும்” என்று பதிலுக்கு நான் மருகுவேன்.
பேச்சு வாக்கில் ஒருநாள் சொன்னார், “தி.ஜா-ன்னா சும்மாவா? லால்குடியே அசந்து போயிட்டாரே!”
”லால்குடியா?”
”ஆமாம்! , ’நாங்க சங்கீதத்துலேயே இருக்கோம். எத்தனை பைரவி கேட்டிருப்போம். எத்தனை பைரவி வாசிச்சு இருப்போம். ஜானகிராமனுக்கு மோகமுள்-ல தோணின அபிப்ராயம் எனக்கு இவ்வளவு நாள் தோணலையே-னு’, மாய்ஞ்சு போவார்”
கிருஷ்ண கான சபை திரு. லால்குடி ஜெயராமனை பாராட்டி வெளியிட்டுள்ள மலரில், ‘லயத்தில் பிரம்ம லயம் என்று உண்டு. அது இயற்கையிலேயே அமைவது. அது ஜெயராமனுக்கு அமைந்துள்ளது’, என்று பாலக்காடு மணி ஐயர் சொல்லி இருப்பதைப் படித்த போது எனக்கு என்னமோ பெரிய விருதை அளித்தது போன்ற புளகாங்கிதம் ஏற்பட்டது. அதே உணர்வு லால்குடி அவர்கள் ஜானகிராமனைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்று ஆறுமுகம் பிள்ளை சொன்ன போது ஏற்பட்டது.
ஜானகிராமனை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து மேய்ந்து ரசிக்கும் பலர் உண்டு. என் ரசனையும் புரிதலும் அந்த அளவுக்கு இல்லை என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை எனக்கும் ஜானகிராமனுக்கும் உண்டு என்று எனக்குத் தோன்றும்.
அது கற்பனை என்றே நான் நினைத்திருந்தேன். மோகமுள் உருவானதைப் பற்றி ‘நாவல் பிறந்த கதை’ என்று கல்கியில் ஜானகிராமன் எழுதியது ரோஜா முத்தையா நூலகத்தில் தற்செயலாய் கிடைத்தது.
“ஜானகிராமன் சம்பந்தமா நான் கண்ணுல விளக்கெண்ணை விட்டு தேடியிருக்கேன். எனக்குக் கிடைக்காதது உனக்கு கிடைச்சு இருக்கு. அதிர்ஷ்டசாலிதாண்டா நீ”, என்று தினமணி சிவகுமார் சொன்னதும் விட்ட குறை கற்பனை இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்தது.
இந்தக் கதை இப்போது எதற்கு? சொல்கிறேன்…
ஆறுமுகம் பிள்ளை லால்குடியைப் பற்றி சொன்ன போது லால்குடி அமரராகிவிட்டார். அவரை நேரில் சந்தித்து இதைப் பற்றி கேட்க முடியாமல் போனதே என்று அடிக்கடி தோன்றும்.
கடந்த சில மாதங்களில் தி.ஜானகிராமன் பெயர் கண்ணில் படாத நாளே இல்லை. இன்று எத்தனையோ மாதங்கள் கழித்து எழுத்தாளர் பா.ராகவனுடன் பேசினேன். பேச்சில் தி.ஜா வந்துவிட்டார். ஆறுமுகம் பிள்ளை சொன்னதை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் பேசி முடித்த பின்னும் அந்த பைரவியின் நினைவாகவே இருந்தது. அப்போது ஒரு எண்ணம் எழுந்தது.
லால்குடி இன்று இல்லையென்றால் என்ன? அவர் பிள்ளைகளிடம் ஏதேனும் சொல்லாமல் இருந்திருப்பாரா? அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுப் பார்த்தால் என்ன? சுவாரஸ்யமாக ஏதாவது கிடைத்தால் ஒரு விடியோ பதிவாக்கி தி.ஜா நூற்றாண்டில் வெளியிடலாமே என்று தோன்றியது.
தயங்காமல் திருமதி.விஜயலட்சுமிக்கு எழுதினேன்.
’அப்பா பெரிய ஜானகிராமன் ரசிகர். நீங்கள் என்னைக் கேட்பதைவிட அண்ணாவைக் கேளுங்கள். அவருக்கு இன்னும் விவரங்கள் தெரிந்திருக்கும் ‘, என்றார்.
பொதுவாக இந்த மாதிரி விஷயங்களில் நான் சோம்பேறி. இன்று என்னமோ வேகம் குறையாமல் திரு.கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்பினேன்.
“அப்பா சொல்லி இருக்கார். ஆனால் எதுவும் எழுதி வைக்கவில்லை கொஞ்சம் அவகாசம் தந்தால் recollect பண்ணி சொல்லுகிறேன்.”, என்றார்.
“அவசரமில்லை. முடியும் போது சொல்லுங்கள்”, என்று நான் என் வேலையைப் பார்க்க சென்றுவிட்டேன்.
சில மணி நேரங்களில் அவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
“இருப்பது ஞாபகம் இருக்காது. ஞாபகம் வந்தாலும் இருக்கும் இடம் நினைவுக்கு வராது. நினைவுக்கு வந்தாலும் அது அந்த இடத்தில் இருக்காது அந்த இடத்தில் இருந்தாலும் அந்த பக்கம் மட்டும் இருக்காது இதை Murphy’s law என்று சொல்வதுண்டு. ஈதனைத்தையும் மீறி ஒரு பொக்கிஷம் கேட்டு நான்கு மணிக்குள் கிடைத்தது என்றால் இது என் அதிர்ஷ்டமா? உங்கள் அதிர்ஷ்டமா? இல்லை நம் அதிர்ஷ்டமா? இல்லை அனைவரின் அதிர்ஷ்டமா? தீர்வு உங்க கையில் விட்டு விடுகிறேன்!”
என்றது அவர் செய்தி.
ஆவலை அடக்க முடியாமல் அடக்கிக் காத்திருந்தேன். அப்போது ஒரு பொக்கிஷத்தை அனுப்பி வைத்தார்.
ஆறுமுகம் பிள்ளை சொன்ன பைரவி! லால்குடியின் வார்த்தைகளில் – அதே பைரவி!
என் உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது.
விட்ட குறைக்கு கல்கி கட்டுரை என்றால், தொட்ட குறைக்கு இந்தக் குமுதம் கட்டுரை.
வாரத்துக்கு வாரம் வித்தியாசம் என்று தொண்ணூறுகளில் குமுதம் நடந்த போது வாரம் ஒரு பிரபலம் இதழைத் தயாரித்துள்ளார். அந்த வகையில் லால்குடி ஜெயராமன் தயாரித்த இதழில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
திரு.லால்குடி கிருஷ்ணனின் அனுமதியுடன் இன்று நான் பெற்ற இன்பத்தை ஜானகிராமன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
‘மாபகாரீ-யில் கொஞ்சம் சருக்கி அந்த பைரவியின் கதகதப்பில் திளையுங்கள்.
ஜானகிராமன் செய்த ஜாலம் (குமுதம் 8.8.91 – லால்குடி ஜெயராமன்)
நான் தி.ஜானகிராமனின் பரம ரசிகன். ஒரு நண்பர் அவருடைய நாவல்களைக் கொண்டுவந்து கொடுத்தார். அன்றிலிருந்து எனக்கு ஒரே பிரமிப்பு. சங்கீதத்தில் அவருக்குள்ள ஞானம் என்னை அசர வைக்கிறது.
மோகமுள் கதையில், ரங்கண்ணா என்ற பாத்திரத்தை ஒரு பாகவதராய் வைத்து, கதைக்கு இடையில் மிகவும் அருமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.
ஓரிடத்தில்-
‘தம்புராவின் நாதம் அலையலையாய் எழுந்து, அங்கிருந்தவர்களின் செவியையும் இதயத்தையும் நிறைத்தது, அப்பழுக்கில்லாத நாதம் கூடம் முழுவதும் கமழ்ந்தது. சுருதி பரிபூரணமாகச் சேர்ந்திருந்ததும். தீயும் சூடும் போலவும், இரவும் இருளும் போலவும், நிலவும் தண்மையும் போலவும், வைகறையும் தூய்மையும் போலவும் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுவது போல, சொல்லாத காந்தாரமும் சேர்ந்து தொனித்தது. புலன்களைக் கூட்டி ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீள முடியாமல் கவ்விச் சென்றது. – என்று எழுதியிருக்கிறார்.
இன்னோர் இடத்தில்- ’பாபுவுக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. பைரவி ராகத்தில் ‘மாபகாரீ சநீதபமா’ என்று வீணை கீழே இறங்குவது கேட்டது. ‘என்னடா இப்படிச் செய்துவிட்டாயே’ என்று பொறுமையாகவும் இடித்துக் கேட்பது போலவும் எழுந்த அந்த ஸ்வர வரிசை நெஞ்சில் பாய்ந்து வயிற்றைக் கலக்கிற்று.’
அந்த ஸ்வர வரிசையை ஒரு தடவை நானும் பாடிப் பார்த்தேன் – ’ஐயோ! என்னடா இப்படிப் பண்ணிட்டே?’, என்று யாரோ கேட்பது போலவே தோன்றியது. இந்த உணர்ச்சியை எப்படித்தான் ஜானகிராமன் எழுத்தில் கொண்டு வந்தாரோ! சங்கீதம் தெரிந்தவர்களுக்கு, பைரவி வர்ணம் அறிந்தவர்களுக்கு இதன் உவமானப் பொருத்தம் ரொம்பவும் நன்றாய்ப் புரியும். ரசிக்க முடியும்.
இன்னோர் இடத்தில் சொல்கிறார்-
’உள்ளமும் உயிரும் ஒன்றிவிட்டன. ஸ்ருதி சுத்தமாய் இருந்தது அந்த வீணை இசை. நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்தியமத்தைத் தொட்டுத் தொட்டு ஓலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது.
மாநிதபமா, நீதபதமா, பதமா என்று கெஞ்சி இறைஞ்சிய அந்த வரிசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது’
சங்கீதத்தை எவ்வளவு உயர்வாய் ரசித்திருக்கிறார் தி.ஜானகிராமன்! அவர் எழுத்தில் மண்வாசனை பிரமாதமாக இருக்கும் என்று சிறப்பித்துச் சொல்வார்கள். இசையை இவ்வளவு ரசனையுடன் எழுதியிருப்பது இன்னும் பெரிய சிறப்பு என்பது என் கருத்து.
தமிழிசை என்ற பெயரில் ஜல்லி அடிப்பவர்கள் அனேகம். இந்தச் சூழலில் இசையும் தமிழும் உண்மையாய் வரப்பெற்ற அறிஞர் அரிமளம் ப… twitter.com/i/web/status/1…1 week ago
மாமேதை பழனி சுப்ரமணிய பிள்ளை வழியில் மணி மணியாய் சீடர்களை உருவாக்கியிருக்கும் வித்வான் காளிதாஸ் அவர்களுக்கு இந்த வ… twitter.com/i/web/status/1…1 week ago
பிகு: இந்தக் குறிப்பு நூல் விமர்சனமன்று. என் அனுபவப் பகிர்வு. 6/n <end> 1 week ago
ஆனால் இது பெயர் பட்டியல் மட்டும்தான் என்பதை படித்ததும் புரிந்து கொள்ளும் வகையில் ஜெ-யின் குறிப்பு இருந்திருக்கலாம்.… twitter.com/i/web/status/1…1 week ago
இந்தக் குறிப்பே நூலை வாங்கத் தூண்டுதலாய் அமைந்தது. நூல் சில நாட்கள் முன் கைக்குக் கிடைத்தது. தனிப்பட்ட அளவில் எனக்… twitter.com/i/web/status/1…1 week ago