Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2020

2011-ல் சங்கீத சீஸனுக்கு முன் எழுதியது. இன்றும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.

கர்நாடக சங்கீத உலகின் பிரபலங்களின் பெயரை எடுத்துப் பார்த்தால், அவற்றுக்கு முன்னால் ஏதேனும் ஓர் ஊர் பெயரை நிச்சயம் பார்க்க முடியும். இன்னும் சொல்லப் போனால், அரியக்குடி, ஆலத்தூர், செம்மங்குடி, செம்பை, லால்குடி, காருக்குறிச்சி என்று பல கிராமங்களின் பெயர் உலகெங்கும் பரவ இசைக் கலைஞர்களே காரணம். இன்றும் இளம் கலைஞர்களின் பெயரில் ஊர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே வித்தியாசம் – “பெயரளவில்”தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் பெரும்பாலானவர்களின் விலாசங்கள் மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும் மட்டுமே அடங்கிவிடக் கூடும். இந்த மாற்றம் இன்று நேற்று நிகழ்ந்ததன்று. கடந்த 70-80 ஆண்டுகளில் மெதுவாய் நிகழ்ந்த ஒன்று.

வரலாறைப் பார்த்தால், தென்னாட்டு மரபிசை கோவில் கலைகளுள் ஒன்றாகவே தழைத்தது. சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூர், அவர்களுக்குப் பின்னால் வந்த நாயக்கர், மராட்டியர் காலத்திலும் செழிப்பான நகரமாகவே விளங்கியது. உழவுத் தொழில் முதன்மைத் தொழிலாக விலங்கிய காலகட்டத்தில், காவிரி வளம் சேர்த்த இடங்கள் செழிப்புடன் விளங்கின. இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு கோயிலுடன் தொடர்புடையவர்களாகவோ, அரசவைக் கலைஞர்களாகவோ விளங்கினர். ஆன்மீக விஷயங்களைத் தவிரவும், பொது மக்களின் வாழ்க்கையில் கோவில் இன்றியமையாத பங்கை வகித்தது. இதனால் கோயில் வளர்த்த கலைகளான இசையும் நாட்டியமும் பொது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தன. தொலைக்காட்சியும், இணையமும், செல்ஃபோன்களும் இல்லாத காலமென்பதால், பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காகவும் கோவில் கலைகள் விளங்கின. இதனால், ஒரு சாதாரணனுக்குக் கூட மரபிசையும் ஆழ்ந்த தேர்ச்சியில்லை என்றாலும் குறைந்தபட்ச பரிச்சயமாவது இருந்தது.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின், கல்வி முறையிலும் ஆட்சி முரையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயம் தவிர மற்ற தொழில்களின் பாலும் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சென்னை பட்டிணமாகி கிராமங்களில் இருந்து பலரை ஈர்த்தது. குருகுல கல்விமுறை வழக்கொழியத் தொடங்கியது. ஒரு குறுநில மன்னன், ஒரு செல்வந்தர் என்று தனிப்பட்டவர்கள் அளித்த கலை ஆதரவுக்கு பதிலாக, சமூகத்தில் உயர்நிலையில் இருந்தோர் ஒன்று கூடி சபை அமைத்து கலை வளர்க்க வழி செய்தனர்.

1880-களில் தொண்டைமண்டல சபா சென்னை, மிண்ட் ஸ்ட்ரீடில் இயங்கி வந்தது. ராம நவமியையும், கோகுலாஷ்டமியையும் ஒட்டி கச்சேரிகள் நடந்தன.

முதலில் செல்வந்தர்கள் அளித்த ஆதரவைப் போலவே இந்தச் சபைகளும் இயங்கின என்றாலும், காலப்போக்கில் பொது மக்களிடையே கட்டணம் வசூலித்து கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. தஞ்சாவூர் ஜில்லாவில்லிருந்து வந்து இசைத்த கலைஞர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து இன்னும் சில சபைகள் தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூர் சங்கீத சபா, ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா போன்ற சபைகள் தோன்றின. தனவந்தர்களின் நேரடியாகக் கலைஞர்களை ஆதரித்த நிலை மாறி, இது போன்ற சபைகளை ஆதரிக்கத் தொடங்கினர்.

1927-ல் காங்கிரஸ் ‘அகில இந்திய இசை மாநாடு’ ஒன்றை சென்னையில் நடத்தியது. அந்த மாநாட்டின் முடிவில் கர்நாடக இசையின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, 1928-ல் மெட்ராஸ் ம்யூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. இன்று பிரபலமாய் விளங்கும் டிசம்பர் இசை விழாவை முதன் முதலில் தொடங்கி வைத்ததும் அகாடமிதான்.

சபைகளும் கச்சேரி வாய்ப்புகளும் சென்னையில் பெருகப் பெருக இசைக் கலைஞர்களும் சென்னைக்குப் பெயர்வது சுதந்திரத்துக்கு முன்னிருந்தே தொடங்கிவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லா கலைஞர்களின் புலம் பெயர்தல் காலப்போக்கில் மற்ற மாநிலக் கலைஞர்களிடையேயும் வழக்கத்துக்கு வந்தது. துவாரம் வெங்கடசாமி நாயுடுவை சென்னைக்கு வரவழைக்க ரசிகர்கள் நிதி திரட்டி திருவல்லிக்கேணியில் ‘துவாரம் இல்லம்’ என்று ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்தனர். இசையுலகின் சிகரங்களைத் தொட்டுள்ள பாலமுரளிகிருஷ்ணா, “நீங்கள் சென்னைக்கு வாருங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் அங்குதான் உள்ளன என்று பழனி சுப்ரமணிய பிள்ளை அறிவுரைத்தார். அதன் பெயரில் சென்னைக்குக் குடி பெயர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.

குன்னக்குடியானாலும், லால்குடியானாலும் இன்று சென்னையில் வசித்தாலன்றி ஜீவனம் நடத்த முடியாது. இன்று சென்னையில் எழுபது சபைகளுக்கு மேல் இயங்கி டிசம்பரில் மட்டும் இரண்டாயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடத்தப்படுகின்றன.

கடந்த 10-15 ஆண்டுகளில் சங்கீதத் துறையில் முன்னணிக்கு வந்துள்ள கலைஞர்களை மட்டும் கணக்கில் கொண்டால், கிராமபுறங்களில் பிறந்து வளர்ந்த கலைஞர்கள் சிலராவது தேருவார்களா என்பதே சந்தேகம்தான். பெரும்பாலான கலைஞர்கள் சென்னை அல்லது குறைந்தபட்சம் திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களில் இருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.

கோவில்கள் சார்ந்த சமூகம் என்ற நிலை மாறி கோவில்கள் ஆன்மிகத் தலங்களாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் ஆகிவிட்ட நிலையில், கிராமங்களில் கோவில் சார்ந்தே தழைத்த கலையான கர்நாடக இசை நீர்க்கத் தொடங்கியது. இன்று கிராமப்புறங்களில் உள்ள நாகஸ்வர கலைஞர்கள் ஒரு மகத்தான வரலாற்றின் எச்சங்களாகவே இருக்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர் கோவில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வர குழுவினரை இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு இயந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.

கோவில்களில் அடிக்கும் இந்த எலக்டிரானிக் மணிகள் ஆண்டவனை ஆராதிக்கும் ஆன்மிக மணிகளல்ல. மரபிசை தந்த மாணிக்கங்களை குப்பையில் கிடத்திவிடாமல் இருக்க வேண்டி சங்கீதத் துறைக்கு ஒலிக்கும் எச்சரிக்கை மணிகள் அவை. எவ்வளவோ சிறந்த நாகஸ்வர கலைஞர்கள் இருப்பினும், மிகச் சில கலைஞர்களுக்கு மட்டுமே சென்னைக் கச்சேரிகளில் வாசிக்கும் (சொர்ப்ப) வாய்ப்புகள் கிட்டுகின்றன. இவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தால், அடுத்த தலைமுறையினர் கிராமப்புறங்களில் திருமணம் செய்து கொண்டால் ‘கெட்டி மேளம்’ கொட்டக் கூட சி.டி-யை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

”இனி ஒரு மாகலைஞன் செம்மங்குடியில் இருந்தோ காருக்குறிச்சியில் இருந்தோ வர சாத்தியமே இல்லையா?” என்ற கேள்வி நம் முன் பிரம்மாண்டமாய் நிற்கிறது.

இந்தக் கேள்விக்கான பதிலும், “இனி ஒரு பெரிய விஞ்ஞானி தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு சாத்தியமே இல்லையா?”, என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றுதான்.

ஐ.ஐ.டி-களும், என்.ஐ.டி-களும் கிராமங்களில் இல்லாத போதும், ஐ.ஐ.டி-யில் சேர வேண்டிய அடிப்படை அறிவையாவது பெறுவதற்கான வசதிகள் பல கிராமங்களில் உள்ளன. சங்கீதத் துறையிலும் இது சாத்தியமானால், கிராமப்புறங்களில் இருந்து இசைக் கலைஞர்கள் வெளி வர முடியும்.

குக்கிராமத்திலும் திரைப்படங்கள் பார்க்கவும், திரையிசையைக் கேட்கவும் வாய்ப்புகள் இருப்பது போல, மரபிசையைக் கேட்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தினாலன்றி கிராமங்களில் கர்நாடக இசை தழைக்காது. “கிராமங்களில் கச்சேரி வைத்தால் கூட்டம் வருமா?” என்று கேள்வி எழலாம். ஒரு மாத காலத்தில் இரண்டாயிரம் கச்சேரிகளை ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் நடத்தும் போது வரும் கூட்டத்தில் பாதியாவது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடக்கும் ஒரே கச்சேரிக்கு வராமலா போய்விடும்?

சில பத்தாண்டுகள் முன் வரை, இந்திய இசை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத க்ளீவ்லேண்டுக்குச் சென்று இன்று கச்சேரி செய்யாத பெரிய வித்வானே இல்லை. “அமெரிக்கா பணக்கார நாடு. அவர்கள் கொடுக்கும் சன்மானம் கலைஞர்களை இழுப்பதில் என்ன ஆச்சர்யம்”, என்பதும் உண்மைதான்.

அந்தக் கால இசைக் கலைஞர்களுள் பெரும்பாலோர் முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள். குருகுலவாசம் மூலம் கலையைப் பயின்று, கச்சேரி வாய்புகள் அமைந்தாலும் அமையாவிட்டாலும் கலைஞர்களாகவே கடைசிவரை வாழ்ந்தவர்கள். இன்று சங்கீதத் துறைக்கு வரும் இளைஞர்கள் வெறொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். தம்மை சங்கீதத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பங்கமும் வராது என்று உணர்ந்த பின்னரே துறையில் முழு நேரக் கலைஞராக மாறுகின்றனர். இதில் தவறொன்றுமில்லை.

நல்ல சன்மானம்தான் கலைஞர்களை ஈர்க்கக் கூடுமெனில், அதைச் செய்யும் வழிகளைக் கண்டு அடைய வெண்டும். மந்தைவெளியில் பத்தடிக்குப் பத்தடி மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு கச்சேரி வைத்தால் கூட ஸ்பான்ஸர் செய்ய ஆட்கள் உண்டு. இந்த ஸ்பான்சர்களுக்காகவே டிசம்பரில் மட்டும் முளைக்கும் சபாகள் இருக்கும் போது, நல்ல சன்மானம் கொடுத்து கிராமங்களில் கச்சேரிகள் நடத்துவதா கடினம்? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

மனமிருக்கிறதா நம்மிடம்?

Read Full Post »

இம்மாதம் அமுதசுரபியில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை

1998-ல் ஒரு காலைப்பொழுது எனக்கு பசுமையாய் நினைவில் உள்ளது.

என் மூன்றாவது செமஸ்டரில் திரவ இயக்கவியல் பரிட்சை என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த பொறியாளர் ஒருவர் எனக்கு சொல்லிக் கொடுக்க முன் வந்தார். அவர் வீட்டுக்குள் நான் நுழையும் போது பின்னணியில் வானொலியில் கல்யாணி ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது. அதை நாங்கள் பெரிதும் பொருட்படுத்தவில்லை.

நாங்கள் பாடப் புத்தகத்தைத் திறப்பதற்கும் வானொலியில் சிந்துபைரவி ராகம் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மெல்லிய கீற்றுகளாய் அந்த ராக அலைகள் அறையை நிரப்பிய போது என் கைகள் உறைந்து போயின. பின்னணியில் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்த இசை இருபது நொடிகளில் பிரம்மாண்டமாய் வளர்ந்து உள்ளுக்குள் என்னமோ செய்தது. என்னையறியாமல் என் கண்கள் ஈரமாயின. சுதாதரித்துக் கொண்டு, “இதை வாசிப்பது யார்?”, என்று கேட்டேன்.

“ஓ! இது டி.என்.கிருஷ்ணன்! வேற ஆராக்கும் இப்படி வாசிக்க முடியும்? ”, என்றார் பாலக்காட்டுத் தமிழில்.

நான் முதன் முதலில் டி.என்.கிருஷ்ணனைக் கேட்ட கணம் அதுதான்.

Pic: Ramanthan Iyer

இது நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரை நேரில் கேட்க முடிந்தது. இதற்கு இடையில் பல இசைப் பதிவுகளில் அவரது வாசிப்பைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவற்றில் ஒரு பதிவு வித்வான் எம்.சந்திரசேகரனுடன் சேர்ந்து வாசித்திருக்கும் கச்சேரி. அந்தக் கச்சேரியில் டி.என்.கிருஷ்ணன் பிலஹரி ராகத்தை ஆறு நிமிடங்களுக்குள் சாறாகப் பிழிந்து வாசித்திருப்பார். சக கலைஞரான சந்திரசேகரனை தன்னை மறந்து அந்த ஆறு நிமிடங்களுக்குள் இருபது முறையாவது ஆரவாரிக்க வைத்திருக்கும் பிலஹரியது! நான் சோர்ந்திருக்கும் வேளையில் தேடக்கூடிய பதிவுகளில் ஒன்றும் கூட.

2003-ல் ராக சுதா அரங்கில் டி.என்.கிருஷ்ணனை முதன் முதலாக நேரில் கேட்டேன். அந்த வருடம் மறைந்த அவருடைய குருநாதர் செம்மங்குடி சீனிவாஸ ஐயருக்கு அர்பணம் செய்து வாசித்த கச்சேரி அது. அன்று அவர் வாசித்த கல்யாணிக்கு இணையாக ஒன்றைச் சொல்வது இயலாது. ராக ஆலாபனை முடிந்த போது வித்வான் செங்கல்பட்டு ரங்கநாதன் எழுந்து நின்று சபையோரைப் பார்த்து, “இதுதான் உண்மையான கல்யாணி! இதைக் கேட்டு எத்தனை நாட்களாகிவிட்டது!” என்று  உணர்ச்சிவசப்பட்டது நினைவுக்கு வருகிறது.

அன்று தொடங்கி டிசம்பரில் டி.என்.கிருஷ்ணன் கச்சேரியை ஒரு முறையாவது கேட்டுவிடுவது என் வழக்கமாயிற்று. பெரும்பாலும் அவை சங்கீத வித்வத் சபை கச்சேரிகளாக அமைந்திருந்தன. நான் கேட்கத் தொடங்கிய காலத்தில் அவர் ஜனவரி 1-ம் தேதி காலையில் அங்கு வாசித்து வந்தார். டிசம்பரில் பதினைந்து நாட்களில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு கச்சேரி வீதம் ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குத் தாவித் தாவி கச்சேரி கேட்கும் போது ஏற்படும் கலவையான மனநிலையை விளக்குவது கடினம். பதினைந்து நாட்கள் சீக்கிரம் விழித்து நேரம் கடந்து தூங்குவதால் ஏற்படும் உடற்சோர்வு, தொடர்ந்து மனத்தை ஒருங்கிணைத்துக் கேட்பதால் ஏற்படும் மனக்களைப்பு, ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த மார்கழி இசை விழா முடிந்தேவிட்டதே என்கிற சலிப்பு எல்லாம் கலந்த கலவையாக அலைபாயும் மனத்திற்கு களிம்பு தடவினாற்போல் அமைந்தன அவரது புத்தாண்டு கச்சேரிகள். அவர் கச்சேரி கொடுத்த நிறைவில் சந்தோஷமாய் என்னால் அடுத்த இசைவிழாவை எதிர்நோக்க முடிந்தது.

ஒருமுறை அவருடைய கச்சேரியைக் கேட்டுவிட்டு இரவில் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன். எதிர்பட்ட நண்பர் நான் எங்கிருந்து வருகிறேனென்று தெரிந்ததும், “இன்று கச்சேரியில் புதியதாக என்ன வாசித்தார்?”, என்று கேட்டார். எனக்கு அவருடைய கேள்விக்கு உடனே பதிலளிக்க முடியவில்லை.

அந்தக் கேள்வி என்னுள் பல நேரம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தினமும் காலையில் தோட்டத்தில் நடக்கும் போது, கண்ணுக்கு தெரியாவிடினும் மணத்தால் தன் இருப்பைத் தெரிவிக்கும் மனோரஞ்சித மலரிடம் நாம் புதுமையை வேண்டுகிறோமா? கிருஷ்ணனின் வாசிப்பு அந்த மணத்தைப் போன்றது. அதில் புதுமை துருத்தித் தெரியாதது ஒரு குறையல்ல. அவர் பாணியின் சிறப்பம்சம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அவர் வாசிப்பில் என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயமொன்று உண்டு. அவர் நூர்த்த ஒவ்வொரு இசை இழையிலும் வல்லின மெல்லினங்களின் சேர்க்கை தன்னிச்சையாய் வந்து உட்காரும். அந்த மாயத்தை நான் நினைத்து நினைத்து மாய்ந்து போவதுண்டு. ஒரு ராகத்தை ஸ்வரங்களின் சேர்க்கையாகவோ, பிரயோகங்களின் அடுக்காகவோ அணுகாமல் அதற்கும் மேற்பட்ட முழுப் பரிமாணமாக அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்த முடிந்ததை வித்வத், மேதமை என்று சொல்வதைவிட அதையொரு ‘ஸித்தி’ என்று சொல்லத் தோன்றுகிறது.

அவர் வாசித்த பூர்வி கல்யாணி நினைவுக்கு வருகிறது. அதில் அவர் தார ஸ்தாயியை நெருங்கும் போது ஒலி அளவை கால்வாசியாய்க் குறைத்து மெல்லிழையாய் அந்த ஷட்ஜத்தில் கலந்து கொண்டார். என் உடல் தன்னிச்சையாய் இருக்கையின் நுனிக்கு நடர்ந்தது, என் காதுகள் தீர்க்கமாவதை உணர முடிந்தது, தம்புரா ஷட்ஜத்துடன் ஐக்கியமான அந்த மெல்லிய வயலின் ஷட்ஜம் ஒரு பெரிய அலையை அந்த அரங்குக்குள் பிரம்மாண்டமாய் எழுப்பியது.

அந்த ஷட்ஜத்தை எந்த அளவில் ஒலிக்கவிட்டால் அந்த மோன நிலை பிறக்கும் என்று அவருக்கு எப்படித் தெரிந்திருந்தது?

எனக்கு இந்தக் கேள்விக்கான விடை இந்த ஜென்மத்தில் கிடைக்கப்போவதில்லை.

அதனால் என்ன? அந்த ஷட்ஜத்தின் சௌந்தர்யத்தில் கரைந்து போக அந்தக் கேள்விக்கான பதில் தெரிய வேண்டியதில்லையே.

இந்த ஜென்மத்துக்கு அது போதாதா என்ன?

Read Full Post »