கர்நாடக இசையின் அங்கங்களில் ஸ்தூலமானதைப் பற்றி நிறைய பேச முடியும். அவற்றைப் பற்றி பேசும் போது சாற்றை நீக்கி சக்கையைப் பேசினது போலத் தோன்றும். ஆனால் சூட்சுமமாய் பல அங்கங்கள் உண்டு. அவற்றை திரும்பத் திரும்ப கேட்பதன்/பாடுவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொண்டால்கூட அவற்றைப் பற்றி பேசுவது கடினம். நல்ல குருவால் கோடி காட்டமுடியும். கேட்பவருக்குக் கொடுப்பினை இருந்தால் அந்த வழிகாட்டல் அர்த்தமுள்ள பயணமாய் மாறும்.
ஒருமுறை பல்லவிகளைப் பற்றி பேசும் போது, வித்வான் டி.ஆர்.எஸ் சபையினரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.
“கண்டிகி சுந்தர” என்கிற பிரபல வரியை ஒரு பல்லவியாக எப்படி மாற்றுவது?
இதுதான் கேள்வி.
உடன் இருந்த மாணவி பாடிக் காண்பித்தார். பூர்வாங்கம் – அருதிக் கார்வை – உத்தராங்கம் என்று மூன்று பகுதிகள் கொண்ட பல்லவியாய் அந்த வரி மலர்ந்தது.
உடனே டி.ஆர்.எஸ், “பாடிக் காட்டிவிட்டீர்கள். சரிதான். இப்போது சொல்லுங்கள் கீர்த்தனையில் இருந்த வரிக்கும் இப்போது பாடிய பல்லவிக்கும் என்ன வித்தியாசம்?”
பாடிய மாணவி சொல்ல முயன்றார். வார்த்தைகள் வெளிவராமல் திக்கித் தவித்தார்.
டி.ஆர்.எஸ் அந்த வரியை இனொருமுறை பாடினார்.
“நன்றாக கவனியுங்கள். சுந்தர என்று அருதியை நெருங்கும் இடத்தை கவனியுங்கள். ஒருவித ஃப்ரிக்ஷனை உணரமுடிகிறதா? இந்த ஃப்ரிக்ஷன் கர்நாடக சங்கீதத்தின் சூட்சமங்களில் முக்கியமான ஒன்று”, என்றார்.
பின்னர் ஒருமுறை அவரை அண்ணா நகர் வீட்டில் சந்திக்கும் போது, “சார், நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷன் பல்லவிக்கு மட்டுமில்லை என்று தோன்றுகிறது. செம்மங்குடி பாடும் ‘இந்த பராகா’-வில் ரகரத்தைக் கொஞ்சம் வல்லினமாக்கி ஒலிக்க வைப்பது கூட இந்த ஃப்ரிக்ஷன்தானோ என்று தோன்றுகிறது”, என்றேன்.
“சந்தேகமென்ன? ஒரு சீரான போக்கில் சிறு சலனம் ஒன்றை எழுப்பினால்தான் ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. அவை சுழன்று கொண்டெ இருக்கும். இந்த ஃப்ரி்க்ஷனை வைத்துதான் அந்தச் சக்கரங்களை ஒன்றோடு ஒன்று உராயச் செய்யமுடியும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வைக்கும். நிரவலில் ஒதுக்கல்கள், கோர்வைகளில் மௌனமாய் ஒலிக்கும் கார்வைகள் எல்லாம் இந்த ஃப்ரி்க்ஷன்தான்”, என்றார்.”
இந்த ஃப்ரி்க்ஷன் தேவைப்படாதவர்கள் இரண்டே பேர்தன் நம் சங்கீதத்தில்”, என்று அவரே தொடர்ந்தார்.“ஒன்று ராஜரத்தினம் பிள்ளை. அவர் வாசிப்பு காட்டாற்று வெள்ளம். கண்ணை மூடிக் கொண்டு அந்த சுழலுக்குள் சென்றுவிட வேண்டியதுதான். அரை மணியோ, ஆறு மணியோ – அதன்போக்கில் சுழன்றுவிட்டு வெளியில் தள்ளும் போது கண்ணைத் திறந்தால் போதும். இன்னொருவர் மதுரை மணி. பனிச்சறுக்கு செல்லும் போது ஃப்ரிக்ஷன் வேண்டுமென்றா கேட்போம்? ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங் பார்க்கும் போதெல்லாம் மதுரை மணி ஐயரைத்தான் நினைத்துக் கொள்வேன்”. என்றார்.
இன்று டி.ஆர்.எஸ் இருந்திருந்தால், காருகுறிச்சியாரின் சங்கீதத்தில் நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷனைக் கண்டுகொண்டேன் என்று சொல்லியிருப்பேன்.
அவரிடம் ஒரு கருத்தைச் சொன்னால், ‘உனக்கென்னடா தெரியும்? உளராதே!’, என்று ஒருநாளும் சொன்னதில்லை. நம் கருத்தை அமோதிப்பது போல் தொடங்கி இன்னும் துலக்கிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
காருகுறிச்சியாரின் ராக ஆலாபனைகளில் ஆங்காங்கே பொறி பறக்க அவரது நையாண்டி மேளப் பின்புலத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தோன்றுகிறது.
கர்நாடக இசை கச்சேரி வடிவத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளைப் பார்த்தால் பல ராகங்களிலும், பாடல் வடிவங்களிலும் உள்ள ‘கர்நாடக’ தன்மை அதிகரித்து வருவதை உணர முடியும். தேசீய ராகத்தையோ, காவிடிச் சிந்தையோ எடுத்துக் கொண்டு நூறு வருடத்துக்கு முன்னால் இருந்த வடிவத்தோடு இன்றைய வடிவத்தை நோக்கினால் இதை உணர்ந்து கொள்ள முடியும்.
செவ்வியல் இசையாக இருந்தாலும் கிராமிய இசை என்றாலும் இருக்கின்ற ஸ்வரஸ்தானங்கள் ஒன்றுதான். அந்த ஸ்வரங்களின் சஞ்சாரங்களில் உள்ள அசைவுகளும் வளைவுகளுமே இவ்விரு இசை வடிவத்துக்கான வேறுபாட்டைக் காட்டுகின்றன. காருகுறிச்சியாரின் வாசிப்பில் எதிர்பாரா சமயங்களில் வெளிப்படும் கர்நாடக இசையில் அதிகம் காணக்கிடைக்காத கிராமிய வளைவுகள் ஆங்காங்கே மின்னி கேட்பவரின் மனக்கண் முன் டி.ஆர்.எஸ் சொன்ன தீப்பொறிகளைக் காட்டுகின்றன.
இந்த அணுகுமுறையை உசைனி, யதுகுலகாம்போதி போன்ற கிராமிய பின்புலம் கொண்ட ராகங்களில் மட்டுமல்ல – உங்களுக்கு பேறிருப்பின் வாசஸ்பதியிலும், நடபைரவியிலும் கூட கண்டுகொள்ளலாம்.
Read Full Post »