கொஞ்சும் சலங்கையில் காருகுறிச்சியார் என்றதும் எல்லோருக்கும் சிங்கார வேலனே தேவா நினைவுக்கு வரும்.

“அந்த ஆபேரிதான் எல்லாருக்கும் தெரியுமே! அதைத் தவிர ஒரு பிலஹரி வாசிச்சு இருக்காரே”, என்று சூலமங்கலம் ராஜலட்சுமி பாடியுள்ள அருட்பாவைத் தொடர்ந்து அருணாசலம் அவர்கள் வாசித்துள்ள பிலஹரியை சிலர் குறிப்பிடக்கூடும்.
நானும் இவை இரண்டையும்தான் காருகுறிச்சியார் திரையில் வாசித்துள்ள பதிவுகளில் நமக்குக் கிடைப்பவை என்று நினைத்திருந்தேன்.
சில நாட்களுக்கு முன்னால் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பற்றி ஒரு பேச்சு வந்தது. அந்தப் படத்தில் வரும் நாகஸ்வர வாசிப்பைப் பற்றி பலர் விரிவாகப் பேசி இருந்தாலும், சிக்கல் சண்முகசுந்தரம் தன் குருநாதரை சந்திக்கப் போகும் காட்சி ஒன்று வரும். அதில் வீட்டில் அமர்ந்து குருநாதர் வாசிப்பது போல ஒரு தோடி ராகம் இசைக்கப்படும். அற்புதமான அந்தத் தோடியைப் பற்றி யாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை என்று நண்பரிடம் சொல்லும் போதே உள்ளுக்குள் பொறி தட்டியது.
இந்தத் தோடியைப் போல கொஞ்சும் சலங்கையில் புதையல்கள் ஏதும் இருந்தால்?
இணையத்தில் தேடியதில் முழு படமும் கிடைத்தது.
பொறுமையாகப் படத்தைப் பார்த்த போது (நிச்சயம் பொறுமை வேண்டும்) நான் நினைத்தபடியே சில முத்துகள் கிடைத்தன.
படத்தின் கதாநாயகன் ஒரு நாகஸ்வர கலைஞன். அவனது அறிமுகக் காட்சியே அவன் தோடி ராகத்தில் வாசிக்கும் ஸவரப்ரஸ்தாரத்துடன்தான்
அமைந்துள்ளது. காருகுறிச்சியாரின் வாசிப்புடன் நாம் தொடர்புபடுத்தும் குளுமையும், முழுமையும் இந்தப் பதிவிலும் கேட்கக்கிடைக்கிறது. தார ஸ்தாயி காந்தாரத்தின் கம்பீர அசைவும், மத்ய ஸ்தாயியில் வழுக்கிச் செல்லும் ஜாரு பிரயோகங்களும் நிமிடத்துக்கு குறைவான பதிவென்றாலும் மனத்தில் ஒட்டிக் கொள்ள வைக்கின்றன.
இன்னொரு காட்சி அரண்மனையில் நடக்கும் கலைவிழா. அதில் தன் திறமையைக் காட்டுகிறான் கதாநாயகன். கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி ராகமாலிகையாய் அமைந்துள்ளது. கீழ் கால ஸ்வரங்களாய் அமைந்துள்ள இந்தப் பகுதி பேகடாவில் தொடங்கி கானடாவில் முடிகிறது. இந்தக் கானடாவை காருகுறிச்சியார் வாசித்துள்ளார் என்பதைவிட பெரும்பள்ளம் வெங்கடேசன் வாசித்துள்ளார் என்றே சொல்லலாம். அந்தத் தவிலில் ஒலித்திருக்கும் கும்காரங்களின் அழகைச் சொல்லி மாளாது.
படத்தின் ஒரு கதாநாயகி குமாரி கமலா. அவருக்கும் இன்னொரு நாட்டிய கலைஞருக்கும் போட்டி நடக்கிறது. கமலாவின் கால்கள் விஷப்பொடியைத் தீண்டியதால் தளர்ந்து போகின்றன. அவர் விழுந்துவிடும் நிலை வரும்போது எங்கிருந்தோ கேட்கிறது அந்தக் கந்தர்வ இசை. அந்தக் கருங்குழலின் இசை நெருங்க நெருங்க வலியும் மறந்து போகிறது. தன்னிச்சையாய் உடல் நடனமாடத் தொடங்குகிறது. இந்தக் காட்சிக்கு செஞ்சுருட்டி ராகம் கொஞ்சமும், அதே ராகத்தில் அமைந்த தில்லானாவில் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன.
முதல் இருபது நொடிகளில் இது காப்பியா, சாமாவா என்றெல்லாம் பூச்சி காட்டிவிட்டு கிராமிய இசைப் பிரயோகம் மூலம் சபைக்கு வருகிறது அந்தச் செஞ்சுருட்டி. இந்தப் பகுதியை மட்டும் இருபது முறை தொடர்ந்து கேட்டிருப்பேன். ராகம், அதன் இலக்கணம், அதில் வரக்கூடிய ஸ்வரங்கள்/பிரயோகங்கள் என்றெல்லாம் மனம் செல்லாமல் அதற்கும் மேலான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் லட்சிய கீற்றாய் அமைந்துள்ளது இந்தப் பகுதி. என்னைக் கேட்டால் இந்தப் படத்தில் காருக்கிறிச்சியாரின் உச்சம் என்று இதைத்தான் சொல்லுவேன்.
இந்தத் தேடலில் எனக்குக் கிடைத்த கடைசி முத்து கேதாரகௌளை. காதலும் காதலியும் பிரிந்திருக்கும் போது கற்பனைக் காட்சியாய் அவன் இசைக்க அதற்கு அவள் ஆடுவது போல அமைந்த காட்சி. கேதாரகௌளையின் ஜீவனான தார ஸ்தாயி ரிஷபத்தில் சஞ்சரித்து ராகத்தை வளர்த்து தவிலின் ஸ்வர்வலகுவில் சவாரி செய்தபடி இரண்டாம் கால ஸ்வரங்களில் பவனி வரும்போது பட்டென்று நின்று நம்மை ஏங்கச் செய்யும் பதிவு.
கையிலேயே இருக்கும் விஷயமென்றாலும் நம் கண்ணுக்கு புலப்படுவதற்கென்று ஒரு தருணம் விடிந்தால்தான் உண்டு.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாரதி சொன்னது சரிதான். ஆனால் அத்தனையும் உணர்ந்திடும் தருணத்தை இந்தப் பிறவிக்கு விதித்தானா என்றுதான் தெரியவில்லை.
அருமை 🙏