Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2021

காருக்குறிச்சியில் நாகஸ்வர மேதை அருணாசலத்துக்கு ஒரு சிலை இருக்கிறது.

சட்டிப்பானையைக் கவிழ்த்தது போன்ற தலை. குன்னக்குடி வைத்தியநாதனுக்கு சவால்விடும் குங்குமப் பொட்டு. சிறிய சிப்ளா கட்டைகள் போன்ற காதுகள். அளவுக்கு அதிகமாய் நீண்ட கிரேக்க மூக்கு. அதீதமாய் அடர்ந்த புருவங்கள். ஐந்து விரலும் ஒன்றாய் தோன்றும் அதிசய கரங்கள். நகங்களில் நெயில்பாலிஷ். அவசரத்துக்கு ஏதோ வீட்டு குளியலறையிலிருந்து பிடுங்கிய குழாயைப் போன்ற நாகஸ்வரம். நாகஸ்வரம் என்று சொல்லக் கூட தயங்க வைக்கும் அணைசுக்கு அருகில் இருக்கும் வளைவு.

மொத்தத்தில் உள்ளூர்காரர்கள் பார்த்தால் வருந்தும்படியாகவும், வெளியூர்காரர்கள் பார்த்தால் சிரிக்கும்படியான சிலை.

நானும் அந்தச் சிலையைப் பார்த்து சிரித்ததுண்டு. காருக்குறிச்சிக்கு செல்லாதிருந்தவரை.

நான் அங்கு சென்றபோது, சந்தித்த அத்தனை பேரும் இந்தச் சிலையைப் பற்றி தவறாமல் பேசினர்.

“எங்க ஊருக்கே பெருமை அவருதான். நாங்கதான் இப்படி ஒரு சிலையை வெச்சுட்டோம்.”, என்று சொல்லாத ஆளில்லை.

போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு உறுத்தும் சிலைதான் அவர் நினைவை பசுமையாக வைத்துக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

அந்த ஊரில் ஒரு வயதான பெண்மணி இந்தச் சிலை வந்த கதையைச் சொன்னார்.

காருக்குறிச்சியார் மறைந்த போது அவர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதி திரட்டப்பட்டதாம். ஊருக்குள் நுழையுமிடத்தில் பிரதான இடமொன்றும் குறிக்கப்பட்டு, நல்லதொரு நாள் பார்த்துச் சிலை திறப்புக்கான விழா ஏற்பாடுகளும் ஆகிவிட்டனவாம்.

சிலையை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பை ஊரில் ஒருவர் ஏற்றுக் கொண்டதும் அவரிடம் கணிசமான தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காசை வாங்கிக் கொண்ட புண்ணியவானும், ”இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும்”, என்று போக்கு காட்டி சிலைத் திறப்புக்கு இரண்டு நாட்களே இருக்கும் போது சந்தடியில்லாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டாராம்.

சிலையைத் திறக்க விழாவெல்லாம் ஏற்பாடு செய்து, வெளியூரிலிருந்து முக்கியஸ்தர்களை எல்லாம் அழைத்துவிட்ட நிலையில் சிலை இல்லாவிட்டால் என்ன செய்ய?

காருக்குறிச்சியார் சிலை இருக்கும் தெருவுக்கு அடுத்தார்ப்போல் மன்பாண்டம் செய்யும் குயவர்கள் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆபத்பாந்தவர்களாய் உதவியிருக்கின்றனர்.

குறித்த நாளில் மண்ணின் மைந்தனுக்கு சிலை திறப்பு தடையில்லாமல் நிகழ தங்களால் ஆனவற்றை செய்துள்ளார்கள்.

இந்தக் கதையைக் கேட்டதும் அந்தச் சிலையைப் பார்த்தேன்.

பிள்ளையார் சதுர்த்திக்கு அச்சில் வார்த்த அழகான பிள்ளையார்களை கடைகளில் வாங்கி வந்தாலும், வீட்டு வாண்டு ஒன்று நாலைந்து களிமண் உருண்டைகளை உருட்டி “இதுதான் பிள்ளையார்” என்று சொல்லும்போது உலகின் அழகான பிள்ளையார் அதுதான் என்று தோன்றுவது நினைவுக்கு வந்தது.

சங்கீத உலகின் மிக அழகான சிலையாக காருக்குறிச்சியாரின் சிலை என் கண்களுக்குப்பட்டது.

Read Full Post »

காருகுறிச்சியாரின் உசைனியைப் போன்ற கற்பனையைத் தூண்டக் கூடிய பதிவுகளைக் கேட்பதரிது.

ஒருநாள் சென்னையில் ராஜரத்தினம் பிள்ளை ஒரு பூங்கா வழியாய் செல்கிறார். அங்கிருக்கும் வானொலியில் ஒலிபரப்பாகும் உசைனி அவரை கட்டி இழுக்கிறது. காலை எடுத்து வைக்கப் பார்க்கிறார். அவர் உடல் ஒத்துழைக்க மறக்கிறது. நல்ல தஞ்சாவூர் திட்டு வார்த்தையில் இரண்டைச் சொல்லி, ‘வேலையைக் கெடுக்கறானே பாவி’ என்று சமைந்து நிற்கிறார். ராஜரத்தினம் பிள்ளை நிற்கிறார் என்கிறதும் மெதுமெதுவாய் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடுகிறது. உச்சங்களைத் தொட்ட அந்த உசைனி முடியும்போது மெல்ல நகர ஆரம்பிக்கிறார் பிள்ளை. சுற்றி இருந்தக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ‘என்னைக் குழி தோண்டிப் புதைக்க இவன் ஒருத்தன் போதும்’ என்று முகத்தில் பெருமை பொங்க நடந்து செல்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

இது வரலாற்று உண்மையா? செவி வழிச் செய்தியின் நம்பகத்தன்மை என்ன என்றெல்லாம் சிலர் கேட்கக் கூடும்.

முழுக்க முழுக்க கற்பனையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அந்த உசைனிக்குப் பொருத்தமான கற்பனைதானே என்று கதைக்கு வக்காலத்து வாங்கத் தோன்றுகிறது.

இது போன்ற அவர் உசைனியை ஒட்டிக் கிடைக்கும் கதைகளையெல்லாம் திரட்டி நெடுங்கதையாய் எழுதக்கூடத் தோன்றுகிறது.

#karukurichi

Read Full Post »