Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அறிவிப்பு’ Category

பரிவாதினியைத் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பரிவாதினியின் ஆகப் பெரிய நிறைவு என்பது – இசைத் துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர், அதை பரிவாதினியின் மூலமாக செய்தால் சரியானவருக்குப் போய்ச் சேரும் – என்கிற நம்பிக்கையில்தான்.

அந்த வகையில், ஒரு முக்கியமான தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சில ,மாதங்களுக்கு முன் Natarajan Srinivasan என்னைத் தொடர்பு கொண்டார். தனது பெற்றோர் பத்மா/சீனிவாசன் பெயரில் வருடா வருடம் நாகஸ்வர கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். நாங்கள் சிலமுறை தொலைபேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.

நாகஸ்வரம்/தவில் துறையில் எத்தனையோ சாதனைகள் செய்த கலைஞர்கள் காலப்போக்கில் முதுமை காரணமாகவும், காலச்சூழல் காரணமாகவும் அதிகம் வெளியில் தெரியாமல் ஆகிவிடும் நிலை உருவாகிவிடுகிறது. சில கலைஞர்கள், முதுமை காரணமாக வாசிக்க முடியாத சூழலில், சற்றே சிக்கலான நிதி நிலைமையில் வாழ்க்கையை நடத்தும் நிலையையும் காணமுடிகிறது.

இவ்விரு விஷயங்களை, (1. துறையில் சாதனையாளர், 2. நிதி உதவி கிடைத்தால் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவர்) கருத்தில் கொண்டு வருடம் ஒருமுறை பரிவாதினி அடையாளம் காட்டும் கலைஞருக்கு பத்மா/சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் சன்மானத்தை நண்பர் நடராஜனின் குடும்பத்தினர் வழங்கவுள்ளனர்.

இந்த வருடத்துக்கான விருதை மூத்த தவில் கலைஞர் திரு.ஆரணி பாலு அவர்கள் பெறவுள்ளார்கள். (அவரைப் பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.) வருடாந்திர நவராத்திரி நாகஸ்வர கச்சேரி வைபவத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் நடராஜன் குடும்பத்தினருக்கு என் தனிப்பட்ட முறையிலும், இசைத் துறை சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Read Full Post »

தமிழ்நாட்டு கர்நாடக இசைச் சூழலைப் பற்றி மற்ற மாநிலத்தவர் அவ்வப்போது வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று உண்டு.  கச்சேரி வாய்ப்புகளோ, பட்டங்களோ தமிழ்நாட்டுக் கலைஞர்களுக்குக் கிடைத்த/கிடைக்கும் அளவு மற்ற மாநிலத்தவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

இதைக் கேட்கும் போதெல்லாம் நான் பொறுமையாக இரண்டு விஷயங்களைக் பதிலாகக் கூறுவதுண்டு.

  1. ஆந்திர மாநிலத்தில் ஆந்திரக் கலைஞருக்கும், கேரள மாநிலத்தில் கேரள கலைஞருக்கும் அதிக வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் கிடைப்பது போலவே தமிழ்நாட்டிலும் நடப்பது இயற்கை.
  2. கலையில் உச்சங்களைத் தொட்ட வேற்று மாநிலக் கலைஞர்கள் பலரைக் கொண்டாட தமிழகம் தவறியதில்லை.

இதில் இரண்டாவது விஷயத்தை விளக்க நான் சங்கீத கலாநிதி துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கதையை நாடுவேன்.

சிறு வயதிலேயே பார்வை மிகவும் மோசமான நிலமையைல் வெங்கடசாமி நாயுடுவால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை.  ஒருவகையில் முழு நேரத்தையும் இசைக்கே ஒதுக்க அதுவே காரணமானது. 1920-களில் கச்சேரி உலகின் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார் துவாரம்.  1927-ல் காங்கிரஸ் மாநாட்டின் பகுதியாக நடைபெற்ற இசைக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஜாம்பவான்களுள் ஒருவராக அவர் இடம் பெரும் அளவிற்கு அவர் புகழ் வளர்ந்தது.

இதனால் காழ்புற்ற ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு கலைஞர், துவாரத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு அவர் இசையை வெகுவாகச் சாடினார். மென்மையான சுபாவத்தினராகவும், கச்சேரிகளைத் தேடிச் சென்று வாசிக்காமல் பொதுவிலிருந்து விலகியிருப்பதையே விரும்பியவராகவும் துவாரம் விளங்கியதால், அவரை இந்த விமர்சனங்கள் இன்னும் கூட்டுக்குள் செல்லத் தூண்டின. மகாராஜா கல்லூரி கொடுத்த சம்பளமும், வீட்டில் தினமும் மாலை நேரங்களில் வாசிக்கும் கச்சேரிகளுமே அவருக்கு போதும் என்று முடிவெடுத்துவிட்டார்.

குடத்தில் இட்ட விளக்காய் இருக்க நினைத்தவரை குன்றின் மேல் ஏற்றிவிட்டவர் கீர்த்தனாசார்ய சி.ஆர்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார். அவர் முனைப்பில் சென்னையில் கச்சேரிகள் ஏற்பாடு செய்து, துவாரத்தின் வாசிப்பில் உள்ள விசேஷங்களைப் பற்றி விரிவாக பத்திரிகைகளில் எழுதி அவரை மீண்டும் கச்சேரி உலகிற்கு இழுத்து வந்தவர் கீர்த்தனாசாரியார்தான்.

இதற்கு பின், துவாரத்தை எப்படியாவது சென்னைக்கு குடிபெயர்த்துவிட வேண்டுமென்று பலர் முயற்சி செய்தனர். தனக்கு இள வயதில் அடைக்கலமளித்த விஜயநகரம் கல்லூரியை விட்டு எங்கும் வருவதாக இல்லை என்று துவாரம் உறுதியாக இருந்தார்.  கல்லைக் கரைக்கும் கரைப்பார் இருந்ததால் முயற்சிகள் விடாமல் தொடர்ந்தன. 1949 துவாரத்தைப் பாராட்டும் வகையில் சன்மான உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டு, திரண்ட பரிசுத் தொகை ரூ.35000 பரிசாகக் கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில்தான் திருவல்லிக்கேணியில் பந்தல வேணுகோபால நாயுடு தெருவில் ‘துவாரம் இல்லம்’ அமைத்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

இப்போது எதற்கு இந்தக் கதை?

சில நாட்களுக்கு முன் சென்னை சென்ற போது நண்பர் யெஸ்ஸல் நரசிம்மனைச் சந்திக்க திருவல்லிக்கேணி சென்றிருந்தேன். சில மணி நேர அரட்டைக்குப் பின் கொஞ்சம் காப்பி குடிக்கலாம் என்று தெருவில் இறங்கினோம். கடைக்குச் செல்லும் வழியில், “இங்கதான் துவாரம் வீடு இருந்தது”, என்றார் யெஸ்ஸல்.

”இருந்ததா? இப்ப என்ன ஆச்சு?”

”அதை இடிச்சு ஒரு மாசம் இருக்கும். வாசல்ல போர்டு மட்டும் இருக்கு. வெணும்னா படம் எடுத்துக்குங்க”, என்றார்.

சென்னையில் இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இசைத் தளம் தரைமட்டமாகியிருக்கிறது.

ரசிகர்களாக இது பெரிய வருத்தமளித்தாலும், கலைஞர்களின் குடும்பத்தினரின் பார்வையில் இருந்து இது போன்ற முடிவுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற கட்டிடங்களைக் காக்க அரசு தனி முயற்சி எடுத்து குடும்பத்தினருக்கும் தக்க சரியீடு செய்தாலன்றி இது போன்று கட்டிடங்கள் இன்று இல்லாவிட்டால் நாளை விழத்தான் செய்யும் – இப்போது வீழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மணி ஐயரின் வீட்டைப் போல!

Read Full Post »

பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம் – முன்னுரை

நான் இணையத்தில் எழுதத் தொடங்கியவன். இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்தரத்தினால் எழுதும் பொருளை என் திருப்திக்கு ஏற்ப எழுதிப் பழகியவன். நான் இணையத்தில் எழுதத் தொடங்கி சில ஆண்டுகள் கழித்து ஒரு நூல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதி அச்சில் வெளியான முதல் ஆக்கமே நூல்தான். நூல் என்பதால், அதிலும் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது.

2009-க்கு பிறகே அச்சு இதழ்களில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அச்சில் வெளியான என் எழுத்துக்கள் பெரும்பாலும் கேட்ட சில நாட்களுக்குள், குறிப்பிட்ட வார்த்தை வரம்பை மீறாமல் எழுதப்பட்டவை என்பதால் இந்தக் கட்டுரைகளை நான் அதிகம் பொருட்படுத்தாமல் இருந்தேன்.

நண்பர் பரிசல் செந்தில்நாதன் சில ஆண்டுகளாகவே இசை ஆளுமைகளைப் பற்றி புத்தகம் ஒன்றை வெளியிட என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் போதெல்லாம், இந்தக் கட்டுரைகளை விரிவாக்கி, இதில் உள்ள ஆளுமைகளைப் பற்றிய (ஓரளவுக்காவது) முழுமையான சித்திரம் தோன்றும்படி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

இசையாளுமைகளை ஆராயும் போது, இசைப் பதிவுகளைக் கேட்பதற்கும், கேட்ட இசையைப் பற்றி விவாதிப்பதற்குமே பல மாதங்கள் (ஆண்டுகள்!) எடுக்கும் என்ற நிலையில், ஒருவரில் வாழ்நாளில் ஒரு சில ஆளுமைகளைப் பற்றி மட்டுமே முழுமையான நூலாக்குவது சாத்தியம் என்பதை உணர எனக்கு இருபதாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளில் உள்ள ஆளுமைகளில் சிலரைத் தவிர பலரைப் பற்றி தமிழில் அதிகம் பதிவுகள் இல்லை. அதிலும் இசைத் துறையில் கலைஞர்களாக அல்லாது, வாத்தியங்கள் வடிக்கும் வினைஞர்களாக இருப்பவர்கள் பற்றி பதிவுகள் மிகவும் குறைவு. அதனாலேயே முழுமையாக இல்லாவிடினும், குறுக்குவெட்டுத் தோற்றமாகவாவது இந்தப் பதிவுகளை நூலாக்கலாம் என்று தோன்றியது.

இந்தக் கட்டுரைகளை என்னிடம் கேட்டு, சலிக்காமல் தொடர்ந்து நினைவூட்டிப் பெற்ற இணைய/அச்சுப் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் வெளியான கட்டுரைகளை இன்று படிக்கும்போது, சற்றே சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது. அவற்றை எழுதிய காலத்தில் நான் நிஜமாகவே சிறுபிள்ளைதானே! அதனால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

கட்டுரைகளில் ஏதும் குறையிருந்தால் தயங்காமல் சுட்டுங்கள். திருத்திக் கொள்ளக் காத்திருக்கிறேன். கட்டுரைகள் உங்களுக்குப் பிடித்திருப்பின் அதற்குக் காரணமான ஆளுமையை நெஞ்சார வாழ்த்துங்கள்.

என்றும் அன்புடன்

லலிதாராம்

Read Full Post »

பரிவாதினி வழங்கும் 2021-ம் ஆண்டுக்கான பர்லாந்து விருதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


2013-ல் தொடங்கி மிருதங்கம்/கடம்/வீணை/கஞ்சிரா/நாகஸ்வரம் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வினைஞர்களை இதுவரை கௌரவித்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு வித்தியாசமான வினைஞருக்கு இந்த விருதையளிப்பதில் பரிவாதினி பெருமையடைகிறது.


நாகஸ்வர இசைக்கு நாகஸ்வரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் வாய்ந்த அங்கம் சீவளி எனப்படும் நறுக்கிற்கும் உண்டு. பார்க்கச் சாதாரணமாய் தோன்றும் ஓலை போன்ற சீவாளிகளின் தயாரிப்புக்குப் பின்னால் பெரும் உழைப்பு புதைந்துள்ளது. வரும் நாட்களில் இதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன்.


இந்த ஆண்டு விருது பெரும் திருவாவடுதுறையைச் சேர்ந்த சீவாளி வினைஞர் முத்துராமனுக்கு வாழ்த்துக்கள்.

Read Full Post »

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடத் தொடங்குவதற்கு முன் காருகுறிச்சியாரின் நூற்றாண்டைக் கொண்டாடுவதைப் பற்றி எனக்குப் பல கனவுகள் இருந்தன. அவற்றில் ஒன்று, இந்த வருடம் தென்னிந்தியாவில் பொருளாதார நிலையில்பின் தங்கிய நூறு மாணவர்களுக்கு காருகுறிச்சியாரின் நாகஸ்வரம் வழங்க வேண்டும் என்பது.

அதற்கான அறிவிப்பை நான் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நிதியளிக்க விண்ணப்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். கேட்ட சில வாரங்களில் நிறையவே நன்கொடை கிடைத்தது. கிட்டத்தட்ட 40 நாகஸ்வரங்கள் வாங்குவதற்கான நிதி திரள்வதற்கும் கரோனாவின் இரண்டாம் அலை உச்சம் பெருவதற்கும் சரியாக இருந்தது.

பல பேரின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட போது காருகுற்ச்சியாரின் நூற்றாண்டை கொஞ்சம் மறந்துவிட்டு பெருந்தொற்றால் வாழ்வாதாரம் வாசிக்கப்பட்ட கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதில் அவனம் செலுத்த வேண்டியிருந்தது. பொதுச் சூழல், பணிச் சூழல், குடும்ப சூழல் அனைத்திலும் குழப்பம் நிலவிய நிலையில் காருகுறிச்சியாரின் நூற்றாண்டு திட்டங்கள் அனைத்தும் மறந்தே போயின.

சில வாரங்களுக்கு முன் சங்கீத வித்வத் சபையிலிருந்து காருகுற்ச்சியாரைப் பற்றி உரை ஒன்று நிகழ்த்த அழைப்பு வந்ததும்தான் பழைய நினைவுகள் மனத்தின் ஆழங்களிலிருந்து மீண்டு எழுந்தன. ஏற்கெனவே திரண்டிருந்த 40 நாயனங்களுக்கான நிதியும் நினைவுக்கு வந்தது. ஏப்ரல் மாதத்தில் நூற்றாண்டு முடிவதற்குள் நூறு நாயனங்களுக்கான நிதியை திரட்ட முடியாவிடினும், இது வரை வந்த பணத்திற்காவது நாகஸ்வரம் வாங்கியளிக்க வேண்டும் என்று தோன்றியது.

நண்பர் Swamimalai Saravanan நரசிங்கம்பேட்டையில் ஆசாரியுடன் பேசி முதல் கட்டமாய் இருபது நாகஸ்வரங்கள் செய்ய ஏற்பாடு செய்தார். அவற்றை டிசம்பரில் அளிக்கலாம் என்று திட்டமிட்டோம். நரசிங்கம்பேட்டை நாயங்கள் உலக்ப் பிரசித்தம் என்றாலும் அவற்றை நுணுக்கமாக ஒரு கலைஞர் பரிசோதித்துப் பார்த்து துல்லியத்தை உறுதி செய்த பின் மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சரவணன் கூறினார். கூறியதோடு நில்லாமல் நேற்று வித்வான் Prakash Ilayaraja -வுடன் நரசிங்கம்பேட்டை சென்று அத்தனை நாகஸ்வரங்களையும் சரிபார்த்திருக்கிறார்.

நேற்றிரவு படங்களும் சில விடியோ பதிவுகளும் அனுப்பியிருந்தார். பிரகாஷ் இளையராஜா நரசிங்கம்பேட்டையில் அமர்ந்தபடி வாசித்த மோகனத்தைக் கேட்ட போது என்னுள் அடக்கமுடியாமல் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

காருகுற்ச்சியாரின் பெயரில் அந்த நாயனம் இன்னமொரு நூற்றாண்டு ஒலிக்கும் என்று உள்ளுக்குள் ஒரு கூவல் எழுந்தது.

பி.கு: நாற்பதை நூறாக்க நீங்கள் உதவ நினைத்தால் பரிவாதினி வங்கிக் கணக்குக்கு உங்கள் நன்கொடையை அனுப்பலாம்.

Parivadini Charitable Trust,

Union Bank of India Account Number:

579902120000916 branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »

விஜய தசமி அன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.

இலக்கிய உலகத்துக்கும், இசை உலகத்துக்கும் தினமணி சிவகுமார் நன்கு தெரிந்த பெயர்தான்.

தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பில் அவர் சாதித்தவை ஏராளம் என்றாலும் அவர் வருடா வருடம் மார்கழி மாதத்தின் போது இசை மலராய்த் தொகுத்த தினமணி கதிர் இதழ்கள் மட்டுமே கூடத் தனிப்பெரும் சாதனையாகக் கருதத்தக்கவை.

அவருடைய தினமணி நாட்களுக்குப் பிறகு அத்தகு மலர் தயாரிப்புகள் நின்று போயின என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த வருத்தமுண்டு.

இதைப் பற்றி எத்தனையோ முறை நாங்கள் பேசியிருந்தாலும், இந்த வருடம்தான் அத்தகைய வருடாந்திர இசை மலரை பரிவாதினி வெளியீடாகவே தயாரித்தாலென்ன என்கிற எண்ணம் எழுந்தது.

இந்த மார்கழிக்கு மீண்டுமொருமுறை சிவகுமாரின் தயாரிப்பில் இசை மலர் வெளியாகவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சிவகுமார் – பழைய விஷயங்களின் காதலர். கதிர் போன்ற பத்திரிக்கைக்கு உள நிர்பந்தங்களுக்கு இடையிலும் கணிசமான அளவு பழைய செய்திகளைத் தொகுத்து ஆவணப்படுத்திவிடுவார். இந்தமுறை அத்தகு நிர்பந்தம் ஏதும் இல்லாத சூழலில் மலரப் போகும் மலரை நினைத்தாலே எனக்குப்பரவசமாக இருக்கிறது.

இரண்டாவது அறிவிப்பு உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தராது என்று நினைக்கிறேன். கடந்த வருடங்களில் இரண்டு நாட்காட்டிகளை – கலைஞர்களை கௌரவிக்கும் வ்சகையில் பரிவாதினி வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இந்த முறை காருகுறிச்சியாரின் நூற்றாண்டை முன்னிட்டு காருகுறிச்சி சிறப்பு வெளியீடாகைந்த நாட்காட்டி வெளிவரும்.

இசை மலரையும், நாட்காட்டியையும் சேர்ந்தே வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன்.

Read Full Post »

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் நாம் அறியாத எத்தனையோ விஷயங்களை அறியும் வாய்ப்பு அமைந்துள்ளது.


அந்த வகையில் நான் அறிந்து கொண்டது பெண் நாகஸ்வர கலைஞர்களைப் பற்றி.


கடந்த சில வருடங்களாக நாகஸ்வர கலைஞர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், பெண் நாகஸவர கலைஞர்கள் என்றால், என் மனத்துள் அந்த வரிசை மதுரை பொன்னுத்தாயி அம்மாளிடம் தொடங்கி சமீபத்தில் பத்ம விருது பெற்ற கலீஷாபி மெஹ்பூப் அவர்களுடன் முடிந்துவிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசித்ததே இல்லை.


பேரிடரின் இரண்டாம் அலையின் போது நண்பர் சரவணன், ‘பெண் கலைஞர்களுக்கு உதவ என்று பிரத்யேகமாய் முயற்சி எடுக்கலாமா?’,என்று கேட்டார். அந்த முயற்சியின் போதுதான் தென்னிந்தியாவில் இத்தனை பெண் கலைஞர்கள் நாகஸ்வரத்தை தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

ஒருவகையில் எனக்கு வெட்கமாகக்கூட இருந்தது.


சென்ற நவராத்ரியில் ஒன்பது நாகஸ்வர கச்சேரிகள் வலையேற்றியது போல இந்த முறை ஒன்பது பெண் கலைஞர்களை முதன்மைப்படுத்தி ‘நவசக்தி’ என்று ஒன்பது கச்சேரிகள் ஒருங்கிணைக்க வெண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன்.


கலைஞர்கள் தேர்வும், கச்சேரிப் பதிவுகளுக்கான ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. பரிவாதினியின் முயற்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ஆதரவில் நடப்பவை என்று சொல்லித் தெரிய வேண்டாம்.
எப்போதும் போல் இப்போதும், இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.


வங்கிக் கணக்கு விவரங்கள் கீழே:
Parivadini Charitable Trust,

Union Bank of India

Account Number: 579902120000916

branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »

நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்னம் பிள்ளையைப் பற்றிய ஓர் உரைக்காக கடந்த ஒரு மாதமாய் அவர் இசையில் திளைக்கிறேன்.

உரையைப் பதிவு செய்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேவைக்கேற்ப சுருக்கி இன்று அனுப்பி வைத்து பெருமூச்சுவிடும் இவ்வேளையில் அதிர்ச்சியான தகவல் வந்து இறங்குகிறது.

திருவாவடுதுறையில் ராஜரத்தினம் பிள்ளை கட்டிய மாளிகை போன்ற வீடு சமீபத்தில் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டதாம்.

சங்கீத உலகில் தோன்றிய/தோன்றப்போகும் கலைஞர்கள் எல்லோரையும் திரட்டினால்கூட ஒரு ராஜரத்தினத்துக்கு ஈடாகமாட்டார்கள் என்பது (என் தனிப்பட்ட) எண்ணம். தன் வாசிப்பை அரை நொடியானாலும் தன் வீட்டைக் கடந்து செல்லும் ரயிலில் செல்பவன்கூடக் கேட்க வேண்டுமென்று வீட்டில் ஒலிப்பெருக்கி அமைத்து, அவர் சாதகம்செய்ததைக் கூட உலகுக்கு வழங்கிய கலைஞனின் வீடு.

எத்தனை நடபைரவிகளையும், காம்போதிகளையும் அந்தச் சுவர்கள் கேட்டிருக்கக்கூடும்!

நினைவு மண்டபமாகவோ, அருங்காட்சியகமாகவோ இருந்திருக்க வேண்டும் என்று இந்தியச் சூழலில் நினைப்பதெல்லாம் பேதமை.

எப்போது அந்தப் பக்கம் போனாலும் வெளியிலிருந்தாவது அந்தக் கம்பீரக் கட்டிடத்தைப் பார்க்கலாம் என்கிற நிலைமையும் போய் அங்கு குடியிருப்புகள் எழப் போகின்றன என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது.

நண்பர் Swamimalai Saravanan-உடனும் Mariyappan Muthukumaraswamy-உடனும் திருவாவடுதுறை சென்ற போது, ராஜரத்தினம் பிள்ளையின் வீட்டில் – குறிப்பாக அவர் மாடியில் அமைத்திருந்த இசை அறையில் கச்சேரிகள் ஏற்பாடு செய்து தொடர்ந்து நடத்த வேண்டுமென்று நிறைய கனவுகளைப் பேசினோம்.

கனவுகள்….

Read Full Post »

பொடி சங்கதி தொடரின் முதல் காணொளி வெளியாகிவிட்டது.

பாடகர், ஹரிகதை வித்வான், மேடைநாடக நடிகர், சினிமா நட்சத்திரம், பரதநாட்டிய ஆசிரியர் என்று பன்முக ஆளுமையாக விளங்கியும் இன்று அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கும் ஆளுமை சிதம்பரம் பிள்ளை.

இவருடைய தந்தையார் சுப்ரமண்ய பிள்ளை நாகஸ்வர கலைஞர் என்றும் இவருடைய தமையனார் நடராஜசுந்தரம் பிள்ளை ஒரு வாக்கேயகாரர் என்றும் – இந்தக் காணொளிக்கான மறுமொழியாய் முனைவர் பி.எம்.சுந்தரம் சொல்லியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

Read Full Post »

கடந்த இருபது ஆண்டுகளில் கர்நாடக இசை தொடர்பான தேடல்களில் பல விஷயங்கள் கிடைத்துள்ளன. அதில் சில விஷயங்கள் ‘சுவாரஸ்யமான தகவல்கள்’ என்று வகைப்படுத்தலாம். இந்தச் சிறு தகவல்களை வைத்து ஆய்வு செய்யவோ அல்லது கட்டுரை ஒன்றை எழுதவோ முடியாது. பயனில்லாத துக்கடா செய்தி என்றும் ஒதுக்கக்கூடியவை அல்ல.

இவற்ரை வைத்துக் கொண்டு வாரமொரு செய்தியாய் யுடியூபில் பகிரலாம் என்ற எண்ணம் வந்தது. இதுதான் ‘பொடி சங்கதி’. எனக்குக் கிடைத்ததைப் பகிர்தல் ஒரு பக்கம் இருந்தாலும், இதைப் பகிர்வதன் மூலம் இந்த விஷயங்களைப் பற்றி இன்னுமறிந்தவர் கண்ணில்பட்டு, இது தொடர்பான பார்வை விசாலமாகக்கூடும் சாத்தியம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

பொடி சங்கதி – வாரம் ஒன்றாய் என்னுடைய புதிய யுடியூப் சானலில் வெளியாகும்.

தொடர்ந்து பேசலாம்.

Read Full Post »

Older Posts »