Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தீட்சிதர்’ Category

இரண்டு நாட்களாய் காருக்குறிச்சியாரின் ஹேமவதியைத் தாண்டி வரமுடியவில்லை.

ஆலாபனையைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வரி மங்கலாய் மனத்தில் வந்து வந்து போனது. ”தொண்டையில் இருக்கிறது – வாயில் வரவில்லை”, என்ற நிலை.

ஆலாபனைக்கு ஏது வரி?

கற்பனைதான் – இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனத்துள் தோன்றியும் மறைந்தும் பூச்சி காட்டிக் கொண்டிருந்தது.

இன்று காலையில் இன்னொருமுறை கேட்டேன் அந்த ஆலாபனையை.

தைவதத்தை மையமாக்கி – மத்யம ஸ்தாயி மத்யமம் முதல் தார ஸ்தாயி மத்யமம் வரை யாரோ சாவகாசமாய் ஏறி ஏறி இறங்குவதைப் போலத் தோன்றியது.

சுழற்றி சுழற்றி மத்யமத்தைத் தாண்டி தார பஞ்சமத்தைத் தொட்ட போது நெடிய விக்கிரகத்துக்கு தீபாராதனை காட்டியது போல இருந்தது.

தீபக்கீற்றில் நிழலும் ஒளியுமாய் அந்த மந்தஹாசம். ஆங்காங்கே வைரங்களாய் மின்னிய நீர்த்துளிகள்.

நீர்த்துளிகள்.

எனக்கு அந்த வரி கிடைத்துவிட்டது.

“ஸஹஸ்ர கலஸ அபிஷேக மோதாம்” என்கிற தீட்சிதரின் வரி.

ஆயிரம் கலசங்களில் அன்னைக்கு அபிஷேகம்.

அருணாசலம் மத்யமத்திலிருந்து நீரை மொண்டு தைவதம், நிஷாதம், ஷட்ஜம் என்று அன்னையும் ஒவ்வொரு அங்கத்திலும் நீரால் நிறைக்கும் காட்சி இப்போது மனக்கண்ணில் விரிந்தது.

ஆயிரம் கலசங்கள் ஆனதும் தார பஞ்சமத்தில் தீபாராதனை!

காந்திமதி அன்னையின் முகத்தில் குறுநகை.

“இரண்டு நாள் அலைக்கழிப்பு தீர்ந்ததா?”, என்று என்னைக் கேட்பது போலிருந்தது.

Read Full Post »

பதிவிட முடியாமல் வேலை பளு. இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது என்பதற்காக, அவசர கதியில் ஒரு பதிவு.

பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. ”இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் முழுவதையும் ஆவணப்படடுத்தி விட முடியும்” என்கிறார் இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார்.

வருடா வருடம் நடக்கும் இந்த அகண்டம், தீட்சிதர் கிருதிகளை ஆவணப்படுத்துவதோடு அல்லாமல், வளர்ந்து வரும் கலைஞர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் களமாகவும் விளங்குகிறது. நேர்த்தியான முறையில் செயலாக்கப்பட்டு வரும் இந் நிகழ்ச்சிக்குப் பின் அசுர உழைப்பு பொதிந்துள்ளது. அகண்டத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பங்கு பெறுபவரைத் தொடர்பு கொண்டு, யார் யார் எந்தெந்த பாடல்களைப் பாடுவது என்ற திட்டம் தயாராக ஆரம்பித்துவிடுகிறது. நாள் முழுதும் பாடும் போதும், ஒருவர் பாடிய பாடலை மற்ற கலைஞர் பாடுவதில்லை. கடந்த வருடங்களில் இடம் பெற்ற பாடல்களை முடிந்த வரைத் தவிர்க்கவும் கலைஞர்கள் கூடுமானவரை முயல்கின்றனர்.

2010-ம் ஆண்டுக்கான அகண்டம் ஃபெப்ரவரி 28-ம் தேதி சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெற்றது. கிருதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகாமல், தீட்சிதர் கிருதிகளைக் கொண்டு கச்சேரியாகவே பெரும்பாலானோர் பாடினர்.

காலையில் சில வேலைகள் இருந்ததால் முதல் கச்சேரி முடியும் போதுதான் செல்ல முடிந்தது. நான் அரங்கில் நுழையும் போது லட்சுமி ரங்கராஜன் சவுக்க காலப்ரமாணத்தில் ‘ஏஹி அன்னபூர்ணே’ பாட ஆரம்பித்தார். அவர் பாடிய புன்னாகவராளி இன்னும் பல நாட்களுக்கு காதுகளில் ஒலிக்கும்.

அடுத்து பாடிய ஜி.ரவிகிரண் நிறைய அரிய கிருதிகளைப் பாடினார். ஆர்த்ர தேசி, மார்க தேசி போன்ற அபூர்வ ராகங்களில் பாடினார். கச்சேரியில் பிரதான ராகங்களாக தாமவதியையும், காம்போஜியையும் எடுத்துக் கொண்டார். இரண்டு ஆலாபனைகளுமே சற்று அதீதமாகப் பாடியதாகத் தோன்றியது. இரண்டு ஆலாபனைகளிலுமே போதிய அளவில் கார்வைகள் கொடுக்கப்படவில்லை என்றே தோன்றியது. குறிப்பாக காம்போதியில், தார ஸ்தாயி காந்தாரத்தில் நின்று நிதானமாய் ராகத்தை வளர்க்காதது அத்தனை நிறைவாக இல்லை. காம்போதியில் கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘காசி விஷ்வேஸ்வர’ பாடலை முதல் முறையாய் கேட்டேன். காம்போதியின் கம்பீரம் நன்றாக வெளிப்படும் வண்ணம் உழைத்து இழைத்துப் பாடினார் ரவிகிரண்.

ரவிகிரண் கச்சேரி முடிந்ததும் அளிக்கப்பட்ட மதிய உணவுக்கு ஏகக் கூட்டம். ஒரு வழியாய் உண்டு வருவதற்குள் சீதா ராஜன் தன் மாணவியருடன் சில பாடல்கள் பாடிவிட்டிருந்தார். அடுத்த ஆண்டு அகண்டத்தில் 2-3 கவுண்டர்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யலாம். கனமும் கம்பீரமும் நிறைந்த கிருதிகளை ஒன்றன் பின் ஒன்றாக, ஆர்பாட்டமே இல்லாது, கிருதியின் முழு அழகும் பரிமளிக்கும் வண்ணம், ஒரே குரலில் சீதா ராஜனும் அவர் சிஷ்யைகளும் பாடியது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஒவ்வொரு கிருதிக்கு முன்னும், அந்தப் பாடலைப் பற்றிய சிறு குறிப்பையும் சொன்னது, கேட்டவர்களின் ரசிகானுபவத்தை அதிகப்படுத்தியிருக்கும்.

மதிய வேளையில், சவிதா ஸ்ரீராம், சங்கரி சுப்ரமணியம், பாரதி ராமசுப்பன் என்று மூன்று இளம் கலைஞர்களின் கச்சேரி இடம் பெற்றது. மூவரையும் முதல் முறையாய் கேட்டேன். சவிதாவின் கச்சேரி விறுவிறுப்பாக அமைந்தது. குறிப்பாக ‘ரேணுகா தேவி’ என்ற கன்னட பங்காள கிருதியை வெகு சிறப்பாகப் பாடினார். வேகமான சங்கதிகளில் ஒரு சில ஸ்ருதி விலகல்களை மட்டும் அவசியம் சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.

சங்கரி சுப்ரமணியத்துக்கு நல்ல குரல் இருக்கிறது. நாஸாமணி போன்ற விவாதி ராகங்களைக் கூட நாசூக்காக கையாளும் திறனும் இருக்கிறது. ஆனாலும், இளைஞர்தானே, அதனால் கொஞ்சம் தயங்கிப் பாடினார் போல இருந்தது. பயிற்சியும், அனுபவம் தரும் முதிர்ச்சியும் இவரை ஒரு தேர்ந்த கலைஞராக ஆக்கும்.

பாரதி ராமசுப்பனுக்கு கணீர் குரல்! மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாகப் பேசுகிறது. தீட்சிதர் கிருதிகள் பாடத் தேவையான அழுத்தம் இவருக்கு நிறையவே இருக்கிறது. வாயைத் திறந்து, வார்த்தைகள் புரியும்படி பாடுகிறார். ‘மானஸ குருகுஹ’, ‘ஸ்ரீதும் துர்கே’ என்று அவர் பாடிய அத்தனை கிருதிகளும் மணி மணியாய் ஒளிர்ந்தன.

மாலையில் நெய்வேலி சந்தானகோபாலன், விஜயலட்சுமி சுப்ரமணியம், டி.எம்.கிருஷ்ணா ஆகிய மூன்று பிரபல வித்வான்களின் கச்சேரிகள் நடைபெற்றன. நெய்வேலி சின்னதும் பெரியதுமாய் நிறைந்த (சிஷ்யப்) படையோடு வந்திருந்தார். கர்நாடக ராகங்கள், ஹிந்துஸ்தானி ராகங்கள், வெவ்வேறு காலப்ரமாணத்தில் அமைந்த கிருதிகள் என்று தேர்வு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பாகப் பாடும் வகையில் உழைத்துச் சொல்லிக் கொடுத்திருப்பதற்குப் பெரிய சபாஷ்!

விஜயலட்சுமி சுப்ரமணியம், எஸ்.ராஜத்தின் சிஷ்யை. அதிகம் தெரியாத கிருதிகளைப் பாடுவதே பாணியாகக் கொண்ட வழியில் வந்தவர். சாமந்தா, கோகிலாரவம் போன்ற அரிய ராகங்களையும், ’மரகத லிங்கம்’ என்ற வசந்தா ராக அரிய கிருதியையும் அவர் பாடியது ஆச்சரியம் ஒன்றுமில்லை. ‘பஜரே ரே’ என்ற பிரபல கல்யாணி கிருதியை பிரதானமாகப் பாடினர். ‘தேவீம் ஷக்தி பீஜோத்பவ’ என்ற இடத்தில் செய்த நிரவல் அளவாகவும் அருமையாகவும் இருந்தது.

‘Grand Finale’ என்ற முன்னறிவிப்புடன் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி தொடங்கியது. ரயிலைப் பிடிக்க நேரமாகிவிட்டதால் அவர் பாடிய தரங்கிணியை மட்டுமே கேட்க முடிந்தது. ”செஞ்சுருட்டி போல இந்த ராகத்தைக் கையாள்கிறார்கள். ஆனால் இதுதான் சரியான முறை.”, என்று தரங்கிணியை விளக்கி, கிருதிக்கு விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரங்களும் பாடினார். கச்சேரியை முழுமையாகக் கேட்டவர்கள், அன்று “ஸ்ரீநாதாதி குருகுஹோ” கிருதியை வைத்துக் கொண்டு எம்.ஃபில் தீஸிஸே படித்து விட்டார் கிருஷ்ணா என்றனர்.

காலையில் அரங்கை நிறைத்த கூட்டம், நாள் முழுவதும் தொடர்ந்து இருந்ததைக் காண நிறைவாக இருந்தது.

Read Full Post »

ச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர்.  மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும்  தேர்ச்சி பெற்றவர்.  தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர்.

ஓவியர் ராஜம் வரைந்த தீட்சிதர்

அவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர்.

எண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். விவாதி ராகங்களை கையாள்வதில் முன்னோடி. அஸம்பூர்ண பத்ததியில், எண்ணற்ற மேளராகங்களில் பாடல் புனைந்தவர். பல ராகங்களின் உருவங்களை, இவர் கீர்த்தனை அமைப்பைக் கொண்டே உணர முடிகிறது.

எஸ்.ராஜம் எழுதிய கட்டுரையில், “சங்கதிகள் அதிகமில்லாமல் முழு ராக சாயை ஒரு கீர்த்தனையிலேயே அடக்கிய பெருமை இவருக்குத்தான் உண்டு. ராகத்தின் அமைப்பு மாறாமல் இருக்க சிட்டஸ்வரங்கள் உதவுகின்றன. சவுக்க காலத்தில் பாடும் திறன் பெற்றவரே இவர் கீர்த்தனைகளை போஷாக்குடன் பாட முடியும். தவிர, மந்திரஸ்தாயியிலும் நன்றாக நின்று பாடும் திறனும் தேவைப்படுகிறது.”, என்கிறார்.

நவக்கிரஹ கிருதிகள், பஞ்சலிங்க கிருதிகள், தேவி நவாவர்ண கிருதிகள் முதலிய பல தொகுப்புகளில் கிருதிகள் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்த இவர் கிருதிகள் சமீப காலத்திலேயே புழக்கத்தில் அதிகரித்திருக்கின்றன. தீட்சிதர் கிருதிகள் கடினமானவை, கச்சேரிக்கு ஒவ்வாதவை – என்ற எண்ணம் பல காலம் இருந்தது. அகாடமியில் தீட்சிதர் தினம் கொண்டாடிய போது, அது தேவையில்லாத ஒன்று சுப்புடு எழுதி, பெரும் பரபரப்பை உண்டாக்கியதை பலர் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடும்.

Justice can be delayed – not denied. என்பது போல, தீட்சிதர் கிருதிகள் இன்று பரவலாகப் பாடப்படுகின்றன.

தொடர்ந்து 12 மணி நேரம் நடை பெரும் ‘தீட்சிதர் அகண்டம்’  தவறாமல் வருடந்தோரும் நடைபெருகிறது.

இந்த வருட அகண்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெறவுள்ளது.

முன்னணியில் இருக்கும் வித்வான்களும், முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.

நான் சென்னைக்குச் செல்ல டிக்கெட் எடுத்து விட்டேன். சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வரக் கூடியவர்கள் நிச்சயம் பங்கு பெற்று இன்புற வேண்டும்.

Read Full Post »