Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Book Review’ Category

ஒளிரும் துருவ நட்சத்திரம்
லலிதா ராம் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தனக்குத் தெரியும் விஷயங்களை எந்த வித அகம்பாவமும் இல்லாமல் மிகவும் பவ்யமாக ஆனால் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறது. பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பு பாணியிலேயே அமைந்திருப்பது போல் ஒரு நடையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தீவிர ஆராய்ச்சி, பேட்டிகள், அவரது வாசிப்பை புரிந்து கொள்ளும் முயற்சி இவை அனைத்தும் கூடி இருப்பதால் லலிதா ராமுடன் நாமும்  மிருதங்க வாசிப்பில் பலர் எட்ட முடியாத ஞானம், அத்துடன் பாடவும் கூடிய குரல் வளம், அர்ப்பணிப்பு  இவை அனைத்தும்  அமையப் பெற்ற ஒரு கலைஞருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுமே.

மிருதங்கம் என்ற வாத்தியத்தைப் பற்றிய ஆதார பூர்வமான விவரங்கள், அதன் பல வித ஒலிகளின் விளக்கங்கள், அவற்றை விளக்கும் உவமைகள், தாளங்களைப் பற்றிய தகவல்கள், வாசிப்பு முறைகள், கச்சேரி நிகழ்வுகள், பல உன்னதக் கலைஞர்களின் மனோபாவங்கள், உணர்ச்சிகள், நட்புகள், நேசிப்புகள், அகம்பாவம், கர்வம், அடக்கம், மென்மை, கோபம் இவை எல்லாம் அலைஅலையாய் எழும்பி வருகின்றன புத்தகத்தில். மிருதங்கம், கஞ்சிரா இவை ஒலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

மிருதங்கத்தைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு ஏதாவது உண்டா? உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர்? அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது? தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா? அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின்  பெண் — இசை பயின்றாளா? பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை?  இவைகளுக்குப் பதில் கிடைப்பது எளிதில்லை. ஆனால் இவை அத்தனையும் மனத்தில் நிறைகிறது கேள்விகளாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையிலும் அவர் மிருதங்கத்திலும் நாம் ஒன்றிப் போகும்போது.

நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த நாடகமாய்ப் போகிறது புத்தகம். மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஒரு சின்னப் பையனுக்குக் கச்சேரியில் ஐந்து முறை தனி ஆவர்த்தனம் விடும் செம்பை, பாடகரும் தாள வாத்தியக் கலைஞர்களும் விட்டுக்கொள்ளும் சவால்கள், புறா குமுறுவது போல் என்று பலர் உவமிக்கும் கும்கிகள், ஃபரன்கள், தாள கதிகள் இவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

இறக்கும்போது கூட விரல்களை மிருதங்கம் வாசிப்பது போல் அசைத்தபடி இறக்கும் கலைஞர்கள் நிஜமாகவே இறப்பதில்லை என்று தோன்றுகிறது. லலிதாராம் போன்ற ரசிகர்கள் அவர்களை உயிர்ப்பித்தபடி இருப்பார்கள்.

(லலிதா ராமின்) பி.கு: துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்துவிட்டது. முதல் பதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் நேரமில்லை. ஆதலால் இரண்டு தகவல் பிழைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை புத்தகச் சந்தையில் இன்று முதல் கிடைக்க வாய்ப்புள்ளது. டிஸ்கவரி புக் பாலஸின் ஸ்டாலில் கிடைக்கும்.

Read Full Post »

தி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது.

மதிப்புரை: http://www.thehindu.com/arts/books/article2923778.ece

Read Full Post »

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.

மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.

16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளைஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதைமுருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள்! சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்!

– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/

Read Full Post »

சொல்வனத்தில் வெளியான கட்டுரை.

இவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார்.

ஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ  இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது.

வித்யா சங்கர் என்ற இசைக் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் நிறைய தளங்கள் உதவக் கூடும். அவையெல்லாம் போதாது என்று நினைப்பவர்கள் ‘ஸ்ருதி’ பத்திரிக்கையின் May 2007 இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். (ஸ்ருதி அலுவலகத்தில் பழைய இதழ்களும் விற்பனைக்கு உண்டு).

vidyashankar_vina2000_web_thu

எனக்கு விதுஷி வித்யா சங்கர் என்ற மனிதரிடமோ, அவருடைய இசையிடமோ பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வித்யா சங்கர் என்ற ஆய்வாளரிடம் பரிச்சயம் உண்டு. அவர் எழுதிய புத்தகங்களைப் பல முறை படித்துப் பெரும் பயனடைந்திருக்கிறேன். முறையாக இசை கற்காமல், நிறைய கேட்டும் படித்தும் இசை கற்க முனைந்த எனக்கு அவரின் இரு நூல்கள் மிகவும் உதவியாய் இருந்தன/இருக்கின்றன.

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

ஒரு பாமர ரசிகனுக்கு இசையின் அழகை (aesthetics) ரசிக்க அதனுள் பொதிந்திருக்கும் அறிவியல் (scientific aspects) சார் விஷயங்கள் தேவைப்படுவதில்லை. இசை ரசனையில் முதல் நிலையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது, ரசிகானுபவம் அழகுணர்ச்சி மட்டுமின்றி அறிவியல் பார்வையையும் சார்ந்துள்ளது. இவை அற்புதமானவை, இவை புதியவை, இவை அரியவை என்று நம்மால் அழகுணர்ச்சியின் துணை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அவை ஏன் அற்புதமானவை/புதியவை/அரியவை/ என்று விளங்கிக் கொள்ள அறிவியல் பின் புலம் இன்றியமையாததாகிறது. “The more scientific, classicism is presented, the more aesthetic and sublime it becomes”, என்று வித்யா சங்கரே ஒரு கட்டுரையில் அழகாகக் கூறுகிறார்.

ஒரு கலையை கலையாகவும், அக் கலைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நியதிகளாகவும், இவ்விரு பரிமாணங்கள் இணைத்துப் பெரும் உருவாகவும் அணுகுதல் சுலபமன்று. இப் பரிமாணங்களை வெளிக் கொணரும் நோக்கோடு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் விளக்கும் அறிவியல் உண்மைகள் பண்டிதரிடையே புழக்கத்தில் இருப்பினும், அவற்றை இசையில் ஓரளவு தேர்ச்சியுடைய ரசிகன் கூட புரிந்து கொள்வது கடினம். எப்படி பலருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், கார் ஓடுவதற்கு பின் இருக்கும் அறிவியல் விஷயங்களை காருடன் கொடுக்கப்படும் துணை நூலைக் கொண்டு மட்டும் உணர்ந்து கொள்ள முடிவதில்லையோ, இசையிலும் இசையை ரசிப்பவர்களால் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வது கடினம்.

அப்படியெனில் இசை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள என்னதான் வழி?

அறிமுக நூல்கள் மூலமே இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அறிமுக நூல்கள் என்றால்?

அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படிருக்கும் நூல்கள். விஷயமும் இருக்க வேண்டும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும். சொல்கிற விஷயம் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் சிக்கலின்று இருத்தல் அவசியம். சாத்தியமா?

சத்தியமாய் சாத்தியம். “The Art and Science of Carnatic Music” என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் கொண்ட நூல் மேற் சொன்ன இலக்கணங்களில் கச்சிதமாய் பொருந்துகிறது.

இந் நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வித்யா சங்கர் வழங்கிய பொழிவுகளின் தொகுப்பே. தன் பொழிவுகளின் நோக்கங்களைக் கூறும் போது, “initiate them (young lay music lovers) into the fundamental aspects of the structure, science and art of Carnatic music, so as to enable them to appreciate the art better”, என்கிறார் வித்யா சங்கர்.

70-களின் கடைசியில் முதன் முறையாகக் நிகழ்த்தப்பட்ட இப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றதனால், தொடர்ந்து இப்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தப்பட்டன. 1983-ல், இப் பொழிவுகளின் தொகுப்பை நூலாக மியூசிக் அகாடமி வெளியிட்டது. “Her success in expressing the most subtle thoughts on the subject of Carnatic Music, her exposition of the delicacies of patterns of several ragas supporting her thesis with illustrations from the composers is masterly”, என்று எழுத்தாளர் தி.ஜானகிராமன் தனது பாராட்டுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தன் புத்தகத்தை ‘ஒலி’ என்கிற பதத்திலிருந்து தொடங்கியுள்ளார் வித்யா சங்கர். ‘இனிமையான ஒலியே நாதம்’ என்று விளக்கி, ஒலிக்கும் இசைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குகிறார். தன் விளக்கங்களுக்கு அடித்தளமாய் சங்கீத ரத்னாகரம் போன்ற நூல்களை குறிப்பிடுவதோடன்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அதே கருத்துகளையும் உடனுக்குடன் குறிப்பிட்டு இருப்பது வெகு நேர்த்தியாய் அமைந்துள்ளது.

ஒலி, அதனின்று உருவாகும் நாதம்,நாதத்தின் கூறுகள், நாதத்துக்கு ஆதாரமாய் விளங்கும் ஸ்ருதி, ஸ்ருதியுடன் இணைந்து இசைக்கும் கருவிகள், அக் கருவிகளில் இசை பிறக்கத் தேவைப் படும் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வரஸ்தானங்களுக்கும் ஸ்வரங்களுக்கும் உள்ள வேறுபாடு, ஸ்வரங்கள் கையாளப்பட வேண்டிய முறைகள் என்று அடுத்தடுத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சரளமாய் புத்தகத்தின் எந்த ஒரு வாசகனாலும் பயணிக்க முடியும்.

அடிப்படைகள் தெளிவானதும், ஸ்வரக் கோவைகளான ‘Scales’, அவை உருவான விதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய இசைக்கே உரியதான ராகங்கள் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது. தானாகத் தோன்றிய ஸ்வயம்பு ராகங்கள், அவற்றிலிருந்து கிருஹ பேதம் மூலம் பிறக்கும் ராகங்கள், காலப்போக்கில் அட்டவணைப்படுத்தப்பட்ட மேளகர்த்தா முறை, தாய் ராகங்களில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் என்று பல விவரங்கள் இப்பகுதியில் நுணுக்கமாய் தொகுக்கப்பட்டுள்ளன.

விவரங்களின் அடுக்காக மட்டுமே அல்லாமல், அவ்விவரங்களின் பயன்பாட்டையும் தெரிவித்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறபபாகும். உதாரணமாக, 12 ஸ்வரஸ்தான நியதிப் படி இரண்டு ரிஷபம் ஆனால் 22 ஸ்ருதிகள் அடிப்படையில் பார்க்கும் போது ரிஷபத்தில் நான்கு வகையுண்டு என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் பயன்பாட்டை புழக்கத்தில் இருக்கும் ராகங்களான பைரவியிலும், கரஹரப்ரியாவிலும் வரும் ரிஷபத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார். இவ்வாறு செய்யும் போது, புத்தகத்தைப் படிக்கும் மாணவன் வெறும் விவரங்களை நெற்று அடிக்கிறோம் என்று எண்ணாமல், படிக்கும் விஷயத்தில் பொதிந்திருக்கும் பயன்பாட்டையும் சேர்த்து உணரக் கூடும்.

பெரும்பாலான சமயங்களில் பண்டிதர்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கி பாமரனுக்காய் பேசுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது. பல்லாண்டு காலம் இசையிலும், ஆய்விலும் ஊரிய வித்யா சங்கர், தன் பாண்டித்யத்தை பறை சாற்றுவதில் கிஞ்சித்தும் ஈடுபடாதிருப்பதே இந் நூலின் எளிமைக்கு முக்கிய காரணம்.

வித்யா சங்கரின் மற்றொரு பிரபலமான நூல், “Aesthetic and Scientific Values in Carnatic Music”.

இந் நூலில் 1946-லிருந்து 1996 வரை மியூசிக் அகாடமியில் வித்யா சங்கர் அளித்துள்ள செயல்முறை விளக்கங்களின் தொகுக்கப்பட்டுள்ளன. (இதன் இரண்டாம் தொகுதியும் வெளியாகியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது.) 50 வருட உழைப்பின் பயனாய் 20 கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள்.

1946-ல் டைகர் வரதாச்சாரியாரின் தலைமையில் படிக்கப்பட்ட ‘தியாகராஜரைப்’ பற்றிய கட்டுரை, இள வயதிலும் வித்யா சங்கருக்குள் இருந்த ஆய்வு நோக்கைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஷ்யாமா சாஸ்திரி, கமகங்கள், வீணை கற்றுக் கொடுக்கும் முறை, மேளராகமாலிகை என்று பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும், அனுபவம் பகிர்தலாகவோ, அரிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளாகவோ அமைந்துள்ளன.

இவை தவிர, வித்யா சங்கர் என்ற ஆய்வாளரின் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் பதிவாய் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இரண்டு.

முதல் கட்டுரை – “Derivation and Application of additional srutis.” ஒரு ஸ்தாயிக்குள் 22 ஸ்ருதிகளை தேர்ந்த காதுகளால் தெளிவாக பாகுபடுத்திவிட முடியும் என்பது பரவலான கூற்று. இந்த 22 ஸ்ருதிகளில், பிரக்ருதி ஸ்வரங்களான ஷட்ஜம், பஞ்சமம் தவிர, ஐந்து விக்ருதி ஸ்வரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகியவை நான்கு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் சேர்ப்பின் 2+(2*2*5) = 22.

வித்யா சங்கர் தன் ஆய்வில், இந்த 22 ஸ்ருதிகளைத் தவிரவும் வேறு ஸ்ருதிகள் உபயோகத்தில் உள்ளதையும், அவற்றை சரியாக பாகுபடுத்த முடியும் என்றும், அந்த ஸ்ருதிகளின் Relative Frequency-ஐயும் நிறுவியுள்ளார். ஏற்கெனவே இருந்த 22-ஐத் தவிர 10 ஸ்ருதிகளை எப்படி நிறுவினார் என்பதை சுருக்கமாய் விளக்குதல் முடியாத காரியம். ஆர்வம் இருப்பவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது. “The calculation of sruti intervals constitutes the author’s own contribution to Musicology”, என்கிறார் டி.எஸ்.பார்த்தசாரதி.

இவ்வாய்வுக்காக ‘ஸ்ருதி வீணை’ என்றொரு வகை வீணையை தானே வடிவமைத்துள்ளார்.

அந்த வீணையின் வடிவமைப்பின் விவரமே முன் சொன்ன இரு கட்டுரைகளுள் இரண்டாம் கட்டுரை. ‘Sruti Vina’ என்ற தலைப்பில் 1985-ல் படிக்கப்பட்ட கட்டுரையில் இந்த வீணையில் எந்தெந்த இடத்தில் fret-கள் அமைக்க வேண்டும் என்று நிறுவியிருக்கும் விதம் ஸ்வாரஸ்யமானது. கையால் வரையப்பட்ட தெளிவான அட்டவணைகளையும் கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருப்பது நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும். வேண்டா வெறுப்பாய் படித்த Theory of Vibration-ம், மாய்ந்து போய் போட்ட சிறு வயது L.C.M கணக்குகளும் ஓர் உன்னத இசைக் கருவி உருவாக்க உதவியாய் இருக்கும் அதிசயத்தை எண்ணி அறிவியலில் ஈடுபாடுள்ளவர்கள் நிச்சயம் மகிழ்வர்.

இசை ஆய்வாளர்களுள் பலர் செயல் முறை விளக்கங்களை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். அவற்றை நேரில் கேட்கும் போது சுலபமாகவும், தெளிவாகவும் விளங்கும். ஆனால், அதே விளக்கத்தை நேரில் கேட்காமல் கட்டுரையாகப் படிக்கும் போது, பல விஷயங்கள் விளங்காமல் போகும். வித்யா சங்கரைப் பொறுத்த மட்டில், அவரது செயல்முறை விளக்கங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் இரு புத்தகங்களிலும், வாசகனை சென்றடைவதில் சுலபமாய் வெற்றியடைந்துவிடுகிறார்.

பாவம்! காலன்தான் என் செய்வான். அவனால், தொண்ணூறு வயதில் உடல் தளர்ந்த பெண்மணியைத்தான் வீழ்த்த முடியும். அந்தப் பெண்மணி வாழ்ந்த காலத்தில் சாதித்தையா வீழத்த முடியும்?

பி.கு: புத்தகங்கள் இரண்டும் carnaticbooks.com-ல் கிடைக்கின்றன.

Read Full Post »

ஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise.

இன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான்.

அடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை.

கிரிதரனின் கட்டுரை இங்கு.

Related Posts: https://carnaticmusicreview.wordpress.com/2009/12/31/gnb-centenary-2/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/03/kalidas-review/

Read Full Post »

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் கலைஞர்கள் அனைவரும், ‘கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம்’ என்று குறிக்கப்படும் 1930-1960 வரையிலான காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.

கச்சேரி இசைப் பதிவுகள் 1950-களின் கடைசியில்தான் சாத்தியமாயின. இந் நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜாம்பவான்களின் இசையைப் பற்றி, இந் நூலில் இடம் பெற்றிருப்பவர்களைப் போன்றவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து கலைஞர்களிடமும் ஏறக் குறைய ஒரே விதமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. கலைஞர்களின் இளமைக் காலம், அவர்களுக்கு சங்கீதத்துடன் ஏற்பட்ட முதல் ஸ்பரிசம், அவர்களுடைய குருவுடனான பந்தம், கலைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள், மடங்களுடனான தொடர்பு ஆகியவை பெரும்பாலான நேர்காணல்களில் விவரமாக இடம் பெற்றுள்ளன. சில வித்வான்களின் விவரிப்பில் பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

1. சாத்தபுரம் சுப்பா ஐயர் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது மோரா வாசித்த பின் ஒரு கோர்வையை மூன்று முறை வாசிக்கும் பழக்கம் இல்லை.
2. பாவேந்தரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு இசை அமைக்க, தண்டபாணி தேசிகர் இரண்டாண்டு காலம் உழைத்தார்.
3. ஏ.கே.சி நடராஜன் வாசிப்பது வழக்கமான கிளாரினெட் அன்று. அவருடைய கிளாரினெட்டில் 5-6 keys மட்டும் கொண்டு, நாதஸ்வரத்தைப் போலவே பாவிப்பதால்தான் கமகங்களை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது.

போன்ற தகவல்களை, இந் நூலில் இடம் பெற்றுள்ள அரிய தகவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தண்டபாணி தேசிகர், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன் அதிகம் வெளி வராதவை. தந்தையே குருவாகவும், குருவே வ்ளர்ப்புத் தந்தையாகவும் மாறி, அன்பைப் பொழிந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவுதான் அன்பு வைத்திருந்த போதும், இசை என்று வரும் போது, குரு சிஷ்யரிடம் காட்டிய கண்டிப்பு கவனிக்கப் பட வேண்டியது. அடைந்திருக்கும் உயரங்களுக்குப் பின் இருக்கும் அயராத உழைப்பும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

பொதுவாக, இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களில், கலைஞனைப் பற்றிய விவரங்கள் இருக்கும் அளவிற்கு, அவன் அந்தக் கலையில் விசேஷமாய் என்ன செய்து இன்றடைந்திருக்கும் உயரத்தை அடைந்தான் என்ற விவரங்கள் இருப்பதில்லை. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. உதாரணமாக எம்.எஸ்.அனந்தராமனின் நேர்காணலில், ‘பரூர் பாணி’ என்பதை அவரது தந்தை உருவாக்கினார் என்ற விஷயம் இருக்கிறதே அன்றி. ‘பரூர் பாணி’ என்றால் என்ன என்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இதே நேர்காணலில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி விஸ்தாரமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூலைப் படித்து முடிக்கும் போது, திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் மேலெழுகிறது. மூத்த கலைஞர்களை பேட்டி காண்பதற்கு முன் ‘ஹோம் வொர்க்’ செய்வது மிக மிக அவசியம். அனைவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தந்த கலைஞர்களுக்கென்று பிரத்யேகமாய் சில கேள்விகளையும் கேட்டிருக்கலாம். உதாரணமாக, “திருவையாறில் தமிழில் பாடியபின் தண்டபாணி தேசிகர் சந்தித்த சூழல் எப்படி இருந்தது”, என்ற கேள்வி நிச்சயம் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும். “ஒரு காலகட்டத்தில் எம்.எஸ்.அனந்தராமனின் கச்சேரிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திலும், அவர் ஹிந்துஸ்தானி ராகங்களை கலந்து வாசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.”, அந்தக் குற்றச்சாட்டில் எதனால் பிறந்தது, அதனால் அவரது இசை வாழ்வுக்கு பாதகம் ஏற்பட்டதா?, போன்ற கேள்விகள் நிச்சயம் அவரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

வயதானவர்களை நேர்காணல் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. ஒரு வயதுக்கு மேல், கோவையாக விஷயங்களைக் கூறுவதென்பது எல்லோராலும் முடியாது. அதிலும், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே எழுதிவிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி, உண்மை எதுவோ அதை மட்டுமே பதிவு செய்தல் மிகவும் அவசியம். உதாரணமாக, டி.கே.மூர்த்தியின் நேர்காணலில், “மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை”, என்கிறார். ஆனால் இதே புத்தகத்தில் திருச்சி சங்கரன் மற்றும் குருவாயூர் துரை ஆகியோரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே மாமுண்டியா பிள்ளை ஏற்படுத்திய புதுக்கோட்டை வழியில் வாசிப்பவர்கள். இந்தத் தகவலும் அவர்களின் நேர்காணலில் இடம் பெற்றுள்ள நிலையில், சற்றே சீர்தூக்கிப் பார்த்திருந்தால், இது போன்ற தவறான செய்திகள் இடம் பெருவதைக் தவிர்த்திருக்கக் கூடும்.

நேர்காணல்களில் பல இடங்களின் பெயரும், கலைஞர்களின் பெயரும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக, ‘மழவராயநேந்தல்’ என்ற ஊரின் பெயர் ‘மழவராயபுரம்’ என்றும் ‘மழவராய’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. ’நன்றுடையான் பிள்ளையார் கோயில்’ என்ற இருக்க வேண்டிய தொடர் ‘நஞ்சுடையான் பிள்ளையார் கோயில்’ என்று இருக்கிறது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரை, ‘வைத்தியநாதன்’ என்று மட்டும் குறித்தால் (மஹா வைத்தியநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர் போன்ற பல வைத்தியநாதன்கள் இருக்கும் சங்கீத உலகில்), யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் பல குழப்பங்கள் நேரக் கூடும்.

பொதுவாகவே நூலில், இசை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அப்படி இடம் பெற்றிருக்கும் குறிப்புகளிலும் ஏராளமான தவறுகள் காணப்படுகின்றன. டி.கே.மூர்த்தியின் நேர்காணலில் ஓர் இடத்தில், “சில சாஹித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும், சில சாஹித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும்.”, என்று பதிவாகியுள்ளது. தாளத்தில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்ற பகுப்பு கிடையாது. ‘மேல் காலம்’, ‘கீழ் காலம்’, என்று இருக்க வேண்டிய தொடர்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. “கால், அரை, முக்கால் என்று பாட்டுக்கு தனி ஆவர்த்தனம் விட்டால் சாபுதாளம் இடத்திற்கு வாசிக்கத் தெரிய வேண்டும்”, என்பது போன்ற முழுமை பெறாத வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ‘சங்கீர்ண சாபு’ என்ற தாளத்தின் பெயர் ‘சங்கீத சாபு’ என்று பதிவாகியுள்ளது. ‘சேதுலார’ என்ற கிருதி ‘சேதுல்ல’ என்று தவறாகக் குறிக்கப்படுகிறது. இது போன்ற பல பிழைகள் புத்தகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன.

மொத்தத்தில், புத்தகம் ஒரு அரிய தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கலைஞர்களின் தனிப் பட்ட வாழ்க்கையை விட, அவர்களின் சங்கீதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறு வராமலிருக்க வேண்டிய முனைப்பு தொகுப்பாளருக்கு இருந்திருப்பின் இந்தத் தொகுப்பு காலத்தைக் கடந்து நின்றிருக்கும்.

பி.கு: புத்தகத்தில் வந்துள்ள ஒரு அரிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

Read Full Post »