ஒரு வயதான இசை ரசிகரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் பழைய கிராம·போன் தட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தார். என் கண்ணில் முதலில் பட்ட தட்டு “கந்தன் கருணை புரியும் வடிவேல்”. எனக்கு மதுரை மணியின் பாட்டின் மேல் அலாதி பிரியம் என்பதால் அந்தத் தட்டை எடுத்தேன்.
“அட! கந்தன் கருணையா! மதுரை மணியும் பழநி சுப்புடுவும் என்னமாய்ப் பாடியிருக்கிறார்கள்.”, என்றார் பெரியவர்.
“பழநியா பாடியிருக்கார்? மதுரை மணியோட வேம்பு ஐயர்தானே பாடுவார். பழநி மிருதங்க வித்வான் இல்லையா?”, என்றேன் குழப்பத்துடன்.
“மிருதங்கமானா என்ன? அதில் பாட முடியாதா”, என்று சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ரிக்கார்டைப் பாடவிட்டார்.
பாடலைக் கேட்டவுடன்தான் உண்மை புரிந்தது. “கோல மயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்”, என்ற வரியில் பாடல் கூறும் கொஞ்சல்கள் அனைத்தையும் மிருதங்கத்தின் தொப்பியில் வெளிப்படுத்துவதென்பது மனிதனால் ஆகக் கூடியதா? “அண்டம் ஆண்டிடும் ஆதி மகள்” என்ற அடியில்தான் எத்தனை சங்கதிகள். ஒவ்வொரு சங்கதிக்கும் , அந்த சுநாதத் தருவின் வலந்தலையில் இடது கையும், தொப்பியில் வலது கையும் – ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல தன்னிச்சையாய்ச் சிதறவிடும் நாதத் திவலைகள்தான் எத்தனை. உச்சஸ்தாயியில் “அன்னை பராசக்தி அருள் சுடர்வேல்” என்று பாடல் ஒலிக்க, நீண்டு ஒலிக்கும் ரீங்கார ஒலியான தீம்காரம், ஓம்காரமாய் ஒலிக்கும் போது கேட்ட ஒருவரும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. எப்பேர்ப்பட்ட வாசிப்பு! இல்லை இல்லை. எப்பேர்ப்பட்ட பாட்டு பழநியின் மிருதங்கத்திலிருந்து!
“இப்படிப்பட்ட வாசிப்பு வெளிச்சத்துக்கு வர எவ்வளவோ தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது என்று நினைத்தால்தான் வியப்பாக இருக்கிறது.”, என்று பெருமூச்சு விட்டார் பெரியவர்.
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பழநி மறைந்து விட்டார் என்ற போதிலும், “ஸொகஸ¤கா மிருதங்க தாளமு” என்ற பதத்தைக் கேட்கும் போதெல்லாம் பழநியின் ஞாபகம்தான் வரும். மரபிசை வாத்தியமான தவிலை அடிப்படையாகக் கொண்டு, புதுக்கோட்டை பாணியை நிறுவியவர் மான்பூண்டியா பிள்ளை. அவரின் பிரதம சிஷ்யர்களுள் ஒருவர் பழநி முத்தையாப் பிள்ளை. தவில், மிருதங்கம், கஞ்சிரா என்று லயக் கருவிகள் பலவற்றில் சிறந்த ஆளுமை கொண்டிருந்த முத்தையாப் பிள்ளையின் மகனாகப் பிறந்த பழநிக்கா தடைகள் எழுந்திருக்க முடியும்? என் சந்தேகத்தை பெரியவரிடம் கேட்டேன்.
“முத்தையாப் பிள்ளைக்கு இரு மனைவியர். பழநி பிறந்த சில வருடங்களிலேயே தாயாரை இழந்தார். அதன் பின் மாற்றாந்தாயின் பராமரிப்பு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவா வேணும். பழநி கதையைத் தொடருவதற்கு முன், உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். கிரிக்கெட்டின் தலை சிறந்த ஆட்டக்காரர்களின் பட்டியலில் சோபர்ஸ், கில்கிரிஸ்ட், லாரா, அக்ரம் போன்ற இடக்கையர்களுக்கு இடம் இல்லை என்றால் ஒப்புக் கொள்ள முடியுமா?”
“இவர்கள் இல்லாமல் கிரிக்கெட்டா? என்ன அபத்தம் இது.”
“நீ சொன்ன அபத்தம்தான் பழநியின் வாழ்க்கையில் விளையாடியது. அவருக்கு இடது கைப்பழக்கம். அதை அமங்கலமாக நினைத்து பழநிக்கு சொல்லித் தர மறுத்துட்டார் முத்தையாப் பிள்ளை. அவருடைய இன்னொரு மகனான சௌந்தரபாண்டியனையே இசை வாரிசாகக் கருதினார். சௌந்தரபாண்டியனுக்கு அப்பா சொல்வதைக் கேட்டு, அப்பா வீட்டில் இல்லாத சமயம் சாதகம் செய்வாராம் சுப்ரமணிய பிள்ளை. அப்படி ஒரு முறை வாசித்ததை தட்சிணாமூர்த்தி பிள்ளை கேட்க நேர்ந்தது.”
“புதுக்கோட்டை மஹாவித்வான் தட்சிணாமூர்த்தி பிள்ளையா!”
“அவரேதான். பழநியின் வாசிப்பைக் கேட்டவர் நேராக முத்தையாப் பிள்ளையிடம் சென்று, “முத்தையா, இந்தப் பிள்ளையை சாதாரணமாக நினைக்காதே. உன் குலம் விளங்கப் போவதும் உன் பெயர் நிலைக்கப் போவதும் இவனால்தான். இந்தப் பையனுக்குச் சொல்லிக் கொடு. நீ சொல்லிக் கொடுக்க முடியாதென்றால் என்னிடம் அவனை விட்டு விடு”, என்று கறாராக உரைத்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற மஹா வித்வானே பரிந்துரை செய்த போது முத்தையாப் பிள்ளையால் சொல்லித் தராமல் இருக்க முடியவில்லை. ஒன்றுமே சொல்லிக் கொடுக்காத காலம் போய், பழநியை அதீதமான பயிற்சியில் ஈடுபட வைத்தார் முத்தையாப் பிள்ளை. விடியற் காலை நாலு மணிக்கு எழுந்தாரெனில் இரவு பத்து மணிக்கு தூங்கச் செல்லும் வரை பயிற்சிதான். வேறு சிந்தனைக்கே வழியில்லை. பயிற்சியின் போது சிறு தவறு செய்தாலும் பிரம்புப் பிரயோகம் தயாராயிருக்கும். இந்தப் பயிற்சியே, மனதில் எழுந்த அனைத்தையும் கையில் பேச வைக்கும் ஆற்றலை பழநிக்குக் கொடுத்து.”
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பழநி புயல் போல புறப்பட்டிருக்க வேண்டுமே. 1908-ல் பிறந்த பழநி , 1930-களில்தானே அவர் முன்னணி வித்வானாக அறியப்படுகிறார்.” என்று சந்தேகங்களைத் தொடர்ந்தேன்.
“நல்ல பயிற்சி இருந்தால் மட்டும் முன்னுக்கு வந்துவிட முடியுமா? பழநிக்கு முந்தைய தலைமுறை முதன்மைப் பாடகர்கள் எல்லாம் லய நிர்ணயத்துக்கு பெயர் போனவர்கள். காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையின் ‘full bench’ கச்சேரிகளில் லய யுத்தமே நடக்கும். பழநி பதினைந்து பதினாறு வயதிருக்கும் போதே நாயினா பிள்ளைக்கு வாசிக்கத் தொடங்கிவிட்டார். பழநி அரங்குக்கு வந்த நேரத்தில் லய விவகாரங்களில் ஈடுபட்டு பாடுபவர்கள் குறைவாகத்தான் இருந்தனர். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளைக்கோ, ஆலத்தூர் சகோதரர்களுக்கோ, செம்பைக்கும் அரியக்குடிக்கும் இருந்த அளவுக்கு கச்சேரிகள் இல்லாத காலம் அது. போதாக் குறைக்கு பழநியின் இடது கைப் பழக்கம் வேறு அவருக்கு பெரிய தடையாய் அமைந்தது.”
“அந்தக் காலத்திலேயே அம்மாப்பேட்டை பக்கிரி போன்ற மேதைகள் இடது கைப்பழக்கமுடையவர்கள் என்ற போதும் தவில் உலகில் முடிசூடா மன்னர்களாக இருந்திருக்கிறார்களே! தவிலுக்கு ஒரு சட்டம் மிருதங்கத்துக்கு ஒரு சட்டமா இருந்தது.”, என்று மடக்கினேன் பெரியவரை.
“தவிலைப் பொறுத்த மட்டில் எத்தனையோ இடது கைப்பழக்கமுடைய வித்வான்கள் பெரும் புகழோடு இருந்திருக்கிறார்கள். மேடைக் கச்சேரிகளில் பாடகருக்கு வலப் புறத்தில் மிருதங்கக்காரரும், இடப் புறத்தும் வயலின் வித்வானும் அமர்வது மரபு. இது மிருதங்கம் வாசிப்பவர் வலக்கையர் எனில் சரியாக இருக்கும். மிருதங்கம் வாசிப்பவர் இடக்கையர் எனில் இந்த அமைப்பின் படி உட்கார்ந்தால் மிருதங்கத்தின் தொப்பி சபையை நோக்கி இருக்கும். ஸ்ருதியுடன் ஒலிக்கக் கூடிய வலந்தலை சபையை நோக்கி இல்லாவிடில் நாதம் கேட்க நன்றாயிருக்காது. பழநி வாசிக்க வந்த காலத்தில் வயலின் கலைஞர்கள் பலர், மரபுப்படிதான் உட்காருவோம் என்று முரண்டு பிடித்தனர். எவ்வளவுதான் உயர்ந்த வாசிப்பாக இருந்த போதும், எதற்கு வம்பு என்று கச்சேரி அமைப்பாளர்களும் பழநியை ஒதுக்கினர்.”
“என்ன அநியாயம். பழநியின் வாசிப்புக்கா இத்தனை தடைகள்”, என்று வியந்து போனேன்.
“பழநியின் வாசிப்பைக் கேட்கக் கூட பேறினை பெற்றதற்கு, செம்பைக்கும் பாலக்காடு மணி ஐயருக்கும் ஏற்பட்ட சிறு மனத்தாங்கலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். துணைவியார் கோலார் ராஜம்மாளின் உந்துதலில் செம்பையைச் சந்தித்த பழநியிடம், இரண்டு நிபந்தனைகள் விதித்தார் செம்பை. ஒன்று, “சில நாட்களுக்கு கச்சேரிக்கு இந்த rate-தான் வேண்டும் என்று கேட்கக் கூடாது.” மற்றொன்று, “கணக்கு வழக்குகளை அளவுக்கு மீறி வாசிக்காமல், சௌக்கியமாக வாசிக்க வேண்டும்.” இந்த இரண்டுக்கும் பழநி இசைந்ததால், செம்பையுடன் சேர்ந்து ஏராளமான கச்சேரிகள் ஏற்பாடாயின. செம்பையைப் போன்ற மூத்த வித்வான் சொல்லை மீற முடியாததால், வயலின் வித்வான்களுக்கு விருப்பம் இல்லை என்ற போதும், இடம் மாறி அமர்ந்து பழநியுடன் வாசித்தனர். செம்பை பாகவதர், பழநியின் திறமையை எப்படி எல்லாம் வெளிக் கொணரலாம் என்று யோசித்து உரியன செய்தார். ஒரு கச்சேரியில் ஐந்து முறை பழநியை தனி ஆவர்த்தனம் வாசிக்க வைத்து மகிழ்ந்தார் அந்தப் பெருந்தகை. இரண்டே வருடத்தில் அத்தனை முன்னணி பாடகர்களும் விரும்பிச் சேர்த்துக் கொள்ளும் பக்கவாத்தியக்காரராக வளர்ந்தார் பழநி.”
“1930-களில் செம்பைக்கு வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து பழநிக்கு ஏறு முகம்தான் என்று கூறுங்கள். பழநியின் வாசிப்பில் உள்ள பிரத்யேக அம்சங்கள் எவை?.”

“பழநியின் வாசிப்பில் வலது கையும் இடது கையும் சேர்ந்து ஒலிக்கும் சொற்கள் நிறைந்து இருக்கும். அவர் சிஷ்யர்களுக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம், “ஒத்தக் கை வாசிப்பு வாசிக்காதே ஐயா”, என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம். சுலபமான சொற்கட்டுகளைக் கூட அவர் வாசிக்கும் போது கர்ணாம்ருதமாய் ஒலிக்கும். பாட்டுக்கு வாசிப்பது என்ற விஷயத்தில் பழநிக்கு நிகர் பழநிதான். பாட்டை அப்படியே சங்கதிக்கு சங்கதி வாசிக்காமல், அழகாக இட்டு நிரப்பி, வித விதமாய் நடைகளால் நகாசு செய்வது அவர் தனிச் சிறப்பு. காண்டாமணி போன்ற நாதத்தை உதிர்க்கும் அவர் வலந்தலையில் அரைச் சாப்பும், முழுச் சாப்பும் முழுமையாய் வந்து விழும் அழகே தனி. அவருடைய டேக்கா சொற்களில் ஒலிக்கும் தெளிவுக்கு ஈடாக இன்னொன்றை சொல்ல முடியாது.”
“பழநியின் இத்தனைச் சிறப்பைச் சொன்னீர்கள், ஆனால் உலகமே வியக்கும் அவரது கும்காரங்களைப் பற்றி சொல்லவே இல்லையே”.
“காரணமாய்த்தான் சொல்லவில்லை. சொல்ல முயன்றாலும் சொல்லிவிட முடியுமா என்ன? வார்த்தைகளில் வர்ணிக்கக் கூடிய விஷயமா அது? மிருதங்கத்தின் நாத விசேஷமே தொப்பியின் ஒலியில்தான் இருக்கிறது. தொப்பியை ரொம்ப இறக்கி வைத்துக் கொண்டால் முடக்கு விழுந்துவிடும். பழநி தன் மிருதங்கத்தில், வலந்தலையின் சேர்ப்பது போல, தொப்பியிலும் அனைத்து கண்களிலும் ஒரே விதமான ஒலி எழுமாறு ஸ்ருதி சேர்ப்பார். இதனால் அவரது தொப்பியின் நாதமே அலாதி. அதிலும், தேய்ப்புச் சொல்லான கும்கியை அவர் வாசிக்கும் போது மயங்காதவரே இல்லை எனலாம். மிருதங்க மேதையான பாலக்காடு மணி ஐயரே பழநியின் கும்கிக்கு ரசிகர் என்றால் பார்த்துக் கொள்ளேன்.”
“பாலக்காடு மணி ஐயரும் பழநி சுப்ரமணிய பிள்ளையும் சேர்ந்து கூட பல கச்சேரிகளுக்கு வாசித்திருக்கிறார்களாமே.”
“முத்தையாப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போலவே, பழநியும் மிருதங்கத்தைத் தவிர கஞ்சிராவிலும் சிறந்த ஆளுமையைப் பெற்றிருந்தார். மணி ஐயருடன் சேர்ந்து அவர் வாசிக்கும் போதெல்லாம் பொறி பறக்கும். பழநியின் தனி ஆவர்த்தனங்களில் அவரின் ஆழ்ந்த தேர்ச்சியும், அபரிமிதமான கற்பனைகளும் அழகாக பவனி வரும். எத்தனையோ தீர்மானங்களையும் கோர்வைகளையும் புனைந்தவர் பழநி. குறிப்பாக திருப்புகழ் அமைந்திருக்கும் சந்த தாளங்களுக்கு பழநி வாசிக்கும் அழகைச் சொல்லி மாளாது. அவர் கதி பேதம் செய்யும் போது, எந்த நடையை வாசிக்கிறாரோ, அந்த நடையில் அட்சரத்துக்கு எத்தனை மாத்திரை உண்டோ அதை வெளிப்படையாகக் காட்டாமல், திஸ்ர நடையில் சதுஸ்ரம் அமைத்தல், கண்ட நடையில் சதுஸ்ரம் அமைத்தல், என்று நடையை அமைப்பதில் பல புரட்சிகளைச் செய்தவர் பழநி” என்று நிறுத்தாமல் பொழிந்தார் பெரியவர்.
“அவரின் மற்றொரு பங்களிப்பு என்று அவர் உருவாக்கியுள்ள சிஷ்யர்களைச் சொல்லலாம். எம்.என்.கந்தசாமி பிள்ளை, டி.ரங்கநாதன், பள்லத்தூர் லட்சுமணன், பூவாளூர் வெங்கடராமன், திருச்சி சங்கரன், உடுமலை மயில்சாமி, கே.எஸ்.காளிதாஸ் போன்ற எண்ணற்ற சிஷ்யர்களை உருவாக்கி இன்று நிலைத்து நிற்கக் கூடிய பாணியாக புதுக்கோட்டை பாணியை நிறுவிய பெருமை பழநியையே சேரும்.”
“சங்கீத கலாநிதி, ஜனாதிபதி விருது போன்ற பட்டங்களுக்கு பழநியை அலங்கரிக்கக் கொடுத்து வைப்பதற்கு முன், இள வயதிலேயே அவர் மறைந்தது சங்கீத உலகுக்கு பெரும் இழப்பு. இந்தப் பட்டங்களை விட மேலான கௌரவம் பழநியின் சிஷ்யர்கள் வருடம் தவறாமல் செய்து வரும் குரு பூஜையாகும். பிறந்து நூறாண்டுகள் ஆன பின்னும், மறைந்து 47 ஆண்டுகள் ஆன பின்னும், வருடா வருடம் பழநியின் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இதை விட வேறென்ன பெருமையை ஒருவர் அடைந்துவிட முடியும்”, என்றார் பெரியவர் தன்னை மறந்து.
பழநியின் நினைவில் மூழ்கிவிட்ட அவரை எழுப்ப மனமில்லாமல் மௌனமாகக் கிளம்பினேன் என் வீட்டுக்கு.
Read Full Post »