ஒவ்வொரு சீசனிலும் 35-40 கச்சேரிகள் கேட்டுவிடுவேன். அவற்றில் சரி பாதியாவது வளரும் கலைஞர்களின் கச்சேரிகளாக இருக்கும். அதிக எதிர்பார்ப்பும், கூட்டத்துக்குப் பாட வேண்டிய கட்டாயம் இல்லாத நிலையில், நிதானமாக, அழுத்தமாகப் பாடுவதில் இவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. 2 மணி நேர கச்சேரியில் 4 பாடல்கள் பாடினாலும் யாரும் இவர்களை குற்றம் சொல்லப் போவதில்லை.
இந்த வகையில், நான் இந்த சீஸனில் கேட்கப் போகும் இளைய தலைமுறையைப் பற்றி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். அபிஷேக் ரகுராம், டி.என்.எஸ்.கிருஷ்ணா, சிக்கல் குருசரண் போன்ற, இளைஞர்களாக இருந்தாலும், பிரபலம் ஆகிவிட்டவர்களை நீக்கி, மற்றவர்களை இங்கு ப்ரோஃபைல் செய்வதாக எண்ணம்.
முதலாமவர்: ராமகிருஷ்ணன் மூர்த்தி
இவரை நான் ஒரு முறைதான் கேட்டுள்ளேன். அந்த அனுபவத்துக்கு முன்னும், பின்னும், பலர் இவரது இசையை சிலாகித்துக் கூறக் கேட்டிருக்கிறேன்.
நன்னு என்கிற சுப்ரமணியனின் மிருதங்க அரங்கேற்ற கச்சேரியில் பாடிய போது கேட்டேன். குருவாயூர் துரை, செங்கல்பட்டு ரங்கநாதன், பி.எஸ்.நாராயணசாமி, விஜய் சிவா, சஷாங்க், மதராஸ் கண்ணன் என்று எண்ணற்ற வித்வான்கள் கூடியிருந்த சபையில், அரங்கேற்ற கச்சேரி என்று அரை நிமிஷம் கூட தோன்றா வண்ணம் அமைந்த கச்சேரி அது.
அன்று ராமகிருஷ்ணன் பாடிய காம்போதி வெகு அற்புதம். இனிமையான குரல். ராகம் பாடும் போது அசாத்தியமான அழுத்தம். காலப்ரமாணத்தில் நல்ல பிடிப்பு. நான் கேட்ட அன்று, ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ கிருதியை பிரதானமாகப் பாடினார். ‘மனஸிஜ கோடி கோடி’ என்ற வரியை இரண்டு காலங்களில் பாடி, திஸ்ரமும் செய்தார். வாஸவாதியில் நிரவல். காம்போதியின் காந்தாரத்தை மையமாக வைத்து, அவர் பின்னிய அழகிய கோவைகள் இன்னும் காதுகளுள். ஸ்வரம் பாடும் போது, அவ்வப்போது ‘சகல தேவ’, ‘பூஸுராதி’ போன்ற இடங்களுக்கும் பாடியது, லா.ச.ரா பாஷையில் சொன்னால் “பஹு ருசி”.
இன்னும் சில நாட்களில் இருபது வயதுக்குள் நுழையப் போகும் இவ்விளைஞர், காலிஃபோர்னியாவில் (இர்வைன்) பொறியியல் படிப்பு படிக்கிறார். பிறந்தது இந்தியாவில் என்றாலும், தந்தையின் பணி காரணமாக 3 வயதிலிருந்து அமெரிக்க வாசம்.
டெலிஃபோனில் அவரைப் பிடித்தேன். நல்ல தமிழில் தெளிவாகப் பேசுகிறார். “எனக்கு ஆறரை வயதாகும் போது, திருமதி. பத்மா குட்டியிடம் இசை பயில ஆரம்பித்தேன். பாட்டு விஷயத்தில் அவர் ரொம்பவும் கறாராக இருப்பார். அதனால், முதலில் நான் கொஞ்சம் பயந்தேன். என் அம்மாதான், ஒவ்வொரு நாளும் என்னுடன் உட்கார்ந்து, என்னை சாதகம் செய்ய வைத்து, அடுத்த கிளாசில் போய் திட்டு வாங்கிக் கொள்ளாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார். நாட்பட நாட்பட, என்னை இசை இழுத்துக் கொண்டது. திருமது பத்மா குட்டியிடம் பல உருப்படிகள் பாடம் செய்தேன். எனக்கு பதினொரு வயதாகும் போது டில்லி சுந்தரராஜனிடம் கற்க ஆரம்பித்தேன். அப்போது அவர் LA-வில் சில காலம் தங்கி இருந்தார். அவரது வயலின் வித்வத் எல்லோரும் அறிந்ததே. ஆனால், அவர் அற்புதமாகப் பாடக்கூடியவர் என்று பலர் அறிந்திருக்க மாட்டார்கள். முதல் முறை அவர் பாடிக் கேட்டதும் I was bowled over. தொடர்ந்து அவரிடம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கற்க ஆரம்பித்தேன்.”, என்றார்.
தனது ஒன்பதாவது வயதிலிருந்து வருடம் தவறாமல் மூன்று மாதம் இந்தியாவில் சங்கீத சிட்சை. பதிமூன்று வயதிலிருந்து கச்சேரிகள் செய்கிறாராம். 3-4 வருடங்களாக டிசம்பர் ஜூனியர் ஸ்லாட்டில் நிறைய கச்சேரிகள் செய்துள்ளார். இந்த வருடம் அகாடமியில் செய்த கச்சேரியில் பைரவி அமர்க்களமாய் இருந்தது என்ற கேட்டவர்கள் கூறுகின்றனர். ஆலத்தூர், செம்மங்குடி, டி.எம்.டி, பிருந்தா-முக்தா, ஜி.என்.பி என்று பலரின் பாடலை விரும்பிக் கேட்டாலும், “ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையில் மேல் தனி பிரியம். அவர் பாட்டில் சங்கீதத்தின் எல்லா அம்சங்களும் சரியான கலவையில் இருப்பதாக எனக்குத் தோன்றும்.”, என்கிறார்.
கிளீவ்லேண்ட் போட்டியில் 2003-ல் முதல் இடம். அதற்குப் பரிசாய் 2005-ல் முழு நீளக் கச்சேரி செய்து, நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2007-ல் மியூசிக் அகாடமி போட்டிகளில், ஐந்து பரிசுகளை அள்ளியுள்ளார். 2008-ல் அகாடமியின் Spirit of Youth festival-ல் சிறந்த பாடகராகத் தேர்வு பெற்றிருக்கிறார். முசிறி அறக்கட்டளை விருதும், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை விருதும் இவரை அலங்கரிக்கின்றன.
பாட்டையும் படிப்பையும் தவிர, Basketball, Tennis பார்க்க ஆர்வமாம்.
இன்னும் இரண்டு வருடம் படிப்பு முடிந்தால் அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று பலர் கூறும் வேளையில், “படிப்பு முடிந்ததும், இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்துவிடுவேன்” என்கிறார் ராமகிருஷ்ணன் மூர்த்தி. இசைத் துறையில் நன்றாகக் காலூன்றியதும், முழு நேரப் பாடகனாவதுதான் நெடுங் காலத் திட்டமாம். (long term plan என்பதை நெடுங்காலத் திட்டம் என்று தமிழ்ப் படுத்தலாமா?)
சிறு வயதில் தவறாமல் சாதகம் செய்ய வைப்பது, வருடம் தவறாமல் இந்தியாவுக்கு அழைத்து வருவது, பாடுவதைத் தொழிலாகக் கொள்ளும் எண்ணத்தைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பது, என்று ராமகிருஷ்ணன் மூர்த்தியின் பெற்றோர்கள் ஆற்றியிருக்கும் பணி அளப்பெரியது. “I must have been really blessed to have such wonderful parents”, என்கிறார் ராம் (இதுவும் நானில்லை – அவன்;-)). அவரிடம் பேசி முடிக்கும் போது, “சீஸனில் meet பண்ணலாம் ”, என்றேன். “நிச்சயம் சந்திக்கலாம்.”, என்று தெள்ளு தமிழில் பதிலுரைத்தார்.
அஸ்திவாரம் பலமாக அமைந்திருக்கிறது. எல்லாம் சரியாகச் சென்றால், நல்லதொரு நெடும் கட்டிடம் உருவாவது உறுதி.