Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘music-fest2009’ Category

பால ‘சேஷு’

21 Dec 2009 @ Krishna Gana Sabha, T.N.S Krishna, M.Chandrasekaran, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam

எனக்கு சேஷகோபாலன் பாட்டென்றால் உயிர். 2004 வரை சென்னையிலும், பெங்களூரிலும் பல இடங்களில் அவர் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். தஞ்சாவூரில் படித்த போது, திருச்சிக்கு, இவர் கச்சேரி கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன்.

சில வருடங்களாய் இவரைக் கேட்க வேண்டுமென்றால், ஒலிப்பதிவுகளை நாடுவேன். நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஏங்கும் போது டி.என்.எஸ் கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்குச் செல்கிறேன்.

பல சமயங்களில் பாத்திரம் பொன்னால் ஆனதாக இருக்கும், பண்டம் பழையதாய் இருக்கும். அல்லது, பண்டம் பாயசமாக இருக்கும், பாத்திரம் ஓட்டை விழுந்த தகரமாக இருக்கும். எப்போதாவது ஒரு முறைதான் பொற் பாத்திரத்தில் நற் பாண்டம் அமையும். கிருஷ்ணாவின் விஷயத்தில் அது நடந்துள்ளது.

கிருஷ்ண கான சபையில்  காலை வேளை கச்சேரி. எம்.சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன், ஈ.எம்.சுப்ரமணியம் என்று பக்க வாத்தியங்கள் பட்டியலே கச்சேரிக்கு என்னை இழுத்தது. அண்ணான் சாலையிலிருந்து, பனகல் பார்க் வரை, காலை ஒன்பது மணிக்கு மேல், ஒரு முறை கூட நிற்காமல் பாண்டி பஜாரைக் அடைந்த போதே, இந்த நாள் இனிய நாள் என்று உள்ளுக்குள் பட்சி கூவியது.

விடுமுறை நாட்கள் நீக்கி, மற்ற நாட்களில் காலை வேளை கச்சேரிகளை அனைத்து சபையினரும் இலவச கச்சேரிகளாக்கி விடலாம். ரிடையர் ஆன மாமிகளும், மாமாகளும் காசு கொடுத்து கச்சேரி கேட்பார்கள் என்று சபாகள் நினைப்பதுதான் ஆச்சர்ய்மாக இருக்கிறது. கிருஷ்ண கான சபை மாதிரி பெரிய அரங்குகளில் 50-60 இருந்தாலே கூட்டம் குறைச்சலாய்த்தான் தோன்றும். இன்று 20 பேர் கூட தேறி இருக்கமாட்டார்கள். சில வருடங்கள் முன், நாரத கான சபையில், இதே போன்ற நிலையில் பாடிய கிருஷ்ணா, “வந்து கேட்பார் இல்லையோ” என்று ஊர்த்துக்காடு பாடலை பாடிய போது  it became an unintentional situation song.

கூட்டம் இருக்கோ இல்லையோ, மேடை ஏறிவிட்டால் 100% உழைத்துப் பாடுகிறார் கிருஷ்ணா. இன்று பக்கவாத்தியங்களின் உற்சாகமும் சேர்ந்து கொண்டிருக்கும். தர்பார் ராகத்தை இழை ஓட விட்டு, வர்ணத்தை ஆரம்பித்த போது, சாகேதராமனுக்கு செய்தது போல இவருக்கும் குரல் மக்கர் செய்யுமோ என்று பயந்தேன். வர்ணத்தைப் பாடி, சில கல்பனை ஸ்வரங்களையும் அள்ளி வீசிய போது குரல் ஓரளவு பதத்தை அடைந்தது. பாதி கச்சேரி வரை தார ஸ்தாயியில் பாடிய போது ஒரு வித strain தென்பட்டது. பிரதான ராகம் பாடும் போது, குரல் நல்ல பதத்தை அடைந்திருந்தது.

ஸ்ரீ ரகுகுல ஹம்சத்வனியில் பாடி, துரித கதியில் நிரவலும் ஸ்வரமும் பாடினார். ‘பகரி நிபக கநிரி ரிநிப’ என்று மும்மூன்று ஸ்வரங்களாய் பற்பல கோவைகள் அமைத்துப் பாடிய ஸ்வரங்கள் அற்புதமாய் இருந்தன.

ஹம்சத்வனியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். அவசர அவசரமாய் பஞ்சமத்துக்குச் சென்று கார்வை கொடுக்காமல், மந்த்ர ஸ்தாயியிலே விஸ்தாரமாகப் பாடியது சிறப்பு. ஸ்வரம் ஸ்வரமாய் ஆலாபனையை நகர்த்தி வளர்க்கும் போதே, ஆலாபனையின் மையத்திலிருந்து தள்ளி இருக்கும் ஸ்வரங்களுக்கும் அவ்வப்போது தாவி, கேட்பவரை வியப்பில் மாழ்த்துவது TNS பாணி.

இதனை நால், macroscopically linear and microscopically non-linear என்பேன். கிருஷ்ணாவின் ஆலாபனையும் இவ்வகையில்தான் அமைந்திருந்தது. ரப்பராய் இழுத்து,நிறுத்திப் பாடிய சஞ்சாரங்களோடு, துரித கால சஞ்சாரங்களைக் கோத்து அமைந்த ஆலாபனை பூர்வி கல்யாணையை உருக்கமாகவும், அதே சமயத்தில் அழுது வடியாமல் இருக்கும் படியும் மிளிரச் செய்தது. காந்தாரத்தில் மையம் கொண்டு, சுழற்றி சுழற்றி பல அலைகளை எழுப்பி, இறுதியில் அடுத்த ஸ்த்தைத் தொட்ட போது என்னை அறியாமல் கைகளைத் தட்டினேன். இப்போது தொட்டுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கும் போது தொடாமல், தவிப்பை அதிகமாக்கி, இறுதியில் தொடும் போது, ஒரு வித relief ஏற்படுகிறது. அதுவே என்னை கைதட்ட வைத்தது என்று நினைக்கிறேன்.

கச்சேரி முழுவதும் சந்திரசேகரன், அழகாய் அளவாய் வாசித்தார். கிருஷ்ணாவின் சாகசங்களில் கலந்து கொள்ளாவிடுனும், தன் வாசிப்பால் அந்த சாகசங்களுக்கு சங்கடம் வராமல் பார்த்துக் கொண்டார்.

ஆலாபனையைத் தொடர்ந்து நினுவினாகமரி தொடங்கிய போது, காலப்ரமாணத்தை ஒரு இழை குறைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஸ்வரத்தில் கொஞ்சம் விவகாரங்கள் ரொம்பவும் தலை  காட்டாமலும் அரவும் நீக்காமலும் பாடியது நன்றாக இருந்தது.

அடுத்ததாக, நல்ல சவுக்கமன காலப்ரமாணத்தில் நீலாம்பரியை இழைத்து இழைத்து ‘அம்ப நீலாயதாக்ஷி’ பாடினார். அவ்வப்போது விழுந்த ஜாரு பிரயோகங்கள் சொக்க வைத்தன. பிரதான ராகத்துக்கு முன் விறுவிறுப்பான பாடல் ஒன்றைப் பாடியிருக்கலாம். கிருஷ்ணா தோடியை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டார்.  டி.என்.எஸ் தன் முப்பதாவது வயதில் எப்படிப் பாடியிருப்பார் என்று இன்று கிருஷ்ணா பாடிய தோடியைக் கேட்டிருந்தால் உணரக் கூடும். இதை நான் சொல்லவில்லை, ஆலாபனை முடிந்ததும் உமையாள்புரம் சிவராமன் கூறினார். ஆலாபனையில் அசைந்தாடும் கமகங்களையும், அசையாத சுத்த

ஸ்வரங்களையும் அழகாக கோத்து அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக தோடியின் தைவதத்தைச் சுற்றிச் சுற்றிப் பாடியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. தோடியின் போது கிருஷ்ணாவின் குரல் அற்புதமான நிலையில் இருந்ததால், ரவை சங்கதிகள் எல்லாம் அநாயாசமாய் விழுந்தன. கிருஹ பேதம் செய்து, மோஹன கல்யாணியை கோடி காட்டிவிட்டு மீண்டும் தோடிக்கு வந்தார். ஷட்ஜ பஞ்சம வர்ஜமாய் பிருகா மழை பொழிந்த போது, நிஜமாகவே மனதாரக் கைதட்டினேன்.

பட்டம்மாள் ஸ்பெஷல் ‘தாசுகோவ’ பாடி, ‘சௌமித்ரி தியாகராஜு’-வில் நிரவலும் ஸ்வரங்களும் பாடினார். மிஸ்ர ஜம்பை தாள அமைப்பைக்குள் பல்வேறு சிக்கலான அமைப்புகளை நிர்வகித்த போதும் தோடியின் ராக பாவம் கெடாமல் பாடியது அற்புதம். கிருஷ்னாவின் அப்பா ஜூனியராய் இசைத் துறையில் இருந்த காலத்துக்கு பல காலம் முன்னரே பிரபல வித்வானாகிவிட்ட சிவராமன், இன்றும் உற்சாகமாய் வாசித்ததைக் காண நன்றாக இருந்தது. இன்று அவருக்கே அவரது மிருதங்கத்தின் மேல் திருப்தி இல்லை. பாதி கச்சேரிக்கு மேல் இரண்டாவது மிருதங்தங்கதில் வாசித்தார். தனியில், சிவராமன் வாசித்த மோராவை சுப்ரமணியன் வாசிக்க முடியாமல் தவித்த போது, “இன்னும் கொஞ்சம்தான் வந்துடும். மறுபடியும் வாசி”, என்று சொல்லி, தானும் பாதி வழியில் உதவி கடம் வித்வானுக்குப் பாடம் நடத்தினார். ராகமாலிகை விருத்தமும், ஹரிகேசநல்லூரின் ஹம்சானந்தி தில்லானாவும், சிந்து பைரவியில், ஐயப்பன் மேல் ஒரு தமிழ்ப் பாடலும் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார் கிருஷ்ணா.

9.30 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி, 11.30-க்கே முடிந்துவிட்டது. சபையின் அடுத்த கச்சேரி 2.00 மணிக்குத்தான் என்ற போதும், கச்சேரியை இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்க வேண்டாம். இன்னும் அரை மணி நிச்சயம் பாடியிருக்கலாம். குரல் நன்றாக பதம் அடைந்த சற்றைக்கெல்லாம் கச்சேரி முடிந்துவிட்டதுதான் கொஞ்சம் வருத்தம். பாடுவதற்கு சிரமமான சேஷகோபாலன் பாணி சங்கீதம் அவரோடு முடிந்துவிடாது. நிச்சயம் வாழையடி வாழையாய்த் தொடரும் என்பதை இன்றைய கச்சேர்யினைக் கேட்ட அனைவரும் ஒப்புக் கொள்வர்.

Verdict: Great concert. Brilliant thodi. Could have sung for at least another 30 mins.

Read Full Post »

Trichur Brothers (Srikrishna Mohan, Ramkumar Mohan), Trchur Mohan, D.V.Venkatasubramanian @ Brahma Gana Sabha

சீஸனில் நடக்கும் கச்சேரிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், ப்ரைம் ஸ்லாட் இல்லாத கச்சேரிகள் நடக்கும் சமயத்தில், பாட்டு கேட்பவர்களை விட பாடுபவர்கள் அதிகம் இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இள பாடகர்களுக்கு இவை பெரும் வாய்ப்புகளாய் அமைகின்றன. என்னைப் போன்ற கர்ம சிரத்தையாய் கேட்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். எங்கே போவது என்று குழப்பம் தீராத ஒன்று.

நான் இதுவரை கேட்காதவர்கள் பலர் இருப்பதால், இளம் பாடகர்களின் கச்சேரிகளை யாரேனும் பரிந்துரைக்காமல் செல்வதில்லை. எப்படியும், நன்றாகப் பாடுவார் என்று நான் நினைப்பவரின் கச்சேரி, எங்கேயாவது இருக்கும் போது, பாடகரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம்.

அந்த வகையில், இத்தனை நாள் திருச்சூர் சகோதரர்களின் கச்சேரியை கேட்காமல் இருந்தேன். சில நாட்கள் முன் சிமுலேஷன் ஒரு பின்னூட்டத்தில் இவர்களைப் பற்றி சொல்லியிருந்ததாலும், இவர்கள் கச்சேரி செய்த அரங்கில் இவர்களுக்குப் பிறகு காயத்ரி வீணை வாசித்ததாலும் இன்று பிரம்ம கான சபா சென்றேன்.

காயத்ரியின் வாசிப்பைப் பற்றி சொல்ல எனக்குக் கொஞ்சம் கூட அருகதை கிடையாது. வீணைக்கு வாணி எல்லாம் உல்லாலகாட்டிக்கு. வீணை என்றால் அது காயத்ரிதான் என்பது என் துணிபு. பந்துவராளி, ஆரபி, பிருந்தாவன சாரங்கா, தோடி, கோசலம் ஆகிய ராக தேவதைகள் புண்ணியம் செய்தவை. அதனால்தான், இன்று காய்த்ரியால் விஸ்தாரமாய் வாசிக்கப் பெற்றன. இத்துடன் அந்தக் கச்சேரியைப் பற்றி நிறுத்திக் கொள்கிறேன்.

இன்று திருச்சூர் சகோதரர்களுக்கு நாகை ஸ்ரீராம் வயலின் வாசிப்பதாய் இருந்ததாம். ஏதோ காரணத்தினால் அவர் வாசிக்க முடியாததால், கடைசி நிமிஷத்தில் கண்டதேவி விஜயராகவன் வாசிக்க ஒப்புக் கொண்டாராம். கச்சேரி தொடங்கும் முன், சகோதரர்களில் மூத்தவராய் தெரிந்தவர் இந்த விஷயத்தைக் கூறி, விஜயராகவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இருவருக்கும் நல்ல சாரீரம். மூத்தவரின் குரலில் நல்ல கனம். இளையவர் குரல் comparitively சன்னமாய் ஒலிக்கிறது. இருவரின் குரலும், மந்திர ஸ்தாயி மத்ய்மத்தை சுலபமாகத் தொடும் போதும் கூட, நல்ல கனத்துடன் ஒலிக்கிறது.

வர்ணங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கமாஸில் “மாதே”, பைரவியில் “விரிபோனி”. இன்று கச்சேரி கமாஸ் வர்ணத்துடன் தொடங்கியது. முக்தாயி ஸ்வரத்தில், ஸ்வரத்தை முதல் காலத்திலும், சொற்கட்டுகளை திஸ்ரத்திலும், சாஹித்யத்தை இரண்டாம் காலத்திலும் பாடியது அற்புதமாய் அமைந்தது.

வர்ணத்தைத் தொடர்ந்து நடநாராயணியில் “மஹா கணபதே” பாடினர். இந்தக் கிருதியை வாத்யத்தில்தான் கேட்டுள்ளேன். நான் கேட்ட வரையில், இந்தக் கிருதியின் காலப்ரமாணம் துரிதமாகவே இருந்தது. இன்று, துரிதமும் இல்லாமல், ஒரேடியாய் சவுக்கமுமாய் இல்லாமல், இவர்கள் பாடிய கால்ப்ரமாணம்,  “இந்த அழகையா இவ்வளவு நாள் ரசிக்காமல் இருந்தோம்”, என்று எண்ண வைத்தது.

அடுத்து பாடிய பந்துவராளி sketch-ஐ தொடர்ந்து, “பரிபாலய” என்ற சுவாதி திருநாள் கிருதி பாடி, சரனத்தில் நிரவல் செய்தனர். நிரவல் விறு விறுப்பாக அமைந்து கச்சேரியை களை கட்ட வைத்தது. வயலினில் விஜயராகவன், பக்க பலமாய் விளங்கினார். அவரது மந்திர ஸ்தாயியும் கேட்க இனிமையாய் இருந்தது.

கச்சேரியின் முதல் பிரதான ராகமாக வசந்தாவை எடுத்து ஆலாபனை செய்தனர். ஆலாபனை வெகு நன்றாக அமைந்தது. இருவரின் குரலும் சர்க்கரை கரைச்சலாக இருக்கிறது. அகாரத்தில் கேட்க வெகு அற்புதமாய் இருக்கிறது. தார பஞ்சமத்தை அநாயாசமாக தொட்டுவிடும் சாரீரத்தை வைத்துக் கொண்டு, தார ஷட்ஜத்தில் நின்றபடி ‘ம்-காரத்தில்’ சஞ்சாரங்கள் தேவையா? வாயைத் திறந்து பாடினால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்குமே. இது ஒரு குறை அல்ல. அவர்கள் பாடியது அற்புதமாகத்தான் இருந்தது. இன்னும் கூட நன்றாக இருக்க வாய்ப்புகள் இருந்தனவோ என்று தோன்றியது. இன்னும் சில விஷயங்கள் கூட நெருடின. அவை, இன்று பாடப்பட்ட எல்லா ராகங்களுக்கும் பொருந்தும் என்பதால் கடைசியில் சொல்கிறேன்.

“ஹரிஹர புத்ரம்” என்ற தீட்சிதரின் கிருதி வசந்தாவின் இமயம். சவுக்க காலத்தில், கண்ட ஏகத்தில், கம்பீரமாய் மிளிரும் கிருதியை அற்புதமாய் பாடினர். இது போன்ற கிருதிகளுக்கு, நிட்ரவல் ஸ்வரம் எல்லாம் தேவையே இல்லை. கிருதியை ஒழுங்காகப் பாடினாலே ராக பாவம் முழுமையாய் வந்துவிடும். இதனை உணர்ந்து, அளவோடு நிறுத்திக் கொண்ட சகோதரர்களுக்கு சபாஷ்!

ஜி.என்.பி பல கிருதிகளை கச்சேரி மேடையில் புழங்கச் செய்துள்ளார். அவற்றை, அவர் பாடிய விதத்தில் கேட்கத்தான் எனக்கு விருப்பம். ஒரு கிருதியை மட்டும் அவர் பாடிய விதத்தில் பாடாமல் இருந்தால் நன்றாயிருக்குமே என்று எனக்குத் தோன்றும். பூர்ணசந்திரிகாவில் “தெலிஸி ராம”-தான் அந்த கிருதி.  “ராமா என்றால் பரப்பிரம்மம் என்றும் பொருள், ஆனால் சிலர், பெண் என்றொரு அர்த்தமும் அதற்கு இருப்பதாகக் கூறுவர். அவர் காமாந்தகராய் இருந்தாலன்றி அவருக்கு இந்த அர்த்தம் தோன்றாது”, என்று கடுமையான சாடல் நிறைந்த பாடல். அதை அதி துரிதத்தில் சிட்டை ஸ்வரம் எல்லாம் போட்டுப் பாடும் போது, ஏதோ சந்தோஷமான பாடல் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தக் காரணத்தால், இன்று திருச்சூர் சகோதரர்கள், இந்தப் பாடலை துரித காலத்தில் பாடியதை என்னால் அதிகம் ரசிக்க முடியவில்லை. (அது அவர்கள் குற்றமல்ல.)

பொதுவாக, கச்சேரிகளில் சுத்த மத்யம ராகங்கள் ஒலிக்கும் அளவுக்கு பிரதி மத்யம ராகங்கள் ஒலிப்பதில்லை. இன்று விரிவாகப் பாடப்பட்ட ராகங்கள் முன்றுள், இரண்டு பிரதி மத்யம ராகங்களாக அமைந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. 

கரணம் தப்பினால் மரணம் என்ற வகை ராகம் சுசரித்ரா. சுத்த ஸ்வரங்களை நன்றாக சாதகம் செய்திருந்தால்தான், இது போன்ற ராகங்களை கையாள முடியும். சிலர், இது போன்ற ராகங்களை கஷ்டப் பட்டு பாடுவார்கள். அதைக் கேட்பதும் கஷ்டமாகவே இருக்கும். இன்று இவர்கள், தோடி, கல்யாணி, பைரவி பாடுவது போல, பிரதான ராகமாக சுசரித்ராவை  அநாயசமாக ஆலாபனை செய்தனர்.  அரைத்த மாவையே அரைக்காமல், புதியதாய் பாட முயன்றதற்கே இவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இருவரும் சேர்ந்து 16 நிமிடங்கள் ஆலாபனை செய்தனர்.அவர்கள் பாடியதை எல்லாம் பத்து நிமிடத்துக்குள் அடக்கி, அற்புதமாய் வாசித்தார் விஜயராகவன். சுசரித்ராவை ஆரம்பித்ததும், “வேலும் மயிலுமே” பாடப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆலாபனையைத் தொடர்ந்து, தானம் பாட ஆரம்பித்ததும், சற்றே வியந்தேன்.  தானத்தை, பெயருக்குப் பாடாமல், மத்யம காலத்தில், ராகம் முழுமையாய் வெளிப்படும் படி பாடியது நிறைவாய் இருந்தது. ஆனால் தானம் பாடி முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது.

“ராமா ராகவா பாஹிமாம். சுசரித்ர பட்டாபி”, என்ற ஆதி தாள பல்லவி. (2 களை, சமத்தில் எடுப்பு). நேரக் குறைச்சலால் நிரவல் செய்யாமல் நேரே ஸ்வரத்துக்குத் தாவிவிட்டனர். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், புரிந்து கொள்ள முடிந்தது. நிரவல் செய்யவே நேரம் இல்லாத போது, ஸ்வரப்ரஸ்தாரத்தை சுசரித்ராவிலேயே நிறைய பாடி இருக்கலாம். ஒரு ராகத்தை வெகு நேரம் பாடினால் அலுப்பு ஏற்படும் என்பதனால், ராகமாலிகை ஸ்வரங்கள் பாடும் பழக்கம் ஏற்பட்டது. சுசரித்ராவே முழுமையாகப் பாட நேரமில்லாத போதும், ஆனந்த பைரவி, வலஜி, ரேவதி போன்ற ராகங்களில் ராகமாலிகை தேவைதானா, என்ற கேள்வி எழுந்தது. அதுவும் ஆனந்த பைரவியின் mood-ம் சுசரித்ராவின் mood-ம் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. இதனால், நல்ல கனவு, திடீர் என்று கலைந்த உணர்வு ஏற்பட்டது.

கடைசியில் வைத்த கோர்வையில் ராக ஆரோகண, அவரோகணம் வரும்படியாக வைத்தது, நன்றாக இருந்தது. இது போன்ற அரிய ராகங்கள், ரசிகர் மனதில் புரிய ஏதுவாயிருக்கும். எனக்குப் பக்கத்தில் இருந்தவருக்கும், இந்த கோர்வையை கேட்டவுடன்தான், இது மேளகர்த்தா ராகம் என்று விளங்கியது.

ஸ்வரங்களுக்குப் பின், பல்லவியை திரிகாலம் செய்து, திஸ்ரமும் செய்தனர். கச்சேரியின் கடைசிக்குத் தனி தள்ளப்பட்டதால், crisp-ஆக அமைந்தது. மிருதங்கம் வாசித்தவர் சகோதரர்களின் தந்தை திருச்சூர் மோகன் என்பதால், வருத்தப்பட்டிருக்க மாட்டார். கடம் வாசித்தவர் டி.வி.வெங்கடசுப்ரமணியம். இருவரும் திஸ்ர நடையில் கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, சௌக்யமாக வாசித்தனர். தனியில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை என்றாலும், பாடல்களுக்கு நல்ல போஷாக்கு அளிக்கும் வகையில் வாசித்தனர்.

சரி, முன்னால் சொன்ன நெருடல்களுக்கு வருவோம்.

இரட்டையர்கள் கச்சேரிகளில், பொதுவாய், ஒருவர் ஒரு ராகத்தையும், மற்றவர் இன்னொரு ராகத்தையும் ஆலாபனை செய்வர். அன்றைய ஆலத்தூரிலிருந்து, இன்றைய லால்குடி siblings வரை இதுதான் நடைமுறை. இல்லாவிடில், பாதி ராகத்தை ஒருவர் நிர்வகிக்க, மீதியை மற்றவர் நிர்வாகம் செய்வார். திருச்சூர் சகோதரர்கள், நிமடத்துக்கு ஒரு தரம் மாறி மாறிப் பாடுகின்றனர். பெரியவரின் குரலில் அழகாக உருவாகும் வடிவம், முழுமை பெறும் முன்னரே அடுத்தவரின் குரல் கேட்கும் போது, கொஞ்சம் தொடர்ச்சி அடி வாங்குகிறது. உதாரணமாக, ஆலாபனையின் ஒரு இடத்தில் ஒரு வர்ஜ பிரயோகத்தை ஒருவர் ஆரம்பிக்க,அது முழுமையாய்ப் பாடு முன்னரே மற்றவர் வேறொரு பிரயோகத்தை ஆரம்பித்துவிட்டார். சில இடங்களில், இருவருமே ராகத்தின் ஒரே மாதிரியான பிடிகளை, அவரவர் பாணியில் அடுத்தடுத்து பாடுகின்றனர். இது போன்ற ஆலாபனை ஜுகல்பந்திகளுக்குப் பொருத்தமாக இருக்கும். அங்கு ‘sawal jawab’ வகையிலான விரிவாக்கங்களை எதிர்பார்த்துப் போவோம். ஆதலால், ஒருவர் பாடிய இடத்தை, அடுத்தவரும் பாடினாலும் அலுப்பு ஏற்படுவதில்லை. ஒருவர் பாடினால் 10 நிமிடத்தில் முடியும் ஆலாபனை, இருவரும் பாடுவதால் 15 நிமிடங்களுக்கு  நீட்டிக்கப் படுகிறது.

இன்னொரு விஷயம். ஆலாபனையின் ஆரம்பத்தில் நிதானமாகப் பாடினாலும், சில இடங்களில் கற்பனையில் உதிப்பதை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்கிற வேகம் தென்பட்டது. மைசூர் பாகு செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பாகாக்கி ஊற்றினால் மாடும் சாப்பிட முடியாது. உலரும் முன், அதை துண்டங்களாக்க வேண்டும். ஒரே பாகு என்றாலும், துண்டங்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி வேண்டும். அளவும் சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் பார்க்கவும், சுவைக்கவும் ஏற்றதாய் இருக்கும். இது ராகங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, இருவரில் மூத்தவர் இதை நன்குணர வேண்டும். ஆலாபனையில் பல அழகிய கோவைகளுக்கு இடையே கொஞ்சம் நிறுத்தங்கள் (pause) கொடுத்துப் பாடினால், ராகத்தின் விரிவாக்கத்தை ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் இருக்கும். இல்லையெனில்,  ஒரு சங்கதியை ரசிப்பதற்குள், மூன்று சங்கதிகள் கடந்து சென்றுவிடும்.

இவை எல்லாம் கொஞ்சம் நெருடினாலும், கச்சேரி ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது. சீஸனில் நிச்சயம் கேட்க வேண்டும் என்று நான் வைத்திருக்கும் பட்டியலில், இவர்களுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு.

Read Full Post »

Suryaprakash, M.A.Sundaresan, Srimushnam Raja Rao, E.M.Subramaniam @ Parthasarathy Sami Sabha

சூர்ய பிரகாஷை ஒவ்வொரு சீஸனிலும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன். நல்ல குரல். தெளிவான உச்சரிப்பு. கச்சேரியைக் கேட்டு பாடலை எழுதிக் கொள்ளலாம் என்று விஜய் சிவாவுக்கு அடுத்து, இவரைத்தான் சொல்ல வேண்டும். விரிவான பாடாந்திரம், என்று குறிப்பிடும் படியான அம்சங்கள் பல இவர் பாட்டில் உள்ளன.

பார்த்தசாரதி சபாவில் இன்று அவருக்கு நல்ல செட். எம்.ஏ.சுந்தரேசன் பாட்டை போஷாக்கு செய்வதில் வல்லவர். ராஜா ராவின் வாசிப்பு, சில நாட்கள் இடியாய் முழங்கும், சில நாட்கள் தென்றலாய்த் தவழும்.

இன்று தென்றல் பக்கம் தாயம்.

கச்சேரியை பேகடா வர்ணத்தில் தொடங்கினார் சூர்யபிரகாஷ். வர்ணம் முடிவதற்குள் அவர் குரல் நல்ல பதத்தை அடைந்துவிட்டது.  ‘சிவலோக நாதனை’, என்று கோபால கிருஷ்ண பாரதி கிருதியைத் தொடங்கிய போதே கச்சேரி களை கட்டிவிட்டது. ரவை சங்கதிகள் இன்று அவர் நினைத்த வண்ணம் விழுந்தன.  ‘மானிட ஜென்மம் கொடுத்தார்’ என்ற இடத்தில் பாடிய ஸவரங்கள் வெகு அழகு. ஸூர்யபிரகாஷ் பாடியதை அப்படியே எம்.ஏ.சுந்தரேசன் வாசிக்கவில்லை. பாடகர் பாடியதற்கு complimentary-ஆக வாசித்தார். அது பாடகரரின் கற்பனையை இன்னும் தூண்டி விடும் வண்ணம் அமைந்தது. மாயாமாளவகௌளையைத்

தொடர்ந்து, ‘மறுகேலரா’ கிருதி பாடினார். ஜெயந்தஸ்ரீ-யின் குழைவுகள் அனைத்தையும் அற்புதமாய் சூர்யபிரகாஷின் குரல் வெளிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, sub-main-ஆக நாட்டைக்குறிஞ்சியை எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். நாட்டைக்குறிஞ்சி மிகவும் ரக்தியான ராகம். இந்த ராகத்தின் ஸ்வரங்கள், நல்ல காதலர்களுக்கு ஒப்பு. சில ஸ்வரங்கள் ஒன்றொடு ஒன்று பிணைந்திருக்கும். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வதற்குள் ஏகப்பட்டு குழைவுகளைக் கடக்க வேண்டியிருக்கும். தூறல், பெரு மழை, புயல் என்று இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் அற்புத ராகம் நாட்டைக்குறிஞ்சி. அதன் பாவத்தை சூர்யபிரகாஷ் பாடிய போது நன்குணர முடிந்தாலும், சுந்தரேசன் வாசிக்கும் போது, வேறொரு உலகத்துக்கே சென்றுவிட்டேன்.

குறிப்பாக அவரது மந்த்ர ஸ்தாயி தந்தியில் பாரூர் வழிக்கே உரிய வகையில் அவர் வாசித்த பிரயோகங்கள் நெஞ்சை அள்ளின. ஆலாபனையைத் தொடர்ந்து வந்த பட்டணம் சுப்ரமண்ய ஐயரின் (கச்சேரி முடிந்ததும் பாடகரைக் கேட்டு வாக்கேயக்காரர் பெயரை அறிந்து கொண்டேன்)  “நீது மூர்த்தினி” கிருதியை இன்றுதான் முதன் முறையாய் கேட்கிறேன்.  “மந்தர கிரிதர” என்ற இடத்தில் அளவாய் ஸ்வரம் பாடினார் சூர்யபிரகாஷ். குமுக்கிக்களை அள்ளி வீசி, டேக்கா சொற்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜா ராவின் மிருதங்க வாசிப்பு, கல்பனை ஸ்வரங்களுக்கு தனி மெருகைச் சேர்த்தது.

அடுத்த ராகம் தொடங்கியதும், சுபபந்துவராளியா, ஷட்விதமார்கினியா என்று குழம்பி, கடைசியில் முதல் பாதி சுபபந்துவராளி, ரெண்டாவது பாதி கல்யாணி, என்று முடிவுக்கு வந்தேன். ஆனால், ராகம் பேர் தெரியவில்லை.  இறுதியில் ஸுர்யபிரகாஷே ராகம் பேரைச் சொன்னார்.  ஜோதிஸ்வரூபிணி, ரிஷபப்ரியா என்று அழகான, ஆனால் அதிகம் கையாளப்படாத மேளகர்த்தா ராகங்கள் போல இதுவும் ஒன்று என்று மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் “மஹாராஜ ராஜேஸ்வரி” கிருதியை இன்று கேட்ட போது விளங்கியது. உருக்கமும், கம்பீரமும் கலந்த ராகத்தை நிரவல் செய்து முடித்த போது, ஸ்வரமும் பாடியிருக்கக் கூடாதா என்று தோன்றியது. (ராகம் பெயரை மறந்து போய் அல்ல, வேண்டுமென்றேதான் கூறவில்லை. இவ்வளவு clue இருக்கிறதே. நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்:-))

பிரதான ராகமாக பைரவியைப் பாடும் முன், அனுபல்லவியில் தொடங்கி சிவனின் சங்கராபரண கிருதியான “மகாலஷ்மி” பாடினார். கல்யாணியை கூட filler-ஆக கேட்டு இருக்கிறேன். இதுதான் முதல் முறையாக சங்கராபரணத்தை இப்படிக் கேட்கிறேன். அப்படி ஒன்றும் மோசமாய் இல்லை.

பிரதான ராகமான பைரவியை 8 நிமிடங்கள் ஆலாபனை செய்தார் சூர்யபிரகாஷ். நிறைய அற்புதமான இடங்கள் கோடியிட்டுக் காட்டப்பட்டாலும், முழுமையாகப் பாடப்படாதது போல் தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு நிதானமாய் பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. இரண்டு மணி நேர கச்சேரியில் இரண்டு ராகம் பெரியதாய் பாடி, ராகம் தானம் பல்லவி வேறு பாடியதால், பைரவியின் முழு பரிமாணங்களும் வெளி வராமல் போயின. ராமன் சீதையைக் கண்டு பாடும், “யாரோ இவர் யாரோ” பாடினார். “சந்திர பிம்ப முக மலராலே” என்ற இடத்தில் நிரவல் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், ஸ்வரத்துக்குத் தாவிவிட்டார் சூர்யபிரகாஷ்.

ஸ்வரத்தைத் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் வாசித்தனர். கரடு முரடான கணக்கு வழக்குக்குள் செல்லாமல், சௌக்யமாய் வாசித்தனர் இருவரும். திஸ்ர நடை அமைத்து, திஸ்ரத்தில் சதுஸ்ரம் செய்து, அதை மேல் காலத்தில் வாசித்தது சிறப்பாக அமைந்தது. கடைசியில், சமத்தில் ஆரம்பித்து, இடத்தில் முடியுமாறு அமைந்திருந்த கோர்வையும் சிறப்பாக இருந்தது.

கச்சேரி முடிய அரை மணி இருந்த போது, ஹம்சானந்தியை ராகம் தானம் பல்லவிக்கான ராகமாய் எடுத்துக் கொண்டார் சூரி. சோகம் மெலிதாய் இழையோடும் ராகத்தில், எக்கச்சக்கமாய் பிருகாக்கள் போட்டு பாடியது கொஞ்சம் அவசர கதியாய் பாடியது போலத்தான் இருந்தது.  ‘ட ட டாஆ டா’ என்றெல்லாம் பாடிய தானம் கொஞ்சம் காமடியாகத்தான் இருந்தது. ஆலாபனையும், தானத்தையும் கேட்ட போது, பைரவியை இன்னும் நிறைவாகப் பாடியிருக்கலாமே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. “ஸ்வர லய பாவ ராக சங்கமம் – தக்ஷிண உத்தர”, என்று வட நாட்டு இசைக்கும் நம் இசைக்கும் பாலம் அமைக்கும் நோக்கோடு அமைக்கப்பெற்ற பல்லவி. கண்ட திருபுடையில், ஒன்றேகால் இடம் தள்ளி எடுப்பு. மேல் காலம், திஸ்ரம் போன்ற சாகசங்கள் சில ச்மயம் சூர்யபிரகாஷை இடரியும் விட்டன. ராகமாலிகையாய் பாடிய தர்பார் நன்றாக இருந்தது. பெஹாகில் ஸ்வரம் பாடும் போது, நமக்கு அது வட இந்திய ராகம் என்று புரியாமல் போய் விடுமோ என்று பயந்து, “உத்தர சங்கீதம்” என்ற சொற்களையும் இடையில் பாடி, ஸ்வரத்தை முடித்தது, அவ்வளவு நன்றாக அமையவில்லை.

மொத்தத்தில், கச்சேரியின் இந்தப் பகுதி உத்திரத்துக்கு லாபமாகவில்லை. தக்ஷிணத்துக்குத்தான் நஷ்டம்
கல்யாண வசந்தத்தில்,   ‘இன்று வருவாரோ’ வெகு அழகாக அமைந்திருந்தது. இதுவும், நான் முதன் முறையாய் கேட்கும் பாடல். (யாருடையது?)

கச்சேரியை முடிக்கும் முன் பாடிய “எப்ப வருவாரோ” வழக்கமாய் எல்லோரும் பாடுவது போலத்தான் இருந்தது. அதாவது, “எப்ப வரு (ஒரு மூச்சிழுப்பு) வாரோ (war-ஓ?)”,  என்றே பாடினார்:-)  சண்டையை பார்க்க பயங்கர ஆவலில் இருப்பது போல, ‘வாரோ’-வில் எக்கச்செக்க சங்கதிகள்:-)

Verdict: Very Good concert. Could have easily been an excellent concert.

Read Full Post »

ஒவ்வொரு சீசனிலும் 35-40 கச்சேரிகள் கேட்டுவிடுவேன். அவற்றில் சரி பாதியாவது வளரும் கலைஞர்களின் கச்சேரிகளாக இருக்கும். அதிக எதிர்பார்ப்பும், கூட்டத்துக்குப் பாட வேண்டிய கட்டாயம் இல்லாத நிலையில், நிதானமாக, அழுத்தமாகப் பாடுவதில் இவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. 2 மணி நேர கச்சேரியில் 4 பாடல்கள் பாடினாலும் யாரும் இவர்களை குற்றம் சொல்லப் போவதில்லை.

இந்த வகையில், நான் இந்த சீஸனில் கேட்கப் போகும் இளைய தலைமுறையைப் பற்றி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். அபிஷேக் ரகுராம், டி.என்.எஸ்.கிருஷ்ணா, சிக்கல் குருசரண் போன்ற, இளைஞர்களாக இருந்தாலும், பிரபலம் ஆகிவிட்டவர்களை நீக்கி, மற்றவர்களை  இங்கு ப்ரோஃபைல் செய்வதாக எண்ணம்.

முதலாமவர்: ராமகிருஷ்ணன் மூர்த்தி

இவரை நான் ஒரு முறைதான் கேட்டுள்ளேன். அந்த அனுபவத்துக்கு முன்னும், பின்னும், பலர் இவரது இசையை சிலாகித்துக் கூறக் கேட்டிருக்கிறேன்.

நன்னு என்கிற சுப்ரமணியனின் மிருதங்க அரங்கேற்ற கச்சேரியில் பாடிய போது கேட்டேன். குருவாயூர் துரை, செங்கல்பட்டு ரங்கநாதன், பி.எஸ்.நாராயணசாமி, விஜய் சிவா, சஷாங்க், மதராஸ் கண்ணன் என்று எண்ணற்ற வித்வான்கள் கூடியிருந்த சபையில், அரங்கேற்ற கச்சேரி என்று அரை நிமிஷம் கூட தோன்றா வண்ணம் அமைந்த கச்சேரி அது.

அன்று ராமகிருஷ்ணன் பாடிய காம்போதி வெகு அற்புதம். இனிமையான குரல். ராகம் பாடும் போது அசாத்தியமான அழுத்தம். காலப்ரமாணத்தில் நல்ல பிடிப்பு. நான் கேட்ட அன்று, ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ கிருதியை பிரதானமாகப் பாடினார். ‘மனஸிஜ கோடி கோடி’ என்ற வரியை இரண்டு காலங்களில் பாடி, திஸ்ரமும் செய்தார். வாஸவாதியில் நிரவல். காம்போதியின் காந்தாரத்தை மையமாக வைத்து, அவர் பின்னிய அழகிய கோவைகள் இன்னும் காதுகளுள். ஸ்வரம் பாடும் போது, அவ்வப்போது ‘சகல தேவ’, ‘பூஸுராதி’ போன்ற இடங்களுக்கும் பாடியது, லா.ச.ரா பாஷையில் சொன்னால் “பஹு ருசி”.

இன்னும் சில நாட்களில் இருபது வயதுக்குள் நுழையப் போகும் இவ்விளைஞர், காலிஃபோர்னியாவில் (இர்வைன்) பொறியியல் படிப்பு படிக்கிறார். பிறந்தது இந்தியாவில் என்றாலும், தந்தையின் பணி காரணமாக 3 வயதிலிருந்து அமெரிக்க வாசம்.

டெலிஃபோனில் அவரைப் பிடித்தேன். நல்ல தமிழில் தெளிவாகப் பேசுகிறார். “எனக்கு ஆறரை வயதாகும் போது, திருமதி. பத்மா குட்டியிடம் இசை பயில ஆரம்பித்தேன். பாட்டு விஷயத்தில் அவர் ரொம்பவும் கறாராக இருப்பார். அதனால், முதலில் நான் கொஞ்சம் பயந்தேன். என் அம்மாதான், ஒவ்வொரு நாளும் என்னுடன் உட்கார்ந்து, என்னை சாதகம் செய்ய வைத்து, அடுத்த கிளாசில் போய் திட்டு வாங்கிக் கொள்ளாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார். நாட்பட நாட்பட, என்னை இசை இழுத்துக் கொண்டது. திருமது பத்மா குட்டியிடம் பல உருப்படிகள் பாடம் செய்தேன். எனக்கு பதினொரு வயதாகும் போது டில்லி சுந்தரராஜனிடம் கற்க ஆரம்பித்தேன். அப்போது அவர் LA-வில் சில காலம் தங்கி இருந்தார். அவரது வயலின் வித்வத் எல்லோரும் அறிந்ததே. ஆனால், அவர் அற்புதமாகப் பாடக்கூடியவர் என்று பலர் அறிந்திருக்க மாட்டார்கள். முதல் முறை அவர் பாடிக் கேட்டதும் I was bowled over. தொடர்ந்து அவரிடம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கற்க ஆரம்பித்தேன்.”, என்றார்.

தனது ஒன்பதாவது வயதிலிருந்து வருடம் தவறாமல் மூன்று மாதம் இந்தியாவில் சங்கீத சிட்சை. பதிமூன்று வயதிலிருந்து கச்சேரிகள் செய்கிறாராம். 3-4 வருடங்களாக டிசம்பர் ஜூனியர் ஸ்லாட்டில் நிறைய கச்சேரிகள் செய்துள்ளார். இந்த வருடம் அகாடமியில் செய்த கச்சேரியில் பைரவி அமர்க்களமாய் இருந்தது என்ற கேட்டவர்கள் கூறுகின்றனர். ஆலத்தூர், செம்மங்குடி, டி.எம்.டி, பிருந்தா-முக்தா, ஜி.என்.பி என்று பலரின் பாடலை விரும்பிக் கேட்டாலும்,  “ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையில் மேல் தனி பிரியம். அவர் பாட்டில் சங்கீதத்தின் எல்லா அம்சங்களும் சரியான கலவையில் இருப்பதாக எனக்குத் தோன்றும்.”, என்கிறார்.

கிளீவ்லேண்ட் போட்டியில் 2003-ல் முதல் இடம். அதற்குப் பரிசாய் 2005-ல் முழு நீளக் கச்சேரி செய்து, நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2007-ல் மியூசிக் அகாடமி போட்டிகளில், ஐந்து பரிசுகளை அள்ளியுள்ளார். 2008-ல் அகாடமியின் Spirit of Youth festival-ல் சிறந்த பாடகராகத் தேர்வு பெற்றிருக்கிறார். முசிறி அறக்கட்டளை விருதும், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை விருதும் இவரை அலங்கரிக்கின்றன.

பாட்டையும் படிப்பையும் தவிர, Basketball, Tennis பார்க்க ஆர்வமாம்.

இன்னும் இரண்டு வருடம் படிப்பு முடிந்தால் அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று பலர் கூறும் வேளையில்,  “படிப்பு முடிந்ததும், இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்துவிடுவேன்” என்கிறார் ராமகிருஷ்ணன் மூர்த்தி. இசைத் துறையில் நன்றாகக் காலூன்றியதும், முழு நேரப் பாடகனாவதுதான் நெடுங் காலத் திட்டமாம். (long term plan என்பதை நெடுங்காலத் திட்டம் என்று தமிழ்ப் படுத்தலாமா?)

சிறு வயதில் தவறாமல் சாதகம் செய்ய வைப்பது, வருடம் தவறாமல் இந்தியாவுக்கு அழைத்து வருவது, பாடுவதைத் தொழிலாகக் கொள்ளும் எண்ணத்தைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பது, என்று ராமகிருஷ்ணன் மூர்த்தியின் பெற்றோர்கள் ஆற்றியிருக்கும் பணி அளப்பெரியது. “I must have been really blessed to have such wonderful parents”, என்கிறார் ராம் (இதுவும் நானில்லை – அவன்;-)). அவரிடம் பேசி முடிக்கும் போது,  “சீஸனில் meet பண்ணலாம் ”, என்றேன்.  “நிச்சயம் சந்திக்கலாம்.”, என்று தெள்ளு தமிழில் பதிலுரைத்தார்.

அஸ்திவாரம் பலமாக அமைந்திருக்கிறது. எல்லாம் சரியாகச் சென்றால், நல்லதொரு நெடும் கட்டிடம் உருவாவது உறுதி.

Read Full Post »

Season Teaser

இந்த சீஸன் எனக்கு 19-ம் தேதி ஆரம்பிக்கிறதென்றாலும். போன வார இறுதியை சென்னையில் கழித்தேன்.

ஜி.என்.பி நூற்றாண்டு மலர் தயாரிக்கும் வேலையே வார இறுதியை எடுத்துக் கொண்டு விட்டது. கையில் ஒன்றுமே இல்லாமல் தொடங்கி, சில மாதம் விடாமல் பலரைத் துரத்தி, கிடைத்தவற்றை சீர்படுத்தித் திரும்பிப் பார்த்தால், ஐம்பது கட்டுரைகளுக்கு மேல் கைவசம்! சரி, மலர் கதை விவரமாக வேறொரு பதிவில்.

கிடைத்த சொல்ப சமயதல்லி (பெங்களூரு வாசம்) கால் கச்சேரியைக் (சனிக் கிழமை) கேட்கவும், ஓர் அற்புதமான ஓவியக் கண்காட்சியைப் (ஞாயிறு) பார்க்கவும் முடிந்தது. மணியம் செல்வனின் குடும்பத்தினரின் ஓவியங்கள் பற்றி விவரமாகச் சொல்ல வேண்டும். (ஹி!ஹி! இப்படிச் சொல்லியே ஒப்பேத்தறது வசதியாத்தான் இருக்கு;-))

3.45-க்கும் – 5.00 மணிக்கும் இடையே கிடைத்த நேரத்தில் பக்கத்திலிருந்த பிரம்ம கான சபாவில் நுழைந்தேன். சகேதராமன் பாட்டு. நான் நுழையும் போது, ஹால் almost full. காலியாய் இருந்த இருக்கைகளைக் காத்தபடி அடுத்த இருக்கைக்காரர்கள். மாடிக்குச் சென்று பால்கனியில் செட்டில் ஆவதற்குள் (நான் போனதே லேட்) வர்ணமும் கல்யாணி ஆலாபனையும் முடிந்துவிட்டன. ‘வாசுதேவயனி’ என்று ஆரம்பித்தது, ‘அட! நம்ம பாட்டு’, என்று ஒரு முறை புன்னகைத்தேன்.

ஜி.என்.பி இந்தப் பாடலைப் பாடிய ரிக்கார்டை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கேயில்லை. அனுபல்லவயில் தார ஷட்ஜம், நிஷாதம், தார ரிஷபம் என்றி வெவ்வேறு இடங்களில் நிறுத்திக் குழைக்கும் அழகுக்கு ஈடேயில்லை.

அந்த சங்கதிகளை சாகேதராமன் அழகாகவே பாடினார். அன்று சாகேதராமனுக்கு குரல் சற்று சரியில்லை. அவ்வப்போது அவர் மனம் நினைத்ததை குரல் பேச மறுத்தது. பாடும் போது, குரல் உடைவதை ‘வெள்ளி விழுவது’ என்று குறிப்பதுண்டு. அன்று கொஞ்சம் அதிகமாகவே குரலில் வெள்ளி விழுந்ததாகத் தோன்றியது.

கல்யாணியில் நிரவல் ஆரம்பிக்கும் போது, பால்கனிக்கு குழந்தையுடன் விசாகா ஹரி (சாகேதராமனின் அக்கா) நுழைந்தார். உடனே ரசிகர்களிடையே ஒரு சலசலப்பு அலை எழும்பி ஓய்ந்தது. மடிசாரின் மேல், woolen jacket, தலைக்கு மஃப்ளர் என்று ஏசியிலிருந்து சரீரத்தையும் சாரீரத்தையும் காத்துக் கொள்ள ஆயத்தமாய் வந்திருந்தார். உட்கார்ந்து அரைநிமிஷம் போயிருக்கும், குழந்தை வீலிட்டது. உடன் வந்த சகேதராமனின் அப்பா (என்று நினைக்கிறேன்) குழந்தையை வெளியில் எடுத்துப் போக முயன்றார். உடனே 2-வீல் ட்ரைவ் 4-வீல் ட்ரைவாக மாறியது. வெறு வழியில்லாமல், விசாகாவும் அரங்கை விட்டு நீங்கினார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இதே நாடகம் மீண்டும் அரங்கேறியது. இனி இருந்தால் என்னைப் போன்றோரின் கடும் சாபத்துக்கு ஆளாவோம் என்பதை உணர்ந்ததாலோ என்னமோ, வெளியில் சென்றவர், மூன்றாவது முறையாகத் திரும்பி வரவில்லை.

பிரம்ம கான சபாவில் ஒன்னொரு சங்கடம், அங்கிருக்கும் கதவு. கதவு தானாய் மூடிக் கொள்ள வேண்டி பொருத்தப்பட்டிருக்கும் ஸ்ப்ரிங்கின் stiffness அதீதமாய் இருப்பதால், ஆள் நுழைந்ததும் படார் என்று மூடிக் கொல்கிறது (எழுத்துப் பிழை அல்ல). நிமிஷத்துக்கு மூணு டரம் கதவை யாராவது திறப்பதால், கச்சேரியில் கவனம் செலுத்துவது கடினமாகிறது.

நிறைய ஷட்ஜ, பஞ்சம வர்ஜமாகவும், அவ்வப்போது தொட்டுக் கொண்டும் பாடிய கல்பனை ஸ்வரங்கள் வெகுவாக ரசிக்கும்படி இருந்தன. கச்சேரியில் கால்வாசி நேரம்தான் கேட்டபடியால், பக்கவாத்யங்கள் யாரென்று அறிந்திருக்கவில்லை. H.K.வெங்கட்ராமன் வயலின். பல்லடம் ரவி மிருதங்கம் என்று இணையத்தில் படித்து, இன்றுதான் தெரிந்து கொண்டேன். மிருதங்கம் வாசித்தவரின் கையில் நல்ல நாதம் வாய்த்திருக்கிறது. மிருதங்கத்தை அடிக்காமல், வாசிக்கிறார். ”மயிருள்ள சீமாட்டி! பின்னினாலும் அழகு, முடிஞ்சுண்டாலும் அழகு”, என்று பாட்டி சொல்வார். அந்த மிருதங்க வாசிப்பைக் கேட்ட போது அதுதான் நினைவுக்கு வந்தது. வேகமாய் வெளுத்து வான்கிய போது சரி, மெலியதாய் கும்காரங்களை தொப்பியில் உதிர்த்த போதும் சரி, இனிமையாக ஒலித்தது.

எனக்குப் பிடித்த ராகங்களுள் ஒன்று முகாரி. இழைத்து இழைத்துப் பாடிய அந்த ராக ஆலாபனை, சாகேத்ராமனின் சாரீரத்தில் தெரிந்த strain-ஐயும் மீறி கேட்க அற்புதமாய் இருந்தது. ஆலாபனையின் போதே சாகேத்ராமனின் குரல் ஓரளவு நல்ல பதத்தை அடைந்த்திருந்தது.

ஆலாபனை முடிந்ததும், “கன்றின் குரலைக் கேட்டு” என்று ஆரம்பித்தார் பாருங்கள். த்சொ, த்சொ….இந்த சீஸனுக்கு அந்த அனுபல்லவி போதும். முசிறியின் ரிக்கார்டில் இந்தப் பாடலைக் கேட்டவர்களுக்கு, இந்தப் பாடலின் மேல் காதல் வராமல் இருக்க முடியாது (பாடலின் முதல் வரி என்றைக்கு சிவ கிருபை வருமோ). அப்படியொரு பாவம். ”உண்டான”, “கொண்டாடி”, “கண்டாலும்”, “சண்டாளன்” என்று வந்து விழும் எதுகைகளும், முகாரியின் உருக்கமும் நம்மை வேறொரு உலகத்துக்கு எடுத்துச் சென்றுவிடும்.

“கொண்டாடி கொண்டாடிக் கொள்வார் – தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார்”

என்ற இடத்தைப் சாகேத்ராமன் பாடியதை வர்ணிக்கவே முடியாது.
முகாரி ராக ஆலாபனையின் போது, ஒரு மாமி பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். வயலின் காரர் சாகேத்ராமனைத் தொடர்ந்தாரோ இல்லையோ, இந்த மாமி பாடகர் pause பண்ணிய போதெல்லாம் பாடி நிரப்பிக் கொண்டிருந்தார். கையில் ஒரு நோட்புக். கச்சேரிக்ககவே என்று பிரத்யேகமான நோட்புக் இருக்கிறது போலும். ஒரு வரியில் நான்கு கோடுகள். முதல் கோட்டில் பாடல் வரி, இரண்டாவதில் ராகம், மூன்றாவதில் தாளம், நான்காவதில் வாக்கேயக்காரர் பெயர், என்று எழுதிக் கொள்ள வசதியாய் வடிவமைத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு பாடலாய் எழுதிக் கொண்டிருந்தார். நாள் முழுவதும் கச்சேரிகள்தான் போலும். நோட்டு நிரம்பியிருந்தது. கொடுத்த வைத்த மகராசி!

முகாரியைத் தொடர்ந்து, “சாகேத நிகேதன” என்று பாடலை ஆரம்பித்த போது, மாமிக்கு என்ன ராகம் என்று புரியவில்லை. அவர் படும் அவஸ்தை பார்க்க கஷ்டமாயிருந்ததால், “கன்னட” என்றேன். “யாரோட சாஹித்யம்?”, என்றார். “தெரியலையே”, என்றேன். “அது தெரியாம என்ன பண்றது? எழுதியாகணுமே?”, என்று கடுப்பாய்ச் சொன்னார். இது என்னடா வம்பாய்ப் போச்சு என்று நான் நினைக்கையில், தன் பையில் இருந்து துழாவி பாக்யலட்சுமியின் கிருதிகள் அட்டவணை அடங்கிய புத்தகத்தை எடுத்தார். “படிக்க முடியலை. இதுல பார்த்துச் சொல்லு”, என்றார். அதற்குள் நல்ல காலமாக, பாடலின் சரணத்தில் தியாகராஜரின் முத்திரை வந்துவிட்டது. இவ்வளவு meticulous-ஆக எழுதி என்ன செய்வார் என்று கேட்க நினைத்தேன். (நானும் இப்படி எழுதிக் கொள்வேன், என்பது வேறு விஷயம்). அதற்குள் அடுத்த வேலைக்கு நேரம் ஆகிவிட்டதால் இடத்தைவிட்டு எழுந்தேன். அப்போது, மோகனத்தை மெல்லிய கீற்றாய் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார் சாகேத்.

கதவை மிகப் பொறுமையுடன், சத்தமே வராமல் மூடிவிட்டுக் கிளம்பினேன்.

பி.கு: ம.சே-யின் ஓவியக் கண்காட்சி, 26-ம் தேதி வரை எல்டாம்ஸ் ரோடில், கிழக்கு பதிப்பகத்துக்கு எதிர் பில்டிங்கில் நடக்கிறது

Read Full Post »

December Music Festival Calendar 2009

சீசனில் எந்த நாள் எந்தக் கச்சேரிக்குப் போகலாம் என்று பல நாட்களுக்குத் திட்டமிட்டு, “அப்போ பார்த்துக்கலாம்”, என்று விட்டுவிடுவது வழக்கமாய் நடக்கும் விஷயம். முடிவுக்கு வர முடியாவிடினும், “21-ம் தேதி கிருஷ்ண கான சபா-ல விஜய் சிவா கேட்டுட்டு அப்படியே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸுக்கு போனா கணேஷ்-குமரேஷ் கேட்கலாம். Alternatively, பரத் கலாசார்-ல சஷாங்க் கேட்டுட்டு, நுங்கம்பாக்கம் கல்சுரல்-ல ஓ.எஸ்.டி கேட்கலாம்”, என்றெல்லாம் பிளான் பண்ணிக் குழம்புவதே ஒரு சுகமான அனுபவம்.

2003-க்கு முன் எஸ்.கண்ணன் என்பவர் வருடா வருடம் வெளியிடும் சீஸன் (இலவச) கையேடே இதற்குப் பயன்பட்டது. வலைத்தளங்கள் பல வந்துவிட்ட போதும் கூட, இன்றும் சீஸனில் சென்னைக்குச் சென்றதும், நல்லி கடைக்குச் சென்று இந்த கையேட்டை வாங்கிவிடுவேன். பல வகை வரிசைப்படுத்தல்களுடன் இவர் வெளியிடும் கையேட்டுக்கு நிகரேயில்லை எனலாம். இந்த வருடமும் ஒரு காப்பி வாங்க வேண்டும். உங்களுக்கும் வேண்டுமெனில் ‘நல்லி’ ஷோ ரூம் அல்லது கண்ணனின் வீட்டில் (S. Kannan, 2nd Floor, Sundaram Apartment, No. 3,
Anandapuram, Off Dr. Rangachari Road, Mylapore, Chennai – 4) பெற்றிடலாம்.

சில வருடங்களாய், என் வெட்டி கற்பனைகளுக்குச் சில வலைத்தளங்களை நம்பியுள்ளேன். ரொம்ப வருஷமாய் டிசம்பரில் மட்டும் நான் மேயும் வலைத்தளம் Kutcheribuzz . மார்கழியில் நாளுக்கு இரு பக்கங்கள் (சில நாட்கள் 4 பக்கங்கள்) சீஸன் சம்பந்தமான விஷயங்களை நியூஸ் லெட்டராக அச்சிட்டு, கச்சேரி நடக்கும் இடங்களில் இந்த வலைத்தளம் நடத்துபவர்கள் விநியோகிப்பதை பார்த்திருக்க முடியும். கலைஞர் வாரியாக, சபா வாரியாக, நாள் வரியாக என்று எப்படி வேண்டுமானாலும் வரிசைப் படுத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய வசதியுடன் கச்சேரி விவரங்களை இங்கு காணலாம். சீஸன் நிகழ்வுகள் பற்றி செய்திகள் இங்குக் காணக் கிடைத்தாலும், இவர்களுடைய ரிப்போர்டிங் முறை, மேம்போக்காக இருப்பதால், நான் அவற்றை அதிகம் கவனிப்பதில்லை.

இந்த வருடம் புதியதாக இரண்டு தளங்கள் முளைத்துள்ளன. Chennai December Season என்பது முதல் தளம். இது பார்க்க தளம் போல அல்லாமல் வலைப்பூவைப் போலுள்ளது. கச்சேரி விவரங்களைப் பார்ப்பது, kutcheribuzz தளத்தைப் போல அவ்வளவு சுலபமாக இல்லை என்ற போதும், கூகுள் காலெண்டரில் விவரங்களை ஏற்றியிருப்பது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். நேற்று எழுதியிருந்த ஜெயா டிவி கச்சேரிகள் ஒலிபரப்பாகும் நேரங்களின் தகவல்கள் கூட இந்தத் தளத்தில் கிடைக்கிறது. கச்சேரி விவரங்களை விட, கச்சேரி அனுபவம், அறிவிப்புகள், நேர்காணல்கள் என்று இவர்கள் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் முறை என்னைக் கவர்ந்தது. செய்திகளைக் கொடுக்க வேண்டுமே என்று கடமைக்குச் செய்யாமல், ஒரு அனுபவப் பகிர்தலாய் இருப்பதால் இவர்களின் எழுத்து நன்றாக அமைகிறது.

கச்சேரி விவரங்களுடன், கச்சேரி நடக்கும் இடங்களுக்குச் செல்லும் வழி, தோராயமாக ஆகும் செலவு, தங்கும் இடங்கள், பசியாற்றிக் கொள்ள உதவும் இடங்கள் என்று புதிதாய் வந்திருக்கும் மற்றொரு தளம் பின்னியெடுக்கிறது. பல்வேறு தளங்களில் கிடைக்கும் அட்டவணைகளுள், எனக்கு இந்தத் தளத்தின் அட்டவணையே வசதியாக இருக்கிறது. இந்தியப் பெயர்களை சரியான spelling-ல் கொடுத்தால்தான் அட்டவணையைத் தருவேன் என்று அழிச்சாட்டியம் செய்வதை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னும்
நன்றாக இருந்திருக்கும். U. Shrinivas என்று அடிக்காமல், U. Srinivas என்றோ U.shrinivas (No space after the dot) என்றோ அடித்தால் தளம் ஆளேயில்லை என்று அடித்துச் சொல்கிறது. My Calendar-ல் கச்சேரிகளைக் குறித்துக் கொள்ளக் கூடிய வசதி நன்றாக இருக்கிறது. Login Id கேட்காததால் கணிணியைக் கொண்டு நம் திட்டத்தை தளம் ஞாபகம் வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். நான் சென்னைக்குச் சென்றதும் வேறு கணிணியில் தளத்தைப் பார்த்தால் நான் போட்ட திட்டமெல்லாம் வீணாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

உண்மைக்கு ஒரு உருவம். கற்பனைகளுக்கு கணக்கில்லாத உருவங்கள் என்று இந்தத் தளங்கள் மூலம், நான் கேட்காத கச்சேரிகளை கற்பனை செய்து பார்க்கும் போது உணர்கிறேன்.

Read Full Post »

டிசம்பர் மாலைகளில் டிவி-யில் கச்சேரி வருகிறது என்ற செய்தியே எனக்கு பல நாட்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எங்க இருக்கார்??) உடன் பலத்த விவாதத்தில் ஒரு முறை ஈடுபட்ட போதுதான் இந்த விஷயம் தெரிந்தது. அதன் பின் ஒன்றிரண்டு கச்சேரிகள் பார்த்ததாகத்தான் நினைவு. பார்த்தவையும் மனதில் நிற்கவில்லை. நிஜமிருக்க நிழல் எத்ற்கு என்பது போல், சபாவில் சென்று நாள் முழுவதும் கேட்பதை விடுத்து, கமர்ஷியல் ப்ரேக்குக்கு நடுவில் கச்சேரியைக் கேட்பானேன். கச்சேரியைக் காணச் செல்பவர்களுக்கு வேண்டுமானால் அவை உகந்ததாக இருக்கும் என்றே எண்ணிக் கொள்வேன்.

சென்ற வருடம், சஞ்சய் தண்டபாணி தேசிகர் பாடல்களை வைத்துக் கச்சேரி செய்தார் என்று அறிந்ததும், கேட்காமல் போனேனே என்று வருந்தினேன். அதற்கு முன், திருவருட்பாவை வைத்து, அவர் பாடிய கச்சேரியையும் கேட்க முடியவில்லை. சஞ்சயின் வலைப்பூவில் ஒரு podcast மூலமாகத்தான் தண்டபாணி தேசிகர் மேல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் கச்சேரிகளில் அவரது பாடல்களைப் பாடினால், விட்டதைக் கொஞ்சமாவது பிடிக்கலாம். சஞ்சயை 2003-ல் இருந்து தொடர்ந்து கேட்டு வருகிறேன். 2006-ல் நிறையவே கச்சேரிகள் கேட்டேன். அந்த வருடம் நிறைய பாரதி பாடல்களை விஸ்தாரமாகப் பாடினார். மலையமாருதத்தில், ‘சந்திரன் ஒளியில்’ பாடி, ‘பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்’ என்ற இடத்தில் அவர் பாடிய நிரவலும் ஸ்வரமும் ரொம்பவே நன்றாக அமைந்தது. பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, கோடீஸ்வர ஐயர் என்று தமிழ்ப் பாடல்கள் நிறையவே பாடுகிறார். வாழ்க அவர் தமிழிசைப் பணி.

இந்த வருடம் ஜெயா டிவி-யில், மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களைக் கொண்டு செய்துள்ளாராம் (விவரம்: http://sanjaysub.blogspot.com/2009/12/seaso-kick-off-and-mayuram-viswanatha.html ).

“மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன்.” என்று ஒரு முறை எஸ்.ராஜம் என்னிடம் கூறினார்.

இம்முறையாவது சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

இன்று சங்கீதத் துறையில் முன்னணியில் இருக்கும் இன்னொரு வித்வான் டி.எம்.கிருஷ்ணா. அவர் ஜெயா டிவியில் பாடியுள்ள லிஸ்டைப் பார்க்கும் போது, கச்சேரி ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழிசை பற்றிய என் பதிவில், “தமிழில் பக்திப் பாடல்கள் தவிர வேறொன்றுமில்லையா”, என்று ஜவஹர் கேட்டிருந்தார். அவருக்காகவே டி.எம்.கிருஷ்ணா கச்சேரி அமைத்தார் போலும்:-).

நம்பக் கூடிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் படி:

1. முதல் பாடல் சங்க இலக்கியத்திலிருந்து. மீனவப் பெண் காதலைப் பற்றிப் பாடும் பாடல்.
2. அன்பைப் பற்றி ஸ்பென்சர் வேணுகோபால் அமைத்துள்ள பாடல்.
3. குளிர் காலத்தைப் பற்றிய கன்னடப் பாடல்
4. கிருஷ்ணாவின் மனைவி இசையமைத்திருக்கும் மலையாளப் பாடல். இது திருவனந்தபுரம் போகும் வழியைப் பற்றிய கவிதையின் பகுதி.
5. வயலின் வித்வான் ஸ்ரீராம் குமார் கவனம் செய்திருக்கும், ‘உலகத்தையும், வெவ்வேறு பருவங்களையும்” பற்றிய சமஸ்கிருதப் பாடல்.
6. வங்காள மொழியில் ரபீந்திர சங்கீத்
7. பாரதியின் ‘சின்னஞ் சிறு கிளியே’. வழக்கமான மெட்டில் இல்லாமல், நாசிகபூஷணி, சுத்த சாரங் முதலிய ராகங்கள் கொண்டு அமைக்கப்பெற்றதாம்.

இந்தக் கச்சேரியும் காண/கேட்கக் கிடைக்குமா என்று அறியவில்லை. டிவி-யில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் டெக்னாலஜி கையில் இல்லை. எப்படியும் இணையத்தில் யாராவது ஏற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இது போன்ற முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியவை. இவற்றுக்கு நிறைய ஆதரவு கிட்டி, இவை பெருகும் என்று நம்புவோம்.

Read Full Post »

« Newer Posts - Older Posts »