Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Music Review’ Category

கச்சேரிகளில் அதிகம் கேட்கக் கிடைக்கும் தமிழ்ப்பாடல்களுள் ஒன்று, “யாரோ, இவர் யாரோ”. இந்தப்பாடலை பொதுவாக பைரவியிலும், அரிதாக சாவேரியிலும் பாடுவார்கள்.

இந்தப் பாடலை பெரும்பாலானவர்கள் சீதை மாடத்தில் நின்றபடி ராமனைப் பார்த்துப் பாடுவதாகக் கருதுகின்றனர். இதில் கச்சேரி விமர்சன கலாநிதிகளும் அடக்கம். அவர்களின் மேல் உள்ள கரிசனத்தால் இந்தப் பதிவு.

இவர்கள் இந்தப் பாடலை கச்சேரியில் மட்டுமே கேட்டவர்கள். அதனால் பல்லவியில் வரும் “இவர் யாரோ” என்கிற பதம் இவர்களை மயக்குகிறது. ஆண் பெண்ணைப் பார்த்துப் பாடினால் “இவள் யாரோ” என்றுதானே இருக்க வேண்டும்? இங்கு “இவர் யாரோ” என்று இருப்பதால், இது பெண் ஆணைப் பார்த்துப் பாடியதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பொதுக் கருத்தில் மயங்கியவர்கள்.

Arunachala Kavi

இராமநாடக கீர்த்தனையின் முழுத் தொகுப்பு, தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் வெளியீடாகக் கிடைக்கிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் இந்தத் தொகுப்பு (இலவசமாகக்) கிடைக்கிறது. அதில், இந்தப் பாடலைப் பார்த்திருந்தால், பாடலுக்கு முன்னால் உள்ள குறிப்பு கண்ணில் பட்டிருக்கும்.

அந்தக் குறிப்பு:

ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல்

விருத்தம் -13

இடமாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒருமா மணிமே டையில் சீதை
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன்
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரதம் கொண்டானே

கச்சேரிகளில், பல்லவி/அனுபல்லவிக்குப் பின் மூன்றாவது சரணத்துக்குப் பாடகர் தாவிவிடுவது வழக்கம். முதல் சரணத்தை யாராவது பாடியிருந்தால் ஒருவேளை இந்த மயக்கம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

அந்தச் சரணம்:

1. பண்ணிப் பதித்தாற் போல் இரு           ஸ்தனமும்-கூட
பாங்கியர்கள் இன்ன முந்துரைத்        தனமும்
எண்ணத்தாலும் வண்ணத்தாலும்           பங்கயப்
பெண்ணைப் போல் கண்ணிற் காணும்   மங்கையர்(ஆரோ)

தெலுங்கு/சமஸ்கிருத சாஹித்யங்கள் எல்லாம் என்ன சொல்ல வருகின்றன என்றெல்லாம் வம்புக்குப் போகாமல் ராகம்/எழுதியவர் பெயர் என்று மளிகைக் கடை லிஸ்டாக ஜல்லி அடிக்கும் விமர்சகர்களைக் காவு வாங்க இது போன்ற தமிழ்க் கீர்த்தனைகள் வந்துவிடுகின்றன.

மஹானுபாவர்களே! “பண்ணிப் பதித்தாற் போல் இரு ஸ்தனத்தோடு” எல்லாம் ராமனை மனக்கண் முன் வரவழைக்காதீர்கள் ஐயா! கொஞ்சம் கருணை காட்டுங்கள். பிழைத்துப் போகிறேன்.

Read Full Post »

கர்நாடக சங்கீதத்தில் இவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் நிச்சயம் சென்று கேட்பேன் என்று சொல்லும் வகையில், மூன்று பேர் என் பட்டியலில் உண்டு. ஒருவர் அபிஷேக் ரகுராம், மற்றவர் அம்ருதா வெங்கடேஷ், மூன்றாமவர் மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா.

பொதுவாக, ஒரு பாடகரைப் போலவே இன்னொருவர் பாடினால், originality இல்லை என்று குறை கூறுவது வழக்கம்.

அவர் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் இள வயது சேஷகோபாலன் பாடுவது போலவே இருக்கிறது. இருந்தாலும், கிருஷ்ணாவை வழக்கம் போல குறை கூற முடியாது. ஏனெனில், ஒரு கிரிக்கெட் வீரரை இவரது ஆட்டம் டெண்டுல்கரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாக இருக்குமா? ஒரு டென்னிஸ் வீரரின் பேக்-ஹேண்ட் ரோஜர் ஃபெடரரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாகுமா? அது போலத்தால் கிருஷ்ணா பாடுவது சேஷகோபாலன் பாடுவது போலவே உள்ளது என்று சொல்வதும் குறையாகாது. இன்னும் சொல்லப் போனால், சேஷகோபாலனுக்குப் பின்னும் அவர் பாணி சங்கீதத்தை அதே வீச்சோடு (இதுதான் முக்கியம்) கேட்க முடியும் என்பதே இசை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்திதான்.

இந்த வருடம் பல இளைஞர்களுக்கு அகாடமி ப்ரைம் ஸ்லாட் அளித்தபோது, இவரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காததில் வருத்தமே. அந்த வருத்தம், நேற்று காலை இவர் கிருஷ்ண கான சபையில் பாடிய போது அதிகரித்தது.

காலை வேளை கச்சேரிகளை, போன வருடம் போல டிக்கெட் கச்சேரியாக வைக்காமல், மினி ஹாலில் ஃப்ரீ கச்சேரியாக இந்த வருடம் வைத்திருப்பது நல்ல விஷயம். அரங்கம் சின்னதென்பதால் ஈயடித்தாற் போல் காட்சியளிக்கவில்லை. டிக்கெட் இல்லை என்பதால், ஓரளவு கூட்டமும் இருந்தது.

நேற்று உடன் வாசித்தவர்கள் டில்லி சுந்தர்ராஜன் (வயலின்), நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), பேப்பரில் கடம் வாசிப்பதாக செய்தி வரவில்லை என்ற போதும் நேற்று கடம் வித்வானும் கச்சேரியில் வாசித்தார். அவர் பெயரை கேட்க மறந்துவிட்டது.

கச்சேரியை நவராகமாலிகை வர்ணத்தில் தொடங்கினார். சிட்டை ஸ்வரங்களுக்குப் பின், ஒன்பது ராகங்களிலும் கல்பனை ஸ்வரங்கள் பாடியது நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தை அளித்தது. ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்குத் தாவும் அநாயாசம் பெரிதும் கவர்ந்தது.

’மேரு ஸமான’ பாடலில் அடுக்கடுக்காய் நிறைய சங்கதிகள் கிருஷ்ணா போட, அதை பெரும்பாலும் சரியாக ஊகித்து வாசித்தார் நெய்வேலி நாராயணன். பாடலின் பல்லவியில் பாடிய கல்பனை ஸ்வரங்களில் சௌக்யமும் இருந்தது விவகாரமும் இருந்தது. ஸ்வரத்தை முடிக்கும் போது வைத்த கோர்வை – fitting climax.

நேற்று கிருஷ்ணா பாடிய ஹம்ஸநாதம் அதிகம் கேட்கக் கிடைக்காதது. ஹம்ஸநாதத்தின் உண்மையான வடிவில் தைவதம் உண்டு. காலப்போக்கில் அந்த தைவதம் தொலைந்து விட்டது. இது எஸ்.ஆர்.ஜானகிராமன் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டது. தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றோர் இந்த தைவத்ததுடனேயே இந்த ராகத்தைப் பாடியுள்ளனர் என்ற போதும் கச்சேரியில் இதைக் கேட்பது அபூர்வம். நேற்று கிருஷ்ணா சிறு கோட்டோவியமாய் ராகத்தை தெளிவாக சில நிமிடங்களுள் ஆலாபனை செய்து, முத்தையா பாகவதரின் ‘கிருபாநிதே’ பாடினார். ஆலாபனையிலும், கிருதியிலும், சிட்டை ஸ்வரங்களிலும் கிருஷ்ணா அந்த தைவத்தை மிக நேர்த்தியாய் கையாண்டார்.

நேற்றைய பிரதான ராகம் மோகனம். கிருஷ்ணாவின் குரல் மந்திர பஞ்சமத்தில் இருந்து, தார பஞ்சமம் வரை சுலபமாக சஞ்சரிக்கிறது. டி.என்.எஸ் பாணி ஆலாபனையில், ராகத்தின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அந்த மைத்தை வெவ்வேறு இடத்தில் இருந்து தொடுவது சிறப்பம்சமாகும். உதாரணத்துக்கு மோகனத்தின் தைவதத்தில் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி, அந்த தைவதத்தை ‘க-த’, ‘ரி-த’, ‘ஸ-த’ என்று மத்ய ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தார ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தொடும் போது, எண்ணற்ற பரிமாணங்கள் பிறந்து கொண்டே இருக்கும். Linear exposition-க்குள் non-linear exposition-ம் பொதிந்திருப்பது இந்தப் பாணிக்கே உரிய தனிச் சிறப்பு. இப்படி பாடுவதை கேட்டுப் புரிந்து கொள்வதற்கே நிறைய கவனம் தேவை என்னும் போது, அதைப் பாட எத்தகைய நிர்ணயமும் துல்லியமும் தேவை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இது போன்ற கற்பனைகளை அள்ளிக் கொடுக்கும் அறிவு பலருக்கு உண்டு எனினும், அதை குரலில் சாத்தியமாக்குவது சிலருக்குத்தான் முடிகிறது. அந்த வகையில் கிருஷ்ணா புண்ணியம் செய்தவர். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் செல்கிறது.

அடிக்கடி கேட்கக் கிடைக்கும் பாடல்களைப் பாடாமல், தஞ்சாவூர் ராமஸ்வாமி பிள்ளையின் ‘ஜெகதீஸ்வரி’ பாடினார். மோகனத்தின் தைவதத்தைக் கொஞ்சிய படியே ஒலிக்கும் சிட்டை ஸ்வரத்தையும், சரணம் முடிந்ததும் அந்த சிட்டை ஸ்வரங்களுக்கு உரிய சாஹித்யத்தையும் கிருஷ்ணா வெகு அற்புதமாகப் பாடினார். வேறெந்த மோகன கிருதிக்கும் குறைச்சல் இல்லை என்னும் படியாக மிளிரும் இந்தத் தமிழ்ப் பாடலை இன்னும் நிறைய பேர் பாடலாம்.

‘கதி என்று நம்பினோரை காப்பதே உன் வைராக்யம்’ என்ற வரியில் விஸ்தாரமாய் இரண்டு காலங்களில் நிரவல் பாடிய பின் கல்பனை ஸ்வரங்கள் பாடினார். அவற்றில் சில ஆவர்த்தங்கள் முழி பிதுங்கும் கணக்குகளும் அடக்கம்.

பாடல்களிலும் சரி, தனியிலும் சரி நெய்வேலி நாராயணனின் மிருதங்கம் சுநாதமாய் ஒலித்தது.

தனி முடியும் போது கச்சேரி முடிய 30 நிமிடங்களே எஞ்சி இருந்தன.

அப்போது ஹேமவதி ராகத்தை எடுத்து பத்து நிமிடங்கள் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார், நேரம் இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்துக்குக் கூட ஆலாபனை செய்வார் என்றே தோன்றியது. நேரம் இல்லாதததால் வயலினில் பேருக்கு வாசித்து முடித்தார் டில்லி சுந்தரராஜன்.

சில நிமிட தானத்துக்குப்பின், மிஸ்ர திரிபுடையில் பல்லவி பாடினார்.

என்னுடைய யூகம் யாதெனில், இந்தப் பல்லவியை இரண்டு களையில் தயாரித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நேரம் இல்லாததால் ஒரு களைக்குத் தாவினார்.

விரைவாகப் பாட வேண்டி இருந்ததால் சாஹித்யம் செம உதை வாங்கியது. சாஹித்யம் தமிழில் என்பதால், அது சிதைகிறது என்பதை ரசிகர்களால் உணர முடிந்தது.

“இட்ட மருந்தென்னவோ அறியேன் – கண்ணே பெண்ணே நீ” என்ற சாஹித்யத்தில் கண்ணே, பெண்ணே தவிர ஒன்றுமே விளங்கவில்லை. கீழ் காலத்தில் பல்லவியை பாடிய போதுதான் கொஞ்சம் புரிந்தது. கடிகாரத்தைப் பார்த்த படியே பல்லவியையும், ஸ்வரங்களையும் பாடி முடித்தார்.

இவ்வளவு நன்றாகப் பாடிவிட்டு, கிருஷ்ணா சாஹித்யத்தை சிதைப்பவர் என்ற அவப் பெயரை வாங்கியிருந்திருக்க வேண்டாம். அதற்கு முன் பாடிய பாடல்கள் அனைத்திலும் சாஹித்யம் நன்றாகத்தான் புரிந்தது. இரண்டு மணி நேரத்துக்குள் விஸ்தாரமாக ஒரு ராகத்தை நிரவல் ஸ்வரங்களுடனும் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவியும் பாடுவது முடியாத காரியம். அதை தவிர்த்திருந்தால், இந்த அவசர ப்சமையலை தவிர்த்திருக்கலாம்.

அரங்கில் சிலருக்கு இதனால் அதிருப்தி என்ற போதும் எனக்கு அது குறையாகத் தோன்றவில்லை.

பல்லவிக்குப் பின், ‘வந்து கேட்பார் இல்லையோ’ என்று பாடியபோது என் மனத்திலும் அந்த வரிகளே தோன்றின. இந்த சங்கீதத்தைக் கேட்க இவ்வளவு பேர்தானா? கூட்டம் கூட்டமாக ‘வந்து கேட்பாரில்லையே’ என்ற வருத்தமும் மேலிட்டது.

அடுத்த வருடமாவது இந்த இளைஞருக்கு ப்ரைம் ஸ்லாட் கிடைக்க வேண்டும். ப்ரைம் ஸ்லாட் கிருஷ்ணாவுக்கு பெயரையும் புகழையும் கொடுக்கும் என்பதை விட, நினைத்ததைப் பாடும் அளவிற்கு நிச்சயம் அவகாசத்தை அளிக்கும்.

ஓர் அற்புதமான கச்சேரியுடன் என் டிசம்பர் நிறைவுக்கு வந்தது.

இந்த சீஸன் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து, ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Read Full Post »

இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக ஓ.எஸ். தியாகராஜனைக் கூறலாம். கடந்த பத்து வருடங்களில் 20 முறையாவது இவரை நேரில் கேட்டிருப்பேன். ஒரு கச்சேரி கூட சோடை போய் நான் கேட்டதில்லை.

நேற்று சிருங்கேரி மடத்தில் எம்.எஸ்.என்.மூர்த்தி, நெய்வேலி நாராயணன் சகிதம் ஓ.எஸ்.டி கச்சேரி. அரங்கில் எதிரொலி அதிகம் என்ற போதும் சூழல் ரம்மியமாய் இருந்தது. நான் தி.நகர் டிராபிக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டதால், நுழையும் போது ‘எவரநி’ கிருதியை முடித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டுள்ள ஓ.எஸ்.டி கச்சேரிகளில் பாதிக்கு மேற்பட்ட கச்சேரிகளில், ஆரம்பத்திலேயே விறுவிறு என்றொரு கல்யாணியைப் பாடிவிடுவார். பெரும்பாலும் அது ‘ஈஸ பாஹிமாம்’ கிருதியாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ‘அம்ம ராவம்மா’ கிருதியாக இருக்கும். நேற்று தாயம் ‘தாமரஸ தள நேத்ரி’-யின் பக்கம் (எந்தக் கிருதி என்று கண்டுபிடித்துக் கொள்ள இந்த வரி போதாதா என்ன?) போதாது – ஆசிரியர்

கல்யாணியில் நிரவல் ஸ்வரம் பாடியபோதே கச்சேரி களை கட்டிவிட்டது. அனுபல்லவியில் “நெம்மதினி நீ விஹப”  “ரம்முலோ” என்றெல்லாம் சாஹித்யத்தை வெட்டிச் சாய்க்காமல், அற்புதமாய் பதம் பிரித்துப் பாடுவது ஓ.எஸ்.டி-யின் ஸ்பெஷாலிடி! தொடர்ந்து தேவகாந்தாரியைச் சுருக்கமாய் ஆலாபனை செய்து தமிழ் தியாகைய்யரின் சமஸ்கிருத பாடலான ‘ஷாரதே’ கிருதியை இழைத்துப் பாடினார். ஓ.எஸ்.டி-யின் கச்சேரியில் உள்ள அளவு, அலுப்பே தட்டாத வகையில் அவர் செய்யும் பங்கீடு அவரது பெரிய பலம்.

எந்த நேரத்தில் நான் பிலஹரி அதிகம் கேட்கக் கிடைக்கவில்லை என்று வி.வி.எஸ் கச்சேரி பற்றி எழுதியதில் சொன்னேனோ தெரியவில்லை. விட்டேனா பார் என்று சென்றவிடமெல்லாம் துரத்துகிறது. நேற்று சந்தீப் நாராயணனும், காயத்ரி வெங்கட்ராகவனும் விஸ்தாரமாக பிலஹரி பாடினர். இன்று ஓ.எஸ்.டி-யின் மெல்லிய கீற்றாய் பிலஹரியைத் தொடங்கியபோது நொந்தே போனேன். நல்ல காலம், கீற்று சற்றைக்கெல்லாம், ‘சந்திரசேகர யதீந்திரம்’ என்ற கிருதியாக மாறியது. கல்லிடைக்குறிச்சி வேத தாஸர் செய்த கிருதியாம். கச்சேரி முடிந்ததும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவ காந்தாரியும், பிலஹரி கச்சேரி சிருங்கேரி மடத்தில் நடந்ததால் பாடப்பட்டவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நேற்றைய பிரதான ராகம் தோடி. ஓ.எஸ்.டி ஆதார ஷட்ஜத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வை கொடுத்தார் பாருங்கள்! தார ஸ்தாயியில் குரலை உயர்த்தி, மந்திரத்தில் குரலைக் குறுக்குவோர் கச்சேரிகளையே கேட்டுப் புளித்துப் போயிருந்த என் செவிகள் நேற்று புளகாங்கிதம் அடைந்தன.

ஓ.எஸ்.டி-யின் ஆலாபனை அணுகுமுறை ராமநாதபுரம் கிருஷ்ணன் செய்வது போல, கீழ் ஸ்தாயியில் குரலை உயர்த்தியும், மேல் ஸ்தாயியில் குரலை அடக்கியும் விளங்குகிறது. தார ஸ்தாயியில் கத்தாமல், நளினமான பல சங்கதிகள் பாட இந்த அணுகுமுறை பெரிதும் உதவுகிறது. ராகத்தின் மையமாக தைவதம், முதல் தார ஷட்ஜம் வரையிலான இடத்தை வைத்துக் கொண்டு நிறைய பாடினார். நீண்டு ஒலித்த தார ஷட்ஜ கார்வையும், அதனைத் தொடர்ந்து வளைந்தும் நெளிந்தும் ஒலித்த தைவதத்தில் கமகங்களும் அடுத்தடுத்துப் பாடி அழகிய அலைகளை படர விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு நிறைவாக தோடியை அலசிவிட்டு, “ஏமிஜேசிதே” பாடினார்.

நிரவலைப் பற்றிச் சொல்லும்போது எஸ்.ராஜம், “நல்ல விஷயத்தை வைத்துதான் நிரவணும். ஏமி ஜேஸிதே பாடிவிட்டு “காம மோக தாஸுடை” என்று நிரவிக் கொண்டு இருக்கக் கூடாது.”, என்பார். நேற்று ஓ.எஸ்.டி அதைத்தான் செய்தார். காம மோகத்தைக் கடந்து “வர மந்த்ர”-வில் நிரவல் செய்தார். மைசூர் பாகை செய்யும் போது தாம்பாளம் முழுவதும் படர்ந்திருந்தாலும், அப்படியே சாப்பிட முடியாது. துண்டம் துண்டமாய் நறுக்கும்போது எடுத்து உண்ன வசதியாக இருக்கும். அப்படித்தான் நேற்று ஓ.எஸ்.டி தோடியை நிர்வாகம் செய்தார். கேட்ட ரசிகர்களும், உடன் வாசித்த வித்வான்களும், முழுமையாய் வாங்கி அனுபவிக்க வசிதயாக இருந்தது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி இரண்டு காலத்திலும் இடத்துக்குப் பாடிவிட்டு, அதன் பின் சமத்திற்கு வரும்படியாக குறைப்பு செய்தார். ஆலாபனையிலும் சரி, ஸ்வரங்களிலும் சரி ஷட்ஜ, பஞ்சம வர்ஜ இடங்கள் நிறைந்து இருந்தன. இந்த இடங்களே ராகத்தை உருக்கமாக ஒலிக்க வைத்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி பாடியதையெல்லாம் உடனுக்குடன் வாசித்து கலக்கினார் நெய்வேலி நாராயணன். அரங்கில் நேற்று அவரது தொப்பி சுத்தமாக கேட்க வில்லை. வலந்தலையின் நாதத்துடன் தொப்பியின் கும்காரங்களும் சேர்ந்து ஒலித்திருப்பின் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

தனி ஆவர்த்தனத்திலும் இந்தக் குறை இருந்தது. குறிப்பாக டேக்கா சொல் வாசித்த போது, இதை உணர முடிந்தது. இருப்பினும், குறை தெரியாது நன்றாக வாசித்தார். நேற்று வாசித்த கோர்வைகள் எல்லாம் சரியாக இடத்துக்கு வந்தன என்று சொல்லுமளவிற்குத்தான் என் லய அறிவு இடமளிக்கிறது. ஆதி தாளம் புரியும் அளவிற்கு, மிஸ்ர சாபுவை தெரிந்து கொள்ளவில்லை. வரும் வருடங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வயலின் வாசித்த எம்.எஸ்.என் மூர்த்தி இடைஞ்சல் இல்லாமல் வாசித்தார். அவருடைய வாய்ப்புகளை அளவாக வாசித்தார்.

தனி முடிந்ததும், சில சீட்டுகள் வந்தன. அவற்றைப் பாடும் முன் நிறைய யோசித்துவிட்டு. “சரவண பவ எனும் திருமந்திரம்” பாட ஆரம்பித்தார். பல்லவி முடிந்து மிருதங்கத்தில் தீர்மானம் வைத்தும் அனுபல்லவியை எடுக்கவில்லை. உடனிருந்த சிஷ்யருக்கும் சாஹித்யம் தெரியாததால் பாட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. உடனே அரங்கில் இருந்து ஒரு கூட்டமே “புரம் எரித்த பரமன்” என்று அடியை எடுத்துக் கொடுத்ததும், பாடலைப் பாடி முடித்தார். “திடீர் என்று பாடச் சொன்னால் இதுதான் சங்கடம்”, என்றார்.

அடுத்து பாடிய “காண வேண்டாமோ” பாடல்தான் தமிழில் இது வரை வந்துள்ள பாடல்களுள் மிகச் சிறந்ததாக நான் கருதுவது. ஸ்ரீரஞ்சனியின் அத்தனை அழகும் குழைத்துச் செய்யப்பட்ட பாடல். “வீணில் உலகைச் சுற்றி சுற்றி” என்ற வரியில் உலகமும் சுற்றும், அவ்வுலகில் உரைபவரும் சுற்றுவர், அப்படி எக்கெச்செக்க நகாசு சங்கதிகள்! அவற்றை ஓ.எஸ்.டி பாடிய போது my day was made.

அடுத்து பாடிய ராகமாலிகை பாடும் முன், “முடிந்த வரை பாடுகிறேன். அனு பல்லவியில் மறந்தாலும் மறந்துவிடலாம்”, என்று எச்சரிக்கை விடுத்து ஆரம்பித்தார். அழகான ஹிந்துஸ்தானி ராகங்களால் ஆன ராகமாலிகை “அனுமனை அனுதினம் நினை மனமே” அவற்றை நல்ல பாவபூர்வமாக பாடி கச்சேரியை நிறைவு செய்த போது கேட்டவர்கள் அனைவரும் நிறைவாக வீடு சென்றிருப்பர் என்பது உறுதி.

 

Read Full Post »

VVS என்ற இனிஷியல் உடையோர் எந்தத் துறையினர் என்ற போதும், அவர்களின் ஆளுமை Very Very Special-ஆகத்தான் அமையும் போலும்.

Silken touch, elegance personified, என்று நாம் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் பற்றி கூறுவதெல்லாம் சங்கீதத் துறை வி.வி.எஸ்-க்கும் நிச்சயம் பொருந்தும்.

சச்சின், திராவிட், கங்குலிக்கு இடையில் லட்சுமணை அதிகம் கண்டு கொள்ளாதது போலவே, லால்குடி, எம்.எஸ்.ஜி, டி.என்.கிருஷ்ணன் ஆகிய மூவரும் கோலோச்சிய வேளையில் சங்கீத உலகில் காலடி வைத்த வி.வி.சுப்ரமணியத்திற்கு, அவர் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காததுதான் நிதர்சனம்.

நான் இது வரை வி.வி.எஸ் கச்சேரியை நேரில் கேட்டதில்லை. ஆனால் நிறைய எம்.எஸ் கச்சேரி பதிவுகளிலும், பாலமுரளி பதிவுகளும் இவர் வாசிப்பைக் கேட்டு பிரமித்துள்ளேன்.

பொதுவாகவே இருவருக்கு மேல் வாசிக்கும் நிகழ்வுகளை நான் தவிர்த்துவிடுவேன். இம்முறை டி.என்.கிருஷ்ணன் ட்ரயோவாக வாசிப்பதாலேயே அவர் கச்சேரிகளுக்குச் செல்லவில்லை. வி.வி.எஸ்-ம் பெரும்பாலும் ட்ரயோவாக வாசிப்பதால் இதுவரை அவர் கச்சேரிக்குச் சென்றதில்லை.

நேற்று நாத இன்பத்தில் (ஆஹா! என்ன ஒரு பொருத்தம்) அவர் ஸோலோ வாசிக்கிறார் என்பதும், தயங்காமல் அங்கு செல்ல முடிவெடுத்தேன்.

டி.வி.கோபாலகிருஷ்ணனும், ராதாகிருஷ்ணனும் உடன் வாசித்தனர்.

நிறைந்த அரங்கில், சௌராஷ்டிரத்தில் ‘ஸ்ரீ கணபதி’ கிருதியுடன் கச்சேரி தொடங்கியது. டாக்டர் பினாகபாணியை நான் சந்தித்த போது, Each and every phrase should drip with melodic content, என்றார். அதற்கான அர்த்தம் முழுமையாய் விளங்கிக் கொள்ள விவிஎஸ் கச்சேரியைக் கேட்க வேண்டும். டி.என்.கிருஷ்ணன் வாசிப்பில் இருக்கும் வல்லின மெல்லினங்கள், இவர் வாசிப்பிலும் மிளிர்வதை கேட்பவர்கள் உணரக் கூடும். அதிலும், அந்தத் தார ஷட்ஜத்தை கீற்றாய் மலர விட்டு, ஸ்ருதியுடன் கலக்கும் போது உண்டாகும் பரவசத்திற்கு ஈடேயில்லை.

ஒரு கலைஞன் ரசிக்கும்படி வாசிப்பதற்கும், ரசித்து வாசிப்பதற்கும் வித்தியாசத்தை உணரத்தான் முடியும். விளக்க முடியாது. உணர இவர் கச்சேரியைக் கேளுங்கள்.

ராகம், கிருதி, ஸ்வரம் ஒவ்வொன்றிலும் தோய்ந்து எழுகிறார். ரக்தியான இடங்கள் வாசிக்கும் போது அவர் காட்டும் முக பாவங்கள், அவருடைய ரசிகானுபத்தை தெள்ளென விளக்குகின்றன.

கார்டூனில் மூன்று ஸ்ட்ரோக்கில் முழு வீச்சைக் காட்டுவது போல, ஒரே பிடியில் ராகத்தை பளிச்செனக் காட்டி விட்டு, விறுவிறுவென ‘ஸ்வாமிநாத பரிபாலய’ வாசித்தார்.

மிருதங்கக் கலைஞர்கள் பலருக்கு வாசிக்க வாசிக்க பாடலின் போக்கு புரியும். ஒரு வகையில் இதை ‘சங்கதி ஞானம்’ என்று சொல்லலாமே தவிர, ‘சங்கீத ஞானம்’ என்று சொல்ல முடியாது. ஆனால், சங்கீத ஞானம் பொருந்திய ஒருவர் வாசிக்கும் போது, அவர் கையாளும் முறையே பிரத்யேகமாக இருக்கும். அப்படித்தான் இருந்தது நேற்று டிவிஜி மிருதங்கத்தில் கொஞ்சிய போது. இரண்டு கையாலும் தொப்பியில் (தவில்காரன் போல) வாசித்தது சிரிப்பை வரவழைத்தாலும், அவருடைய மிருதங்கத்தில் எழுந்த நாதம் கச்சேரியின் தரத்தை உயர்த்திப் பிடித்தது.

நேற்று வி.வி.எஸ் வாசித்த அனைத்துமே பிரமாதம்தான் என்றபோதும் தேனுகாவில் ‘தெலியலேரு’ ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து எளிதில் வெளி வர முடியவில்லை. இதே அரங்கில் டி.என்.கிருஷ்ணன் வாசித்த ஸாரமதியும் எனக்கு இதே அனுபவத்தைக் கொடுத்தது. பன்னிரண்டு நிமிடங்கள் வாசித்த தேனுகாவில், ஆலாபனை சில நொடிகள்தான். நிரவல் இல்லை. ஸ்வரம் இல்லை. ஆனால் கச்சேரியின் பிரதான ராகமாக வாசித்தால் ஏற்படும் நிறைவை அந்த 12 நிமிடங்களுக்குள் கொண்டு வந்தது அசாத்யம்.

இதுதான் பூர்வி கல்யாணி சீஸன் ஆயிற்றே! வி.வி.எஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? சிறிய ஆலாபனைக்குப் பின், ‘நடமாடுவார் தில்லை’-யில் தொடங்கு ‘ஆனந்த நடமாடுவார்’ கிருதியை வாசித்தார். சங்கதிகளுக்காக, ஆங்காங்கே ஒதுக்கல்களைப் புகுத்தி வாசித்து, மீண்டும் தாளத்தில் இணைத்தது ரசிக்கும் படி இருந்தது. குறிப்பாக, “பாதி மதி ஜோதி பளீர் பளீரென’ என்ற இடத்தில் ஜோதியை ‘பளீரிடச்’ செய்த ஒதுக்கல்கள் படு பிரமாதம்.

பிலஹரி என்றால் ராகமா? அது உன்னால் முடியும் தம்பி படத்தில் ஜெமினி பெயரல்லவா, என்று நினைக்கும் அளவிற்கு அருகிப் போய்விட்ட ராகத்தை சில நாட்களுக்கு முன் சஷாங்க் வாசித்தார். இன்று வி.வி.எஸ். அதி வேகமான சங்கதிகள் வாசித்த போது, அவரது வயதின் தாக்கம் தென்பட்டாலும், பாவம் பொங்க வாசித்த இடங்களில் எல்லாம் 30 வருடங்களுக்கு முன் வாசித்த அதே கையைப் பார்க்க…ஸாரி கேட்க… முடிந்தது. அதிலும் கம்பீரமாய் ஒலிக்கும் மந்திர ஸ்தாயியில் அவர் குழைத்தளித்த கோவைகள் கோடி பெரும்.

‘ஸ்மர ஸதா மானஸ’ கிருதியை விஸ்தாரமாய் வாசித்த பின் விறுவிறுவென ஸாரங்காவும், வஸந்தாவும் வாசித்தார். வசந்தா வாசிக்கும் போது, நல்ல பேட்ஸமனின் ஃபுட்வொர்க் போல ஸெட்டில் ஆகிவிட்டார் விவிஎஸ். அடுத்து வாசித்த கரஹரப்ரியாவை என்னவென்று சொல்ல?

பதினெட்டு நிமிடங்கள். நொடிக்கு நொடி அரங்கம் முழுவதும், ஆஹாகளும், பேஷ்களும், ‘ப்ச் ப்ச் ப்ச்’-களும் நிறைந்து கொண்டே இருந்தன. சில பிடிகளை மத்ய ஸ்தாயியிலும், மந்த்ர ஸ்தாயியிலும் மாற்றி மாற்றி வாசித்ததில் அழகு இருந்தது, ஆடம்பரம் இல்லை.

அழகான ரதத்தை பொன்னால் ஆக்கி, மெல்ல மெல்ல நகாசுகள் செய்து, மணியும், மாணிக்கமும் பொறுத்தி, பொறுமையாய் இழைத்து இழைத்து மெருகேற்றியவுடன் வேறென்ன செய்ய முடியும்? ராஜ மார்கத்தில் பவனி வரத்தானே வேண்டும்? அதைத்தான் செய்தார் “சக்கனி ராஜமார்கமு” கிருதியை எடுத்துக் கொண்டதின் மூலம்.

பல்லவியில் எவ்வளவு சங்கதிகள்! அப்பப்பா, இந்த கிருதியின் அழகை அனுபவிக்க ஆயிசு போதாது! தியாகராஜர் தவிர கோனேரிராஜபுரத்திலிருந்து செம்மங்குடி வரை எத்தனை பேரின் உழைப்பும் இழைப்பும் இந்தப் பாடலுக்குள் பொதிந்திருக்கும்? அடுக்கடுக்காய் மலரும் சங்கதிகள் கேட்ட போது ஏனோ தியாகராஜரின் “பூலோக வைகுண்டம் இதியனி” என்ற வரியும், தொண்டரிப்பொடியாழ்வாரின் ”அச்சுவை பெரினும் வேண்டேன்” பாசுரமும் நினைவுக்கு வந்தன.

மோகமுள் நாவலில், நாகேஸ்வரன் கோயிலில் ஹிந்துஸ்தானி கலைஞர்கள் பாடிய போது யமுனாவும் பாபுவும் எப்படி உணர்ந்தார்கள் என்பதை தி.ஜா-வால் சொல்ல முடிந்தது. கரஹரப்ரியாவில் நிரவல் ஸ்வரங்கள், தனி ஆவர்த்தனம், பிந்துமாலினி போல ஒலிக்கும் வி.வி.எஸ் உருவாக்கிய ராதாப்ரியா, நான்கு நிமிடத்தில் அதற்கு முன் ஒலித்த அனைத்தையும் மறக்க வைத்த தேஷ் ராக ஆலாபனை ஆகியவற்றை எல்லாம் விவரிக்க என் எழுத்தில் திராணியில்லை.

நெருப்பென்று எழுதினாலே படிக்கும்போது விரல் சுட நானென்ன லா.ச.ரா-வா? நேற்றைய கச்சேரியில் கேட்ட சங்கீதத்தை விவரிக்க லா.ச.ரா எழுத்து எனக்குக் கூடி வந்தால்தான் உண்டு.

 

Read Full Post »

இந்த வருடம் கச்சேரி கேட்க சிறந்த இடம், என்னைப் பொறுத்தவரையில், திருவான்மியூர் ஹரே கிருஷ்ணா அமைப்பின் கடலோரக் கோயில்தான்.

ஒலியமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட அரங்கம் ஏதுமில்லை. ஷாமியானாவும், பிளாஸ்டிக் நாற்காலிகளும் நிறைக்கப்பட்ட தற்காலிக அரங்கம்தான். இருப்பினும், கடலலைக்கு வெகு அருகே, குளிர்ந்த காற்று வீசிய படி இருக்க, அந்த இடத்தில் பொங்கும் அமைதி, வேறொன்றும் தேவையில்லை என்று எண்ண வைத்தது.

ஒரு பக்கம் கடல் அலை. மற்றொரு பக்கம் இசை அலை.

அங்கு நிரம்பிய அமைதியை, இசைக்க வந்தவர்களும் உணர்ந்திருக்க வேண்டும். நேற்று இரு கச்சேரிகள் கேட்டேன். இரண்டிலும் மருந்திற்கும் (ஒரு பாடல் நீக்கி) இரைச்சல் இல்லை, அவசரம் இல்லை, வேகம் இல்லை.

ஜெயந்தி குமரேஷ், இழைத்து இழைத்து தன் வீணையில் கமகங்களைப் பொழிந்து தள்ளினார். கச்சேரியை கர்நாடக சுத்தசாவேரியில் தொடங்கி,  ‘ஏகாம்பரேஸ’ பாடலுக்கு கல்பனை ஸ்வரங்களை வாசித்த போது, அதிலும் குறிப்பாக, ஒரு சில ஸ்வரங்களை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்த போது meditative mood உருவாகியது.

நிதானமாய் ஸ்ருதியுடன் கலந்து கொண்டு பஹுதாரியை மெல்ல மெல்ல மலர வைத்த போது, my day was made. அந்த 8 நிமிட ஆலாபனை ஏற்படுத்திய நிறைவு என்னை கச்சேரியை விட்டு கிளம்பிவிடலாமா என்று கூட எண்ண வைத்தது. நல்ல காலம் செய்யவில்லை.

பஹுதாரியை நாலு கால் பாய்ச்சலிலும் இசைக்கக் கூடும். ஆனால், இன்று அரங்கிருந்த சூழலுக்கேற்ப மயிலிறகால் வருட விட்டார் ஜெயந்தி. ‘ப்ரோவ பாரமா’ கிருதியை நிதானமாய் வாசித்தார். ஒவ்வொரு வரியும், பாடுவது போல தெளிவாய் வாசிக்கும் ஜெயிந்தியின் ‘காயகி’ வீணை பாணி, பிரமிக்க வைத்தது. ஒரு மீட்டலின் ஒலி இவ்வளவு நேரம் ரீங்காரிக்க முடியுமா என்று ஆச்சர்யப்பட வைத்தது.

பஹுதாரியைத் தொடர்ந்து விளம்ப காலத்தில் துவஜாவந்தியில் அகிலாண்டேஸ்வரி வாசித்து தாலாட்டினார். பக்க வாத்தியம் வாசித்த அனந்தா ஆர். கிருஷ்ணனும், கிரிதர் உடுப்பாவும் வாத்தியத்தில் கொஞ்சினர். சென்ற வருடம் ஜெயந்தியின் கச்சேரியில் கிரிதர், ‘ஆளை உடுப்பா’ என்று சொல்லும்படி வாசித்ததாக எழுதியிருந்தேன். நேற்று அவர் வாசிப்பைக் கேட்ட போது, இவரா அன்று இடியாய் இடித்தார் என்று எண்ண வைத்தது.

இது பூர்வி கல்யாணி சீஸன் போலும். நான் இது வரை கேட்டதில், அபிஷேக், ராம கிருஷ்ணன் மூர்த்தி, கே.காயத்ரி ஆகியோர் வரிசையில் நேற்று ஜெயந்தியும் இணைந்து கொண்டார். ராகம் வெறும் உடல்தான், அதற்கு உயிர் கொடுப்பது கலைஞரின் கையில்தானே இருக்கிறது, அவரவருக்கு தக்க படி புதிதாய் ராகம் உயிர் பெற்று எழுவதுதான் நிதர்சனம். ஜெயந்தி, நிறைய கேட்டு விட்ட பூர்வி கல்யாணியை, எடுத்துக் கொண்ட போதும் அலுப்பாக இல்லை. மாறாக அந்த ஏகாந்த சூழலுக்கேற்ற ராகட்த்தை எடுத்துக் கொண்டாரே என்று சந்தோஷமாகத்தான் இருந்தது.

அவர் வாசிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமானால், கட்டுரையில் ‘கூறியது கூறல்’ நிறைந்திருக்கிறது என்று தமிழ் பேப்பர் ஆசிரியர் கோபிக்கக் கூடும். வாய்பாட்டில், (இன்றைய நிலையில்) பெரும்பாலும் இரண்டு ஸ்தாயிகளை குரல் சஞ்சாரம் செய்வதே அபூர்வம். வாத்தியத்துக்கு அதற்கு மேலும், கீழும் சென்று ராக அலைகளை எழுப்புவதற்கான வசதி உண்டு. அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, ஜெயந்தி மந்திர ஸ்தாயியில் வாசித்த அத்தனை பிடிகளும் படு பிரமாதம். ஜெயந்தியின் கைவிரல்கள் சுழற்காற்றாய் இயங்கிக் கூடியவைதான் என்றாலும் ,நேற்று வாசித்த, ராகத்திலும், தானத்திலும் தென்றலாய் வருடினார்

பிரதானமாக வாசித்த ஷ்யாமா சாஸ்திரியின் ‘நின்னுவினா’ கிருதியும், கல்பனை ஸ்வரங்களும் அழகுக்கு அழகு சேர்த்தன. பொதுவாக நான் தனி ஆவர்த்தனத்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பேன். நேற்று ஜெயந்தியின் வாசிப்பு, முடிந்த பின்னும் கூட, என் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்து என்னை இரு கலைஞர்கள் அற்புட்ர்ஹமாய் வாசித்த தனியின் கவனம் செலுத்தவிடாமல் செய்தது. அவ்வப்போது, ஆனந்தா கிருஷ்ணன் எழுப்பிய கும்கார திவலைகள் மனதை வருடிய போதும், எதையும் பதிய வைத்துக் கொள்ளும் நிலையில் நான் அப்போது இல்லை.

அதிகம் கேட்டிராத லால்குடியின் கமாஸ் ராக தில்லானாவுடன் கச்சேரியை நிறைவாக நிறைவு செய்தார் ஜெயந்தி.

அவரைத் தொடர்ந்து பாடினார் பந்துல ரமா. உடன் வயலின் வாசித்தவர், ரமாவின் கணவர் மூர்த்தி. எச்.என்.சுதீந்திரா மிருதங்கம், உடுப்பி பாலகிருஷ்ணன் கடம்.

ஜெயந்தி வாசிக்க ஆரம்பித்த போது ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் இருந்த ரசிகர்கள், கச்சேரியின் போது பெருகி அரங்கை நிறைத்தனர். நிறைந்த கூட்டம் அடுத்த கச்சேரிக்கும் தங்கியது. நல்ல கூட்டத்தைப் பார்த்ததும் ஜிம்நாஸ்டிக்கில் இறங்காமல் அழகாக அளவாகப் பாடினார் பந்துல ரமா.

இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்ற போதும், நேற்றுதான் முதன் முதலில் கேட்கிறேன். நல்ல கனமான சாரீரம். மந்திரம், மத்ய ஸ்தாயியில் அரங்கை நிறைக்கிறது. குரலில் வேகமும் சரளமாய் பேசுகிறது. தார ஸ்தாயியில் சஞ்சரிக்கும் போது சற்றே குரல் கம்முகிறது.

எம்.எஸ்.என் மூர்த்தி வாழ்க்கையில் மட்டுமல்ல, வாசிப்பிலும் நல்ல துணை.

சுசீந்திராவுக்கோ பிரமாதமான கை. தன் பங்கை உணர்ந்து கச்சேரியை உயர்த்துவதில் முனைந்து பாடு பட்டு வாசிக்கிறார்.

கச்சேரி சாலக பைரவியில் தொடங்கியது. ’பதவிநி’ பாடிய பின், கானமூர்த்தியை அழகாக ஆலாபனை செய்தனர் தம்பதியினர். ‘கானமூர்த்தே’ பாடலில் பல்லவியில் உள்ல காந்தாரத்தையே பல வகைகளில் வளைத்து அழகிய சங்கதிகள் பாடினார். விவாதி ஸ்வாரங்களை கையாளத் தேவையான, சுத்த ஸ்நிர்ணயம் பெரிதும் கவர்ந்தது. நிஷாதத்தில் கமகம் நலந்து நின்று பாடிய போது அற்புதமாக இருந்தது. நிரவல் ஸ்வரங்களுக்குப் பின், கதனகுதூகலத்தை இழையோட விட்டார். வாத்தியக் காரர்களுக்கு இந்த ராகம் அல்வா சாப்பிடுவது போல. வயலினில் வெளித்துக் கட்டினார் மூர்த்தி.

கிருதியில், குறிப்பாக, மூச்சிரைக்கும் வேகத்தில் பாடிய சிட்டை ஸ்வரங்கள் அந்த மாலைப் பொழுதின் பரவசத்துடன் சேராமல் அமைந்தன. இந்த உணர்வு எனக்கு மட்டும்தான். அரங்கம் இந்த சிட்டை ஸ்வரங்களுக்கு அளித்த அப்ளாஸ்தான், அன்றைய அப்ளாஸ்களிலேயே பெரியதாக அமைந்தது.

அடுத்து பெஹாக் ராகத்தை எடுத்து ஆலாபனை செய்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. பெரும்பாலும் கச்சேரியின் கடைசியில் பாடக் கூடிய ராகம். இதை பிரதான ராகமாகக் கேட்கக் கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. நல்ல உருக்கமான ராகத்தை நன்கு இழைத்துப் பாடினார்ட் பந்துல ரமா. அவர் ஒன்பது நிமிடங்கள் பாடியதை, அதில் பாதி நேரத்துக்குள் precise writing செய்து, முழுமை கெடாமலும் வாசித்தார் மூர்த்தி.

ஸ்வாதி திருநாளின் ‘ஸ்மர ஜனக’ பாடி முடித்த போது, இன்றைக்கு இவ்வளவு போது என்று தோன்றியது. .

நிச்சயம் இன்னொரு முறை இவர் கச்சேரியைக் கேட்பேன் (அம்முறை முழுமையாக).

 

Read Full Post »

பொதுவாக எனக்கு ஜுகல்பந்தி என்றால் அலர்ஜி. கர்நாடக இசையில் உள்ள அளவுக்கு ஹிந்துஸ்தானி கேட்பதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு என்ற போதும், இரு வழிகளில் இருந்து கலைஞர்கள் சேர்ந்து இசைக்கும் கச்சேரிகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இரு கலைஞர்களும் தனித் தனியாய் இசைக்கும் கச்சேரிகளில் கிடைக்கும் நிறைவை விட இருவரும் சேர்ந்து இசைக்கும் கச்சேரிகளில் ஏற்படும் நிறைவு சில மாற்றுகள் குறைவென்றே எனக்குத் தோன்றும்.

ஜுகல் பந்திகள் சில சமயங்கள் துவந்த யுத்தமாக மாறி இசையை செவிட்டில் அரையும் நிகழ்வுகளாக மாறிவிடுவதுண்டு. சில கச்சேரிகளிலோ இரு கலைஞர்களும் ரொம்பவே அடக்கி வாசித்துவிடுவதும் உண்டு. இன்னொரு சங்கடம் என்ன்வென்றால், ஹிந்துஸ்தானி கலைஞர் அவர் வழியில் பாடுவார், கர்நாடக கலைஞர் தென்னிந்திய முறையில் பாடாமல் வட நாட்டு வழியிலேயே பாட முயல்வதுண்டு. 23-ம் தேதி சஷாங்கும் ஷாஹித் பர்வேஸும் வாசித்த கச்சேரியில் இருவருமே பூர்ய தனஸ்ரீ-தான் வாசித்ததாக கேட்ட நண்பர் கூறினார்.

இது போன்ற காரணங்களினால் நான் ஜுகல்பந்திகளைத் தவிர்த்துவிடுவேன் என்ற போதும், சில சமயங்களில் அந்தக் கச்சேரிகளுக்கு சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் சார்ந்ததாக இருக்கும். கர்நாடக இசைக் கலைஞரை கேட்கும் வாய்ப்பு நிறைய கிடைக்கும். அஜய் சக்ரபர்த்தி போன்ற பாடகர்களைக் கேட்கவும் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். ஆனால், சில கலைஞர்கள் சென்னைக்கு வருவதே அபூர்வம். அவர்கள் கச்சேரி நடக்கும் போது ஜுகல் பந்தி கச்சேரி என்ற போதும் தயங்காமல் சென்றுவிடுவதுண்டு.

அப்படி ஒரு கலைஞர்தான் ஜெய்தீர்த் மேவுண்டி. அப்துல் கரீம் கான், பீம்ஸேன் ஜோஷி போன்ற ஜாம்பவான்கள் வந்த கிரானா கரானாவின் எதிர்காலம் இவர்தான். சிறு வயது பீம்ஸேனை கேட்காதவர்கள் இவர் பாடுவதைக் கேட்டுக் கொள்ளலாம். யானை அரபிய குதிரை வேகத்தில் ஓடி நீங்கள் பார்த்ததுண்டா? ஜெய்தீர்த்தின் குரலில் நீங்கள் அதைப் பார்க்கலாம். அவ்வளவு கனத்தில் அவ்வளவு வேகம். யூட்யூபில் அவர் ரோனு மொஜும்தாருடன் வாசித்துள்ள நட்பைரவ் (நம்ம ஊர் ஸரஸாங்கி) விடியோவைப் பார்த்ததிலிருந்து இவர் இசைக்கு நான் அடிமை.

நேற்று பார்த்தசாரதி சபாவில் அபிஷேக் ரகுராமுடன் சேர்ந்து ஜெய்தீர்த் படுவதாக அறிவிக்கப்படிருந்தது.

அபிஷேக் கர்நாடக உலகின் நம்பிக்கை நட்சத்திரம். பாலக்காடு ரகுவும், லால்குடியும் தந்தை வழியாகவும், தாய் வழியாகவும் முன்னோர்களாய் பெற்றிருக்கும் கலைஞர். இளைஞர் என்ற போதும், அதற்குள் தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ராகம் பாடும் போது, இது வரை கேட்டிராத பல புதிய இடங்களை தேடிப் பிடிக்கிறார்.

’மடி’-யான ஆசாமிகளுக்கு இவர் பாட்டு பிடிக்குமா என்று தெரியவில்லை. புதுமைகளைக் கேட்க மனத்தடை இல்லாதோருக்கு இவர் பாட்டு நிச்சயம் பிடிக்கும்.

நல்ல குரலுடன் நல்ல மூளை அடிக்கடி சேர்வதில்லை. ஜி.என்.பி, பாலமுரளி, சேஷகோபாலன் வரிசையில் இவருக்கு அமைந்துள்ளது.

எல்லாம் சரி. இவ்விரு கலைஞர்களும் தனித்தனியே அற்புதக் கலைஞர்கள்தான் சேர்ந்து பாடும் போது?

பயந்து கொண்டுதான் போனேன். எதற்கும் இருக்கட்டும் என்று கச்சேரிக்கு முன் கேண்டீனில் அடை அவியல் சாப்பிட்டுவிட்டுப் போனேன். ஒரு வேளை கச்செரி எடுபடவில்லை என்றால், அந்த மாலைப் பொழுதில் ஒரு சுகானுபவமாவது கிட்டயதே என்ற நிறைவு இருக்கட்டும் என்ற தற்காப்பு நடவடிக்கை அது. நாரத கான சபாவில் இந்த முறை கெண்டீன் வழக்கம் போல் இல்லை என்று கேள்விப்பட்டேன். அவர்கள் நிச்சயம் பார்த்தசாரதி சபாவில் சாப்பிட்டுப் பார்க்கலாம். குறிப்பாக அடை அவியல் பிரமாதம். பாதாம் அல்வாவும் சூப்பரென்று ஒரு செவி வழிச் செய்தி தெரிவிக்கிறது.

வயிற்றுக்கு உணவிட்ட பின் செவிக்கு உணவிற்காக அரங்கை அடைந்த போது, ஓரளவு நல்ல கூட்டம் கூடியிருந்தது. 6.30 மணிக்கு முன்னரே வந்துவிட்ட கூட்டம், 6.50 வரை திரை விலக்கப்படாததால் கொஞ்சம் சலசலத்தது.

திரை விலகிய போது ஜெய்தீர்த், வயலின், ஆர்மோனியம், தபலா சமேதராய் அமர்ந்திருந்தார். அபிஷேக்கை காணவில்லை. திரை மறைவிலிருந்து ஒரு குரல் வெளியூர் கலைஞர்களை வரவேற்றது. அது அபிஷேகின் குரல் என்று பலருக்குப் புரியாததால், “அபிஷேக் இல்லையா? வெறும் ஹிந்துஸ்தானி கச்சேரியா? இன்னிக்கு வந்தது வீணா?”, என்றெல்லாம் கூட்டம் புலம்ப ஆரம்பித்துவிட்டது. பூர்யா கல்யாண் ராகத்தில் ஜெய்தீர்த் முதலில் பாட, நம்ம ஊர் பூர்வி கல்யாணியை தான் பாடப்போவதாக அபிஷேக் அறிவித்ததை பலர் கவனித்ததாகத் தெரியவில்லை. காதில் வாங்கியவர்கள் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியவுடன் கூட்டம் ஆசுவாசப்பட்டது.

இருவரும் தனித் தனியே பாடப் போகிறார்கள் என்று கேட்டவுடன் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இருவரும் அவரவர் இஷ்டத்துக்கே பாடலாம். ஒருவர் பாடும் போது மற்றவர் குறுக்கிட மாட்டார். ரொம்ப நேரம் ஒருவரை சும்மா உட்கார வைக்க முடியாது என்பதற்காக கற்பனையைத் துண்டிக்கத் தேவையில்லை. ஒருவர் மிகக் கடினமான சங்கதியைப் பாடிவிட்டால், மற்றவரால் முடிகிறதோ இல்லையோ முயன்றுதான் தீருவேன் என்று பாடி, சில சமயம் சொதப்பவும் தேவையில்லை. இது போன்ற பல சாதகங்கள் தனித் தனியே பாடுவதில் உள்ளன.

என்ன ஒரே பிரச்னை எனில், இப்படிப் பாடினால் அது ஜுகல்பந்தி ஆகாது. இரண்டு மினி கச்சேரிகள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஜெயதீர்த் மந்திர ஸ்தாயியில் நின்று ஸ்ருதியோடு இணைந்து ஐக்கியமான பின், விளம்பித் பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு ஸ்வரமாய் நின்று நிதானமாக ராகத்தினுள் மூழ்கினார்.

அவர் பாடும் போது குரலுக்கான ஸ்விட்சை கையில் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. கை செல்லும் திக்கிலெல்லாம் குரல் செல்கிரது. கை மேலிருந்து கீழே சென்றால், குரலும் அந்தர் பல்டி அடித்து தார ஸ்தாயியிலிருந்து மந்திர ஸ்தாயி வரை மின்னல் வேகத்தில் செல்கிறது. மந்திர ஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து தார ஸ்தாயி பஞ்சமம் வரை எந்த ஒரு சங்கடமும் இன்றி சுலபமாக செல்லும் சாரீரம். கேட்கக் கேட்க பரமானந்தமாய் இருந்தது.

துரித காலத்தில், ஜண்டை, வக்ரம், வர்ஜம் என்று எதைப் பாடினாலும் சுஸ்வரமாய் பாடி. அதீத வேகத்திலும் வெளிப்பட்ட அவரது துல்லியம் வார்த்தைகளால் விவரிகக் முடியாதது.

அவர் பாடியதையெல்லாம் அப்படியே வாங்கி வாசித்து, இட்டு நிரப்பிய மைசூர் ஸ்ரீகாந்தும் பாராட்டுக்குரியவர்.

ஜெய்தீர்த் பாடி முடித்ததும், நீண்டதொரு கர கோஷத்தை அவருக்கு அளிக்கும் வேலையில், இதற்குப் பின் இந்த மேடையில் ஒருவர் பாடி ஒப்பேற்ற முடியுமா என்ற ஐயம் தோன்றாமலில்லை.

அந்த ஐயம் அடுத்த ஐந்து நிமிடங்களில் காணாமல் போனது.

அபிஷேக் வழக்கமாய் பாடும் ஸ்ருதியை விட அதிகமான ஸ்ருதியில் பாடினார். இதனால் தார ஸ்தாயியில் அவருக்கு இடைஞ்சல் இருந்ததென்ற போதும், மந்திர ஸ்தாயியில் வெகு சுலபமாக பாட முடிந்தது.

பூர்வி கல்யாணியில், வழக்கமாய் அசைவுடன் ஒலிக்கும் காந்தாரத்தை நிறைய கமகமின்றி பாடி, மந்திர பஞ்சமத்திலிருந்து மத்ய ஸ்தாயி மந்தயமத்துக்குள் நிறைய நேரம் நின்று பாடினார். ஜுகல் பந்தி என்பதற்காக தானும் ஹிந்துஸ்தானி முறையில் இறங்கி விடவில்லை.

கர்நாடக வழக்கம் போலவே, அலாபனையை விளம்ப காலம், மத்யம காலம், துரித காலம் எல்லாம் கலந்தே பாடினார்.

‘ம க ரி ஸ’ என்ற பிரயோகத்தை கமகம் ஏதுமின்று பாடிய போது இது வரை கேட்டிராத பூர்வி கல்யாணியாக ஒலித்தது. ராகத்தில் உத்ராங்கம் செல்லாமல், பூர்வாங்கத்திலேயே ப்;ஆடிய போது நாம் கேட்பது கமனஸரம ராகமோ என்ற எண்ணமும் எழுந்து கொண்டே வந்தது.

தார ஸ்தாயியில் ரிஷபம் வரை சுலபமாகப் பாடிய அபிஷேக், காந்தாரத்தை எட்டிய விதம் மெச்சும் படியாய் அமைந்தது. முதலில் காந்தாரத்தை கண நேரத்தில் தொட்டு வந்தார். பிறகு, அடிக்கடி தொட்டுக் கொண்டு வந்தார். குரல் நிச்சயம் அந்த ஸ்வரத்தை அடைகிறது என்று உறுதி செய்து கொண்ட பின், அங்கு நின்று பாடினார். மூன்று ஸ்தாயிகளையும் இணைத்து, பற்பல இசைக் கோவைகளை மின்னல் வேகத்தில் அவர் அளித்த போது அரங்கே வாயடைத்துப் போனது.

ஆலபானையைத் தொடர்ந்து மூன்று காலங்களில் விஸ்ஹாரமாக தானம் பாடினார்.

முதலில் ஒரு ராகத்தை இருவரும் தனித் தனியே பாடி, அதன் பின் முக்கிய ராகமாக வேறொன்றை இணைந்து பாடுவார்களோ என்ற சந்தேகம் முதலில் இருந்தாலும். இரு வரும் ஒரு ராகம் பாடி முடிக்கவே 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த சந்தேகம் நீங்கியது.

இரண்டு களை ஆதி தாளத்தில் “உன் தரிசனம் கிடைக்குமோ நடேசா – தயாநிதே” என்ற அதீத எடுப்பு அமைந்த பல்லவியை பாடி, விஸ்தாரமாய் நிரவல் செய்து, திஸ்ர நடையில் பல்லவியை சில ஆவர்த்தங்கள் பாடிய பின், கல்பனை ஸ்வரங்கள் பாடினார்.

ராகம் தானம் பல்லவி ஆகிய மூன்று அங்கங்களிலும் எந்தக் குறையும் வரா வண்ணம் விரிவாகப் பாடினார் அபிஷேக்.

தன் வழக்கமான ஸ்ருதியை விட அதிகமான ஸ்ருதியிலும் தைரியமாக அவர் பாடிய தார ஸ்ஹாயி பிரயோகங்களுக்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நீண்ட கரகோஷம் அடங்கிய பின், இருவரும் சேர்ந்து கமாஸிலும், சிந்து பைரவியிலும் சிறு பாடல்கள் பாடினர்.

சிந்து பைரவியில் ஜெய்தீர்த் பர்வீன் சுல்தானா பிரபலப் படுத்திய ‘பவானி தயானி’ பாட, அபிஷேக் அதே தாள கதியில் ஒரு தமிழ்ப் பாடலை பாடினார்.

கச்சேரி முடிந்த போது அரங்கம் Standing Ovation அளித்து தன் நிறைவை வெளிப்படுத்தியது. அரங்கில் கேட்கும் கைதட்டல் என்னுடையதாக இருக்கும் வரை கரகோஷம் எழுப்பிய பின் அரங்கை விட்டு நீங்கினேன் நிறைவாக.

இருவரும் சேர்ந்து பாடப் போவதில்லை என்ற போது, இருவரும் ஒரே ராகத்தைப் பாடியிருக்க வேண்டுமா என்ற எண்ணம் வரும் வழியில் தோன்றியது.

 

Read Full Post »

நேற்று காலை சாஸ்திரி ஹாலில் டி.வி.ராம்பிரசாதின் கச்சேரி. கச்சேரிக்குள் சொல்வதற்கு முன் இரு விஷயங்கள்.

22-ம் தேதி பாரதி ராமசுப்பனுக்கு வயலின் வாசித்த இளைஞரின் பெயர் ராகுல். சாஸ்திரி அரங்கத்தில் கழிப்பறையைப் பூட்டி வைத்துவிடுகிறார்கள் என்று கூறி இருந்தேன். அது தவறு. கீழே இருக்கும் அறைதான் பூட்டி இருக்கிறது. அரங்கிலிருந்து செல்லுமாறு வேறொரு கழிப்பறை இருக்கிறது.

ராம்பிரசாதின் குரலில் அசாத்திய கனம். நல்ல குரல் அமைந்த போதும் அதை வைத்துக் கொண்டு சர்க்கஸ் ஜாலங்கள் செய்ய மாட்டார். கிருதிகளை பாவம் கெடாமல் பாடும் சிலரில் இவரும் ஒருவர்.

நேற்று கச்சேரியை ’வல்லப நாயகஸ்ய’ என்ற பேகடா கிருதியில் ஆரம்பித்தார். இந்த மார்கழி, பாடகர்களைப் பாடாய்த்தான் படுத்துகிறது. யாரைக் கேட்கப் போனாலும் இருமல், தொண்டைக் கட்டு போன்ற உபாதைக்கிடையிலேயே பாடுகின்றனர். ராம்பிரசாத் நன்கு தேர்ந்த கை என்பதால் நன்றாகச் சமாளித்தார். குரல் ஓங்கி ஒலித்தால் போதும், ஸ்ருதி விலகல் பற்றி எல்லாம் கவலை இல்லை என்று ராம்பிரசாத் நினைக்காமல், குரல் ஒத்துழைத்த அளவில் நிறைவாகப் பாடினார்.

ராம்பிரசாத் தார ஸ்தாயியில் பாடுவதில்தான் சங்கடம் இருந்ததே தவிர, மந்த்ர ஸ்தாயி சஞ்சாரங்களை அநாயாசமாகவே பாடுகிறார். சமீப காலத்தில், காதில் ரீங்காரமிட்டு ஒலிக்கும் மந்த்ர பஞ்சமத்தை இவர் குரலில் கேட்டது போல வேறெவரும் பாடிக் கேட்கவில்லை.

கிருதியில் ‘பல்லவ பத’ என்ற வரியில் மலர்ந்த வெவ்வேறு சங்கதிகள் மிகவும் ரசிக்குமபடி அமைந்தன. கிருதியைத் தொடர்ந்து அடுக்கடுக்காய் மத்யம காலத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாடினார். வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்த் பாடகரை நிழலெனத் தொடர்ந்தார். இவரது வாசிப்பில் கிரீச் ஒலியோ, அபஸ்வரமோ மருந்துக்கும் கேட்கக் கிடைக்காது. பேகடாவில் அவர் கொடுத்த ரெஸ்பான்ஸ்கள் கச்சிதமாய் அமைந்தன.

கச்சேரி முடிந்ததும் இவருடன் பேசிக் கொண்டிருந்தேன், 1993-ல் சென்னை சீஸனுக்கு வந்தாராம். கச்சேரிகளைப் பார்த்து மயங்கிப் போய், அப்போது படித்துக் கொண்டிருந்த இஞ்சினியரிங்குக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டாராம். முழு நேரம் இசையை எடுத்துக் கொண்டு, படிப்படியாய் ஜூனியர், சீனியர், சூப். சீனியர் என்று முன்னேறி, இன்று பல சீனியர்களுக்கு வாசிக்கும் முன்னணி வித்வானாக விளங்குகிறார். இளைஞரின் அசுர சாதகம் கைகளில் நன்கு வெளிப்படுகின்றன. சீஸனில் நாளுக்குக் குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகளாவது வாசிக்கிறார். வருங்காலத்தில் இன்னும் பல உயரங்களை இவர் தொடப்போவது உறுதி.

பேகடாவுக்குப் பின் தேனுகாவில் ‘தெலியலேனு ராமா’ பாடினார் ராம்பிரசாத். விறுவிறுப்பு என்ற பெயரில் வேகத்தின் பின் ஓடாமல், குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத காலைப் பொழுதின் ஏகாந்தத்தை ஒத்து தன் கச்சேரியை அமைத்துக் கொண்டார் ராம்பிரஸாத். தேனுகா பாடலின் காலபிரமாணம் மத்யம காலம் என்ற போதும், ராம்பிரசாத் பாடிய போது அதில் நிதானம் பிரதானமாய் தெரிந்தது. சமயத்தில், ஆங்காங்கே அவர் போட்ட பிருகா சங்கதிகள் அவர் குரல் வளத்தை வெளிப்படுத்தின. சங்கதியே வராத போதும், கை அபிநயங்களின் மூலமும், முக பாவனைகள் மூலமுமே தேவையற்ற இடங்களில் கூட பிருகாக்களை அள்ளி வீசுபவர்களுக்கிடையில் நல்ல ரவை சங்கதிகள் பேசும் குரல் இருந்தும், அதைத் தேவையற்று உபயோகிக்காத ராம்பிரசாத் போற்றப்பட வேண்டியவர். பாடல்களில் வார்த்தை உச்சரிப்பும் மெச்சத் தக்கதாக அமைந்தது.

தேனுகா உருவாக்கிய ஏகாந்த நிலையைக் குலைக்கா வண்ணம் கானடாவை முதல் முக்கிய ராகமாக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். நல்ல ஸ்ப்ரிங் மெத்தையினமேல் குதிப்பது போன்று காந்தாரத்தில் அசைவுடன் முடியுமாறு அவர் பாடிய பல சங்கதிகள் மெச்சும்படி அமைந்தன. மேல் நோக்கிச் செல்லும்போது, குரலின் அளவைப் பாதிக்கும் குறைவாய்  ஒலிக்கச் செய்த, தார ஷட்ஜத்தோடு கலந்து ஸ்ருதியில் இருந்து இம்மி பிசகாது இணைந்தது உறுதியானவுடன், குரலைக் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக்கி, நிறைய சங்கதிகள் பாடினார். தோடியும், பூர்வி கல்யாணியும் கோலோச்சும் சீஸனில், விஸ்தாரமான கானடா ஒரு நல்ல மாறுதல்.

மைசூர் ஸ்ரீகாந்தின் ஆலாபனையும் கச்சிதமாய் அமைந்தது.

ஆலாபனைக்குப் பின் ஸ்வாதி திருநாளின் ‘மாமவ ஸதா’ பாடினார். ‘மஹிஷாசுரசூதனி’ என்ற இடத்தில் சுருள் சுருளாய் அவர் அமைத்த பிருகா கலந்த சங்கதிகள், பல்லவிக்கு பிரம்மிப்பான கிளைமாக்ஸாக முடிந்தன. நிரவலுக்குப் பல்லவி வரியையே எடுத்துக் கொண்டார். எம்.எஸ் ‘ஸொகஸுகா ம்ருதங்க’ பாடலில் பல்லவியில் நிரவல் செய்ததைக் கேட்ட பின், இன்றுதான் ஒருவர் பல்லவியை நிரவலுக்கு எடுத்துக் கொள்வதைக் கேட்கிறேன்.

முதல் முக்கிய ராகத்துக்கு இரண்டாம் முக்கிய ராகத்துக்கும் இடையில் ’எந்தவேடுகொந்து ஓ ராகவா’ பாடினார். இதற்குள் அவர் குரலும் நல்ல பதமடைந்துவிட ‘சிந்த தீர்ச்சுட’ போன்ற தார ஸ்தாயி வரிகளை சுலபமாக, நிறைவாகப் பாடினார்.

மெயின் ராகமாக மாயாமாளவகௌளையைத் தேர்வு செய்து விஸ்தாரமாக ஆலாபனை செய்து, ‘மேருசமான’ பாடினார். ‘கலமுன ஷோபில்லு கனக பூஷணமுல’ என்ற இடத்திற்கு பாடிய ஸ்வரங்கள் வெகு நாட்கள் நினைவில் இருக்கும். மற்ற கிருதிகளுக்கு பெரும்பாலும் ஸர்வ லகுவாகவே ஸ்வரம் பாடியவர், இந்தப் பாடலில் சில கணக்குகள் வைத்து ஸ்வரம் பாடினார். அப்படிப் பாடிய போதும், ராக பாவம் கெடாமல் பாடியதுதான் தனிச் சிறப்பு. மைசூர் ஸ்ரீகாந்த் பெரும்பாலும் ராம்பிரசாத் பாடியதை அப்படியே வாசித்தார். சிறசில இடங்களில், தன் கற்பனையையும் சேர்த்து சில மாற்றங்களுடன் ஸ்வரங்களை மிளிரச் செய்தார்.

கச்சேரி முழுவதும் உமையாள்புரம் மாலியின் வாசிப்பு இடைஞ்சலின்றி அமைந்தது. மிருதங்கத்தின் தொப்பி தாழ்ந்து ஒலித்தால், அதன் சுநாதமே தனிதான். நேற்றைய கச்சேரியில் அவரது தொப்பி தாழ்ந்து, சமயங்களில் அவர் கொடுத்த கும்காரங்களில் நீண்டு ஒலித்து கச்சேரிக்கு வலு சேர்த்தது. தனி ஆவர்த்தனத்திலும் நீட்டி முழக்காமல், 5 நிமிடங்களுக்குள், சில கோர்வைகள், நடையை மாற்றி சில ஆவர்த்தங்கள், ஃபரன்கள் வாசித்து கோர்வை முடித்து நிறைவு செய்தார். கடைசியில் வாசிக்கும் மோராவை வழமையான ஒன்றாக வாசிக்காமல், சற்றே வித்தியாசமாக வாசித்தது நன்றாக இருந்தது.

சிந்து பைரவி ராகத்தில் ’தம்பூரி மீட்டிதவா’ என்ற புரந்தரதாசர் கிருதியுடன் கச்சேரியை நிறைவு செய்தார். ‘கெஜ்ஜையே கட்டிதவா’ என்ற வரிகளில் அவர் பாடிய சங்கதிகள் வெகு அற்புதமாய் அமைந்தன.

கச்சேரி முடிந்ததும், இந்த சீஸனில் இவரது இன்னொரு கச்சேரியைக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வேறெங்கு பாடுகிறார் என்று விசாரித்தேன். இந்த டிசம்பரில் இதுதான் அவருக்குக் கடைசி கச்சேரியாம். அடுத்து ஜனவரியில்தான் பாடுகிறாராம். என்னய்யா அநியாயம்  இது?

ஒரு பக்கம் நேற்று பிறந்த நண்டு சிண்டுகளை எல்லாம் ஊக்கு விக்கிறேன், ஊசி விக்குறேன் என்று கச்சேரிகளை அள்ளித் தெளிப்பது இருக்கட்டும், ராம்பிரசாத் போன்ற உழைப்பு, பாடாந்திரம், வித்வத் எல்லாம் நிறைந்திருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்பை முதலில் அளியுங்கள்.

Read Full Post »

Older Posts »