Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘percussion instruments’ Category

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி.

துருவ நட்சத்திரம்

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் பாஸ்கர் பேசினார். சொல்வனம் பதிப்பகம் என்று ஒன்று இருந்த போது, அவர் அதில் அங்கமாக இருந்தார் என்பது சிலருக்கு நினைவிலிருக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் அந்தப் பதிப்பகம் சார்பாக வீட்டின் கிடப்பில் போட்ட ‘துருவ நட்சத்திரம்’ (மிருதங்க மேதை பழனி சுப்ரமண்ய பிள்ளையைப் பற்றிய நூல்) அவரை திடீரென்று கனவில் வந்து மிரட்டியதாம்.

அவருக்கு அபயமளிக்க வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

தற்சமயம் அந்த நூலின் 35 பிரதிகள் நண்பர் ஜெயராமனிடம் உள்ளன.பிரதி வேண்டுவோர் அவரை 8056165831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை புத்தகத் திருவிழாவிலோ அல்லது தபால் மூலமாகவோ உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

நன்றி! வணக்கம்!

Read Full Post »

இருவாட்சி இலக்கியத் துறைமுகம்பொங்கல் 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

நண்பருடன் ஒரு நாகஸ்வர கச்சேரிக்குச் சென்றிருந்தேன். வாசித்த கலைஞர்களின் திறமைக்கு குறைவேயில்லை. இருந்தாலும் அந்தக் கச்சேரியை ரசிப்பது சிரமமாகயிருந்தது.

கச்சேரியில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தவில் வித்வான் தனது சிஷ்யனை ஏவி தனக்கு வைக்கப்பட்ட மைக்கின் ஒலியளவை ஏற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். தவிலின் ஒலியளவு ஏற அதற்கு ஏற்றவாறு நாகஸ்வரத்தின் ஒலியை ஏற்றாவிட்டால் தார ஸ்தாயி சஞ்சாரங்கள் கூட சன்னமாய்க் கேட்கும் அபாயத்தை உணர்ந்து தனது ஒலியளவை ஏற்றச் சொன்னார் நாகஸ்வர வித்வான்.

நாகஸ்வரம் வெளியில் கேட்டதும் தவில் வித்வான் மீண்டும் சிஷ்யனை ஏவினார். இப்படி மாறி மாறி ஏற்றியதில் – ஒரு கட்டத்தில் அத்தனை விசைகளையும் உச்ச அளவில் வைத்துவிட்டு கேண்டீனுக்குச் சென்றுவிட்டார் சபாவின் ஒலியமைப்பாளர்.

அந்த சிறிய கூடத்தில் சத்தம் மண்டையைப் பிளக்க, நானும் நண்பரும் கேண்டீனுக்கு நகர்ந்தோம்.

கள்ளிச் சொட்டுக் காப்பியை உறிஞ்சியபடி நண்பர் சொன்னார். “தவில் எப்படி உருவாச்சுனு ஒரு செவிவழிக் கதையுண்டு. ராமாயண யுத்தத்தின்போது வெவ்வேற விதமா கும்பகர்ணனை எழுப்பினாங்களாம். வாசிச்சா ஊருக்கே கேட்கறா மாதிரியான வாத்தியத்தை அவன் காதுகிட்ட கொண்டு போய் அடிச்சா முழுச்சிப்பான்னு செஞ்ச வாத்யமாம் தவில். இப்ப வாசிக்கற தவில் வித்வானுக்கு வைத்தீஸ்வரன்கோயில்ல நாடி பார்க்கணும். பூர்வ ஜென்மத்துல அவர் பிறந்த ஊர் இலங்கை. கும்பகர்ணனை எழுப்ப தவில் வாசிச்சது அவர்தான்னு நாடி சொல்லும்.”

அவர் இப்படிச் சொன்னதும், அவர் சொன்ன கதையின் நம்பகத்தன்மையை ஆராயவோ, அல்லது அதை ஒட்டி அவர் செய்த நக்கலை ரசிக்கவோ மனம் செல்லவில்லை. இலங்கையில் உருவான ஓர் உன்னத தவில் வித்வானைப் பற்றி மனத்தில் அலையடித்தது.

இந்த வருடம் நூற்றாண்டு காணும் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான் அந்தக் கலைஞர். ”இலங்கையில் ஏது வலங்கைமான்?” என்று கேள்வி எழலாம். அவரைப் பற்றி தமிழிசைச் சங்க மலரில் வெளியாகியிருக்கும் குறிப்பு, அவர் பிறந்தது திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சேகல் மடப்புரத்தில் என்றும், அவருடைய ஐந்தாவது வயதில் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்துவிட்டது என்றும் கூறுகிறது.

தவிலின் ஆரம்பப் பாடங்களைத் தந்தையிடமும், அதன்பின் இணுவில் சின்னத்தம்பி பிள்ளையிடமும், இராஜகோபால பிள்ளையிடமும் யாழ்ப்பாணத்தில் பயின்றார் ஷண்முகசுந்தரம். சிறப்புத் தேர்ச்சிக்காக பின்னாளில் தவில்மேதை நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்த போதும், அவர் கச்சேரி வாசிக்க ஆரம்பித்த நாட்களில் ‘யாழ்ப்பாணம் ஷண்முகசுந்தரம்’ என்றே அறியப் பட்டிருக்கிறார்.

குருகுலவாசம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்று நல்லபடியாய்த் தொழில் செய்துகொண்டிருந்த போதும் அவர் மனமெல்லாம் தஞ்சை ஜில்லாவும், அங்கு நடக்கும் கச்சேரிகளும் நிரம்பியிருந்தன. அதனால் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள வலங்கைமானுக்குக் குடிபெயர்ந்தார். சில காலங்களில் அது அவருடைய நிரந்தர இடமாகியது. நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,  நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளை வரிசையில் தவில் உலகில் முதன்மைக் கலைஞர் என்ற ஸ்தானம் அவருக்குக் கிடைத்த போது அவர் ‘வலங்கைமான்’ ஷண்முகசுந்தரமாக மாறி இருந்தார்.

அவர் வாசிப்பை நான் முதன் முதலில் மேண்டலின் ஸ்ரீநிவாஸின் இசைப் பதிவுகளில் கேட்டேன். மேண்டலினின் தொனிக்கு அத்தனை பாந்தமாய்ப் பொருந்தியிருந்தது அந்தத் தவில். 1994-ல் அவர் மறைந்த போது ஷண்முகா இதழில் அவர் மேண்டலினுக்கு வாசித்ததைப் பற்றி ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. மேண்டலின் கச்சேரிக்குத் தலைமை தாங்கச் சென்ற ஷண்முகசுந்தரம் பிள்ளை, “இது போன்ற திறமைசாலிக்கு பெரிய பக்கவாத்தியங்கள் முன்வந்து வாசித்து முன்னேற்றிவிட வெண்டும்,” என்று கூறியுள்ளார். அப்போது கூட்டத்திலிருந்து யாரோ எழுந்து, “அப்படியெனில் நீங்களல்லவா முதலில் வாசிக்க வெண்டும்,” என்று கூறியிருக்கிறார். அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்தக் கச்சேரியிலேயே மேண்டலினுக்கு வாசித்துள்ளார். 1985-க்குள் ஸ்ரீநிவாஸனுக்கு மட்டும் 100 கச்சேரிகளுக்கு மேல் வாசித்து ‘செஞ்சுரி’ அடித்துள்ளதாகக் கூறுகிறது அந்தக் குறிப்பு.

படம்: வித்வான் மேண்டலின் ராஜேஷ் அளித்தது

1990-களில் சிறு விழாக்களில் அல்லது திருமண விடியோ பதிவுகளில் மங்கல இசையாக மேண்டலின் இடம்பிடித்ததைக் காணலாம். மேண்டலினின் இனிமையான நாதமும், விறுவிறுப்பும் இதற்குக் காரணங்கள் என்றாலும், வலங்கைமானாரின் வாசிப்பு சேர்த்த கம்பீரத்துக்கும் குளுமைக்கும் அந்தப் பதிவுகளை மங்கல வாத்தியமாக்கியதில் சமபங்கு உண்டு.

இதைச் சொல்லும் போது தவில் வாசிப்பைக் குறிப்பிடும் இடத்தில் குளுமை என்ற சொல் எத்தனை கலைஞர்களின் வாசிப்புக்குப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வெண்டும். அதிலும் கம்பீரத்தை விட்டுவிடாத குளுமை. அந்த அபூர்வ கலவையே அவரை தனித்துக் காட்டியது.

நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையின் இன்னொரு சீடரும், இன்றைய முன்னணி வித்வான்களில் ஒருவருமான தஞ்சாவூர் கோவிந்தராஜன், “தவிலில் ‘தா’ என்கிற சொல்லுக்குச் சொந்தக்காரர் என்று பெயர் வாங்கியவர் ராகவப் பிள்ளை. அவருக்குப் பின் அந்தச் சொல் ஷண்முகசுந்தரம் அவர்களுக்குத்தான் அமைந்தது. தவில் வாசிப்பது என்பது தாளத்துக்கு சரியாக வரும் கணக்கு வழக்குகள் மட்டுமல்ல. நாகஸ்வரக்காரருக்கு, அவர் இசைக்கும் பாட்டுக்கு, உடன் வாசிக்கும் தவில் கலைஞரின் திறனுக்கு ஏற்றாற்போல் வாசித்தால்தான் பரிமளிக்கும். எங்கள் தலைமுறை வித்வான்கள் அதை ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பைத் தேடித் தேடிச் சென்று கேட்டுத் தெரிந்து கொண்டோம்,” என்கிறார்.

கோவிந்தராஜன் சொல்வதன் முழுவீச்சை உணர இந்த உதாரணம் உதவும். இணையத்தில் நாகஸ்வர வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்தினம் வாசித்திருக்கும் சங்கராபரணம் ராகத்தின் பதிவு உள்ளது. அந்த ஆலாபனையில் ஒலிக்கும் தவில் ஒரு நல்ல வாய்ப்பாட்டுக் கச்சேரியில் தேர்ந்த வயலின் வித்வானின் பங்களிப்பை ஒத்து இருப்பதை உணரலாம். வழக்கமாக ராக ஆலாபனையில் நாகஸ்வர வித்வான் ஒரு பகுதியை முடிக்கும் போது தவிலில் சில உருட்டுச் சொற்கள் வாசித்து ஒரு தீர்மானம் வைப்பதைக் கேட்க முடியும். இந்தப் பதிவில் அதற்கும் ஒரு படிக்கு மேல் சென்று நாகஸ்வரத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே சதுஸ்ரத்தில் அழகழகாய், விதவிதமாய் கோவைகளை பன்னீர் தெளித்தது போல வாசித்துள்ளது மொத்த அனுபவத்தை வேறு தளத்துக்கு நகர்த்தியுள்ளது.

வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்னத்துடன்

ராகத்துக்கு வாசிப்பது என்பது ஷண்முகசுந்தரம் பிள்ளையின் சிறப்பு அம்சம் என்று எனக்குச் சொன்னவர் சங்கீத கலாநிதி ஷேக் சின்ன மௌலானாவின் பேரன், நாகஸ்வர வித்வான் காசிம்தான். அவர் கூறிய வேறு சில விஷயங்களிலும் ஷண்முகசுந்தரம் பிள்ளையின் அணுகுமுயை உணர உதவும்.

 “என் தாத்தாவும் வலங்கைமான் தாத்தாவும் 33 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக கச்சேரி வாசித்துள்ளனர். ரேடியோவில் தாத்தாவின் கச்சேரி என்றால் தவில் யாரென்று கேட்கவே வேண்டாம். அது வலங்கைமான் தாத்தாவாக மட்டும்தான் இருக்கும். நான் பார்த்த வரையில் ‘என்ன வாசிக்கப் போகிறீர்கள்?’ என்றோ, ‘எந்தத் தாளத்தில் தனி வாசிக்க வெண்டும்?’ என்றோ, ‘எவ்வளவு நேரம் தனி வாசிக்க வேண்டும்?” என்றோ அவர் என் தாத்தாவைக் கேட்டதேயில்லை. மூன்று மணி நேரக் கச்சேரிக்கு எப்படி வாசிக்க வெண்டும். அரை மணி நேர தொலைக்காட்சிக்கு எப்படி வாசிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் வாசித்தாலும், இரண்டரை நிமிடங்கள் வாசித்தாலும் உடன்வாசிப்பவர் சாதாரண தவில் வித்வான் என்றாலும் கூட அவர் குறை வெளியில் தெரியாமல் கச்சேரி சிறப்பாக அமைந்தது என்று நினைக்கும்படி எப்படி வாசிக்க வேண்டும் என்று அவரைப் போல உணர்ந்து வாசித்த வேறொருவரை நான் கண்டதில்லை.

படம்: வித்வான் எஸ்.காசிம்

… தாத்தாவின் உடல்மொழியைப் பார்த்தே எப்படி வாசிக்க வெண்டும் என்று அவருக்குப் புரிந்துவிடும். ஒருமுறை சென்னை கந்தசாமி கோயிலில் புறப்பாட்டிற்கு தாத்தாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. பல ஊர்களுக்குச் சென்று அடுத்தடுத்து கச்சேரி செய்துவிட்டு சென்னைக்கு வர நேர்ந்தது. அதனால் சற்று தளர்ந்திருந்தார். அன்று தோடி ராகத்தைப் பிரதானமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிப்பில் அந்தத் தளர்ச்சி தெரிந்தது. அதை உணர்ந்த வலங்கைமான் தாத்தா, அனல் பறக்கும் ஃபரன்களாக சில நிமிடங்களுக்கு வாசித்து ஒரு மோராவை வாசித்தார். அவர் முடித்த போது மொத்த சூழலே மாறிவிட்டது. தாத்தாவுக்கு இருந்த களைப்பெல்லாம் போன இடமே தெரியவில்லை. அதற்குப் பின் வாசித்த தோடியை வாழ்நாளில் மறக்க முடியாது,” என்கிறார் காசிம்.

ஷண்முகசுந்தரம் பிள்ளையைப் பற்றி பலர் சொல்லும் விஷயம் ஒன்று உண்டு. பெரிய ஜாம்பவான்களுக்கு வாசித்தாலும், தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்தவர்களுக்கு வாசித்தாலும் அவருடைய அணுகுமுறை ஒரே மாதிரிதான் இருக்கும். சிறியவர்கள் என்பதற்காக  தன்னை அவர் ஒருநாளும் முதன்மைப் படுத்திக் கொண்டதில்லை. வெளியிலிருந்து கச்சேரி பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் தன் வாசிப்பின் மூலம் அனுபவத்தில் குறைவானவர்களை இன்னும் சில நிலைகள் உயர்த்தி வாசிக்கச் செய்தார் என்பதைப் பலர் கூறியுள்ளனர்.

உதாரணமாக வயலின் கலைஞர் குமரேஷ், “நாங்கள் வளர்ந்து வந்த காலத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியோடு பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். ஒரு கச்சேரி அவர் ஊரில் அவரே ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார். நகர சபைகளில் வாசிப்பது போலவே வலங்கைமான் கிராமத்திலும் வாசிக்க வேண்டுமா என்று நாங்கள் யோசிப்பதை உணர்ந்து, “இங்க வாசிக்காத பெரிய நாயனக்காரங்களே இல்லை. இங்க வந்திருக்கறவங்க எல்லாம் அவங்களைக் கேட்டு வளர்ந்தவங்க. கேதாரகௌளை ராகத்தை நல்லா விஸ்தாரமா வாசிங்க தம்பி,” என்று வழிகாட்டினார். அன்று நாங்கள் வாசித்த ராகத்தை அந்த கிராமத்தில் வெகுவாக ரசித்தார்கள். இள வயதில் எங்களுக்கு அது ஒரு பாடமாகவும் அமைந்தது. அவர் பங்கு பெற்ற கச்சேரிகளில் அவர் பக்கவாத்யம் வாசித்தார் என்று சொல்வதைவிட பீஷ்மர் போல கச்சேரியை வழிநடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்,” என்கிறார்.

இன்று தவில் என்பது நாகஸ்வரத்துடன் வாசிக்கக் கூடிய துணைக் கருவி என்ற நிலையில்லை. தவிலுடன் சேர்ந்து வாசிக்காத வாத்யங்களே இல்லை எனலாம். வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் கூட தவில் பக்கவாத்யமாய் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது காணக் கிடைக்கின்றன. தவில் கலைஞர் கச்சேரியின் நாயகனாய் அமர்ந்து வழிநடத்தும் கச்சேரிகளும் உலகின் பல இடங்களில் இன்று சாதாரணமாய் நடப்பவையே. இந்த மாற்றத்துக்கான முதல்படியை எடுத்து வைத்தது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான். எல்.வைத்தியநாதன், எல்.சுப்ரமண்யம், எல்.சங்கர் சகோதரர்களுக்கு வாசிப்பதில் தொடங்கி, மாலியின் குழலுக்கு, ஸ்ரீநிவாஸின் மாண்டலினுக்கு, கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலினிசைக்கு என்று அவர் வாசித்த கச்சேரிகள் ஏராளம். எண்பதுகளில் ஒரு கட்டத்தில் அவர் நாகஸ்வரத்துக்கு வாசிப்பதே அரிது என்ற நிலை கூட இருந்துள்ளது.

முதன்மைக் கலைஞராகவும் புதிய தடங்களை அமைத்தவராகவும் இருந்த ஷண்முகசுந்தரம் பிள்ளைக்கு பல அங்கீகாரங்களும் பட்டங்களும் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை. 1985-ல் மத்திய அரசு அளிக்கும் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். அந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தவில் கலைஞர் அவர்தான். புகழின் உச்சியில் இருந்த போதும் எந்தக் கச்சேரியிலும் தன்னை முன்னிருத்துக் கொள்ள அவர் முயன்றதில்லை. தனக்குத் தெரிந்த அனைத்தையும் வாசிப்பில் கொட்டிவிட வேண்டும் என்று அவசியமில்லை என்பதில் ஸ்திரமாக இருந்துள்ளார். லயத்தில் ஆழ்ந்த தேர்ச்சியைப் பெற்றிருந்த சீதாராம பிள்ளையிடம் அதிகம் வழக்கில் இல்லாத 108 தாளங்கள் உட்பட பல நுணுக்கங்களில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றவர் என்றாலும், “சாகஸத்துக்காக மற்ற நடைகளையோ, அரிய தாளங்களையோ பிரஸ்தாபிப்பதை விட கச்சேரியைப் பரிமளிக்க வைக்க என்ன தேவையோ அதைத்தான் வாசிக்க வேண்டும். நெருடலான விஷயங்களை அவ்வப்போது தொட்டுக் காட்டலாமேயின்றி அவற்றுக்கே பிரதான இடம் அளிப்பதில் எனக்கு ஒப்புதலில்லை,” என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

உயரங்களைத் தொட்ட போதும் சக கலைஞர்களை அவர் மதிக்கத் தவறியதில்லை. அதே வேளையில் தன்மானத்தைக் காத்துக் கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பைப் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த இசை ஆர்வலர் வி.கோ.செந்தில்குமார் நினைவுகூரும் நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

“தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் கலைஞரை அச்சு அசலாகப் பிரதியெடுத்துக் காண்பித்ததற்காக நடிகர் பாலய்யா இன்றும் பேசப்படுகிறார். அவர் அப்படி நடிக்க முன்மாதிரியாகக் கொண்டது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையைத்தான். பாலய்யா இந்த விஷயத்தை ஷண்முகசுந்தரம் பிள்ளையிடம் கூறியபோது, எல்லாம் சரிதான். நான் எப்ப கக்கத்துல துண்டையிடுக்கிட்டு நாயனக்காரர்கிட்ட கையைக் கட்டி நின்னு இருக்கேன், என்று கேட்டாராம். இதை அவர் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்,” என்கிறார்.

அழகுணர்ச்சியைக் கெடுக்காமல் வாசித்த போதும் தன் இருப்பை மனத்தில் பதியும்படி வாசித்த ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை நினைக்கும் போதும் இன்னொரு கச்சேரிப் பதிவு நினைவுக்கு வருகிறது.

சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலனும் நாகஸ்வர வித்வான் மாம்பலம் சிவாவும் சேர்ந்து செய்த கச்சேரியின் பதிவு இணையத்தில் கிடைக்கிறது. லயத்துணைக்கு தவிலில் ஷண்முகசுந்தரம் பிள்ளையும், மிருதங்கத்தில் பெங்களூர் பிரவீனும் சேர்ந்துள்ளனர்.

கச்சேரியில் அவர்கள் வாசித்தது இருக்கட்டும். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் ஒலிப்பெருக்கியை தவிலுக்கு வைத்தால் பாடுவது எடுபடாமல் போய்விடும் என்பதற்காக ஒலிப்பெருக்கியே வைத்துக் கொள்ளாமல் அவர் வாசித்திருக்கும் காட்சியை இன்னொருமுறை மனத்தில் ஓட்டிப் பார்க்கிறேன்.

நாங்கள் அமர்ந்திருந்த கேண்டீனில் யாரோ ஸ்பீக்கருக்கு உயிரூட்டி யிருக்கிறார்கள். கச்சேரிக் கூடத்தில் கேட்ட நாராசம் எங்களைக் கேண்டீனிலும் துரத்துகிறது.

 ‘வலங்கைமானாரே! உங்கள் நூற்றாண்டிலாவது உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் அடக்கமும் அழகுணர்ச்சியும் வாய்க்க ஆசிர்வதியுங்கள்,’ என்று வேண்டியபடி மிஞ்சியிருந்த காப்பியை ஒரே மடக்கில் முழுங்கி வீதியில் இறங்கினோம்.

Read Full Post »

இன்று மிருதங்க மேதை முருகபூபதியின் பிறந்த நாள். பல வருடங்களுக்கு முன் சொல்வனத்தில் அவரைப் பற்றி எழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.

முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.
“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.

சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.

சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.

முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.

cs_m

பழனியைப் போலவே மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.

அரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.
1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.
1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.

1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.

முருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.

Read Full Post »

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.

இந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.

DSC_0097

வலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள்! மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.

இந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா? நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

அதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.

எனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.

பெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.

“அப்பாவுக்கு தவிலில் ஆர்வமா?”

“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”

என் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.

“ஐயா பேரென்னங்க…”

“வலங்கைமான் சண்முகசுந்தரம்….”

“ஆ!!!…”

தூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.

“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”

“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”

“அதனால நாகஸ்வரம் கத்துக்கிட்டீங்களா?”

“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”

“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா?”

“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”

“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?”

“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”

தஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.

“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”

“உங்க கடை எங்க இருந்தது?”

“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”

இசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.

”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா?”

“இல்லையில்லை! அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”

”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க?”

“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”

“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி?”

“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”

”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா?”

“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”

“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா?”

“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”

“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”

“ஆமாம்.”

“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க?”

“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”

”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா?

“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”

“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா?”

“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”

“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா?”

“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என்  பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”

நான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.

நன்றி: இன்மதி.காம்

Read Full Post »

சென்ற ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018-ல், பர்லாந்து விருது 2018-ஐ

திரு.முருகானந்தம் பெற்றார்.

விருது விழாவின் காணொளி இங்கே:

படங்கள் சில:

Read Full Post »

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

மிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.

தன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,

“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.

எங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.

“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா?”, என்று கேட்டார்.

நான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.

”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்?”

“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.

அப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.

”என்ன பர்லாந்து! உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே!”, என்று கேட்டார்.

அதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.

மகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ! உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்!”, என்றார்.

அன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.

அந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.

என் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.

அந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.  ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.

நாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார்.  நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

பெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.

செல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,

“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”

வேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.

ஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க!, என்ன பண்ணினாய்?”, என்று கேட்டார்.

செல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.

மணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.

2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.

Read Full Post »

சென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.

கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.

செபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.

சாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும்,  இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது.  தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.

miruthangam

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.

இந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.

தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.

தன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.

மணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:

ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார்.  உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.

“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.

சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.

அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.

“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”

சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.

அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.

“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.

அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.

“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”

“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”

அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.

“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.

பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.

“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.

இந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.

பலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.

“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.

பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.

”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.

பொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.

Read Full Post »

இன்றைய காணொளியில் பேரி பூஜையைக் காணலாம்.

ஆண்டுதோரும் நடை பெறும் கோயில் திருவிழாவின் தொடக்க சடங்குகளின் ஒன்று. கொடியேற்றத்தை ஒட்டி நடை பெறும் சடங்கில், தவிலை நடுநாயகமாக வைத்து பூஜை செய்து, கலைஞரிடம் கொடுத்து ஒரு சொல்லை மட்டும் முழக்கு சுற்றி வரச் செய்யும் சடங்கு.

முற்காலத்தின் இந்த சடங்கு மயானத்தின் வைத்து இந்தச் சடங்கை செய்தனர். சமீப காலங்களில் கோயில் வளாகத்திலேயே நடை பெருகின்றந்து.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

சென்ற வருடம் நவம்பரில் வலை மேய்ந்து கொண்டிருந்தேன். டிசம்பரில் நடக்கவிருக்கும் கச்சேரிகளின் பட்டியல்கள் வெளியிட்ட நிலையில், எனக்குப் பிடித்த பல கலைஞர்கள் பலருக்கு மிக சொற்பமான அல்லது கச்சேரி வாய்ப்புக அல்லது வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனேன். அவர்களுள் ஒரு சிலரை மட்டுமாவது மேடையேற்றி ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் பரிவாதினியின் 2013 இசை விழா. மொட்டை மாடி கூட காலியாய் இல்லத நிலையில், ஏழு நாள் விழாவை மூன்று இடங்களில் வைத்துச் சமாளித்தோம். எங்களது அனுபவமின்மை, சுமாரான ஒலி அமைப்பு, ஆள் பற்றாக்குறை என்று பல தடங்கல்களை மீறி மனதுக்கு நிறைவாக பல கச்சேரிகள் அமைந்தன. இஞ்சிக்குடி வாசித்த பஹுதாரியும், வீணை பார்த்தசாரதி வாசித்த பெஹாகும், எம்.எஸ்.வித்யா பாடிய யாகப்ரியாவும், மல்லாடி சூரிபாபு பாடிய ஜோகும் என்றும் அகலா நாதத் திவலைகள்.

இந்த வருடம் டிசம்பர் களேபரத்தைத் தவிர்த்து, நவம்பரில் வருகிறது பரிவாதினி இசை விழா.

ஏழு நாட்கள் நடை பெரும் விழாவில் 14 கச்சேரிகள் இடம் பெறவுள்ளன. தினமும் ஒரு வாத்தியக் கச்சேரியும் ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியும் இடம் பெரும். வருங்காலத்தில் உச்சம் தொடப் போகும் இளைஞர்கள் எழுவரும், இன்னும் கொஞ்சம் இவர்களை கேட்க மாட்டோமா என்று நல்ல ரசிகர்களை ஏங்க வைக்கும் முதிர்ந்தவர்கள் எழுவரும் இசைக்க உள்ளனர்.

high resolution banner

இந்தக் கச்சேரி தொடரில் இடம் பெரும் ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் தனித் தனியாய் பதிவிடுகிறேன்.

இசை விழாவுடன் கூட, சென்ற ஆண்டு தொடங்கியுள்ள வருடாந்திர விருதான பர்லாந்து விருது (Fernandes Award of Excellence) இந்த வருடம் தேர்ந்த மிருதங்க வினைஞர் வரதன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிருதங்க மேதை முருகபூபதி அவர்களின் மிருதங்க நாதத்தைப் போஷித்த கைகளுக்குச் சொந்தக்காரர் வரதன்.

அது என்ன பர்லாந்து விருது?

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்ரைச் செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்கலையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட அரிய மிருதங்க வலைஞர்தான் பர்லாந்து. மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை – இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற Fernandes-தான். அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய கதைகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை நானே முன்பு இந்த வலைப்பூவிலேயே எழுதியுள்ளேன். அவர் பெயரால் விருதை சென்ற வருடம் தொடங்கி, பர்லாந்து அவர்களின் மகன் திரு. செல்வத்துக்கு அளித்தோம்.

சென்ற வருட விழாவில் சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும்தான் காரணம்”, என்று உருக்கமாய் கூறிய உண்மை அங்கிருந்தவர்களை சற்றே அசைத்தது.

இந்த விருதையும், வருடாந்திர கச்சேரிகளையும் எல்லா வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டி பல வழியில் முயன்று வருகிறோம். அதில் ஒரு வழி crowd funding. சென்ற வருடமே பல நண்பர்கள் பங்களிக்க விரும்பியதாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த்ச் சுட்டியில் சென்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

https://www.indiegogo.com/projects/parlandu-award-parivadini-concert-series-2014/x/8248462

கச்சேரிகளும், விருது வழங்கும் விழாவும் நடக்கும் இடம் சென்னை ராக சுதா ஹால், மயிலாப்பூர். தேதி – நவம்பர் 12 முதல் 18 வரை.

Read Full Post »

ஒளிரும் துருவ நட்சத்திரம்
லலிதா ராம் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தனக்குத் தெரியும் விஷயங்களை எந்த வித அகம்பாவமும் இல்லாமல் மிகவும் பவ்யமாக ஆனால் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறது. பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பு பாணியிலேயே அமைந்திருப்பது போல் ஒரு நடையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தீவிர ஆராய்ச்சி, பேட்டிகள், அவரது வாசிப்பை புரிந்து கொள்ளும் முயற்சி இவை அனைத்தும் கூடி இருப்பதால் லலிதா ராமுடன் நாமும்  மிருதங்க வாசிப்பில் பலர் எட்ட முடியாத ஞானம், அத்துடன் பாடவும் கூடிய குரல் வளம், அர்ப்பணிப்பு  இவை அனைத்தும்  அமையப் பெற்ற ஒரு கலைஞருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுமே.

மிருதங்கம் என்ற வாத்தியத்தைப் பற்றிய ஆதார பூர்வமான விவரங்கள், அதன் பல வித ஒலிகளின் விளக்கங்கள், அவற்றை விளக்கும் உவமைகள், தாளங்களைப் பற்றிய தகவல்கள், வாசிப்பு முறைகள், கச்சேரி நிகழ்வுகள், பல உன்னதக் கலைஞர்களின் மனோபாவங்கள், உணர்ச்சிகள், நட்புகள், நேசிப்புகள், அகம்பாவம், கர்வம், அடக்கம், மென்மை, கோபம் இவை எல்லாம் அலைஅலையாய் எழும்பி வருகின்றன புத்தகத்தில். மிருதங்கம், கஞ்சிரா இவை ஒலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

மிருதங்கத்தைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு ஏதாவது உண்டா? உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர்? அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது? தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா? அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின்  பெண் — இசை பயின்றாளா? பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை?  இவைகளுக்குப் பதில் கிடைப்பது எளிதில்லை. ஆனால் இவை அத்தனையும் மனத்தில் நிறைகிறது கேள்விகளாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையிலும் அவர் மிருதங்கத்திலும் நாம் ஒன்றிப் போகும்போது.

நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த நாடகமாய்ப் போகிறது புத்தகம். மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஒரு சின்னப் பையனுக்குக் கச்சேரியில் ஐந்து முறை தனி ஆவர்த்தனம் விடும் செம்பை, பாடகரும் தாள வாத்தியக் கலைஞர்களும் விட்டுக்கொள்ளும் சவால்கள், புறா குமுறுவது போல் என்று பலர் உவமிக்கும் கும்கிகள், ஃபரன்கள், தாள கதிகள் இவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

இறக்கும்போது கூட விரல்களை மிருதங்கம் வாசிப்பது போல் அசைத்தபடி இறக்கும் கலைஞர்கள் நிஜமாகவே இறப்பதில்லை என்று தோன்றுகிறது. லலிதாராம் போன்ற ரசிகர்கள் அவர்களை உயிர்ப்பித்தபடி இருப்பார்கள்.

(லலிதா ராமின்) பி.கு: துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்துவிட்டது. முதல் பதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் நேரமில்லை. ஆதலால் இரண்டு தகவல் பிழைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை புத்தகச் சந்தையில் இன்று முதல் கிடைக்க வாய்ப்புள்ளது. டிஸ்கவரி புக் பாலஸின் ஸ்டாலில் கிடைக்கும்.

Read Full Post »

Older Posts »