Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘personality’ Category

கடந்த வாரம், ஜி.என்.பி-யின் 53-வது நினைவு நாளன்று, சென்னை ராகஸுதா அரங்கில், என் ”இசையுலக இளவரசர்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.

அதையொட்டி, அன்று ஜி.என்.பி-யின் இசையைப் பற்றி ஓர் உரையை பவர்பாயிண்ட் உதவியுடன் வழங்கினேன்.

அந்த உரையை மேலுள்ள சுட்டியில் காணலாம்.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

Read Full Post »

காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை சென்ற சில வாரங்களில் பலர் எழுத பார்க்க முடிந்தது.

இந்தக் கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொண்ட போதெல்லாம் ஒரு பாடல் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

T N Seshagopalan

CHENNAI, TAMIL NADU, 08/09/2014: Carnatic singer Madurai T.N. Seshagopalan during an interaction in Chennai on september 08, 2014. Photo : K.V. Srinivasan

“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார்…”

அதுவும் சேஷகோபாலன் குரலில்.

போன வாரத் தொடக்கத்திலிருந்து கேட்டே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் பரபரத்தது. நேரில் பலமுறை அவர் பாடிக் கேட்டிருந்தாலும் – கைவசம் ஒலிப்பதிவில்லை. இணையத்திலும் என் மேம்போக்கான தேடலில் அகப்படவில்லை.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து செஷகோபலன் அவர்களின் மகன் கிருஷ்ணாவுக்கு செய்தி அனுப்பினேன்.

“குடிகாரனுக்கு கைநடுங்கறா மாதிரி துடிப்பா இருக்கு. சீக்கிரம் அனுப்புங்க”, என்று கெஞ்சினேன்.

இன்று காலை அந்த அற்புதத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.

“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார் சொல்வாய்”

அந்த கமாஸ்!

ஐயோ!

சொல்லி மாளுமா அந்த சௌந்தர்யத்தை?

சுந்தரிக்கும் சொப்பனத்திக்கும் இடைப்பட்ட அந்த “என்”னில் குரலைக் குறுக்கி மெல்லினமாக்கி சொப்பனத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வளர விடும் அந்த சாமர்த்தியத்தை!

சங்கதிக்கு சங்கதி விரிந்து பரவும் அந்த சொப்பனம்….

அதுதான். அதேதான்!

நிச்சயமாய் சொல்வேன் – சேஷகோபாலன் குரலில் ஒலிக்கும் சுந்தரியில் வரும் “சொப்பனம்”தான் காதல்.

Read Full Post »

2014 டிசம்பரில் தினமலரில் வெளியான கட்டுரை

கச்சேரி மேடையில் சோபிக்கும் கலைஞர்கள் எல்லோருக்கும் சங்கீத இலக்கணத்தில் ஆழ்ந்த தேர்ச்சி இருக்கக் கூடும் என்று சொல்வதற்கில்லை. இலக்கண நூல்களில் ஆய்வாளர்களாக விளங்குபவர்கள் எல்லோரும் தேர்ந்த கச்சேரி வித்வான்களாக இருப்பதில்லை. செவ்வியல் இசையில் ஆய்வாளர்களை எடுத்துக் கொண்டால் சமஸ்கிருத நூல்களில் தேர்ச்சி உடையவர்களுக்கு பழந்தமிழ் நூல்களில் பரிச்சியம் இருப்பதில்லை. தமிழிசை ஆய்வு செய்பவர்களுள் பலருக்கு வடமொழித் தேர்ச்சி இருப்பதில்லை. மேற்சொன்னவற்றை ஒருசேரப் பெற்றவர்களைப் பற்றி நினைக்கும் போதே தொன்றும் முதல் பெயர் டாக்டர் எஸ்.இராமநாதன்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் ‘சங்கீத பூஷண’ பட்டயப் படிப்பில் சேர்ந்ததன் மூலம் திருவையாறு சபேஸ ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்களிடம் தன்னைப் பட்டைத் தீட்டிக் கொண்ட எஸ்.இராமநாதன், இள வயது முதலே இசை ஆய்விலும் முனைப்போடு செயல்பட்டு வந்தார். வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ந்து விளங்கிய அவரது கச்சேரி வாழ்க்கையோடு ஆய்வு வாழ்க்கையும் இரண்டரக் கலக்க அவர் பணியாற்றிய பல்வேறு பல்கலைகழகங்கள் பெரிதும் உதவின.

1950-களில் இராமநாதன் வெளியிட்ட “சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்” என்கிற நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் வெஸ்லியன் பல்கலைகழகத்தில் இந்தத் தலைப்பிலேயே ஆய்வினைத் தொடர்ந்து முனைவர் பட்டத்தினையும் பெற்றார். ஐ.நா சபையில் அவருக்குக் கிடைத்த கச்சேரி வாய்ப்பை அவரது இசை வாழ்வின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதலாம்.

இந்தியா திரும்பிய இராமநாதன் கர்நாடக இசை பயிற்றுவிப்பவர்களுள் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டார். அந்த நிலையிலும் தன்னை ஒரு முதல் நிலை மாணவனாகக் கருதி புதியனவற்றை தினம் தினம் திரட்டித் தொகுத்தது அவரது சிறப்பம்சமாகும்.

இராமநாதன் எவ்வளவுக்கு எவ்வளவு சிறந்து கலைஞரோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த ரசிகர். 22 ஸ்ருதிகள், ராக லட்சணங்கள் போன்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைகள் சங்கீத விற்பன்னர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றால் தியாகராஜருடன் ஒரு நாள், பாமரர்க்கு இசை போன்ற தலைப்புகளில் அவர் கொடுத்த விரிவுரைகளை சாதாரண ரசிகர்கள் இன்றளவும் நினைவில் வைத்துள்ளனர்.

பி.ராஜம் அய்யருடன் சேர்ந்து சுப்பராம தீட்சிதரின் சங்கீத சம்பிரதாய பிரதர்ஷணியை தமிழாக்கம் செய்தார். பாரதியாரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் போன்ற பல தமிழ்ப் பாடல்கள் பாதுகாக்கப்பட்டு பரவ எஸ்.இராமநாதன் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பெரியது.

எத்தனையோ பட்டங்கள் தேடி வந்து அலங்கரித்த போதும், எந்தவித படாடோபமும் இன்றி சீனிவாஸ சாஸ்திரி ஹாலில் அமர்ந்தபடி முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞரை ஊக்கிவிக்கும் ரசிகராய் இருப்பதையே பெரிதும் விரும்பினார். சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய இராமநாதனின் பெயர் இன்று அவருடைய நூல்களாலும் அவர் உருவாக்கிய மாணவர்களாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டு வருகிறது.

பி.கு: டாக்டர் ராமநாதனின் நூற்றாண்டு விழா நாளை மாலை 5.00 மணிக்கு சென்னை வாணி மஹாலில் நடை பெறுகிறது.

Read Full Post »

இன்று ஏனோ சுகுமார் பிரசாதின் பஹுதாரி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.

பஹுதாரியை இங்கு கேட்கலாம்

2014-ல் தினமலரில் அவரைப் பற்றி எழுதிய பத்தி.

கர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், ‘கிதார் பிரசன்னா’ என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.

இணையம் தேடலுக்கும் பகிர்வுக்குமான களமானத்திலிருந்து, சில மாதங்களுக்கு ஒருமுறை, யாரேனும் ஒருவர், சுகுமார் பிரசாத் வாசித்த பஹுதாரி ராகத்தை, அந்த ராகத்தில் இசைத்துள்ள ‘ப்ரோவ பரமா’ பாடலை கேட்டுவிட்டு பதிவிடுவது வாடிக்கை.

“அவரைப் பற்றி மேலும் தேடினேன். குறிப்பிடும்படியாய் எதுவும் கிடைக்கவில்லை. இன்று அவர் எங்கு இருக்கிறார்? அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா? கச்சேரி பதிவுகள் கேட்கக் கிடைக்குமா?” என்ற ரீதியில் அந்தப் பதிவு இருக்கும்.

இணையத்தின் பல்லாயிர மாயக் கரங்களின் வழிகாட்டலில் அவரை ஒருமுறை நேரில் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கப்பதிவுகள் ஏராளமாய் இணையத்தில் உண்டு.

இசைச் சூழலில் வளர்ந்து, சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனிடம் பயின்ற சுகுமார் பிரசாத், மிருதங்கத்திலும் தேர்ச்சியுற்று, பல முன்னணி வித்வான்களுக்கு வாசித்துள்ளார். 1970-களில் கிதாரில் கர்நாடக இசையை வாசிக்க துவங்கினார்.

அவரைக் கேட்டவர்கள்,’துரதிர்ஷ்டவசமாய் அவர் வாசிக்க வந்த காலத்தில், அவருக்கு போதிய உற்சாகம் அளிக்கப்படவில்லை. கிதார் போன்ற கருவியில், கமகங்கள் நிறைந்த கர்நாடக இசையைக் கேட்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு இல்லை’ என்கின்றனர்.

கடந்த, 1980-களில், மாண்டலின் ஸ்ரீனிவாசின் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறத் துவங்கியது. 1980-களில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சுகுமார் பிரசாத்தின் கச்சேரிகள் நடந்துள்ளன. அதன் பின், சுகுமார் பிரசாத் இசை உலகத்திலிருந்து மாயமாய் மறைந்தார். அவர் ஆதிபராசக்தி குழுமத்தில் இணைந்துவிட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அவர் வாசிப்பைக் கேட்கும்போது அவருக்குள் ஊறி வெளிப்படும் இசை, அவர் வாழ்வு முழுவதும் அவர் ரத்தத்தோடு கலந்துதான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைஞனின் கரங்கள், இசைக்காமல் இத்தனை ஆண்டுகள் சும்மா இருக்க முடியுமா? அவை இன்றும் இசைக்கின்றன என்றால் அதைக் கேட்க ஏதேனும் வழியுண்டா?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில்,”நான் வாசிக்க வந்த புதிதில் கிருஷ்ண கான சபை போன்ற இடங்களில், அவர் இசையை பெரிதும் விரும்பிச் சென்று கேட்டுள்ளேன். அவர் திரும்பி வர வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். சுகுமார் பிரசாத் திரும்பி வருவாரா? அவரைக் கேட்கும் பேறு நமக்குக் கிடைக்குமா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Read Full Post »

2014-ல் தினமலரில் பதினைந்து கட்டுரைகள் டிசம்பரில் எழுதினேன். அவற்றை இங்கு வெளியிடவில்லை. இன்று கல்யாணராமனின் பிறந்த நினைவு நாளை சாக்காக வைத்து அவரைப் பற்றி எழுதியதை இங்கு வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர் எஸ் கல்யாணராமன்

Thanjavur S Kalyanaraman

முன்னோடி கலைஞர்களில் சிலர் அவர்கள் பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னால் பிறந்துவிடுவதுண்டு. அதனாலேயே அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் கிடைக்காமல் போய்விடுகிறது. இத்தகைய கலைஞர்களே, “அவர் மறைந்தாலும் அவர் இசை சிரஞ்சீவியாய் இருக்கும்”, என்ற சம்பிரதாய மொழிக்கு அர்த்தம் அளிப்பவர்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளுள் முதன்மையானவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்.

கல்யாணராமனைப் பார்த்தேயிராத இன்றைய இளைஞர்களுக்கு அவருடைய சங்கீதமே ஆதர்சமாக விளங்குகிறது. மனத்தின் கற்பனை ஓட்டங்களுக்கு மனிதனின் குரல் ஓரளவுக்குத்தான் ஈடு கொடுக்க முடியும். கல்யாணராமனின் ஆய்வு நோக்கும் தீரா முயற்சியும் மனிதக் குரலின் சாகஸங்களுக்கு எல்லையேயில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.

புதுமைக்குப் பெயர் போன ஜி.என்.பி வழியில் வந்த கல்யாணராமன், தன் குருவின் பாணியை அப்பட்டமாய் பின்பற்றாமல் இள வயது முதலே தனக்கென வழியை வகுத்துக் கொண்டார். இசையை தன் வளர்ச்சிக்கான கருவியாய் கருதாமல் தன்னை இசையின் வளர்ச்சிக்கான கருவியாய் நினைத்துக் கொண்ட கல்யாணராமனின் விஸ்வரூபம் அவர் சமகாலத்தினவருக்குக் கண்கூச வைத்தது.

ஸுசரித்ரா, சந்திரஜோதி போன்று யாரும் தொட்டிராத விவாதி ராகங்களைக் கையாளுதல், நுட்பமான தாள அமைப்பில் நடை பல்லவிகளைப் பாடுதல், பிரமிக்க வைக்கும் கிரகபேதங்களை செய்தல், மேளகர்த்தா ராகங்களில் பஞ்சமத்தைத் தவிர்த்து இரு மத்யமங்களையும் வைத்துக் கொண்டு ”பஞ்சம வர்ஜ த்விமத்யம ராகங்கள்” என்று ஒரு புதிய ராக வகையயே உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்தல் என்று கல்யாணராமன் புகுத்திய புதுமைகள் இன்றுதான் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளப்படுகின்றன.

ஆழ்வார் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதிகள் போன்றவற்றை கல்யாணராமனின் அரிய ராகத்தில் அமைந்த அற்புத மெட்டுக்கள் அலங்கரிக்கின்றன. மாயையை பழித்தல் என்ற பாரதி பாடலுக்கு ஸுமனிஸரஞ்சனியின் கல்யாணராமன் அமைத்திருக்கும் மெட்டின் அழகை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலுவில்லை. கேட்டுத்தான் உணர வேண்டும். இன்று பிரபலமாய் விளங்கும் “கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி” பாடலின் மெட்டும் கல்யாணராமனின் கைவண்ணம்தான்.

இசை கற்பிப்பதில் கல்யாணராமன் ஒரு துரோணர்தான். தன்னிடம் வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதால் மட்டுமல்ல! தன் இசையால் தன்னைப் பார்த்தேயிராத சந்ததியனரையும் ஏகலைவர்களாய் மாற்றுவதால்!

Read Full Post »

இந்த சௌக்யமனி…

நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன் வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் பற்றியும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. நான் எழுதாவிடில் (தமிழில்) வேறு யாரும் எழுதவும் மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றுவதால் இந்த உந்துதல்.

கலைஞர் – சீதா நாராயணன். இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன். ஏற்கெனவே இவரைப் பற்றி யாராவது விவரமாக எழுதியுள்ளார்களா என்று கூகிளாண்டவரைக் கேட்டால் – ரஞ்சனி – காயத்ரி இவரிடம் பல பக்திப் பாடல்களைக் கற்றுள்ளனர் என்ற செய்தியை மட்டும் பல தளங்களில் மாறி மாறிக் காட்டினார்.

Vid. Seetha Narayanan

Vid. Seetha Narayanan

சரி இருக்கட்டும்!

கச்சேரி – 26 டிசம்பர் 2016.
இடம் – சங்கீத வித்வத் சபை.
நேரம் – காலை 9.30.

கச்சேரி 9 மணிக்குத் தொடங்கியிருக்கும். நான் அரங்குக்குச் செல்ல 9.30 ஆகிவிட்டது. நான் சென்ற போது பைரவி ராகத்தில் “ஜனனி மாமவ” பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். பாடுவதில் வல்லினம் மெல்லினம் வெளிப்பட வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு எந்த சங்கதி பாடினாலும் ஆஸ்பத்திரி ஐ.சி.யூ-வின் ஈ.சி.ஜி கிராஃப் போல குரலின் அளவை ஏற்றி ஏற்றி இறக்கும் சகோதர/சகோதரி/தாயாதி/இஷ்ட/மித்ர/பந்து இன்னபிற வகை கோஷ்டி கானப் பாடகர்கள் பொட்டில் அறைந்தார் போல் அவர் பாடிய விதம் அமைந்திருந்தது.

பைரவிக்குப் பின் இரண்டு நிமிடத்துக்கும் குறைவாய் சில கீற்றுகளில் கமாஸும் காம்போஜியும் கலக்காத சுத்தமான ஒரு ஹரிகாம்போஜி. ”ஒக மாட, ஒக பாண” கிருதியை கம்பீரமாய் பாடி வெகு அழகான கோவைகளில் ‘சிரஞ்சீவியில்’ பாடிய ஸ்வரங்கள் என் மனத்துள் சிரஞ்சீவியாகத்தான் இருக்கும். இந்தப் பாட்டுக்கும் மற்ற பாட்டுகளுக்கும் வெகு பொருத்தமாய் மிருதங்கம் வாசித்த ஏ.வி.மணிகண்டனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரை இதற்கு முன் கேட்டதில்லை. கையில் நல்ல நாதம். விறுவிறுப்புக்கு குறைவில்லாத ஆனால் வாத்யத்தை அடிக்காத வாசிப்பு. இடக்கை வலக்கையின் சேர்க்கை அளவாய் அழகாய் பாட்டை மெருகேற்றுகின்றன. ஏ.எஸ்.கிருஷ்ணன் மோர்சிங்கில் தேர்ந்த கை. அவர் அழகைக் குலைக்காமல் வாசித்ததில் ஆச்சரியமில்லை.

அன்றைய பிரதான ராகமாய் காபியை எடுத்துக் கொண்டார். என் அருகில் அமர்ந்திருந்த குழல் வித்வான் ஜெயந்த் நிமிஷத்துக்கு நிமிஷம் பரவசமடைந்து கொண்டிருந்தார். காபியின் காந்தாரத்தில் சில பொறுக்கியெடுத்த பிடிகளைப் பாடிவிட்டு விரைவில் ஆலாபனை மேல்நோக்கி நகர்த்தினார். சீக்கிரம் முடித்துவிடுவார் என்ற நினைத்த போது நிஷாதத்திலும் ஷட்ஜத்திலும் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி எண்ணற்ற ராக அலைகளை ஆர்பாட்டமில்லாமல் எழுப்பிக் காட்டினார். 75 வயதிலும் தார ஷட்ஜத்தில் ஜொலிக்கும் தங்கமாய் ஸ்ருதியை கவ்வும் இந்தக் குரலை அவரது இள வயதில் கேட்டவர்கள் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும்.

“இந்த சௌக்யமனினே ஜெப்பஜால” அடுத்து வந்த பாடல் (அது மட்டுமா?).

“ஜெப்ப ஜால”-வில் ஒரு பிருகா சங்கதி – வைரக் கீற்று. விழுந்த அத்தனை ஸ்வரங்களும் சுத்தமாய் தெளிவாய், ஒவ்வொன்றையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற வகையில் இருந்தன.

ஸாரத்துக்கும் ஸாரம் என்று ஒருபாடலில் தியாகராஜர் ராமனைப் பாடுகிறார். “ஸ்வர ராக ஸுதா ரஸ”-வில் பாடிய நிரவல் ஸ்வரமும் ராகத்தின் ஸாரத்துக்கு ஸாரம்தான். தொடர்ந்த தனியில் திஸ்ரம், கண்டம் என்று கணக்குகளுக்குள் போகாமல் பாடகரின் ஸ்வரப்பிரஸ்தாரம் ஏற்படுத்திய ஏகாந்த சூழலை ஒட்டியே லய வித்வான்களின் வாசிப்பு அமைந்தது.

தனிக்குப் பின் நாசிகாபூஷணி ராகத்தை பல்லவி பாட எடுத்துக் கொண்டார். ரிஷபமும் காந்தாரமும் விவாதியாய் கூடி எழுப்பும் கம்பீரத்தை, சதுஸ்ருதி தைவதத்தின் குழைவுடன் கலந்து கொஞ்சம் பிரதிமத்யத்துக்கே உரிய பெண்மையை தூவினாலும் கூட ராக ஸ்வரூபம் முழுமையாகக் கைகூடாமல் ஆங்காங்கே ஒட்ட வைத்தது போன்ற ஆலாபனைகளையும் நிறைய கேட்கக் கிடைக்கக் கூடம். அன்று சீதா நாராயணன் பாடிய ஒவ்வொரு பிடியும் “நான் நாசிகாபூஷணி” என்று பறைசாற்றிய படி வந்து அரங்கை நிரப்பின. இரண்டு காலங்களில் தானம் பாடி பல்லவிக்குள் நுழைந்தார்.

“கன்யாகுமாரி பிரசித்த நாசிகாபூஷண தாரிணி” என்ற மிஸ்ர ஜம்பை பல்லவி.

எடுத்துக் கொண்ட ராகத்தின் பெயர் அழகாய் வரும்படியும் இந்த வருட சங்கீத கலாநிதியை கௌரவப்படுத்தும் வகையிலும் அமைந்த பயமுறுத்தாத பல்லவி.

நினைவிலிருந்து எழுதுவதில் தவறிருக்கலாம், பல்லவி எடுப்பு நான்கு தள்ளி என்று ஞாபகம். நிரவலில் கீழ் காலம் நிரவல், துரித கால நிரவல் இரண்டையும் விட மத்யம கால நிரவல் பாடுவது சுலபமானதன்று. மத்யம காலத்தை தொடங்கிய சில ஆவர்த்தங்களில் தன்னிச்சையாய் பாடகர் துரித காலத்துக்குள் இழுத்துக் கொள்ளப்படுவதை கச்சேரிகளில் கண்டு கொள்ளமுடியும். இந்தக் கச்சேரியில் விஸ்ராந்தியாய் மத்யம கால நிரவல் கேட்கக் கொடுத்து வைத்தது.

சிறந்த பல்லவிகள் நுணுக்கம் தெரியாத ரசிகனை ராக பாவத்தில் அடித்துச் செல்லும், விஷயம் தெரிந்த ரசிகனை (மாணாக்கனை) திரும்பிப் பார்க்கவும் வைக்கும். மேற்சொன்ன பல்லவியில் நாசிகாபூஷணியின் சௌந்தர்யத்தையும் மீறி லய வேலைபாடுகள் விரிந்து மிளிர்ந்தன.

இரண்டு களை பல்லவியில் திரிகாலமும், திஸ்ரமும் பாடி ஸ்வரம் பாடுவதற்கு முன் ஒரு களையாய் மாற்றிக் கொண்டார். ”கன்யாகுமாரி”, “பிரசித்த” “தாரிணி” ஆகிய மூன்று இடங்களுக்கு அழகான பொருத்தங்களுடன் ஸ்வரம் பாடிய பின், பல்லவியை நாலு களை வேகம், இரண்டு களை வேகம், ஒரு களை வேகம் என்று மீண்டுமொரு திரிகாலம் செய்து காண்பித்தார்.

அன்றைய கச்சேரியில் உச்சம் என்று நான் நினைப்பது ராகமாலிகை ஸ்வரத்தில் அவர் பாடிய ஸாவேரியைத்தான். எதிர்பாரா முத்தாய்ப்பாய் விழுந்த பொருத்தத்தை பல்லவியின் “தாரிணி” என்ற இடத்துக்கு ஸ்வராக்ஷரமாய் முடித்த போது எழுந்த உணர்வை எப்படிச் சொல்லி எழுதினாலும் தட்டையாகத்தான் இருக்கும்.

காலை வேளைக்கு ஒரு ராகம். அந்த ராகத்தில் ஜீவன் கேடாதபடி ஸ்வரப் பிரயோகம், சட்டென்று அகப்பட்டுவிடாத ஒரு லயப் பொருத்தம், அந்தப் பொருத்தம் கொண்டு சேர்க்கும் இடம் பல்லவியின் தொடக்கமல்லாத இடம், அங்கு விழும் சொல்லைப் பிடிக்க வேண்டியது ஸ்வராக்ஷரமாய் என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டு பாட்டு பாடினால் ராக தேவதையைக் கூப்பிட்டி வைத்து வரிவரியாய் கம்பியின் வீரினாற்போல் ஆகிவிடும். ஸ்வானுபூதியாய் பாடகர் தன்னை இழக்கும் போது கலை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் கணத்தில்தான் இத்தகைய அற்புதங்கள் வெளிப்படக் கூடும். பெஹாகும், ரஞ்சனியும் அவர்பாடிய மற்ற ராகங்கள் என்று நினைக்கிறேன்.தாரிணியின் தாக்கம் என்னை அவற்றை ஒழுங்காக கவனிக்க விடவில்லை.

பல்லவிக்குப் பின் பாகேஸ்ரீயில் பாடிய துளஸிதாஸர் பஜனும்,. விருத்தமாய் பாடிய கந்தரலங்காரத்தைத் தொடர்ந்து ஒலித்த “குரலினைத் தருவாய் குருநாதா”-வும் தானும் உருகி தன்னைச் சுற்றியோரையும் உருக்கும் வகை என்னுடன் கேட்ட மற்றவர்கள் கூறிக் கேட்டேன். என் மனம் அந்த தாரிணியின் சௌந்தரியத்தில்தான் இந்த நிமிடம் வரை திளைத்துக் கொண்டிருக்கின்றது.

என்னைக் கவலைகள் தின்னாத அந்தத் திங்கட்கிழமை காலையைப் பற்றி வேறு என்ன சொல்ல?

“இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால?”

Read Full Post »

ஒளிரும் துருவ நட்சத்திரம்
லலிதா ராம் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தனக்குத் தெரியும் விஷயங்களை எந்த வித அகம்பாவமும் இல்லாமல் மிகவும் பவ்யமாக ஆனால் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறது. பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பு பாணியிலேயே அமைந்திருப்பது போல் ஒரு நடையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தீவிர ஆராய்ச்சி, பேட்டிகள், அவரது வாசிப்பை புரிந்து கொள்ளும் முயற்சி இவை அனைத்தும் கூடி இருப்பதால் லலிதா ராமுடன் நாமும்  மிருதங்க வாசிப்பில் பலர் எட்ட முடியாத ஞானம், அத்துடன் பாடவும் கூடிய குரல் வளம், அர்ப்பணிப்பு  இவை அனைத்தும்  அமையப் பெற்ற ஒரு கலைஞருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுமே.

மிருதங்கம் என்ற வாத்தியத்தைப் பற்றிய ஆதார பூர்வமான விவரங்கள், அதன் பல வித ஒலிகளின் விளக்கங்கள், அவற்றை விளக்கும் உவமைகள், தாளங்களைப் பற்றிய தகவல்கள், வாசிப்பு முறைகள், கச்சேரி நிகழ்வுகள், பல உன்னதக் கலைஞர்களின் மனோபாவங்கள், உணர்ச்சிகள், நட்புகள், நேசிப்புகள், அகம்பாவம், கர்வம், அடக்கம், மென்மை, கோபம் இவை எல்லாம் அலைஅலையாய் எழும்பி வருகின்றன புத்தகத்தில். மிருதங்கம், கஞ்சிரா இவை ஒலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

மிருதங்கத்தைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு ஏதாவது உண்டா? உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர்? அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது? தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா? அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின்  பெண் — இசை பயின்றாளா? பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை?  இவைகளுக்குப் பதில் கிடைப்பது எளிதில்லை. ஆனால் இவை அத்தனையும் மனத்தில் நிறைகிறது கேள்விகளாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையிலும் அவர் மிருதங்கத்திலும் நாம் ஒன்றிப் போகும்போது.

நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த நாடகமாய்ப் போகிறது புத்தகம். மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஒரு சின்னப் பையனுக்குக் கச்சேரியில் ஐந்து முறை தனி ஆவர்த்தனம் விடும் செம்பை, பாடகரும் தாள வாத்தியக் கலைஞர்களும் விட்டுக்கொள்ளும் சவால்கள், புறா குமுறுவது போல் என்று பலர் உவமிக்கும் கும்கிகள், ஃபரன்கள், தாள கதிகள் இவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

இறக்கும்போது கூட விரல்களை மிருதங்கம் வாசிப்பது போல் அசைத்தபடி இறக்கும் கலைஞர்கள் நிஜமாகவே இறப்பதில்லை என்று தோன்றுகிறது. லலிதாராம் போன்ற ரசிகர்கள் அவர்களை உயிர்ப்பித்தபடி இருப்பார்கள்.

(லலிதா ராமின்) பி.கு: துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்துவிட்டது. முதல் பதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் நேரமில்லை. ஆதலால் இரண்டு தகவல் பிழைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை புத்தகச் சந்தையில் இன்று முதல் கிடைக்க வாய்ப்புள்ளது. டிஸ்கவரி புக் பாலஸின் ஸ்டாலில் கிடைக்கும்.

Read Full Post »

Older Posts »