இன்று காலை வயலின் வித்வான் ராகுல் சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனைப் பற்றிய காணொளியை அனுப்பியிருந்தார்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஓடும் அந்தப் படத்தை நிரப்பியிருக்கும் சந்துரு ஸாரில் கள்ளமில்லா சிரிப்புக்காகவே படத்தைப் பார்க்கலாம்.
அவர் வாசித்த பல கச்சேரிகளை நேரில் கேட்டிருக்கிறேன். அவர் வாசிப்பு இருக்கட்டும், மேடையில் அவர் தோற்றமே களை கட்ட வைத்துவிடும். வித்வான் என்பதைவிட முதல் ரசிகர் அவர். படத்தில் திரு.சேஷகோபாலன் கூறியுள்ளது போல, ஒரு நல்ல சங்கதிக்கு முதல் அங்கீகாரம் சந்துரு ஸாரிடமிருந்து வந்துவிடும்.
நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் வோலேடி வெங்கடேஸ்வருலு கச்சேரியில் சந்துரு ஸார் வாசித்திருக்கும் பூர்விகல்யாணியை அவர் வாசிப்புக்காகவே பலமுறை கேட்டுள்ளேன். அளவுக்கு மீறாத அமுதம் அந்த ஆலாபனை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால் திருவையாறு உற்சவத்தில் அந்து நிமிடத்துக்கும் குறைவாய் அவர் வாசித்த கல்யாண வசந்தம் அந்த மணல் தரையில் கூடியிருந்த ஆயிரக் கணக்கானோரை சொக்கிப் போக வைத்ததை இன்றளவும் மறக்க முடியாது.
இந்தப் படத்தில் மின்னல் கீற்றாய் ஒலிக்கும் அந்த சின்ன ஆபேரியும் இன்று அந்தக் கல்யாண வசந்தத்துடன் சேர்ந்து கொண்டது.
இந்தக் காணொளியை ஆவணப்படம் என்பதைவிட ஒரு கொண்டாட்டம் என்று சொல்லத் தோன்றுகிறது. கொண்டாட்டத்தின் நாயகனை நமக்களித்த சாருபாலா அவர்களுக்கும், அந்தக் கொண்டாட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட ராகுலுக்கும் நன்றி.