Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

இரண்டு நற்செய்திகள்

விஜய தசமி அன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.

இலக்கிய உலகத்துக்கும், இசை உலகத்துக்கும் தினமணி சிவகுமார் நன்கு தெரிந்த பெயர்தான்.

தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பில் அவர் சாதித்தவை ஏராளம் என்றாலும் அவர் வருடா வருடம் மார்கழி மாதத்தின் போது இசை மலராய்த் தொகுத்த தினமணி கதிர் இதழ்கள் மட்டுமே கூடத் தனிப்பெரும் சாதனையாகக் கருதத்தக்கவை.

அவருடைய தினமணி நாட்களுக்குப் பிறகு அத்தகு மலர் தயாரிப்புகள் நின்று போயின என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த வருத்தமுண்டு.

இதைப் பற்றி எத்தனையோ முறை நாங்கள் பேசியிருந்தாலும், இந்த வருடம்தான் அத்தகைய வருடாந்திர இசை மலரை பரிவாதினி வெளியீடாகவே தயாரித்தாலென்ன என்கிற எண்ணம் எழுந்தது.

இந்த மார்கழிக்கு மீண்டுமொருமுறை சிவகுமாரின் தயாரிப்பில் இசை மலர் வெளியாகவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சிவகுமார் – பழைய விஷயங்களின் காதலர். கதிர் போன்ற பத்திரிக்கைக்கு உள நிர்பந்தங்களுக்கு இடையிலும் கணிசமான அளவு பழைய செய்திகளைத் தொகுத்து ஆவணப்படுத்திவிடுவார். இந்தமுறை அத்தகு நிர்பந்தம் ஏதும் இல்லாத சூழலில் மலரப் போகும் மலரை நினைத்தாலே எனக்குப்பரவசமாக இருக்கிறது.

இரண்டாவது அறிவிப்பு உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தராது என்று நினைக்கிறேன். கடந்த வருடங்களில் இரண்டு நாட்காட்டிகளை – கலைஞர்களை கௌரவிக்கும் வ்சகையில் பரிவாதினி வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இந்த முறை காருகுறிச்சியாரின் நூற்றாண்டை முன்னிட்டு காருகுறிச்சி சிறப்பு வெளியீடாகைந்த நாட்காட்டி வெளிவரும்.

இசை மலரையும், நாட்காட்டியையும் சேர்ந்தே வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன்.

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் நாம் அறியாத எத்தனையோ விஷயங்களை அறியும் வாய்ப்பு அமைந்துள்ளது.


அந்த வகையில் நான் அறிந்து கொண்டது பெண் நாகஸ்வர கலைஞர்களைப் பற்றி.


கடந்த சில வருடங்களாக நாகஸ்வர கலைஞர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், பெண் நாகஸவர கலைஞர்கள் என்றால், என் மனத்துள் அந்த வரிசை மதுரை பொன்னுத்தாயி அம்மாளிடம் தொடங்கி சமீபத்தில் பத்ம விருது பெற்ற கலீஷாபி மெஹ்பூப் அவர்களுடன் முடிந்துவிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசித்ததே இல்லை.


பேரிடரின் இரண்டாம் அலையின் போது நண்பர் சரவணன், ‘பெண் கலைஞர்களுக்கு உதவ என்று பிரத்யேகமாய் முயற்சி எடுக்கலாமா?’,என்று கேட்டார். அந்த முயற்சியின் போதுதான் தென்னிந்தியாவில் இத்தனை பெண் கலைஞர்கள் நாகஸ்வரத்தை தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

ஒருவகையில் எனக்கு வெட்கமாகக்கூட இருந்தது.


சென்ற நவராத்ரியில் ஒன்பது நாகஸ்வர கச்சேரிகள் வலையேற்றியது போல இந்த முறை ஒன்பது பெண் கலைஞர்களை முதன்மைப்படுத்தி ‘நவசக்தி’ என்று ஒன்பது கச்சேரிகள் ஒருங்கிணைக்க வெண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன்.


கலைஞர்கள் தேர்வும், கச்சேரிப் பதிவுகளுக்கான ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. பரிவாதினியின் முயற்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ஆதரவில் நடப்பவை என்று சொல்லித் தெரிய வேண்டாம்.
எப்போதும் போல் இப்போதும், இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.


வங்கிக் கணக்கு விவரங்கள் கீழே:
Parivadini Charitable Trust,

Union Bank of India

Account Number: 579902120000916

branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

ராஜரத்னம் பிள்ளையின் வீடு

நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்னம் பிள்ளையைப் பற்றிய ஓர் உரைக்காக கடந்த ஒரு மாதமாய் அவர் இசையில் திளைக்கிறேன்.

உரையைப் பதிவு செய்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேவைக்கேற்ப சுருக்கி இன்று அனுப்பி வைத்து பெருமூச்சுவிடும் இவ்வேளையில் அதிர்ச்சியான தகவல் வந்து இறங்குகிறது.

திருவாவடுதுறையில் ராஜரத்தினம் பிள்ளை கட்டிய மாளிகை போன்ற வீடு சமீபத்தில் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டதாம்.

சங்கீத உலகில் தோன்றிய/தோன்றப்போகும் கலைஞர்கள் எல்லோரையும் திரட்டினால்கூட ஒரு ராஜரத்தினத்துக்கு ஈடாகமாட்டார்கள் என்பது (என் தனிப்பட்ட) எண்ணம். தன் வாசிப்பை அரை நொடியானாலும் தன் வீட்டைக் கடந்து செல்லும் ரயிலில் செல்பவன்கூடக் கேட்க வேண்டுமென்று வீட்டில் ஒலிப்பெருக்கி அமைத்து, அவர் சாதகம்செய்ததைக் கூட உலகுக்கு வழங்கிய கலைஞனின் வீடு.

எத்தனை நடபைரவிகளையும், காம்போதிகளையும் அந்தச் சுவர்கள் கேட்டிருக்கக்கூடும்!

நினைவு மண்டபமாகவோ, அருங்காட்சியகமாகவோ இருந்திருக்க வேண்டும் என்று இந்தியச் சூழலில் நினைப்பதெல்லாம் பேதமை.

எப்போது அந்தப் பக்கம் போனாலும் வெளியிலிருந்தாவது அந்தக் கம்பீரக் கட்டிடத்தைப் பார்க்கலாம் என்கிற நிலைமையும் போய் அங்கு குடியிருப்புகள் எழப் போகின்றன என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது.

நண்பர் Swamimalai Saravanan-உடனும் Mariyappan Muthukumaraswamy-உடனும் திருவாவடுதுறை சென்ற போது, ராஜரத்தினம் பிள்ளையின் வீட்டில் – குறிப்பாக அவர் மாடியில் அமைத்திருந்த இசை அறையில் கச்சேரிகள் ஏற்பாடு செய்து தொடர்ந்து நடத்த வேண்டுமென்று நிறைய கனவுகளைப் பேசினோம்.

கனவுகள்….

பொடி சங்கதி தொடரின் முதல் காணொளி வெளியாகிவிட்டது.

பாடகர், ஹரிகதை வித்வான், மேடைநாடக நடிகர், சினிமா நட்சத்திரம், பரதநாட்டிய ஆசிரியர் என்று பன்முக ஆளுமையாக விளங்கியும் இன்று அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கும் ஆளுமை சிதம்பரம் பிள்ளை.

இவருடைய தந்தையார் சுப்ரமண்ய பிள்ளை நாகஸ்வர கலைஞர் என்றும் இவருடைய தமையனார் நடராஜசுந்தரம் பிள்ளை ஒரு வாக்கேயகாரர் என்றும் – இந்தக் காணொளிக்கான மறுமொழியாய் முனைவர் பி.எம்.சுந்தரம் சொல்லியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

நேற்று ஜி.என்.பி பாடியுள்ள ’தாழையூத்து’ கச்சேரியின் இணைப்பு கண்ணில்பட்டது. அதை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, அதைப் பற்றிய கதையை இன்று சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

அனேகமாய் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆச்சர்யப்படும் விதமாய் நான்கு ஐந்து பேர் ‘எங்கே கதை?’ என்று சட்டையை உலுக்கினர். சந்தோஷமாகத்தான் இருந்தது.

கதைக்குச் செல்வோம்….

ஜி.என்.பி பாடியுள்ள கச்சேரிகளில் ‘நெல்லை மணி’ வயலினும், ‘நெல்லை தேவராஜன்’ மிருதங்கமும் வாசித்து நமக்குக் கிடைக்கும் ஒரே பதிவு இதுதான். ஜி.என்.பி-க்கு நெருக்கமானவர்கள் பலரை நான் விசாரித்துப் பார்த்தவரை இந்த பக்கவாத்தியங்களுடன் அவர் செய்துள்ள ஒரே கச்சேரி இதுதான். ஏன் வழக்கமான பக்கவாத்தியங்கள் இல்லாமல் இந்தப் பக்கவாத்தியங்களுடன் கச்சேரி செய்தார் என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது.

அதற்கான பதிலில் ஒரு பகுதி தஞ்சாவூர் ஆனந்தா லாட்ஜ் திரு.கிட்டப்பாவை சந்தித்த போது கிடைத்தது. பழைய தஞ்சாவூர் சங்கீத கோஷ்டியில் கிட்டப்பா முக்கியமானவர். திருவையாறு தியாகராஜ ஆராதனை கமிட்டியில் காரியதரிசியாக இருந்தவர். பல சங்கீத வித்வான்களுக்கு நண்பர். குறிப்பாக ஜி.என்.பி-க்கும் பாலக்காடு மணி ஐயருக்கும் ஆப்த நண்பர். வாழ்வில் இளமைப் பருவத்தை பெரும்பாலும் இவ்விருவரின் கச்சேரிகளைக் கேட்பதிலேயே கழித்தவர்.

நெல்சன் மாணிக்கம் சாலை அருகில் உள்ள ஒரு வீட்டில் அவரை சிலமுறை சந்தித்து இருக்கிறேன். திருவையாற்று நினைவுகளைப் பற்றிச் சொல்லும் போது,

“ஒரு வருஷம் வானொலியில் நேரடி ஒலிபரப்புக்காக ஜி.என்.பி கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. ஜி.என்.பி திருவையாற்றுக்கு வரும்போதே கடும் ஜுரம். அவருக்கு ஜுரம் என்று எனக்குத் தெரியாது. ‘என்ன பாடப் போகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர் ஏதோ நான்கு பாடல்கலைச் சொன்னார்.

அனேகமாய் அன்று சாரீரத்தை அதிகம் சோதிக்காத பாடல்களாய் அவர் தேர்வு செய்திருந்திருக்கக் கூடும். நான் அதைக் கேட்டுவிட்டு, “இப்படிப் பாடினால் கச்சேரி எப்படி உருப்படும்?”, என்று சொல்லிவிட்டு என் வேலைகளைப் பார்க்க கிளம்பிவிட்டேன். சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு காகிதத்தைச் சுமந்தபடி ஜி.என்.பி-யின் சிஷ்யர் என்னைத் தேடி வந்தார். அந்தக் காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, “சார் இதை உங்களிடம் காட்டி. இதில் எதைப்பாடவேண்டும் என்று கேட்டு வரச் சொன்னார்.”, என்றார்.

அந்தக் காகிதத்தில் தியாகராஜரின் கிருதிகள் பட்டியல் இருந்தது. அழகிய கையெழுத்தில் 138 பாடல்கள் இருந்த பட்டியலைப் பார்த்ததும் எனக்கு என்னமோ போல ஆகிவிட்டது. உடனே அவரிடம் ஓடினேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடம்பைத் தொட்டுபார்த்தால் நெருப்பாய்க் கொதிக்கும் ஜுரம். நான் என் தவறை உணர்ந்துகொண்டேன். ஆனாலும் விடாமல் நான் சொல்வதைத்தான் பாடுவேன் என்று பிடிவாதம் பிடித்தார். நான் எனக்குப் பிடித்த ஐந்து பாடல்களைச் சொன்னேன். அன்று மேடையெறியதும் ஜுரத்தின் சுவடே தெரியாமல் கச்சேரி ஓஹோவென்றாகவிட்டது.

மேடையை விட்டு இறங்கும் போது ஓடிச் சொன்று அவர் கைகளைப் பிடிக்கச் சென்றேன்.என்னை அருகில் இழுத்து, “எனக்குச் சுத்தமா முடியல. நான் மெட்ராஸுக்குப் போகல. தாழையூத்துக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு மெட்ராஸுக்கு போறேன்”, என்றார்.

ஜி.என்.பி-க்கு கல்லிடைகுறிச்சி, தாழையூத்து மாதிரி திருநெல்வேலி ஜில்லாவில் உயிரைக்கூட கொடுக்கத் தயாரியிருந்த ரசிகர்கள் உண்டு. அங்கு போய் கொஞ்ச நாள் இருந்தால் உடலும் மனமும்சரியாகிவிடும் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை”, என்றார் கிட்டப்பா.

அவர் தாழையூத்து என்றதுமெனக்குப் பொறிதட்டியது. அவர்டம் இந்தக் கச்சேரியைப் பற்றிக் கேட்டேன். கிட்டப்பாவுக்கு விவரங்கள் தெரியவில்லை. “அப்போது திருச்சூர் ராமசந்திரன்தான் கூட இருந்த சிஷ்யன். அவரிடம் கேளுங்கள்.”, என்றார்.

வித்வான் ராமசந்திரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது முதல் கேள்வியாய் இதைத்தான் கேட்டேன். அவர் முகத்தில் உணர்ச்சிப்பெருக்கைப் பார்க்க முடிந்தது. அவர் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமலந்தப்பெருக்கு தடுத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்கள் கழித்துச் சுதாதரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.“அந்தக் கச்சேரி ஒரு ஆச்சர்யமான கச்சேரி. திருவையாற்றில் இருந்து தாழையூத்துக்கு ஓய்வெடுக்கத்தான் சார் சென்றார். ஆனால் அங்கு ஜி.என்.பி வந்திருக்கிறார் என்கிற செய்தி பரவி கொஞ்ச கொஞ்சமாய் அவரைச் சந்திக்க ரசிகர்கள் வந்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் பக்கத்து ஊர்களில் இருந்து கூட ஆட்கள் வந்து, “இன்னிக்கு எங்க கச்சேரி”, என்று கேட்க ஆரம்பித்தனர்.

தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிப் பார்த்தாலும் அவர்கள் விடுவதாயில்லை. கடைசி ஆயுதமாய், “நான் தனியாகத்தான் வந்திருக்கிறேன். பக்கவாத்தியமெல்லாம் வரவில்லை. எப்படி கச்சேரி செய்வது?”, என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார். வந்திருந்தவர்கள் விடுவதாயில்லை. ”நாங்கள் பக்கவாத்தியம் ஏற்பாடு செய்கிறோம். அதிகம் வெண்டாம் ஒரு மணி நேரம் பாடினால் கூட போதும்”, என்று வற்புறுத்தவும் ஒப்புக் கொண்டார். அப்படித்தான் உள்ளூர் கலைஞர்களான நெல்லை மணியும், நெல்லை தேவராஜனும் சாருக்கு வாசித்தார்கள்.

கச்சேரியை சஹானாவில் ஆரம்பித்து குரலெல்லாம் பதமாயிருக்கிறதா என்று பார்க்கும்போதே கல்லிடைகுறிச்சி வேதாந்த பாகவதரின் சகோதரர் ராமலிங்க பாகவதர் வந்து முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டார். அதற்கு பிறகு எங்கிருந்துதான் அவருக்கு அப்படி ஒரு தெம்பு வந்ததோ தெரியவில்லை.

அன்று பாடிய கல்யாணியில் எத்தனை பாய்ச்சல்? ஸ்வரம் ஸ்வரம் தாவி எத்தனை வாதி ஸம்வாதி ப்ரயோகங்கள்? தார ஸ்தாயியில் தைவதம் நிஷாதமெல்லாம் கூட அநாயாசமாய் தொட்டுக் காட்டியிருப்பார். நல்ல காலம் அந்தக் கச்சேரியைப் பதிவு செய்தார்கள். இல்லையென்றால் இழந்த எவ்வளவோ பொக்கிஷங்களுள் ஒன்றாக இதுவும் தொலைந்திருக்கும்.”

”அடப்பாவி மனுஷா” என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். முடியாமல் ஜுரத்தில் பாடிய கல்யாணியா இப்படி?

இப்போது இந்தக் கதையை நினைத்துக் கொண்டு இன்னொருமுறை அந்தக் கல்யாணியைக் கேட்டுப் பாருங்கள். ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர் சொரியும். கூடவே ஜி.என்.பி-யின் சீடர் எஸ்.கல்யாணராமன் ஸ்ருதி பத்திரிக்கையில் கேட்ட ‘Did his fans kill GNB?’ என்ற கேள்வியும் ஒலித்து மனத்தை அழுத்தும்.

கடந்த இருபது ஆண்டுகளில் கர்நாடக இசை தொடர்பான தேடல்களில் பல விஷயங்கள் கிடைத்துள்ளன. அதில் சில விஷயங்கள் ‘சுவாரஸ்யமான தகவல்கள்’ என்று வகைப்படுத்தலாம். இந்தச் சிறு தகவல்களை வைத்து ஆய்வு செய்யவோ அல்லது கட்டுரை ஒன்றை எழுதவோ முடியாது. பயனில்லாத துக்கடா செய்தி என்றும் ஒதுக்கக்கூடியவை அல்ல.

இவற்ரை வைத்துக் கொண்டு வாரமொரு செய்தியாய் யுடியூபில் பகிரலாம் என்ற எண்ணம் வந்தது. இதுதான் ‘பொடி சங்கதி’. எனக்குக் கிடைத்ததைப் பகிர்தல் ஒரு பக்கம் இருந்தாலும், இதைப் பகிர்வதன் மூலம் இந்த விஷயங்களைப் பற்றி இன்னுமறிந்தவர் கண்ணில்பட்டு, இது தொடர்பான பார்வை விசாலமாகக்கூடும் சாத்தியம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

பொடி சங்கதி – வாரம் ஒன்றாய் என்னுடைய புதிய யுடியூப் சானலில் வெளியாகும்.

தொடர்ந்து பேசலாம்.

ரகு சார் – 86!

இன்று ரகு சாரின் பிறந்த நாள். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் பதிவெல்லாம் எழுத முடியாது. நாவல்தான் எழுத வேண்டும். நாவல் எழுத எனக்கு வணங்குமா தெரியவில்லை. ஆனால் 2013-ல் நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் ஒரு அத்தியாயமாக அவர் பிறந்த நாளில் எழுதிக் கொள்கிறேன்.

***************************************

அதுவரை எங்களுக்குக் கச்சேரி கேட்டுதான் பழக்கம். கச்சேரியை ஏற்பாடு செய்வதில் ஆனா ஆவன்னா கூடத் தெரியாது.

நான் கேட்க விரும்பிய சில கலைஞர்கள் அந்த டிசம்பரில் எங்கும் பாடவில்லை என்கிற அதிர்ச்சியில் அவசரமாய் ஐந்து நாட்களுக்கு நாளுக்கு இரண்டு கச்சேரிகள் (இளைஞர் கச்சேரி ஒன்று/ சீனியர் கச்சேரி ஒன்று) வீதம் ஒரு கச்சேரித் தொடரை ஏற்பாடு செய்தோம்.

டிசம்பர் கச்சேரிகளை ஜூன் மாசமே ஏற்பாடு செய்யும் சென்னை சபாகளுக்கு மத்தியில் எங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியதே நவம்பர் கடைசியில்தான். சென்னையில் மொட்டைமாடிகள் கூட காலியில்லாத நிலையில், ஐந்து நாட்களுக்கு மூன்று இடங்களில் அரங்குகளைப் பிடித்து கச்சேரிகள் ஏற்பாடு செய்தோம். அந்த மூன்றிலொரு இடம் பெரிய குடியிருப்பு ஒன்றின் கம்யூனிடி ஹால். அங்கு வெளியிலிருந்து ஒலிபரப்பு சாதனங்கள் எடுத்து வர அனுமதியில்லை. அவர்களிடம் இருந்த அரதப்பழசு ஆம்ப்ளிஃபையரும் மைக்குகளும்தான் உபயோகித்து ஆகவேண்டும் என்று நிபந்தனை.

எனக்கோ மைக் என்றால் கேட்டிங்கா ஹஸ்ஸியா என்று கேட்கும் அளவிற்குத்தான் ஒலி உபகரணங்களைப் பற்றிய அறிவு. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று குழம்பியபடி மைலாப்பூரின் ஒரு உணவகத்தில் நானும் என் தம்பியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு பரிச்சியமான குரல் சத்தமாகச் சிரிப்பது காதில் விழுந்தது. அங்கு ரகு ஸார் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

நாங்கள் அவரிடம் சென்றதும் உற்சாகமாய் இன்னும் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டு வரவேற்றார். அவரிடம் அதுவரை பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற்றுக் கொள்ளவும், நான் ஜி.என்.பி-யின் கல்யாணியில் நிஷாத சஞ்சாரத்துக்கு பேச்சைத் திருப்பினேன். அதை ரகு சார் பாடி இன்னொருமுறை கேட்க வேண்டும் போலிருந்தது. அங்கு தொடங்கி அவர் இசை மனத்தின் அலையடிப்பில் நாங்கள் சவாரி செய்தோம். பேச்சுவாக்கில் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிற கச்சேரிகள் பற்றி சொன்னேன். அடுத்த நாள் வந்துவிடுவதாய் சொன்னார். நான் அவரை வாருங்கள் என்றோ, வந்தால் உதவியாக இருக்குமென்றோ சொல்லவில்லை. அவராகவே வருகிறேன் என்று சொன்னாலும் அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ பேர் அவரை அழைக்கக் கூடும், அதன் மூலம் பாடல்புனைவிலோ அல்லது ஒலிப்பதிவிலோ அவர் மூழ்கிவிடக் கூடும் என்று அறிந்தவன் என்பதால் நான் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு கச்சேரி தொடக்கம். மூன்று மணிக்கே கலைஞர்கள் வந்துவிட அவர்களை வரவேற்க நான் வாசலுக்குச் சென்றேன். அப்போது ரகு சார் தன்னுடைய டிவிஎஸ் 50-ஐ நிறுத்திக் கொண்டிருந்தார். என் தம்பி கலைஞர்களைப் பார்த்துக் கொள்ள நான் ரகு சாரை நோக்கி ஓடினேன். எதிரொலிக்கவென்றே பார்த்துக் கட்டின அரங்கில் அந்த அரதப் பழசான மைக்குகளை நான் ரகு சாரிடம் காட்டினேன். “பாட்டு நன்னா இருந்தா மைக் என்ன பண்ணும்?” என்று சிரித்தபடி ஸ்டாண்டை எடுத்துக் கொண்டு மேடைக்கருகில் சென்றார்.

அன்று பாடவிருந்த கலைஞர்களுக்கு ரகு சாரிடம் பரிச்சியமில்லை. சங்கீத மேதை என்றால் பளபளக்கும் மேலாடையும், அகல ஜரிகையும் என்று நிலைபெற்றுவிட்ட நிலையில் – வெய்யிலில் வந்ததில் வேர்த்த முகமும், அணிந்திருந்த பழைய அரைக்கை சட்டையும் ரகு சாரின் மேதமையை பார்த்த மாத்திரத்தில் கண்டுகொள்ள உதவியிருக்காது.

அவர் மைக் ஸ்டாண்டை தூக்கிக் கொண்டு வரவும், இவர் யாரோ அந்த சமுதாயக் கூடத்தில் வேலை செய்பவர் என்று அந்தப் பாடகி நினைத்திருக்கக் கூடும். அந்தப் பெண் இவரைப் பொருட்படுத்தாமல் பக்கவாத்தியக் கலைஞர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

ரகு சார் மைக்கை அந்தப் பெண்ணின் முன்னால் வைத்துவிட்டு அவளிடம் எதோ சொல்ல நினைத்தார். அந்தப் பெண் இவர் பக்கம் திரும்புவதாகவே இல்லை. நானும் குறுக்கிட சங்கோஜப்பட்டு நின்றுகொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “அம்மா! மைக் சரியா இருக்கானு பாரும்மா”, என்றார் ரகு சார்.

அந்தப் பெண் மைக்கின் உயரத்தை கொஞ்சம் தாழ்த்திவிட்டு, சரியாகயிருக்கிறது என்பது போல தலையை ஆட்டினாள்.

“இல்லம்மா, ஏதாவது பாடு.”, என்றார் ரகு சார்.

அந்தப் பெண் வாயைத் திறக்காமல் மெல்லிய குரலில், ‘ம்ம்ம்ம்’ என்று ஸ்ருதி காண்பித்தது.

ரகு சார் தோள்களை கொஞ்சம் சிலுப்பியபடி இரண்டடி பின்னால் நகர்ந்தார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிடுவார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, “இன்னிக்கு என்னம்மா பாடப் போற?”, என்று சத்தமாகக் கேட்டார்.

அந்தப்பெண்ணிற்கு தூக்கி வாரிப்போட்டது. ‘ம்?’, என்று கண்களை அகல விரித்தாள்.

’கச்சேரின்னா மெயின் சப்-மெயின்-னு எதாவது தயார் பண்ணிண்டு வந்திருப்பியே! அதைக் கேட்கறேன்.’’

கச்சேரிக்குக் கூப்பிட்டவர்கள் கூட என்ன பாடப் போகிறாய் என்று கேட்கவில்லை. மைக்கைத் தூக்கி வைப்பவர் இப்படி புகுந்து பேசுகிறாரே! அவருக்குப் பின்னால் நம்மைக் கச்சேரிக்குக் கூப்பிட்டவர் கைகட்டி நிற்கிறாரே.’ – என்று அந்தப்பெண் குழம்பித் தவிப்பது நன்றாய் புலப்பட்டது.

ரகு சார் பதிலுக்குப் பொறுமையாகக் காத்திருந்தார்.

அந்தப் பெண் வேறு வழியில்லாமல், ‘லதாங்கியும், தோடியும்’, என்று முணுமுணுத்தது.

‘லதாங்கினா ‘அபராதமுல’ பாடப் போறியா?”, என்றார் ரகு சார்.

அந்தப் பெண் ஆமோதித்துத் தலையை ஆட்டினாள்.ரகு சார் ஒரே பாய்ச்சலில் மேடைக்கருகில் சென்றார். அந்தப் பெண் பயந்து ஓரடி பின்னால் நகரப் போகும் போது ரகு சார் மைக்கைக் ஸ்டாண்டிலிருந்து கழட்டி கையில் எடுத்துக் கொண்டார்.

“கிருபஜேசின மனவியாளகிஞ்சி”, என்று ஒருகுரல் ஓங்கி ஒலித்தது. அதிகமில்லை. இருபது நொடிகளுக்குள்தான் இருக்கும். அடுக்கடுக்காய் நான்கைந்து சங்கதிகள் அந்த அனுபல்லவியில் வந்து விழுந்தன. கடைசி சங்கதியில் நல்ல காத்துக்கு பவளமல்லியிலிருந்து கொத்துக் கொத்தாய் விழும் மலர்கள்போல அத்தனை மணமாய் ஸ்வரவர்ஷம். சத்தியமாய் சொல்கிறேன் – காலம் உறைந்து போனது.

”மைக் சரியா இருக்கானு பார்க்கணும்னா இப்படி வாயைத் திறந்துபாடினாத்தானேம்மா தெரியும்”, என்று ரகு சார் சொன்ன போதுகூட நான் அந்த லதாங்கியின் தார ஸ்தாயியில்தான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.

ரகு சார் என்னைப் பார்த்து, “சிங்கர் மைக் ஓகே!”, என்று விட்டு வயலின் வாசித்த பெண்ணை நோக்கி “நீ கொஞ்சம் வாசிம்மா”, என்றார். அந்தப்பெண்ணும் உறைந்து போய்தான் அமர்ந்திருந்தாள்.

எனக்குப் பின்னாலிருந்து என் தம்பி கீழே விழாத குறையாய் சிரிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் எனக்கு அங்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. இவன் சிரித்து வந்திருக்கும் கலைஞர்களின் வம்பை வாங்கிக் கொடுத்துவிடுவானோ என்று பயந்து அவனைப் பின்னுக்குத் தள்ளினேன்.

அடுத்த சில நிமிடங்களில் வயலின் மைக்கையும் மிருதங்கத்தின் மைக்கையும் சரிபார்த்துவிட்டு மேடையிலிருந்து ஐந்தாறு வரிசைகள் தள்ளிச் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார் ரகு சார். அவரிடம் யாரோ வந்து பேச ஆரம்பித்தார்கள்.

நான் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு மேடைக்குச் சென்றேன்.அன்று பாடவிருந்தப் பெண் மெதுவாக என்னை அழைத்து, “இப்பப் பாடினாரே, அந்த மாமா யாரு?”, என்று கேட்டாள்.

“அவர்தாம்மா எச்.எம்.வி.ரகு. ஜி.என் சார் சிஷ்யர்.”, என்று சொல்லிவிட்டு இறங்கும் போது எனக்கென்னமோ சங்கீத கலாநிதி கொடுத்து அதை நான் வாங்கிக் கொண்டு இறங்குவது போல இருந்தது.

என் பின்னாலேயே அந்தப் பெண்ணும் மேடையைவிட்டு இறங்கினாள்.

நான் வாசல் பக்கம் செல்ல அந்தப்பெண் ரகு சாரிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

********************************************************

உங்களுக்கு இன்னும் ஒரு நூறாண்டு நோயில்லா வாழ்வும் அந்த வாழ்வில் நீங்கள் பேசி நான் கேட்க எனக்குப் பேறும் ஆண்டவன் அருளட்டும் ரகு சார்!

நான் ஜானகிராமன் ஆய்வாளன் அல்லன்,

அவர் எழுதிய அத்தனையையும் படித்தவன் என்று கூட சொல்ல முடியாது. படித்ததில் இன்னும் உள்வாங்க வேண்டியது நிறைய என்றுதான் அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதும் போது தோன்றும்.

இருந்தாலும், நான் முன்பு எழுதியதைப் போல, ஏதோ ஒரு தொட்டகுறை அவருக்கும் எனக்கும் உண்டு.

கடந்த சில வாரங்களாக கல்கி வலைத்தளத்தில் உள்ள களஞ்சியங்களை பொறுமையாக ஒவ்விரு இதழாகப் பார்த்து வருகிறேன்.

1961-ல் தி.ஜா-வின் ‘அன்பே ஆரமுதே’ தொடர்கதையாக வெளியாகி இருக்கிறது. தொடர் தொடங்கிய சில வாரங்களில் இருந்து ‘வட்ட மேஜை’ பகுதியில் அதைப் பாராட்டி பல கடிதங்கள். ‘கல்கி’ தொடங்கியதிலிருந்து செய்த மகத்தான சாதனை தி.ஜா-விடம் தொடர்கதை எழுதக் கேட்டு வெளியிடுவதுதான் என்று புளகாங்கிதக் கடிதங்களும் அடக்கம்.

அந்தச் சமயங்களில் ‘நாவல் பிறந்த கதை’ என்று ஒரு தொடரும் வெளியாகிறது. அதில் வாரா வாரம் ஒரு நாவலாசிரியர் தன் நாவல் வெளியான கதையை எழுதியுள்ளனர். அந்த வரிசையிலும் தி.ஜா, மோகமுள் உருவான கதையைப் பற்றிய எழுதிய கட்டுரையும் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 24-ம் தேதி கல்கியில் மனோகரின் சாணக்கியர் நாடகத்தைப் பற்றி ஒரு குறிப்பு வெளியாகிறது. அந்தக் குறிப்பில், “சந்திரகுப்தனை அழிக்க ஏழி விடப்படுகிறாள் விஷக்கன்னி மாலா. இந்தப் பாத்திரஒ படைப்பு, சிறுகச் சிறுக விஷமருந்தி நாளடைவில் தன் உடல் முழுவதையுமே விஷமயமாக்கிக் கொண்ட நாகநந்தி அடிகளை நினைவூட்டுகிறது. ‘கல்கி’ அவர்களிடமிருந்து ஒரு கதாபாத்திரத்தைக் கையாடியது குற்றமே.”, என்று முடிகிறது.

அடுத்த இரண்டு வாரம் கழித்து தி.ஜா-வின் கடிதம் ‘வட்ட மேஜையில்’ வெளியாகிறது.

“செப்டம்பர் 24-ந் தேது இதழில் மனோகரின் “சாணக்கிய சபத” நாடகத்தைப் பற்றிய குறிப்பில் விஷக்கன்னி மாலா என்னும் பாத்திரம் கல்கி அவர்களின் கருத்திலிருந்து கையாடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஷ கன்னிகை என்ற பாத்திரம் சுமார் 1300 ஆண்டுகட்கு முன்னால் விசாகதத்தன் ஸம்ஸ்கிதத்தில் எழுதிய முத்ரா ராக்ஷஸ நாடகத்தில் வந்திருக்கிறது. உண்மையில் அந்நாடகத்தில் வரும் முக்கிய துணைப் பாத்திரங்களில் இதுவும் ஒன்று.”

இதுதான் அந்தக் கடிதம்.

கல்கி பத்திரிகையில் பிரதானமான இடத்தில் பெரும் வரவேற்புக்கிடையில் தொடர்கதை எழுதிக் கொண்டிருக்கும் தி.ஜா இந்தக் குறிப்பைப் பார்த்தும் பார்க்காமல் இருந்திருக்கலாம். தனக்கு ஆதரவான இடத்தில் குளிர்காய்வதைவிட அபாண்டமாய் ஒரு கலைஞனின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராய் குரல் கொடுப்பது முக்கியம் என்று எல்லோரும் கருதுவார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

“இது என்ன பெரிய விஷயம்?” – என்று உங்களுக்குத் தோன்றினால் நான் மல்லுக்கட்டப் போவதில்லை.

எனக்கு என்னமோ பெரிய விஷயமாய் நேற்றிலிருந்து பொங்கிப் பொங்கி வருகிறது.

எங்கேயோ விட்ட குறைதான்…

முதல் ஸ்பரிசம்

இன்று மாமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பிறந்த நாள்.

நான் தேடித் தேடி அவர் சங்கீதத்தைக் கேட்டேன் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலும் என் சங்கீத ரசனை வளரக் காரணமாக இருந்தவர்களுக்கு பாலமுரளியின் சங்கீதம் ஒத்துக் கொள்ளாது. ’சுகர் பேஷண்டுக்கு குளூகோஸ் ஊசி போட்டா மாதிரி சங்கீதம்’, என்று புகழுரை போல் பாதாளத்தில் தள்ளும் நையாண்டிப் பேச்சுகள்தான் எனக்கு பாலமுரளி சங்கீதத்துக்கு அறிமுகம்.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலை ஒரு வயரை சால்டரிங் அடித்தபடி எச்.எம்.வி ரகு சார் தன் பழைய அனுபவங்களை எனக்காக மீண்டுமொருமுறை வாழ்ந்து காண்பித்தார். அன்று அவர் பகிர்ந்த சாருகேஸி அனுபவம்தான் என்னை பாலமுரளிகிருஷ்ணாவின் ரசிகனாக்கியது என்று சொல்லத் தோன்றுகிறது.

2008-லிருந்து 2012 வரையிலான காலகட்டத்தில் அவர் அடிக்கடி பெங்களூர் வருவார். சஞ்சய் நகரில் உள்ள ரமண மகரிஷி செண்டரில் வாரக் கணக்கில் தங்கி அவர்களுக்கு இசையமைத்துக் கொடுப்பார். அப்படி வரும்போது நாங்கள் சந்தித்து இரவு முழுவதும் பேசிக் கொண்டே இருப்போம். சங்கீதத்தின் அதிமேதாவிலாசங்களை நான் மிக மிக அருகிலிருந்து பார்த்தது (தரிசித்தது என்று இருக்க வேண்டுமோ) ரகு சாரின் அண்மையில்தான்.

யாரேனும் நம்மைப் பற்றி பேசினால் புரைக்கேறும் என்பது உண்மையென்றால் வாழ்நாள் முழுவதும் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறையாவது பாலமுரளி அவர்களுக்கு, ரகு சாரின் புண்ணியத்தில், புரைக்கேறியிருகும். ’குருஜி’ என்று ரகு சார் சொல்லும்போது தன்னிச்சையாய் அவர் கண்கள் மூடிக் கொள்ளும். அப்போது அவர் முகத்தில் தவழும் குறுநகையை எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

1970-களில் எச்.எம்.வி ஒரு வித்தியாசமான இசைத்தட்டை வெளியிட்டது. அந்த இசைத்தட்டில் பாலமுரளியே பாடி, அவரே வயோலா வாசித்து, அவரே மிருதங்கமும் வாசித்திருக்கிறார். அப்படி வெளியான முதல் கர்நாடக இசைப்பதிவு இதுதான். அதைப் பற்றி பின்னர் குறிப்பிட்டு எழுதியவர்கள், அந்தப் பதிவை டிராக் ரிக்கார்டிங் என்று நினைத்து எழுதியுள்ளனர். உண்மையில் அந்தச் சமயத்தில் எச்.எம்.வி-யின் டிராக் ரிக்கார்டிங் செய்வதற்கான வசதியே கிடையாது.

இன்று வித்வான் பாலக்காடு ஸ்ரீராமை ஃபேஸ்புக்கில் தொடர்பவர்கள் – “இவ்வளவு தொழில்நுட்பம் தெரிந்த சங்கீத வித்வானோ, அல்லது இவ்வளவு சங்கீதம் தெரிந்த தொழில்நுட்ப நிபுணரோ இருப்பார்களா”, என்று வியப்பது வழமை. அந்த வகையில் ஸ்ரீராமுக்கு முன்னோடி ரகு சார்தான்.

டிராக் ரிக்கார்டிங் இல்லாத சமயத்தில் இப்படி ஒன்றைச் செய்யலாம் என்கிற எண்ணம் எப்படி வந்தது? அதை எங்ஙனம் செய்து முடித்தனர்?

ரகு சாரின் வார்த்தைகளிலேயே இங்கு தரப் பார்க்கிறேன்.

**********************************

“1970-களில் ஆறு மாத காலம் டோக்கியோவில் தங்கி தொழில்நுட்பப் பயிற்சி பெற ஒரு வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி முடிந்து மீண்டும் சென்னையில் எச்.எம்.வி-க்கு பதிவுகள் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் பதிவகத்துக்கு குருஜி வந்திருந்தார். என்னைப் பார்த்ததும்  “ஜப்பானில் என்ன புதியதாகத் தெரிந்து கொண்டாய்?”, என்று கேட்டார். அப்போது ஜப்பானில் டிராக் ரிக்கார்டிங் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கச்சேரியில் குரலைத் தனியாக, வயலினைத் தனியாக, மிருதங்கத்தை தனியாக என்று பதிவு செய்துகொண்டு, நம் விருப்பத்துக்கு ஏற்ப ஒலியளவை ஏற்றி இறக்கிக் கலந்து கொள்வதற்கான வசதியைப் பற்றி விவரித்தேன். 
“ரகு! உன் கிட்ட இருக்கற ரிக்கார்டரை வெச்சு அப்படி செய்ய முடியாதா?”, என்று கேட்டார். 
’முடியாது’ என்று சொல்ல எனக்கு வாய்வரவில்லை. ’முடியுமானு பார்க்கணும் குருஜி. அப்படியே முடிஞ்சாலும் அதை வெச்சுப் புதுசா என்னப் பண்ணப் போறோம்?’, என்று அவரைக் கேட்டேன். 
 “புதுசா? பண்ணலாமே! சொல்லட்டுமா”, என்று புன்னகைத்தபடி, “நானே வாய்ப்பாட்டு, நானே வயலின், நானே மிருதங்கம் – இப்படி ஒரு ரிக்கார்டிங் பண்ணினால் புதுசா இருக்குமில்லையா?”, என்றார்.

எப்படிச் செய்யமுடியும் என்று யோசிப்பதாக அவரிடம் கூறினேன். அடுத்த நாள் காலையில் எனக்கு ஒரு வழி தோன்றியது.

எங்கள் ஸ்டுடியோவில் ஒரு ஸ்டீரியோ ரிக்கார்டரும் ஒரு ஸ்டீரியோ பிளேயரும் இருந்தன. முதலில் அவர் பாடுவதை மட்டும் பதிவு செய்து கொள்வது. அதை எங்களிடமிருந்த பிளேயரில் போட்டு அதன் வெளியீட்டை (output)-ஐ மீண்டும் ரிக்கார்டிரின் ஒரு சானலுக்குக் கொடுத்துவிடுவது. அதற்கு ஏற்ப குருஜி வயோலா வாசிப்பதை இன்னொரு சானலுக்குக் கொடுத்து பதிவு செய்து கொள்வது. அந்தப் பதிவை மீண்டுமொருமுறை பிளேயரில் போட்டு அந்தப் பதிவுக்கு ஏற்றார்போல மிருதங்கம் வாசிப்பதை (முன்னர் வயலினை பதிவு செய்தது போலவே) பதிவு செய்து கொண்டால் இது சாத்தியமாகும் என்று தோன்றியது.

வேலைக்குச் சென்றதும் குருஜியை தொலைபேசியில் அழைத்து ஸ்டுடியோவுக்கு வரச் சொன்னேன். அவர் வந்ததும் இந்தத் திட்டத்தை விவரித்தேன். அவர் உற்சாகமாகிவிட்டார்.

எந்தப் பாடல்களை எப்படிப் பாடலாம் என்று திட்டமிடும்போது ஒரு சிக்கல் எழுந்தது. அந்தக் காலத்தில் தாளத்தைக் காட்டும் மெட்ரோனோம்கள் உபயோகத்திலிருக்கவில்லை. பாடலைப் பாடும் போது அதனால் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது வாய்ப்பாட்டுக்குப் பின் வயலின் வரவேண்டும். அதற்கு சரியான காலப்ரமாணத்தில், சரியான அளவில் இடைவெளி விட வேண்டும். வயலினைப் பதிவு செய்யும் போது, அந்த இடைவெளியில் சிறு நெருடல் கூட ஏற்படாத மாதிரி வாசிக்க வேண்டும். அது சரிப்படுமா என்று குருஜி சற்றுத் தயங்கினார்.

வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்து – இந்தப் பதிவே வேண்டாமென்றுவிடுவாரோ என்று எனக்கு பயமாகிவிட்டது. நான் ஒரு யோசனை சொன்னேன்.

”என் அறையில் இருந்தபடி நான் தாளத்தை சரியாகக் காட்டி அடித்துப் போடுகிறேன். நீங்கள் கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது, வயலினுக்கான இடத்தில் நான் பாடி விடுகிறேன். என் அறையிலிருந்து ஒரு இணைப்பை எடுத்து ஹெட்ஃபோன் மூலம் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். வயலின் பக்கவாத்தியம் போல நினைத்து என் ஸ்வரங்களுக்குப் பின்னால் நீங்கள் பாடிவிடுங்கள்.”, என்றார். அவருக்கும் அது சரியாக வரும் என்று தோன்றியதால் பதிவுக்குச் சென்றோம்.

பதிவை எடிட் செய்து, வயலின் ஒரு பக்கமும், மிருதங்கம் மறு பக்கமும் கேட்கும்படி panning செய்த போது கச்சேரி பதிவு போல அமைந்துவிட்டது.

*****************************************

இந்தக் கதையைக் கேட்டபின், அந்தப் பதிவை நான் தேடிப்பிடித்துக் கேட்டு நான் பாலமுரளியின் ரசிகனானேன்,  என்று நீங்கள் நினைக்கலாம். அது நியாயமும்கூட.

ஆனால் வாழ்க்கை விசித்திரமானதல்லவா?

நான்தான் முன்னாலேயே சொன்னேனே! ரகு சார் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கமாட்டார். திரும்ப வாழ்ந்து காட்டுவாரென்று.

அவரோடு சேர்த்து என்னையும் அன்று எச்.எம்.வி ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.  ’ஆடமோடி’யில் பல்லவியில் ஸ்வரப்ரஸ்தாரம்.  இரண்டு குரல்களில்  மாறி மாறி மூன்று ஸ்தாயிகளில் தாவித் தாவி அரை மணி நேரத்துக்கு ஸவரபிரஸ்தாரம்.

திருக்கோவிலூரில் முதலாழ்வார்கள் மூவர் நிற்க இடமிருக்கும் என்று நின்ற போது சூட்சுமமாய் அங்கு நாராயணன் வந்து நெருக்கினான் என்கிறார்கள். அன்று என்னை பாலமுரளிகிருஷ்ணா நெருக்கவில்லை. ரகு சாரின் குரல் மூலம் உச்சிமோந்து தழுவிக்கொண்டார்.

அதன்பின் எத்தனையோ பதிவுகளுடன் கணக்கில்லா கணங்கள் அந்தரங்கமாய் கழிந்திருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொருமுறையும் அந்த மேதையின் பெயரைச் சொன்னதும் முதல் ஸ்பரிசமாய் நினைவுக்கு வருவது அன்று சஞ்சய் நகரில் ரகு சார் பாடிய சாருகேஸிதான். 

தூமபத்ர தூளி

இன்று எழுத்தாளர் பா.ராகவன் தனது பேஸ்புக் பதிவில் மூக்குப்பொடியைப் பற்றி எழுதியிருந்தார். எனக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரத்தடிக்காக எழுதிய இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. தூசிதட்டி இங்கு இடுகிறேன்.

ஆளை மயக்கச சொக்குப் பொடி போடுவது வழக்கம். ஆனால் சங்கீதத்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மயக்கியவர்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களுக்குக் கைகொடுத்தது சொக்குப் பொடியல்ல, மூக்குப்பொடி என்று தெரிய வரும். மும்மூர்த்திகளுக்கும் மூக்குப் பொடிக்கும் சம்பந்தம் உண்டா என்று நான் அறியேன். மும்மூர்த்திகளுக்குப் பிறகு வாழ்ந்த இசை வல்லுனர்களைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவலின்படி, மானோம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யரே மூக்குப் பொடிக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள உன்னத பந்தத்தை தொடங்கி வைத்த மஹானுபாவர்.

மானோம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர் என்றதும் முதலின் நினைவுக்கு வருவது அவரது குருவான ‘தியாகராஜர்’, அதன்பின் நினைவுக்கு வருவது, அவரது இரு பிரதான சிஷ்யர்களான மஹாவைத்தியநாத சிவனும் பட்டணம் சுப்ரமண்ய ஐயரும். மஹா வைத்தியநாத ஐயர் மூக்குப்பொடி போட்டதற்கான தகவல் ஏதும் இல்லாததால், அவரை உடைப்பில் தூக்கி போட்டுவிட்டு, பட்டணம் சுப்ரமண்ய ஐயரைப் பார்ப்போம். குருவிடமிருந்த கற்ற அவரது சங்கீதம் எப்படி உலகப் பிரசித்தியை அடைந்ததோ அதே அளவிற்கு குருவின் தாக்கத்தால் விளைந்த அவரது மூக்குபொடியின் மகத்துவமும் பெரும் பிராபல்யத்தையடைந்தது.

குருவும் சிஷ்யரும் ஒரு பிரயாணத்தின் பொழுது பொடிமட்டை கிடைக்கா அத்துவானக் காட்டில் மாட்டிக் கொண்டனர். கையிருப்பிலிருந்த பொடி அத்தனையும் தீர்ந்த போக, எத்தனை காசு கொடுத்தாலும் பொடி கிடைக்காத நிலை. பார்த்தார் சிஷ்யர், தனக்குப் பிடித்த இரு விஷயங்களுள், ஒன்றின் மேலிருந்த ஏக்கதை மற்றொன்றின் வழியாய் வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதாவது, அவருக்குப் பிடித்தமான பொடி இல்லாத ஏக்கத்தை, அவருக்கு பிடித்தமான சங்கீதத்தின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்படியாகப் பிறந்ததுதான் “தூம பத்ர தூளி” என்ற சாவேரி ராகக் கீர்த்தனை. (தூமபத்ரம் என்றால் புகையிலை, தூளி என்றால் பொடி).

எதையோ தேடும்போது ரோஜா முத்தைய்யா நூலகத்தில் 1933-ம் வருட ஜூலை ஆனந்த விகடனில் எனக்கு அந்தப் பாடல் கிடைத்தது. இந்தக் கிருதியைப் பற்றி பல இடங்களில் குறிப்புகள் கிடைக்கக் கூடும். எனினும், இந்தக் கிருதியின் முழு சாஹித்யம் இங்குதான் வெளியாகியுள்ளது.

பல்லவி

தூமபத்ரதூளி தகலுனா
ஈ தரித்ர ஊரிலோ
தயதோனிபுடு தெலுபவய்யா

அனு பல்லவி

காமிதார்த்தபல முவிச்சுனே
ஒகசிமிடாதூளி
பூமிலோனு லக்ஷகுடுனு
பிக்ஷகுடுனு விச்வஸிஞ்சே (தூம)

சரணம

மெப்புகைன மொகடநின்னு
கொனுடஸம்ப்ரதாயமே
அப்புதீஸி வெனுகநின்னு
புச்சுகொண்டே நியாயமா
நிப்புநீள்ளு காலிவலெனு
நீவுப்ராணாதாரமே
கொப்பவரத வெங்கடேச
ஸுப்ரஸாத ஸாரமே (தூம)

அந்த பாடலில், “ஐயா! இந்த தரித்திர ஊரில் மூக்குப்பொடி கிடைக்குமா? தயவுடன் இயம்புவாய்! ஒரு சிட்டிகை பொடி, ஆண்டியையும் அரசனையும் பாரபட்சமின்றி பரவசப்படுத்தும். ஏ பொடியே! உன்னை இயன்றவரை கையிருப்பில் வைத்திருப்பது உத்தமம். அப்படியில்லாத பட்சத்தில், இருப்பவரிடம் கையேந்தி பெற்றாலும் பாதகமில்லை. நீர், காற்று, நெருப்பு போல நீயும் ஒரு அத்தியாவசியப் பொருள்! என்னய்யன் திரு வேங்கடமுடையான் அருளிய பிரசாதம் நீ!” என்கிறார் பட்டணம்.

கர்ணனனுக்குக் கவச குண்டலத்தைப் போல, பட்டணம் சுப்ரமண்ய ஐயருக்கு அவரது பொடிடப்பா. ஒருமுறை மைசூர் மகாராஜா முன்னிலையின் பட்டணம் பாடிக் கொண்டிருக்கும் போது, தனது ஆருயிர் பொடியைக் காணாமல் பதறிப் போய், பாட்டை நிறுத்திவிட்டுப் பொடி-டப்பாவைத் தேட ஆரம்பித்துவிட்டார். இதனைப் பார்த்த மகாராஜா, அவருக்கு ஒரு ‘தங்க பொடி டப்பாவை’ பரிசாகக் கொடுத்ததுமே சாந்தமடைந்து கச்சேரியைத் தொடர்ந்தார்.

.சேலம் மீனாட்சி அம்மாள் என்ற பிரபல நடனக் கலைஞரின் புதல்விகளுக்குப் பாட்டு கற்று கொடுக்க வேண்டி, சென்னைப்பட்டணத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்ததே அவர் பெயருக்கு முன் “பட்டணம்” முளைக்கக் காரணம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறினாலும், ‘பட்டிணம்’ பொடிக்கும் அந்த முன்னொட்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்துகிறது. தன் குருவிடமிருந்து கற்றதை தனது சிஷ்யருக்குச் சேர்ப்பதைக் கடமையாகக் கருதிய ‘பட்டணம்”, தனது பிரதான சிஷ்யரான பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு, முகாரி ராக மகிமையுடன் முக்குப் பொடியின் மகோன்னதத்தைப் பற்றியும் போதித்தார்.

கர்நாடக இசையை, விறுவிறுப்பாகவும் விவகாரத்துடனும் கச்சேரியில் கொடுக்க ஒரு அற்புதமான முறையை வகுத்து முன்னோடியாய் விளங்கிய அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், மூக்குப் பொடி விஷயத்திலும் முன்னோடியாகவே விளங்கினார். “இன்றைய கச்சேரியில் எத்தனை புது கீர்த்தனங்கள் அரியக்குடி பாடினார்” என்று கணக்கு வைத்திருக்கும் பல இரசிகர்களைப் போலவே, “இன்றைய கச்சேரியில் எத்தனை முறை ஐயங்கார்வாள் பொடி போட்டார்” என்று கணக்கு வைக்கவும் ஏராளமான இரசிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு இரசிக சிரோண்மணி, முதல் வரிசையில் உட்கார்ந்த படி, தாளத்தில் வரும் எண்ணிக்கைகளை எல்லாம் சட்டை செய்யாமல், அரியக்குடியின் ‘பொடிக் கணக்கை’ மட்டும் இம்மிபிசகாமல் கவனித்து, பக்கத்திலிருந்தவரிடம் அவ்வப்பொழுது வரும் எஸ்.எம்.எஸ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்டைப் போல சொல்லிக் கொண்டிருந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த அரியக்குடி, வழக்கம் போல பாடல் முடிந்ததும் பொடியை உறிஞ்சிவிட்டு, “இப்போ எட்டாவது தடவை. கணக்கு சரியா?, இனிமேலானும் பாட்டை கேளுங்காணும்” என்றாராம். என்னதான் முன்னோடி என்றாலும், சட்டியில் இல்லாமலா அகப்பையில் வரும்? அரியக்குடி வேறு யாருமில்லை; பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் சிஷ்யர்தான்.

அரியக்குடியின் சிஷ்யையான திருகோகர்ணம் கனகாம்புஜம் ஒரு கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பொழுது, அவரது மூக்குத்தியின் திருகு சற்றே கழன்றுவிட, அவசர அவசரமாய் பாடிக்கொண்டிருந்த பாட்டை முடித்துவிட்டு, இடது கையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, சற்றே கழுத்தைத் திருப்பியபடி வலது கையால் மூக்குத்தியை சரி செய்தாராம். இதனைப் பார்த்த இரசிகர்கள், அரியக்குடியின் அரிய கச்சேரி பாணியை பின்பற்றவதற்காக மூக்குப்பொடி போடுவதாக நினைத்து ஆரவாரம் செய்தார்களாம். “அரியக்குடியின் தாக்கத்தை, அவரது மானசீக சிஷ்யரான ஜி.என்.பி-யின் இசையில் எத்தனைத் தெளிவாகப் பார்க்க முடியுமோ, அதே அளவிற்கு, அவரது மூக்குப்பொடி போடும் இலாவகத்திலும் காண முடியும்”, என்று அவர் கச்சேரியை நேரில் கேட்ட பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நாகஸ்வரச் சக்கரவர்த்தி ராஜரத்னம் பிள்ளையின் ராக வின்யாசம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது அவருடைய பொடிமட்டையின் அளவும். கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மராக விளங்கிய செம்மங்குடி சீனிவாச ஐயரின் சரீரத்தை விரும்பி அடிக்கடிப் பிடித்துக் கொண்ட சளியால் அவரது சாரீரம் பாதிக்கப்படாமல் காப்பற்றப்பட்டது ‘மூக்குப் பொடி’ என்னும் அருமருந்தால்தான். செம்மங்குடியின் பிரதான சிஷ்யரான ‘சங்கீத கலாநிதி’ டி.எம்.தியாகராஜன் குருவின் சங்கீதத்தை கிரஹித்ததைப் போலவே பொடியையும் கிரஹித்துப் பெரும் புகழ் பெற்றார். அபஸ்வரத்தைத் தொடாமல் இலாவகமாய் வில்லைப் போடுவதைப் போலவே, மீசை மேல் படாமல் இலாவகமாய் பொடி போடும் திறமை படைத்த ‘பாப்பா வெங்கடராமையாவின்’ திறைமை உலகப் பிரசித்தி பெற்றது.

கர்நாடக உலகின் பொற்காலம் போய்விட்டது என்று பிலாக்கணம் படிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அந்தப் பொற்காலம் திரும்பி வர ஒரே வழி எம்பருமான் அருளிய தூம பத்ர தூளியின் திருமகிமையை கலைஞர்களும் ரசிகர்களும் உணர்ந்துப் போற்றி அனுபவிக்கவேண்டும்.