பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம் – முன்னுரை
நான் இணையத்தில் எழுதத் தொடங்கியவன். இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்தரத்தினால் எழுதும் பொருளை என் திருப்திக்கு ஏற்ப எழுதிப் பழகியவன். நான் இணையத்தில் எழுதத் தொடங்கி சில ஆண்டுகள் கழித்து ஒரு நூல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதி அச்சில் வெளியான முதல் ஆக்கமே நூல்தான். நூல் என்பதால், அதிலும் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது.

2009-க்கு பிறகே அச்சு இதழ்களில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அச்சில் வெளியான என் எழுத்துக்கள் பெரும்பாலும் கேட்ட சில நாட்களுக்குள், குறிப்பிட்ட வார்த்தை வரம்பை மீறாமல் எழுதப்பட்டவை என்பதால் இந்தக் கட்டுரைகளை நான் அதிகம் பொருட்படுத்தாமல் இருந்தேன்.
நண்பர் பரிசல் செந்தில்நாதன் சில ஆண்டுகளாகவே இசை ஆளுமைகளைப் பற்றி புத்தகம் ஒன்றை வெளியிட என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் போதெல்லாம், இந்தக் கட்டுரைகளை விரிவாக்கி, இதில் உள்ள ஆளுமைகளைப் பற்றிய (ஓரளவுக்காவது) முழுமையான சித்திரம் தோன்றும்படி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
இசையாளுமைகளை ஆராயும் போது, இசைப் பதிவுகளைக் கேட்பதற்கும், கேட்ட இசையைப் பற்றி விவாதிப்பதற்குமே பல மாதங்கள் (ஆண்டுகள்!) எடுக்கும் என்ற நிலையில், ஒருவரில் வாழ்நாளில் ஒரு சில ஆளுமைகளைப் பற்றி மட்டுமே முழுமையான நூலாக்குவது சாத்தியம் என்பதை உணர எனக்கு இருபதாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளில் உள்ள ஆளுமைகளில் சிலரைத் தவிர பலரைப் பற்றி தமிழில் அதிகம் பதிவுகள் இல்லை. அதிலும் இசைத் துறையில் கலைஞர்களாக அல்லாது, வாத்தியங்கள் வடிக்கும் வினைஞர்களாக இருப்பவர்கள் பற்றி பதிவுகள் மிகவும் குறைவு. அதனாலேயே முழுமையாக இல்லாவிடினும், குறுக்குவெட்டுத் தோற்றமாகவாவது இந்தப் பதிவுகளை நூலாக்கலாம் என்று தோன்றியது.
இந்தக் கட்டுரைகளை என்னிடம் கேட்டு, சலிக்காமல் தொடர்ந்து நினைவூட்டிப் பெற்ற இணைய/அச்சுப் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் வெளியான கட்டுரைகளை இன்று படிக்கும்போது, சற்றே சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது. அவற்றை எழுதிய காலத்தில் நான் நிஜமாகவே சிறுபிள்ளைதானே! அதனால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
கட்டுரைகளில் ஏதும் குறையிருந்தால் தயங்காமல் சுட்டுங்கள். திருத்திக் கொள்ளக் காத்திருக்கிறேன். கட்டுரைகள் உங்களுக்குப் பிடித்திருப்பின் அதற்குக் காரணமான ஆளுமையை நெஞ்சார வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
லலிதாராம்