Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘சென்னை’

காலண்டரில் மார்கழி பிறந்து சில நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு இன்றுதான் மார்கழி. வருடா வருடம் இரண்டு வார விடுப்பு எடுத்துக் கொண்டு சபா சபாவாக ஏறி இறங்கி இசைக் கடலில் திளைக்க ஆரம்பிக்கும் நாள்தான் எனக்கு மார்கழி. 

பெங்களூரில் இருந்து சென்னை வந்து, வீடு நோக்கி விரைந்த போது இதமான குளிரும் (பெங்களூர் பனியில் பயணித்த பிறகு சென்னைக் குளிர் இதமாகத்தானே இருக்கும்) திருப்பாவையும் என் மார்கழியைத் துவங்கி வைத்தன. புள்ளும் சிலம்பிய இடத்திற்கு பத்தடி தூரத்தில் ஆழி மழைக் கண்ணன் ஆர்பரித்துக் கொண்டிருந்தான். ஒரு தெருவில் ஒலிப்பெருக்கியில் பேச்சுக் குரல் கேட்டது. உற்று கவனித்த போது, அதுவும் திருப்பாவைதான். சென்னைப் பனியையும் ஒரு பொருட்டாக மதித்து நேற்றைய இரவே வரையப்பட்ட அழகிய பெரும் கோலங்கள் சில தென்பட்டன. எங்கள் வீட்டில், எனக்குப் ப்டிக்கும் என்பதால் நாளை முதல் பெரியதாய் அம்மா கோலமிடுவாள்.

டிசம்பர் சீஸனின் அனைத்தும் நாட்களும் எனக்கு அதி காலையே தொடங்கி விடும் – முதல் நாள் தவிர்த்து. முதல் நாள் காலை முழுதும் எந்தெந்த இடத்தில் என்னென்ன கச்சேரி – அகாடமியில் சௌம்யாவைக் கேட்டபின் நாரத கான சபாவில் ஜெயந்தி குமரேஷ¤க்குப் போகலாமா அல்லது பாரத் கலாசாரில் விஜய் சிவா கேட்டு விட்டு நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியில் ஹைதராபாத் சகோதரர்களைக் கேட்கலாமா? இந்த வருடம் வீணை காயத்ரி எங்கும் வாசிக்கப் போவதில்லை என்று முன்பே அறிவித்து இருந்தாலும், கடைசி நிமிட மனமாற்றம் நிகழ்ந்திருக்குமா? என்றெல்லாம் ஆராய்வதே ஒரு தனி சுகம். முதலில் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கும் கலைஞர்கள் எல்லாம் எங்கெங்கே பாடுகிறார்கள் என்று நோட்டம் விட்டு முதல் கட்ட லிஸ்ட் தயாராகும். அதன் பின், ஒரே நாளில் optimal-ஆக, அதிக அளவிலும் – அதே நேரத்தில் என் பட்டியலில் இருக்கும் கலைஞர்களின் கச்சேரியாகவும் அமையும் கச்சேரிகள் கொண்டு அடுத்த கட்ட லிஸ்ட் தயாராகும். அந்த பட்டியலில் நான் கேட்க விழையும் கலைஞர்களுக்கு யார் பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள் என்று ஆராய்ந்து, திருச்சி சங்கரன், நாகை முரளீதரன், காரைக்குடி மணி, எம்பார் கண்ணன் வாசிக்கும் கச்சேரிகளுக்கு முக்கியத்வம் அளிக்கப் பட்டு, மூன்றாம் கட்ட லிஸ்ட் தயாராகும். மூன்று கட்ட அலசலுக்குப் பின்னும் காயத்ரி வெங்கட்ராகவனைக் கேட்கப் போகலாமா அல்லது சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரிக்குப் போகலாமா என்று குழப்பம் மண்டையைப் பிளக்கும். மண்டைக் குடைச்சல் உச்சத்தை அடையும் போது – ஆட்டம் தொடங்கி ஒரு விக்கெட் விழுந்த பின் “There comes the Don” என்று பிராட்மனைக் காண தனது இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த அந்தக் கால பெரிசுகள் போல, “There comes the december season” என்று தோன்றும். இரண்டு வாரத்துக்கும் சேர்த்து திட்டம் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று தோல்வியை ஒப்புக் கொண்டு, அன்றைய தினத்துக்கு மட்டும் எங்கெங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, அரக்க பரக்க குளித்து, அரை வயிறும் கால் வயிறுமாய் உண்டு – அரை மணிக்குள் பெரம்பூரில் இருந்து மைலாப்பூருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பேன்.

அட! நிஜமாகவே சாகேத்ராமன் கச்சேரிக்கு நேரமாகிவிட்டது. இன்னும் எழுதிக்கொண்டிருந்தால் வர்ணத்துக்குள் கூட போய்ச் சேர முடியாது. 2004, 2005 டிசம்பர் மாதங்களில் இணையத்தில் எழுதியதை விட, விவரமாக எழுத வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. 2006, 2007-ல் கூட அப்படித்தான் நினைத்தேன். செயலாக்கத்தான் முடியவில்லை. இந்த வருடம் பரவாயில்லை. முன்னோட்டமாவது போட்டாகிவிட்டது. தொடருமா தெரியவில்லை. பார்ப்போம்!

Read Full Post »