Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘ஜி.என்.பி’

2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.

2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.

நூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.

நூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

மே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.

IMG_4157

அரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

 

 

Read Full Post »

gnb-retrospective-2cd1900-களில் வாழ்ந்த ஜாம்பவான்கள் பலரைப் பற்றி கேள்விப் பட முடிந்தாலும், அவர்களுடைய இசையைக் கேட்பதென்பது அரிதான விஷயம். ஜி.என்.பி-யின் விஷயத்தில், அவர் கொடுத்த ரிக்கார்டுகள் இருபதுக்கு மேல் கிடைக்கின்றன. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை 1930-களின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டவை. தோடியில் ‘அம்ப நாது’, காம்போதியில் ‘சுப்ரமண்யாய நமஸ்தே’, சுத்த சாவேரியில் ‘தாரிநி தெலுஸு கொண்டி’, சாவேரியில் ‘பராசக்தி’, ஆனந்த பைரவியில் ‘ஓ ஜெகதம்பா’, போன்ற ரிக்கார்டுகள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தவை. அனைத்துப் பாடல்களும் அன்றைய நிலையில் பிரபலமான பாடல்கள். இந்த ரிக்கார்டுகளில் ஜி.என்.பி-யின் ஸ்ருதி கிட்டத்தட்ட நாலரைக் கட்டையில் இருக்கிறது. அதி துரிதமான சங்கதிகள், கேட்பவருக்கே மூச்சு முட்டும் வகையிலான பிருகாக்கள், என்று பல விஷயங்கள் இந்த ரிக்கார்டுகளில் தெரிந்தாலும், ஜி.என்.பி-யின் சங்கீதம் எப்படி சில வருடங்களுக்குள் வளர்ந்து உயர்ந்த நிலையை அடைந்தது என்பதை பறை சாற்றும் வகையில்தான் இந்த ரிக்கார்டுகள் இருக்கின்றன.

இரண்டாம் வகை ரிக்கார்டுகள் 1940-களில் வெளி வந்தவை. இந்தப் பாடல்களுள் பல பாடல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது ஜி.என்.பி-தான் என்று கூறலாம். இந்த சமயத்தில், சுமார் இரண்டரை கட்டைக்கு இவரது ஸ்ருதி குறைந்திருந்தாலும், 1930-களில் பேசிய அதே பிருகாக்கள் இந்த காலாகட்டத்திலும் கேட்க முடிகிறது. முன்பு இருந்ததைவிட அதிக கனமும், பல அழகிய சங்கதிகளைல் நகாசு வேலை புரியும் சங்கீத அறிவும் இவருக்கு வாய்த்திருப்பதையும் இந்த ரிக்கார்டுகள் சுட்டுகின்றன. சண்முகப்ரியா, பூர்வி கல்யாணி, கல்யாணி, ஹிந்தோளம் போன்று பல பிரபலமான, விஸ்தாரமாகப் பாடக்கூடிய ராகங்களில், பல எளிய பாடல்கள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தன. ‘சொன்னதைச் செய்திட’ (ராகமாலிகை), ‘கண்ணனை காண்பதெப்போ’ (ராகமாலிகை), ‘காரணம் கேட்டு வாடி’ (பூர்வி கல்யாணி), ‘கண்ணனே என் கணவன்’ (கல்யாணி), ‘நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி’ (சண்முகப்ரியா), போன்ற பல அழகிய தமிழ்ப் பாடல்கள் வெளி வந்து மக்கிளிடையே பிரபலமாயின. 1947-க்கு முன் தேச பக்தியைத் தூண்டும் வகையில் ‘ஜெயதி ஜெயதி பாரத மாதா’ (கமாஸ்), ‘சமரஸ பாவன’ (பீம்ப்ளாஸ்) போன்ற பாடல்களும் இக்காலகட்டத்தில் வந்தவையே. இந்தப் பாடல்கள் ஜி.என்.பி பாடியதற்கு முன் எப்படிப் பாடினரென்று தெரியாவிடினும், ஜி.என்.பி அமைத்த மெட்டுக்களும், சங்கதிகளுமே நிலைத்து, இன்றும் பாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜி.என்.பி புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் வந்த அனைத்து ரிக்கார்டுகளுமே பிரபமடைந்தன என்றாலும் ‘வாஸ¤தேவயனி’ ரிக்கார்டும், ‘திக்கு தெரியாத காட்டில்’ ரிக்கார்டும், ‘ராதா சமேத கிருஷ்ணா’ ரிக்கார்டும், ‘ஹிமகிரி தனையே’ ரிக்கார்டும் ஜி.என்.பி-யின் பெயரை என்றும் நிலைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றன என்று கூறினால் அது மிகையாகாது.

ஜி.என்.பி-யால் மெருகேற்றப் பட்டு, கச்சேரி மேடைக்கு வந்த ‘வாஸ¤தேவயனி’ கிருதி, 1940-ஆம் வருடம் 78 rpm இசைத் தட்டாக வெளியானது. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். மொத்தமே எட்டு நிமிட நேரத்திற்குத்தான் பதிவு செய்யக் கூடிய இசைத் தட்டில், ஒரு ராகம் பாடி, அதை கிரஹித்து வயலின் ராகம் வாசித்து, கீர்த்தனைகளை சங்கதிகளுடன் பாடி, கல்பனை ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனமும் கொடுத்து, கேட்பவருக்கு நிறைவையும் கொடுப்பதென்பது, ‘next to impossible’, என்பார்களே, அந்த வகையில் சேரும். அதை இந்தக் கூட்டணி செய்து காட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

இந்த ரிக்கார்டு, 1940-ம் வருடத்தில் மட்டும் பத்தாயிரம் ரூபாய் ராயல்டியை ஜி.என்.பி-க்குக் கொடுத்தது.

அதி வேகமாய்ப் பாடுவதற்கும் விறுவிறுப்பாகப் பாடுவதற்கும் உள்ள நுட்பமான வித்தியாசத்தை, அவரின் 1930களில் வந்த ரிக்கார்டுகளையும் 1940களில் வந்த ரிக்கார்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உணர்ந்துவிட முடியும்.

மூன்றாம் வகை ரிக்கார்டுகள் 1950-களில் வந்தவை. பழுத்த பழமான பின் கொடுத்திருக்கும் ‘சாதிஞ்சனே’ (ஆரபி), ‘சாமஜ வரகமனா’ (ஹிந்தோளம்), ‘ஆனந்த நடேச’ (தோடி) போன்ற ரிக்கார்டுகள் இந்த காலகட்டத்தில் வந்தவையாகும். இந்த இசைத்தட்டுகளும் அற்புதமாகவே இருப்பினும், 1940-களில் இருந்தது குரலுக்கு ஒப்பிட்டால், இவை ஒரு மாற்று குறைவுதான் என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கட்டை ஸ்ருதியிலேயே இந்த ரிக்கார்டுகள் இருக்கின்றன. குரல் 1940-களில் இருந்ததைப் போல இல்லாவிடினும், அவருக்கேவுரிய பிருகாக்களை அக் குரல் பொழியத் தவறவில்லை. இன்னம் சொல்லப் போனால் 1950-களில் வெளி வந்த ஹிந்தோளம் 40-களில் வந்த ஹிந்தோளத்தைக் காட்டிலும் பாவபூர்வமாகவும் அழகிய ஸ்வராக்ஷரங்களுடன் (பல்லவியில் ‘ஸா-ம’, அனுபல்லவியில் ‘ச-ம-நி-க-ம-க’) இன்னும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது என்று கூடத் தோன்றுகிறது.

இது நாள் வரை, மேற் சொன்ன ரிக்கார்டுகள் ஒரு சில ரசிகர்களிடம் மட்டுமே இருந்து வந்தன. 1930-களில் வந்த ரிக்கார்டை ஒவ்வொன்றையும் ஆயிரக் கணக்கான ரூபாய்க்கு விற்றவர்கள் இன்னும் நம்மிடையில் இருக்கிறார்கள். இந்த வருடம், ஜி.என்.பி-யின் நூற்றாண்டை ஒட்டி கர்நாடிகா நிறுவனம், 1930-களிலும் 1940-களிலும் வெளியான ஜி.என்.பி ரிக்கார்டுகள் பலவற்றை குருந்தகடாகத் தொகுத்து வெளியுட்டுள்ளது. கிடைப்பதற்கரியனவாய் இருந்தவை இன்று சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. (ஜி.என்.பி-யின் புகழ் பெற்ற ரிக்கார்டுகள் என்று முன்பு குறிப்புட்டுள்ள நான்கு ரிக்கார்டுகளுமே தொகுப்பில் இடம் பெறாததுதான் ஒரே குறை).

கர்நாடக இசைப் பாடல்கள் அடங்கிய 78 rpm ரிக்கார்டுகளைத் தவிர, சகுந்தலை படத்தில் எம்.எஸ் உடன் சேர்ந்து பாடியிருக்கும் இரண்டு டூயட் பாடல்களும் (இவையும் 78 rpm ரிக்கார்டுகள்தான்), 1950-களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் இருந்து சில பாடல்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் ‘ராமா நின்னே’, ஷ்யாமா சாஸ்திரியின் ‘ப்ரோவவம்மா’, தியாகராஜரின் ‘ஏதாவுனேர்ச்சிதிவோ’ கிருதியும் ‘பராமுகமேலரா’ கிருதியும் இடம்பெற்றுள்ளன. மேற் சொன்ன எதுவுமே இடம் பெறாமல், இந்தத் தொகுப்பில் எஞ்சியிருக்கும் உருப்படியான தேவமனோகரி ராகம் தானம் பல்லவி மட்டுமே இடம் பெற்றிருந்தால் கூட, இந்தத் தொகுப்பை கர்நாடிகா நிர்ணயித்திருக்கும் விலைக்கு இரண்டு மடங்கு அதிகமான விலை கொடுத்துக் கூட வாங்கலாம்.

G.N.Balasubramaniam – A Centennial Retrospective என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இசைத் தொகுப்பின் விலை 249 ரூபாய்.

இணையத்தில் வாங்க:

Read Full Post »

சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் சங்கீதத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு, ஐம்பது வயதைத் தாண்டிய எவரைக் கண்டாலும், “ஜி.என்.பி-யை நேரில் பார்த்ததுண்டா?”, என்று கேட்பேன். அவர் இசையின் மேல் காதல் கொண்டிருந்த எனக்கு, 2003-ல் ஜி.என்.பி-யின் கடைக் குட்டியான திரு.ஜி.பி.இராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது. எண்ணற்ற வார இறுதிகளை அவர் இல்லத்தில் ஜி.என்.பி-யைப் பற்றி பேசியும், இசையைக் கேட்டும், ஜி.என்.பி தொடர்பாக அவர் குடும்பத்தாரிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டியபடியும் கழித்திருக்கிறேன்.

அப்போதுதான், ஸ்ருதி ·பௌண்டேஷன் ஜி.என்.பி-யைப் பற்றி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் விடியோ பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. பல மணி நேரம் செல்லக் கூடிய அந்த விடியோவில் எங்கோ ஒரு மூலையில், 1964-ல் கிருஷ்ண கான சபா வெளியிட்ட மலரைப் பற்றிய குறிப்பினை திரு. சஞ்சய் சுப்ரமணியத்தின் பேச்சு பதிவு செய்திருந்தது. அன்று தொடங்கி எங்காவது இந்தப் பாராட்டு மலர் கிடைக்குமா என்று சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினேன்.

வெளியிட்ட கிருஷ்ண கான சபையை அணுகியதும், அவர்களிடமும் ஒரு பிரதி கூட இல்லாததை அறிந்தேன். பல நாட்கள் தேடிய பின், ஜி.என்.பி-யின் குடும்பத்தினரின் சேகரிப்பிலேயே பிரதியின் xerox copy இருந்ததை அறிந்து நானும் ஒரு பிரதி பெற்றுக் கொண்டேன். திரு. ராஜமாணிக்கம் பிள்ளை, திரு. லால்குடி ஜெயராமன் போன்ற அரிய கலைஞர்களும், ஜி.என்.பி-யுடன் நெருங்கிப் பழகியர்கள் பலரும் எழுதியிருக்கும் கட்டுரைகளை படித்து மகிழ அந்த பிரதியே போதுமானதாக இருந்தது. இருப்பினும், பொக்கிஷமாய்ப் போற்றத் தக்க பல அரிய புகைப்படங்களை ரசிக்க என் பிரதி போதுமானதாக இல்லை. எங்கேனும் நல்ல பிரதி கிடைக்குமா என்ற தேடல் தொடர்கதையாகவே மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

2006-ல் விகடன் பிரசுரத்தார் அளித்த வாய்ப்பால் ஜி.என்.பி-யைப் பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். பழைய இதழ் படிகளிலிருந்தும், நேர்காணல்கள் மூலமாகவும், ஜி.என்.பி-யின் பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரிகளில் இருந்தும், எழுத ஏராளமாய் விஷயங்கள் கிடைத்தன. இருப்பினும், புகைப்படங்கள் இல்லா புத்தகம், நெய்யில்லா சர்க்கரைப் பொங்கல் போன்றல்லவா மணமற்று இருக்கும்? 1965-ல் மறைந்துவிட்ட மாமேதையின் புகைப்படங்களோ அதிகம் கிடைக்காத நிலையில், கிருஷ்ண கான சபை வெளியிட்ட பாராட்டு மலரில் உள்ள படங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானோம்.

சென்னை, பெங்களூர், ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும், இசையில் இருந்த ஈடுபாட்டால் உருவான எனது நண்பர் கூட்டமே இந்த மலரின் பிரதியைத் தேடத் தொடங்கியது. பல நாட்களுக்குப் பின், ஜி.என்.பி பக்தர் என்று கொள்ளக் கூடிய திரு.சிவராமகிருஷ்ணனை புத்தகத்துக்காக பேட்டி காணச் சென்றேன். பேட்டி முடிந்து கிளம்பும் தருவாயில், தன்னிடம் 1964-ல் வெளியான மலரின் பிரதி இருப்பதை திரு.சிவராமகிருஷ்ணன் தெரிவித்த போது என் கால்கள் தரையில் இல்லை.

ஒரு வழியாய் பிரதி கிடைத்த போதும், பல கை மாறி இருந்த புத்தகத்தின் பக்கங்கள் வெகுவாய் கசங்கியிருந்தன. நூல் அச்சாக சில வாரங்களே எஞ்சியிருந்த தருணத்தில், திரு.அதியமான் தொலை பேசினார். அவருடைய உறவினர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில், வீட்டுக்கு சொந்தக்காரர் பல புத்தகங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றுள் இந்த மலரின் படியும் இருப்பதாகவும் கூறினார். வீட்டுக்காரர் இந்தியாவிலேயே இல்லாததால், வீட்டை நிர்வகித்து வந்தவர்களிடம் மன்றாடிப் படிகளைப் பெற்றுத் தந்தார். அப்படிக் கிடைத்த பிரதியிலிருந்தே என் புத்தகத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டன. மலரில் இருந்த படங்களை அச்சில் ஏற்றுவதற்கு முன் நகாசு வேலை செய்து பரிமளிக்க வைத்த விகடன் பிரசுர்த்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். நூல் வெளியான பின், பல முதிய ஜி.என்.பி ரசிகர்கள் நூலில் இடம் பெற்ற படங்களை சிலாகித்துப் பேசினர். அவர்களின் பாராட்டுகள் அனைத்தும் கிருஷ்ண கான சபைக்கும், 1964-ல் மலர் வெளியிடக் காரணமாயிருந்த திரு.யக்ஜராமன் அவர்களையுமே சேரும்.

புத்தகம் நல்ல முறையில் வெளி வந்துவிட்ட போதும், எனக்கே எனக்கென்று மலரின் ஒரு பிரதி கூட இல்லையே என்ற ஏக்கம் என்னை மீண்டும் தேட வைத்தது.

நூல் வெளியாகி ஓராண்டு கழித்து, 2007-ம் ஆண்டு மே மாதம், சென்னை மூர் மார்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில், அட்டைகள் இல்லாத நிலையில், மலர் எனக்குக் காட்சியளித்தது. அன்று அந்தக் கடைக்காரர் எவ்வளவு விலை கேட்டிருப்பினும் கொடுத்திருப்பேனெனினும், விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, அதன் மதிப்பு உணராது சொற்ப விலைக்குச் சொன்ன கடைக்காரரிடம், பிடுங்காத குறையாய் மலரைப் பெற்ற பொது ஏற்பட்ட மன நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. முனைந்து செய்யும் முயற்சி, எத்தனை வருடங்களானாலும், மெய் வருத்தக் கூலி தரும் என்ற வாக்கின் உண்மைத் தன்மை எனக்குத் தெள்ளெனப் புரிந்தது.

உலகமே ஜி.என்.பி என்ற மாமனிதரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், நூற்றாண்டு மலரினைத் தொகுக்கும் பேறு எனக்குக் வாய்த்துள்ளது. அந்த மலரை அலங்கரிக்க திரு. லால்குடி ஜெயராமனிடமிருந்த கட்டுரை பெற அவர் வீட்டுக்குச் சென்ற போது, என்னுடைய ஜி.என்.பி புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொடுத்தேன். அடுத்த நாள், திரு.பிரபு தொலைபேசியில் அழைத்து, லால்குடி அவர்கள் கிருஷ்ண கான சபை வெளியிட்ட மலரைப் பற்றி என் புத்தகத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், அதனை மறுபதிப்பு செய்ய விழைவதாகவும் தெரிவித்து, என்னுடைய பிரத்யைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

அரிய பொக்கிஷங்கள் அனைவரின் பார்வைக்கும் கிடைத்தல் அரிது. அப்படிப் பட்ட ஒரு புதையலாக இருந்து வந்த இந்த மலரை குன்றின் மேலிட்ட விளக்கு போல, அனைவரையும் சென்றடையும் எண்ணத்தை திரு.பிரபு வெளியிட்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். ஜி.என்.பி நூற்றாண்டில், அவரை நினைவு கூறும் வகையில் நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முயற்சியாக இந்த மலரின் மறுபதிப்பு அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அக்டோபர் 24-ம் தேதி, கிருஷ்ண கான சபை அரங்கில், மலரின் மறுபதிப்பு வெளியிடப்படுகிரது. இசை ரசிகர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்

Read Full Post »