Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘பட்டம்மாள்’

பட்டம்மாள் என்றதும் அவர் பாடிய எத்தனையோ தீட்சிதர் கீர்த்தனைகள் நினைவுக்கு வரக்கூடும். தீட்சிதரை தவிர்த்துப் பார்த்தால் பல தியாகராஜர் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள், கோபாலகிருஷ்ண பாரதி, சுத்தானந்த பாரதி பாடல்கள் பலவற்றை அவர் தனதாக்கிக் கொண்டதை உணர முடியும்?

ஆனால் ஷ்யாமா சாஸ்திரி பாடல்கள்? அவற்றை மட்டும் பாடாமல் இருந்திருப்பாரா என்ன? மற்ற பாடல்களின் ஜொலிப்பில் கொஞ்சம் பட்டம்மாள் பாடிய ஷ்யாமா சாஸ்திரி பாடல்களின் மேல் நிழல்தட்டியிருக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் எனக்கு ஒரு கச்சேரி பதிவை அனுப்பி வைத்தார். அந்தப் பதிவில், ‘கருணாநிதி இலலோ’ என்கிற தோடி கிருதி இடம்பெற்றிருந்தது.

கேட்க ஆரம்பித்ததும் சுழலில் சிக்கிக் கொண்டேன். சுழற்சியை கை நிறுத்தினாலும் பல வாரங்களுக்கு அந்த தோடி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருந்தது.

ஷ்யாமா சாஸ்திரியின் வரிகளை அலசிப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே விஷயத்தைதான் அவர் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார் என்று புலப்படும். விஷயம் என்று சொல்வதை விட வார்த்தைகள் என்று சொல்வது பொருத்தம். ஒரே வார்த்தைகள்தான் – ஆனால் சொல்லும் விஷயங்கள் வேறு வேறல்லவா? உதாரணமாய் மாயம்மாவை முதல் வார்த்தையாக்கி வடித்திருக்கும் நாட்டைகுறிஞ்சி ராகக் கிருதியும், ஆஹிரி ராகக் கிருதியும் கிழக்கும் மேற்குமல்லவா?

‘கருணாநிதி இலலோ’-விலும் வழக்கமான அம்மா/பிள்ளை கொஞ்சல்/கெஞ்சல்தான் என்றாலும் வடித்திருக்கும் விதத்தில் விரிந்து பரவும் தனித்துவம்.

திஸ்ரத்தில் நடந்து வரும் மத்தகத்தின் கம்பீரம் என்றால் சரணத்தில் நிரவல் குழந்தையின் தீண்டல்.

‘கோமள மிருது பாஷிணி – அம்பா’

அம்மா! எவ்வளவு அழகு நீ! மிருதுவான உன் குரலில் எத்தனை இனிமை.

நிரவலைக் கேட்கக் கேட்க பிஞ்சு விரல்கள் தாயின் தலை கோதி, தாய் மகனைக் கொஞ்சும் கொஞ்சல்களை எல்லாம் மகன் தாய்க்குச் சொல்லும் மிருது வருடல்கள்!

இது மீளாச் சுழற்சி என்றது சரிதானே!

இனி பட்டம்மாள் என்றதும் ‘மாமவ பட்டாபிராம’, ‘ரக்ஷபேட்டரே’ நினைவுக்கு வருவது போலவே ‘கருணாநிதி இலலோ’-வும் நினைவுக்கு வரும்.

என்ன கேட்கப் போகிறீர்கள் என்று புரியாமல் இல்லை. பதிவு எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்.

மகாவிதுஷியின் பிறந்த நாளில் – யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகமும்.

வாழ்க கான சரஸ்வதி பட்டம்மாள் புகழ்!

Read Full Post »