Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘AKC Natarajan’

1990-களில் கர்நாடக இசையின் பால் ஈர்க்கப்பட்ட எனக்கு சங்கீத கலாநிதி ஏ.கே.சி. நடராஜனின் அறிமுகம் தொலைகாட்சியில் ஒலிபரப்பான நேர்காணல் மூலம் கிடைத்தது. அந்த நேர்காணலிலும் அதன் பின் பல இடங்களிலும் அவர்,

நான் ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றேன்இலுப்பூர் பஞ்சாமியின் சகோதரர் நடேசபிள்ளையிடம் நாகஸ்வரம் பயின்றேன்வாய்ப்பாட்டிலும்நாகஸ்வரத்திலும் கச்சேரி செய்யும் நிலைக்கு வந்ததும்அப்போது இருந்த சூழலைப் பார்த்தேன்.

வாய்ப்பாட்டிலோஅரியக்குடிஜி.என்.பிமதுரை மணிஎம்.எஸ்எம்.எல்.விஎன்று ஒரு பெரிய பட்டாளமோ சங்கீத உலகை ஆண்டுகொண்டிருந்ததுநாகஸ்வரத்திலோ ராஜரத்தினம் பிள்ளைவீருசாமி பிள்ளைதிருவெண்காட்டார்திருவீழிமிழலை சகோதரர்கள் என்று அத்தனை ஜாம்பவான்கள்இவர்கள் எல்லாம் உச்சியில் இருக்கும் போது நான் புதிதாய் புறப்பட்டு வந்து வாய்ப்பாட்டிலோநாகஸ்வரத்திலோ எப்படி காலூன்ற முடியும்?

அதனால் கிளாரினெட்டை எடுத்துக் கொண்டுநான் கற்றதை அந்த வாத்யத்தில் கொண்டு வர சாதகம் செய்தேன்கிளாரினெட்டில் எனக்குப் போட்டியே இல்லைஅதனால் மளமளவென மேலே வந்துவிட்டேன்.”

என்று கூறியுள்ளார்.

இதை நான் முதன்முதலில் கேட்ட போது, அவர் என்னமோ குறுக்கு வழியில் மேலே வந்துவிட்டதாய் முதிர்ச்சியற்ற பதின்பருவத்தின் என் மனத்துக்குப்பட்டது. அவர் வாசிப்பின் விசேஷத்தை நான் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே ஜெர்மனியில் இருந்து பீட்டர் ஷ்குல்ட்ஸ் என்பவரை நான் பயின்ற அமெரிக்க பல்கலைகழகத்துக்கு விதி அனுப்பியது.

நான் பொறியியலில் முதுகலை பயின்ற போது கேரளத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டுப் பணியாற்றி வந்தார். அவர் சங்கீத கலாநிதி என்.ரமணியின் சீடர். சங்கீத ஈடுபாட்டினால் என்னை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து உணவளித்து சங்கீதத்தைப் பற்றி பேசுவார். அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது என்ற சொல்லமுடியாவிடினும் நிறைய ஆர்வம் இருந்தது. ஒருநாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீட்டரும் அங்கு இருந்தார். வாசுதேவன் வேலை பார்த்த பிரிவில் பீட்டர் ஆராய்ச்சி மாணவர். ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பீட்டர் வேதியியலில் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா வந்திருந்தார். முறைப்படி மேற்கத்திய செவ்வியலிசை கற்றவர் அவர்.

எங்கள் அரட்டை மேற்கத்திய வாத்தியங்களில் கர்நாடக இசையைப் பற்றி திரும்பியதும், என் சேகரத்தில் நிறைய மேண்டலின் பதிவுகளும், சாக்ஸ்ஃபோன் பதிவுகளும் இருப்பதைச் சொன்னேன். சற்றும் எதிர்பார்க்காதபடி, “கிளாரினெட்டில் கர்நாடக இசைப் பதிவுகள் இருக்கின்றனவா?”, என்று கேட்டார் பீட்டர். வாசுதேவனிடம் ஒரே ஒரு ஒலிநாடா இருந்தது. அதிலிருந்து நவரச கன்னடவில் ‘நினுவினா’ பாடலை ஒலிக்கவிட்டார். கர்நாடக சங்கீதத்த்தில் அதிகப் பரிச்சியம் இல்லாதவர்களைக் கூட அந்தப் பாடலின் துள்ளலான காலபிரமாணமும், அனுபல்லவியில் சுருள் சுருளாய் அலையடிக்கும் அடுக்குச் சங்கதிகளும் எளிதில் ஈர்த்துவிடும்.

நான் பீட்டரை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்த சங்கதிகள் பீட்டரிடம் பெரிய சலனத்தை எற்படுத்தவில்லை. நான்காம் கால உருட்டுச் சங்கதிகள் முடிந்ததும் வந்த ஒரு சங்கதிக்கு பீட்டர் துள்ளிக் குதித்தார். வாசுதேவனை மீண்டும் ஒருமுறை அந்தச் சங்கதியை போடச் சொன்னார். அந்தச் சங்கதியில் ஒரு ஜாரு பிரயோகத்தை ஏகேசி வாசித்திருந்தார். (ஜாரு என்பது ஒரு ஸ்வரத்திலிருந்து அதற்கு தொலைவான ஸ்வரத்தை வழுக்கிக் கொண்டு இணைக்கும் கமகம் எனலாம்).

மூன்று நான்கு முறை நாங்கள் அந்தச் சங்கதியைக் கேட்டபின்னும் பீட்டருக்கு ஆச்சரியமடங்கவில்லை. அனுபல்லவியோடு அந்தப் பாடலை வாசுதேவன் நிறுத்தினார். பீட்டர் ஓரளவு நிதானத்துக்கு வந்ததும், “இது எப்படி கிளாரினெட்டில் சாத்தியம்?”, என்று கேட்டார். எங்களுக்கு அவர் என்ன கேட்கிறார் என்றே விளங்கவில்லை.

இது நடந்த இருமாதங்கள் கழித்து ஒரு மதிய வேளையில் பல்கலைகழக உணவு விடுதியில் பீட்டரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடி வந்து, “உங்க ஆள் பெரிய ஜீனியஸ்!”, என்றார்.

எங்கள் சந்திப்பு நடந்த சில வாரங்களில் ஏகேசி நடராஜன் காலிஃபோர்னியாவுக்கு வந்து வாசிக்கவுள்ளதை அறிந்து பீட்டர் (கிட்டத்தட்ட ஆயிரம் மைல்கள் விமானப் பயணம்) அங்கு சென்றுள்ளார். கச்சேரி முடிந்ததும் ஏகேசி-யுடன் பேசியிருக்கிறார்.

”ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமைதான் உதவி செய்யும்”, என்று தோன்றுகிறது என்றார் பீட்டர்.

நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்து அவரே விளக்கினார்.

“எங்கள் ஊரில் நாங்கள் வாத்தியத் தேர்ச்சி பெறுவது போல கிளரினெட்டை ஏகேசி கற்றிருந்தாரெனில் உங்களுக்கு ஒரு ஜீனியஸ் கிடைத்திருக்கமாட்டார். வாத்தியத்தின் எல்லைகளில் அவரை ‘அறிவு’ நிறுத்தியிருக்கும். அவர் கற்ற வாய்ப்பாட்டும் நாகஸ்வரமும் அவருக்கு சங்கீதத்தைக் காட்டியிருக்கின்றன. எவையெல்லாம் வாத்தியத்தில் வராதோ அதையெல்லாம் வரவழைக்க வாத்தியத்தை என்ன செய்யலாம் என்பதை நோக்கி அறியாமைதான் செலுத்தமுடியும். கிளாரினெட்டில் தவிர்க்க முடியாத சில விசைகளைத் தவிர மற்றதை நீக்கிவிட்டு, நாகஸ்வரத்தைப் போலவே துளைகளில் விரலடியாகவும், ஊதுகின்ற உத்தியைக் கைவரப்பெற்றும் கர்நாடகசங்கீத நுட்பங்களை முழுமையாக அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது”, என்று பீட்டர் சொன்னது பொறியிலடித்தது போல இருந்தது.

ஒரு பெரிய கலைஞர் தன்னடக்கமாய் நேர்காணலில்  சொன்ன வாக்கியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு எவ்வளவு இழந்திருக்கிறேன் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதன்பின் கவனித்து கேட்டபோதுதான் வழமையான கிளாரினெட்டை எப்படி அமைப்பிலும், நாதத்திலும் கிட்டத்தட்ட நாகஸ்வரமாகவே ஏகேசி மாற்றியிருக்கிறார் என்று விளங்கியது.

கலை வரலாற்றில் திரும்பத் திரும்பக் கிடைக்கும் செய்தியொன்றுள்ளது. ஒவ்வொரு கலைஞனுக்கு முன்னாலும் இரு வழிகள் உண்டு. ஒன்று எளிதில் கடக்கக்கூடிய, வாழும் காலத்தில் ஓரளவுக்கு (அதிர்ஷ்டமிருந்தால் பெரிய அளவுக்கு) பெயரும் புகழும் அளிக்கக் கூடிய பாதை. இன்னொன்று சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரிக்கக் கூடிய கடினமான, வாழும் காலத்தில் பல சமயம் அதிகம் கண்டுகொள்ளப்படாத பாதை.

வித்வான் ஏகேசி நடராஜன் இரண்டாம் பாதையைத் தேர்ந்து எடுத்தவர் என்பதை பீட்டர் கணப்பொழுதில் உணர்ந்துவிட்டார். இந்திய இசைச் சூழல் இன்னும் அதை உணரும் கணத்துக்காய் காத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ்

Read Full Post »

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் கலைஞர்கள் அனைவரும், ‘கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம்’ என்று குறிக்கப்படும் 1930-1960 வரையிலான காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.

கச்சேரி இசைப் பதிவுகள் 1950-களின் கடைசியில்தான் சாத்தியமாயின. இந் நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜாம்பவான்களின் இசையைப் பற்றி, இந் நூலில் இடம் பெற்றிருப்பவர்களைப் போன்றவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து கலைஞர்களிடமும் ஏறக் குறைய ஒரே விதமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. கலைஞர்களின் இளமைக் காலம், அவர்களுக்கு சங்கீதத்துடன் ஏற்பட்ட முதல் ஸ்பரிசம், அவர்களுடைய குருவுடனான பந்தம், கலைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள், மடங்களுடனான தொடர்பு ஆகியவை பெரும்பாலான நேர்காணல்களில் விவரமாக இடம் பெற்றுள்ளன. சில வித்வான்களின் விவரிப்பில் பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

1. சாத்தபுரம் சுப்பா ஐயர் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது மோரா வாசித்த பின் ஒரு கோர்வையை மூன்று முறை வாசிக்கும் பழக்கம் இல்லை.
2. பாவேந்தரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு இசை அமைக்க, தண்டபாணி தேசிகர் இரண்டாண்டு காலம் உழைத்தார்.
3. ஏ.கே.சி நடராஜன் வாசிப்பது வழக்கமான கிளாரினெட் அன்று. அவருடைய கிளாரினெட்டில் 5-6 keys மட்டும் கொண்டு, நாதஸ்வரத்தைப் போலவே பாவிப்பதால்தான் கமகங்களை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது.

போன்ற தகவல்களை, இந் நூலில் இடம் பெற்றுள்ள அரிய தகவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தண்டபாணி தேசிகர், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன் அதிகம் வெளி வராதவை. தந்தையே குருவாகவும், குருவே வ்ளர்ப்புத் தந்தையாகவும் மாறி, அன்பைப் பொழிந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவுதான் அன்பு வைத்திருந்த போதும், இசை என்று வரும் போது, குரு சிஷ்யரிடம் காட்டிய கண்டிப்பு கவனிக்கப் பட வேண்டியது. அடைந்திருக்கும் உயரங்களுக்குப் பின் இருக்கும் அயராத உழைப்பும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

பொதுவாக, இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களில், கலைஞனைப் பற்றிய விவரங்கள் இருக்கும் அளவிற்கு, அவன் அந்தக் கலையில் விசேஷமாய் என்ன செய்து இன்றடைந்திருக்கும் உயரத்தை அடைந்தான் என்ற விவரங்கள் இருப்பதில்லை. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. உதாரணமாக எம்.எஸ்.அனந்தராமனின் நேர்காணலில், ‘பரூர் பாணி’ என்பதை அவரது தந்தை உருவாக்கினார் என்ற விஷயம் இருக்கிறதே அன்றி. ‘பரூர் பாணி’ என்றால் என்ன என்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இதே நேர்காணலில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி விஸ்தாரமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூலைப் படித்து முடிக்கும் போது, திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் மேலெழுகிறது. மூத்த கலைஞர்களை பேட்டி காண்பதற்கு முன் ‘ஹோம் வொர்க்’ செய்வது மிக மிக அவசியம். அனைவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தந்த கலைஞர்களுக்கென்று பிரத்யேகமாய் சில கேள்விகளையும் கேட்டிருக்கலாம். உதாரணமாக, “திருவையாறில் தமிழில் பாடியபின் தண்டபாணி தேசிகர் சந்தித்த சூழல் எப்படி இருந்தது”, என்ற கேள்வி நிச்சயம் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும். “ஒரு காலகட்டத்தில் எம்.எஸ்.அனந்தராமனின் கச்சேரிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திலும், அவர் ஹிந்துஸ்தானி ராகங்களை கலந்து வாசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.”, அந்தக் குற்றச்சாட்டில் எதனால் பிறந்தது, அதனால் அவரது இசை வாழ்வுக்கு பாதகம் ஏற்பட்டதா?, போன்ற கேள்விகள் நிச்சயம் அவரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

வயதானவர்களை நேர்காணல் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. ஒரு வயதுக்கு மேல், கோவையாக விஷயங்களைக் கூறுவதென்பது எல்லோராலும் முடியாது. அதிலும், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே எழுதிவிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி, உண்மை எதுவோ அதை மட்டுமே பதிவு செய்தல் மிகவும் அவசியம். உதாரணமாக, டி.கே.மூர்த்தியின் நேர்காணலில், “மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை”, என்கிறார். ஆனால் இதே புத்தகத்தில் திருச்சி சங்கரன் மற்றும் குருவாயூர் துரை ஆகியோரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே மாமுண்டியா பிள்ளை ஏற்படுத்திய புதுக்கோட்டை வழியில் வாசிப்பவர்கள். இந்தத் தகவலும் அவர்களின் நேர்காணலில் இடம் பெற்றுள்ள நிலையில், சற்றே சீர்தூக்கிப் பார்த்திருந்தால், இது போன்ற தவறான செய்திகள் இடம் பெருவதைக் தவிர்த்திருக்கக் கூடும்.

நேர்காணல்களில் பல இடங்களின் பெயரும், கலைஞர்களின் பெயரும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக, ‘மழவராயநேந்தல்’ என்ற ஊரின் பெயர் ‘மழவராயபுரம்’ என்றும் ‘மழவராய’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. ’நன்றுடையான் பிள்ளையார் கோயில்’ என்ற இருக்க வேண்டிய தொடர் ‘நஞ்சுடையான் பிள்ளையார் கோயில்’ என்று இருக்கிறது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரை, ‘வைத்தியநாதன்’ என்று மட்டும் குறித்தால் (மஹா வைத்தியநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர் போன்ற பல வைத்தியநாதன்கள் இருக்கும் சங்கீத உலகில்), யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் பல குழப்பங்கள் நேரக் கூடும்.

பொதுவாகவே நூலில், இசை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அப்படி இடம் பெற்றிருக்கும் குறிப்புகளிலும் ஏராளமான தவறுகள் காணப்படுகின்றன. டி.கே.மூர்த்தியின் நேர்காணலில் ஓர் இடத்தில், “சில சாஹித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும், சில சாஹித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும்.”, என்று பதிவாகியுள்ளது. தாளத்தில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்ற பகுப்பு கிடையாது. ‘மேல் காலம்’, ‘கீழ் காலம்’, என்று இருக்க வேண்டிய தொடர்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. “கால், அரை, முக்கால் என்று பாட்டுக்கு தனி ஆவர்த்தனம் விட்டால் சாபுதாளம் இடத்திற்கு வாசிக்கத் தெரிய வேண்டும்”, என்பது போன்ற முழுமை பெறாத வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ‘சங்கீர்ண சாபு’ என்ற தாளத்தின் பெயர் ‘சங்கீத சாபு’ என்று பதிவாகியுள்ளது. ‘சேதுலார’ என்ற கிருதி ‘சேதுல்ல’ என்று தவறாகக் குறிக்கப்படுகிறது. இது போன்ற பல பிழைகள் புத்தகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன.

மொத்தத்தில், புத்தகம் ஒரு அரிய தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கலைஞர்களின் தனிப் பட்ட வாழ்க்கையை விட, அவர்களின் சங்கீதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறு வராமலிருக்க வேண்டிய முனைப்பு தொகுப்பாளருக்கு இருந்திருப்பின் இந்தத் தொகுப்பு காலத்தைக் கடந்து நின்றிருக்கும்.

பி.கு: புத்தகத்தில் வந்துள்ள ஒரு அரிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

Read Full Post »