Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Ariyakudi’

ஜி.என்.பி நூற்றாண்டு மலரைத் தொகுத்த சில நாட்களில் இந்தக் கட்டுரை எனக்கு முனைவர் என்.ராமநாதன் மூலமாகக் கிடைத்தது. தக்க சமயத்தில் இதை வெளியிட வேண்டும் என்று நினைத்து – அதன்பின் மறந்தும்விட்டேன். இன்று வெறெதையோ தேடும் போது கையில் அகப்பட்டது. 1987-ல் வெளியான ஷண்முகா இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.

அரியக்குடியை உணர்ந்த ஜி.என்.பி

சங்கீத கலாநிதி கே.வி.நாராயணசாமி

ஜி.என்.பி அவர்களைப் பற்றி நினைக்கும்போது பல விஷயங்கள் ஞாபகம் வருகின்றன: எங்கள் குருநாதர் அரியக்குடி அவர்களிடம் அவர் வைத்திருந்த பக்தியைத்தான் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். எங்கள் குருநாதர் அவர்களின் சங்கீதத்தின் சிறப்பு அம்சங்களைப்பற்றி அதி நுட்பமாக அறிந்து போற்றியவர். ஜி.என்.பி அவர்களுடைய சாரீர வாகு, அவருடைய மதி நுட்பம், கச்சிதமான லய சுத்தம், சங்கீதத்தில் அவருக்கு இருந்து பக்தி இவையெல்லாம் அவருக்கென்று ஒரு தனி வழியை அமைத்துக் கொடுத்திருந்தாலும், அவருடைய இதய பீடத்தில் எங்கள் குருநாதர்தான் வீற்றிருந்தார் என்றால் அது கொஞ்சம் கூட மிகையாகாது. அவ்வளவு நுட்பமாக எங்கள் குருவின் சங்கீதத்தை உணர்ந்தவர்.

எங்கள் குருநாதர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்களுடைய 74வது பிறந்த தின விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரில், அவர்களைப் பற்றி ஒரு கட்டுரைஎழுதித் தரவேணுமென்று கேட்டுக் கொண்டோம். ’The hero as a Musician’ என்ர மிக அற்புதமான கட்டுரையை எழுதித் தந்தார். நாக்கள் அதை 1984-ல் எங்கள் குருநாதரின் 95-வது பிறந்த தின விழாவையொட்டி வெளியிட்ட மலரில் மறுமுறையும் பிரசுரித்திருக்கிறோம்.

ஜி.என்.பி அவர்களின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அந்தக் காலத்தில் பல வித்வான்களிடம் குருகுலவாசம் செய்யும் சிஷ்யர்களைக் கூர்ந்து கவனிப்பார். முன்னுக்குவரக் கூடியவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவார், பக்கவாத்தியக்காரர்களையும் இப்படியே உற்சாகப்படுத்துவார்.

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. செங்கோட்டை சமீபம் ஆய்க்குடி என்ற கிராமத்தில் வசித்து வந்த ஸ்வாமிஜி கிருஷ்ணா என்பவர் கேரளாவில் அச்சன்கோவில் என்ற ஊரில் உள்ள ஐயப்பன்ஸாமி கோவிலில் என்னை வந்துபாடி கைங்கர்யம் செய்யவேண்டும் என்றார். அப்போது பாலக்காடு மணி அய்யர் அவர்களையும் ஸ்வாமிஜி அழைத்திருந்தார். எனக்கு ‘ஹைஹரபுத்ரம்’ மட்டும்தான் பாடம். சாஸ்தா பெயரில் ஜி.என்.பி அவர்கள் ஒரு கீர்த்தனை இயற்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். உடனே அவரிடம் போய் விஷயத்தைச் சொல்லி, அந்த கீர்த்தனையை எனக்கு கற்பிக்க வேணும் என்று கேட்டுக் கொண்டேன். அவர் மகிழ்ச்சியுடன் இசைந்து, ‘நீ பாடினால் நன்றாக இருக்கும்’, என்றார். தோடி ராகத்டில் ‘மமகுலேஸ்வரம்’ என்ற திஸ்ர ஏக தாளத்தில் இரண்டு களையில் உள்ள கீர்த்தனம் அது. ரொம்ப அழகான கீர்த்தனை. அவர் எப்படி எங்கள் குருநாதரையும் எங்கள் குருவின் குருவாகிய பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கலையும் மனதில் எந்த உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்பதை அந்தக் கீர்த்தனை உணர்த்தியது. அவர் பிறந்த ஊராகிய தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த குத்தாலம் சமீபம் கூடலூர் சாஸ்தாவை பற்றியது. அதைப் பாடம் செய்து அச்சன்கோவிலில் பாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது மறக்க முடியாத நிகழ்ச்சி.

சங்கீதத்தைப் பற்றி மிகவும் உறுதியான சிறப்பு அம்சங்களை தனது ஆணித்தரமான அபிப்பியாயங்களாகக் கொண்டவர். மிக அவையடக்கம் உள்ளவரும், தான் பாடுவதைப் பற்றி பிரமாதமாக நினைத்துக் கொள்ளாதவரும், அதே சமயத்தில் ரசிகர்கள் அவர் இசையில் மயங்கி அளவு கடந்த ஆனந்தத்தை அடைண்டிருந்தாலும், அதைப் பற்றி நினைக்காதவருமாவார். அவர் சொல்வார், “இசைக் கலைஞனுக்கு இசையின் பரிபூர்ண லக்ஷியத்தை அடையமுடியாது. லக்ஷியத்தை நெருங்கும்போது, அது இனும் தூரத்தில் இருக்கிரது என்பதைப் புலப்படுத்திவிடும். ஆகவே artist திருப்தி அடைய நியாயமே இல்லை. அடையவும் கூடாது. அடைந்தால் அதோடு சரி. மேலும் விருத்தி அடையாது”.

கச்சேரியில் என் குருநாதர் கையாண்ட பலமுறைகளை ஜி.என்.பி அவர்கள் பின்பற்றியவர். கச்சேரி மேடையை ஒரு புனித இடமாகக் கருதியது. ஆவலுடன் கேட்க வந்திருக்கும் ரசிகர் பெருமக்களுக்கு அவர்கள் நோக்கமறிந்து நிகழ்ச்சியை அமைத்துக்கொண்டது. கச்சேரியில் எந்தப் பொருத்தமான கட்டத்தில் மிருதங்கத்திற்கு தனி ஆவர்த்தனம் வாசிக்க வைப்பது, லயத்தின் நுட்பத்தை அறிந்து தாளத்தைப் புரியும்படியாகப் போடுவது, அழகான, நெரடலான லய நுட்பங்களைப் புரிந்து உற்சாகப்படுத்துவது, அளவுடன் பாடுவது – இவையெல்லாம் எங்கள் குருநாதரிடமிருந்து எடுத்துக் கொண்ட நிறப்பான அம்சங்கள். பாலக்காடு மணி ஐயர் தனக்கு மிருதங்கம் வாசித்ததை தன் பாக்யமாகக் கருதியவர். மிக மிக அழகான ஸ்வரப் பொருத்தங்களுடன் அவர் ஸ்வர பாடும் அழகு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. காரனமில்லாமல் ஸ்வரம் பாடமாட்டார்; பிரதான பல சிஷ்யர்களை உருவாக்கியவர். சிஷ்யராக இர்ந்த டி.ஆர்.பாலுவின் மரணம் அவரை ரொம்பவும் வாட்டியிருக்கிறது.

ஜி.என்.பி அவர்கள் மறைய வேண்டிய வயத்ற் அல்ல. இசை உலகின் துரதிர்ஷ்டம் அவர் நம்மை விட்டுப் பிரிந்தது. அவருடைய நினைவுக்கு எனது அஞ்சலியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

Read Full Post »

அரியக்குடி

இந்தக் கட்டுரையை எழுதி பதினைந்து ஆண்டுகள் இருக்கும். சில நாட்களுக்கு முன் கண்ணில்பட்டது. இன்று அரியக்குடியின் நினைவு தினமென்பதால் இங்கு இட்டுக் கொள்கிறேன்.
“பரம் பொருளை அடைய இராம பக்தி என்ற இராஜமார்க்கம் இருக்கையில், ஏன் வேறு சந்துகளில் சென்று உழல வேண்டும்?” என்றார் தியாகராஜர். “ஒரு கச்சேரி வெற்றியடைய, அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அமைத்துக் கொடுத்த ‘பத்ததி’ எனும் ராஜமார்க்கம் இருக்கையில், ஏன் வேறு சந்துகளில் சென்று உழல வேண்டும்?” என்பது இன்றைய கர்நாடகயிசை உலகில் கோலோச்சும் வித்வான்களின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.

Ariyakudi5-2

காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் இடையில் உள்ள ஒரு குக்கிராமமான அரியக்குடியில் 1890-ஆம் வருடம் மே மாதம் 19-ஆம் நாள், திருவேங்கடத்தையங்கார் – செல்லம்மாள் தம்பதியின் மூன்றாவது மகனாய் பிறந்தார் இராமானுஜ ஐயங்கார். பிரபல ஜோசியராக விளங்கிய திருவேங்கடத்தையங்காரின் புகழ் தேவகோட்டை எங்கும் பரவியிருந்ததால், இராமனுஜம் கவலையற்ற சுழலில் குறையின்றி வளர்ந்து வந்தார். தன் வயதை ஒத்த சிறுவர்களெல்லாம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கையில், இராமானுஜத்தின் மனம் பஜனையில் கலந்து கொள்வதையே அதிகம் விரும்பியது. இதன் விளைவாக, சதாசர்வ காலமும் எதாவது இசைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் இராமானுஜத்திடம் ஏற்பட்டது. தனது மகனின் இசையார்வத்தைக் கண்ட திருவேங்கடத்தையங்காருக்கு அவரது மகனின் வாழ்க்கை இசையால் இசைவுரும் என்று தோன்றியது. அவரது ஊகத்துக்கு உரம் சேர்க்கும் வண்ணம் இராமனுஜத்தின் ஜாதகமும் அமைந்திருந்தது.

1901-ஆம் ஆண்டு வடபத்ரசாயியை தரிசனம் செய்ய, திருவேங்கடத்தையங்கார் இராமானுஜத்தை அழைத்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.  ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லும் பொழுதெல்லாம் தனது நண்பரான ‘மடவளாகம் முத்தையா பாகவதரைக்’ காண்பது திருவேங்கடத்தைய்ங்காரின் வழக்கம். சுவாமி தரிசனத்துக்குப் பின் சேத்தூர் ஜமீன் மாளிகையில் தங்கியிருந்த முத்தையா பாகவதரைச் சந்திக்க இராமானுஜத்தை அழைத்துச் சென்றார். இராமனுஜத்தைப் பற்றி முத்தையா பாகவதர் விசாரிக்க, ‘இவனுக்கு பாட்டில் அதி ஆர்வம். ஒரு விநாடி கூட வாய் ஓய்ந்திருப்பதில்லை; இசைத் துறையிலேயே இவனை ஈடுபடுத்தி விடலாமா என்று எண்ணி இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். உடனே பாகவதர் இராமனுஜத்தை, ” ஏதாவது பாடப்பா”, என்றார். இராமனுஜமும் தயக்கமின்றி ஒரு பாடல் பாட, பாகவதருக்கு விளையும் பயிரின் உன்னத தரம் முளையிலேயே விளங்கியது. சிறுவன் இராமனுஜத்தை வாழ்த்தியதோடன்றி சேத்தூர் ஜமீந்தாரிடம் அழைத்துச் சென்று, இராமானுஜத்தின் திறைமையைப் பற்றி பிரஸ்தாபித்தார். கலையார்வம் மிக்க ஜமீந்தார், முத்தையா பாகவதரின் கூற்றைக் கேட்டு, இராமனுஜத்தின் பாட்டைக் கேட்க ஆர்வமடைந்தார். 11 வயதே நிரம்பிய இளம் இராமனுஜனும், ஜமீந்தாரின் விருப்பத்திற்கு இணங்க, ஒன்றின் பின் ஒன்றாய் பல பாடல்கள் பாடினான். பாடலில் மகிழ்ந்த ஜமீந்தார், நூறு ரூபாயை எடுத்து, “மிட்டாய் வாங்கிச் சாப்பிடு” என்றார். இப்பரிசே, பின்னாளில் அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் பல பரிசுகளுள் பட்டங்களும் வாங்கக் கட்டியம் கூறும் வகையில் அமைந்தது எனக் கொள்ளலாம்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் திருவேங்கடத்தையங்காருக்கு அவரது மகனை சங்கீதத் துறையில் ஆழ்த்துவதைப் பற்றி இருந்த தயக்கங்கள் அனைத்தும் அறவே நீங்கியது. இந்நிலையில், மிளகனூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள் என்பவரிடம் ரகுவம்சம், குமார சம்பவம் போன்ற காவியப் பயிற்சியும், வேத அப்பியாசமும் இராமனுஜம் பயின்று வந்தார். மகனின் சாஸ்திரப் பயிற்சியைக் கண்டு மகிழ்ந்தாலும், திருவேங்கடத்தையங்காரின் மனதில் மகனின் ஜாதக அமைப்புப் படி, அவனை எப்படி சங்கீதத் துறையில் சிறக்க வைப்பது என்ற எண்ணமே நிறைந்திருந்தது. தனது மகனின் இசைப் பயணத்தை தொடங்கி வைக்க தக்கதொரு குருவைத் தேடி ஆராயலானார்.

அக்காலத்தில், சிறந்த வித்வானாய் விளங்கிய புதுக்கோட்டை மலையப்பய்யர் என்பவரிடம் திருவேங்கடத்தையங்கார் தனது மகனுக்கு இசைப் பயிற்சி அளிக்குமாறு வேண்டினார். தனது வாசஸ்தலமான தேவகோட்டக்கே வந்து விட்டால், பேரன்பர்களின் ஆதரவுடன் தடையின்றி நாதோபானை செய்யலாம் என்றும் ஒழிந்த நேரத்தில் தன் மகனுக்கு போதனை செய்யலாம் என்றும் கூறினார். கர்நாடக சங்கீதத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கப் போகும் மகாவித்வானுக்கு சங்கீத அரிச்சுவடிகளை போதிக்கப் போகிறோம் என்பதை அவர் உணர்ந்தாரோ என்னமோ, திருவேங்கடத்தையங்காரின் வேண்டுகோளுக்கு ஒரு வார்த்தை கூட மறுத்தலிக்காமல் தேவகோட்டைக்கு வந்து இராமனுஜனுக்கு இசை பயில்வித்தார். சுமார் மூன்று வருட கால குருகுலவாசத்தின் விளைவால், செம்மையான சங்கீத அஸ்திவாரத்துடன் விளங்கிய இராமனுஜத்தைக் கண்ட திருவேங்கடத்தையங்கார், ஒரு பிரபல சங்கீத வித்வானிடம் மேற்பயிற்சிக்கு ஆனுப்ப எண்ணினார்.  அவ்வாறே, 1906-ஆம் வருடம், ‘பல்லவி நரசிம்ம ஐயங்கார்’ என்று புகழ் பெற்று விளங்கிய நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் பயில இராமனுஜத்தை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.

சங்கீத வித்வானாய் பரிமளிகக் ஒருவனுக்கு, நல்ல சங்கீத அஸ்திவாரமும், சாரீர சம்பத்தும், தேக பலமும், கற்பனா சக்தியும் மிக மிக அவசியம். இவையெல்லாம் இராமனுஜத்திடம் நிரம்பியிருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த நரசிம்ம ஐயங்கார், திருப்தியுற்ற பின்னே இராமானுஜத்தை சீடனாகச் சேர்த்துக் கொண்டார். பாடசாலை போல எப்பொழுதும் மாணக்கரின் நடமாட்டம் நிரம்பியிருந்த வீட்டில், நாமக்கல் சேஷ ஐயங்கார், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், உமையாள்புரம் கல்யாணராமைய்யர் போன்றவர்களுடன் பாடம் கேட்கும் பேறு இராமானுஜனுக்குக் கிடைத்தது.

சங்கீதம் கற்க நல்ல குரு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா? என்னதான் பௌலர் ஃபுல் டாஸ் பால் போட்டாலும், அதை பவுண்டரிக்கு அனுப்பினால்தானே ஸ்கோர் ஏறும்? என்னதான் குரு பாடி காண்பித்தாலும்,  ஸ்ருதி சுத்தமாய், கமக சுத்தமாய், லய சுத்தயாய் சாரீரத்தில் கொண்டு வருவதற்கு எத்தனை அப்யாசம் செய்ய வேண்டும்? எத்தனையோ பேர் புழங்கிப் பாடம் பயின்று வரும் இடத்தில், நேற்று வந்தவன் சாதகம் செய்ய முடியுமா? மனம் செய்யும் கற்பனைகளையெலலாம் குரலில் கொண்டு வர சாதகமே ஒரே வழி என்பதை தெளிவாக உணர்ந்தான் இராமானுஜம். சாதகம் செய்ய மனம் படைத்தவருக்கு மார்க்கமா இல்லாமல் போய் விடும்? தனது சாதக பலத்தை விருத்தி செய்து கொள்ள, விடிவதற்கு முன்பே எழுந்து, ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு இராமனுஜம் போய் விடுவார். ‘பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார்’, என்ற ஆன்றோர் சொல்லுக்கேற்ப, ஆயிரம் தூண்களுக்கு இசையமுது படைத்தவாறு அரியக்குடி சாதகம் செய்து கழித்த கணங்கள்தான் அவர் பிற்காலத்தில், ஆயிரம் ஆயிரம் ரசிகர்களை தன் இசையில் சொக்க வைக்க உதவியது.

நரசிம்ம ஐயங்காரின் கீழ் சுமார் இரண்டு வருட காலம் கழித்த இராமனுஜத்தின் ஆற்றல், விரிவாக ராகம் பாடுவதிலும் கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பெரிய விருத்தியை அடைந்தது. 16 வயது சிறுவனாய் சேர்ந்த இராமனுஜத்தின் குரல், பலருக்கு நிகழ்வது போல உடைந்து கெட்டுவிடுமோ என்ற நரசிம்ம ஐயங்காரின் அச்சத்திற்கு மாறாக, நாளுக்கு நாள் வளம் பெற்று நல்ல பக்குவத்தையடைந்தது. அச்சமையத்தில், தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் வந்த ‘மகா வித்வான் பட்டணம் சுப்ரமண்ய ஐயரிடம்’ சிட்சை பெற்று, இராமநாதபுரத்தின் ஆஸ்தான வித்வானாக விளங்கி, சங்கீத உலகில் கோலோச்சி வந்த பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்காரின் கச்சேரியைக் கேட்ட இராமனுஜத்தின் மனதில் அவரிடம் சங்கீதம் கற்க வேண்டும் என்ற ஆசை கிளை விட்டு, நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் இருந்தது.

பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்காரைப் பற்றி Prof. சாம்பமூர்த்தி ‘Great musicians’ என்ற புத்தகத்தில், ‘பூச்சி ஐயங்காரின் கச்சேரிகள் விவகாரத்துடனும், அதே சமயத்தில், விறுவிறுப்பாகவும் இருக்கும். கச்சேரியைக் களை கட்ட வைக்க மத்யம காலக் கிருதிகளே சிறந்தது என்று அவர் உறுதியாக நம்பினார். அவர் பாடுகையில் சிரமமின்று, சங்கதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் பிரவாகமாய் பொழிந்த வண்ணம் இருக்கும். கஷ்டமான சங்கதிகள் பாடும் பொழுது கூட, முகத்தில் சிறிதளவும் சிரமம் தெரியாமல் பாடுவார். சங்கீதத்திற்கு  ‘ஸ்ருதி மாதா, லயம் பிதா’. பல சமயங்களில்  லயத்திற்கு அதிக முக்கியத்துவமளிக்கும் பொழுது, அது ராக பாவத்தைக் கெடுத்து, ஏதோ தலைசுற்றும் கணக்கின் விடையை ஒப்புவிப்பது போல ஆகிவிடும். ஸ்ரீநிவாச ஐயங்காரின் கச்சேரி ராக பாவத்தை முன்னிருத்தி, விவகாரமான லய கணக்குகளில் எல்லாம் ஈடுபடா வண்ணம் இருக்கும். வர்ணங்கள், கீர்த்தங்கள், பதங்கள், ஜாவளிகள் என்று அவரது பாடாந்திரம் பரந்து விரிந்து இருந்தது’ என்கிறார்.

1908-ஆம் வருடம்,  நல்ல நாளாய்ப் பார்த்து, பூச்சி ஐயங்காரிடம் சென்று, தனக்கு அவரிடம் கற்கும் ஆவலைக் கூறினார் இராமனுஜ ஐயங்கார். நல்ல ஞானமும், குரல் வளமும் கொண்ட சீடனை வேண்டாம் என்று எந்த குரு சொல்வார்? அன்று பூச்சி ஐயங்காருக்கும் இராமானுஜ ஐயங்காருக்கும் தொடங்கிய குரு-சிஷ்ய பாவம் 10 ஆண்டுகள் தொடர்ந்தது. 1909-ஆம் வருடம் இராமனுஜ ஐயங்கார் பொன்னம்மாள் என்ற தூரத்து உறவுக்காரப் பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கரம்பிடித்தார். பொன்னம்மாள் பூச்சி ஐயங்காருக்கும் உறவாகிப் போனதால், இராமனுஜத்திற்கும் பூச்சி ஐயங்காருக்கும் இருந்த பந்தம் இன்னும் இறுகியது.

பூச்சி ஐயங்காரின் சங்கீத சிட்சை சற்றே வித்தியாசமானது. அரியக்குடியைப் போன்ற முதிர்ந்த சிஷ்யருக்கு பாடம் நடத்தும் பொழுது, சிஷ்யரை பாடச் சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பார். ஆங்காங்கே திருத்தங்கள் மாத்திரம் செய்வார். இது நடப்பது கூட எப்பொழுதாவதுதான். சிஷ்யனுக்கு உண்மையான பாடம் என்பது கச்சேரிகளில்தான் நிகழும். இடைவிடாது பல கச்சேரிகள் செய்து வந்த பூச்சி ஐயங்காருக்குப் பின் அமர்ந்து, தம்புராவை மீட்டியபடி உடன் பாடும் பொழுது கிடைக்கும் அனுபவமும் ஞானமும், எத்தனை காலம் சாதகம் செய்தாலும் கிடைக்காதவை. கடினமான காட்டுப் பாதையில், பலமுறை சென்று வந்த குரு முன் செல்ல பின்னால் செல்வதென்பது அத்தனை கஷ்டமில்லைதானே? பலமுறை அந்த பாதையில் குருவுடன் பயணம் செய்பவர், காலப்போக்கில் தன்னிச்சையாய் செல்லக் கூடியவராக மாறுவதும் இயற்கைதானே? நல்ல கிரஹிப்புத் தன்மை கொண்ட இராமானுஜ ஐயங்காரின் ஆற்றல், குருவுடன் பல கச்சேரிகளில் பாடிப் பெற்ற அனுபவத்தால் தனித்து கச்சேரி செய்யக்கூடிய அளவிற்கு வளர்ந்தது.

1912-ஆம் வருடம், சோமசுந்தரம் செட்டியார் என்ற செல்வந்தரின் வீட்டுக் கல்யாணம் கண்டனூரில் நடை பெற்றது. கல்யாணத்தின் முதல் நாள், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் கச்சேரி.  திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர், கும்பகோணம் அழகநம்பி பிள்ளை, புதுகோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் சுந்தரமய்யர் போன்ற ஜாம்பவான்களின் பக்கவாதியத்துடன் கச்சேரி இனிதே நடந்தேறியது. அடுத்த நாள், அதே பக்கவாத்யக்காரர்களுடன் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரி. கச்சேரியின் பொழுது, திருவேங்கடத்தையங்காரின் நண்பரான சோமசுந்தர செட்டியாருக்கு, நேற்று குருவுடன் தம்புரா மீட்டியபடி இசைத்த தம் நண்பரின் மகனை இந்த மேடையின் கச்சேரி செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சோமசுந்ந்தம் செட்டியாரின் இந்த விண்ணப்பத்திற்கு பூச்சி ஐயங்கார் உற்சாகமாக சம்மதித்தாலும், கச்சேரி நிகழ்வதில் ஒரு சிக்கல் இருந்தது. 22 வயதே ஆன இராமனுஜத்திற்கு வாசிக்க பக்கவாத்யங்களுக்கு எங்கே போவது. கோனேரிராஜபுரம் வைத்தாவுக்கு 4 மணி நேரம் வாசித்து களைத்து போயிருக்கும் ஜாம்பவான்களை இராமனுஜத்திற்கு எப்படி வாசிக்கச் சொல்ல முடியும்?

ஒருவருக்கு எழுந்த ஆசை, கொஞ்சம் கொஞ்சமாய்ப் எப்படியோ மேடை வரை பரவிவிட்டது. கோனேரிராஜபுரம் வைத்தியநாதரின் கச்சேரி முடிந்ததும், மேடையிலிருந்த பக்கவாத்யக்காரர்கள் இராமனுஜத்தைப் பார்த்து வா என்று அழைத்தனர். கூட்ட்த்தில் இருந்த மற்ற வித்வான்களும் பல உற்சாகமான சொற்கள் உதிர்த்தனர். பூச்சி ஐயங்காரும் உற்சாகப் படுத்தி இராமானுஜத்தைப் பாடச் சொல்ல, எத்தனையோ முறை ‘follow’ செய்து ஏறிய மேடைக்கு, முதல் முறையாய் ‘solo’ செய்ய இராமானுஜம் ஆயத்தமானார். மேடையின் நடுவே இருப்பினும், சற்றே உள்ளடங்கியபடி உட்கார்ந்திருந்த இராமானுஜத்தைப் பார்த்து திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர், ‘முன்னுக்கு வா’, என்று இரட்டை அர்த்தம் தொனிக்குமாறு கூறியதைக் கேட்டு சபையில் ஆரவாரம் எழுந்தது. அனைவரும் கொடுத்த உற்சாகத்தில், ‘வெடலநு கோதண்டபாணி’ என்ற தோடி ராகக் கிருதியில் தொடங்கி கச்சேரியை சிறப்பாகச் செய்து முடித்தார். சோமசுந்தரம் செட்டியார் மட்டற்ற மகிழ்ச்சியுற்றார். புத்தாடை, தாம்புலம், பழம், ஐந்து தங்க சவரன்கள் எல்லாம் கொடுத்து மரியாதை செய்தார்.

அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் தன் முதல் கச்சேரியைத் தொடர்ந்து பல கச்சேரிகள் கொடுத்த பொழுதிலும், தனது குருகுலவாசத்தை விடாமல் இருந்தார். குருவின் சங்கீதத்தைக் கேட்டதோடன்றி, மற்ற வித்வான்களின் கச்சேரிகளையும் கேட்டு, அவற்றில் உள்ள நல்ல விஷயங்களையெலலம் கிரஹித்து தன் கச்சேரிகளில் அவற்றை உபயோகப் படுத்திக் கொண்டார். பூச்சி ஐயங்காரிடம் சுமார் 10 வருடங்கள் குருகுலவாசம் செய்ததன் பலனாய், பல தியாகராஜ கீர்த்தனங்கள், பட்டணம் சுப்ரமண்ய ஐயர் கீர்த்தனங்கள் மற்றும் பூச்சி ஐயங்காரின் கீர்த்தனங்கள் என்று தன் இசை வளத்தைப் பெருக்கிக் கொண்டார். இதைத்

தவிர, வீணை தனம்மாளிடம் பல பதங்கள் மற்றும் ஜாவளிகளைக் கற்றுக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால், தன் வாழ்வின் கடைசி காலம் வரை தன்னை ஒரு மாணாக்கனாகவே கருதி, பல புதிய கீர்த்தனைக்களைக் கற்றோ அல்லது மேட்டமைத்தோ பாடி வந்தார்.

நாளடைவில் பல கச்சேரிகள் செய்யும் வாய்ப்பு அமையும் போது, தன் கச்சேரியை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட ஆரம்பித்தார். அரியக்குடி கச்சேரி செய்ய வந்த காலத்துக்கு முன் கோயில் விழாக்களிலும் அரசவைகளில் மட்டுமே கச்சேரிகள் நிகழ்ந்தன. சமஸ்தானங்கள், ஜமீன்கள், செல்வந்தர்கள் ஆதரவிலேயே சங்கீதம் திளைத்தது. அதன் பின், அரசவையில் இருந்து படிப் படியாய் மக்களவைக்குப் பிரவேசம் செய்ய ஆரம்பித்தது. பண்டிதர்கள் நிறைந்திருக்கும் அரசவையில் கச்சேரிகள் செய்த போது, கேட்போரை மகிழ்விப்பதை விட, தன் இசையாற்றலை பறை சாற்றவே பாடகர்கள் எத்தனித்தனர். இந்

நிலை மாறி, சபைகள் மூலம் மக்களை அடைந்த போது, அழகுணர்சசி, விறுவிறுப்பு, பாவங்கள் (bhavam), வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் ஆகியவையும் ஒரு சங்கீதக் கச்சேரியில் எதிபார்க்கப்பட்டன.

இதனால் பண்டிதர்க்கு மட்டுமென்று இருந்த இசை ஜன ரஞ்சகமாக மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தத் தேவையை உணர்ந்து, அத் தேவைக்கு ஏற்ப ஓற் அற்புத பாணியை மரியக்குடி உருவாக்கினார். இசையைத் தமிழுக்கு ஒப்பிட்டோமெலில், பல கலைஞர்களை காப்பியங்களுக்கு ஒப்பிடலாம். அப்படிப்பட்ட காப்பியங்களெல்லாம் அமைவதற்கு வேண்டிய இலக்கணத்தை அரியக்குடிக்கு ஒப்பிடலாம்.இசைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட மத்யம காலமும், மத்ய ஸ்தாயியுமே ஆதாரமாக அமைவன. ஒரு காரியத்தை செய்யும் போது அவசரமும் கூடாது, அதீத நிதானமும் கூடாது. மத்யம காலப்ரமாணத்தில் செய்தாலே அது செம்மையாக நடக்கும். அதே போல, பேசும் போது உரக்கப் பேசினால் அது ஓலமாகிவிடும். ரொம்ப மெதுவாகப் பேசினால் ரகசியமாகிவிடும். மத்யம ஸ்தாயியில் பேசும் போது எல்லோரையும் தக்க முறையில் சென்றடையும். பொதுவாக இதைக் கூறினாலும், கால்த்துக்கு ஏற்ப துரிதமும், நிதானமும் உபயோகப்படும். இதைத்தான் தன் கச்சேரிகளுக்கு ஆதாரமாகக் கொண்டார் அரியக்குடி. அவர் கச்சேரிகள் விறுவிறுப்பான மத்யம கால கிருதிகள் நிறைந்தனவாக இருக்கும்.  அவர் கச்சேரிகள் பெரும்பாலும் வர்ணத்திலேயே தொடங்கும். அதன் பின், பஞ்சரத்ன கீர்த்தனை ஒன்றைப் பாடுவார். அதற்குள் அவர் குரல் நன்கு பதப்பட்டு விடும். அதன் பின், பந்துவராளி, பூர்விகல்யாணி போன்ற ராகங்களுள் ஒன்றைத் தேர்ந்துடுத்து விஸ்தரிப்பார். அடுத்து உப பிரதான ராகமாய் ஒரு ராகத்தில் ஆலாபனை, நிரவல், கல்பனை ஸ்வரம் எல்லாம் பாடுவார். அடுத்து, துரித கதியில் ஒரு பாடல் பாடிய பின், கச்சேரியின் பிரதான ராகத்தை பாடுவார். அவர் சிறப்பு என்னவெனில், ஐந்து நிமிஷம் பாடினாலும், அரை நிமிடம் பாடினாலும். அரை மணி பாடினாலும் கேட்பவர் மனதில் ராகம் பூரணாமாய் சென்றடைந்து, இன்னும் பாடியிருக்கலாமே என்று தோன்றாத படி அமைந்திருக்கும். பிரதான ராகத்துக்குப் பின், தனி ஆவர்த்தனம் நடக்கும். இன்றைய கச்சேரிகளில் கடைசியில் போனால் போவதென்று தனி ஆவர்த்தனம் விடும் போது, மக்கள் பாடகரைக் கேட்ட திருப்தியில், உடன் வாசிப்போரை சட்டை செய்யாமல் அரங்கை நீக்குகின்றனர். அரியக்குடியின் கச்சேரி முறையை பின் பற்றி வெற்றி பெரும் இக்கால கலைஞர்கள், அவர் கச்சேரி நேரத்தின் மையத்தில் தனி ஆவர்த்தனம் விட்டு ரசிகர்களை கேட்க வைத்த உத்தியையும் கையாண்டால், சங்கீத உலகம் பெரும் பயனையடையும். உடன் வாசிப்போரும் சோர்ந்து போகாமல் இருப்பர். தனி ஆவர்த்தனத்துக்குப் பின், கச்சேரி நேரத்தைப் பொறுத்து ராகம் தானம் பல்லவி பாடுவார். அதன் பின், விருத்தங்கள், கனம் அதிகமில்லாப் பாடல்கள், திருப்பாவை போன்றவற்றை பாடிய பின், தில்லானாவுடன் நிறைவு செய்வார்.

அரியக்குடி அறிந்திருந்த கிருதிகள் கணக்கிலடங்கா. அவர் கச்சேரிகளில் பல வாக்யேயக்காரர்களின் கீர்த்தனைகளும், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அமைந்த பாடல்களும் நிறைந்திருக்கும். ஒரே ராகத்தையோ, ஒரே பாடலையோ நிறைய நேரம் பாடாமல், பல ராகங்களையும் பல கிருதிகளையும் பாடும்போது, கச்சேரிக்கு வந்த அனைவருமே அவர்தம் ரசனைக்கேற்ற ஏதோ ஒன்றினைக் கேட்குமாறு அமைந்துவிடும். கச்சேரியன்று அவர் குரலின் பதம், கச்சேரி நடக்கும் இடம், ரசிகர்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் துல்லியமாய் இடை போட்டு சமயோசிதமாய்ப் பாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான் என்று அவரைக் கேட்ட அனைவருமே கூறுகின்றனர். தமிழைச் சங்கம் அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் பாட வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்தவர் அரியக்குடி. அருணாசல கவியின் இராம நாடக கீர்த்தனைகள், ஆண்டாளின் திருப்பாவை, பல பாபநாசம் சிவன் பாடல்கள் என்று எத்தனையோ தமிழ்ப்பாடல்களை வெறும் துக்கடாவாக மட்டும் பாடாமல், அதற்கு உரிய அந்தஸ்தைக் கொடுத்துப் பாடிய முன்னோடி என்பதை பலர் மறந்தாலும், அதுதான் உண்மை. அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழக்ஙப்பட்ட போது, பாடல் வரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அவர் உரை அமைந்தது. கர்நாடக இசைப் பாடகர்கள் வேற்று மொழிப் பாடல்கள் பாடும் போது அவற்றின் அர்த்தத்தை உணர்ந்து பாட, அந்தந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்கிறது அவர் உரை.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் சங்கீத உலகின் அரசராய் விளங்கியவர் அரியக்குடி. அரியக்குடி-சௌடையா-வேணு நாயக்கர், அரியக்குடி-பாப்பா வெங்கடராமையா-மணி ஐயர், அரியக்குடி-டி.என்.கிருஷ்ணன் -மணி ஐயர் போன்ற கூட்டணிகள் புகழின் உச்சங்களைத் தொட்டன. ‘சங்கீத ரத்னாகரா’, ‘சங்கீத கலாநிதி’, ‘இசைப் பேரறிஞர்’, ‘சங்கீத் நாடக் அகாடமி’ போன்ற விருதுகள் அவரை அலங்கரித்ததன் மூலம் பெருமையடைந்தன. அரியக்குடி அற்புதமான கலைஞராக விளங்கியதோடன்றி நல்ல குருவாகவும் விளங்கினார். அவரது சிஷ்ய பரம்பரை கே.வி.நாராயணசாமி, பி.ராஜம் ஐயர் போன்ற ‘சங்கீத கலாநிதி’-கள் கொண்டதாய் அமைந்து அவர் பாணியை என்றென்றும் நிலைக்கச் செய்தது.

1890-ல் தொடங்கிய சங்கீத சகாப்தமான அரியக்குடி, 1967-ல் மறைந்தாலும், இன்றளவும் கூட தொடரும் சகாப்தமாகவே விளங்குகிறார். அவரின் கச்சேரி முறையும், அவரது சிஷ்ய பரம்பரையும், அவர் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்களும் அவர் புகழை என்றென்றும் நிலைக்கச் செய்யும்.

 

 

Read Full Post »

இந்தக் கட்டுரைக்குத் துணையாக இருந்தவற்றைக் கட்டுரையின் முடிவில் பட்டியலிட்டுள்ளேன். இவை தவிர, தேடினாலும் கிடைக்காத இணைய ஆர்க்கைவ்களுக்குள்ளும் சில கட்டுரைகளோ, நான் உபயோகித்துள்ள கட்டுரைகளின் மொழி பெயர்ப்புகளோ பதுங்கி இருக்கலாம். அவற்றுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயிலில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வருடா வருடம் நடக்கும் நிகழ்வுக்கு முதன் முறையாய் சென்றிருந்தேன். மிருதங்கமும், கஞ்சிராவும் மாற்றி மாற்றி ஒலித்து சூழலை நாதமயமாக்கிக் கொண்டிருந்தன. மனமெல்லாம் சில வருட காலமாய் அவரைப் பற்றி திரட்டிய தகவல்கள் அலைமோதிக் கொண்டிருந்தன.

தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை மண்டபமும், முருகனும் 

தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயில் முக மண்டபமும், முருகனும்

கோயிலுக்கு வெளியில் இருந்து “ஆஹா! ஆஹா! என்ன அழகு! என்ன ருசி!” என்றொரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. இசையை இவ்வளவு ரசிப்பவர் வெளியே நிற்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன். நேரம் ஆக ஆக, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் மனதை நெருட ஆரம்பித்தது. கோயிலில் பூஜை முடிந்து தீபாராதனை ஆன பின்னும் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. பொறுக்க முடியாமல் வெளியில் சென்ற போது, ஆங்கொரு பெரியவர் புதர்களிடையே அமர்ந்திருந்தார்.

வயது தொண்ணூறுக்கு மேல் இருக்கும். தலை சீரான கதியில் ஆடிக் கொண்டிருந்தது. கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. விரல்கள் தன்னிச்சையாய் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. சமாதி கோயிலுள் ஒலித்த தாளத்துக்கும் பெரியவரின் தாளத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஏனோதானோவென்றும் அவர் தாளம் போடவில்லை. அந்த விரல்கள் சீரான காலப்ரமாணத்தில் ஒரே தாளத்தை தெளிவாகப் போட்டன.

மெதுவாக அவரருகில் சென்று நின்று கொண்டேன். என்னை நிமிர்ந்து பார்த்தவர், “உங்களுக்கும் கேட்குதா?”, என்றார்.

எனக்கு அவர் குரலைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.

“தம்பி! என்னடா இவன் பைத்தியக்காரன்னுதானே பார்க்குறீங்க?”

எதுவும் சொல்ல என் நா எழவில்லை.

என் மனதில் ஓடியவற்றை தெளிவாய்ப் படித்தவர் போல, “எல்லாரும் கோயிலுக்குள்ள இருக்கும் போது இவன் மட்டும் புதர்ல உட்கார்ந்திருக்கானேன்னு நினைக்கறீங்க.”, என்றார்.

ஆச்சர்யத்தில் என் முகம் மாறியதைப் பார்த்து புன்னகைத்தவாறு, “இந்த இடம் இன்னிக்குத்தான் தம்பி புதராயிருக்கு. இங்கதான் எங்க ஐயா கட்டின கோயில் இருந்தது. சிற்ப வேலைபாடோட கருங்கல் மண்டபமும், ஸ்ரீ விமானமுமா, எவ்வளவு கம்பீரமா இருந்த கோயில் தெரியுமா? பக்கத்து கொட்டகையில தண்டபாணிய தரிசனம் பண்ணி இருப்பீங்களே? அவரு இந்தக் கோயில்லதான் இருந்தாரு. நான் இங்க வந்தாலே தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பு காதுல தானா வந்து விழும்.”

dandapani-temple-at-pudukottai-in-2011

தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாசிப்பு என்று அவர் சொன்னதும் என் மனது பரபரத்தது.

“அவர் வாசிப்பை நீங்க கேட்டிருக்கீங்களா?”

“நான் கேட்டுகிட்டு இருக்கேன்னு சொல்றேன். கேட்டிருக்கியான்னா என்ன அர்த்தம்?”

“அது இல்லையா, நேரில் அவர் கச்சேரில வாசிச்சதைக் கேட்டு இருக்கீங்களா?”

“எனக்கு நெனவு தெரியாத நாள்ல இருந்து கச்சேரிக்கு எங்கப்பா கூட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குப் பதினேழு வயசுலதான் தட்சிணாமூர்த்தி ஐயா சமாதி ஆனார். அது வரைக்கும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்செந்தூர்-னு ஊர் ஊராப் போய் நானும் எங்கப்பாவும் அவர் வாசிப்பைக் கேட்டிருக்கோம்.”

“ஐயா! நான் ஒரு ரைட்டர். சில வருஷமாவே அவரைப் பத்தி தகவல் திரட்டறேன். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் எனக்கு சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.”

“அவரைப் பத்தி சொல்ல என் ஒரு நாக்கு போதுமா தம்பி. ஆதி சேஷனுக்கு ஆயிரம் நாக்காமே. அவரு வேணா சொல்லலாம்.”

“தட்டிக் கழிக்காம, நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லணும்.”

“தெரிஞ்சதை சொல்றேன். வாங்க வீட்டுக்குப் போவோம்”, என்று மெல்ல எழுந்திருந்தார்.

“ஒரு நிமிஷத்துல வந்துடறேன்”, என்று கோயிலுக்குள் சென்று அவசர அவசரமாய் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

பெரியவர் வீடு தூரமில்லை. 90 வயதிலும் சீரான நடை. வாயிலுள் தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்த உருவம் வீட்டினுள் சென்றது. நானும் பின் தொடர்ந்தேன். நாற்காலியில் என் உட்காரச் சொல்லிவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தார். திரும்பி வரும் போது கையில் ஒரு புத்தகம். புத்தகத்தைப் பார்த்த போதே அதை அவர் பல முறை படித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

அருகில் வந்ததும், திருச்சி தாயுமானவன் எழுதியுள்ள தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாழ்க்கை வரலாறை கையில் வைத்திருப்பது தெரிந்தது. சென்னையில் அந்தப் புத்தகத்தை நான் கண்டதில்லை. அதை எழுதிய தாயுமானவன்தான் தட்சிணாமூர்த்தி பிள்ளையின் சமாதி கோயிலை கட்டியவர் என்று அன்று காலைதான் தெரிந்து கொண்டிருந்தேன்.

திருச்சி தாயுமானவன் வீட்டில் எடுக்கப்பட்ட தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளையின் புகைப்படம் 

திருச்சி தாயுமானவன் வீட்டில் எடுக்கப்பட்ட தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளையின் புகைப்படத்தின் புகைப்படம்

“தம்பி! மளிகைக் கடை வெச்சிருந்தவரோட பையனா பொறந்து, பிறந்த கொஞ்ச நாளுக்குள்ள தாயை இழந்து, படிப்பு ஏறாம ஊர் ஊராத் திரிஞ்சு, சிபாரிசுல அரண்மனை காவக்காரனா போன ஒருத்தர் காதுல விழுந்த இசைல மயங்கி, அது பின்னால போய், சங்கீதத்தோட உச்சத்துக்குப் போறதுங்கறது மனுஷனால ஆகிற காரியமா சொல்லுங்க?”

நான் அவர் பேச்சை பதிவு செய்ய ரிக்கார்டரை ஆன் செய்தேன்.

“தட்சிணாமூர்த்தி ஐயாவோட அப்பா பேரு இராமசாமி பிள்ளை. இங்கதான் மளிகைக் கடை வெச்சிருந்தார். அம்மா பேரு அமராவதி. பெரியப்பா, முத்து வளர்த்தா பிள்ளை, யோகாநந்தர்-ங்கற பேர்ல சன்யாஸியா வாழ்ந்தவர். அந்தக் காலத்துல பெரிய இடத்துக்கெல்லாம் அவருதான் வைத்தியம் பார்ப்பார். ஜோசியமும் சொல்வார். எத்தனையோ வருஷம் ஹடயோகம் பண்ணின மகான் அவர். அவர் ஹடயோகம் பண்ணின இடத்துலதான் நாம இன்னிக்கு சந்திச்சோம். அவர் மேற்பார்வைலதான் தட்சிணாமூர்த்தி பிள்ளை வளர்ந்தார்.”

ஊருக்கு வெளியே இருந்த அந்த இடம் ஹடயோகம் செய்ய தோதாகத்தான் இருந்திருக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டேன்.

“ஏழு வயசுல தட்சிணாமூர்த்திப் பிள்ளையை பள்ளிக் கூடத்துல சேர்த்தாங்களாம். அவருக்குப் படிப்பு ஏறலை. குதிரை வண்டி ஓட்டறது, குஸ்தி போடறது மாதிரியான விஷயங்கள்லதான் லயிப்பு இருந்தது. ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்போட, பிள்ளை ஆஜானுபாகுவா இருப்பார். பெரியப்பாவோட ஊர் ஊராப் போய் கோயில்களை பார்க்கிறதுலையும் ரொம்ப ஆர்வமாம்.”

“இள வயசுல சங்கீதம் கத்துக்காம பிற்காலத்துல பெரிய பேர் வாங்கினது ஆச்ச்ர்யம் இல்லையா?”

“ஆமாம். பிள்ளைக்கு கிட்டத்தட்ட 16 வயசாகும் போது, பெரியப்பாவோட சிபாரிசுனால புதுக்கோட்டை அரண்மனைல காவலாளி வேலை கிடைச்சுது. லயத்துல பிரம்மலயம்-னு உண்டு. அது சொல்லிக் கொடுத்து வரதில்லை. இயற்கையா அமைஞ்சாத்தான் உண்டு.”

“லால்குடி ஜெயராமன் வாசிப்பைக் கேட்டு அவருக்கு பிரம்மலயம் உண்டுனு பாலக்காடு மணி ஐயர் சொல்லி இருக்காரதாக் கேள்விப் பட்டிருக்கேன்.”

“அதேதான்! பிள்ளைக்கும் பிரம்மலயம் தானா அமைஞ்சு இருந்தது. புதுக்கோட்டை அரண்மனைல நிறைய கச்சேரிகள் நடக்கும். பிள்ளை அதை நிறைய கேட்டிருக்கார். கேட்கக் கேட்க அவருக்குள்ள பொதிஞ்சிருந்த லயம் வெளிப்பட ஆரம்பிச்சுது.”

“…..”

“துப்பாக்கி, அரண்மனைக் கதவு, தொப்பி, செடிக்கு தண்ணி ஊத்தும் பானை, இப்படி கைல கிடைச்சதுல எல்லாம் தாளம் போட்டுக்கிட்டே இருப்பாராம் பிள்ளை. ஒரு தடவ, பெரியப்பாவோட நச்சாந்துப்பட்டிக்குப் போன போது, ஏகாதசி மடத்துல தங்கியிருக்கார். அங்க ஒரு பண்டாரம் பானையை வெச்சு தட்டிகிட்டு இருந்தார். அதப் பார்த்ததும், இவருக்கும் அதை வாங்கி வாசிக்கத் தோணியிருக்கு. பண்டாரம் பானையை கொடுத்ததும், பிள்ளை வாசிக்க ஆரம்பிச்சிருக்கார். அது வரைக்கும் அரண்மனைல கேட்டதை வெச்சு பானையில் வாசிச்சதும், அந்தப் பண்டாரம், “அப்பா! நீ என்னை விட நல்லா வாசிக்கிற. தினமும் பானையைத் தட்டிப் பழகு”-னு பானையை இவர் கிட்டக் கொடுத்தாராம்.”

“இந்த விஷயங்கள் எல்லாம் பழநி சுப்ரமணிய பிள்ளை எழுதின கட்டுரையிலையும் இருக்கு”, என்று என் பையைத் திறந்து நான் சேகரித்திருந்ததை கடை பரப்ப ஆரம்பித்தேன்.

கட்டுரையை வாங்கிப் பார்த்த பெரியவர், “தாயுமானவன் புத்தகத்துல இன்னும் கொஞ்சம் விரிவா இருக்கு. நச்சாந்துப்பட்டியில ஒரு பாகவதர் ராமாயணம் கதை சொன்னார். கதையில நிறைய பாட்டும் வருமே! பிள்ளைக்கு, அவர் பாடும் போது வாசிக்கணும்-னு ஆசை வந்திருக்கு. எப்படியோ பல பேரை நச்சரிச்சு சம்மதம் வாங்கி, தன் பானையையே கடமா பாவிச்சு, பாகவதர் பாட்டுக்கு ரொம்ப அனுகூலமா வாசிச்சு இருக்கார். இதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டவர் பெரியப்பா யோகானந்தர்தான். பிள்ளையை இந்த வித்தையை நல்லா விருத்தி செஞ்சுக்கச் சொன்னார். தட்சிணாமூர்த்தி பிள்ளை ஊர் திரும்பினதும், ஒரு கடத்தை வாங்கி தொடர்ந்து சாதகம் செஞ்சு வந்தார்.”

“அவர் முதல் கச்சேரி பத்தி எதுவும் தகவல் இருக்கா?”

“குறிப்பா எந்தக் கச்சேரி முதல் கச்சேரினு தெரியல. உள்ளூர்-ல முதல்ல கச்சேரிகள் வாசிச்சாலும், கட வித்வானாப் பேர் வாங்கினது ராமநாதபுரத்துலதான். பாஸ்கர சேதுபதி மகாராஜாவோட சமஸ்தானத்துக்குப் போனார் பிள்ளை. அங்க பூச்சி சீனிவாச ஐயங்காரோட பரிச்சியம் கிடைச்சதும், அவர் மூலமா அரண்மனை கச்சேரிகள் நிறைய கேட்க ஆரம்பிச்சார். காலப்போக்குல, அங்க கச்சேரி செய்ய வந்த வித்வான்கள் கிட்ட தன்னை அறிமுகப்படுத்திகிட்டு, தன்னையும் கச்சேரியில போட்டுக்க வேண்டினார். அப்படி போட்டுகிட்டவங்க எல்லாம் இவருடைய லய ஞானத்தைப் பார்த்து அசந்து போனாங்க.”

“மான்பூண்டியா பிள்ளை கிட்ட சிஷ்யனா போகறதுக்கு முன்னாலயே கச்சேரி பண்ண ஆரம்பிச்சுட்டாரா? பழநி சுப்ரமணிய பிள்ளை எழுதியிருக்கற குறிப்புல மான்பூண்டியா பிள்ளை கிட்ட கத்துகிட்ட பிறகுதான் இராமநாதபுரம் போய் நிறைய கச்சேரி செய்தார்-னு வருது. ஈ.கிருஷ்ணையர், பிள்ளை 25 வயசு வரை கடம் வாசிச்சு, அதுக்குப் பின்னாலதான் மான்பூண்டியா பிள்ளை கிட்ட சிஷ்யரா சேர்ந்தார்-னு எழுதியிருக்கார்.”

“இதெல்லாம் நான் பொறக்கறதுக்கு முன்னாடி நடந்த சமாச்சாரம் பாருங்க, அதனால் உறுதியாச் சொல்ல முடியல. தாயுமானவன் புத்தகத்துல அவர் சீதாபதி ஜோஸ்யர் கிட்டயும், இலுப்பூர் மூக்கையா பிள்ளை கிட்டயும் மிருதங்கம் கத்துகிட்டு பாலாமணி நாடக கம்பெனியில மிருதங்கம் வாசிச்சார். அப்புறம் இராமநாதபுரம் சமஸ்தானம் போய், நிறைய கச்சேரிகள் செஞ்சு, மாங்குடி சிதம்பர பாகவதரால, 40 வயசுக்கு மேலதான் மான்பூண்டியா பிள்ளையைப் பார்த்தாருன்னு இருக்கு. எது எப்படியோ, தட்சிணாமூர்த்தி பிள்ளைங்கற வைரத்தை, பட்டை தீட்டின புகழ் மான்பூண்டியா பிள்ளைக்குதான்.”

குருவையும் சிஷ்யரையும் ஒரே வரியில் குறிப்பிடும் ஈ.கிருஷ்ணையரின் வரி எனக்கு நினைவுக்கு வந்தது. பெரியவருக்குப் படித்துக் காண்பித்தேன்.

“If the guru showed to the world that there was an instrument like that capable of being adopted as an accompaniment in a musical concert, the discple demonstrated the highest possibilities of the same.”

மாமூண்டியா பிள்ளையோடு தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை 

மாமூண்டியா பிள்ளையோடு தட்சிணாமூர்த்தி பிள்ளை

பெரியவர் தொடர்ந்தார், “மான்பூண்டியா பிள்ளையும், தட்சிணாமூர்த்தி பிள்ளையும் கூடை நிறைய பொடிக் கல்லா பொறுக்கி கிட்டு கோயில்ல போய் உட்கார்ந்துக்குவாங்களாம். ‘தம்பி கல்லுங்களை அஞ்சஞ்சா அடுக்கு, இப்ப ஒரு அஞ்சை மூணாவும், இன்னொரு அஞ்சை ஏழாவும் மாத்து’-னு எல்லாம் மான்பூண்டியா பிள்ளைச் சொல்லச் சொல்ல, கல்லை அடுக்கியே நிறைய நுட்பமான லய கணக்குகளையெல்லாம் தயார் பண்ணுவாங்களாம்.”

“மான்பூண்டியா பிள்ளை கிட்ட போனதுமே தட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தை விட்டுட்டார் இல்லையா?”

“அவர் கடத்தை விடக் காரணமா இருந்தவர் நாராயணசாமியப்பா.”

“இதைப் பற்றி நிறைய கட்டுரைகள்-ல வருது. இராமநாதபுரம் அரண்மனை-ல தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பை நாராயணசாமியப்பா கேட்டார். அந்தக் காலத்துல மிருதங்கத்தில் பிரபலம் ஆன முதல் கலைஞர் அவர்தான். மான்பூண்டியா பிள்ளைக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான்.”

“நாராயணசாமியப்பா தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பைக் கேட்டு, “தம்பி, உன் கிட்ட இருக்கற திறமை முழுமையா வெளிய வரணும்-னா மிருதங்கம்தான் உனக்கு சரியான வாத்தியம்.”-னு சொல்லி இருக்கார். இதைக் கேட்ட பிள்ளைக்கோ ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் சந்தேகம். இவ்வளவு வருஷமா கடத்தை அடிச்சு அடிச்சு உறுதியான கையால, மிருதங்கம் மாதிரி மிருதுவா வாசிக்க வேண்டிய வாத்யத்தை வாசிக்க முடியுமான்னு நினைச்சு இருக்கார். அதைக் கேட்டதும் நாராயணசாமியப்பா, தன்னோட மிருதங்கத்தில் ஒண்ணை எடுத்துக் கொடுத்து, “தம்பி! ஆண்டவன் அனுக்ரஹத்தில் நீ ரொம்ப நல்லா வருவ”-ன்னு ஆசீர்வாதம் செஞ்சாராம். ஆனால், பிள்ளை கடத்தை விட்டதுக்கு இன்னொரு காரணமும் இந்தப் புத்தகத்துல இருக்கு.”

“….?”

“அந்தக் காலத்தில, கச்சேரியில போட்டி நடக்கறது சகஜம். போட்டியில தோத்தவர் அந்த வாத்யத்தையே வாசிக்கறதில்லை-னு முடிவுக்கு வந்துடறது சாதாரணமா நடக்கிற விஷயம். ஒரு தடவை பழநி ‘கடம்’ கிருஷ்ணையரும் தட்சிணாமூர்த்தி பிள்ளையும் சேர்ந்து வாசிச்சு இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சு, ‘இனி இந்த வாத்யத்தை வாசிக்கப் போறதில்லை’-னு தட்சிணாமூர்த்தி பிள்ளை சபதம் எடுத்துகிட்டாராம்.”

பெரியவர் விரல் நுனியில் விஷயச் சுரங்கமே இருந்தது.

“கடத்தை விட்ட போதும் பிள்ளைக்கு எக்கெச்செக்க கச்சேரி.”

“மான்பூண்டியா பிள்ளையோடு சேர்ந்து நிறைய கச்சேரிகள் வாசிச்சு இருக்கார். அதுல எல்லாம் மிருதங்கம்தான் வாசிச்சார். இருந்தாலும் கஞ்சிராவிலும் விடாம சாதகம் பண்ணிகிட்டு வந்தார்.”

மான்பூண்டியா பிள்ளை பற்றி பேச்சு திசை திரும்பியதும் எனக்குள் ஓர் ஐயம் எழுந்தது.

“மான்பூண்டியா பிள்ளை தவில் வாசிப்பை அடிப்படையா வெச்சு வந்தவர். அவர் கிட்ட கத்துகிட்ட தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்புலையும் கணக்கு நிறைய இருக்குமா”

“பிள்ளைக்குக் கணக்கைப் பத்தி தெரியணும்னா, இந்தப் புத்தகத்துல ”முடிகொண்டான் வெங்க்டராம ஐயர் கடிதாசியை வாசிங்க.”

“பிள்ளையவர்கள் 5 நிமிஷத்தில் வாசிப்பது எப்படி பூர்த்தியாய் காது நிறைந்து இருக்குமோ அதே போல, ஒன்றரை மணி நேரம் வாசித்தாலும் வந்தது வராமல் வாசிக்கக் கூடிய கற்பனை உடையவர். திஸ்ர கதி மட்டுமின்றி நான்கு அக்ஷரத்தை ஐந்தாகவும், ஏழாகவும், ஒன்பதாகவும் அழகாக அமர்த்தி வாசிக்கும் திறமை பெற்றவர். அதிலும் பல விவகாரங்களை எதிர்பாரா விதம் செய்யும் சாமர்த்தியம் கொண்டவர். அவர் கற்பனைகளை மனதில் வாங்குவதோ, பிசகாமல் தாளம் போடுவதோ அவரைப் போல உழைத்தவர்களுக்குத்தான் சாத்தியம். சென்னையில் ஒரு சமயம் 35 தாளங்களில் பல திருப்புகழ்களைப் பாடினார்கள். அப்போது மிருதங்கம் வாசித்த நம் பிள்ளை, பழக்கத்தில் இல்லாத தாளங்களில் கூட, ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்ததைப் போல, வித விதமான மோராக்களும், கணக்குகளும் வைத்து வாசித்தது பெரிய ஆச்சர்யமாக இருந்தது.”

கடிதம் ஒரு சந்தேகத்தைப் போக்க இன்னொரு சந்தேகம் முளைத்தது.

“தட்சிணாமூர்த்தி பிள்ளையோட கஞ்சிரா பெருசா? மிருதங்கம் பெருசா?”

“அதையும் முடிகொண்டானே அழகா சொல்லியிருப்பாரே! ‘இவர் மிருதங்கம் வாசிக்கும் போது கஞ்சிரா வாசிக்க வேண்டாம் என்றும், கஞ்சிரா வாசித்தால் மிருதங்கம் வேண்டாமென்றும் கேட்பவர்களுக்குத் தோன்றும்”-னு எழுதியிருக்காரே! இவரோட சேர்ந்து கஞ்சிரா வாசிக்கணுங்கறத்துக்காகவே தவிலில் முடிசூடா மன்னனா இருந்த இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளை தவிலை விட்டார். கஞ்சிராவைப் பொறுத்த வரைக்கும், இன்னிக்கு வரைக்கும் இவரைப் போல யாருமே வாசிச்சதில்லை.”

“சித்தூர் சுப்ரமணிய பிள்ளை பாடியிருக்கற ரிக்கார்டுல, ஒரு மேல்கால ஃபரன் வாசிச்சு இருக்கார் பாருங்க. அதுக்கு இணையா இது வரைக்கும் நான் வேறெதையும் கேட்டதில்லை” என்று தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.

“ஆண், பெண், கச்சேரி, பஜனை, ஹரிகதை, நாடகக் கம்பெனி-னு எல்லாம் வித்தியாசம் பார்க்காம வாசிச்சவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை”, என்றும் பி.எம்.சுந்தரம் சொல்லி இருந்தார். அதை பெரியவரிடம் சொன்னேன்.

“பிள்ளைக்கு தினமும் வாத்தியத்தில் வாசிச்சாகணும்னுதான் குறி. வேற எந்த சிந்தனையும் கிடையாது.” என்றவாரே தன் கையில் இருந்த புத்தகத்தில் இருந்து பாபநாசம் சிவனின் கடிதத்தில் சில வரிகளைப் படிக்க ஆரம்பித்தார்.

“ஸ்ரீரங்கத்தில் மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர் குமாரன் உபநயனத்தின் போது என் போன்ற சிறு பிள்ளைகள் பலர் விளையாட்டாய் தலைக்கொன்று இரண்டு பாட்டுகளைப் பாடிக் கொண்டு வந்தோம். காலை 8 மணி முதல் 12.30 மணி வரை நடந்த இந்தக் குழந்தை விளையாட்டில் கூட, தன் கஞ்சிராவை சேர்த்துக் கொண்டு அலுக்காமல் வாசித்து பிரமாதப் படுத்தினார்.”

“இப்ப புரியுதா நான் சொன்னது?”

நான் தலையசைத்தேன்.

“கச்சேரி பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச வருஷத்துக்குள்ளையே உச்சாணிக்குப் போனவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை.”

“அவர் புகழ் உச்சியில் இருந்த போது வெளியான ஈ.கிருஷ்ண ஐயரோட குறிப்பை படிச்ச போது அவரோட பெருமை புரிஞ்சுது.”

“He is the virtual ruler of any musical concert of note and he ensures a crowded house. Perhaps his fee is rather high for an accompanist. But none grudges to pay him and his presence pays in turn”

தனி ஆவரத்தனத்தில் மிருதங்கமும் கஞ்சிராவும் மாறி மாறி வாசிப்பது போல பெரியவரும் நானும் எங்களிடம் இருந்த குறிப்புகளை மாறி மாறி படித்து மகிழ்ந்தோம்.

“அவர் வாசிப்பை பத்தி படிக்கதான் முடியுதே தவிர, அதிகம் கேட்கற அதிர்ஷ்டம் எனக்கில்லை. நீங்க நேரில கேட்ட அவர் வாசிப்புல உங்களை கவர்ந்த அம்சம் எது?”

“சமயோசிதம். எந்த நேரத்துல எதை எப்படி வாசிக்கணும்-னு அவருக்குத்தான் தெரியும்.”

“ஒரு செம்மங்குடி கச்சேரியில பாவப்பூர்வமா பாடி விஸ்ராந்தியான சூழல் ஏற்பட்ட போது, யாரோ ஒரு ரசிகர் “ஐயா தனி வாசிக்கணும்”-னு கேட்டாராம். “ஆண்டவனே! தனி வாசிச்சா இந்த சூழல் கெட்டுப் போயிடும்”-னாராம் பிள்ளை. பிரமாதமான தனிக்கு கிடைப்பதை விட, அன்னிக்கு வாசிக்க மறுத்ததுக்கு அப்ளாஸ் கிடைச்சிதாம். பழநி சுப்ரமணிய பிள்ளையோட குறிப்புல “சாதாரண பாடகராயிருந்தாலும் அவரை உயர்ந்த ஞானஸ்தர் என்று ரசிகர்கள் கருதும்படி தன் வாசிப்பால் காட்டிவிடுவார்கள். சிறியதைப் பெரிதாகக் காட்டும் திறமையில் இவருக்கு ஈடு இணையில்லை”-னு எழுதியிருக்கார்.”

“எப்படி அவரால அதை செய்ய முடிஞ்சுது?…”

“….?”

“அவர் ஒரு சித்தர். அந்த அமானுஷ்ய வாசிப்புல கட்ட முடியாத விஷயம் உண்டா?”

பெரியவர் என்னை சிந்தனையில் ஆழ்த்தினார்.

மெட்ராஸ் கண்ணன் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் 

மதறாஸ் கண்ணன் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் புகைப்படம்

பிள்ளையைப் பற்றி பல அமானுஷ்ய குறிப்புகள் கிடைக்கின்றன. 90 வயசைத் தாண்டியும் கம்பீரமாக மிருதங்கம் வாசிக்கும் மதராஸ் கண்ணனை நான் சந்தித்த போது, “மிருதங்கத்துல எவ்வளவோ மஹா வித்வான்கள் இருந்திருக்காங்க. ஆனால் தட்சிணாமூர்த்தி பிள்ளை அவங்களுக்கெல்லாம் மேல இருந்தவர். நம்ம பூஜை அறையில இருக்க வேண்டியவர்” என்று சொன்னார். அவர் வாசிப்புக்கும் அமானுஷ்ய சக்திக்கும் தொடர்பைப் பற்றி என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இருப்பினும் அவர் கச்சேரியில் பங்கு பெருகிறார் என்றாலே கூட்டம் பன் மடங்கு வந்தது என்பதை 1930-களில் வெளியாகுயுள்ள பல குறிப்புகள் உணர்த்துகின்றன.

எனக்குள் பல எண்ணங்கள் அலை மோதிய போதும், என் கைகள் நான் சேகரித்த குறிப்புகளையும், படங்களையும் ஒன்றொன்றாய் பெரியவரிடத்தில் கொடுத்து வந்தன. ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியின் படத்தைப் பார்த்ததும் பெரியவர் மௌனத்தைக் கலைத்தார்.

full_bench-1

“அந்தக் காலத்துல ஃபுல் பெஞ்ச் கச்சேரி ரொம்பப் பிரபலம்.”

“அந்தக் கச்சேரிகளில் ‘ரிங் மாஸ்டர்’ போன்றவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை-னு நாயனாப் பிள்ளை சிஷ்யரே ஆனந்த விகடன்-ல எழுதியிருக்காரே.”

“அவரோட வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லாத்தையும் விட முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு”

“…..?”

“இந்தப் புத்தகத்துல எவ்வளவோ மஹா வித்வான்கள் எழுதின கடுதாசி எல்லாம் இருக்கு.”, சில மணி நேரங்கள் ஆன பின்னும் பெரியவர் கையிலிருந்து தாயுமானவனின் புத்தகம் இறங்கவில்லை.

“அதுல திரும்பத் திரும்ப வர விஷயம் ஒண்ணுதான். பொறாமை, பூசல், கோபம், பாரபட்சம் எல்லாத்துக்கும் மீறினவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை-னு எல்லாருமே சொல்லி இருக்காங்க. அவரை விரும்பாத ஆட்களே இல்லை-னு பாபநாசம் சிவன் சொல்லி இருக்கார். ‘சதாகாலமும் முருகனிடம் கொண்டிருந்த திடபக்தி, பரோபகார சிந்தை, மகான்களைப் பின்பற்றி நடப்பது இம் மூன்றும்தான் அவருக்கு அழியாப் புகழைத் தந்தன’-னு காரைக்குடி சாம்பசிவ ஐயர் எழுதியிருக்கார்.”

பிள்ளையைப் பற்றி பலர் வித்வான்கள் எழுதியிருந்த கடிதங்கள் எனக்கு அடுத்த கேள்வியை எடுத்துக் கொடுத்தன.

“தட்சிணாமூர்த்தி பிள்ளை யாருக்கெல்லாம் தொடர்ந்து வாசிச்சார்.”

“அவர் யாருக்கு தம்பி வாசிக்கலை? அந்தக் காலத்துல மான்பூண்டியா பிள்ளையோட சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயருக்கு நிறைய வாசிச்சு இருக்கார். அதுக்குப் பிறகு நிறைய வாசிச்சது காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளைக்குதான்.”

“நாயினாப் பிள்ளைக்கு வாசிக்கறது ரொம்ப கஷ்டமாமே!”

“தட்சிணாமூர்த்தி பிள்ளையும் நாயினாப் பிள்ளையும் வெளிப் பார்வைக்கு நிறைய போட்டி போட்டது போலத் தோணினாலும் ரொம்ப அன்யோன்யமானவங்க. ஒரு கச்சேரியில நாயினா பிள்ளை சங்கராபரண ராகத்தை விஸ்தாரமா பாடிகிட்டு இருந்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கோ மிருதங்க ஸ்ருதி மேல திடீர்-னு சந்தேகம். பாடகர், மேடை, கச்சேரியெல்லாம் மறந்து வாத்யத்தை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிச்சுட்டார். நாயினா பிள்ளை என்ன செஞ்சும் தட்சிணாமூர்த்தி பிள்ளை கவனிக்கறதா தெரியலை. உடனே, “ஸ்வர ராக ஸுதா” பாட ஆரம்பிச்சுட்டார். பிள்ளையும் பிரமாதமா பாட்டுக்கு வாசிச்சார். பல்லவி, அனுபல்லவி முடிஞ்சு சரணம் பாடும் போது வழக்கமா பாடற, “மூலாதாரஜ நாதமெறுகுடே” சரணத்தைப் பாடாம, “மத்தள தாளகதுல தெலியக” சரணத்தைப் பாடினார். “தாளம் புரியாம மத்தளத்தை அடிச்சா அதுல சுகம் உண்டா”-னு அர்த்தம் வர சரணம். சரணத்தைக் கேட்ட அடுத்த நிமிஷம் பிள்ளை வாத்யத்தை நிமித்திட்டார்.”

“ஐயயோ! அப்புறம்?”

“நாயனாப் பிள்ளை, சிரிச்சுகிட்டே “என்ன ஆச்சு”-ன்னார். “இத்தனை நாளா இல்லாத சரணம் எங்கேந்து வந்ததுங்கறேன்”-னு பொரிஞ்சார் தட்சிணாமூர்த்தி பிள்ளை. நாயனா பிள்ளையும் சளைக்காம, “நீங்க இன்னிக்கு தவில் சம்பிரதாயமா ராகம் பாடும் போது மிருதங்கத்தை ஸ்ருதி சேர்த்தீங்களே, அது மட்டும் புதுசில்லையா”-ன்னார். பிள்ளை உடனே, “ஆண்டவனே! மன்னிகணும்”-னு சந்தோஷமா வாசிக்க ஆரம்பிச்சுட்டார்.”

mali-cartoon-1936

“நாயினாப் பிள்ளை தவிர வேற யாருக்கு நிறைய வாசிச்சார்?”

“காரைக்குடி பிரதர்ஸுக்கு அவர் வாசிச்ச அளவு வேற யாரும் வாசிக்கலை. பாட்டுக்கு வாசிக்கறதும் வீணைக்கு வாசிக்கறதும் ஒண்ணில்லை. வீணைக்கு நிறைய அடக்கி வாசிக்கணும். தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பை ‘மூணாவது வீணை’-னு சொல்லி இருக்காங்கனா அவர் எப்படி வாசிச்சு இருப்பாருனு புரிஞ்சுக்கலாம். அதுலையும் அவங்க 8-களை சவுக்கத்தில பல்லவி வாசிக்கும் போது, தங்கு தடையில்லாம ஒவ்வொரு ஆவர்த்தத்துக்கும் நகாசை கூட்டிக்கிட்டே வாசிக்கற அழகுக்கு ஈடே கிடையாது.”

காரைக்குடி பிரதர்ஸ் என்றதும் என் மனம் சென்னை சம்பிரதாயாவுக்குத் தாவியது. இராமநாதபுரம் முருகபூபதியின் நேர்காணலில் தட்சிணாமூர்த்தி பிள்ளை காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசித்ததைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

“காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை”

மஹாவித்வான் முருகபூபதியில் குரல் மீண்டும் செவிகளுள் ஒலித்தது.

“நாயினாப் பிள்ளைக்கும், காரைக்குடி பிரதர்ஸுக்கு அடுத்த தலைமுறைக்கு தட்சிணாமூர்த்தி பிள்ளை நிறைய வாசிச்சு இருக்காரில்லையா?”

“ 1910-ல இருந்து 1930 வரைக்கும் முன்னுக்கு வந்த முக்கியமான பாட்டுக்காரங்களை தூக்கி விட்டதே தட்சிணாமூர்த்தி பிள்ளைதானே.”

அரியக்குடி, செம்பை, ஆலத்தூர் சகோதரர்கள் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்தவன்தான் என்ற போதிலும், இவர்கள் இளமைப் பருவமெல்லாம் தட்சிணாமூர்த்தி பிள்ளை என்ற பொன் சரடால் இணைக்கப் பட்டதென்பதை நான் அது நாள் வரை சிந்த்தித்துப் பார்த்ததில்லை.

“1918-ல திருப்பரங்குன்றத்துல ஒரு கச்சேரி. அன்னிக்கு மதுரை புஷ்பவனம் பாடியிருக்கணும். அவரால வர முடியலை.தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் கச்சேரி கேட்க வந்திருந்த அரியக்குடியை மேடை ஏத்தி பாட வெச்சார்.”

பெரியவர் சொல்லச் சொலல் எல்லார்வி அரியக்குடி புத்தகத்தில் எழுதியுள்ள வரிகள் என் மனதில் ஓடின.

“செம்பை பாகவதர் முன்னுக்கு வர தட்சிணாமூர்த்தி பிள்ளை எவ்வளவோ பாடு பட்டார். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையை, செம்பைக்கு வாசிக்கச் சொல்லி தானும் வாசிச்சு, அவருக்கு ஓஹோ-ன்னு பேர் வாங்கி வெச்சவர் பிள்ளைதான்.”

பெரியவர் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து, “முதல் முதலாகப் பிள்ளையவர்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்த கச்சேரி 1929-ம் ஆண்டு திருவாரூரில் நடந்தது. அன்று எங்கள் கச்சேரிக்கு கஞ்சிரா வாசித்தார். அன்று முதல் அவர் காலமாகும் வரை நாங்கள் அவராலேயே சங்கீத உலகில் முன்னணிக்கு வந்ததை என்றென்றும் மறக்க முடியாது” என்று ஆலத்தூர் பிரதர்ஸ் எழுதியிருந்ததையும் முடிகொண்டான் வெங்கடராம ஐயர் முதன் முதலில் சென்னையில் பாடிய போது உடன் வாசித்தது தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் என்பதையும் படித்துக் காட்டினார்.

“அந்தக் காலத்துல தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் ‘கிங் மேக்கர்’ போல இருக்கு.”

“ஆமாம். பாலக்காடு மணி ஐயர், தட்சிணாமூர்த்தி பிள்ளையை ‘இசையரங்குக்கு சேனாபதி’-னு சொல்லி இருக்கார். மணி ஐயருக்கு அவர் மேல தேவதா விசுவாசம்.”

“1942-ல மணி ஐயர் எழுதின கட்டுரைலையே, “என்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவராயிருந்த ஸ்ரீ பிள்ளை அவர்களுடன் பல கச்சேரிகளுக்குச் சென்று வாசிக்க நேர்ந்ததை என் வாழ்க்கையின் விசேஷ பாக்யமாகக் கருதுகிறேன்”-னு எழுதியிருக்கார். “தட்சிணாமூர்த்தி பிள்ளையையே மிஞ்சினவர் மணி ஐயர்”-னு சொன்னதைக் கேட்டு, “மகா பாவம் அது!”-னு மணி ஐயர் உணர்ச்சிவசப்பட்டிருகார்.”

மணி ஐயரைப் பற்றி பேச்சு வந்ததும் என் மனதை சில விஷயங்கள் நெருட ஆரம்பித்தன.

“மணி ஐயரும் பிள்ளையும் ஒருவரை மற்றவர் எப்படி மிஞ்சலாம் என்று சதா சர்வ காலம் எண்ணினர். ஒரு கச்சேரியில் தட்சிணாமூர்த்தி பிள்ளை இரண்டாம் காலம் வாசிக்கத் தவித்தார் அதை மணி ஐயர் வாசித்துக் காண்பித்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு தேவையான போது மணி ஐயர் தாளம் போட்டு உதவினார், அனால் மணி ஐயருக்கு தேவைப்பட்ட போது பிள்ளை உதவி செய்யாமல் நழுவினார்.”, என்றெல்லாம் சமீபத்தில் வந்த மணி ஐயரின் வாழ்க்கை வரலாறு குறிக்கிறது. வேறொரு கச்சேரியில் தட்சிணாமூர்த்தி பார்வை மூலம் என்ன மணி ஐயரிடம் பேசினார் என்பதை அப்போது பிறந்திருக்காத நூல் ஆசிரியர் உணர்ந்து எழுதியிருக்கிறார்.

மணி ஐயர் தட்சிணாமூர்த்தி பிள்ளையைப் பற்றி வைத்திருந்த எண்ணங்களை உணர அவரே எழுதியுள்ள கட்டுரையையும், அவர் பேசி இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய பேச்சையும் கேட்டாலே தெரியும்.

மணி ஐயர் லயத்தைப் பற்றி பேசும் போது, “அப்படி என்ன தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிச்சுட்டார்-னு எல்லாம் கேட்கிறா. இராமநாதபுரம் மகாராஜா முன்னிலைல ஒரு முசிறி கச்சேரி. அடுத்த நாள் எனக்கு மெட்ராஸுல கச்சேரி. ராத்திரி 9 மணிக்கு ரயிலைப் பிடிச்சாகணும். கச்சேரி த்டங்கவே 6.30 மணிக்கு மேல ஆயாச்சு. கச்சேரி அமோகமா நடந்து, பல்லவி முடிஞ்சு தனியெல்லாம் ஆயாச்சு. நான் முன்னாலையே சொல்லியிருந்தபடி, “நான் உத்தரவு வாங்கிக்கறேன்”-னேன். ராஜா, ‘மணி ஐயருக்கு என்ன உண்டோ கொடுத்தனுப்புங்கோ. அவர் கிளம்பட்டும், ஆனால் கச்சேரி நடக்கட்டும்’-னார். நான் மிருதங்கத்தை தட்சிணாமூர்த்தி பிள்ளை கிட்ட கொடுத்தேன். ‘ஆண்டவனே! அடுத்து மெட்ராஸுல பார்க்கும் போது வாத்யத்தை சேர்பிச்சுபிடறேன்’-ன்னார். நானும் கிளம்பி சாமானை எல்லாம் வண்டியில ஏத்தப் போனேன். அப்ப முசிறி ‘திருவடி சரணம்’ பாட ஆரம்பிச்சார். தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சார். நான் அப்படியே நின்னுட்டேன். அவர் ஒண்ணும் வாசிக்கலை. கணக்கு வாசிச்சாரா? கோர்வை வெச்சாரா? சொல்லு போட்டாரா? ஒண்ணுமேயில்லை. குமுக்கி, மீட்டு, சாப்புதான் வாசிச்சார். பல்லவி முடியும் போது ஒரு சாதாரண முத்தாய்ப்புதான் வெச்சார். அப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் கேட்டுட்டுதான் என்னால அந்த இடத்தைவிட்டுப் போக முடிஞ்சுது. அதுதான் தெய்வீகம். சிலவாளுக்குத்தான் அது வரும். எல்லாருக்கும் வராது.”, என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

என் லாப்டாப்பைத் திறந்து மணி ஐயரின் பேச்சை போட்டுக் காண்பித்தேன். அவர் கண்கள் கலங்கின.

“மணி ஐயரோட கடைசி நினைவுல கூட தட்சிணாமூர்த்தி பிள்ளைதானே இருந்தார். ஆஸ்பத்திரியில இருந்த மணி ஐயர் திடீர்-னு எழுந்து, “சீக்கிரம் போய் டாக்ஸி கொண்டா. கச்சேரிக்கு நேரமாச்சு. தட்சிணாமூர்த்தி பிள்ளை காத்துண்டு இருக்கார்”-னு சிஷ்யன் கிட்ட சொல்லி இருக்கார்.”, என்று மணி ஐயரின் மகன் என்னிடம் சொன்ன விஷயத்தையும் சொன்ன போது பெரியவர் என் கையைப் பிடித்துக் கொண்டார்.

அழுதுவிடுவார் என்று தோன்றியதால் பேச்சை மாற்றினேன்.

“தட்சிணாமூர்த்தி பிள்ளையிங்கற வித்வானைப் பத்தி நிறைய பேசினோம். அவருடைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது?”

“அவரு பெரிய செலவாளி. ஆனால் எல்லாச் செலவும் நல்ல வழியிலதான். பெரிய முருக பக்தர். திருப்புகழ் அவ்வளவு அழகாப் பாடுவார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குக் கூட திருப்புகழ் கத்துக் கொடுத்து இருக்கார். அறுபடை வீட்டுக்கும் போய், ஒரு மண்டலம் மௌன விரதம் இருந்து மணிக் கணக்கா கஞ்சிரா வாசிப்பாராம். சின்மயாநந்த மௌனகுரு சுவாமிகள்-ங்கிற பேருல இல்லற துறவியா வாழ்ந்தவர். இன்னிக்கு புதராக் கெடக்கற இடத்துலதான் அவர் கட்டின தண்டபாணி கோயில் கம்பீரமா இருந்தது. தெருத் தெருவா அலைஞ்சு காசு சேகரிச்சு எழுப்பின கோயில் அது.”

செல்ஃபோன் சிணுங்கி பெரியவர் பேச்சைத் துண்டித்தது. என்னுடன் புதுக்கோட்டை வந்திருந்த நண்பர் திரும்பிப் போகத் தயாராய் இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் தட்சிணாமூர்த்திப் பிள்ளை சமாதி கோயிலில் அவருடன் சேர்ந்து கொள்வதாய் கூறி இணைப்பைத் துண்டித்து பெரியவரிடம் விடை பெற ஆயத்தமானேன்.

பெரியவர் கோயில் வரை தானும் வருகிறேன் என்றார்.

பிரிய மனமில்லாததால் இருவரும் முடிந்த வரை மெதுவாக நடந்தோம். பெரியவர் பேச்சைத் தொடர்ந்தார்.

“எப்பப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தி பிள்ளையைச் சுத்தி பெரிய கூட்டமே இருக்கும். யாராவது சாமியாரைப் பார்த்துட்டா பரம சந்தோஷம். ‘ஒரு சமயம் பொன்னமராவதியில் நாயினா பிள்ளை கச்சேரிக்கு இவர் பஸ்ஸில் போகிறார். நானும் அதே பஸ்ஸில் கதைக்குப் போகிறேன். வழியில் மரத்தடியில் யாரோ ஒரு சாமியார் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே பஸ்ஸை நிறுத்து அந்த சாமியாரை ஏறச் சொன்னார். பஸ்காரன் இடமில்லை என்றான். இவர், ‘அப்படியானா சரி, பஸ் முன்னால போகட்டும். நான் பின்னால வந்து சேர்றேன்.’ என்று அங்கேயே இறங்கிவிட்டார். அன்று அவர் பாதிக் கச்சேரியில்தான் கலந்து கொண்டாராம்.”-னு சரஸ்வதி பாய் எழுதியிருக்காங்க.”

பெரியவர் தன் புத்தகத்தை கையோடு எடுத்து வந்திருந்தார்.

“விந்தையான மனுஷர்தான்.”, என்றேன்.

“மனுஷர்-னா சொன்னீங்க? தப்பு தம்பி. மனுஷனால அவர் செஞ்சதையெல்லாம் செய்ய முடியுமா? இந்தப் புத்தகத்துல அவர் வாழ்க்கைல நடந்த பல் ஆமானுஷ்ய விஷயங்கள் பத்தி இருக்கு. அவ்வளவு ஏன் தம்பி, மனுஷனால தன் கடைசி நேரத்தை தெரிஞ்சுக்க முடியுமா?”

“அதெப்படி முடியும்?”

“தாது வருஷம், வைகாசி 13-ம் தேதி 6.30 மணிக்கு தன்னுடைய நேரம்-னு முன்னாலையே எல்லார் கிட்டயும் சொல்லி இருக்கார். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் வந்து சமாதி காரியமெல்லாம் செஞ்சு வெச்சு, “இவர் மரணம் அடையவில்லை. ஜீவனை அடக்கி வைத்திருக்கிறார்.”-னு சொன்னார்.”

“……”

“நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா இந்தாங்க புத்தகம். பொறுமையா படிச்சுப் பாருங்க.”, என்று அவர் பொக்கிஷமாய் வைத்திருந்த புத்தகத்தை க்ஷண நேரத்தில் என் கையில் திணித்தார்.

புத்தகம் என் கையில் பட்ட போது சன்னமாக என் காதுகளுள் அந்த தீம்காரம் கேட்டது. நாங்கள் சந்தித்த புதரை நெருங்கியிருந்தோம். என் விரல்கள் தன்னிச்சையாய் தாளம் போட ஆரம்பித்தன.

**************************************************************************************

உதவி:

  • நேர்காணல்கள்: கே.எஸ்.காளிதாஸ், திருச்சி தாயுமானவன், பி.எம்.சுந்தரம், மதறாஸ் கண்ணன், காரைக்குடி கணேசன், பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராமன்.
  • சம்பிரதாயாவில் கிடைக்கும் மிருதங்க வித்வான் முருகபூபதியின் நேர்காணல்
  • தட்சிணாமூர்த்தி பிள்ளை வாழ்க்கை வரலாறு, திருச்சி தாயுமானவன்
  • பழநி சுப்ரமணிய பிள்ளை ரேடியோ உரை
  • Personalities in Present Day MUsic, E.Krishna Iyer
  • லயத்தைப் பற்றி பாலக்காடு மணி ஐயரின் உரை
  • இசை மேதைகள், த.சங்கரன்
  • அரியக்குடி, எல்லார்வி
  • செம்பை செல்வம், எல்லார்வி
  • பாலக்காடு மணி ஐயர், சாருகேசி
  • அபிநவ நந்திகேசுவரர், பி.ப.ஸ்ரீநிவாஸ ஐயங்கார், ஆனந்த விகடன் தீபாவளி மலர், 1939
  • ஆடல் பாடல், கர்நாடகம், ஆனந்த விகடன், பெப்ரவரி 1934, ஏப்ரல் 1934, ஜூன் 1936

Read Full Post »