Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘award’

மிருதங்கக் கலைஞர் திருச்சி தாயுமானவனைப் பற்றி சங்கீத சீஸனிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் முடிந்தது.

இந்த வருடம், அகாடமியின் டிடிகே விருதைப் பெறும் இவர் கொட்டையூரில் பிறந்தவர். இசை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராஜு வயலின் வித்வான். குடும்பத்த்ல் அனைவருமே ஒன்று வாய்ப்போட்டோ அல்லது வயலினையோ எடுத்துக் கொண்டு அதில் தேர்ச்சியைப் பெற்றனர். அந்தக் குடும்பத்தில் தாயுமானவன் எப்படி மிருதங்கத்தின் பக்கம் வந்தார் என்பது சுவாரஸ்யமான கதை.

“எனக்கு ஏழு வயதிருக்கும் போது எங்கள் விட்டுக்கு ஒரு மிருதங்கம் வந்தது. ஒரு நாடகக் கலைஞர் அடகு வைத்துப் போன மிருதங்கம் அது. அதை தினமும் வாசிப்பேன். அதிலிருந்து புறப்பட்ட நாதம் என்னை ஈர்த்தது. கற்றால் மிருதங்கம்தான் கற்பேன் என்று ஒரே பிடியாய் என் தந்தையிடம் கூறிவிட்டேன்.”,  என்கிறார் தாயுமானவன்.

தாயுமானவனின் முதல் குரு கும்பகோணம் ராஜப்ப ஐயர். 1945-ல் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஆசாரியார் (இவர் தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் சிஷ்யர்)  ஒரு கச்சேரிக்காக கும்பகோணம் வந்திருந்த போது தாயுமானவனின் வாசிப்பைக் கேட்க நேர்ந்தது. உடனே, ராஜப்ப ஐயரை அணுகி, தாயுமானவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ராஜப்ப ஐயரும் இசைய, தாயுமானவனின் குருகுலவாசம் தொடங்கியது.

தட்சிணாமூர்த்தி ஆசாரியார் மிகவும் கண்டிப்பானவர். புதுக்கோட்டை பாணியில் ஊரியவர். மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தவர். அவரிடம் 12 வருட காலம் குருகுலவாசம் செய்த தாயுமானவன், காலப்போக்கில் அவருடன் சேர்ந்தே பல கச்சேரிகள் வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அரியக்குடி, ஆலத்தூர், சித்தூர், தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் என்று அன்று முன்னிலையில் இருந்த அனைத்து வித்வான்களுக்கும் குருவுடன் சேர்ந்து இசைத்துள்ளார்.

குருவின் மனதிற்குகந்த சீடர் காலப்போக்கில் குருவின் மருமகனாகவும் மாறி, கனகாம்புஜத்தைக் கைப்பிடித்தார். தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேல் அபார பக்தி கொண்டிருந்தவர் தட்சிணாமூர்த்தி ஆசாரியார். ”எங்க ஐயா, புதுக்கோட்டை ஐயாவைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க சொல்றதைக் கேட்டே எனக்கும் அவர் பேர்ல ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு.”, என்னும் தாயுமானவன், அவரது குருவையும் பரமகுருவையும் போலவே மிருதங்கம், கஞ்சிரா என்று இரு வாத்தியங்களிலும் தேர்ச்சியைப் பெற்றார்.

இவ்விரு வாத்தியங்களைத் தவிர கோன்னக்கோலிலும் நிபுணர். “எங்கள் வழிப்படி கற்றுக் கொள்ளும் போது சொல்லப்படும் ஜதிகளே, வல்லின மெல்லினங்களோடு, கொன்னக்கோல் இசைப்பது போலத்தான் இருக்கும். எந்த ஒரு பாடத்தையும் கையில் தாளம் போட்டு கொன்னுப்பிக்காமல் வாத்தியத்தில் வாசித்துப் பழக மாட்டோம். மதுரை சோமு கச்சேரியில் என் குருநாதருடன் வாசிக்கும் போது, மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளை கொன்னக்கோல் இசைப்பார். அவரது கொன்னுப்பித்தல் முறை என்னை பெரிதும் கவர்ந்து, நானும் அதில் தேர்ச்சி பெறத் தூண்டியது.”, என்கிறார்.

தாயுமானவனிடம் பேசினால், 30 நொடிகளுக்கு ஒரு முறை தன் குருநாதரைப் பற்றியும் தட்சிணாமூர்த்திப் பிள்ளையைப் பற்றும் பேசாமல் இருக்க மாட்டார். தன் குருநாதரின் கனவுகளை மெய்யாக்கியதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.

அது என்ன கனவுகள்? – புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை நூலாக்குதல், அவருக்கு ஒரு சமாதி கோயில் கட்டுதல். இவ்விரு கனவுகளையும் பெரும்பாடு பட்டு நனவாக்கியிருக்கிறார் தாயுமானவன். வருடா வருடம் இவர் எழுப்பிய சமாதி கோயிலில் தட்சிணாமூர்த்திப் பிள்ளைக்கு குருபூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

65 வருடங்களுக்கு மேலாக வாசித்து வரும் இவர், பிரபல கலைஞர்கள் அனைவரின் பாட்டுக்கும் வாசித்துள்ளார். தியாகராஜ பாகவதருக்கும், கே.பி.சுந்தராம்பாளுக்கும் எண்ணற்ற கச்சேரிகள் வாசித்துள்ளார். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் ப்யணம் செய்துள்ளார். 1971-ல் திருச்சி வானொலியில் சேர்ந்து, பல லய சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார்.  “குருப்ரியா லய வித்யாலயா” என்ற இவரது பள்ளியின் மூலமாக எண்ணற்ற கலைஞர்களை தயாரித்துள்ளார்.

இவர் வாங்கியிருக்கும் விருதுகளின் பட்டியல் நீளமானது. கலைமாமணி, திருச்சி கலைக்காவிரி அளித்துள்ள வாழ்நாள் சாதனை விருது, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்தானம் ஆகியவை அவர் வாங்கியிருக்கும் விருதுகளில் சில. இவரை கௌரவித்தவர்கள் பட்டியலில் இப்போது மியூசிக் அகாடமியும் இணைந்திருப்பது மிக நல்ல விஷயமாகும்.

(பதிவில் உள்ள படங்கள், சென்ற வருடம் தாயுமானவனை அவர் இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டவை. முதல் படம், போட்டோவை போட்டோ பிடித்தது)

Read Full Post »

International Foundation for Fine art, Music Forum சார்பில் வழங்கும் Media Award, இந்த ஆண்டு ஸ்ருதி பத்திருக்கையின் ஆசிரியர் வி.ராம்நாராயணுக்குக் கிடைத்துள்ளது. இவரை சில மாதங்கள் முன்தான் நேரில் முதன்முதலில் சந்தித்தேன் என்ற போதும், ஜி.என்.பி நூற்றாண்டு மலரை இருவரும் சேர்ந்து தொகுத்ததால், சில மாதங்களிலேயே மிக நெருக்கமாகிவிட்டதாய் உணர்கிறேன்.

ராம் இந்தத் துறையில் மிகவும் சீனியர் என்ற போதும் மிக மிக அடக்கமானவர். பேசுகின்ற பத்தாவது வார்த்தையில் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்பவர் மலிந்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால், பேச்சை ஸ்ருதியைப் பற்றித் திருப்பிவிடுவார். இன்றைய நிலையில், சங்கீதத்துக்காகவும், நாட்டியத்துக்காகவும் நடத்தப்படும் ஒரே தரமான இந்திய இதழ் ஸ்ருதிதான். அந்த இதழுக்கு ஆசிரியர் என்ற கர்வம் ஒரு துளி கூட தென்படாத மனிதர். பல விழாக்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். கூச்ச சுபாவம் நிறைந்தவர்.

முதலில் ஒரு நல்ல இசை ரசிகர். எந்த ஒரு கலைஞரின் பாட்டையும் திறந்த மனதோடு அணுகுபவர். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை ஸ்ருதியின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக கருதுபவர். தன் கருத்துகளையும், ஸ்ருதி ஆசிரியர் பொறுப்பையும் அவர் அழகாக வேறுபடுத்தி வைத்திருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.

ஸ்ருதியில் profile செய்ய விட்டுப் போன இசை மேதைகளை எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர். இவரது முயற்சியால்தான் மதுரை மணி, பாலக்காடு மணி பொன்றவர்களைப் பற்றிய இதழ்கள் (இவ்வளவு ஆண்டுகள் கழித்து) வெளியாயின. இதையெல்லம அவரிடம் சொன்னால், இன்னும் என்னென்ன செய்திருக்க வேண்டும், எங்கெல்லாம் தவறுகள் நுழைந்துவிட்டன என்று மட்டுமே பேசுவார்.

சம கால கலைஞர்களைப் பற்றி இவர் ஸ்ருதியில் செய்யும் பதிவுகள் மிகவும் முக்கியமானவை. விஜய் சிவாவும், ஜெயஸ்ரீ-யும் மறைந்த பின், அவர்களைப் பற்றி கிளருவதை விட, அவர்கள் உச்சியில் இருக்கும் போதே அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

இசைத் துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட்டில் ஆட்டக்காரராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதித்தவர் ராம். தமிழ்நாடு கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி இவர் எழுதியுள்ல நூல் மிக அரிய பதிவு. இந்தத் துறையிலும் இவர் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

ஸ்ருதியைப் பொறுத்த மட்டில், ராம்நாராயணுக்கு இன்னும் நிறைய கனவுகள் இருக்கின்றன. இசை உலகுக்கு பேறிருந்தால் அவை மெய்ப்படும்! தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பத்திரிக்கையை முன் நிறுத்தும் இவர் பணியை உணர்ந்து, இவருக்கு இந்த வருடம் விருது வழங்கிய அமைப்புக்கு பாராட்டுகள்.

Read Full Post »