Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Bilahari’

ஸ்ரீநிவாஸ் இல்லாத வெறுமை காலத்தால் அழிய மறுக்கும் வடுதான் என்றாலும் இன்று அவன் இசை வாழ்வை நிறைத்த கணத்தையே நினைக்க விரும்புகிறேன்.

இதைப் படிக்கும் போது கேனைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். இன்று நினைத்தாலும் பரவசப் பிரவாகமாய் என் மனத்தை அந்த நிகழ்வு நிரப்புவது நிச்சயம் சத்தியம்.

1999-ம் ஆண்டு தஞ்சாவூரில் தங்கியபடி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம், சேத்ராடனம் செல்லும் உறவுக்காரர்கள் தஞ்சாவூருக்கு வந்தால் சில சமயம் நானும் அவர்களுடன் சென்றதுண்டு.

அப்படியொரு முறை கும்பகோணம் திருவாரூர் சாலையில் இருந்த கோயில்களுக்குச் சென்ற போது மாலை வெளையில் திருச்சேறை கோயிலை அடைந்தோம்.

சங்கீதா காஸெட், ஏவிம் ஆடியோ, எச்.எம்.வி, பி.எம்.ஜி கிரசெண்டோ என்று வெவ்வேறு கம்பெனிகள் வெளியிட்டிருந்த மாண்டலின் பதிவுகள் அனைத்தும் இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்த காலம். கோயிலின் டேப்ரிக்கார்டரில் இருந்து அற்புதமாய் பிலஹரி ராகம் மாண்டலினில் ஒலித்துக் கொண்டிருந்தது.

என்னிடம் இல்லாத ஒரு பதிவு. அதிகம் கூட்டமில்லாத கோயிலில், பட்டாச்சாரியார் தீபாராதனை காட்டிய போடும் மனமெல்லாம் பிலஹரியில்? என்ன பதிவு இது என்று மனத்தை அரிக்கத் தொடங்கியது.

கன்யாகுமரி வயலினில் வாசிக்கத் துவங்கிய போது பட்டாச்சாரியரை கேட்டேவிட்டேன்.

“என்ன கேஸட் இது”

“இங்க இருக்கற ஒரே காஸெட் இதுதான். தினமும் இதைத்தான் போடறோம்”

”எந்தக் கம்பெனி வெளியிட்ட பதிவு?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது!”

“காஸெட் கவர் இருக்கா?”

பெரியவர் ஏற இறங்கப் பார்த்தார். இது என்னடா ரோதனை என்று நினைத்திருக்கக் கூடும்.

தீர்மானமாய் நான் அங்கு நின்றது அவரை அசைத்திருக்க வெண்டும். உள்ளே சென்று காஸெட் கவரை எடுத்து வந்தார்.

ஒரு டீ-சீரீஸ் காஸெட்டில் யாரோ பதிவு செய்திருக்கிறார்கள்.

தயங்கியபடி, “இதுல எந்தக் கம்பெனி பதிவுனு தெரியலை. நான் ஸ்ரீனிவாஸ் வாசிச்ச எல்லா காஸெட்டையும் வாங்கணும்னு நினைக்கறேன். இந்தக் காஸெட்டை இரவல் தர முடியுமா? நான் பிரதியெடுத்துட்டு திருப்பித் தரேன்.”

“நீ யாருன்னே தெரியாது. எந்த ஊரோ என்னமோ. உன்னை நம்பி இருக்கற ஒரே காஸெட்டை எப்படித் தர்ரது.”

“பணம் வேணா குடுக்கறேன்”

“பணம் எல்லாம் வேண்டாம்பா. யாராவது கேட்டா வம்பாயிடும்.”

“இங்க எதாவது மியூசிகல் இருந்தா உடனே பிரதி எடுத்துட்டுத் தந்துடறேன்”

இதற்கு நடுவில் ஊர் சுற்ற வந்திருந்த உறவுக்கார் பொறுமையிழந்தார்.

“இன்னும் நாலு கோயிலுக்கு போகணும். சீக்கிரம் வாப்பா”, என்றார்.

“இது கிடைக்கத காஸெட். இதை நான் பிரதி எடுக்கப் போறேன். நீங்க மத்த கோயிலுக்குப் போங்க”

அவர் என்னமோ சொல்ல வாயெடுத்த போது, கோயில் பட்டர், “நான் எப்பப்பா உனக்கு காஸெட் தரேன்னு சொன்னேன்”, என்றார்.

எனக்கு கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது.

“ப்ளீஸ், என்னை நம்புங்க. நிச்சயமா இன்னைக்கே திருப்பிக் கொடுத்துடறேன்”, என்றேன்.

உறவுக்காரருக்கும் அப்படி பாதியில் என்னைவிட மனமில்லை. பட்டருக்கு கொஞ்சம் மனமிளகினாலும் காஸெட்டைக் கொடுக்க மனமில்லை. எனக்கும் காஸெட் வெண்டுமென்றாலும் மற்றவர்களை சங்கடப்படுத்துகிறோமே என்று மனவுளைச்சல்.

முப்பது வினாடிகள் மூன்று மணி நேரம் போல ஊர்ந்தன.

பட்டர் ஒருமாதிரி இறங்கி வந்து, “எங்கப் போய் பதிவெடுப்ப?”, என்ரார். என் நண்பன் பாலாஜி கும்பகோணத்தில் இருந்தான். அவன் வீட்டில் பிரதியெடுக்க வசதியுண்டென்று அறிவேன்.

ஹைஸ்பீட் டப்பிங்கில் அரைமணியில் ஆகிவிடும்,

“கும்பகோணத்துக்குப் போய் பிரதியெடுத்துடுவேன்”,என்றேன்.

“ராத்திரிக்குள்ள வர முடியுமா?”

“பன்னிரெண்டு மணியானாலும் ராத்திரி கொடுத்துவிடுகிறேன்”, என்றேன்.

கூடயிருந்த உறவுக்காரர் கும்பகோணத்திலிருந்து நாள் வாடகை பேசி கார் எடுத்து வந்திருந்தார். அவருக்கு என்னத் தோன்றியதோ தெரியவில்லை, “நான் காரில் கூட்டிட்டுப் போய், திரும்ப கொண்டுவிடுகிறேன்”, என்றார்.

பட்டருக்கு ஒரே அதிர்ச்சி. தலையை கிழக்கும் மேற்குமாய் இரண்டு முறை அசைத்துவிட்டு, “இது என்ன கெஸெட்னே எனக்குத் தெரியாது. கடைமைக்கு தினமும் பொடறேன். இவ்வளவு ஆர்வமா இதைக் கேட்கும் போது என்னால மறுக்க முடியலை. கும்பகோணத்துக்கு போயெல்லாம் காப்பி எடுக்க வெண்டாம். காஸெட்டை நீயே வெச்சுக்கோ”, என்றார்.

எனக்கு மறுக்கக் கூடத் தோன்றவில்லை. ஸ்தம்பித்த நிலையில் காஸெட் கவரை வாங்கிக் கொண்டேன். உறவுக்காரர்தான், “பணம் எதாவது குடுக்கட்டுமா?”,என்றார். பட்டர் மறுத்துவிட்டார்.

அவர் டெப்ரிக்காடரை அணைக்கச் சென்ற போது தனி ஆவர்த்தனம் முடிந்து் ஸ்ரீனிவாஸ் வாசிக்கத் தொடங்கியிருந்தான், “தொரகுணா இடுவண்டி சேவா”

ஆமாமப்பா! “யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு சேவை!:”

Read Full Post »

கேபிள் டிவி அறிமுகமான புதிதில், விடியற்காலையில் கருப்புவெள்ளை கர்நாடகபாணி திரைப்பாடல்களை ஒளிபரப்புவார்கள். கல்லூரி காலங்களில் தஞ்சாவூரிலிருந்து விடுமுறைக்கு வரும்நாட்களில் மட்டுமே அதிகாலையைப் பார்த்தவன் நான். அப்படியொரு நாளில் 1999-ல் காலை பொழுதே நமஸ்காரம் என்ற பிலஹரி காதில் விழுந்தது. அன்று முதல் அதைத் திரும்பக் கேட்க எங்கெங்கோ முயன்றும் வாய்க்கவில்லை.

இணையத்தில் என்னென்னமோ அரிய விஷயங்களைக் கண்டடைய முடிந்தாலும் இந்தப் பாடல் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

சிலமாதங்களுக்கொரு முறை யாரேனும் வலையேற்றியிருக்கிறார்களா என்று தேடிப் பார்ப்பேன். காலப்போக்கில் மறந்தும் போனது.

இன்று சீர்காழியின் பிறந்தநாள் என்றொரு பதிவு பார்த்தேன். அந்த பிலஹரியில் பிருகா சங்கதி நினைவுக்கு வந்தது. யூடியூபில் தேடிய போது பாடலும் சிக்கியது.(பிலஹரிதான் நினைவில் இருந்தாலும் – பாடல் ராகமாலிகை. ) ஒவ்வொரு ஸ்வரத்தையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிறபடிக்காய் பாடியிருக்கும் கந்தர்வக் குரல்.

பாடலே இருக்கும் போது வர்ணனை எதற்கு. கேட்டுவிடுங்கள்.

வலையேற்றியவர் யார் பெற்ற பிள்ளையோ. நன்றாக இருக்கட்டும்.

வாழ்க இசைமணி! வாழ்க மணியிசை!

Read Full Post »