1990-களில் கர்நாடக இசையின் பால் ஈர்க்கப்பட்ட எனக்கு சங்கீத கலாநிதி ஏ.கே.சி. நடராஜனின் அறிமுகம் தொலைகாட்சியில் ஒலிபரப்பான நேர்காணல் மூலம் கிடைத்தது. அந்த நேர்காணலிலும் அதன் பின் பல இடங்களிலும் அவர்,
“நான் ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றேன். இலுப்பூர் பஞ்சாமியின் சகோதரர் நடேசபிள்ளையிடம் நாகஸ்வரம் பயின்றேன். வாய்ப்பாட்டிலும், நாகஸ்வரத்திலும் கச்சேரி செய்யும் நிலைக்கு வந்ததும், அப்போது இருந்த சூழலைப் பார்த்தேன்.
வாய்ப்பாட்டிலோ, அரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, எம்.எஸ், எம்.எல்.வி, என்று ஒரு பெரிய பட்டாளமோ சங்கீத உலகை ஆண்டுகொண்டிருந்தது. நாகஸ்வரத்திலோ ராஜரத்தினம் பிள்ளை, வீருசாமி பிள்ளை, திருவெண்காட்டார், திருவீழிமிழலை சகோதரர்கள் என்று அத்தனை ஜாம்பவான்கள். இவர்கள் எல்லாம் உச்சியில் இருக்கும் போது நான் புதிதாய் புறப்பட்டு வந்து வாய்ப்பாட்டிலோ, நாகஸ்வரத்திலோ எப்படி காலூன்ற முடியும்?
அதனால் கிளாரினெட்டை எடுத்துக் கொண்டு, நான் கற்றதை அந்த வாத்யத்தில் கொண்டு வர சாதகம் செய்தேன். கிளாரினெட்டில் எனக்குப் போட்டியே இல்லை. அதனால் மளமளவென மேலே வந்துவிட்டேன்.”
என்று கூறியுள்ளார்.
இதை நான் முதன்முதலில் கேட்ட போது, அவர் என்னமோ குறுக்கு வழியில் மேலே வந்துவிட்டதாய் முதிர்ச்சியற்ற பதின்பருவத்தின் என் மனத்துக்குப்பட்டது. அவர் வாசிப்பின் விசேஷத்தை நான் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே ஜெர்மனியில் இருந்து பீட்டர் ஷ்குல்ட்ஸ் என்பவரை நான் பயின்ற அமெரிக்க பல்கலைகழகத்துக்கு விதி அனுப்பியது.
நான் பொறியியலில் முதுகலை பயின்ற போது கேரளத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டுப் பணியாற்றி வந்தார். அவர் சங்கீத கலாநிதி என்.ரமணியின் சீடர். சங்கீத ஈடுபாட்டினால் என்னை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து உணவளித்து சங்கீதத்தைப் பற்றி பேசுவார். அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது என்ற சொல்லமுடியாவிடினும் நிறைய ஆர்வம் இருந்தது. ஒருநாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீட்டரும் அங்கு இருந்தார். வாசுதேவன் வேலை பார்த்த பிரிவில் பீட்டர் ஆராய்ச்சி மாணவர். ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பீட்டர் வேதியியலில் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா வந்திருந்தார். முறைப்படி மேற்கத்திய செவ்வியலிசை கற்றவர் அவர்.
எங்கள் அரட்டை மேற்கத்திய வாத்தியங்களில் கர்நாடக இசையைப் பற்றி திரும்பியதும், என் சேகரத்தில் நிறைய மேண்டலின் பதிவுகளும், சாக்ஸ்ஃபோன் பதிவுகளும் இருப்பதைச் சொன்னேன். சற்றும் எதிர்பார்க்காதபடி, “கிளாரினெட்டில் கர்நாடக இசைப் பதிவுகள் இருக்கின்றனவா?”, என்று கேட்டார் பீட்டர். வாசுதேவனிடம் ஒரே ஒரு ஒலிநாடா இருந்தது. அதிலிருந்து நவரச கன்னடவில் ‘நினுவினா’ பாடலை ஒலிக்கவிட்டார். கர்நாடக சங்கீதத்த்தில் அதிகப் பரிச்சியம் இல்லாதவர்களைக் கூட அந்தப் பாடலின் துள்ளலான காலபிரமாணமும், அனுபல்லவியில் சுருள் சுருளாய் அலையடிக்கும் அடுக்குச் சங்கதிகளும் எளிதில் ஈர்த்துவிடும்.

நான் பீட்டரை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்த சங்கதிகள் பீட்டரிடம் பெரிய சலனத்தை எற்படுத்தவில்லை. நான்காம் கால உருட்டுச் சங்கதிகள் முடிந்ததும் வந்த ஒரு சங்கதிக்கு பீட்டர் துள்ளிக் குதித்தார். வாசுதேவனை மீண்டும் ஒருமுறை அந்தச் சங்கதியை போடச் சொன்னார். அந்தச் சங்கதியில் ஒரு ஜாரு பிரயோகத்தை ஏகேசி வாசித்திருந்தார். (ஜாரு என்பது ஒரு ஸ்வரத்திலிருந்து அதற்கு தொலைவான ஸ்வரத்தை வழுக்கிக் கொண்டு இணைக்கும் கமகம் எனலாம்).
மூன்று நான்கு முறை நாங்கள் அந்தச் சங்கதியைக் கேட்டபின்னும் பீட்டருக்கு ஆச்சரியமடங்கவில்லை. அனுபல்லவியோடு அந்தப் பாடலை வாசுதேவன் நிறுத்தினார். பீட்டர் ஓரளவு நிதானத்துக்கு வந்ததும், “இது எப்படி கிளாரினெட்டில் சாத்தியம்?”, என்று கேட்டார். எங்களுக்கு அவர் என்ன கேட்கிறார் என்றே விளங்கவில்லை.
இது நடந்த இருமாதங்கள் கழித்து ஒரு மதிய வேளையில் பல்கலைகழக உணவு விடுதியில் பீட்டரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடி வந்து, “உங்க ஆள் பெரிய ஜீனியஸ்!”, என்றார்.
எங்கள் சந்திப்பு நடந்த சில வாரங்களில் ஏகேசி நடராஜன் காலிஃபோர்னியாவுக்கு வந்து வாசிக்கவுள்ளதை அறிந்து பீட்டர் (கிட்டத்தட்ட ஆயிரம் மைல்கள் விமானப் பயணம்) அங்கு சென்றுள்ளார். கச்சேரி முடிந்ததும் ஏகேசி-யுடன் பேசியிருக்கிறார்.
”ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமைதான் உதவி செய்யும்”, என்று தோன்றுகிறது என்றார் பீட்டர்.
நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்து அவரே விளக்கினார்.
“எங்கள் ஊரில் நாங்கள் வாத்தியத் தேர்ச்சி பெறுவது போல கிளரினெட்டை ஏகேசி கற்றிருந்தாரெனில் உங்களுக்கு ஒரு ஜீனியஸ் கிடைத்திருக்கமாட்டார். வாத்தியத்தின் எல்லைகளில் அவரை ‘அறிவு’ நிறுத்தியிருக்கும். அவர் கற்ற வாய்ப்பாட்டும் நாகஸ்வரமும் அவருக்கு சங்கீதத்தைக் காட்டியிருக்கின்றன. எவையெல்லாம் வாத்தியத்தில் வராதோ அதையெல்லாம் வரவழைக்க வாத்தியத்தை என்ன செய்யலாம் என்பதை நோக்கி அறியாமைதான் செலுத்தமுடியும். கிளாரினெட்டில் தவிர்க்க முடியாத சில விசைகளைத் தவிர மற்றதை நீக்கிவிட்டு, நாகஸ்வரத்தைப் போலவே துளைகளில் விரலடியாகவும், ஊதுகின்ற உத்தியைக் கைவரப்பெற்றும் கர்நாடகசங்கீத நுட்பங்களை முழுமையாக அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது”, என்று பீட்டர் சொன்னது பொறியிலடித்தது போல இருந்தது.
ஒரு பெரிய கலைஞர் தன்னடக்கமாய் நேர்காணலில் சொன்ன வாக்கியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு எவ்வளவு இழந்திருக்கிறேன் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதன்பின் கவனித்து கேட்டபோதுதான் வழமையான கிளாரினெட்டை எப்படி அமைப்பிலும், நாதத்திலும் கிட்டத்தட்ட நாகஸ்வரமாகவே ஏகேசி மாற்றியிருக்கிறார் என்று விளங்கியது.
கலை வரலாற்றில் திரும்பத் திரும்பக் கிடைக்கும் செய்தியொன்றுள்ளது. ஒவ்வொரு கலைஞனுக்கு முன்னாலும் இரு வழிகள் உண்டு. ஒன்று எளிதில் கடக்கக்கூடிய, வாழும் காலத்தில் ஓரளவுக்கு (அதிர்ஷ்டமிருந்தால் பெரிய அளவுக்கு) பெயரும் புகழும் அளிக்கக் கூடிய பாதை. இன்னொன்று சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரிக்கக் கூடிய கடினமான, வாழும் காலத்தில் பல சமயம் அதிகம் கண்டுகொள்ளப்படாத பாதை.
வித்வான் ஏகேசி நடராஜன் இரண்டாம் பாதையைத் தேர்ந்து எடுத்தவர் என்பதை பீட்டர் கணப்பொழுதில் உணர்ந்துவிட்டார். இந்திய இசைச் சூழல் இன்னும் அதை உணரும் கணத்துக்காய் காத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ்