Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘concerts’

தேவையா தம்புரா?

இசைக் கலைஞர்களுக்கு ஸ்ருதி மாதா. ஸ்ருதியைத் தெளிவாகக் காட்டும் கருவி தம்புரா. சில ஆண்டுகளுக்கு முன் வரை தம்புரா இல்லாது கச்சேரி நடக்காது. குருகுல வாசம் செய்யும் சிஷ்யகோடிகளின் முக்கிய வேலை, அந்தர காந்தாரம் கேட்கும் அளவிற்கு தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பதுதான்.

தொழில்நுட்பம் வளரவும் electronic tambura மேடைகளுக்கு வர ஆரம்பித்தது. சிலர் சி.டி-யில் ஸ்ருதியை பதிவு செய்து அதனை ஹாலில் போட்டும் பாடுகின்றனர். இன்றைய தேதியில் வெறும் தம்புராவை மட்டும் வைத்துக் கொண்ட கச்சேரிகள் என்பது நடப்பதே இல்லை.

பெரும்பான்மையான மத்தியான வேளை கச்சேரிகளில் வெறும் ஸ்ருதி பெட்டி மற்றும் வைத்தே பாடி விடுகின்றனர். சாயங்கால ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகளில் மட்டும்தான் தம்புராவும் இசைக்கப் படுகிறது.

இந்தத் தம்புராவால் பயன் என்ன?

1. கரண்ட் போனாலும் தம்புராவில் ஸ்ருதி வரும்.
2. ஒருவர் சில நூறுகள் சம்பாதிக்கக் கூடும்.

நல்ல விஷயம்தானே. இருந்துவிட்டுப் போகட்டுமே எனலாம். ஆனால், இதில் சில பிரச்னைகள் உள்ளன.

1. தம்புரா மீட்டுவதும் கலைதான். நிறைய கச்சேரிகளில் தம்புராவில் ஸ்ருதி கலைந்து கொண்டே இருக்க, பாடுபவர் பாடுவதை விட்டுவிட்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்து விடுகிறார். பாடுபவருக்கும் கேட்பவருக்கும் இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
2. எவ்வளவுதான் கஷ்டப் பட்டு சேர்த்தாலும், தம்புராவில் இருந்து எழும் நாதம் அரங்கில் ஒலிப்பதே இல்லை.
3. பேட்டரி back-up உள்ள ஸ்ருதி பாக்ஸ் வடிவமைப்பு ஒன்றும் அத்தனை கடினமானதல்ல.
4. நிறைய கலைஞர்களுக்குத் தம்புரா போடுவது சிஷ்யர்களாக இருக்கிறார்கள். ஆதலால், தம்புராவை நீக்கினால் ஒரு ஆளின் ஊதியத்துக்கு பங்கம் உண்டாகிறது என்றும் கூறிவிட முடியாது.

பாரம்பரிய சின்னம் என்ற ஒரே காரணத்துக்காக இன்றைய கச்சேரிகளில் தம்புரா வைத்திருக்க வேண்டுமா? அல்லது தம்புராவினால் ஏதேனும் உண்மையான உபயோகம் இன்றளவும் இருக்கின்றதா?

அறிந்தவர்கள் கூறலாம்…

Read Full Post »

ச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர்.  மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும்  தேர்ச்சி பெற்றவர்.  தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர்.

ஓவியர் ராஜம் வரைந்த தீட்சிதர்

அவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர்.

எண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். விவாதி ராகங்களை கையாள்வதில் முன்னோடி. அஸம்பூர்ண பத்ததியில், எண்ணற்ற மேளராகங்களில் பாடல் புனைந்தவர். பல ராகங்களின் உருவங்களை, இவர் கீர்த்தனை அமைப்பைக் கொண்டே உணர முடிகிறது.

எஸ்.ராஜம் எழுதிய கட்டுரையில், “சங்கதிகள் அதிகமில்லாமல் முழு ராக சாயை ஒரு கீர்த்தனையிலேயே அடக்கிய பெருமை இவருக்குத்தான் உண்டு. ராகத்தின் அமைப்பு மாறாமல் இருக்க சிட்டஸ்வரங்கள் உதவுகின்றன. சவுக்க காலத்தில் பாடும் திறன் பெற்றவரே இவர் கீர்த்தனைகளை போஷாக்குடன் பாட முடியும். தவிர, மந்திரஸ்தாயியிலும் நன்றாக நின்று பாடும் திறனும் தேவைப்படுகிறது.”, என்கிறார்.

நவக்கிரஹ கிருதிகள், பஞ்சலிங்க கிருதிகள், தேவி நவாவர்ண கிருதிகள் முதலிய பல தொகுப்புகளில் கிருதிகள் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்த இவர் கிருதிகள் சமீப காலத்திலேயே புழக்கத்தில் அதிகரித்திருக்கின்றன. தீட்சிதர் கிருதிகள் கடினமானவை, கச்சேரிக்கு ஒவ்வாதவை – என்ற எண்ணம் பல காலம் இருந்தது. அகாடமியில் தீட்சிதர் தினம் கொண்டாடிய போது, அது தேவையில்லாத ஒன்று சுப்புடு எழுதி, பெரும் பரபரப்பை உண்டாக்கியதை பலர் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடும்.

Justice can be delayed – not denied. என்பது போல, தீட்சிதர் கிருதிகள் இன்று பரவலாகப் பாடப்படுகின்றன.

தொடர்ந்து 12 மணி நேரம் நடை பெரும் ‘தீட்சிதர் அகண்டம்’  தவறாமல் வருடந்தோரும் நடைபெருகிறது.

இந்த வருட அகண்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெறவுள்ளது.

முன்னணியில் இருக்கும் வித்வான்களும், முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.

நான் சென்னைக்குச் செல்ல டிக்கெட் எடுத்து விட்டேன். சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வரக் கூடியவர்கள் நிச்சயம் பங்கு பெற்று இன்புற வேண்டும்.

Read Full Post »