தி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது.
மதிப்புரை: http://www.thehindu.com/arts/books/article2923778.ece
Posted in மிருதங்கம், Book Review, Dhruva Nakshatram, Palani, percussion instruments, personality, tagged book review, dhruva nakshatram, palani on பிப்ரவரி 23, 2012| Leave a Comment »
தி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது.
மதிப்புரை: http://www.thehindu.com/arts/books/article2923778.ece
Posted in மிருதங்கம், வரலாறு, Book Review, Dhruva Nakshatram, Palani, percussion instruments, personality, review, tagged book review, dhruva nakshatram, kalki, palani on பிப்ரவரி 5, 2012| Leave a Comment »
கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.
மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.
16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளைஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதைமுருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள்! சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்!
– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/
Posted in அறிவிப்பு, மிருதங்கம், வரலாறு, Dhruva Nakshatram, event, Palani, percussion instruments, tagged biography, book fair, book release, dhruva nakshatram, mridangam, palani, review, solvanam on ஜனவரி 5, 2012| 2 Comments »
டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.
ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது. இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.
விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர்.
அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம்.
நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஒரு கட்டுரை வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.
இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய அறிமுகத்தினால் இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர். “இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.
புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர். இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) தமிழ் பேப்பரில் வெளியானது.
இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.
இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.
எல்லாவற்றையும் விட, “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.
அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.
புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது 😦
புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334) ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.
இணையத்தில் பெற: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381
Posted in மிருதங்கம், வரலாறு, Dhruva Nakshatram, percussion instruments, personality, tagged Chembai, chowdiah, dhruva nakshatram, mridangam, palani subramaniam pillai, percussion instruments on திசெம்பர் 15, 2011| 1 Comment »
சமீபத்தில் வெளியான என் நூலின் முதல் அத்தியாயம் இது.
“அண்ணா! கீழயே நிக்கறேளே! வண்டில ஏறுங்கோ” என்ற குரல் அந்த இளைஞனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.
‘இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பி விடும். ரயிலடிக்கு வந்த பின் வர மாட்டேன் என்றா சொல்ல முடியும்? பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும்? சென்ற முறை பம்பாய் சென்றபோது மனம் குதியாட்டம் போட்டது. இந்த முறை எப்படியாவது மெட்ராஸிலேயே தங்கிவிட மாட்டோமா என்று தவியாய்த் தவிக்கிறது.’ என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த அவன் கையைப் பிடித்து வண்டிக்குள் இழுத்தே விட்டான் பாகவதரின் சிஷ்யன்.
“அண்ணா நாலஞ்சு தடவை உங்களைக் கேட்டுட்டார்” என்றவனைப் பார்த்து வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்த படி உள்ளே சென்றான் சுப்ரமணியம்.
உரத்த குரலில் சௌடையாவுடன் பேசிக் கொண்டிருந்த செம்பை பாகவதர், உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், “ஏய்! எங்க யாக்கும் போனாய் நீ? எத்தர நாழியா நோக்கு வேண்டி காத்துண்டு இருக்கோம். ஏன் மொகமெல்லாம் வாடியிருக்கு? உடம்புக்கு சுகமில்லையோ?” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா” என்று தன் இருக்கையில் அமர்ந்தான் சுப்ரமணியம்.
சற்றைக்கெல்லாம் வண்டி கிளம்பி விட, பாகவதர் பழைய கதைகளை சௌடையாவிடம் விவரிக்கத் தொடங்கினார். திடீரென சுப்ரமணியத்தைப் பார்த்து, “சுப்புடு! நீ நேக்கு மொத மொதல்ல வாசிச்ச கச்சேரி ஓர்மை இருக்கோ?” என்றார்.
“அதை மறக்க முடியுங்களா? அப்ப எனக்கு பதினெட்டு வயசு கூட முடியல. 1926-ல நெல்லூர் கிட்ட புச்சிரெட்டிபாளையத்துல ஒரு கல்யாண கச்சேரி. அன்னிக்குப் பாடின கல்யாணியும் காம்போதியும் காதுலையே கிடக்குதுங்களே”
“சுப்புடு! அன்னிக்கே உன் வாசிப்பு நேக்கு ரொம்பப் பிடிச்சுது கேட்டியா. நிறைய இடத்துல பெரியவர் வாசிப்பை ஓர்மை படுத்தித்து.”
“அண்ணா! தட்சிணாமூர்த்தி ஐயா வாசிப்பு எங்க, என் வாசிப்பு எங்க. உங்களுக்கு தெரியாததா?”
“அப்படிச் சொல்லாதே சுப்புடு. உன் கையில எல்லாம் பேசறதாக்கும். கணக்கு, துரிதத்துலையும் தெளிவு, காலப்ரமாண சுத்தம் எல்லாம் நெறஞ்சு இருக்கு. ஆனா…”
“ஆனா என்னண்ணா? குத்தம் குறை இருந்தா தயங்காம சொல்லுங்க. நிச்சயம் மாத்திக்கறேன்.”
“சுப்புடு! என்ன வார்த்தை சொல்றாய் நீ. உன் வாசிப்புல குத்தம் சொல்றதாவது. அதுல வேண்டியதெல்லாம் பூர்ணமா இருக்கு. ஆனா நேக்கொரு ஆசை.”
“சொல்லுங்கண்ணா”
“இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன். கணக்கெல்லாம் வேண்டாங்கலை. அதுக்காக ஸௌக்யமா வாசிக்கறதை குறைச்சுக்காத. சூட்சமம் என்னன்னா தனியில வாசிச்ச கணக்கு, புத்தியைத் ஸ்பர்சிச்சுது. கிருதியில வாசிச்ச டேக்கா சொல்லு மனசை ஸ்பர்சிச்சுது. நீ பகவானா நினைக்கறயே தட்சிணா- மூர்த்தி பிள்ளை, அவரோட விசேஷமே அவர் பாட்டுக்குக் கொடுக்கற போஷாக்குதான். அவருக்குத் தெரியாத கணக்கா? அவர் பண்ணாத கோர்வையா? ஆனாலும், காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசிக்கும்போது மூணாமத்த வீணையாவே அவர் மிருதங்கம் மாறிடுமாக்கும். ஒரு சாப்பு குடுத்தாப் போறும். மனசு நிறைஞ்சுடும்.”
பாகவதர் பேசப் பேச ஏற்கெனவே குழம்பியிருந்த சுப்ரமணியத்தின் மனம் மேலும் கலக்கத்துக்குள்ளானது.
‘வாழைப் பழத்துல ஊசி ஏத்தறாரா பாகவதர்? நிறைய கச்சேரி வாய்ப்புகள் வரணும்னா வித்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சாகணுங்கறாரா? பாடறவர் கையில தாளம் போடறாப்புல மிருதங்கக்காரன் வாத்தியத்துல தாளம் போட்டாப்போதும் போல இருக்கு. கச்சேரி கேட்கறவனுக்கு ராகமோ, கிருதியோ புரியற அளவுக்கு லய நுணுக்கங்கள் புரியறதில்லை. அது யார் குத்தம்? அவங்களுக்கு புரியலைங்கறதாலயே வாசிக்காம இருக்க முடியுமா?’ என்றெல்லாம் அவனுள் எண்ண அலைகள் எழும்பியபடி இருந்தன.
அது வரை அமைதியாய் வந்த சௌடையா, “அண்ணா! ஒரு விஷயம்…” என்று இழுத்தார்.
“சொல்றதுக்கென்ன நாள் பார்க்கணுமா? என்னவாக்கும் சேதி?” என்றார் செம்பை.
“உங்களுக்குத் தெரியாத சம்பிரதாயம் இல்ல. கச்சேரியில ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு இடம் இருக்கு. அதுல பாடகருக்கு வலப் பக்கம் மிருதங்கம், இடப் பக்கம் வயலின். இதுதான் சம்பிரதாயம்.”
“சௌடையா! நீங்க சொல்ற விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு சோத்யம் கேக்கறேன். ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரி நன்னா அமையறத்துக்கு எதெல்லாம் காரணம்?”
“பாடறவர் ஸ்ருதி சுத்தமாப் பாடணும். சபை அறிஞ்சு பாடணும். மனசு முழுக்க கச்சேரியில லயிச்சு சத்தியமாப் பாடணும்.”
“பாடறவர் ஒழுங்காப் பாடினா மாத்திரம் கச்சேரி நன்னா அமைஞ்சுடுமோ?”
“அது எப்படி? கூட வாசிக்கற பக்கவாத்தியங்களும் பாடறவர் பாட்டுக்கு போஷாக்கு பண்ணி மெருகேத்தணும்”
“அதைச் சொல்லும்! ஆக பாடகர், வயலின் வித்வான், மிருதங்க வித்வான் மூணு பேரும் பிரகாசிச்சாத்தான் கச்சேரி சோபிக்கும் இல்லையா?”
“அதுல என்ன சந்தேகம்”
“அப்போ, மிருதங்கக்காரர் வாசிப்பு பரிமளிக்கறதும் கச்சேரிக்கு முக்கியம்தானே?”
“இல்லையாபின்ன. அவர் அமைச்சுக் கொடுக்கற பாதையில- தானே நாம நடக்க முடியும்?”
“ரொம்ப சரி. மிருதங்க வாசிப்பு நன்னா அமைய வாத்யத்தோட வலந்தலை சபையை பார்த்து இருக்கணுமா? எதிர்பக்கம் இருக்கணுமா?”
பாகவதர் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்த சௌடையா மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“உமக்கே புரிஞ்சு இருக்கும்னு நினைக்கறேன். கச்சேரியில எங்க உட்கார்ந்தா என்ன? சம்பிரதாயங்கறதே நாம வெச்சதுதானே? பழைய நாளுல எல்லாம் வயலினே இல்லை. வீணையும், குழலும்தான் பக்க வாத்யம். அதனால, வயலினோட கச்சேரி செய்யறது சம்பிரதாய விரோதம்னு சொல்ல முடியுமோ? வழக்கமா உள்ள வயலினோட தந்தி அமைப்பை மாத்தி நீங்க வாசிக்கற வயலின் சம்பிரதாயத்துக்கு விரோதமான வயலின்னு சொன்னா ஏத்துக்க முடியுமோ?” என்று பாகவதர் அடுக்கிக் கொண்டே போனார்.
கேட்டுக் கொண்டு வந்த அந்த இளைஞனுக்கு ஒரு பக்கம் பாகவதரின் மேல் மதிப்பும், மறு பக்கம் வீண் சம்பிரதாயங்களின் மேல் வெறுப்பும் பெருகின.
‘ஒரு மனுஷனுக்கு வலது கைப்பழக்கமோ, இடது கைப் பழக்கமோ அமையறது கடவுள் சித்தமில்லையா? எத்தனையோ காலமா நாகஸ்வர கச்சேரியில ரெட்டைத் தவில் வாசிக்கறது வழக்கத்துலதானே இருக்கு. அப்படி வாசிக்கும்போது ஒருத்தர் வலக்கைப் பழக்கம் இருக்கறவராகவும், மற்றவர் இடக்கை பழக்கம் இருக்கறவரõகவும் உள்ள ஜோடிகள் எத்தனையோ உண்டே. அம்மாப்பேட்டை பக்கிரியோட வாசிப்பைக் கேட்க கூட்டம் அலை மோதுமே. அவரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்தானே? ரேடியோ கச்சேரியில என் கூட சந்தோஷமா வாசிக்கிற வயலின் வித்வான்கள் சபா கச்சேரியில வாசிக்கத் தயாராயில்லை. இடம் மாறாம தொப்பியை சபை பக்கம் வெச்சு வாசிச்சா கேட்க நல்லாவா இருக்கும்? பரம்பரை பரம்பரையா லயத்துல ஊறின எனக்கு ஏன் இப்படி சோதனை வரணும்? என் வாசிப்பு சரியில்லை-னு ஒதுக்கினா நியாயம். என் இடது கைப் பழக்கத்தால் கச்சேரி வாய்ப்பு தட்டிப் போவது எந்த விதத்துல நியாயம்?’ என்றெல்லாம் அந்த இளைஞனின் நெஞ்சம் குமுறியது.
யோசனையில் தலையைக் கவிழ்த்திருந்தவனின் தோளைத் தொட்ட பாகவதர், “சுப்புடு! இதுக்கு முன்னால் நீ பம்பாய் பார்த்திருக்கியோ?” என்று கேட்டார்.
பாகவதரின் கேள்வி அவனை மேலும் தளரச் செய்தது. அதைப் பற்றி பேச விரும்பாதததால் தலையை இல்லை என்று ஆட்டியபோதும், அவன் மனக்கண் முன் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கின.
முதல் பயணம் என்பதால் ஆசை ஆசையாய் பம்பாய்க்குக் கிளம்பியிருந்தான். முதன்முறையாய் அங்கு வாசிக்கப் போகும் கச்சேரியே ஒரு பெரிய சபையில் சிறந்த பாடகரின் கச்சேரியாய் அமைந்ததை எண்ணி அவன் உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது. நிறைந்த சபையில் கச்சேரி விறுவிறுப்பாக தொடங்கியது. பாடகருக்கு போஷாக்கு செய்து நன்கு உழைத்து வாசித்தான். முதல் பாடலின் அனுபல்லவி முடிந்து சரணம் பாடுவதற்குள் திஸ்ரத்தில் சின்ன மோரா ஒன்றை வாசித்ததற்கே கூட்டம் ஆரவாரித்தது. அந்த இளைஞனின் முகத்தில் பரவசம் பரவ ஆரம்பித்த வேளையில் பாடகரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தன.
அடுத்த பாடலுக்கு முன்னால் அரை மணி நேரம் ராகம் பாடினார். கிருதியைப் பாடி நிரவல், ஸ்வரம் என்று விஸ்தாரமாய் முடித்தபோது கச்சேரி தொடங்கி 2 மணி நேரம் ஆகிவிட்டது. தன் திறமையை முழு வீச்சுடன் காட்ட தனி ஆவர்த்தனம் விடுவார் என்றெண்ணியிருந்தான் அந்த இளைஞன். ஸ்வரப்ரஸ்தாரத்துக்கு ஆரவாரமாய் கைத்தட்டிய கூட்டமும் தொடர்ந்து தாளம் போடத் தயாரானது. ஆனால் பாடகரை அவசர அவசரமாய் அடுத்த ராகத்தைப் பாடத் தொடங்கினார். எவ்வளவோ முயன்றும் சுப்ரமணியத்தால் பாடகரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. ராக பாவத்துக்குள் மூழ்குவது போன்ற பாவனையில் கண்ணை மூடிக் கொண்டு ஆலாபனை செய்பவரை என்ன செய்ய முடியும்?
ராகம் முடிந்ததும் தானம் பாடி பல்லவியை அமர்க்களமாய் பாடி முடித்தபோது கூட்டம் கலையத் தொடங்கி விட்டது. அப்போதும் அவர் தனி ஆவர்த்தனம் விடத் தயாராக இல்லை என்று உணர்ந்தபோது, “இப்பவாவது தனி வாசிக்கலாமா?” என்று வாயைத் திறந்து சுப்ரமணியம் கேட்டே விட்டான். வேண்டா வெறுப்பாய் பாடகர் தாளம் போட ஆரம்பித்தார். நல்ல நேரத்தில் தனி என்றாலே இளைப்பாற அரங்கை நீங்கும் கும்பல், கச்சேரி கிட்டத்தட்ட முடிந்த நிலையிலா தனி கேட்க உட்கார்ந்திருக்கும்? எல்லோரும் கலையும் நேரத்திலா நன்றாய் வாசிக்கத் தோன்றும். ஏதோ பேருக்கு இரண்டு நிமிடம் வாசித்து கோர்வையை வைத்து தனியை முடித்தான். “ஆஹா! ஜிஞ்சாமிர்தம்! எப்பேர்பட்ட வாசிப்பு” என்ற பாடகரின் குசும்பு அவன் மனதை சுருக்கெனத் தைத்தது.
இந்நிகழ்வால் ஏற்பட்ட கசப்பு அவனை பம்பாய்க்கு மீண்டும் வரக் கூடாது என்ற முடிவை நோக்கிச் செலுத்தியது. ஆனால் இன்றோ மீண்டும் பம்பாய்க்கு சென்று கொண்டிருக்கிறான்.
ஒரு வேளை பாகவதர் அழைப்பை மறுத்திருந்தால்…
அது எப்படி முடியும்? அவரிடம் கொடுத்த வாக்கை மீற முடியுமா?
பதின்ம வயதில் நாயனா பிள்ளைக்கும், டைகருக்கும் வாசித்திருந்தாலும், கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிட்டாமலே இருந்த காலத்தை மறக்கவா முடியும்? நாயனா பிள்ளை போன்ற லயசிம்மத்துடன் வாசித்ததைக் கேட்ட மற்ற பாடகர்கள், இந்த வாசிப்புக்கு நம்மால் தாளம் போட்டு நிர்வாகம் பண்ண முடியுமா என்ற பயந்தார்கள். போதாக் குறைக்கு இடது கைப் பழக்கம் வேறு. இசையை நம்பியே வாழ்க்கை நடத்துபவனுக்கு கச்சேரிகளே இல்லை என்றால் ஜீவனம் எப்படி நடக்கும்?
அந்தச் சமயத்தில் கொடி கட்டிப் பறந்த பாடகர்களுள் செம்பை முதன்மையானவர். அவருக்கு வழக்கமாய் பாலக்காடு மணி ஐயர்தான் வாசித்து வந்தார். மணி ஐயர் சிறுவனாக இருந்த போதே, அவரை தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைத்து வாசிக்க வைத்து, அவர் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வழி செய்தவர் செம்பை. ஏதோ ஒரு காரணத்தினால் செம்பைக்கு மணி ஐயர் பெயரில் மனத்தாங்கல் ஏற்பட்டது.
அப்போது அவனைக் கூப்பிட்டார் செம்பை. “சுப்புடு! உன் கையில பேசாததே இல்லையாக்கும். இந்த வாசிப்பு எல்லாருக்கும் தெரியணும். அதுக்கு நான் வழி பண்றேன். அதுக்கு முன்னால நாம ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும்.” என்று பீடிகை போட்டார் செம்பை.
“பெரியவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை உங்களுக்கு எவ்வளவோ சந்தோஷமா வாசிப்பார். அப்பேர்பட்ட பாட்டு உங்களோடது. நீங்க என் கிட்ட ஒப்பந்தமாப் போடணும்? கட்டளை போட்டா செய்ய மாட்டேனா?”
“அப்படின்னா நேக்கு ஒரு வாக்கு கொடு.”
“நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்.”
“நான் எங்க கச்சேரிக்குக் கூப்பிட்டாலும் வரணும். கச்சேரிக்கு ரேட் நீ பேசக் கூடாது. நான் என்ன பேசிக் குடுக்கறேனோ ஒப்புக்கணும்.”
“இது என்னண்ணா பிரமாதம். கரும்பு தின்னக் கூலியா என்ன? உங்க பாட்டுக்கு சன்மானமே இல்லாம கூட வாசிப்பேனே.”
இந்த நிகழ்வுக்குப் பின் அவனுக்கு எக்கச்சக்க கச்சேரிகள். கோவில் கச்சேரி, கல்யாணக் கச்சேரி, சபா கச்சேரி என்று சதா செம்பை வைத்தியநாத பாகவதருடன் சுழன்று கொண்டே இருந்தான். இசை உலகும் அவனது வாசிப்பை கவனிக்கத் தொடங்கியது. மெது மெதுவாய் மற்ற பாடகர்களும் அவனை அழைக்க ஆரம்பித்தனர். செம்பை கச்சேரி இல்லாத சமயத்தில் மற்றவர்களுக்கும் அவன் வாசித்து வந்தான். அப்படி ஒரு சமயத்தில்தான் பம்பாயில் வேறொரு பாடகருடன் அந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
அது நடந்த அடுத்த மாதம் செம்பை பம்பாய்க்கு வருமாறு அழைக்க, கொடுத்த வாக்கை மீற முடியாமல் ஒப்புக் கொள்ள நேர்ந்தது.
‘இவ்வளவு குமுறலை மனதுக்குள் அடக்கியபடி வாசித்தால் நன்றாகவா இருக்கும்? முழு மனதுடன் வாசிக்க முடியாத இடத்தில் நல்ல பேரை வாங்க முடியும்? நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்து வரும் செம்பை பாகவதரின் கச்சேரியிலா நான் அசிரத்தையாய் வாசிக்க முடியும்?’
எண்ண அலைகளின் சுழற்சியில் சிக்கித் தவித்தபடி ரயில் பயணத்தை எப்படியோ கடத்தினான் அவ்விளைஞன். பம்பாயில் ஜாகைக்குச் சென்றதும், “அண்ணா, எனக்குத் தலைவலியா இருக்கு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்.” என்று கூட்டத்தினின்று நழுவி தன் அறைக்குள் தனிமையில் மூழ்கினான்.
அவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில் செம்பையைச் சந்திக்க வந்த ரசிகர், “இன்னிக்குக் கச்சேரியில மிருதங்கம் யாரு?” என்றார்
“பழனி முத்தையா பிள்ளையோட பையன் சுப்புடுவாக்கும் மிருதங்கம். அவன் வாசிப்பை பம்பாய் முதன்முதலா கேட்கப் போறது” என்று கண் சிமிட்டினார் பாகவதர்.
“முதன்முதலாவா? போன மாசம்தானே அவர் இங்க வந்திருந்தார்? அப்ப நடந்த விவகாரத்தையெல்லாம் பார்த்தபோது இனிமே அவர் இங்க வரவேமாட்டார்னு நினைச்சேன்.”
“ஓ! நான் கேட்டப்போ இதுக்கு முன்னால பம்பாய் வந்ததில்லைனு சொன்னானே! என்னவாக்கும் நடந்தது? விவரமாய்ச் சொல்லும்.” என்று பாகவதர் பரபரக்க, நடந்ததையெல்லாம் விளக்கினார் ரசிகர்.
“அப்படியா சேதி. நீங்க இதெல்லாம் சொன்னது ரொம்ப நன்னாச்சு” என்று யோசனையில் ஆழ்ந்தார் பாகவதர்.
மாலையில் கச்சேரிக்காக மேடை ஏறும் வரை சுப்ரமணியத்திடம் பாகவதர் பேசவில்லை. அவர் ஏதும் கேட்டால் போலியாய் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமோ என்று பயந்தவனுக்கு, அவர் பேசாததே பெரிய ஆறுதலாய் இருந்தது.
கச்சேரி தொடங்குவதற்கு முன் அவனைப் பார்த்து ஒரு முறை மலர்ந்த புன்னகையை வீசிய பாகவதர், கண்களை மூடி குருவாயூரப்பனை வணங்கிவிட்டு ஸ்ருதியோடு இணைந்து கொண்டார். அவரது வெண்கலக் குரல் அரங்கை நிறைக்க, நல்ல விறுவிறுப்புடன் வர்ணத்தைத் தொடங்கினார்.
மேடையேறும்போது அவன் மனத்தில் இருந்த குழப்பம் எல்லாம் பாகவதர் பாட ஆரம்பித்ததும் பறந்தோடியது. நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஸ்திரமான தாளத்தைப் போடுவதைப் பார்க்கும்போதே அவனுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது. முக்தாய் ஸ்வரம் முடிந்தபோதே அரங்கில் இருப்பவர்கள் எல்லாம் ஆரவாரிக்க, மேடையிலிருந்தோர் எல்லாரும் கச்சேரி களை கட்டிவிட்டதை உணர்ந்தனர்.
வர்ணத்துக்குப் பின், ‘வாதாபி கணபதிம்’ பாடி, ‘ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்’ என்ற இடத்தில் நிரவல் செய்தார் பாகவதர். தார ஸ்தாயியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்று ஒவ்வொரு ஸ்வரத்திலும் கார்வை கொடுத்து பாகவதர் நிற்கும் வேளையில், அவன் மிருதங்கத்திலிருந்து புறப்பட்ட சாப்புகளும், குமுக்கிகளும் எண்ணற்ற ஆஹாகாரங்களைப் சம்பாதித்தன. கீழ் கால ஸ்வரங்களுக்குத் தென்றலாய் வருடிய மிருதங்கம், பாகவதரின் விசேஷமான ‘கத்திரி ஸ்வரங்களின்’ போது கோடை இடியாய் முழங்கியது.
கச்சேரி ஆரம்பித்த அரை மணிக்குள் ரசிகர்கள் மனது நிறைந்து விட, பாகவதர் அவனைப் பார்த்து, “தனி வாசிச்சுடு” என்றார்.
“தனியா? நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா? எதானாலும் நேரடியாச் சொல்லுங்க.”
“ஏய்! தப்பொண்ணும் இல்லையாக்கும். நீ கிருதிக்கு வாசிச்சதை எப்படி ரசிச்சாப் பார்த்தியோ? எனக்கே பாடறதை நிறுத்திட்டு கொஞ்சம்கூடக் கேட்டாத் தேவலைன்னு தோணித்து. சீக்கிரம் வாசி.” என்று உற்சாகப்படுத்தினார்.
அவன் மகிழ்ச்சியெல்லாம் வாசிப்பில் வெளிப்படத் தொடங்கியது. இரண்டு ஆவர்த்தம் வாசித்ததும் பாகவதர் ரயிலில் சொன்னது நினைவுக்கு வந்தது. தன் மனத்துக்கு சரி என்று தோன்றாதபோதும், இவரது பெருந்தன்மைக்கு வேண்டியாவது விவகாரமில்லாமல் சர்வலகுவாய் இன்று நிறைய வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ஸ்ருதியொடு இழைந்தபடி அவன் உதிர்த்த சாப்புகளும், மீட்டுச் சொற்களும் ரசிகர்களை களிப்பில் ஆழ்த்தின. புறா குமுறுவது போன்ற குமுக்கிகள் அவன் மிருதங்கத்தின் தொப்பியில் இருந்து எழுந்தபோது சௌடையா தன்னை மறந்த நிலையில் ஆஹாகாரம் செய்தார். ஐந்து நிமிடங்கள் சர்வ சௌக்யமாய் வாசித்துவிட்டு தனியை முடிக்கப் போகும் வேளையில், “சுப்புடு! அந்தக் கண்ட நடையைக் கொஞ்சம் பிரஸ்தாபம் பண்ணேன்” என்றார்.
பாகவதரை இன்னும் வாசிக்கச் சொல்லிக் கேட்கிறார் என்றதும் கூட்டமும் அந்த இளைஞனை உற்சாகப்படுத்துவதில் முனைந்தது. கதி பேதம் செய்து கண்ட நடைக்குத் தாவி, கண்டத்தின் ஐந்தை ஐந்தாகவே காட்டாமல் வெவ்வேறு அழகிய கோவைகளை அவன் உருவாக்கியபோது பாகவதர் முகத்தில் பெருமிதம் ததும்பியது. அதன்பின் சதுஸ்ரத்துக்குத் தாவி மின்னல் வேகஃபரன்கள் வாசித்து, மோரா கோர்வை வாசித்து தனியை நிறைவு செய்யும்போது அரை மணிக்கு மேல் தனி வாசித்திருந்தான் அவ்விளைஞன். அன்று அவனுக்குக் கிடைத்த கைத்தட்டல் போல் அவன் அதுவரை கண்டதில்லை.
“என்னமா வாசிச்சான் பார்த்தேளா? தனி ஆவர்த்தனம் வாசிச்சா நிறைய இடத்துல எழுந்து போறா. நீங்களாக்கும் உண்மையான ரசிகாள். இப்பவே இன்னொரு தனி கொடுத்தாக் கூட உட்கார்ந்து கேட்பேளோல்லியோ?” என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டார் பாகவதர். பாகவதர் தென்னகத்தில் உள்ள ரசிகர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தவர் என்று கூறிவிட்டதை எண்ணி புளகாங்கிதம் அடைந்த பம்பாய் ரசிகர்கள், அந்தக் கச்சேரியில் இனி எத்தனை தனி வாசித்தாலும் அலுக்காமல் கேட்டிருப்பார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு பாடலுக்கு ஒரு முறை அவனை தனி வாசிக்கச் சொல்லிக் கொண்டே வந்தார் பாகவதர். ரூபகம், கண்ட சாபு, மிஸ்ர சாபு என்று வெவ்வேறு தாளங்களில் தன் திறமையை காட்டிக் கொண்டே வந்தான் அவ்விளைஞன். நேரம் செல்லச் செல்ல சபையின் மொத்த கவனமும் மிருதங்க வித்வானின் மேலேயே தங்கியது. பாட்டுக்கு மிருதங்கம் என்பது போய், மிருதங்கம் பரிமளிக்க வேண்டி பாகவதர் பாடுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது.
கணக்குகளை அவ்வப்போது காட்டி, சௌக்கியத்தைப் பிரதானமாக்கிக் கொண்டு வாசிக்கும்போதுதான் பாகவதர் ரயிலில் கூறிய விஷயத்தில் பொதிந்திருந்த உண்மை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது. உண்மையான லய வேலைப்பாடு விரலை ஒடிக்கும் கணக்குகளில் இல்லை, மிகவும் சௌக்யமாய் வாசித்தபோதும் லய விவகாரங்களை நுணுக்கமாய்ச் செய்ய முடியும் என்பதை அவன் உணர ஆரம்பித்தான்.
இறுதியாகத் திருப்புகழ் பாடியபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஒருமித்த குரலாய் “இன்னொரு தனி” என்று முழங்கினர். அவர்களுக்கிணங்கி ஐந்தாவது முறையாகத் தனி வாசிக்கச் சொன்னார் பாகவதர். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலான சந்த தாளத்தில் சுப்ரமணியம் வாசிக்க, இம்மி பிசகாமல் தாளம் போட்டு உற்சாகப் படுத்திக் கொண்டே வந்தார் பாகவதர். ஒவ்வொரு முறையும் இடத்தில் சரியாக வந்து சேரும்போதும் அரங்கில் ஆரவாரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியாய் கோர்வை வைத்து முடித்தபோது, “வேற தெரிஞ்ச தாளத்தோட கோர்வையை முன்ன பின்ன தள்ளி எடுத்து இடத்துக்குக் கொண்டு வரலையாக்கும். இந்தத் தாளத்துக்கான பிரத்யேகமான கோர்வையை வாசிச்சான். வாசிப்புல சத்தியம்னா இதுதானே?” என்று பாகவதர் புகழ் மாலை சூட்ட கச்சேரி இனிதே முடிந்தது.
“இதுவரை எத்தனை தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து போயிருப்போம். அதனால் எவ்வளவு நஷ்டம் என்று இன்றுதான் புரிகிறது.” என்று சிலர் மனம் வருந்தினர். “தா தீ தொம் நம் மட்டுமே ஒழுங்காக வாசிக்க வராதபோது, நாம் எப்படி இந்த வாசிப்பெல்லாம் வாசிப்பது” என்று சிலர் கலங்கினர். சபையின் காரியதரிசி, “நாளன்னிக்கு கச்சேரிக்குள்ள வேற பேனருக்கு ஏற்பாடு செய்யணும். செம்பை வைத்தியநாத பாகவதர், சௌடையா – பார்ட்டி என்றிருக்கும் பேனரில், மிருதங்கம் வாசித்த இளைஞனின் பெயரையும் நிச்சயம் சேர்க்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார். “Grand Mridangam Conert” என்று அடுத்த நாள் தினசரி ஒன்று அவன் புகழ் பாடியது.
இளமை முதல் பல துயரங்களைக் கண்ட அவனுக்கு அதன்பின் உயரங்கள் மட்டுமே காத்திருந்தன.
அந்த இளைஞன்தான், சுப்புடு என்றும், பழனி என்றும், பிள்ளைவாள் என்றும் பலரால் அழைக்கப்பட்ட மிருதங்க வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளை.
********************************************************************************************************
நன்றி: http://solvanam.com/
நூலை இணையத்தில் இங்கு வாங்கலாம்: http://udumalai.com/?prd=thuruva%20natchatram&page=products&id=10381