Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Dr. Narmada’

அரிய பாடல்களை, நிதானமான சங்கீதத்தை, குரல் இருக்கிறது என்பதற்காக கச்சேரி மேடையை சர்கஸ் கூடாரமாக மாற்றாமல் இருக்கும் கலைஞரைக் கேட்க விழைவோர் நிச்சயம் விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். இந்த வருடம் அகாடமியில், “வாங்கும் எனக்கு இரு கை” (ஐயா தமிழிசை விரும்பிகளே! அகாடமியில் தமிழ்ப் பாடல் மெயின் ஐட்டமாக அரங்கேறியுள்ளது!), “அருள் செய்ய வேண்டுமையா”, “நாட்டைகுறிஞ்சி ராகம் தானம் பல்லவி”, ஆகியவை இடம் பெற்றனவாம். இந்தக் கச்சேரியைக் கேட்ட என் அம்மா, ரொம்பவே சிலாகித்துச் சொன்னதால், அடுத்த நாளே ரஸிகா ஃபைன் ஆர்ட்ஸில் இவரைக் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தேன். டாக்டர் நர்மதா, தஞ்சாவூர் ராமதாஸ் போன்ற சீனியர் வித்வான்கள் உடன் வாசிக்கிறார்கள் என்பதும் என் முடிவுக்கு முக்கிய காரணம். கச்சேரிக்கு முன், விஜயலட்சுமியைத் தொடர்பு கொண்டு ‘காந்தாமணி’ ராகத்தில் ‘நாத சுகம்’ என்ற கிருதியைப் பாட வேண்டிக் கோரினேன்.

ஜி.என்.பி மலர் வேலைகளை முடித்துக் கொண்டு, மயிலாப்பூரிலிருந்து மாம்பலம் செல்வதற்குள் நவராகமாலிகை வர்ணம் முடிந்து, மோகன ராகத்தில், “ராமா நின்னு” பாடிக் கொண்டிருந்தார். அரங்கின் வாயிலில், கச்சேரி விவரமெல்லாம் கண்ணில் படும்படியாக இல்லை. காண்டீனில் இன்றைய ஸ்பெஷல் சமாசாரங்கள் நிச்சயம் கண்ணில் படும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. மணியம் செல்வனின் கைவண்ணத்தில், ஜி.என்.பி கம்பீரமாக மேடையில் மெகா சைஸ் பேனராக வீற்றிருந்தார்.

விறுவிறுப்பான காலப்ரமாணத்தில், மோகன ராகத்தில் அமைந்த கல்பனை ஸ்வரங்கள் கச்சேரியை களை கட்ட வைத்தன. ஜெகன் மோகினி ராகத்தில், அரக்க பரக்க “சோபில்லு” கேட்டுப் பழகியவர்களுக்கு, அன்று விஜயலட்சுமி பாடிய ஆலாபனை pleasant surprise ஆக இருந்திருக்கும். முதல் பிடியிலேயே ராகத்தைக் காட்டி, மற்ற ராகங்களின் சாயை வராமல், ஜகன்மோகினிக்கென்று பிரத்யேகமாய் ஓர் உருவளித்த விதம் வெகு அழகு. சோபில்லு கிருதியில், வழக்கமான சங்கதிகளைத் (வழக்கம் என்றால், ஜி.என்.பி பாடிய சங்கதிகள்) தவிர, புதிதாக மலர்ந்த ஒரு சங்கதி நன்றாக இருந்தது.

தோடியை கண நேரத்துக்குள் கோடி காட்டி, ‘தணிகை வளர் சரவண  பவா’ பாடினார். “துள்ளி விளையாடி வரும்” என்ற இடத்தில் செய்த நிரவல் பன்னிரு கையனின் வாகனத்தின் பல்வேறு அசைவுகளைச் சித்தரிக்கும் வகையில் செம்மையாக அமைந்தது. விஜயலட்சுமி ஸ்வரம் பாடும் போது, பெரும்பாலும் ஸர்வலுகுவாகவே பாடுகிறார். அனுமார் வால் போல் நீட்டிக் கொண்டு போகாமல், சின்னச் சின்ன கீற்றுகளாய் பாடப்படும் கல்பனை ஸ்வரங்கள் அற்புதமாய் அமைகின்றன. அவ்வப்போது, தெறிக்கும் கணக்குகள் அவரது லக்ஷண ஞானத்தைக் காட்டுகின்றன. அப்படி லக்ஷணமாய்ப் பாடும் போதும், ராக பாவம் கெடாமல் பாடுவது தனிச் சிறப்பு. மேடையில் அமைந்த கலைஞர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டதைப் பார்க்க நிறைவாக இருந்தது. நிரவல் ஸ்வரமெல்லாம், கடைசியில் பெரியதாகப் பாடி, வயலினுக்கு விடாமல் கிருதியை நிறைவு செய்யும் சின்னத் தனங்களில் எல்லாம் விஜயலட்சுமி ஈடுபடவில்லை. டாக்டர் நர்மதாவும், பாடகரை நிழல் போலத் தொடர்ந்து, தன் வித்தையைப் பறை சாற்றுவதைவிட, பாட்டை போஷிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

தீட்சிதரின் ‘அர்தநாரீஸ்வரம்’ குமுதக்ரியா ராகத்தில் அமைந்த master piece. அதைப் பாடுவதற்கு முன் ஹிந்துஸ்தானி phrases நிறைய வரும் வகையில் அற்புதமாய்ப் பாடினார். கிருதியும் நல்ல பாவத்துடன் அமைந்தது. கடைசியில் பாடிய hindustani type taans-ஐ என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. அதற்கு பதிலாய் நாலு ஆவர்த்தம் ஸ்வரம் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. அன்று பாடிய taans, பாடகரின் குரலைக் கொஞ்சம் பாதித்து போலத் தோன்றியது. அடுத்து பாடிய ‘சாயா நாட்டை’ ராகத்தில் ‘இதி சமயமுரா’ கிருதியிலும் இந்த பாதிப்பு அவர் குரலில் தென்பட்டது.

அடுத்ததாகப் பாடிய சங்கராபரண ராகத்தின் போது, குரல் பழைய நிலைக்குத் திரும்பியது. இழைத்து இழைத்து, பஞ்சமம், தார ஷட்ஜம், தார காந்தாரம் என்று படிப்படியாய் ராகத்தை வளர்த்தார். ‘ஸரோஜ தள நேத்ரி’ என்ற ஷ்யாமா சாஸ்திரியின் கிருதியைப் பாடினார். ‘கோரிவச்சின வாரி’ என்ற வரியில் நிறைய சங்கதிகள் பாட ஆரம்பித்த போது, “ஸாம கான வினோதினி” என்ற அற்புதமான வரியில் நிரவல் செய்யாமல் இந்த வரியிலேயே நிரவல் செய்வாரோ என்று பயந்தேன். நல்ல காலம், அப்படி எதுவும் நடக்கவில்லை.  “ஸாம கான”-வின் நிதானமாய் நிரவல் ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனத்துக்கு விட்டார். தஞ்சாவூர் ராமதாஸ் போட்ட லய முடிச்சுகளை எல்லாம் இளைஞர் ஹரிஹர சர்மா அலட்டிக் கொள்ளாமல் அவிழ்த்தார். குறிப்பாக ராமதாஸ் வாசித்த திஸ்ர நடை வெகு அற்புதமாக இருந்தது. கடைசியில் வைத்த கோர்வை பிரபலமான ஒன்றுதான் என்ற போதும், வாசித்த விதம் ரசிக்கும் படி இருந்தது. இவ்வளவு நன்றாக வாசிப்பவர் ஏன் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார் என்று எண்ணினேன்.

தனியைத் தொடர்ந்து ஜி.என்.பி-யின் ரஞ்சனி நிரஞ்சனி பாடினார். அது வரை, கச்சேரியில், அதிகம் கேட்கக் கிடைக்காத பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த போதும், நான் பாடும் படு கேட்டுக் கொண்ட பாடல் வரவில்லையே என்ற ஏக்கமும் மேலெழுந்தது. ஸ்ருதியை மத்யம ஸ்ருதிக்கு மாற்றியதும், காந்தாமணிதான் அடுத்தது என்று ஊகித்தேன். லேசாக ராகத்தைப் பாடி, “நாத சுகம்” பாடினார். “பூந்தாழ் அணி குழல் காந்தாமணி” என்ற வரி என்னைச் சொக்க வைத்தது.

காபி, சிந்து பைரவி, யமன் கல்யாணில் நெக்குருக ஒரு ஸ்லோகம் பாடி, எம்.எஸ் பிரபல படுத்திய “பாயவாமி கோபாலபாலம்” பாடி, நிறைவாக மங்களம் பாடிய போது, ரசிகர்கள் மனமும் நிறைவாகியிருக்கும் என்பது உறுதி.

Read Full Post »