Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘dwaram house’

தமிழ்நாட்டு கர்நாடக இசைச் சூழலைப் பற்றி மற்ற மாநிலத்தவர் அவ்வப்போது வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று உண்டு.  கச்சேரி வாய்ப்புகளோ, பட்டங்களோ தமிழ்நாட்டுக் கலைஞர்களுக்குக் கிடைத்த/கிடைக்கும் அளவு மற்ற மாநிலத்தவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

இதைக் கேட்கும் போதெல்லாம் நான் பொறுமையாக இரண்டு விஷயங்களைக் பதிலாகக் கூறுவதுண்டு.

  1. ஆந்திர மாநிலத்தில் ஆந்திரக் கலைஞருக்கும், கேரள மாநிலத்தில் கேரள கலைஞருக்கும் அதிக வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் கிடைப்பது போலவே தமிழ்நாட்டிலும் நடப்பது இயற்கை.
  2. கலையில் உச்சங்களைத் தொட்ட வேற்று மாநிலக் கலைஞர்கள் பலரைக் கொண்டாட தமிழகம் தவறியதில்லை.

இதில் இரண்டாவது விஷயத்தை விளக்க நான் சங்கீத கலாநிதி துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கதையை நாடுவேன்.

சிறு வயதிலேயே பார்வை மிகவும் மோசமான நிலமையைல் வெங்கடசாமி நாயுடுவால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை.  ஒருவகையில் முழு நேரத்தையும் இசைக்கே ஒதுக்க அதுவே காரணமானது. 1920-களில் கச்சேரி உலகின் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார் துவாரம்.  1927-ல் காங்கிரஸ் மாநாட்டின் பகுதியாக நடைபெற்ற இசைக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஜாம்பவான்களுள் ஒருவராக அவர் இடம் பெரும் அளவிற்கு அவர் புகழ் வளர்ந்தது.

இதனால் காழ்புற்ற ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு கலைஞர், துவாரத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு அவர் இசையை வெகுவாகச் சாடினார். மென்மையான சுபாவத்தினராகவும், கச்சேரிகளைத் தேடிச் சென்று வாசிக்காமல் பொதுவிலிருந்து விலகியிருப்பதையே விரும்பியவராகவும் துவாரம் விளங்கியதால், அவரை இந்த விமர்சனங்கள் இன்னும் கூட்டுக்குள் செல்லத் தூண்டின. மகாராஜா கல்லூரி கொடுத்த சம்பளமும், வீட்டில் தினமும் மாலை நேரங்களில் வாசிக்கும் கச்சேரிகளுமே அவருக்கு போதும் என்று முடிவெடுத்துவிட்டார்.

குடத்தில் இட்ட விளக்காய் இருக்க நினைத்தவரை குன்றின் மேல் ஏற்றிவிட்டவர் கீர்த்தனாசார்ய சி.ஆர்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார். அவர் முனைப்பில் சென்னையில் கச்சேரிகள் ஏற்பாடு செய்து, துவாரத்தின் வாசிப்பில் உள்ள விசேஷங்களைப் பற்றி விரிவாக பத்திரிகைகளில் எழுதி அவரை மீண்டும் கச்சேரி உலகிற்கு இழுத்து வந்தவர் கீர்த்தனாசாரியார்தான்.

இதற்கு பின், துவாரத்தை எப்படியாவது சென்னைக்கு குடிபெயர்த்துவிட வேண்டுமென்று பலர் முயற்சி செய்தனர். தனக்கு இள வயதில் அடைக்கலமளித்த விஜயநகரம் கல்லூரியை விட்டு எங்கும் வருவதாக இல்லை என்று துவாரம் உறுதியாக இருந்தார்.  கல்லைக் கரைக்கும் கரைப்பார் இருந்ததால் முயற்சிகள் விடாமல் தொடர்ந்தன. 1949 துவாரத்தைப் பாராட்டும் வகையில் சன்மான உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டு, திரண்ட பரிசுத் தொகை ரூ.35000 பரிசாகக் கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில்தான் திருவல்லிக்கேணியில் பந்தல வேணுகோபால நாயுடு தெருவில் ‘துவாரம் இல்லம்’ அமைத்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

இப்போது எதற்கு இந்தக் கதை?

சில நாட்களுக்கு முன் சென்னை சென்ற போது நண்பர் யெஸ்ஸல் நரசிம்மனைச் சந்திக்க திருவல்லிக்கேணி சென்றிருந்தேன். சில மணி நேர அரட்டைக்குப் பின் கொஞ்சம் காப்பி குடிக்கலாம் என்று தெருவில் இறங்கினோம். கடைக்குச் செல்லும் வழியில், “இங்கதான் துவாரம் வீடு இருந்தது”, என்றார் யெஸ்ஸல்.

”இருந்ததா? இப்ப என்ன ஆச்சு?”

”அதை இடிச்சு ஒரு மாசம் இருக்கும். வாசல்ல போர்டு மட்டும் இருக்கு. வெணும்னா படம் எடுத்துக்குங்க”, என்றார்.

சென்னையில் இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இசைத் தளம் தரைமட்டமாகியிருக்கிறது.

ரசிகர்களாக இது பெரிய வருத்தமளித்தாலும், கலைஞர்களின் குடும்பத்தினரின் பார்வையில் இருந்து இது போன்ற முடிவுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற கட்டிடங்களைக் காக்க அரசு தனி முயற்சி எடுத்து குடும்பத்தினருக்கும் தக்க சரியீடு செய்தாலன்றி இது போன்று கட்டிடங்கள் இன்று இல்லாவிட்டால் நாளை விழத்தான் செய்யும் – இப்போது வீழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மணி ஐயரின் வீட்டைப் போல!

Read Full Post »