Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘gandharva ganam’

ஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise.

இன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான்.

அடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை.

கிரிதரனின் கட்டுரை இங்கு.

Related Posts: https://carnaticmusicreview.wordpress.com/2009/12/31/gnb-centenary-2/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/03/kalidas-review/

Read Full Post »

மிருதங்க வித்வானும், மிருதங்க மாமேதை பழநி சுப்ரமண்ய பிள்ளையின் சீடருமான திரு.கே.எஸ்.காளிதாஸ் அவர்களின் கந்தர்வ கானத்தைப் பற்றிய விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.

http://varalaaru.com/Default.asp?articleid=981

Read Full Post »

ஜி.என்.பி நூற்றாண்டு மலர், கந்தர்வ கானம், பற்றிய விமர்சனம் இங்கே

Read Full Post »

ஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய  ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால அளவுக்குச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டோம். இவை தவிர, ஜி.என்.பி-யின் biographer என்ற வகையில் நானும் இந்தப் படத்தில் பேசியுள்ளேன்.

சாதாரணமாய் பல மணி நேரம் ஜி.என்.பி-யைப் பற்றி வாய் ஓயாமல் பேசக் கூடியவன், என்ற போதும், கேமிரா முன் பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. நின்று கொண்டு பேசினால், “சார், இது ஃபோட்டோ இல்லை. சாதாரணமாய் இருங்க, இவ்வளவு விரைப்பு வேண்டாம்”, என்றனர். சரி இப்படிச் சொல்லிவிட்டார்களே, கொஞ்சம் நடந்தவாறு பேசினால், “சார்! ஃப்ரேமை விட்டு, ரொம்ப போறீங்க. கேமிராவைப் பார்த்து பேசுங்க. முகத்துல வேர்வை ரொம்ப இருக்கு (அசடு வழுவதைத்தான் சூசகமாகச் சொன்னார் போலும்)!”, என்றெல்லாம் சத்தாய்ப்புக்கு மத்தியில் பேச்சு எப்படி வரும். இரண்டு ஷாட்டுக்கு நடுவில் எதையேனும் சொன்னால், “சார்! இதை அப்டியே கேமிரா முன்னாடி சொல்லுங்க”, என்றார் இயக்குனர். அதை கேமிரா முன் சொல்லும் போது, முன்பு வந்த கோவையான மொழி மறுபடியும் வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணியது. 15 நிமிடப் பேச்சுக்கு, ஒன்றரை மணி நேரம் ஷூட்டிங். இயக்குனர் காந்தன்தான் பாவம். நாம் எவ்வளவு உளறினாலும், “ரொம்ப நல்லா பேசினீங்க”, என்றார்.

சென்ற வாரம், ப்ரிவ்யூ பார்த்து, சிற்சில இடங்களை மாற்றியமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படம் எப்படி வந்திருக்கிறது என்று நான் சொல்லப் போவதில்லை. நாலாம் தேதி மாலை, வந்து பார்த்துவிட்டு, நீங்கள் சொல்லுங்களேன்!

ஜி.என்.பி நூற்றாண்டு மலர் வேலை, நான் எதிர்பாராமல் வந்த ஒன்று. யார் யாரோ செய்யப் போகிறார்கள் என்ற செய்தி, கடந்த ஒரு வருடமாகவே என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. ஆகஸ்ட் மாதம், ஜி.என்.பி-யின் பேரன் மகேஷ் தொலை பேசினார்.

“வழக்கமாய் வரும் souvenir-களில் விளம்பரங்களுக்கு இடையில், சில கட்டுரைகள் இருக்கும். அந்தக் கட்டுரைகளும், “ஜி.என்.பி பெல்லாரியில் உப்புமா சாப்பிட்டார்”, “மல் வேஷ்டியை மன்னார்குடியில் வாங்குவார்”, போன்ற செய்திகளும், சிரிப்பே வராத ஜோக்குகளும் நிறைந்திருக்கும். அப்படி இல்லாமல், ஜி.என்.பி என்ற கலைஞரின் கலையைப் பற்றி முழுமையான அலசல் இந்த நூலில் இடம் பெற வேண்டும். இரண்டாவதாக, ஜி.என்.பி-யும் அவரது தந்தையாரும் எழுதிய சங்கீதம் தொடர்பான அத்தனை கட்டுரைகளும் தொகுக்கப் பட வேண்டும். மூன்றாவதாக வேண்டுமானால், ஜி.என்.பி என்ற மனிதரைப் பற்றி, அவருடன் பழகிய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் ஆகியோரின் எண்ணங்கள் இடம் பெறட்டும்.”, என்றேன்.

மகேஷும் இதே எண்ணத்தில் இருந்ததால், என்னிடம் மலர் தொகுக்கும் பொறுப்பை அளித்தார். கட்டுரைகளின் தலைப்புகளை முதலில் முடிவு செய்து கொண்டு, ஒவ்வொரு தலைப்புக்கும் உரியவரைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்டோம். SAK Durga, N.Ramanathan, S.Rajam, MA Bhagerathi, TM Krishna, TR Subramaniam என்று ஒரு பெரிய அறிஞர் பட்டாளமே இந்த மலருக்காக எழுதியுள்ளது. லால்குடி ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன் என்று இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர்களும் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜி.என்.பி-யின் personal secretary-ஆக பல ஆண்டுகள் செயல்பட்ட அவரது மகள் சகுந்தலாவின் கட்டுரை மிகவும் உருக்கமாய் அமைந்துள்ளது.

நெருங்கி வந்த சங்கீத சீசனுக்கு இடையில், பல கலைஞர்கள் கட்டுரை கொடுத்தது பெரிய விஷயம்தான். சிலரை, விடாக்கண்டன் கணக்காக, தொலைபேசியில் நச்சரிக்க வேண்டியிருந்தது.

வேலை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே, இது ஒருவரால் ஆகக் கூடிய வேலை என்று புரிந்தது. அந்த நேரம் பார்த்து, என் புத்தகத்தை ஸ்ருதி பத்திரிக்கையில் மொழி பெயர்த்து, தொடராக வெளியிட, ஸ்ருதியின் ஆசிரியர் ராம்நாராயண் தொடர்பு கொண்டார். அவருடன் பேசிய முதல் நாளே, அவரை ரொம்ப வருடம் தெரியும் என்பது போன்ற நினைப்பு ஏற்பட்டது. ராம்நாராயணின் simple yet beautiful English அவருடைய பெரும் பலம். இனியவரும்,  இசை வளர்ச்சிக்காக முனைந்து செயல்படுபவரான அவரை விட சிறந்த co-editor-ஐ நான் பெற்றிருக்க முடியாது. ரொம்பவே சீனியர் என்ற போதும், என்னை நிகராக நடத்திய அவரின் பெருந்தன்மையைக் கண்டு பல கணங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.

வந்த கட்டுரைகளை, ஆளுக்கு ஒரு முறை சரி பார்த்துச் செதுக்கினோம். ஆகஸ்டில் தொடங்கி டிசம்பருக்குள், அம்பது கட்டுரைகளுக்கு மேல் தொகுத்து, 264 பக்கங்களில், எக்கெச்செக்க புகைப்படங்களோடு அற்புதமான மலர் சென்ற வாரம் எங்கள் கணினியில் ஜனனித்தது. இந்த வாரம் அச்சில் வெளி வந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க art paper-ல் மலர் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று சற்று முன் கிடைத்த தகவல் கூறுகிறது.

மலர் எப்படி வந்திருக்கிறது?

நானே எப்படிச் சொல்வது? இருந்தாலும் மூன்று விஷயங்கள் சொல்கிறேன்.

1. ஓவியங்கள்: ஓவியர் மணியம் செல்வனின் அட்டைப்படம் – கண் முன் கலையுலக கந்தர்வரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஓவியர் ராஜம், தொண்ணூறைத் தாண்டி விட்ட போதும், இந்த மலருக்காக பிரத்யேகமாய், ஜி.என்.பி பாடி பிரபலப்படுத்திய ‘வாஸுதேவயனி’ பாடலை ஓவியமாய்த் தீட்டியுள்ளார்.

2. ஜி.என்.பி-யின் கையெழுத்துப் பிரதிகள்: ஐம்பது வருடங்களாய் அச்சில் ஏறாமல், கையெழுத்துப் பிரதிகளாய் மட்டுமிருந்த மூன்று கட்டுரைகள் இந்த மலரில் அரங்கேறுகின்றன. இது தவிர, பரவிக் கிடந்த அவரின்ப் மற்ற கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மலரின், மற்ற எல்லாப் பகுதியை நீக்கி விட்ட போதும் கூட, இந்த ஒரு பகுதியே நூலைத் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறேன்.

3. ஜி.என்.பி இறப்பதற்கு சில மாதங்கள் முன், உடல்நிலை சரியில்லாத நிலையில், வெளிநாட்டில் ஆவரைக் கேட்க வந்த ரசிகருக்காகப் பாடிய ஒரு மணி நேர கச்சேரியின் ஒலிப்பதிவும், இந்தப் புத்தகத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கச்சேரியைக் கேட்டால், “சாகப் போகும் மனிதனின் பாட்டு”, என்று நம்பவே முடியாது.

ஐந்தாம் தேதி மாலை, பால மந்திர் ஜெர்மன் ஹாலில் (தி.நகர்), புத்தகம் வெளியிடப்படுகிறது. இசைப் பிரியர்களும், புத்தகப் பிரியர்களும் நிச்சயம் வர வேண்டும்.

Read Full Post »