Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘gnb kritis’

ஜி.என்.பி-யின் கற்பனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக ‘கமல சரணே’ கிருதியை சொல்லலாம். இவர் உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான அம்ருதபெஹாகில் இந்தக் கிருதி அமைந்துள்ளது.

“ஸ ம க ப நி த ஸ” என்ற வக்ர ஆரோகணமும் “ஸ நி த ம க ஸ” என்ற அவரோகணமும் பெற்றுள்ள இந்த ராகம், 65 மேளகர்த்தாவான மேஷகல்யாணியின் ஜன்யம்.

நாதஸ்வர மேத ராஜரத்தினம், கல்யாணி ராகத்தில் சில வர்ஜ வக்ர சஞ்சாரங்கள் வாசித்ததைக் கேட்டே ஜி.என்.பி இந்த ராகத்தை உருவாக்கினார் என்றும் சில கூறுகின்றனர். ராகங்கள் வெறும் ஸ்வரங்களால் ஆகியிருந்தால் மட்டுமே இது சாத்தியம். கல்யாணி போன்ற ராகங்களில் ஸ்வரங்கள் வெறும் கூடுதான். அதன் ஜீவன் என்பது ஸ்வரங்கலையும் தாண்டிய ஒன்று.

அம்ருத பெஹாக், கல்யாணி scale-ல் இருந்து பிறந்த ராகம் என்று சொல்லலாமே தவிர, கல்யாணி ராகத்துக்கும் இதற்கும் அதிக சம்பந்தம் இல்லை.  இந்த ராகம் சில இடங்களில் அமிர்தவர்ஷிணியை நினைவூட்டுகிறது.

‘கமல சரணே’ கச்சேரிகளில் பெரும்பாலும் பிரதான உருப்படிக்கு முன் பாடப்படும் வேகமான ஃபில்லராகப் பாடப் படுகிறது. வேகமான காலப்ரிமாணத்தில், குரலின் சர்வ வல்லமையும் காட்ட ஏதுவாய், பல துரித கால, ரவை ஜாதி சங்கதிகளுடன் உள்ள கிருதிகளுள் ‘கமல சரணே’ கிருதியும் அடங்கும்.  (Interestingly, இந்த வகை கிருதிகள் பல ஆதி தாளத்தில் ஒன்றரை இடம் தள்ளி எடுப்பில் அமைந்துள்ளன.)

அடுக்கடுக்காய் மலரும் சங்கதிகள், இந்த ராகத்திலுள்ல ஸ்வரங்களின் கொண்டாட்டத்தின் வெளிப்படாய் அமைந்துள்லன. தைவதத்தை சுற்றி  அமைந்த சில சங்கதிகள் பாவபூர்வமாகவும் அமைந்துள்ளன. அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் சிட்டை ஸ்வரம், இந்த ராகத்தை எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்தப் பாடலில் வரும் ‘விமர்சனானந்த’ என்ற பெயர் ஜி.என்.பி-யின் ‘தீக்ஷா நாமம்’ என்று அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சிந்துஜா இந்தப் பாடலை, வ்ழைமையாய் கேட்கும் break-neck speed-ல் பாடாமல், நிதானமாய் பாடி இருப்பது, இந்த ராகத்தின் எழிலை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.

பாடலைக் கேட்கவும் தரவிறக்கவும் இங்கு செல்லவும்.

Read Full Post »

ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது.

பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை.

சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம்.

http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html

வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம்.

முந்தைய பாடல்கள்: https://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/

பார்ப்போம்.

Read Full Post »

சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல்.

எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் ‘ராக ஸுதா ரஸ’, இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று.

தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது.

வர்ணத்தைப் பற்றி பார்ப்பதற்கும், ஜி.என்.பி-யின் ஆந்தோளிகாவைப் பற்றி சில வார்த்தைகள்.

ஜி.என்.பி-யின் விருப்பத்துக்குரிய ராகங்களில் பல கரஹரப்ரியா ஜன்யமாக அமைந்துள்ளன. ஆபோகி, ரீதிகௌளை, ஆந்தோளிகா, ஜெயமனோஹரி போன்ற ராகங்களை விரிவாகப் பாடியுள்ளார். அவர் கரஹரப்ரியாவை அதிகம் பாடாதது வியப்புக்குரியது.

இன்று கேட்கக் கிடைக்கும் ஆந்தோளிகாவின் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தவ்ர் ஜி.என்.பி-தான் என்பது பரவலான கருத்து. (நாயினாப் பிள்ளைக்கும் முத்தையா பாகவதருக்கும் கூட ஆந்தோளிகா மிகவும் உகந்த ராகம் என்று எஸ்.ராஜம் ஒரு முறை கூறினார்.)

ஜி.என்.பி-யின் 81-வது பிறந்த நாள் அன்று டி.எம்.தியாகராஜn, தஞ்சாவூரில் ஜி.என்.பி செய்த முதல் கச்சேரியைப் பற்றி விரிவாகப் பேசினார். சினிமாவில் நடித்திருந்த ஜி.என்.பி-யை அக் கால தஞ்சாவூர் ரசிகர்கள் ஏளனமாய்ப் பார்த்தனராம். ஜி.என்.பி அன்று பாடிய ஆந்தோளிகா, அவர்களது எண்னங்களை மாற்றிப் போட்டதாம். அவர்கள் அதுவரை கேட்டிராத ராகத்தில், அரிய பல கோவைகள் அநாயாசமாகப் பாடிய விதத்தை டி.எம்.டி கூறியது என் ஆழ் மனதில் பதிந்தது. பின்னாளில் ஜி.என்.பி-யைப் பற்றி நூலெழுதிய போது, இந் நிகழ்ச்சியைக் கொண்டே நூலைத் தொடங்கினேன்.

படே குலாம் அலி கான், ஜி.என்.பி-யின் ஆந்தோளிகாவுக்கு ரசிகர். ஜி.என்.பி பாடியதைக் கேட்ட பின் அவரும் தன் கச்சேரிகளில் இந்த ராகத்தைப் பாட ஆரம்பித்தார். (ஜி.என்.பி-யும் தன் பங்கிற்கு உஸ்தாதிடமிருந்து காவதியைப் பெற்று தென்னகத்தில் புகுத்தினார். இந்த ராகத்தில் ஒரு வர்ணமும் செய்துள்ளார்.)

ஜி.என்.பி பாடிய சில ஆந்தோளிகா-கள் இன்றும் நம்மிடையே கிடைக்கின்றன. குறிப்பாக திருவையாற்றில் லால்குடி ஜெயராமனும், உமையாள்புரம் சிவராமனும் சேர்ந்து வாசித்திருக்கும் கச்சேரியில் ஜி.என்.பி பாடியுள்ள ஆந்தோளிகா அற்புதமான ஒன்று. அந் நாளில் நேஷனல் ஒலிபரப்பான கச்சேரி அது. (லால்குடி-முருகபூபதி வாசித்துள்ள கச்சேரியில் இருக்கும் ஆந்தோளிகாவும் சிறப்பான ஒன்று).

சரி! வர்ணத்துக்கு வருவோம்!

“வர்ணங்கள் பயிற்சிக்குரிய உருப்படிகள். கச்சேரிகளில் குரல் பதமடைய வேண்டிப் பாடப்படும் உருப்படிகள்.”, என்று பரவலான கருத்துகள் உண்டு. சில எலிமெண்ட்ரி ஸ்கூல் வர்ணங்கள் வேண்டுமானால் இந்தக் கருத்துகளுடன் பொருந்தி வரும். பல சமயங்களில், ஒரு ராகத்தின் பல அழகிய பரிமாணங்களை வெளிப்படுத்த உதவும் சிறந்த கருவிகளாக வர்ணங்கள் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், சில ராகங்களில் அமைந்துள்ள வர்ணங்கள்தான் அந்த ராகத்தில் உள்ள மிகச் சிறந்த உருப்படியாக அமைகின்றன. உதாரணமாக பைரவி வர்ணத்தையும், நாட்டைக்குறிஞ்சி வர்ணத்தையும் கூறலாம். ஜி.என்.பி-யின் வர்ணங்கள் ஒவ்வொன்றும் முத்தும் மாணிக்கமும் போல மிளிர்பவை. குறிப்பாக ஆந்தோளிகா, காவதி, கதனகுதூகலம் ஆகிய ராகங்களில் அமைந்துள்ள வர்ணங்கள், அந்த ராகங்களில் மறைந்திருந்த பரிமாணங்களை வெளிக் கொணர்பவை.

ஜி.என்.பி-யின் வர்ணங்களுள் மிகப் பிரபலமானது ஆந்தோளிகா வர்ணமே. மற்ற வர்ணங்களை ஜி.என்.பி ஸ்கூல் பாடகர்களே பாடுகின்றனர். இந்த வர்ணம், மற்ற பாணி பாடகர்களிடையிலும் கூட பிரபலமாக உள்ளது. டி.கே.ஜெயராமனின் version-ஏ என்னைப் பொறுத்த வரை சிறப்பானது.

ஆதி தாளத்தில் அமைந்துள்ள இந்த விறுவிறுப்பான வர்ணம், ஜி.என்.பி-யின் இஷ்ட தெய்வமான ‘நாதரூபசுந்தரி’-யின் மேல் அமைந்துள்ளது. “பொதுவாக சிவனைத்தான் நாத ருபமாகக் குறிப்பது வழக்கம். ’நாத தனுமனிஷம் சங்கரம்’ என்கிறார் தியாகராஜர். ஜி.என்.பி-யின் ‘நாதரூபசுந்தரி’ என்ற உருவகம் தனித்துவம் வாய்ந்தது.”, என்கிறார் டாக்டர் எஸ்.ஏ.கே.துர்கா.

இந்த வர்ணத்தில் பல அழகிய ஸ்வரக் கோவைகளை வெளிப்படுத்தியுள்ளார் ஜி.என்.பி.

ரி ம ப நாதரூப
ம ப நி ஸ நாதரூப
ரி ம ரி ஸ நாதரூப

போன்ற பொருத்தங்கள், ஜி.என்.பி-யின் கல்பனை ஸ்வரங்களில் காணக் கிடைக்கும் பொருத்தங்களை ஒத்து அமைந்துள்ளது.
மூன்றாவது சிட்டை ஸ்வரத்தில் ஷட்ஜமும், பஞ்சமும் நீங்கலாக வரும் பிரயோகம் (ரிரிம நிநிரி மமனி ரிரிம நிரிரிம) பெரும்பாலும் சுத்த ஸ்வரங்களாகவே அமைந்து, மெற்கத்திய இசையை நினைவு படுத்துகிறது. இன்று மத்யமாவதி போன்ற ராகங்களிலும் இது போன்ற பிரயோகங்களை கேட்க முடிகிறது.

நெருடலான கணக்கு வழக்குகளில் ஜி.என்.பி ஈடுபடவில்லை என்ற போதும், பல அழகிய pattern-களை கையாண்டுள்ளார். உதாரணமாக நான்காவது சிட்டை ஸ்வரத்தின் ஒரு பகுதி (ஸநிதமரி நிதமரி தமரி மரி) கோபுச்ச யதியில் அமைந்துள்ளது.

சிந்துஜா வழக்கம் போல நன்றாகப் பாடியிருப்பினும், கேட்பவருக்கு இன்னும் கொஞ்ச நேரம் தொடரக் கூடாதா என்ற எண்ணம் எழாமலிருக்காது. ஜி.என்.பி கச்சேரிகளில் வர்ணம் பாடும் போது, சிட்டை ஸ்வரங்கள் பாடியவுடன், சில ஆவர்த்தங்கள் கல்பனை ஸ்வரமும் பாடுவார். robably a few rounds of spontaneous swarams from Sindhuja would have served as the icing on the cake 🙂

பாடலைக் கேட்க இங்கு செல்லவும்.

இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வரிசையில் முந்தைய பாடல் இங்கு.

Read Full Post »